
அழகிய
ஆட்டுக் குட்டியொன்றின்
அருகில்
வசீகரமாய் இருக்கிறார்
ஓர் இளம் பெண் !
ஆக்னஸ் !
இறைமகன் இயேசு
ஆட்டுக் குட்டி
என
அறியப்படுபவர்,
ஆக்னஸ் என்றால்
ஆட்டுக்குட்டி
என்கிறது இலத்தீன்.
இறைமகனின்
அருகாமையை
இளம் வயதிலேயே
அறிந்து கொண்டவர்
ஆக்னஸ்
என்ன செய்வதென
தெரியாமல்
போரடித்த பொழுதொன்றில்
தனது
சமையல்காரியின்
இல்லம் சென்றாள் ஆன்கஸ்.
அங்கே
முழங்காலும் முக்காடுமாய்
சமையல்காரி
செபித்திருந்த தோற்றம்
ஆக்னஸை
வியப்பின் விளிம்பில்
தொங்க விட்டது.
என்ன செய்கிறீர் ?
குரல் கேட்ட அவர்
திடுக்கிட்டுத் திரும்பினாள்.
கிறிஸ்தவம்
வாள் முனையில்
அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த
காலம் அது.
கிறிஸ்தவர்கள்
சாட்டைகளால்
சாய்க்கப்பட்டுக் கொண்டிருந்த
காலம்.
இயேசு
எனும் பெயர்
வெறுக்கப்பட்டுக் கொண்டிந்த
காலம்.
திரும்பிய அவர்
கேட்டார்,
‘சாப்பிட ஏதேனும் வேண்டுமா ?’
ஆன்கஸோ
ஆர்வத்தின் பசியில் நின்றாள்
ஆகாரத்தின் பசியில் அல்ல.
சொல்லுங்கள்
என்ன செய்கிறீர்கள் ?
வாழும்
இறைவனை நோக்கி
செபிக்கிறேன்,
என் பிறவிப் பயனை
அடைகிறேன்.
பதில் சொன்னார்
ஆன்கஸ் சிரித்தாள்.
பார்த்துக் கொள்ள
படங்கள் இல்லை,
பூஜை செய்ய சிலைகள்
இல்லை,
ஆராதனை செய்ய
அடையாளங்கள் இல்லை !
இதென்ன வெற்று வெளியில்
ஒரு வேண்டுதல் ?
சமையலம்மா
சிரித்தார்.
காற்றுக்கு எங்கே போய்
படம் செய்வது ?
என் கடவுள் காற்று போல
என் நுரையீரலை நிரப்புகிறார்.
சிந்தனைக்கு எங்கே போய்
சிலை செய்வது
என் கடவுள்
என் சிந்தனையில் வந்து
அரசாள்கிறார்
அவர்
வாழ்ந்தவர் அல்ல
வாழ்பவர்.
அவர் வரலாறல்ல
வழிகாட்டி.
ஆர்வம் அசுரவேகமாய்
ஆக்னசுக்குள்
ஆறாய்ப் பாய்ந்தது.
சொல்லுங்கள்
சொல்லுங்கள்.
நான்
அச்சுறுத்தும் விலங்குகளை
ஆராதிப்பதைக்
கண்டிருக்கிறேன்.
பயமுறுத்தும் படங்களை
பணிவதைக்
கண்டிருக்கிறேன்
சினம் கொண்ட
சிலைகளை
வந்தனை செய்திருக்கிறேன்.
இல்லாத இறைவனிடம்
வேண்டுதல் செய்ததில்லை.
ஆன்கஸ் சொல்ல
அவர் சிரித்தார்.
இல்லாத தெய்வம் தான் !
உருவம்
இல்லாத தெய்வம்.
கோரம்
இல்லாத தெய்வம்.
அவர் தான் இயேசு, உண்மை தெய்வம்.
ஆக்னஸ் சிலிர்த்தாள்.
அந்த தெய்வம்
எனக்கு வேண்டும்.
அறிமுகம் செய்யுங்கள்
சமையல் அம்மா
மகிழ்ந்தார்,
ஆண்டவரை ஆக்னஸுக்கு
அறிமுகம் செய்தாள்.
ஆக்னஸ்
நெருப்பில் விழுந்த
பஞ்சைப் போல
முழுவதும் எரிந்தாள்
அன்பின் அனலில்.
உலகின்
இச்சை விலக்கினாள்.
இயேசுவே போதுமென
இதயத்தில்
பச்சை குத்தினாள்.
இயேசுவின்
போதனைகளில்
பச்சையம் பெற்றாள்
அவரது அன்பில்
வாழ்வினைக் கற்றாள்.
செபம்
அவளுக்கு இனிப்பான
உணவானது.
இறைவன்
அவருக்கு இளைப்பாறும்
தளமானது.
பருவம் அவளை
அழகின் வசீகரமாய்
வார்த்தெடுத்தது.
பலரும் அவளை
மணம் புரிய மனம் கொண்டனர்.
அவளோ
இதயத்தை
இயேசுவிடம்
இடம் மாற்றி வைத்தாள்.
ஃபோக்கஸ் !
ரோம உயரதிகாரியின் மகன்.
கம்பீரக் கட்டழகன்.
ஆக்னஸின்
விழி அழகில் விழுந்தான்.
உன்
கரம் பிடிக்கும் வரம் தா
என
சுரம் பிடித்தான்.
அவளோ
குதிரையில்
இருப்பவரை விட
இதயத்தில் இருப்பவரே
பெரியவர் என்றாள்.
ஆயிரம் பெண்கள்
ஆசை வைக்கும் அழகன்
ஆக்னஸால்
நிராகரிக்கப்பட்டான்.
அரச குலம்
நிராகரிப்புகளை
வரவேற்காது.
கர்வக் கிரீடத்தைக்
கழற்றி வைக்காது.
விஷயம்
ரோம அதிகாரிக்குப் போனது.
“ஆக்னஸ்
ரோமக் கடவுளுக்கு எதிராகிறாள்
ஏதோ இயேசுவுக்கு
வக்காலத்து வாங்குகிறாள்.”
ஆக்னஸ்
அவைக்கு அழைக்கப்பட்டாள்.
இயேசுவை விட்டு விடு
இல்லையேல்
உயிரை விட்டு விடு !
மிரட்டல் அவரை மோதியது.
உண்மை தெய்வத்தை
உதறித்தள்ள
உத்தேசமில்லை
என்றாள்.
எங்கள் தெய்வத்தின் முன்
மண்டியிடு
உயிர்ப்பிச்சை வாங்கி
ஓடிவிடு, என்றார்கள்.
இயேசுவின் மடியில்
உயிரை விடுவேன்,
போலிகளின் பிச்சையில்
உயிரைக் காக்கேன்
என்றாள்.
உனக்கென்ன
பைத்தியமா ?
கோபத்தில் கொக்கரித்தனர்.
ஆம்,
இறைப் பைத்தியம்
பரமன் மேல் பைத்தியம்
என்
மணவாளன் மேல் பைத்தியம்.
இதற்கான வைத்தியம்
மரணமெனில் எனக்கு சம்மதமே
என்றாள்.
கோபத்தின் கொடுக்காற்றாய்
சீறியது அவை.
ஆக்னஸின்
ஆடைகள்
ஆடவரால் உரியப்பட்டன
உரிந்தவர்கள்
பயந்தனர்.
ஆக்னஸின் கூந்தல்
மின்னலென வளர்ந்து
மேனியை மூடியது.
அவமானம் போர்த்த
நினைத்தவர்கள்
மிரண்டு போய் பின் வாங்கினர்.
ஆன்கஸை
குகைக்குள் அடைத்து
பாவிகளுக்குப் பரிசளித்தான்
அதிகாரி.
ஆக்னஸை
அணுகிய
பாவிகளின் பார்வைகள்
சட்டென பறிக்கப்பட்டன.
நிமிர்ந்து வந்தவர், தவழ்ந்து திரும்பினர்.
கோபமடைந்த
ஃபோக்கஸ்
தானே களமிறங்கினான்.
குகையின் கதவைத் திறந்து
ஆன்கஸை
அழித்தொழிக்க
கால் வைத்தான்.
இறைவன்
மின்னலை அனுப்பி
அவனை
அங்கேயே மரணத்தில் புதைத்தார்
அதிர்ந்து போன
தந்தை
அலறிக் கொண்டு வந்தார்.
மகனை மீட்டுக்கொடு
என
மங்கையிடம் மண்டியிட்டார்.
ஆன்கஸ்
இறைவனை வேண்டினார்.
மரணத்தில்
ஒளிந்திருந்த மகன்
வாழ்வுக்குள்
வெளிவந்தான்.
உலகம் அதிர்ந்தது
ஒருசேர பயந்தது.
ஆக்னஸ் வாழ்ந்தால்
பிற தெய்வங்கள்
அழியுமென திகைத்தது.
ஆன்கஸ்
கொலைக்களத்திற்கு
அளிக்கப்பட்டாள்.
விறகுகளின் மேல்
அந்த பூ
கட்டி வைக்கப்பட்டது.
நெருப்பின் ஜுவாலையில்
அந்த
மெல்லிய பட்டாம் பூச்சி
கருகுவதற்காய்
கட்டப்பட்டது.
வெப்பத்தின் தெப்பத்தில்
அழிய
அந்த பனிச் சிலை
பதியனிடப்பட்டது.
அங்கும்
ஆச்சரியமே பூச்சொரிந்தது.
எரிய மறுத்தது
விறகு.
எரிந்த நெருப்பும்
ஆன்கஸை அணுக மறுத்தது.
கூட்டம் நிலை குலைந்தது.
நெருப்பு கைவிரித்தது.
ஆன்கஸ் மனம் விரித்தாள்
செபித்தாள்.
போதும் இறைவனே
அதிசயங்களின் வல்லமை போதும்.
உம் அருகாமையில் வாழும்
ஆசை
கொழுந்து விட்டு எரிகிறது
என்னை ஏற்றுக் கொள்ளும்.
ஆக்னஸ்
செபித்துக் கொண்டே இருந்தாள்.
ஒரு வீரன் பார்த்தான்.
நெருப்பு செய்யாததை
தன்
வாளினால் முடித்து வைக்க
முனைந்தான்.
வீசிய வாள்
ஆக்னஸின் தொண்டையை
துளைத்திறங்கியது.
விண்ணகத்தின் வாசலை
அந்த
வாளெனும் சாவி
அகலத் திறந்தது. .
ஆன்கஸ்
விடைபெற்றார்.
அவர் பிறந்த
இத்தாலி தேசமே
அவரை
படுகொலையும் செய்தது.
பதின் வயதுகளின்
ஆரம்பத்திலேயே
புவி வாழ்வை நிறைவு செய்தாள்
ஆன்கஸ்
கிபி 291ல் பிறந்த
ஆக்னஸ்
கிபி 304ல் இறையில் நிறைந்தாள்.
354 ல் அவர் புனிதரானார்.
பெண்களுக்கும்
கற்புக்கும்
பாதுகாவலியானார்.
ஜனவரி 21,
அவரது மறைவு தினம்.
இறைவனோடு
பரிந்து பேசும்
பணியைப் பெற்ற தினம்
கத்தோலிக்கத் திருச்சபை
திருப்பலியில்
இவர் பெயரை
இணைத்துப் பெருமைப் படுத்துகிறது.
புனிதர்களின் வாழ்க்கை
நமக்கு
வழிகாட்டும் புத்தகம்.
மரணம் எந்தக் கணமும்
கதவைத் தட்டலாம்
என்பதை
உணர்த்தும் தருணம்.
ஆத்மார்த்த
இறை நேசம்
ஆன்கஸின் வாழ்க்கை சொல்லும்
ஆன்மிக பாடம்.
*
சேவியர்
Like this:
Like Loading...