1
எலிமலேக்கு.!
பெத்லேகேமில் பிறந்தவர்.
ஓர் முறை
பஞ்சத்தின் போர் வாட்கள்
நெஞ்சம் கிழித்த போது
உயிரின் கூரையைக் காப்பாற்ற
குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார்
எலிமேக்கு.
மனைவி நகோமி,
மைந்தர் இருவர்
மக்லோன், கிலியோன்.
பஞ்சத்தின் துரத்தல்கள்
அவர்களை,
பருவகாலம் தேடிப் பறக்கும்
பறவைக் கூட்டம் போல,
மோவாப் நகருக்குள்
போக வைத்தது.
சாவு,
சமத்துவத்தின்
உதற முடியா உதாரணம்.
சாதாரணமானவனையும்
சாம்ராஜ்யக் காரனையும்
பிந்தாமல் வந்து
சந்தித்துச் செல்லும்.
காலங்கள் மெதுவாய்
கடக்கத் துவங்கிய போது,
எலிமலேக்குவின் உயிர்
உடலை விட்டுக் கடந்தது.
புதல்வர்களோடு நகோமி
தனிமரமாய்
ஆனார்.
வேர் வெட்டுப் பட்ட
ஓர் மரமாய்
வேதனையில் வீழ்ந்தாள்.
புதல்வர்களின்
திருமுகத்தில்
திருமணக் காலம் தெரிந்தபோது,
அன்னை அவர்களை
மணக்கோலம் பூட்ட வைத்தார்.
மங்கையர் பெயர்
ஓர்பா,
ரூத்து.
திருமணச் சங்கீதம்
சிலநாட்களிலேயே
ஓர்
மௌனப் போர்வைக்குள்
மரணமடைந்து போனது.
புல்லாங்குழல்கள் எல்லாம்
தங்கள்
துளைகளை பொத்திக் கொண்டன.
புதல்வர்கள் இருவரும்
இறந்தகாலங்களாய் மாற,
மனைவியரின்
எதிர்காலக் கவலைகளுக்குள்
மாமியார் விழுந்தார்.
அவர்களை அழைத்து,
நான்,
என்னுடைய
மழலைக்கால சுவடு தொட்ட
மண்ணுக்கே போகிறேன்,
என் உயிர் தளிர்களை
உருவாக்கிய இனத்தோடே
இருக்கப் போகிறேன்.
நீங்களும்
உங்கள் தாய்வீட்டின்
தாழ்வாரம் தேடி பயணியுங்கள்,
அங்கே
மணமுடித்து மகிழ்ந்திருங்கள்.
என்றார்.
மருமகள்கள் அதை
மறுதலித்து அழுதனர்.
நகோமி தொடர்ந்தார்,
இல்லை,
உங்கள் இளமை சருகாகுமும் முன்
உங்கள்
வளமைகளை வருவியுங்கள்.
உங்கள் தலை முறை தழைக்க
இன்னொரு
மணம் செய்ய மறுக்காதீர்கள்.
நான்
வாலிபம் செத்த வயதானவள்,
உங்களை மணக்கும்
புதல்வர்களை பிரசவிக்க,
இனிமேல் என்னால்
தாம்பத்யம் தாங்க இயலாது.
அப்படியே தாங்கினாலும்,
என்
பிள்ளைகள் பிறந்து வளரும் வரை
உங்கள்
இளமை
இடம்பெயராமல் இருக்காது.
போங்கள்,
ஆண்டவரின் ஆசீர் உங்களோடே,
வளமாய் வாழுங்கள்.
மாமியாரின் வார்த்தைகள்
மருமகள்களை காயப் படுத்தின,
அவர்களின்
கண்ணீர் கணவாய்களில்
ஈரம்
கட்டுப்பாடின்றி கடந்து வந்தது.
மாமியாரை முத்தமிட்டு
ஓர்பா
தாய்வீடு செல்ல தயாரானாள்.
தாயாராகவும் தயாரானாள்.
ரூத்து
ஒத்துக்கொள்ளவில்லை.
பூத்தபின் வேறோர்
செடிதேடி
பூக்கள் ஓடுவதில்லையே,
கடலில் கடந்தபின் ஆறு
மீண்டும் தன்
நதி வாழ்க்கைக்குத்
திரும்பிப் போவதில்லையே,
பாதி வழியில் மழைநீர்
பயணம் முடித்து
மேகம் நோக்கி மடங்குவதில்லையே…
அதேபோலவே,
முடியாது என்று மறுத்தாள்.
சருகாகிச் சரியும் நாள்வரை
மரத்தின்
கரம் விட மனம் வரவில்லை
அவளுக்கு.
மாமியாரின் வற்புறுத்தல்களை
பாசத்தின் மறுப்புகளால்
மறுதலித்தாள்.
இனி உங்கள் இனமே என் இனம்,
உங்கள் கடவுளே
என் கடவுள்.
உங்கள் கல்லறை நிலமே
என்
கல்லறை நிலம்.
நிழல் விழாத தேகமாக
நிற்க
என்னால் முடியாது
உங்களை
நிழலாய் தொடராமல்
என் பணி முடியாது.
என்றாள்.
மாமியார் சம்மதித்தார்,
இருவரும்
பெத்லேகேமின் படிகள் தேடி
பயணமானார்கள்.
வார்க்கோதுமை அறுவடை
போர்க்கோலம் போட்டிருந்த
ஓர் காலத்தில்,
பெத்லேகேம் புகுந்தனர்.
0
ரூத்து நகோமியிடம்,
நான்
வயலுக்குப் போகிறேன்.
ஏதேனும்
கருணைக் கண்களைக் கண்டால்,
அவர்கள் வயலில் போய்
உதிரும் கதிரை
பொறுக்கிச்க் சேர்க்க
அனுமதி கேட்டு அங்கிருப்பேன்
அதற்கு
அனுமதியுங்கள் என்றாள்.
நகோமி
அன்புடன் அவளை
அனுமதித்து அனுப்பினாள்.
வயல்களில்
அறுவடை நடைபெறுகையில்,
சில முத்துக்கள் சிந்திச் சிதறுமே,
அவற்றை
ஏழையர் வந்து
எடுத்துச் செல்வர்.
அப்படியாய் அனுமதி கிடைத்த
ஓர் வயலில்,
ரூத்து ஓர் ஓரமாய்
சிதறியதை சேகரித்தபோது
உரிமையாளர் போவாசு
அப் பக்கம் வந்தார்.
போவாசு வந்து
அன்னியப் பெண்ணான ரூத்தை
ஆச்சரியமாய் பார்த்து,
யாரிவள் என
வேலையாளிடம் வினவினான்.
அவர்கள்,
இவள் மோவாபு நாட்டு மங்கை,
நகோமியின் மருமகள்
என்றனர்.
போவாசு மகிழ்ந்தார்.
ஏனெனில் அவர்
எலிமேக்கின் உறவினர்.
கூடு திரும்பிய
குஞ்சைக் கண்டதும்
தாய்ப் பறவை மகிழ்ந்தது போல
போவாசு ஆனான்.
அவன்
ரூத்தைப் பார்த்து,
இனிமேல்
கதிர் பொறுக்கும் கவலையோடு
வேறு வயல் நாடி செல்லாதே,
இங்கேயே தவறாமல் வந்துவிடு.
தாகம் வந்தால்
எங்கள் தண்ணீர் குடங்களை
தயங்காமல் திற,
வேலையாள் எவருமே
உன்னை
தொந்தரவு தரமாட்டார்,
அவர்களுக்கு நான் ஆணையிடுவேன்
என்றார்.
ரூத்து மகிழ்ந்து
பாவாசின் பாதத்தில்
மண்டியிட்டு வணங்கினாள்.
போவாசு அவளிடம்,
நீ
உன் மாமியாருக்காற்றிய
கடமைகளின் அடர்த்தியில்
ஆச்சரியம் அடைகிறேன்.
உன்னை ஆண்டவர்
ஆசீர்வதிப்பார் என்றார்.
ரூத்து மறுமொழியாக,
உணவளித்துத் தேற்றுகிறீர்
ஆறுதலளித்து ஆற்றுகிறீர்,
ஆச்சரியத்தின் ஊற்று – நீர் !
என்றாள்.
அவர் வேலையாட்களை
தனியாய் அழைத்து,
ரூத்தை யாரும் அதட்டாதீர்,
சில கதிர்களை
சலுகையாய்
உருவிப் போடுங்கள் அவள்
சேகரித்துக் கொள்ளட்டும் என்றார்.
செய்திகள் கேட்ட நகோமி
இதயம் குளிர்ந்தாள்,
தேவைகளின் பாதைகளின்
வாழ்வுக்கான வாசலை வைத்த
ஆண்டவனின் அருளுக்கு
ஆத்மார்த்த நன்றி சொன்னாள்.
அறுவடைக் கால
இறுதி நாள் வரை,
ரூத்தின் பாதை
போவாசின் வயலில் தான்
முடிவடைந்து கிடந்தது.
ஒரு நாள்
நகோமி ரூத்தை அழைத்து
நல்வார்த்தை சொன்னாள்.
கதிர் பொறுக்கும்
வேலையில் நீ
உன்
இளமையைச் சிதற விடும்
கவலை எனக்கு.
மீண்டும்
இல்லறவாழ்வுக்குள் இணை,
உன் வாழ்வுக்கான
துணைக்காக ஓர்
வழி செய்கிறேன் என்றாள்.
நீ,
குளித்து முடித்து,
அழகிய ஆடையை அணிந்து
வாசனை எண்ணையை
மேனியெங்கும் பூசி
போவாசின் களத்துக்கு போ.
அவர்
கண்ணில் படாமல் மறைந்திரு.
இரவில் அவர்,
உண்டு குடித்து உறங்கும் போது
அவர்
பாதம் மூடும் போர்வைக்குள்
போய் படுத்துக் கொள் என்றாள்.
ரூத்தும்
ஒத்துக் கொண்டாள்.
வாசனை மலர் ஒன்று
எண்ணை பூசி மணத்தது.
வண்ணச் சிறகுப் பறவை ஒன்று
இறகுகளின் இடையே
வானவில் வாரிக் கட்டியதாய்
அழகிய ஆடைகளை
அணிந்து சென்றாள்
ரூத்து.
மாமியார் சொன்னதை
தவறாமல் செய்தாள்.
நள்ளிரவில் கண்விழித்த போவாசு
அருகே ஓர்
இளம் பெண் இருப்பதில்
இதயம் அதிர்ந்தார்.
யார் நீ ?
என்றார்.
ரூத்தின் அழகிய கோலம்
அவளை புதுப் பூவாய் காட்டியது
பழைய அடையாளங்களை
அழுத்தமாய் அழித்திருந்தது.
ரூத்து அவரிடம்,
நீர் மட்டுமே
என்னைக் காப்பாற்றும்
உரிமையுள்ள உறவினர்,
உமது ஆறுதல் போர்வைக்குள்
என்னை
அடைக்கலமாக்கும் என்றாள்.
போவாசு நெகிழ்ந்தார்,
மகளே,
ஆண்டவர் ஆசி உனக்கு கிடைக்கும்.
நீ,
பணமுள்ள இளைஞனை
மணமுடிக்க விரும்பவில்லை,
ஏழையானாலும்
இளமை கெடாதவனே
உறவாய் வரவும் கோரவில்லை.
கவலைப்படாதே,
என்னைத் தவிர
இன்னோர் உறவினர் உனக்குண்டு,
அவன்
இன்னும் கொஞ்சம் நெருங்கியவன்.
அவன் உனக்கு
அடைக்கலமாக மறுத்தால்
என்
சிறகுகளுக்குள் சங்கமித்துக் கொள்
என்றார்.
விடியும் முன் அவளை
அனுப்பிவைத்தார்.
போர்வை நிறைய
தானியம் திணித்து.
உருவங்களின் முகங்களை
ஊருக்குத் தெரிவிக்கும்
வைகறை வரும் முன்
ரூத்து புறப்பட்டாள்.
மாமியாரிடம் போய்
நடந்ததைக் கூற,
காலம் தாழ்த்தாமல் நல்லசேதி
கனியட்டும் என நகோமி
கடவுளை வேண்டினாள்.
போவாசு,
நகரவாயிலில் சென்று
அமர,
எலிமேக்கின் முறை உறவினர்
அங்கே வந்தார்.
போவாசு,
பெரியோர் சிலரை அழைத்து
உறவினரிடம்
உட்காரச் சொல்லி
பேசத் துவங்கினார்.
எலிமேக்கின் நிலம் ஒன்றை
அவர் மனைவி
விற்கப் போகிறார்,
சம்மதமெனில் வாங்குங்கள்,
அது
உமக்கும்,
உமக்குப் பின் எனக்குமே உரிமை
என்றார்.
உறவினரோ,
வேண்டுமென்றால் வாங்குகிறேன்
என்றார்.
போவாசு,
பேசினார்….
நிலம் வாங்கும் நாள்முதல்
ரூத்தை மனைவியாய்
ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
ரூத்தின்
வழிமரபு வரவேண்டும்,
தலை முறை தழைக்க வேண்டும்.
அதற்காய்
இதற்கு உடன்பட வேண்டும்
என்றார்.
அந்த நிபந்தனையில்
உறவினர் திணறினார்,
அவர் தன்
செல்வத்தின் களஞ்சியத்தை
செலவாக்க விரும்பவில்லை.
அதனால்,
என் சொத்துக்களை பங்குவைக்க
சம்மதமில்லை எனக்கு,
நிலமும் ரூத்தும்
உம்மோடே இருக்கட்டும்
என்றார்.
இஸ்ராவேலர் முறைப்படி
இவ்,
உடன்படிக்கையின் அடையாளமாய்
போவாசு தன்
காலணி கழற்றி
உறவினருக்கு கொடுத்தார்.
மனிதனின் முயற்சிகள்
கடவுள் எழுதிய முடிவுகளில் தானே
முற்றுப் பெறுகின்றன.
எங்கும்
நடப்பவை எல்லாம்
ஏற்கனவே ஆண்டவன் எழுதிய
முற்றுப் பெற்ற
பக்கங்கள் தானா ?
ரூத்து
போவாசின் மனைவியானாள்.
கருத்தாங்கி ஒரு மகனுக்கு
உயிர்கொடுத்தாள்.
ஊர்ப்பெண்கள்,
உன்பால் கொண்டஅன்பால்
உன்னவன் உனக்கு
முதுமையிலும் அன்னமிடுவான்.
என்றனர்
நகோமி,
பிஞ்சுப் பூவை நெஞ்சில் தாங்கி
கொஞ்சிக் குலவினாள்.
பிள்ளையை
பேணிக் காக்கும் தாயானாள்.
குழந்தைக்கு
ஒபேது என்று பெயரிட்டனர்.
ஒபேது !!!
அவர் தான்,
தாவீது அரசரின்
தந்தைக்குத் தந்தை !!!