யார் எதிரி ?
இச்சைக்கு
இணங்கென்று
கண்ணி வெடி வைத்தாள்
கன்னியொருத்தி.
தனிமையின்
நெருக்கத்திலும்
தேகத் தீயில் விழாமல்
தப்பித்தார் யோசேப்பு !
போர்த்திபாவின்
மனைவி,
யோசேப்பின் தூய்மையை
உலகறியச் செய்தவள் !
கடவுளுக்கு எதிராகவே
கர்ஜித்து நின்றான்
ஒருவன்.
வீரனே இல்லாத
கோழை தேசமா என
கொக்கரித்தான்.
கோலியாத்,
தாவீதிடம்
கடவுள் இருந்ததை
வரலாற்றுக்கே
புரிய வைத்தவன்.
புனித முத்தத்தை
புனிதரின் முகத்தில்
பதித்தான் ஒருவன்.
எனினும்
அது புனிதமடையவில்லை.
போலியின் பிசுபிசுப்பால்
கறைபடிந்தது.
யூதாஸ்
சிலுவைப் பயணத்தை
முத்தத்தால்
துவங்கி வைத்தவன்.
கொலையாளிகளின்
ஆடைகளுக்குக்
காவலிருந்தான் ஒருவன்.
கொன்றே தீருவேனென
அழிக்கும் அனலுடன்
சீறிப் பாய்ந்தான்.
பயணம்
சவுலின் சத்தத்தை
பவுலின்
போதனையாய் மாற்றியது.
இறைவன்
வியப்பானவர்.
எதிரியின்
விரல்களைப் பிடித்தும்
எழுதுகிறார்
வெற்றியின் வரலாறுகளை
*
சேவியர்