
மடியில் தாங்கிய மகன்,
மடியும் நிலையில் தொங்க
கொல்கொதாவில்
உயிர்
துடித்து நின்றார் ஓர் அன்னை.
நம்
அன்னை மரியா !
மடியும் தருவாய் மனிதர்களை
மடியில் தாங்கி அன்பால்
கொல்கொத்தாவில்
உயிர்
துடிக்க நின்றார் ஓர் அன்னை.
அது நம்
அன்னை தெரேசா.
புனிதர்கள்
பிறப்பதில்லை,
பிறப்பெடுக்கிறார்கள்.
மனிதம் புறப்படும் இடத்தில்
புனிதர்கள்
பிறப்பெடுக்கிறார்கள்.
அல்பேனிய மழலை
அன்பினால் மலர்ந்தது
வேதனையின் வீதிகளில்
இயேசுவை விளம்பியது.
பலியாய் தொங்கிய
இயேசுவுக்காய்
வலிகளைத் தாங்கினார் அன்னை.
புனிதர் பட்டம் என்பது
மதிப்பெண்களால் பெறுவதல்ல
மதிப்பீடுகளால் பெறுவது.
திருச்சபை
அன்னையின் பணிகளை
அலசியது !
மலைமேல் இருக்கும் ஊர்
மறைவாய் இருக்க முடியுமா ?
பணியின் வாசனை,
வத்திக்கான் வாசலுக்கு
அறிக்கையாய்
அனுப்பப்பட்டது.
இறையின் வெளிச்சத்தில்
பணியின் பாதைகள்
அலசப்பட்டன.
வியப்பின் ஒப்பத்துடன்
போப்பின் பார்வைக்கு
அன்னையின் அறிக்கை
வந்து சேர்ந்தது.
செபத்தின் ஒளியில்
இயேசுவின் வழியில்
போப்
முடிவெடுக்க முடிவுசெய்தார்.
அன்னையின் பெயரால்
இயேசுவின் அருளால்
புதுமை ஒன்று
நடந்ததாய்
நிரூபிக்கப்பட வேண்டும்.
அது நடந்தது !
அருளாளர் பட்டம் கிடைத்தது !
இரண்டாம் புதுமை
புனிதராக்குவதன்
அனுமதி !
அதுவும் நடந்தது.
வாழும்போது
முதுமைகளைத் தொட்டவர்
மறைந்தபின்
புதுமைகளால் தொட்டார்.
அன்னை !
இதோ
நம் புனிதர் படையில் புதிதாய்.
செப்டம்பர் 5
அனையின் பிறந்த தினம்
செப்டம்பர் 4
புனிதராய் சிறந்த தினம்
நாள்காட்டிகளே
இந்தத் தியதியை
இனிமேல்
அச்சால் எழுதாதீர்கள்.
அன்பால் எழுதுங்கள்
*
Like this:
Like Loading...