Posted in Songs, Sunday School

நான் இயேசுவின் பிள்ளை

Image result for kids and jesus

நான் இயேசுவின் பிள்ளை
எனக்கு கவலையே இல்லை
அருகில் வாவென
என்னை அழைத்தார்
தடுத்த மனிதரை
இயேசு கடிந்தார்

இயேசுவின் மனதில் நானிருப்பேன்
எந்தன் மனதில் அவர் இருப்பார்
அவரின் அன்பின் நானிருப்பேன்
அவர் போல் அன்பாய் நான் நடப்பேன்

Advertisements
Posted in Songs, Sunday School

Song : யூதாஸ் நானொரு யூதாஸ்

Image result for judas

யூதாஸ் நானொரு யூதாஸ்
மறைவாய் திரியும் யூதாஸ்
யூதாஸ் நானொரு யூதாஸ்
பாவம் உலவும் யூதாஸ்

எந்தன் பேச்சில் புனிதம் வடியும்
எந்தன் நடையில் பணிவும் தெரியும்
எந்தன் செயலில் மனிதம் மிளிரும்
இறைவா உண்மை உமக்கே தெரியும்

*

சுருக்குப் பையில் பணமும் தந்தால்
பாவ புண்ணியம் பார்ப்பதும் இல்லை
அன்போ நட்போ எதுவும் எந்தன்
தீய எண்ணம் தடுப்பதும் இல்லை

செல்வம் எனக்கு இறையென்றேன்
இறையை செல்லாக் காசென்றேன்
உலகின் பின்னால் அலைகின்றேன்
இறைவா உம்மை பிரிகின்றேன்

*

உறவின் அழகாம் முத்தம் தந்தும்
பிறரை அழிக்க தயங்கிய தில்லை
போலித் தனத்தை நெஞ்சில் நானும்
வேலி போட்டுத் தடுப்பதும் இல்லை

அன்பை நானும் போவென்றேன்
உண்மை நேசம் ஏனென்றேன்
விண்ணக வீட்டை வீணென்றேன்
தன்னலக் கூட்டில் வாழ்கின்றேன்

Posted in Christianity, Sunday School

Skit : Exam Preparation எது தேவை ?

Image result for students tension

காட்சி 1

( மூன்று மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். )

மாணவர் 1 : மச்சி.. இந்த எக்ஸாமை கண்டுபிடிச்சவன் யாருண்ணு முதல்ல கண்டுபிடிக்கணும்டா… அதுமட்டும் இல்லேன்னா நமக்கு டென்ஷனே இல்லை

மா 2 : நானும் அதையே தான் நினைக்கிறேன்… எழுதி வெச்சிருக்கிறதை படிக்கணும், அப்புறம் படிச்சதை எழுதி வைக்கணும்.. என்ன ஒரு பழக்கமோ…

மா 1 : அதான்…. அதைத் தான் நானும் சொல்றேன்… தேவையில்லாத டென்ஷன். படிச்சமா.. ஸ்கூலை முடிச்சமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு… எக்ஸாம்..கிக்ஸாம்ன்னு….

மா 3 : ஆமாமா. முதல்ல எக்ஸாம் வேண்டாம்ன்னு சொல்லுவீங்க, அப்புறம் படிப்பு வேண்டாம்ன்னு சொல்லுவீங்க.. அப்புறம் ஸ்கூலே வேண்டாம்ன்னு சொல்லுவீங்க…

மா 2 : டேய் மச்சி.. நிஜமா சொல்லு.. உனக்கு எக்ஸாம்ன்னா வயத்தைக் கலக்குதா இல்லையா…

மா 3 : படிக்கும்போ மண்டை கலங்கறதும்.. எக்ஸாமுக்கு வயத்தை கலக்கறதும் இல்லாம இருக்குமா.. எனக்கும் செம டென்ஷனா தான் இருக்கு.

மா1 : அப்படி ஒத்துக்கோ… படிச்சதே மறந்துடும் போல இருக்கு. ரெண்டாம் பாடத்துக்கு போகும்போ முதல் பாடம் மறந்துடுது. மூணாம் பாடத்துக்கு போகும்போ ரெண்டு பாடமும் மறந்துடுது.. எக்ஸாமுக்கு போகும்போ என்ன சப்ஜெக்ட் ந்னே மறந்துடுது

மா 2 : தமிழ் இங்கிலீஸ் சயின்ஸ் மாதிரி…. டென்ஷனில்லாம எக்ஸாம் எழுதறது எப்படின்னு ஒரு பாடம் வைக்கணும்டா….

மா 3 : அடப்போடா இவனே… அதை படிக்கணும்ங்கற டென்ஷன் கூடிடும்டா…

மா 1 : டேய் ஒண்ணு பண்ணுவோமா ? நம்ம விக்டர் வாத்தியார் வீட்டுக்கு போய் கொஞ்சம் பேசிட்டு வருவோம்டா… அவரு கூட பேசினா கொஞ்சம் பயமெல்லாம் போகும்ன்னு நினைக்கிறேன்.

மா 2 : இன்னிக்கு சண்டேடா… சர்ச் அது இதுன்னு அவரு பிஸியா இருப்பாரு.

மா 1 : பரவாயில்லை டிரை பண்ணுவோம்…

( அதே காட்சியில்… வாத்தியார் வீட்டுக்குப் போவது போல .. )

( கதவைத் தட்டுகிறார்கள் )

மா 2 : சார்.. சார்…

மா 1 : சார்.. இருக்கீங்களா ?

சார் : அடடே.. என்னப்பா.. இந்த நேரத்துல இங்க வந்திருக்கீங்க.. என்ன விஷயம்..

மா 2 : டிஸ்டர்ப் பண்ணிட்டோமா சார்..

சார் : அட.. இல்லப்பா.. யூத் பசங்க ஒரு ஸ்கிட் போட்டாங்க.. அதை டிவில போட்டு பாத்துட்டு இருந்தேன்.
ஆமா.. என்ன இந்த பக்கம்.. ஏதாச்சும் டவுட்டா ? பாடத்துல ?

மா 3 : பாடத்துல டவுட் இல்ல சார்.. ஆனா..

சார் : என்னடா.. ஆனா.. ஊனா ந்னு இழுக்கறீங்க ?

மா 2 : எக்ஸாமை நினைச்சா கொஞ்சம் டென்ஷனா இருக்கு சார்.

சார் : ஏன்பா……… எதுக்கு டென்ஷன்…நாம படிச்சதை எழுதப் போறோம் அவ்ளோ தானே..

மா 3 :சார்.. பப்ளிக் எக்ஸாம் சார்.. பேரன்ட்ஸ் வேற ரொம்ப மார்க் எக்ஸ்பக்ட் பண்றாங்க…. எல்லாம் சேத்து ஒரே டென்ஷன் சார்.

சார் : ம்ம்.. முதல்ல புக்கை எல்லாம் மூடி வையுங்க. நான் ஒரு ஸ்கிட் பாத்துட்டு இருந்தேன்ல,.. அதை பாப்போம்.

மா 2 : சார்.. நாளைக்கு எக்ஸாம் சார்.. இப்ப போய் ஸ்கிட் பாக்க சொல்றீங்க…

சார் : உக்காருப்பா முதல்ல.. ஸ்கிட்டை பாப்போம்

மா 3 : என்ன ஸ்கிட் சார்

சார் : தாவீது.. கோலியாத்.

மா 1 : அதானா.. அதான் தெரிஞ்ச கதையாச்சே..

மா 2 : எனக்கு தெரியாது சார்.. அதென்ன கிறிஸ்டியன் கதையா ?

சார் : பைபிள் ல உள்ள முக்கியமான ஒரு கதை….. பசங்க எப்படி நடிச்சிருக்காங்கன்னு பாப்போம்.. வெயிட் பண்ணுங்க.. அந்த முக்கியமான சீனை மட்டும் போடறேன்.. பாப்போம்.

காட்சி 2

Image result for david goliath speaking

( தாவீது கோலியாத் ஸ்கிட் ங்க.. இரண்டு பேர்… தூய தமிழில் பேசினால் நல்லா இருக்கும். this is just another scene … not video )

கோலியாத் : ஹா..ஹா.. கோழைகளே.. போருக்கா அணிவகுத்து நிற்கிறீர்கள் ? இல்லை வேடிக்கை பார்ப்பதையே வாடிக்கையாய்க் கொண்டிருக்கிறீர்களா ?

கோலியாத் : நான் பெலிஸ்தியன் தான். நீங்கள் சவுலின் அடிமைகளல்லவா ? உங்களுக்கு எங்கே வீரம் இருக்கப் போகிறது ? அப்படி வீரம் இருந்தால் உங்களில் ஒருவனை இங்கே அனுப்புங்கள். அவன் என்னோடு போரிடட்டும். அவன் என்னை கொன்றால் பெலிஸ்தியராகிய எல்லாம் உங்களுக்கு அடிமைகள். நான் வென்றால் நீங்கள் எங்களுக்கு அடிமைகள். என்ன சவாலுக்கு தயாரா ?

கோலியாத் : இஸ்ரயேலர்களே… இல்லாத கடவுளை நம்பும் பொல்லாதவர்களே…. முதுகெலும்பின்றி முடங்கும் கோழைகளே.. என்ன ? என் குரல் கேட்டு உங்கள் விழிகள் கூட வியர்த்துப் போனதோ ?

( அப்போது தாவீது வருகிறார் )

கோலியாத் : யாருப்பா அது… சிங்கத்துக்கு முன்னாடி ஒரு குட்டி ஆடு மாதிரி வரது.. தம்பி. ஓரமா போப்பா.. இங்கே யுத்தம் நடக்கப் போவுது !

தாவீது : யுத்தம் நடக்கப் போவுதுன்னு எனக்கும் தெரியும். அதனால தான் வந்திருக்கிறேன்.

கோலியாத் : புரியலையே.. நீ எதுக்கு வந்திருக்கிறாய் ?

தாவீது : உன்னுடன் வாதிட அல்ல… போரிட.

கோலியாத் : என்ன ? என்னுடன் யுத்தம் செய்ய நீ யா ? கோலுடன் என்னிடம் சண்டைக்கு வர நானென்ன நாயா ? இஸ்ரயேலர்கள் என்னை இழிவுபடுத்த உன்னை அனுப்பியிருக்கிறார்களா ? இல்லை உன்னை அழிக்க என்னிடம் அனுப்பியிருக்கிறார்களா ?

தாவீது : நீ எங்கள் ஆண்டவரைப் பழித்துரைத்தாய்…. அவருடைய பெயரைச் சொல்லவே நாங்கள் துணிச்சல் கொண்டதில்லை. அந்தத் திருப்பெயரை இழிவு படுத்தவும் நீ தயங்கவில்லை. எனவே உன்னைச் சும்மா விடப்போவதில்லை….

கோலியாத் : என் கடவுளர்களின் பெயரால் உன்னைச் சபிக்கிறேன்.. நீ அழிவாய்.. உன்னை கணப்பொழுதில் இல்லாமல் செய்து விடுவேன்.

தாவீது : ஹா..ஹா.. ஆணவம் என்பது அழிவுக்கான ஆயுதம். நீ வாளை விட அதிகமாய் வாயைத் தான் பயன்படுத்துவாயோ ?

கோலியாத் : எறும்பைப் போல இருந்து கொண்டு ஏளனம் செய்கிறாயா ? நீ வாள் தூக்கவே வலிமையற்றவன். கேடயம் தூக்கினால் உடைந்து விடுவாய். நானோ போர்க்களத்திலே பிறந்தவன், போர்களோடு வளர்ந்தவன், வெற்றிகளோடு மட்டுமே வாழ்பவன்.

தாவீது : அதனால் தான் தலைக்கனம் பிடித்து ஆடுகிறாய். சிங்கத்தை விரட்டிப் பிடித்து அதன் தாடையை உடைத்து ஆடுகளை மீட்கும் கலை அறிந்தவன் நான். அதற்குக் காரணம் என் வீரமல்ல, என் தேவனின் கருணை. நீ.. அவரையே அவமானப்படுத்திவிட்டாய்.

கோலியாத் : ஹா..ஹா.. விலங்குகளை வெற்றி கொள்வதை பெருமையாய்ப் பேசுகிறாய். இஸ்ரயேலரின் வீரம் அவ்வளவு தானா ? விலங்குகளைக் கொல்லும் வீரர்களா ? ஹா…ஹா…

தாவீது : நீயும் அவற்றில் ஒன்றைப் போல தான்… விலங்குக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை

கோலியாத் : என்னை விலங்கென்கிறாயா ?

தாவீது : கடவுளை அறியாதவனை நான் அப்படி அழைப்பது தான் வழக்கம். நான் கடவுளின் பெயரால் உன்னுடன் போரிட வந்திருக்கிறேன். நீயோ வெறும் ஈட்டியையும், வாளையும் நம்பி களமிறங்கியிருக்கிறாய். கர்த்தரா கருவியா ? எது வெல்லும் என்பதை நீயறிவாயா ?

கோலியாத் : ஹா…ஹா வெல்வதா ? இன்னும் சிறிது நேரத்தில் உன்னை வானத்துப் பறவைகளுக்கும் , விலங்குகளுக்கும் இரையாக்குவேன்.

தாவீது : என்னையா ? உனது உடலை துண்டாக்கி, பெலிஸ்தியரை விலங்குக்கு உணவாக்கி, வானத்துப் பறவைகளுக்கு விருந்தாக்குவேன் நான்.

கோலியாத் : என்னையா ? சுயநினைவோடு தான் பேசுகிறாயா ? மலையோடு கடுகு சவால் விடுவதா ?

தாவீது : உன்னோடு சவால் விடுவது நானல்ல, என் ஆண்டவர். இது ஆண்டவரின் போர். அவரே உன்னை அழிப்பார். அவரே எம்மை விடுவிப்பார். அவர் வாளினாலும், ஈட்டியினாலும் மீட்பவர் அல்ல என்பதை உலகமே புரிது கொள்ளும். அவர் படைகளின் ஆண்டவர், இந்த யுத்தம் அவருடையது.

கோலியாத் : அவர் படைகளின் ஆண்டவரா ? நான் படைகளையே ஆள்பவன்… தெரியுமா.. உன்னை அழிப்பது எனக்கு வெகுது. இனியும் தாமதிக்கப் போவதில்லை…. உன்னை என்ன செய்கிறேன் என இஸ்ரயேலர்கள் பார்க்கட்டும்….

( கோலியாத் வாளோடு பாய, தாவீது கவண் எறிய, கவண் கல் பட்டு… கோலியாத் சாய்கிறான். கோலியாத்தின் வாளையே உருவி அவன் தலையை வெட்டுகிறார் தாவீது …)

தாவீது : இதோ தலைக்கனம் பிடித்தவன் தரையில் கிடக்கிறான். இஸ்ரயேலரின் கடவுளைப் பழித்தவன் அழிந்து விட்டான். படைகளின் ஆண்டவர் புகழுக்குரியவர், பழிப்புக்குரியவர் அல்ல. எதிரிகளை அழிப்பவர் அவரே…

( நாடகத்தை ஆஃப் பண்ணி வைத்து விட்டு, .. ஆசிரியரும் மாணவர்களும் பேசுகின்றனர் )

சார் : நாடகம் எப்படி இருந்துச்சு..

மா 1 : சூப்பரா இருந்துச்சு சார். பசங்க நல்லா நடிச்சிருந்தாங்க.

சார் : இப்போ உங்களுக்கு எக்ஸாம் எழுத தைரியம் கிடைச்சிருக்குமே !

மா 2 : தாவீதுக்கும், தேர்வுக்கும் என்ன சார் சம்பந்தம். ?

சார் : இருக்கு.. சொல்றேன். தாவீதோட வெற்றிக்குக் காரணம் என்னன்னு நினைக்கிறீங்க ?

மா 3 : அவனோட கவண் எறியும் திறமை தான் சார். அவன் நல்லா பழகியிருக்கான் அதுல. அதனால தான் குறிபார்த்து நெற்றியில எறிய முடியுது அவனால.

மா 1 : அவனோட ஆடு மேய்க்கும் கால எக்ஸ்பீரியன்சை பயன்படுத்தறாரு.

சார் : வேற ஏதாச்சும் ? அவனோட வெற்றிக்கு காரணம் ?

மா 3 : கடவுள் அவரோடு கூட இருந்தாரு. அவரை விட்டு விலகிப் போகல. அதனால வெற்றி அவருக்குக் கிடைச்சுது.

சார் : எக்ஸாக்ட்லி.. நாம தேர்வுக்கு தயாராகும்போ கூட நமக்கு இந்த ரெண்டு விஷயங்களும் இருந்தா போதும். ஒண்ணு நமக்கு கடவுள் குடுத்திருக்கிற திறமையைப் பயன்படுத்தி நல்லா படிக்கணும். அதுக்கு நல்ல பயிற்சி எடுக்கணும். தாவீது கவண் வீசறது அது முதல் முறை கிடையாது. இல்லேன்னா முந்தின நாள் நைட் எடுத்த அவசர பயிற்சியும் கிடையாது. விலங்குகளிடமிருந்து ஆடுகளைக் காப்பாற்ற அவன் எடுத்த தொடர் முயற்சி அது. அதே போல நாம படிக்கிறதையும் தொடர்ந்து படிச்சுட்டே இருக்கணும்.

மா 2 : புரியுது சார்… ஒரு விதை வளர்ற மாதிரி படிப்பை தொடர்ந்து கவனிக்கணும்ன்னு சொல்றீங்க.

சார் : ஆமா.. இரண்டாவதா, அவன் திறமையை நம்பி களமிறங்கல. திறமை இருந்தாலும் கடவுளோட அருள் தான் மிக முக்கியம். அவரோட அருளுக்காக செபிக்கணும். அவர் நமக்காக செய்கிற யுத்தம் ஆயிரம் படங்கு பயன் தரக் கூடியது. தாவீது கடவுளை ஆழமா நம்பி களமிறங்கின மாதிரி, நீங்களும் கடவுளை நம்பி களமிறங்கணும். அப்போ தான் பயம் விலகும்.

மா 3 : அப்போ தான் தேர்வு எங்கிற கோலியாத் நம்மை எவ்வளவு தான் பயமுறுத்தினாலும் பயிற்சி என்கிற கவண் கல்லால , கடவுளின் அருளோட அவனை வீழ்த்த முடியும் அப்படித்தானே சார்…

சார் : அதே தான். நீங்க நல்லா படிச்சிருக்கீங்க, பணிவோட, இப்போ கடவுளோட அருளையும் வேண்டிக்கோங்க. கடவுள் கூட இருந்தா படிச்சதையெல்லாம் சரியா பயன்படுத்த உங்களுக்கு அவர் ஞானத்தைத் தருவார்.

மா 2 : ரொம்ப நன்றி சார். பயத்தை வெல்ல நமக்குத் தேவை திறமை மட்டுமல்ல, கடவுளோட கிருபையும் ங்கறதை புரிஞ்சுகிட்டோம்.

சார் : அப்புறம் என்ன, நல்லா பிரேயர் பண்ணுங்க . படிச்சதை சரியா எழுதவும், தேர்வில வெற்றி பெறவும் கடவுள் உதவி செய்வார்.

மாணவர்கள் : தேங்க்யூ சார்.. நாங்க கிளம்பறோம்.

Posted in Songs, Sunday School

இயேசப்பா உங்க அன்பு

Image result for praying to jesus

இயேசப்பா உங்க அன்பு ரொம்ப பெருசு
அது
ஆழ்கடலை விட ரொம்ப ஆழமானது
இயேசப்பா உங்க அன்பு ரொம்ப பெருசு
அது
வான் வெளிய விட ரொம்ப நீளமானது.

இயேசப்பா…
இயேசப்பா…
(இயேசப்பா.. )

*

பசி தாகத்தால நான் பதறுகையிலே
மேய்ச்சலுக்கு புல்வெளிக்கு கூட்டிப் போனீக
காடு மேடு தெரியாம தொலஞ்சு போனப்போ
தோள்மேல நீங்க என்னை தூக்கி கிட்டீக

ஐயோ பசிக்குதுன்னு
கலங்கி நின்னப்போ
மண் மேலே
மன்னாவைப் பொழியச் செஞ்சீங்க

மண் மேலே
மன்னாவைப் பொழியச் செஞ்சீங்க

( இயேசப்பா )

புயலடிச்ச படகைப் போல வாழ்க்கை ஆனப்போ
பயத்தைப் போக்க காத்தைக் கூட அடக்கி வெச்சீங்க

செங்கடலும் மல்லுக்கட்டி முன்னால் நின்னப்போ
கடலுக்கு நடுவால பாத போட்டீக

ஐயோ மாட்டேனுன்னு
கதவடைச்சாலும்
கதவோடு கதவாகக் காத்திருப்பீக

(இயேசப்பா )

 

Posted in Sunday School

SKIT : உள்ளே வெளியே !

Image result for knocking door female

 

( வெளியே இருந்து தோழி கதவைத் தட்டுகிறார் )
டொக் டொக்
(உள்ளே டிவி ஓடும் சத்தம் )

டொக்..டொக்…

( நீண்ட நேரத்துக்குப் பிறகு கதவு திறக்கப்படுகிறது )

தோழி 1 : ஹேய்.. நீயா ? எப்போ வந்தே ?

தோழி 2 : எப்போ வந்தேனா… எவ்ளோ நேரமா கதவைத் தட்டிட்டு இருக்கேன் தெரியுமா ?

தோழி 1 : சாரிடி… டிவி பாத்துட்டு இருந்தேன் சத்தம் கேக்கல

தோழி 2: நானும் தட்டி கிட்டே இருக்கேன்… ஒரு வேளை திறக்காமலேயே போயிடுவியோன்னு பயந்துட்டேன்.

தோழி 1 : புக்ஸ் எல்லாம் வேற அடுக்கிட்டு இருந்தேன்.. அப்படி இப்படி நிறைய வேலை செஞ்சிட்டு இருந்ததால கதவைத் தட்டற சத்தம் கேக்கல.

உடைச்சிட்டு வந்திருக்க வேண்டியது தானே … ( சிரித்துக் கொண்டே )

தோழி 2 : நான் ரொம்ப டீசன்ட்.. அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் தெரியாதா ?

தோழி 1 : சரி..சரி.. உள்ளே வா..

( உள்ளே போய் அமர்கிறார்கள். அப்போது தோழி 1ன் அம்மா டீ கொண்டு வருகிறார் )

அம்மா : வாம்மா.. நல்லா இருக்கியா.

தோழி 2 : நல்லா இருக்கேன் ஆன்டி… நீங்க எப்டி இருக்கீங்க ?

அம்மா : நல்லா இருக்கேன்மா… என்ன ஒரே வாக்குவாதமா இருந்துச்சி ?

தோழி 2: இல்ல ஆன்டி.. ரொம்ப நேரம் கதவ தட்டிட்டே இருந்தே.. ஏன்டி திறக்க லேட்டுன்னு கேட்டுட்டு இருந்தேன்.

அம்மா : ம்ம்.. உங்க கதையை கேக்கும்போ எனக்கு ஒரு பைபிள் வசனம் தான் ஞாபகம் வருது !

தோழி 1 : வ்சனமா ? அவ்ளோ ஸ்பிரிச்சுவலாவா நாங்க பேசிகிட்டோம்

அம்மா : ஆமாமா ரொம்ப …. வசனம் சொல்றேன் கேட்டுக்கோ… “இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.” ந்னு திருவெளிப்பாடு 3:20 ல ஒரு வசனம் வருது.

( கவனமாகக் கேட்கிறார்கள் )

அம்மா : இயேசு நம்மோட இதய வீட்டுக்குள்ள நுழையறதுக்காக வாசல்ல நின்னு கதவைத் தட்டிட்டு இருக்காரு. நாம கதவைத் திறந்தா தான் அவர் உள்ளே வருவாரு. நம்ம கூட அமர்ந்து சாப்பிடுவாரு.

தோழி 1 : சரிம்மா… ஆனா கதவைத் தட்டற சத்தம் நமக்குக் கேட்டா தானே நாம திறக்க முடியும்.

அம்மா : கரெக்ட்.. அதான் விஷயம் ! டிவி சத்தம் அதிகமா இருந்ததால கதவைத் தட்டற சத்தம் உனக்குக் கேக்கல. இப்படித் தான் உலக கேளிக்கைகளில நாம மூழ்கிக் கிடந்தா கடவுளோட சத்தத்தை நாம கேக்க முடியாது.

தோழி : எப்பவும் டிவி பாக்க மாட்டோம்ல, படிப்போம்… வீட்டு வேலை செய்வோம்.

அம்மா : எதை செய்தாலும் கடவுளுக்காக செய்யணும். அல்லது கடவுளை நினைச்சுட்டே செய்யணும். அப்போ அவரோட சத்தம் நமக்கு கேட்கும். அதைத் தவிர நாம செய்ற எல்லா வேலையுமே உலகம் சார்ந்தது தான்.

தோழி : இப்பல்லாம் கதவு தட்ற சத்தம் கேட்ட உடனே திறக்க முடியாது ஆன்டி. திருடங்க, ஏமாத்துகாரங்க கூட தனியா இருக்கிற வீட்ல திருட வருவாங்க.

அம்மா : உண்மை தான். அதனால தான் தட்றது யாருங்கறது நமக்கு தெரியணும். இப்போ உன் பிரண்டோட குரல் உனக்கு நல்லா தெரியும்ல, அதனால நீ தைரியமா திறக்கிறே. அதே போல இயேசுவோட குரல் உனக்கு நல்லா தெரிஞ்சா நீ அவர் கதவைத் தட்டும்போ திறக்கலாம்ல.

தோழி : அது உண்மை தான். அவரோட குரலை எப்படி தெரிஞ்சுக்கறது ?

அம்மா : ஒருத்தரோட குரல் தெரியணும்ன்னா, அவர் கூட நாம அதிக நேரம் பேசியிருக்கணும். இயேசு கூட பேசறதுங்கறது அவரோட வார்த்தைகளைப் படிக்கிறது தான். அதுல தான் அவரோட இதயத்தையும், அன்பையும் நாம புரிஞ்சுக்க முடியும்.

தோழி : சரிதான் ஆன்டி. இருந்தாலும் நாம ஒரு வேளை கவனிக்காம இருந்தா கூட அவரே ஏதாவது பண்ணி உள்ள வரலாம்ல ?

அம்மா : கடவுள் அந்த விஷயத்துல ரொம்ப பொறுமையும், அன்பும் உள்ளவரு. நாம ஆசையோட கதவைத் திறக்கணும்ன்னு விரும்புவாரு. அதுக்காகத் தான் நமக்கு ஃப்ரீ வில் குடுத்திருக்காரு. அவரா கதவை உடைச்சுட்டு வரமாட்டாரு.

தோழி : நாங்க கதவைத் தட்டின மேட்டரை வெச்சு நீங்க ஒரு நல்ல செய்தியையே குடுத்துட்டீங்க.

தோழி : இல்லல்ல.. நான் திறக்க லேட் ஆனதால தான் இந்த மெசேஜ் கிடைச்சுது.

அம்மா : போதும் போதும். விஷயம் புரிஞ்சுகிட்டீங்கல்ல.. .. நம்ம இதயக் கதவை கடவுள் தட்டிட்டே இருக்காரு, அவரை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைக்காம உள்ளே கூப்டுங்க. அவர் நம்மோட சேர்ந்து விண்ணக விருந்தை சாப்பிடுவாரு.

தோழி : சரிம்மா…

அம்மா : இப்போ நாம மண்ணக விருந்தான மட்டன் பிரியாணி சாப்பிடுவோம் வாங்க

 

Posted in Sunday School

SKIT Salvation : மீட்பு

( தோழி ஸ்கூட்டியில் வருகிறாள், வழியே இன்னொரு தோழியை சந்திக்கிறாள் )

Image result for girl in scooty

தோழி 1 : ஹேய்.. லிசா.. எப்படி இருக்கே ?

தோழி 2 : நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்கே ?

தோழி 1 : சூப்பரா இருக்கேன்.. இங்க என்ன பண்ணிட்டு இருகே..

தோழி 2 : சும்மா தாண்டி இருக்கேன். .. நீ என்ன பண்றே..

தோழி 1 : சாப்ட போலாம்ன்னு கிளம்பினேன்… நீ சாப்டியா ?

தோழி 2 : இல்ல.. இன்னும் இல்ல..

தோழி 2 : சரி.. வா.. சாப்ட போலாம்.. நீ எனக்கு டிரீட் குடுத்து ரொம்ப நாளாச்சுல்ல.. ஒரு பிரியாணி வாங்கி குடு… ( சிரிப்பு )

தோழி 1 : ஏண்டி கடுப்படிக்கிறே… கையில சுத்தமா காசில்லை.

தோழி 2 : ஏன் ? உங்க அப்பா காசு அனுப்பறதில்லையா ?

தோழி 1 : இல்லடி…

தோழி 2 : போன வாரம் கூட ஏதோ அனுப்பினாரேடி..

தோழி 1 : அது ஏதோ செக்.. பத்தாயியிரம் ந்னு போட்டு அனுப்பினாரு.

தோழி 2 : வாவ்.. பத்தாயிரமா ? அப்புறம் என்ன ? அதை வெச்சு நாலு மாசம் பிரியாணி சாப்பிடலாமே.

தோழி 1 : நான் அதை பேங்க்ல போடவே இல்ல

தோழி 2 : ஏன் ?

தோழி 1 : அவரு அக்கவுண்ட்ல காசெல்லாம் இருக்காது. அவரு சும்மா அனுப்பறாருன்னு நெனக்கிறேன்.

தோழி 2 : ஹலோ.. ஏன் அப்படி சொல்றே ? பேங்க்ல செக் பண்ணினியா ?

தோழி 1 : இல்ல அதெல்லாம் செக் பண்ணல…

தோழி : அப்புறம் எப்படி நீயா டிசைட் பண்றே ? போட்டு பாத்திருக்கலாம்ல ?

தோழி : எனக்கு நம்பிக்கையில்லப்பா… அதெல்லாம் டைம் வேஸ்ட்.

தோழி : எந்த பேங்க் செக்

தோழி : எஸ்பிஐ தான்…

தோழி : அப்போ வேலை ஈசி.. என்னோட பிரண்ட் ஒருத்தி எஸ்பிஐ ல வேல பாக்கறா அவகிட்டே கேட்டு சொல்றேன். அந்த செக்கை குடு

( செக்கை குடுக்கிறாள்.. தோழி போன் பண்ணுகிறாள் )

தோழி : ஹேய்.. ஒரு ஹெல்ப் பண்ணு.. ஒரு அக்கவுண்ட் நம்பர் சொல்றேன்.. அதுல காசு இருக்கா பாத்து சொல்லு…

( மௌனம் )

என்னடி சொல்றே… அவ்ளோவா… எனக்கு தலையே சுத்துதுடி… ஓ.. தேக்ஸ்டி.

(போனை வைக்கிறாள் )

தோழி : ஏய்..லூசு.. உங்க அப்பா அக்கவுண்ட் நிரம்பி வழியுதுடி. இந்த செக் இல்ல, இதமாதிரி இன்னும் பத்தாயிரம் செக் போட்டா கூட எடுக்கிறதுக்கு பணம் இருக்கு.

தோழி : என்னடி சொல்றே ? நிஜமாவா ?

தோழி : ஆமாடி…

தோழி : ஓ.. இதையெல்லாம் நம்பாம நான் எவ்ளோ செக்கை வேஸ்ட் பண்ணிட்டேனே..

தோழி : சரி, பழசை விடு.. இதை டெப்பாசிட் பண்ணுவோம்.

( இருவரும் வண்டியில் ஏறி போகின்றனர். )

பின் குரல் :

இப்படி ஒரு முட்டாளா நாம இருக்க மாட்டோம்ன்னு தானே நினைக்கிறீங்க.. ஒரு நிமிடம் வெயிட் பண்ணுங்க.

இறைவன் நமக்கு இலவசமாக மீட்பை வழங்குகிறார். அவர் நமக்காக வந்தார், வாழ்ந்தார், இறந்தார், உயிர்த்தார் என்பதை நம்பினாலே போதும். மீட்பு நமக்குக் கிடைக்கும். நாமோ இந்த எளிய விஷயத்தை நம்பாமல் நமக்குக் கிடைக்கவேண்டிய உன்னத நிலையை இழந்து விடுகிறோம் இல்லையா ? அப்போ நமக்கும் அந்த தோழிக்கும் என்ன வித்தியாசம் ?

விழித்துக் கொள்வோம்.

இறைவன் இலவசமாய் மீட்பைத் தருகிறார். வாங்கிக் கொள்ள நீங்கள் தயாரா  ?

Posted in Sunday School

Short Skit : IT அலுவலகம்

Image result for discussion

(மேனேஜரைக் கூப்பிட்டு எச்.ஓ.டி பேசுகிறார் )

தலை : மிஸ்டர் ராம்.. ஒரு ஹேப்பி நியூஸ். பிரசாத்க்கு ஆன்சைட் ஆப்பர்டியூனிடி குடுக்கலாம்ன்னு இருக்கேன்

மே : பிரசாத் க்கா ?

தலை : ஆமா… ரொம்ப நாளா கேட்டுட்டே இருக்காரு. ஹி ஈஸ் டேலன்டட்… எல்லா ரிவ்யூஸ்லயும் ஹி ஈஸ் த டாப்பர்.

மே : எஸ்..ஐ..நோ…

தலை : ஏதோ சொல்ல வரீங்க… என்னன்னு சொல்லுங்க

மே : அவரு டேலன்டட் தான்.. அவரோட திறமைல எந்த சந்தேகமும் இல்லை.. பட்..

தலை : பட்.. ? சொல்லுங்க.

மே : அவரோட இன்டர்பர்சனல் ஸ்கில்ஸ் கொஞ்சம் வீக் தான்.. இன்னும் டெவலப் பண்ணணூம்.

தலை : என்ன சொல்றீங்க ?

மே : வெளிநாட்டுக்கு போறாரு.. கஸ்டமர் சைட் வேற.. டெக்னாலகி ஸ்கில்ஸ் மட்டும் இருந்தா போதாதுல்ல… கூடவே இப்படிப்பட்ட சாஃப்ட் ஸ்கில்ஸ் ரொம்ப முக்கியம்

தலை : ம்ம்ம்ம் அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணலாமா ?

மே : அது என்னோட சஜஷன் சார் ! அதுக்கு பதிலா விக்னேஷை அனுப்பலாம். ஹி ஈஸ் ஈக்வலி டேலன்டட்…

தலை : மிஸ்டர் ராம். ஐம் பிரவுட் ஆஃப் யூ ! ராம் உங்க சொந்த பையன். உங்க பையனா இருந்தா கூட எந்த விதமான சுயநலமும் இல்லாம கம்பெனி நலத்துக்காக இப்படி ஒரு ஜென்யூன் ஃபீட்பேக் குடுத்திருக்கீங்க.. ஹேட்ஸ் ஆஃப்.

மே : சார்.. நான் என் கடமையைத் தான் செஞ்சேன்.

தலை : ஓ.கே.. தாங்க்யூ ( கை குலுக்கி விடைபெறுகிறார் )

( வெளியே .. வந்து போனை எடுக்கிறார்… மனைவியை அழைக்கிறார் )

ஏய்… முக்கியமான விஷயம். இன்னிக்கு அவரு பேசினாரு. பையனுக்கு இன்டர்பர்சனல் ஸ்கில்ஸ் இன்னும் வேணும்ன்னு சொல்லி அவனோட டிராவலை ஸ்டாப் பண்ணிட்டேன்.

( மௌனம் )

அவனை பிரிஞ்சு நீயும் இருக்க மாட்டே.. நானும் இருக்க மாட்டேன். அவன் கூட போறதுக்கு உன் ஹெல்த் வேற ஒத்துக்காது. பையன் கம்மியா சம்பாதிச்சாலும் நம்ம கூடவே இருக்கட்டும்ன்னு தான் அப்படி சொன்னேன். பாவம் அவன் கொஞ்சம் ஃபீல் பண்ணுவான். பரவாயில்லை.

( மௌனம் )

சரி.. வைக்கிறேன்

*

வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் கேட்பதை அப்பா உடனே வாங்கித் தருவார். அது அவருடைய அன்பின் வெளிப்பாடு. சிலவற்றை அவர் செய்து தரவே மாட்டார். அது அவருடைய அதீத அன்பின் வெளிப்பாடு.

கடவுளும் அப்படித் தான். சில வேண்டுதல்களை சட்டென நிறைவேற்றுவார். சில வேண்டுதல்கள் அவருக்கும் நமக்கும் இடையேயான பந்தத்தை சிதைக்குமென்றால் தரமாட்டார். அதைப் புரிந்து கொண்டால், எல்லா சூழலிலும் நாம் இறைவனுக்கு நன்றி உடையவர்களாகவே இருப்போம்.