Posted in Articles, Sunday School

SKIT – விற்பனை இலவசம்

விற்பனை இலவசம்

 

காட்சி 1

( ஒரு சேல்ஸ் உமன் – லிசா –  பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறார் )

சேல்ஸ் : வாங்கம்மா.. வாங்குங்கம்மா… அற்புதமான ஹெட்போன்… லேட்டஸ்ட் டெக்னாலஜி ஹெட்போன்… வேற எங்கயும் கிடைக்காது

( அப்போது ஒரு பெண் வருகிறார் )

பெண் : என்னம்மா வேற எங்கயும் கிடைக்காத ஹெட்போன்…. பீடிகை பலமா இருக்கே… 

சேல்ஸ் : வாங்கம்மா.. உக்காருங்க.. இதாம்மா அந்த ஹெட்போன்… பாருங்க, லேட்டஸ்ட் டெக்னாலஜில பண்ணின ஹெட்போன். பாட்டு போட்டீங்கன்னா, சரவுண்ட் சிஸ்டத்துல கேக்கும்.. ஆனா சரவுண்டிங்ல நடக்கிற எதுவுமே கேக்காது… 

பெண் : ஆமா.. பேசறதெல்லாம் நல்லா பேசுவீங்க… 

சேல்ஸ் : என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க.. நீங்க என் அம்மா மாதிரி, உங்க கிட்டே நான் பொய் சொல்லுவேனா… 

பெண் : செண்டிமெண்ட் வேறயா… சரி சரி.. குடு… ( வாங்கிப் பார்க்கிறார் ) .. ம்ம்ம்.. எவ்ளோ ஆகுது ?

சேல்ஸ் : ஜஸ்ட் ஃபைவ் கண்ட் ரட் தான் மேடம். 

பெண் : என்னது, ஐநூறு ரூபாயா ?

சேல்ஸ் : என்ன மேடம் ஐநூறான்னு வாயைப் பொளக்கறீங்க, ஒரு போஸ் ஹெட்போன் விலை என்ன ஆகுது தெரியுமா ?

பெண் : அது எவ்ளோ ஆனா எனக்கென்ன ? 

சேல்ஸ் : மேம்.. அது 10 தவுசண்ட் ருபீஸ் ஆகுது. இது ஜஸ்ட் 500 தான். 

பெண் : அதையும் இதையும் கம்பேர் பண்ண முடியுமா ? அதுல ஒரு குவாலிட்டி இருக்கு.

சேல்ஸ் : இப்படி தான் எல்லாரும் ஏமாந்து போயிடறீங்க. அந்த போஸ் கம்பெனிக்கு பார்ட்ஸ் செஞ்சு குடுக்கிறவங்க தான் இந்த ஹெட்போனுக்கும் பார்ட்ஸ் செஞ்சு குடுக்கிறாங்க. அதே குவாலிட்டி இதுலயும் இருக்கும்.

பெண் : நெஜமாவா சொல்றே ?

சேல்ஸ் : அம்மா.. பொய் சொல்லி சம்பாதிச்ச காசு நிலைக்காதும்மா… நான் டெய்லி இங்கே தான் நிப்பேன்.. ஏதாச்சும் பிரச்சினைன்னா என்கிட்டே வாங்க.

பெண் : ம்ம்.. நான் உன்னை இங்கே பாத்ததே இல்லையே…

சேல்ஸ் : இனிமே பாப்பீங்க மேடம்.. ரெண்டு தரட்டுமா ? ஆயிரம் ரூபாய் தான்.

பெண் : வேணாம் வேணாம்.. ஒண்ணு மட்டும் குடு. சரியில்லேன்னா திருப்பி குடுத்துடுவேன். என் சின்னப் பொண்ணுக்கு குவாலிட்டி சரியில்லேனா புடிக்காது. 

சேல்ஸ் : அதெல்லாம் கவலையே படாதீங்க.. உங்க மூத்த பொண்ணு குடுத்ததா நெனைச்சுக்கச் சொல்லுங்க. செமயா இருக்கும்..

பெண் : சரி சரி…. பொருளை எல்லாம் பேசி பேசியே வித்துடுவீங்களே.. சரி இதா.. ஒண்ணு குடு…  ( 500 ரூபாய் கொடுக்கிறார் ) 

காட்சி 2 

( சேல்ஸ். சோர்வாக பார்க்கில் ஒரு இடத்தில் வந்து அமர்கிறார். )

சேல்ஸ் : ஷப்பா…ப்பா…  ஒரு பொருளை விக்கறதுக்குள்ள தாவு தீந்துடுது… எல்லாரும் ரொம்ப உஷாராயிடறாங்க.. ஏமாத்தவே முடியல. ம்ம்ம் இப்படியே போனா நம்ம சேல்ஸ் வேலைக்கே ஆப்பு வெச்சுடுவாங்க போல.

ரெபா : (அருகில் வந்து அமர்கிறார் ) … ஷப்பா.. ரொம்ப சூடு… இந்த வருஷம் சூடு ரொம்ப அதிகம் போல… எப்போ இந்த சூடு தீருமோ !!!

சேல்ஸ் : ( ரெபாவைப் பார்த்து ) சூடெல்லாம் இப்போதைக்கு தீராது. அதுவும் என்னை மாதிரி சேல்ஸ் கேர்ள் எல்லாம் … ஷப்பா.. ரொம்ப கஷ்டம் தான். ஆமா.. நீங்க என்ன பண்றீங்க ?

ரெபா : நானும் சேல்ஸ் கேர்ள் தான்.

சேல்ஸ் : வாவ்.. நீங்களுமா ? நான் ஹெட்போன் சேல்ஸ் பண்றேன்.. டார்கெட் மீட் பண்ணவே முடியல. ஆமா, நீங்க எவ்ளோ விக்கறீங்க சராசரியா ?

ரெபா : ஒரு 500..

சேல்ஸ் : வாவ்.. 500 ஆ.. ஒரு வருஷத்துலயா, அப்போ நீங்க செம கில்லாடி சேல்ஸ் பர்சன் தான்.

ரெபா : ஒரு வருஷத்துக்கு இல்ல.. ஒரு. மாசத்துக்கு.. 

சேல்ஸ்  : என்ன விளையாடறீங்கறா ? மாசத்துல ஐநூறா ? அப்படி என்ன தான் விக்கறீங்க…

ரெபா : நான்.. எட்டர்னல் லைஃப் ஐ … ஐ கொடுத்துட்டு இருக்கேன்.. மக்கள் ஆர்வமா வாங்கறாங்க… அவங்களோட வாழ்க்கைக்கு அது ரொம்ப முக்கியமா இருக்கு.

சேல்ஸ் : எட்டர்னல் லைஃபா.. என்ன கிராரண்டி ?

ரெபா : லைஃப்டைம் கேரண்டி தான்.. அதான் நிலை வாழ்வு…

சேல்ஸ் : லைஃப் டைம் கேரண்டி ல ஒரு புராடக்டா… ஒண்ணு என்ன ரேட் ஆகுது ?

ரெபா : இது ஃபிரீதான்.. இலவசமா குடுக்க வேண்டியது தான். புராடக்ட் செம வேல்யூ உள்ள புராடக்ட். ஆனா நாங்க பிரியா தான் குடுக்கிறோம். அது தான் எங்களோட பாஸ் தந்த கட்டளை.

சேல்ஸ் : குழப்பறீங்க.. உங்க பாஸ் பிரீயா குடுக்க சொன்னாரா ? அவர் கிட்டே நீங்க பேசியிருக்கீங்களா ?

ரெபா : டெய்லி அவர் கிட்டே பேசாம நான் வேலைக்கு கிளம்பறதும் இல்லை, வேலையை முடிச்சப்புறம் அவர் கிட்டே பேசாம நான் பேசாம தூங்கறதும் இல்லை. அவ்வளவு டச் ல இருக்கோம்… இல்லேன்னா இந்த வேலையை பண்ணவே முடியாது.  

சேல்ஸ் : ஓ.. செம.. எங்க பாஸ் கிட்டே எல்லாம் நாங்க பேசவே முடியாது.. என் பாஸோட, பாஸோட , பாஸோட பாஸ் அவரு…. ம்ம்ம்.. நீ பேசறது… ஹையர்  அஃபிஷியலா ?

ரெபா : அவர் தான் எல்லாரையும் விட ஹையர் அஃபிஷியல். அவருக்கு மேல யாருமே இல்லை. அவரோட ஒரே பையன் தான் இங்கே வந்து இந்த சால்வேஷன், எட்டர்னல் லைஃபை குடுத்துட்டு போனது. அதை தான் நாங்க செல் பண்றோம்.

சேல்ஸ் : ம்ம்.. வெரி இண்டரஸ்டிங்…. புராடக்ட் சரியில்லேன்னு எங்கேயாச்சும் திட்டு வாங்கியிருக்கீங்களா

ரெபா : திட்டா ? பலரை கொன்னே போட்டிருக்காங்க. அது புராடக்ட் தப்புங்கறதனால இல்ல, அந்த புராடக்ட்ல யாரும் தப்பு சொல்லவும் முடியாது. ஆனா நாங்க விக்கறது பலருக்கும் புடிக்கிறதில்லை, காரணம் அது பலருக்கும் புரியறதில்லை. யூஸ் பண்ணிட்டிருக்கிற புராடக்டை விட அவங்களுக்கு மனசில்ல, அதான் காரணம். 

சேல்ஸ் : ம்ம்… உங்க கம்பெனி புதிய கம்பெனியா ? புராடக்டை புரமோட் பண்றதுக்காக ஃபிரீயா குடுக்கறீங்களா ?

ரெபா : ஹா..ஹா.. எங்க கம்பெனி தான் ஓல்டஸ்ட் இன் த வேர்ல்ட்… 

சேல்ஸ் : ஓ… வாவ்… எப்படி ? இவ்ளோ வருஷமா எப்படி நடத்தறாங்க ?

ரெபா : எங்களுக்கு ஒரு பவர்புல் மேனுவல் இருக்கு. அதன் படி நாங்க செயல்படுவோம். மேனுவலுக்கு பைபிள் ந்னு பேரு. அந்த மேனுவல் இருந்தா போதும் கம்பெனியை நடத்திட்டே இருக்கலாம். 

சேல்ஸ் : ஓ.. அப்படியா… நான் கேள்விப்பட்டதில்லை. வேற ஏதாச்சும் விக்கறீங்களா ?

ரெபா :  எஸ் எஸ்… எட்டர்னல் லைஃபுக்கு சப் புராடக்ட்ஸ் இருக்கு, ஃபர்கிவ்னெஸ், லவ், கேர் இப்படி.. 

சேல்ஸ் : ஓ..இப்போ புரியுது. இதையெல்லாம் காசு குடுத்து வாங்கினா, எட்டர்னல் லைஃப் பிரீ அப்படி தானே ? நல்ல டெக்னிக்.

ரெபா : நோ..நோ.. இதுவும் பிரீதான்.. எல்லாமே பிரீ தான்..

சேல்ஸ் : தலையை சுத்துது ! இது ஏழைகளுக்கு உதவி செய்ற நிறுவனமா ? ரிச் பீப்பிள் காசு குடுத்து வாங்குவாங்க, அதை வெச்சு நீங்க ஏழைகளுக்கு ஃபிரீயா குடுப்பீங்க அப்படியா ?

ரெபா : ரிச்.. பூவர்.. டார்க்.. பிரைட்… சாதி.. இனம்.. மொழி.. எந்த பாகுபாடுமே கிடையாது. எல்லாருக்குமே பிரீ தான். 

சேல்ஸ் : அதை வாங்கினா என்ன கிடைக்கும் ?

ரெபா : மன நிம்மதி. நிலை வாழ்வு. இயேசுவோடு வாழ்கிற வாழ்வு. அவர் தான் நமக்காக இரத்தம் சிந்தி நம்ம பாவங்களை மன்னிச்சவர். அவரோட கால காலமா வாழற வாழ்வு. இந்த உலகத்துல சந்தோசம், அடுத்த உலகத்துல மகிழ்ச்சி. எல்லாம் கிடைக்கும்.

சேல்ஸ் : வாங்கறவனுக்கு இதெல்லாம் கிடைக்கும்.. சரி… ஆனா, விக்கற உனக்கு என்ன கிடைக்கும்.

ரெபா : ஒவ்வொருத்தரோட மகிழ்ச்சியிலயும் எனக்கு மகிழ்ச்சி. டெய்லி நான் சந்திக்கிற மக்கள் பற்றி என்னோட பாஸ் கிட்டே பேசுவேன். அதுல எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. அவரு என்னை ஆசீர்வதிப்பாரு. ஏன்னா, நான் யாரை போய் பாக்கப் போறேனோ அவங்களை எல்லாம் அவரு ஏற்கனவே தயார் செஞ்சு வெச்சிருப்பாரு.

சேல்ஸ் : வாட் டு யூ மீன்

ரெபா : அது ஹோலி ஸ்பிரிட் ஏரியா .. அவரு போய் எல்லாரையும் ரெடி பண்ணி வைப்பாரு, சோ.. என்னோட சேல்ஸ் ஈசி… அப்புறம் எங்க கூட எப்பவுமே ஏஞ்சல்ஸ் வரதனால பாதுகாப்பும் உண்டு

சேல்ஸ் : ஏஞ்சல்ஸ்.. ஹூ ஈஸ் தேட்… எங்கே..

ரெபா : ஏஞ்சல்ஸைப் பாக்க முடியாது.. அவங்க என் கூட இருக்காங்க.. தே ஆர் வித் மி.. ஆல்வேஸ்.. 

சேல்ஸ் : ஓ..வாவ்.. என்ன அட்டகாசமான நியூஸ்..  நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே…

ரெபா : கேளுங்க பிளீஸ்.. நீங்க.. என்னோட அக்கா மாதிரி.. தைரியமா கேளுங்க.

சேல்ஸ் : எனக்கும் அந்த எட்டர்னல் லைஃபை தரீங்களா ?

ரெபா : கண்டிப்பா..… உங்களையும் எங்க பாஸ்.. அதான் காட் த ஃபாதர் ரெடி பண்ணிட்டாரு.. 

சேல்ஸ் : நான் என்ன பண்ணணும் ?

ரெபா : முதல்ல பர்கிவ்னஸ் வாங்கணும், அப்புறம் ஜீசஸை ஏத்துக்கணும். “இயேசுவே என்னோட பாவங்களையெல்லாம் மன்னிச்சுடுங்க, நீங்க எனக்காக இரத்தம் சிந்தி மரிச்சீங்கங்கறதை நான் நம்பறேன். உங்களை என்னோட சொந்த இரட்சகரா ஏத்துக்கறேன்”. ந்னு சொல்லுங்க அவ்ளோ தான். 

சேல்ஸ் : யா… நான் நிறைய தப்பு பண்ணியிருக்கேன். பொய் சொல்லி பொய் சொல்லி தான் பொருளையே விக்கறேன். எனக்கு மன்னிப்பு வேணும். “ செபிக்கிறார் )

சேல்ஸ் : வாவ்.. இப்போ எனக்கு ரொம்ப ரிலாக்ஸா இருக்கு.. என்னாச்சுன்னே தெரியல, மனசு ரொம்ப சந்தோசமா ஃபீல் பண்றேன். 

ரெபா : ஆமா, அது தான் இந்த புராடக்டை வாங்கினதும் மனசுல ஏற்படற முதல் மாற்றம். யூ ஆர் சேவ்ட். 

சேல்ஸ் : ரொம்ப நன்றி… ரொம்ப நன்றி… இன்னொரு ஆளுக்கு கூட இந்த புராடக்ட் வேணும். அவரையும் நான் உங்க கிட்டே கூட்டிட்டு வரவா ?

ரெபா : தேவையே இல்லை, நீங்களே குடுக்கலாம். நீங்க எப்படி செபிச்சீங்களோ, அப்படி அந்த நபர் மனசார செபிச்சா போதும். அவருக்கும் கிடைக்கும். ஒரு நிமிஷம்.. இதா இதை வெச்சுக்கோங்க ( பைபிளை கொடுக்கிறார் ).. இதான் மேனுவல். இதை படிங்க…. உங்களுக்கு என்ன சந்தேகம், சோர்வு வந்தாலும் இதை படிச்சா போதும் .. தெளிவு கிடைக்கும். 

சேல்ஸ் : வாவ்.. தட்ஸ் ரியலி வண்டர்புள் …. அப்போ நான் .. நான் நிறைய பேருக்கு இதை குடுக்கலாமா ? ஐ ஏம் எக்ஸைட்டட். 

ரெபா : ஆமா. அதுக்கு முன்னாடி டெய்லி பிரே பண்ணுங்க. அது தான் பாஸ் கூட பேசறது. அவர் கூட பேசப் பேச அவரு உங்களை நல்லா கைட் பண்ணுவாரு. 

சேல்ஸ் : தேங்க்யூ.. தேங்க்யூ.. அப்போ இனிமே நான் இந்த ஹெட்போன் சேல்ஸ் வேலையை நிப்பாட்டிடப் போறேன். இனிமே நீங்க சொன்ன எட்டர்னல் லைஃபை பற்றி தெரிஞ்சுக்கப் போறேன். அதையே எல்லாருக்கும் கொடுக்கப் போறேன். 

ரெபா : ரொம்ப சந்தோசம், சரியான விஷயத்தை நீங்க சூஸ் பண்ணியிருக்கீங்க. இயேசு உங்களை வழி நடத்துவாரு. 

சேல்ஸ் : ரொம்ப சந்தோசம்…  என்ன சொல்றதுன்னே தெரியல, ரொம்ப சந்தோசமா இருக்கேன். 

**********

( அப்போது போன் வருகிறது ) 

********

சேல்ஸ் : சொல்லுங்க மேடம்… 

போன் குரல் : நான் ஹோலி ஃபேமிலி ஸ்கூல் பிரின்சிபல் பேசறேன். போனவாரம் வந்து எனக்கு ஒரு ஹெட்போன் குடுத்தேல்லம்மா…

சேல்ஸ் : ஆமா மேடம்.. ஏதாச்சும் கம்ப்ளெயிண்டா மேடம்

போன் : நோ..நோ.. இப்போ நாங்க டிஜிடல் கிளாஸ் தான் நடத்தறோம்.  வீட்ல இருந்தே பிள்ளைங்க படிக்கிறாங்க… அவங்க கிட்டே நல்ல ஹெட்போன் இல்லை.. அதனால ஸ்கூல்ல உள்ள எல்லா டீச்சர்ஸ்க்கும், ஸ்டூடண்ட்ஸ்க்கும் ஒவ்வொரு ஹெட்போன் ஃபிரீயா வாங்கி குடுக்க ஸ்கூல் டிசைட் பண்ணியிருக்கு. அதான் உங்களுக்கு கால் பண்ணினேன்.

சேல்ஸ் ( சந்தோசமாக ) : வாவ்.. என்ன சொல்றீங்க மேம்.. வெரி நைஸ்.. வெரி நைஸ்… 

போன் : ஆமா ஒரு 3000 ஹெட்போன் வேணும், நீ ஸ்கூல்ல டெலிவரி பண்ணிட்டா போதும்.  ரேட்டை மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணி குடு.

சேல்ஸ் : 3000 ஆ மேடம்.. சூப்பர்… கண்டிப்பா பண்றேன் மேம.. நல்லா ரேட் பாத்து தரேன். 

( போனை வைத்து விட்டு சந்தோசமாய் வந்து ரெபா வின் அருகில் வந்தமர்கிறார் ..பிறகு ஏதோ யோசிக்கிறார்.. தலையை வேண்டாம் என்பது போல ஆட்டுகிறார்..  )

சேல்ஸ் : (ரெபாவிடம் ) எனக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கு… இதுவரை இவ்ளோ பெரிய ஆர்டர் வந்ததேயில்லை. மாசம் நாப்பது..ஐம்பது… விக்கவே படாத பாடு படுவேன்.. இப்போ 3000 ஆர்டர் வந்திருக்கு…. கண்டிப்பா நல்ல கமிஷனும் கிடைக்கும்…. கம்பெனிலயும்  செம பேரு கிடைக்கும்… ஆனா… இப்போ அந்த ஆர்டர் பின்னாடி போறதா, இயேசு பின்னாடி போறதான்னு ஒரு சஞ்சலம் வருது. 

ரெபா : இது சாத்தான் கொண்டு வர சோதனை தான். கடவுளோட பணி செய்ய யாரு நினைச்சாலும் அவங்களை தடுப்பான். உலக ஆசைகளையும், செல்வங்களையும் காட்டி விண்ணக செல்வத்தைத் தடுக்கப் பார்ப்பான். ஏன், இயேசுவையே உலக செல்வத்தையெல்லாம் காட்டி ஏமாத்த பாத்தவன் அவன்.

சேல்ஸ் : எஸ்.. எஸ்.. இந்த ஆர்டர், அடுத்த 

ஆர்டர், அதுக்கான டெலிவரி, சர்வீஸ் கால், டார்கெட்… .. இப்படியே டைம் போயிடும். வேண்டாம். நான் இயேசுவை பின்பற்ற சொன்னது சொன்னதாவே இருக்கட்டும். 

ரெபா : வெரி குட். நீங்க உறுதியா இருக்கிறது எனக்கு சந்தோசமா இருக்கு. உங்க மேனேஜருக்கு போன்பண்ணி விஷயத்தை சொல்லிடுங்க. அவங்க டீல் பண்ணிக்கட்டும். உங்களை நம்பி கால் பண்ணின மேடத்துக்கும் அந்த விஷயத்தை கன்வே பண்ணிடுங்க. 

சேல்ஸ் : சூப்பர்.. ஒவ்வொரு சின்ன விஷயத்துலயும் கவனமாவும் நேர்மையாவும் இருக்கணும்ன்னு சொல்றீங்க. ரொம்ப சந்தோசம். சரி..சரி.. நான் கிளம்பறேன்.. முதல்ல இந்த எட்டர்னல் லைஃபை ஒருத்தருக்கு குடுக்கணும்.. கிளம்பறேன்.. பை பை ( அவசரமாய் போகிறார் ) 

காட்சி 3 

( சேல்ஸ் & அப்பா )

சேல்ஸ் : அப்பா.. அப்பா… 

அப்பா : என்னம்மா.. இப்படி ஓடி வரே.. ஒரே சந்தோசமா இருக்கே, இன்னிக்கு நிறைய வித்துட்டியா ?

சேல்ஸ் : இல்லப்பா.. வாங்கிட்டேன். 

அப்பா : வாங்கிட்டியா ? என்ன வாங்கிட்டே… 

சேல்ஸ் : எட்டர்னல் லைஃப் ! உங்களுக்கும் தரதுக்கு தான் நான் ஓடி வந்தேன். உங்களுக்கு மட்டுமில்ல, நான் சந்திக்கிற எல்லாருக்கும் தரப் போறேன். நாம எங்கே இருந்தாலும் அதை குடுக்கலமாம்… செம இல்ல..

அப்பா : என்ன சொல்றே.. எட்டர்னல் லைஃபா… ? எங்கே எனக்குக் குடு பாக்கறேன்.

சேல்ஸ் : பாக்கறதில்லப்பா இது.. இது பார்க்காமலேயே அனுபவிக்கிறது. வாங்க பக்கத்துல.. நான் சொல்றதெல்லாம் சொல்லுங்க… சரியா… 

( அமைதியான இசை …. சேல்ஸ் வழிகளை சொல்கிறாள்… கைகளைப் பிடித்தபடி செபிக்கிறார்கள்…  )

அப்பா : அட… ஆமா, சொல்ல முடியாத ஒரு நிம்மதி வந்தது போல இருக்கு. நிஜமாவே சூப்பர் தான். 

சேல்ஸ் : ஆமாப்பா.. இனிமே தான் தேவையில்லாத இந்த ஹெட்போனை எல்லாம் விக்கறதை நிப்பாட்டிட்டு எட்டர்னல் லைஃபை விக்கப் போறேன். 

அப்பா : நானும் இனிமே ஆபீஸ்ல, பிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் இதை கொடுக்க போறேன். 

சேல்ஸ் : சூப்பர்பா.. எனக்கு இதை குடுத்த அந்த சின்னப் பொண்ணு நல்லா இருக்கணும். 

அப்பா :  கண்டிப்பா.. அவளும் அவ குடும்பமும் சந்தோசமா இருக்கட்டும். அவங்களுக்காகவும் நாம பிரே பண்ணுவோம்.

சேல்ஸ் : கண்டிப்பா..பா

*

நன்றி

Posted in Articles, Sunday School

Kids SKIT – இயேசுவைப் போல செயல்படு

*

காட்சி 1 

( ரயன் ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துக் கொண்டிருக்கிறான் )

ரயன் : ( புத்தகத்தில் குறிப்பை எடுத்தபடி படித்துக் கொண்டிருக்கிறான் )

அம்மாவின் குரல் : ரயன்.. கிளாஸ் ஸ்டார்ட் ஆயிடுச்சா ?

ரயன் : ஆமாம்மா… 

அம்மாவின் குரல் : சரி சரி.. வீடியோவை ஆஃப் பண்ணாம கவனமா படி சரியா..

ரயன் : ஓக்கேம்மா… டிஸ்டர்ப் பண்ணாதீங்க… 

( கொஞ்ச நேரம் கழிகிறது )

ரயன் : ம்ம்ம்.. ரொம்ப போர் அடிக்குது.. இந்த கொரானா வந்தாலும் வந்துது… டிஜிடல் கிளாஸ் ரொம்ப போர் அடிக்குது.

( அப்போது ஒரு கரிய உருவம் அருகே வந்து நிற்கிறது )

கரிய உருவம் : ரயன்… அந்த வீடியோவை ஆஃப் பண்ணு…. அப்போ நீ என்ன பண்றேன்னு யாருக்கும் தெரியாது. 

ரயன் : சே..சே.. அப்படி பண்ண கூடாது. அது எகைன்ஸ்ட் த ரூல்.. டீச்சர் சொல்லியிருக்காங்க.

க உ : ஷப்பா.. உன் தொந்தரவு தாங்க முடியல… நீ கிளாஸ்ல இருக்கும்போ பக்கத்துல இருக்கிறவன் கிட்டே பேசறதில்லையா.. அது மாதிரி தான்.. இதுக்கு போய் ரொம்ப பிகு பண்ணிக்கிறே… ம்ம்ம்… 

ரயன் : ம்ம்ம் அதுவும் நல்ல பாயிண்ட் தான்…

க.உ : எஸ்.. ஜாலியா இரு… டீச்சரால அடிக்கவும் முடியாது…. திட்டினா நீ மியூட் பண்ணிக்கலாம்… எவ்ளோ வசதி… 

ரயன் : ம்ம்… பாயிண்ட் நோட் பண்ணிகிட்டேன். வீடியோவை ஆஃப் பண்றேன்

( மனசாட்சி : ஆனா.. மம்மி வீடியோவை ஆஃப் பண்ணக் கூடாதுன்னு சொன்னாங்களே )

க.உ : ஹா..ஹா.. மம்மிக்கு தெரியவா போவுது… கிளாஸ்ல பண்றதெல்லாம் மம்மிட்ட கேட்டுட்டா பண்றே… ஜஸ்ட் இக்னோர் மேன்…. 

ரயன் : ஆமா.. அதுவும் சரி தான். 

( ரயன் வீடியோவை ஆஃப் பண்ணுகிறான். புக்கை ஓரமாய் வைக்கிறான். ரிலாக்சாக இருக்கிறான்.  பக்கத்திலிருக்கும் கதை புத்தகங்களைப் புரட்டுகிறான்… )

( கிளாஸ் முடிகிறது ) 

ரயன் : தேங்க்யூ மேம்… ….( மெதுவாக ) ஷப்பா.. ஒருவழியா.. முடிஞ்சுது… 

காட்சி 2 

( ரயன் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறான் ) 

அம்மா : என்ன ரயன் .. கிளாஸ் முடிஞ்சுச்சா…

ரயன் : எஸ்…மா.. எல்லாம் முடிஞ்சுச்சு…

அம்மா : சரி, ஹோம் வர்க் எல்லாம் பண்ணு… எல்லாம் முடிச்சப்புறம் விளையாடினா போதும்…. 

ரயன் : இப்போ தாம்ம்மா கிளாஸ் முடிஞ்சுது.. கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க விடுங்க.. எப்பவும் படி படின்னா என்னம்மா நியாயம்…. 

அம்மா : சரி..சரி.. கொஞ்ச நேரம் விளையாடு. பட்.. நான் வேண்டாம்ன்னு சொன்ன அந்த கேம்ஸ் எல்லாம் விளையாடாதே சரியா.. அதுல ஒரே வலயன்ஸ்.. அதெல்லாம் ஏசப்பாக்கு புடிக்காத விஷயம்.. சரியா… 

ரயன் : ஆமா.. இயேசப்பா வீடியோ கேம். விளையாடினாரா என்ன …

அம்மா : அவரு விளையாடியிருந்தா இந்த விளையாட்டை விளையாடியிருக்க மாட்டாருடா…. அன்பைப் போதிக்கிற இயேசு வெட்டு, குத்து, துப்பாக்கி சூடு எல்லாமா பண்ணுவாரு. நல்ல அறிவுக்கு தீனி போடற கேம்ஸ் இருந்தா விளையாடு. 

ரயன் : ம்ம்ம்.. சரி…சரி… விளையாடற நேரத்துலயும் அட்வைஸ் மூட்டையை அவுத்து உடாதீங்க.

அம்மா : நல்லது சொன்னா உனக்குப் புடிக்காதே… ம்ம்… கொஞ்ச நேரம் விளையாடிட்டு சாப்பிட வா… டைம் ஆகுது.

கருத்த உருவம் : டோண்ட் வரி ரயன்…. அம்மாக்கள்ன்னா இப்படி பேசிட்டே தான் இருப்பாங்க. நம்ம யூத் பசங்க பத்தி அந்த ஓல்ட் மக்களுக்கு புரியாது. நீ தூள் கிளப்பு…. கேம்ன்னா கன் இருக்கத் தான் செய்யும், பின்னே கைத்தடியா இருக்கும்… நீ என்ஞாய்..

( ரயன் புன்னகைக்கிறான் ) 

காட்சி 3 

(ரயன் ஐபேடில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறான் )

அம்மா : தம்பி.. என்ன ஹோம் வர்க் எல்லாம் முடிச்சுட்டியா ? என்ன பாக்கறே

ரயன் : ஒரு வீடியோ பாக்கறேம்மா… நத்திங்… 

அம்மா : என்ன வீடியோன்னு தான் கேட்டேன்.

ரயன் : யூடியூப் காமெடி வீடியோஸ்மா… ஏன் எல்லா டீட்டெயிலையும் கேட்டுட்டே இருக்கீங்க

அம்மா : நம்ம டைமை எல்லாம் இப்படி வேஸ்ட் பண்ணக் கூடாதுப்பா.. அதனால சொன்னேன். கொரோனா வந்து வீட்டுக்குள்ள ஒதுங்கினாலும் ஒதுங்கினீங்க எப்பவுமே… டிஜிடல் டிஜிடல் டிஜிடல்… 

ரயன் : மம்மி.. உங்களுக்கு என்ன தான் வேணும்.. கொஞ்சம் நிம்மதியா இருக்கவே விட மாட்டீங்களா… 

அம்மா : தம்பி.. ஒழுங்கா நல்ல யூஸ்புல் ஆன வீடியோஸ் பாக்கறதா இருந்தா கொஞ்ச நேரம் பாரு. இல்லேன்னா, உனக்கு இதெல்லாம் தரமாட்டேன். 

ரயன் : சரி..சரி… நான் நல்லது மட்டும் தான் பாப்பேன்… 

அம்மா : எத்தனையோ பைபிள் மூவீஸ் இருக்கு, பைபிள் ஸ்டோரீஸ் இருக்கு, நல்ல தீம் உள்ள வீடியோஸ் இருக்கு.. அதெல்லாம் குடுத்தேன்ல, அதையெல்லாம் விட்டுட்டு யூடியூப்ல தேவையில்லாத வீடியோ பாத்து டைம் வேஸ்ட் பண்ணாதே சரியா…

ரயன் : அம்மா… எப்பவுமே கடவுளை நினைச்சுட்டே இருக்கணும்னு சொல்லாதீங்க, அப்புறம் கடவுளும் போரடிச்சுடும், கடவுளுக்கும் போரடிச்சுடும்.

அம்மா : உலகத்துலயே போரடிக்காத விஷயம் கடவுளை நினைக்கிறது தான்பா.. நீ என்ன வீடியோ பாத்தாலும் , “இப்போ இந்த tab கடவுள் கிட்டே இருந்தா இதைப் பாப்பாரா ?” ந்னு ஒரு கேள்வி கேட்டுட்டு பாரு.. சரியா… 

ரயன் : ஆரம்பிச்சுட்டீங்களா…  எனக்கெல்லாம் தெரியும் நான் பாத்துக்கறேன்.

( அம்மா போகிறார் )

 ( கருப்பு உருவம் வருகிறது )

க.உ : உட்டா உங்க அம்மா வீட்டை சர்ச் ஆக்கிடுவாங்க போல, ஒரே பிரசங்கமா இருக்கு. நல்ல வேளை நீ அவங்க பேச்சைக் கேக்காம என் பேச்சைக் கேக்கறே..

காட்சி 4 

( மாலை நேரம் ) 

அம்மா :  ( அன்புடன் அருகில் அமர்ந்து ) பிரேயர் டைமாச்சு… மொபைலை எல்லாம் ஓரமா போட்டுட்டு.. பைபிள் வாசி. எவ்ளோ அதிகாரம் இன்னிக்கு வாசிச்சே… எப்பவும் இப்படி மொபைலும் கையுமா இருக்கிறது கடவுளுக்குப் புடிக்குமா என்ன ? இதெல்லாம் விட்டுட்டு நல்ல பிள்ளையா இருப்பா… 

ரயன். :மம்மி.. நான் இப்போ என்ன கெட்ட பையனாயிட்டேன்… யாரையாச்சும் அடிச்சேனா, திருடினேனா, பேர் வேர்ட்ஸ் பேசினேனா… இல்லையே.. ஜஸ்ட் டைம் பாஸுக்கு டிஜிடல் யூஸ் பண்றேன் அவ்ளோ தானே.

அம்மா : டைமை வேஸ்டா பாஸ் பண்ண வேண்டாம் தம்பி. கடவுள் நமக்கு தந்திருக்கிற ஒவ்வொரு நிமிசமும் ரொம்ப மதிப்புள்ளது. இயேசு தன்னோட நேரத்தை எப்படி செலவிட்டாரு தெரியும்ல. ஒரு நிமிசம் கூட அவரு வேஸ்ட் பண்ணல. அதிகாலைல செபிச்சாரு, நடு ராத்திரியில தண்ணில நடந்து போனாரு, மூணு நாளு சாப்பாடே இல்லாம போதிச்சாரு இப்படி அவரு டைமை வேஸ்ட் பண்ணவே இல்லை. அப்படி தான் இருக்கணும் தம்பி.

ரயன் : ம்ம்ம்.. பைபிளெல்லாம் நாளைக்கு படிக்கிறேன்ம்மா.. இன்னிக்கு தூக்கம் வருது.

அம்மா : பிரேயர் பண்ணிட்டு தூங்கு… 

ரயன் : பிரேயர் நாளைக்கு சேத்து பண்ணிக்கறேன்…. 

அம்மா : நாம இயேசுவுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்தா தான்பா.. இயேசுவுக்கு சந்தோசம். நாம வாழறது இந்த உலகத்துல உள்ள சின்னச் சின்ன சந்தோசத்துக்காக இல்லை, கடவுளோடு வாழப் போகிற பெரிய பெரிய சந்தோசத்துக்காக…

ரயன் : அம்மா.. மார்னிங் டூ நைட் இதே தானாம்ம்மா.. எவ்ளோ நாள் தான் இப்படி சொல்லுவீங்க

அம்மா : ( சிரித்தபடி ) நீ கேட்டு அதன்படி நடக்கிற வரைக்கும் சொல்வேன்பா…

ரயன் : ஆள விடுங்க.. தூங்க போறேன்

காட்சி 5 

( ரயன் விளையாடிக்கொண்டிருந்த போது ரெய்னா வருகிறாள் )

ரெய்னா : டேய்.. ரயன்.. கேள்விப்பட்டியா ? 

ரயன்  : ( விளையாடியபடியே ) என்ன கேள்விப்பட்டியா  ? கோயில்பட்டியா ந்னு ? விஷயத்தைச் சொல்லு.

ரெய்னா : அருண் உன்னோட பிரண்ட் தானே..

ரயன் : ( விளையாடிக்கொண்டே ) ஆமா.. என் பிரண்ட் தான்.. என் குளோஸ் பிரண்ட்…  

ரெய்னா :  உனக்கு விஷயம் தெரியாதா 

ரயன் : ஹேய்.. ஓவர் பில்டப் குடுக்காம விஷயத்தை சொல்லு… விளையாட்ல முக்கியமான ஸ்டேஜ்ல இருக்கேன்.

ரெய்னா : டேய்.. அவனுக்கு கொரோனாவாம்…. 

ரயன் ( அதிர்ச்சியாகி ) : என்ன சொல்றே… 

ரெய்னா : ஆமா.. ரெபா தான் சொன்னா… கொஞ்சம் சீரியசாயிருக்குன்னு சொன்னா..

ரயன் : ( போனை கீழே வைத்து விட்டு எழும்புகிறான் ) என்ன சொல்றே.. கொரோனாவா.. அவனுக்கா

ரெய்னா : ஆமாடா… ஐசியூ ல வெச்சிருக்காங்களாம்…

( ரயன் பதட்டத்தில் அங்குமிங்கும் நடக்கிறான் .. தனது இன்னொரு நண்பனுக்கு போன் பண்ணி விஷயத்தைக் கேட்கிறான். அவனும் அது உண்மை என சொல்கிறான் )

ரயன் : இப்போ என்ன பண்றது ? இப்போ போகவும் முடியாதே…. அம்மா.. அம்மா…

( அம்மா வருகிறார் )

அம்மா : என்னடா கத்தறே… வேலை செய்திட்டிருக்கேன்ல.

ரயன் : அம்மா… அருணுக்கு கொரோனாவாம்… ஐசியூல இருக்கானாம்.

அம்மா : ஐயையோ.. நல்ல பையனாச்சே… எப்படி ? வெளியே எங்கேயும் சுத்திட்டிருந்தானோ ? 

ரயன் : அம்மா.. அவனை போய் பாக்கலாமா ?

அம்மா : நோ..நோ.. நாம வெளியே போக முடியாது. அதுவும் இல்லாம ஹாஸ்பிடல்ஸ் க்கு இப்போ போகவே முடியாது. 

ரயன் :  அம்மா.. அவனை பாக்கணுமே.. என்னோட பெஸ்ட் பிரண்ட்.. அவனுக்கு ஒண்ணும் ஆயிட கூடாதுன்னு பயமா இருக்கு.

அம்மா : அவனுக்கு இயேசுவைப் பத்தி சொல்லியிருக்கியா ? அவனுக்கு ஒருவேளை ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா என்ன ஆவான் ? எங்கே போவான்  ஏதாச்சும் தெரியுமா டா ?

ரயன் : அம்மா .. நாங்க அதைப்பத்தியெல்லாம் பேசினதில்லை. இப்படியெல்லாம் ஆகும்ன்னு தெரியுமா ? ஜாலியா தான் இருப்போம். 

அம்மா : பாரு.. இப்போ அவனை நீ போய் பாக்க கூட முடியாத நிலமைல இருக்கே. எப்போ யாருக்கு என்ன நடக்கும்ன்னு தெரியாதுப்பா.. அதனால தான் நாம ஒவ்வொரு நிமிசமும் கவனமா வாழணும்.

ரயன் : ( கவலையுடன் ) இப்போ நான் என்னம்மா பண்ண 

அம்மா : கவலைப்படாதேப்பா.. நீ போய் பிரேயர் பண்ணு. உன் பிரண்ட் சீக்கிரமே குணமாகி வரணும்ன்னு கடவுள் கிட்டே கேளு. 

ரயன் : சரிம்மா

கருப்பு உருவம் : ரயன்.. டோண்ட் வரி… அவனுக்கு ஒண்ணும் ஆவாது. அவனுக்கு கொரோனா வந்தது அவனோட தப்பு. அதுக்காக எல்லாம் நீ பிரேயர் பண்ணி உன்னோட டைமை வேஸ்ட் பண்ணாதே… தேவையே இல்லை… லெட்ஸ் ப்ளே

ரயன் : நோ..நோ.. ஹி ஈஸ் மை பெஸ்ட் பிரண்ட். ஒரு பிரண்டுக்காக பிரேயர் பண்ணாத இன்னொரு பிரண்ட் இருக்கிறதே வேஸ்ட். 

காட்சி 6 

( ரயன் கவலையாய் இருக்கிறான்.. ரெய்னா வருகிறாள் )

ரெய்னா : என்னாச்சுடா ரொம்ப சோகமா இருக்கே..

ரயன் : இல்ல.. அருணை நினைச்சேன்.. 

ரெய்னா : ம்ம்.. நாம பிரேயர் பண்ணுவோம்.. கடவுள் பாத்துப்பாரு. 

ரயன் : எல்லாம் ஸ்மூத்தா போகும்போ நான் கடவுளைப் பற்றி நினைச்சுப் பாக்கவே இல்லை. இப்போ என்னடான்னா, கடவுளைத் தவிர வேற எதையும் நினைச்சுப் பாக்கவே முடியல.

ரெய்னா : அதான் ரியாலிட்டி. நாம தேவைக்கு கடவுளைத் தேடறோம். கடவுள் நம்மை தேடும்போ நாம டிஜிடல் விளையாட்டிலயோ, வீடியோலயோ, செல்பிலயோ மூழ்கிப் போயிடறோம்.

ரயன் : ம்ம்ம்… நீ சொல்றது சரி தான்.

ரெய்னா : நாம வாழ்க்கைல wwjd ந்னு மட்டும் ஒரு கேள்வியை கேட்டு எல்லாமே செஞ்சா இப்படி நாம எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

ரயன் : wwjd யா ? அப்படின்னா ?

ரெய்னா : what would Jesus do ந்னு அர்த்தம். என்ன ஒரு செயலைச் செய்தாலும் அப்படி ஒரு கேள்வி கேட்டுட்டு அதன்படி செய்யணும். அப்போ நம்ம வாழ்க்கை கடவுளுக்குப் பிரியமானதா இருக்கும். நமக்கு என்ன நடந்தாலும் கடவுள் நம்மைப் பாத்துப்பாரு. நமக்கு அவரோட நிலைவாழ்வில நிச்சயம் இடமும் கிடைக்கும்.

ரயன் : நேற்றைக்கு நைட் பிரேயர் பண்ணும்பவே நான் முடிவு பண்ணிட்டேன். இனிமே தேவையில்லாம டைம் ஸ்பெண்ட் பண்ணாம கடவுளுக்காகவே வாழணும்ன்னும், அவருக்குப் புடிச்ச மாதிரியே வாழணும்ன்னும் முடிவு பண்ணிட்டேன்.

ரெய்னா : சூப்பர் ரயன். தாவீதை கடவுள் ‘என் இருதயத்துக்கு ஏற்றவன்’ ந்னு சொன்னாரு. அப்படி நம்மையும் அவரு சொல்லணும். அது தான் நம்ம இலட்சியமா இருக்கணும். 

ரயன் : சரிக்கா… இனிமே கண்டிப்பா WWJD ந்னு கேட்டு தான் வாழப் போறேன்.

ரெய்னா : எனக்கு ரொம்ப சந்தோசம் தம்பி. நீயும் கடவுளுக்குள்ள வரணும்ன்னு நான் டெய்லி ப்ரே பண்ணுவேன். நாம ரெண்டு பேருமே கடவுளோட சேர்ந்து நடக்கிறது தான் கடவுளுக்கும், எனக்கும், மம்மிக்கும் எல்லாருக்குமே சந்தோசமான விஷயம்.

ரயன் : சரிக்கா…  நான் அருணுக்காக தொடர்ந்து பிரே பண்ண போறேன் …

கருப்பு உருவம் : ஓ.. வெரி பேட்..வெரி பேட்… இந்த பையன் போற போக்கைப் பாத்தா நம்மளை கைகழுவி விட்டுடுவான் போலயே.. ஏதாச்சும் பண்ணணுமே…. ம்ம்ம்ம்

காட்சி 7 

( ரயன் பாட்டி வீட்டுக்கு போகிறான். கையில் காய்கறி கூடை. )

பாட்டி : என்னப்பா.. இந்த கொரோனா டைம்ல இங்க வந்திருக்கே…

ரயன் : இல்ல பாட்டி.. நீங்க தனியா இருக்கீங்க. என்ன தான் போன்ல பேசிக்கிட்டாலும், உங்களை நேர்ல பாத்து எப்படி இருக்கீங்கன்னு கேட்டுட்டு போலாம்ன்னு தான் வந்தேன். கொஞ்சம் பழம் காய்கறி எல்லாம் கொண்டு வந்திருக்கேன். 

பாட்டி : ரொம்ப சந்தோசம்பா.. 

ரயன் : பாட்டி.. நீங்க தள்ளியே நில்லுங்க பாட்டி. சோசியல் டிஸ்டன்சிங் வேணும்ல.. ( சிரிக்கிறான் ) 

பாட்டி : ம்ம்.. அதுவும் சரிதான்.. சரி, டீவி பாக்கறியா ? டீ போட்டு தரவா ?

ரயன் : டீவி எல்லாம் வேண்டாம் பாட்டி.. டீயும் வேண்டாம். 

பாட்டி : என்னாச்சு உனக்கு … பொதுவா டிவி, மொபைல் ந்னு அலைவே.. இப்போ அமைதியாயிட்டே..

ரயன் : ஒண்ணுமில்லை பாட்டி… தேவையில்லாம டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம்ன்னு தோணிச்சுது அதான். 

பாட்டி : வெரிகுட் டா பையா… கடவுள் நமக்கு காலத்தை எண்ணிக் குடுத்திருக்காரு, அதனால அதை எண்ணி எண்ணி தான் செலவு பண்ணணும்.

ரயன் : சரி பாட்டி.. உங்களுக்கு மெடிசின்ஸ் எல்லாம் இருக்கா ? வேற ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா ?

பாட்டி : வேண்டாம்பா… எல்லாமே இருக்கு… உன்னை பாத்ததே ரொம்ப சந்தோசம். அக்கா எப்படி இருக்கா ?

ரயன் : எல்லாரும் நல்லா இருக்காங்க பாட்டி.

பாட்டி : சரிப்பா.. நீ கிளம்பு.. பத்திரமா போய்ட்டு வா…வீட்ல போனதும் போன் பண்ணு சரியா ?

ரயன் : சரி பாட்டி… 

காட்சி 8 

( ரயன் வீட்டில் அமர்ந்திருக்கிறான்.. நண்பர்கள் போன் பண்ணுகின்றனர்… )

போன் : டேய் ரயன்.. என்னடா ஆளையே காணோம்

ரயன் : இங்கே தாண்டா இருக்கேன்.. வேற எங்க போக முடியும்

போன் : இல்ல.. நீ ரோபிளாக்ஸ் விளையாடவும் வரலை, ஃபோர்ட்நைட் விளையாடவும் வரல.. ஏன் என்னாச்சு உடம்பு சரியில்லையா ?

ரயன் : சே..சே.. நத்திங்

போன் : அப்போ மனசு சரியில்லையா ?

ரயன் : இப்போ தான் மனசு சரியா இருக்கு.

போன் : அப்போ பதினோரு மணிக்கு வா.. வழக்கம் போல ஒரு நாலு மணி நேரம் பட்டையை கிளப்பலாம்

ரயன் : இல்லடா.. நான் இனிமே விளையாட வரல.. தேவையில்லாத விளையாட்டை விளையாடி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல.

போன் : நீ.. ஒரு வேஸ்ட் ஆயிட்டேடா.. இனிமே பேசாதே.. போனை வை.

( ரயன் போனை வைக்கிறான் ) 

இன்னொரு நண்பன் போன் பண்ணுகிறான்

போன் 2 : ரயன்… ஆல் ஈஸ் வெல் ?

ரயன் : எஸ்.. எஸ்… வெரி வெல். ஏன் கேக்கறே

போன் 2 : இல்ல ஆன்லைன்ல ஆளையே காணோம் அதான்..

ரயன் : ஹா..ஹா.. அதிகமா வாட்சப் வரதில்லை… டிக்டாக் எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டேன்

போன் 2 : ஏண்டா.. ஏதாச்சும் எக்ஸாம் பிரிபேர் பண்றியா ? நீட்… மாதிரி… 

ரயன் : ஆமா… ஒரு பிராக்டிகல் எக்ஸாம்..கடவுளோட நடப்பது எப்படின்னு…

போன் 2 : கடவுளோட நடக்கவா ? உன் போக்கே சரியில்லையே…

ரயன் : சரியில்லாம இருந்ததை சரி பண்ணிட்டிருக்கேன்.. 

போன் 2 : அடப்பாவி.. நீயாடா இப்படி… பாரு.. என்ன பண்றேன்னு.. குரூப்ல போட்டு உன்னை கலாய்ச்சு கிழிக்கல என் பேரை மாத்திக்கறேன்.

ரயன் : ஏய்..ஏய்… சும்மா விளையாடாதே… லீவ் இட்.

( போனை வைக்கிறான் )

( அந்த நண்பன் வாட்சப் குரூப்பில் இவனைப் பற்றி கிண்டலான செய்திகளைப் போடுகிறான் ) 

( ரயன் அப்செட் ஆகிறான் ) 

கருப்பு உருவம் : பாரு…பாரு.. ஒரு நாள் கடவுளோட நடக்கணும்னு நினைச்சதுக்கே பிரண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க.. இதெல்லாம் தேவையில்லாத விஷயம். எவ்ளோ ஜாலியா இருந்தே.. இதெல்லாம் தேவையா ?

மனசாட்சி : ம்ம்ம்.. ஏன் இப்படி பண்றாங்க.. நான் நல்லா தானே இருக்கேன்.

க.உ : நீ நல்லா இருக்கியா ? அடப்பாவி நீ நார்மலாவே இல்லை. நீ ஒரு காமெடி பீஸ் ஆயிட்டே எல்லாருக்கும். உன்னை எல்லாரும் வெச்சு செய்றாங்க…

மனசாட்சி : அவங்களுக்கு வேற வேலை இல்லை

க.உ : உனக்கு தான் வேற வேலை இல்லை.. தேவையில்லாம உன் பேரையும், சந்தோசத்தையும் கெடுத்துக்கறே.. நல்லவனா இருந்து என்னத்த சாதிக்கக் போறே… 

மனசாட்சி : இல்ல.. நான் இயேசுவைப் போல வாழ்வேன்.. wwjd தான் என் கொள்கை.

க.உ : அப்படின்னா நீ இப்படியே இருக்க வேண்டியது தான். எவனும் உன் கூட பேசக் கூட மாட்டான். நீ சன்னியாசி மாதிரி திரி…. நீ போரான பார்ட்டி ஆயிட்டே.. வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவங்க தான் இப்படியெல்லாம் பேசிட்டு இருப்பாங்க… நீ கன்ஃப்யூசனை விட்டுட்டு கலக்கு… 

( ரயன் யோசிக்கிறான் )  

காட்சி 9 

( ரெய்னா ரயன் )

ரெய்னா : ம்ம்.. என்னாச்சு.. ஏதோ டீப் திங்கிங்… 

ரயன் : இல்ல… இயேசுவைப் போல வாழறது யாருக்குமே புடிக்கல. உலகத்துல வாழும்போ உலகத்துல இருக்கிற மக்களுக்கே புடிக்காதபடி 

வாழ்றது கஷ்டமா இருக்கு. பி அ ரோமன் வென் யூ ஆர் இன் ரோம்.. தான் கரெக்ட்ன்னு தோணுது…

ரெய்னா : உலக பழமொழி எல்லாமே கிழ மொழிதான்.? எப்பவுமே கடவுளோட பிள்ளையா மாறினா நமக்கு கிண்டல் கேலி கிடைக்கிறத் சர்வ சாதாரணம். அதுக்கெல்லாம் பயந்து பின் வாங்கக் கூடாது. பி அ கிறிஸ்டியன் வெயர் எவர் யூ ஆர்.. இதான் புது மொழி. 

ரயன் : இல்ல.. என் குளோஸ் பிரண் ட்ஸே என்னை கிண்டல் பண்றாங்க.. அவங்களே என்னைப் புரிஞ்சுக்கலேன்னா எப்படி ?

ரெய்னா : அதையெல்லாம் கண்டுக்காதே.. கடவுள் உன்னோட இருப்பாரு…

ரயன் : ம்ம்… என் பிரண்ட்ஸ் எல்லாம்.. இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கல.. பிரண்ட்ஸ் இல்லேன்னா என்ன பண்ண முடியும் ? 

ரெய்னா : தம்பி…. சிலுவையை சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றி வா..ந்னு இயேசு சொன்னது இதைத் தான். இயேசுவை பின்பற்ற முடிவெடுத்தா இப்படி நிறைய சிலுவைகள் உனக்கு வரும். அதையெல்லாம் தாண்டணும்

ரயன் : தாண்ட முடியலையே…

ரெய்னா : பிரேயர் பண்ணு.. கண்டிப்பா தாண்டலாம்.

ரயன் : ம்ம்.. எனக்கென்னவோ.. இப்படி வாழ்றது சரியா வரும்ன்னு தோணல.. நான்… இனிமே.. சாதாரணமா இருக்கப் போறேன்.. வித்தியாசமா இருந்து விலக்கப்படறதுக்கு பதிலா, சாதாரணமா இருந்து சந்தோசமா வாழப் போறேன்.

ரெய்னா : நோ..நோ..அப்படின்னா நீ கடவுளை கழற்றி விட்டுட்டு…  சாத்தானுக்கு சம்மதம் குடுக்கிற மாதிரி. வேண்டாம்.

ரயன் : லீவ் மீ.. அலோன்.. நான் வெளியே எங்கேயாச்சும் போயிட்டு வரேன்.

கருப்பு. உருவம் : இப்போ தான் நீ சரியான முடிவு எடுத்திருக்கே. எல்லா சந்தோசத்தையும் விட்டுட்டு சும்மா தேவையில்லாம WWJD … WWE ந்னு புலம்பிட்டு திரிஞ்சே.. கம் பேக்… வெல்டன் மை பாய்… 

காட்சி 10

(  ரயன் சாலையோரம் இருக்கிறான் )

ரயன் : இனிமே சாதாரணமா வாழணும்.. தேவையில்லாம எல்லாருக்கும் ஹெல்ப் பண்றேன்.. ஜீசஸ் மாதிரி இருக்கேன்னு சொன்னதெல்லாம் போதும். பேசாம போய் மறுபடியும் கேம்ஸ், வீடியோஸ்ன்னு வாழ்க்கைய ஓட்ட வேண்டியது தான்.

( அப்போது ஒரு கண் காணாதவர், ஒரு பையைத் தூக்கியபடி வருகிறார் )

க.கா : ஐயா.. யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க.. என்னை கொஞ்சம் ரோட் கிராஸ் பண்ணி விடுங்க… பிளீஸ்…

ரயன் : ( நோ..நோ..இனிமே நான் நார்மலா இருக்கப் போறேன்.. நோ ஹெல்ப் ) 

க. கா : ஐயா.. பிளீஸ் ஹெல்ப்..

ரயன் : ( நோ.. நோ.. நோ செண்டிமெண்ட்ஸ் )  

க. கா : ஐயா.. யாராச்சும் இருக்கீங்களா 

ரயன் : சே. மனசு கேக்கலை… ( போய் பையைத் தூக்குகிறான் )

ரயன் : வாங்கய்யா.. நான் ஹெல்ப் பண்றேன்.. மெதுவா வாங்க.. 

க.கா : ரொம்ப நன்றி தம்பி.. எனக்கு ஹெல்ப் பண்றதுக்கு ரொம்ப நன்றி.

ரயன் : பாத்து வாங்கய்யா…

க. கா : இருளில இருக்கிற மக்களுக்கு வெளிச்சத்தைக் காட்ட.. நீங்க ஹெல்ப் பண்றீங்க தம்பி… நீங்க பண்றது ரொம்ப நல்ல ஹெல்ப்.  அதாவது குருடனா இருக்கிற என்னை கைபிடிச்சு நடக்கிற வெளிச்சம் நீங்க…. 

ரயன் : இதென்னய்யா.. பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு… இது ஒரு சின்ன ஒரு ஹெல்ப் அவ்ளோ தான்… 

க. கா : இயேசு இருந்திருந்தா இப்படித் தான் பண்ணியிருப்பாரு… ஒரு மனிதனோட கஷ்டத்தையும் பாத்துட்டு அவரு அலட்சியமா போனதா வரலாறே இல்லை.

ரயன் : நீங்க கிறிஸ்டியனா ?

க.கா : இயேசுவோட அன்பைத் தெரிஞ்சுக்க கிறிஸ்டியனா தான் இருக்கணும்ன்னு இல்லை, கிறிஸ்துவைத் தெரிஞ்சிருந்தா போதும்.

ரயன் : என்ன சொல்றீங்க .. புரியலையே.

க.கா : தம்பி…  உலகம் ஆயிரம் கிண்டல் பண்ணினாலும் ஆண்டவருக்காக வாழறது தான் நல்ல வாழ்க்கை. கிண்டலுக்குப் பயந்து நாம பின்வாங்கக் கூடாது. இயேசு சிலுவையைப் பாத்து பயந்தாரா ? இல்லை அவமானத்தைப் பாத்து ஒளிஞ்சாரா ? இல்லையே 

ரயன் : ஏன் அப்படி சொல்றீங்க… 

க. கா : நீயும் அவமானம், கிண்டல் பாத்து பின்வாங்கிப் போயிடாதே. கலப்பைல கை வெச்சுட்டே, இனி நல்லா உழு. விளைச்சல் நிச்சயம். நல்ல பையனா இருக்கணும்ன்னு முடிவெடுத்தே.. அதன்படியே தொடர்ந்து நட.

ரயன் : ( ஆச்சரியமாக ) என்னை கேலி பண்றாங்க, கிண்டல் பண்றாங்கன்னு எப்படி உங்களுக்குத் தெரியும் ? 

க.கா : நீ இப்போ வெளிச்சத்துல இருக்கிற. ஆன்மிக வெளிச்சம். மறுபடியும் இருட்டுல போக நினைக்காதே. அதுக்கு பதிலா, இருட்டுல இருக்கிற உன்னோட நண்பர்களையும் நீ வெளிச்சத்துக்கு கொண்டு வா…

ரயன் : ஐயா.. நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப உற்சாகமா இருக்கு.. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணல, நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்றீங்க… 

க.கா : தம்பி ரோடை கிராஸ் பண்ணிட்டோம்… நீயும் சோதனைகளை கிராஸ் பண்ணு.. அதுக்கு தான் இருக்கு கிராஸ்… த கிராஸ் !  . அந்த பையைக் குடுத்துடு தம்பி நான் கிளம்பறேன். 

( ரயன் பையைக் கொடுக்கிறான்… அப்போது அது சிலுவையாய் தோன்றுகிறது.. அதிர்ச்சியடைகிறான். அப்போது அந்த நபரைப் பார்க்கிறான்.. அவர் இயேசுவைப் போல தெரிகிறார் ) நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.. எனும் குரல் கேட்கிறது. அந்த நபர் காணாமல் போய்விடுகிறார். 

( ரயன் புன்னகைக்கிறான். மகிழ்ச்சியும் நிம்மதியும் அவன் முகத்தில் தெரிகிறது ) 

ரயன் : இயேசுவே நீரே நேரடியாக வந்து எனக்கு எல்லாவற்றையும் விளக்கினீர்.. ரொம்ப சந்தோசம்.. இனிமே நான் பின் வாங்கவே மாட்டேன். 

( போன் அடிக்கிறது ) 

போன் : டேய்.. நான் தாண்டா அருண் பேசறேன்… சரியாயிடுச்சுடா.. நீ எனக்காக பிரேயர் பண்ணினேன்னு கேள்விப்பட்டேன்.. ரொம்ப தேங்க்ஸ் டா… 

ரயன் : வாவ்.. உனக்கு சுகமானது எனக்கு ரொம்ப சந்தோசம்டா.. நாம நிறைய பேசணும்.. நான் வீட்டுக்கு வந்து கால் பண்றேன்.

போன் : ஓக்கே டா.. 

*

Posted in Articles, Sunday School

SKIT – நான் நோவா பேசறேன்…

நோவா

 

( நோவா களைப்பாக நிற்கிறார் கேமராவைப் பார்த்துப் பேசுகிறார் )

( மெயின் காட்சி ) 

என்ன பாக்கறீங்க ? ரொம்ப டயர்டா தெரியறேனா… இருக்காதா பின்னே.. ஒரு வருஷம்… ஒருவருஷம் ஒரு பேழைக்குள்ள அத்தனை ஆயிரம் விலங்குகளோட இருந்து பாருங்க… அப்போ தெரியும் டயர்ட்னா என்னன்னு..

நீங்க தான் நாலுமாசம் வீட்டுக்குள்ள இருக்கச் சொன்னாலே ஸ்ட்ரஸ் வந்து புலம்பறவங்களாச்சே… 

பேழைக்குள்ளே ஏசி இல்லை, ஃபேன் இல்லை, ஏர் கூலர் இல்லை.. ஏன் கொஞ்சம் சன்னல் வெச்சா காத்தாவது வந்திருக்கும் அதுவும் இல்லை. 

அப்படி திரும்பினா அனிமல்ஸ் வாசனை, இப்படி திரும்பினா பேர்ட்ஸ் வாசனை, தூங்கலாம்ன்னு பாத்தா மிருகங்களோட சத்தமும், பேழையோட ஆட்டமும்… 

ஷப்பப்பப்ப்பாபா…. 

ஆனா ஒண்ணு மட்டும் சொல்லுவேன். “கடவுள் போதுமானவரா இருந்தாரு” ! எந்தக் குறையுமே இல்லை. எந்த அனிமல்ஸோ, பேர்ட்ஸோ எங்களை தொந்தரவு பண்ணல. எங்களுக்கு எந்த நோயும் வரல. சாப்பாட்டுக்கு எந்தக் குறையும் வரல. பாதுகாப்பா இருந்தோம். 

வெளியில என்ன நடக்குதுன்னு மட்டும் தெரியல, ஆனா அதை தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. ஏன்னா, கடவுள் தான் பேழையோட கதவையே மூடினாரு, அவரு தான் திறக்கப் போறாருன்னு தெரியும். சோ, நாங்க ரிலாக்ஸா இருந்தோம். 

என்னது ? இதெல்லாம் எப்போ ஆரம்பிச்சுதுன்னு கேக்கறீங்களா… 

சொல்றேன் சொல்றேன்..  இங்கே ஒரு பலிபீடம் கட்டி கடவுளுக்கு நன்றி சொல்லணும். அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணச் சொல்லியிருக்கேன்… பூமியைக் கழுவி சுத்தம் பண்ணி எங்களை இங்கே இறக்கி விட்டிருக்காரு.  இதெல்லாம் எப்படி ஆரம்பிச்சுதுங்கற கதையை சொல்றேன்… கேக்கறீங்களா  ?

காட்சி 2 

கடவுள் : நோவா… நோவா…

நோவா : யாருப்பா அது.. புதுக் குரலா இருக்கு.. கேட்டது மாதிரி இல்லையே.

( அமைதி )

ம்ம்.. வயசாகுதுல்ல… 500 தாண்டிச்சு… … இந்த வயசுல அப்பப்போ இப்படி ஏதாச்சும் குரல் கேட்டுட்டே தான் இருக்கும். 

கடவுள் : நோவா.. நோவா

நோவா : அட….. ரொம்ப கிளியரா கேக்குதே ! யாரது…இப்படி ஒரு குரல்ல கூப்பிடறது. சத்தத்தை மட்டும் யாரோ அனுப்பி வெச்சிருக்காங்களே.. அது பாசிபிளா ? 

கடவுள் ; நான் தான் கடவுள் பேசறேன்….

நோவா : கடவுளா… க…கடவுளா…. ஐயோ கடவுளே… சொல்லுங்கள்.

கடவுள் : நீ ஒரு பேழை செய்யணும்.

நோவா : பேழையா ? தண்ணில போகுமே அதுவா ?

கடவுள் : ஆமா,, அதே தான்.

நோவா : கடவுளே.. இங்கே தான் கடலே பல மைல் தூரத்துக்கு இல்லையே கடவுளே. கடற்கடையில படகு செஞ்சாலாச்சும் பயணத்துக்கு யூஸ் ஆகும்… இந்த தண்ணி இல்லாத இடத்துல படகு எதுக்கு ?

கடவுள் : தண்ணி இல்லாத இடத்துல படகைச் செய். படகைத் தேடி தண்ணி வரும். இந்த மக்கள் ரொம்ப பாவம் செய்துட்டாங்க, இவங்களை நான் தண்ணியால அழிக்கப் போறேன்.

நோவா : ஐயோ.. கடவுளே.. மக்களை அழிக்கவா…. கடல் வந்து மூழ்கடிச்சுடுமா..

கடவுள் : இல்லை, இல்லை… மழையால அழிக்கப் போறேன். 

நோவா : மழைன்னா ? என்ன கடவுளே தெரியலையே… 

கடவுள் : இதுவரை நீங்க மூடுபனியைத் தான் பாத்தீங்க. மழைங்கறது வானத்துக்கு மேல இருந்து தண்ணியா கீழ கொட்டுற விஷயம். இதுவரை பூமி பார்க்காத விஷயம். அதைக் கொண்டு தான் பூமியின் பாவ மனிதர்களை அழிக்கப் போகிறேன். ஆனால் உன் குடும்பம் மூலமாக உலகம் புதிய மக்களினத்தைப் பெறும்.

நோவா : சரி கடவுளே.. நான் இன்னிக்கே ஒரு படகு செய்றேன். என் குடும்பம்னா, ஒரு எட்டு பேரு தான். சின்னதா ஒரு படகு செய்றேன்… ஒரு நாலஞ்சு நாளைல முடிச்சுடலாம்.

கடவுள் : நோவா…. அது அவ்ளோ சிம்பிள் கிடையாது. நான் சொல்ற அளவுல செய்யணும். உன்னோட சேர்ந்து நிறைய விலங்குகள் பறவைகள் எல்லாம் வருவாங்க. நேரம் வரும்போ அதெல்லாம் சொல்றேன். இப்போ நான் சொல்ற அளவையெல்லாம் நோட் பண்ணிக்கோ

நோவா : சொல்லுங்க கடவுளே. மனசுல எழுதிக்கறேன். 

கடவுள் : உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்; அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு. பேழையை நீ செய்யவேண்டிய முறையாவது; நீளம் முந்நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம். பேழைக்குமேல் கூரை அமைத்து அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி; பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை. பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை.

( நோவா அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து முழிக்கிறார்.

ஓ.. .ஓகே… சரி சரி… ….. )

நோவா : சரி கடவுளே செய்றேன். உடனே ஆரம்பிக்கிறேன்

மெயின் காட்சி மீண்டும் 

நீங்களே சொல்லுங்க.. இவ்ளோ வயசான என்கிட்டே கடவுள் பேழை செய்யச் சொன்னாரு. கடவுளோட பேச்சுக்கு மறு பேச்சு ஏது. “ஓக்கே..” ந்னு சொல்லிட்டேன். கோபேர் மரம் வேற காட்டுக்குள்ள ரொம்ப தூரத்துல தான்  கிடைக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு வெட்டிட்டு வரணும். 

என்னால தனியா அவ்ளோ வேலையை பண்ண முடியாதுன்னு தெரியும். அதனால என் பசங்களை கூப்பிட்டேன். ஓ.. சொல்ல மறந்துட்டேன். எனக்கு மூணு பசங்க. சேம், காத், யாப்பேத்து. மூணு பேருக்குமே கல்யாணம் ஆயிடுச்சு. கடவுள் அவங்களையும், அவங்க பிள்ளைகளையும் பேழைல கொண்டு போக பர்மிஷன் குடுத்திருந்தாரு. 

ஓ.. அன்னிக்கு என்ன நடந்துதுன்னு சொல்றேன்

காட்சி 2

நோவா :  டேய் சேம், காம் , யாப்பேத் வாங்கடா இங்கே. யாரெல்லாம் இருக்கீங்க எல்லாரும் ஓடி வாங்க. வாங்க வாங்க, ரொம்ப அவசரம்.

சேம் : என்ன டாடி 

நோவா : கடவுள் ரொம்ப கோபமா இருக்காருப்பா… 

சேம் : கடவுளா ? அதெப்படி உங்களுக்குத் தெரியும்.

நோவா : அவரே தான் சொன்னாரு, மக்கள் எல்லாரையும் தண்ணில அழிக்கப் போறாராம்.

சேம் : தண்ணியா ?

நோவா : ஆமா , எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன். ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன், ந்னு கடவுள் தெளிவா சொன்னாருப்பா.

சேம் : ஓ.. எப்படி அழிப்பாராம். 

நோ : ஆமா பெரிய வெள்ளப் பெருக்கு வருமாம்

சேம் :  ஐயோ.. இதுக்கு தான் ஸ்விம்மிங் கத்துக்கணும்ம்னு சொன்னது.. எனக்கு தெரியாதே.

நோ : அதில்லை, கடவுள் எங்கிட்டே ஒரு பேழை செய்யச் சொல்லியிருக்காரு. அதுல நம்ம குடும்பத்தைக் காப்பாத்துவாராம். 

சேம் : செய்யலாம்பா…நாங்க ஹெல்ப் பண்றோம். அவங்க ரெண்டு பேரும் வெளியே போயிருக்காங்க, வந்ததும் நாங்க வேலையை ஆரம்பிச்சுடறோம். 

நோ : இது பெரிய பேழைப்பா.. சின்ன விஷயம் கிடையாது. கடவுள் சொல்லியிருக்கிறது மாதிரி அப்படியே செய்யணும்.

சேம் : அப்படியேன்னா ? 

நோ : ஒரு இஞ்ச் கூட கூடவோ குறையவோ செய்யக் கூடாது.  கடவுள் சொன்னதை அப்படியே உனக்கு சொல்றேன்… “ உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்; அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு. பேழையை நீ செய்யவேண்டிய முறையாவது; நீளம் முந்நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம். பேழைக்குமேல் கூரை அமைத்து அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி; பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை. பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை” – இது தான் கடவுள் சொன்னது.

சேம் : ஓ.. சரிப்பா, செஞ்சுடலாம்… 

நோ : சரி நீங்க போய் நிறைய கோப்பேர் மரம் எடுத்துட்டு வாங்க.

சேம் : என்னப்பா, கோப்பேர் மரமா ? இங்க பக்கத்துலயே ஓக் மரம் நிறைய இருக்கே.. அதெல்லாம் வேலைக்காவாதா ?  கோப்பேர் பக்கத்துல இல்லையேப்பா… 

நோ : கோப்பேர் மரம் தான் வேணும், அது எவ்ளோ தூரம இருந்தாலும் நாம போய் வெட்டிட்டு தான்பா வரணும். 

சேம் : சரிப்பா… நான் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போயிடறேன். 

 

நோ : சரிப்பா… 

மெயின் காட்சி மீண்டும் 

நல்ல வேளை என் பிள்ளைங்க எனக்கு ஹெல்ப் பண்ணினாங்க, ஆனா இந்த மக்கள் பண்ணின கிண்டல் கேலி இருக்கே… 

என்னன்னா,   கடவுளோட வார்த்தையை அப்படியே பின்பற்றினா மக்கள் கிண்டல் கேலி பண்ண தான் செய்வாங்க. அதெல்லாம் கதை, அதெல்லாம் கற்பனை ந்னு சொல்லுவாங்க. அதையெல்லாம் நாம கண்டுக்கக் கூடாதுல்ல…

அதுல ஒரு சாம்பிள் கிண்டலை சொல்றேன் கேளுங்க.

காட்சி 3

( ஒருவர் வருகிறார் ) 

ஒருவர் : என்ன நோவா.. என்ன செய்றீங்க… மரங்களை வெட்டி மலை மாதிரி குவிச்சு வெச்சிருக்கீங்க, பசங்க என்னன்னா இன்னும் மரத்தை வெட்டோ வெட்டுன்னு வெட்டறாங்க. நீங்க எதையோ கொட்டோ கொட்டுன்னு கொட்டி பண்ணிட்டே இருக்கீங்க. 

நோவா : பேழை ஒண்ணு செய்யறேன் கடவுள் சொல்லியிருக்காரு… நீங்களும் ஃபிரீயா இருந்தா கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமே… 

ஒருவர் : ஃப்ரீயா.. எங்க பிரீ.. எப்பவுமே வேலை தான். ஆமா, பேழையை ஏன் செய்யச் சொன்னாரு கடவுள் ? 

நோ : பெரிய மழை வருமாம்.. அதனால பூமியில வெள்ளப்பெருக்கு வருமாம். பூமி அழியுமாம்.. அதுல இருந்து விலங்குகளையும் மனுஷங்களையும் காப்பாத்த.. இந்தப் பேழை பயன்படுமாம். 

ஒருவர் : ஓ.. நீங்க தான் இந்த பேழை மூலமா மக்களைக் காப்பாத்தப் போறீங்களா ?

நோ : நோ..நோ. நான் பேழை செய்றது மட்டும் தான்.  கடவுள் தான் காப்பாத்துவார், பேழை மூலமா..

ஒருவர் : ஓ.. ஓகே…ஒகே.. நல்லா செய்ங்க…

( மனசுக்குள் ) கெழவனுக்கு வயசாகுதுல்ல, கொஞ்சம் புத்தி பேதலிச்சுது போல… விடுங்க பாவம். 

மெயின் காட்சி மீண்டும் 

கேட்டீங்கல்ல.. எப்படி கிண்டல் பண்றாங்கன்னு… என்னை மட்டும் கிண்டல் பண்ணினா பரவாயில்லை, என் பிள்ளைகளையும் சேர்த்து தான் கிண்டல் பண்ணினாங்க

பசங்க என் கிட்டே சொல்லி வருத்தப்பட்டாங்க. ஆனாலும் அவங்க என் பேச்சையோ, கடவுள் பேச்சையோ தட்டல. 

அன்னிக்கு நடந்ததை யோசிச்சிப் பாக்கறேன்….

காட்சி 4 :

நபர் 1 : பத்து வருஷமா இந்த மனுஷன் இந்த வேலையையே பண்ணிட்டிருக்காரு பாரேன்.. பரவாயில்லை ரொம்ப நல்லா தான் பண்றாரு.. இவ்ளோ பெருசா பெட்டி செஞ்சு என்ன பண்ண போறாரோ ?

நபர் 2 : ஆனா என்ன தண்ணியில்லாத இடத்துல யாருக்குடா போட் செய்றேன்னு கேக்க ஆள் இல்லை.

நபர் 1 ஆமா.. பாவம்.. வீட்ல பசங்களும் ஒண்ணும் சொல்றதில்லை… பொண்டாட்டிகளும் ஒண்ணும் சொல்றதில்லே போல… அவங்க கெழவனுக்கு சப்போர்ட் பண்றாங்க. இந்த நேரத்துல சூப்பரா நாலு வீடு கட்டியிருக்கலாம். எவ்ளோ மரம்.. கோப்பேர் மரம் வேற…  

( அப்போது சேம் வருகிறார் ) 

ந 1 : சேம்.. யப்பா.. கொஞ்சம் நில்லுப்பா… 

ந 2 : என்னடா பண்றாரு உங்க அப்பா ? ஒரே லொட்டு லொட்டு ன்னு சத்தமா… எதையோ பண்றாரு அப்புறம் அளந்து பாக்கறாரு… வைத்தியர் கிட்டே கூட்டிட்டு போனீங்களா ?

சேம் : அவர் கடவுளுக்கான பேழை செய்றாரு… கிண்டல் பண்ணாதீங்க..உதவி பண்ண முடியாட்டா கூட உபத்திரவம் பண்ணாதீங்க. 

ந 2 : ஓ.. நீங்க செஞ்சு வெக்கிறதை கடவுள் வந்து எடுத்துட்டு போயிடுவாரா…. ஹெவன்ல அவருக்கு போட் தேவைப்படுதா ? அப்ப சரி…

சேம் : எனக்கு மரம் வெட்டற வேலை இருக்கு, கெளம்பவா…

நபர் 1 : உன் அப்பா கிட்டே சொல்லுப்பா ? பாவம் இந்த வயசுல என்னவோ வேண்டாத வேலையெல்லாம் செய்றாரு… நீங்களும் அவருக்கு மரம் வெட்டறேன், கீல் செய்யறேன்னு திரியறீங்க…

சேம் : கடவுள் சொல்றதைத் தான் அப்பா செய்றாரு.  வானத்துலயிருந்து தண்ணி கொட்டும் அதுக்கு மழைன்னு பேரு. அதனால வெள்ளப்பெருக்கு வரும். அப்போ அப்பா செய்ற பேழை தான் காப்பாத்தும்.

ந 1 : வானத்துல இருந்து தண்ணீயா ? இதுவரைக்கும் இங்கே மழை பெஞ்சதேயில்லை. ஏதோ புதுசா கதை உடறீங்க. உங்கப்பா பேழை செய்ய ஆரம்பிச்சப்புறம் பொறந்த கொழந்தைகளுக்கே இப்போ வயசாயிடுச்சு

நீங்க இன்னும் அவருக்கு சப்போர்ட் பண்றீங்க. எவ்ளோ வருஷமா இப்படியே டைம் வேஸ்ட் பண்ணிட்டே இருப்பீங்க.

சேம் : கடவுள் சொன்னதை செய்யணும், கால நேரம் பாக்கக் கூடாது.

ந1 : சரி, கடவுள் சொன்னதை செய்றீங்க. கடவுள் சொல்லி பல வருஷமாச்சே.. அதுக்கப்புறம் கடவுள் ஒண்ணுமே சொல்லலையே.. 

சேம் : எனக்கு வேலை இருக்கு கெளம்பறேன், உங்க கிட்டே பேசி பிரயோஜனம் இல்லை.

மெயின் காட்சி மீண்டும் 

ஆனா ஒரு சந்தோசம் என்னன்னா, என்னோட தாத்தா மெத்துசேலா ஒருதடவை நான் பேழை கட்டிட்டிருக்கும்போ வந்தாரு. அவரு சொன்னது எனக்கு கடவுளோட வார்த்தையை ரி அஷ்யூர் பண்ற மாதிரி இருந்துச்சு. என் தாத்தாவைத் தெரியும் தானே… 969 வயசு வரைக்கும் வாழ்ந்தாரு அவரு. எனக்குத் தெரிஞ்சு அவ்ளோ வருஷம் வாழ்ந்தது அவரு தான். மெத்துசேலா .. ந்னா “சாகும்போ அழிவு வரும்” ந்னு அர்த்தமாம். 

அவரு வந்து என்ன சொன்னாருன்னா…

காட்சி 5 

மெத்துசேலா : என்னப்பா… நீ ஏதோ பேழை செஞ்சிட்டிருக்கியாமே.. ஊரு ஃபுல்லா ஒரே பேச்சா இருக்கு… பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்… 

நோவா : வாங்க தாத்தா.. கடவுள் சொன்னதால தான் இதை பண்றேன். அளவு கூட அவரு குடுத்தது தான் தாத்தா..

மெத் : ஓ.. ஏன் பண்ண சொன்னாரு  ?

நோவா : உலகத்தைக் கடவுள் அழிக்கப் போறாராம்…. அதனால என்னையும் குடும்பத்தையும் காப்பாத்த இதைப் பண்ணச் சொன்னாரு

மெத் : ஓ.. அப்போ.. அப்போ அது சரி தான்…. எங்க அப்பா சொன்னது சரி தான். 

நோவா : என்ன சொன்னாரு தாத்தா…

மெத் : எனக்கு பேரு வைக்கும்போ ‘நான் சாகும்போ அழிவு வரும்’ ங்கற பேரை வெச்சாரு. இப்போ எனக்கு கடைசி காலம்ன்னு நினைக்கிறேன். முடியல .. வயசு வேற 969 ஆவ போவுது…. இதுக்கு மேல ரொம்ப நாள் இருக்க மாட்டேன். உனக்கு கடவுள் நேரடியா வந்து அதைச் சொல்லியிருக்காரு. ம்ம்.. நீ கடவுளோட வாக்குக்கு கீழ்ப்படியறது ரொம்ப சந்தோசம். அதான் கடவுள் உன் கிட்டே சொல்லியிருக்காரு.

நோவா : நன்றி தாத்தா… உக்காருங்க.

மெத் : இல்லப்பா.. கிளம்பறேன்.. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு.. போய் ரெஸ்ட் எடுக்கணும். 

மெயின் காட்சி மீண்டும் 

பாத்தீங்கல்ல.. இப்படி என்னோட தாத்தா வந்து சொன்னப்போ, மறுபடியும் ஒரு டபுள் நம்பிக்கை. அப்படித் தான் மெத்துசேலா தாத்தா இறந்தப்புறம் தான் வெள்ளப்பெருக்கே வந்துச்சு… சூப்பர்ல ! இதுல, இன்னொரு  சந்தோசம் என்னன்னா ? என் பசங்க உலகத்தோட பேச்சைக் கேட்டு வழி விலகல. அதனால தான் இப்போ, இங்கே இருக்காங்க. பலி பீடம் செய்ய கற்களை எடுக்கப் போயிருக்காங்க. 

காட்சி 6

( நோவா பிள்ளைகளை அழைக்கிறார் ) 

பல வருஷமா நீங்க என் கூட இருந்து எனக்கு ரொம்ப உதவி செஞ்சிருக்கீங்க. பேழை நல்லபடியா முடிஞ்சுது. உங்களைப் போல நல்ல கீழ்ப்படிதல் உள்ள பிள்ளைகளைத் தந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்றேன்.

பிள்ளைகள் : என்னப்பா… அப்பாவுக்குக் கீழ்ப்படிவது கடவுளோட விருப்பம். அதை எப்படி மீற முடியும். இது வேற கடவுளோட கட்டளை.

நோவா : சரி, இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கு…

பிள்ளைகள் : நெனச்சேம்பா.. ஒரே ஒரு கதவு தான் இருக்கு.. இன்னும் ஒரு நாலஞ்சு கதவு வெச்சுடலாம் அப்படித் தானே ? 

நோவா : நோ..நோ.. ஒரே ஒரு கதவு தான் கடவுள் சொல்லியிருக்காரு.

பிள்ளைகள் :  ஓ.. அப்போ அப்போ கொஞ்சம் நிறைய சன்னலாச்சும் வைக்கலாமா ? உள்ளே ஒரே இருட்டா இருக்கும், வென்டிலேஷன் பிராள்பம் வந்துடும்.

நோவா : நோ..நோ.. ஒரே ஒரு சன்னல் தான் கடவுள் சொல்லியிருக்காரு.

பிள்ளைகள் : சன்னலும் கதவும் இல்லேன்னா, கஷ்டமாச்சேப்பா… ஒரு ஸ்டியரிங் வீல் கூட இல்லையேப்பா.. எப்படி பேழையை ஓட்டறது, திருப்பறது  

நோவா : கடவுள் அதெல்லாம் சொல்லலப்பா. வண்டியை அவரே ஓட்டிப்பாரு.. நீ ஏன் கவலைப்படறே. 

பிள்ளைகள் : சரிப்பா.. நீங்க என்ன சொல்றீங்களோ அதைக் கேட்டுக்கறோம். வேற என்னப்பா.பாக்கியிருக்கு. ஓ… .. அனிமலஸ் எல்லாம் கூப்பிடணும், நாம உள்ளே போணும்.. நம்ம குடும்பம் உள்ளே போணும்..

நோவா : ஆமா. அதான். அனிமல்ஸை எல்லாம் கடவுளே கொண்டு வந்து சேர்ப்பார். நம்மால முடியுமா என்ன ? தக்க விலங்குகள் ஏழு சோடி வீதமும், தகாத விலங்குகள் ஒரு சோடி வீதமும், பறவைகள் ஏழு சோடி வீதமும் வரும். அது தானா வரும்..  

பிள்ளைகள் : சரிப்பா…

நோவா : முக்கியமா அவற்றுக்கு சாப்பாடு ரெடி பண்ணணும். நமக்கு சாப்பாடு ரெடி பண்ணணும்… நாம எல்லாம் போகணும்…  

பிள்ளைகள் : சரிப்பா… அதை பண்ணிடலாம். 

நோவா : ரொம்ப முக்கியமான விஷயம்…. நாம உடனே பேழைக்குள்ளே போகணும். ஏழு நாள்ல கடவுள் மழை பெய்யச் செய்வாராம். நாப்பது நாள் நைட் டே ந்னு மழை பெஞ்சுட்டே இருக்குமாம்… நாம பேழைக்குள்ளே இருக்கணும். 

மெயின் காட்சி மீண்டும் 

அன்னிக்கு உள்ளே போனவங்க தான். இப்போ தான் வெளி உலகத்தைப் பாக்கறோம். வெளியே என்ன நடக்குதுன்னே ஒரு வருஷம் எங்களுக்குத் தெரியல. அப்புறம் இந்த அராரத் மலை மேல பேழை வந்து நின்னுச்சு.

சன்னலைத் திறந்து ஒரு காகத்தை வெளியே அனுப்பினேன். அது போவுது , வருது போவுது வருத்ன்னு இருந்துச்சு. 

அப்புறம் ஒரு புறாவை அனுப்பினேன். அது போன வேகத்துல திரும்ப வந்துச்சு. அப்புறம் ஒரு செவன் டேஸ் முடிஞ்சு மறுபடியும் அந்த புறாவை அனுப்பினேன். அப்புறம் அது வந்தப்போ, அலகில ஒரு ஒலிவக் கிளை இருந்துச்சு. சந்தோசமாயிடுச்சு.

அப்புறம் ஒரு செவன் டேஸ்க்கு அப்புறம் மறுபடியும் புறாவை அனுப்பினேன். அது திரும்ப வரலை. பூமியில அதுக்கு வசதியான இடம் கிடைச்சுடுச்சுன்னு தெரிஞ்சு போச்சு. 

அப்புறம் தான் மேற்கூரையைத் திறந்து பார்த்தேன்… பூமியில தண்ணி வற்றியிருந்துச்சு.. அப்புறம் தான் கடவுள் எங்களை வெளியே வர சொன்னாரு. 

ஏன்னா கதவை பூட்டினது அவரு தான்,அவரு தானே திறக்கணும். அப்படி தான் இங்கே வந்து சேர்ந்தோம்… பூமியில இப்போ நாங்க மட்டும் தான் இருக்கோம். 

( குரல் )

அப்பா, வரீங்களா.. பலிபீடம் கட்ட தேவையான பொருட்கள் எல்லாம் ரெடி பண்ணியாச்சு. நீங்க தான் பலிபீடம் கட்டணும்.

நோவா : பசங்க கூப்பிடறாங்க.. பலிபீடம் கட்டறது தான் முதல் வேலை. தக்க விலங்குகள், பறவைகள் இவற்றைக் கொண்டு பலியிடணும். நான் கிளம்பறேன். சரியா… பை பை.

*

Posted in Articles, Sunday School

கிறிஸ்தவ நாடகம் : அந்த ஆணி

முழுவதும் கொடுப்போம் இறைவனிடம்

காட்சி 1

( அம்மாவும், பையனும், மகளும். மகனும் மகளும் மொபைலில் ஏதோ நோண்டிக் கொண்டிருக்கும் போது அம்மா வருகிறார் )

( மகனும் மகளும் மொபைல் நோண்டிக்கொண்டிருக்கும் போது அம்மா வருகிறார் . மகள் புத்தகத்துக்குள் போனை வைத்து மறைத்து விளையாடுகிறாள் )

அம்மா : என்னப்பா… படிக்கச் சொன்னா, மொபைலை நோண்டிட்டிருக்கே

பையன் : கொஞ்ச நேரம்… கேம் விளையாடிட்டிருந்தேன்… அதுக்கு போய் திட்டறீங்க

அம்மா : மொபைல்ல ஏன் கேம் விளையாடறே.. குடு பாக்கறேன்.. என்ன விளையாடறேன்னு. வர வர உங்க போக்கே சரியில்லை…

( அப்போது மகள், தன்னிடமிருந்த போனை நைசாக ஒளித்து வைக்கிறாள் )
O
அம்மா போனை வாங்கி பார்க்கிறார்.

அம்மா : இதென்னடா கேம்… ஒரே வயலன்சும்…. காஸ்டியூமும்.. எல்லாம் நல்லாவே இல்ல…. இதையா விளையாடறே ?

பையன் : கேம் தாம்மா.. சும்மா…

அம்மா : இதெல்லாம் வேண்டாம்… இதெல்லாம் கடவுளோட பிள்ளைகள் விளையாடக் கூடாது. இதெல்லாம் தானே உன் மனசுல இருக்கும்.

பையன் : அம்மா, கடவுளுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம். நான் பைபிள் வாசிக்கிறேன், சர்ச் போறேன், ப்ரேயர் பண்றேன்.. இப்போ பிளே டைம்.. விளையாடறேன்…

அம்மா : கொஞ்ச நேரம் கடவுளுக்கு, கொஞ்ச நேரம் சாத்தானுக்குன்னு குடுக்கக் கூடாது தம்பி. நீ விளையாடலாம் தப்பில்ல, ஆனா இந்த மாதிரி தப்பான விளையாட்டெல்லாம் விளையாடக் கூடாது. இப்பல்லாம் நீ டிஜிடல் ல ஸ்பெண்ட் பண்ற நேரம் அதிகமாயிடுச்சு.

பையன் : ஆமா, என்னை மட்டும் திட்டுங்க. அக்காவும் புக்குக்கு இடையில மொபைலை வெச்சு தான் நோண்டிட்டு இருப்பா.. அவளை மட்டும் ஒண்ணும் சொல்லாதீங்க.

மகள் : தேவையில்லாம இப்போ ஏன் என்னை இழுக்கறே… நான் .. நான் பிரண்ட்ஸ் வாட்சப்ல பாடம் போட்டோ எடுத்து அனுப்பறேன்னு சொன்னாங்க, அதான் வெச்சிருந்தேன்.

அம்மா : நான் ரெண்டு பேருக்கும் சேத்து தான் சொல்றேன். மொதல்ல பொய் சொல்றீங்க அது பாவம். கீழ்ப்படியாம இருக்கீங்க அது இன்னொரு பாவம். கடமையை செய்யாம இருக்கீங்க அது இன்னொரு பாவம். தப்பான விளையாட்டை விளையாடறீங்க அது இன்னொரு பாவம்.

பையன் : என்னம்மா, ஒரு கேம் விளையாடினதுக்கு இவ்ளோ பாவத்தை அடுக்கறீங்க.

அம்மா : பாவம் அப்படித் தான் தம்பி, ஒண்ணுக்கு பின்னாடி ஒண்ணா முளைச்சுட்டே இருக்கும். கவனமா இருக்கணும். ஒரு சின்ன பாவத்தைக் கூட அனுமதிக்கக் கூடாது. அது அப்படியே வளர்ந்துட்டே இருக்கும்.

பையன் : சரி..சரி ( எரிச்சலாக ) எப்பவும் அட்வைஸ் தானா… கடுப்பா இருக்கு…

அம்மா : சரி, கடுப்பாகாதே… நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் விளையாடுங்க, மொபைல் வேண்டாம் வேற ஏதாச்சும் விளையாடுங்க. நாம நாளைக்கு ஒரு புது வீடு பாக்க போறோம்…

அம்மா : வாவ்.. ஜாலி… போலாம்.

காட்சி 2

( அம்மா, மகன், மகள் , பாட்டி )

வீட்டு ஓனர் : வாங்க வாங்க…. எங்கே சார் வரலையா ?

அம்மா : இல்லை, அவரு வெளிநாட்ல இருக்காரு, நான் வீடியோ கால்ல வீட்டை காமிச்சுக்கறேன். நோ பிராப்ளம்…

வீ.ஓ : சூப்பர்… சூப்பர்… இப்போ டெக்னாலஜி ரொம்ப வளர்ந்துடுச்சு… தூரமா இருக்கிறெல்லாம் பக்கத்துல வந்துச்சு, பக்கத்துல இருக்கிறதெல்லாம் தூரமா போயிடுச்சு.

அம்மா : உண்மை தான்… வெளிநாட்ல இருக்கிறவங்க கூட பேசறோம், ஆனா பக்கத்து வீட்டுக்காரங்க கூட பேசறதில்லை.

பாட்டி : வீடு ரொம்ப நல்லா இருக்கு…. எவ்ளோ ஏரியா ?

வீ : இது மொத்தம் 1900 ஸ்கொயர் ஃபீட் இருக்கு… வீடு கட்டி ஒரு பத்து வருசம் தான் ஆச்சு…
W
பாட்டி : எவ்ளோ கேக்கறீங்க ? நாங்க எந்த புரோக்கரையும் பாக்கல நேரா உங்களைத் தேடித் தான் வந்தோம்.

வீ : ஆமா… நானும் புரோக்கர் ஏதும் வெச்சுக்கறதில்லை.

பாட்டி : உத்தேசமா எவ்ளோக்கு தருவீங்கன்னு சொன்னா… பாக்க வசதியா இருக்கும்.

வீ : ரெண்டு ந்னா முடிக்கலாம்.

பாட்டி : ரெண்டு கோடியா… அது கொஞ்சம் அதிகமா இருக்கு….

வீ : ஹா..ஹா. கோடி யாரு கேட்டது.. லட்சம்.. ரெண்டு லட்சம் தான்.

பாட்டி : விளையாடாதீங்க… ரெண்டு இலட்சத்துக்கு ஒரு வீட்டுக்கு மதில் கூட கட்ட முடியாது.

வீ : இல்ல, நான் சீரியசா தான் சொல்றேன்.. வீடு ரெண்டு இலட்சம் தான்.

பாட்டி : வீடு ஏதாவது கேஸ்ல இருக்கா ? பிரச்சினைல இருக்கா ? பட்டா இருக்கா ?

வீ : பாத்தீங்களா.. வீடு சீப் ரேட் டுன்னு சொன்னதும் எல்லா சந்தேகமும் வருது… இதே ரெண்டு கோடின்னா சந்தேகமே வந்திருக்காது.

பாட்டி : இல்ல, ரெண்டு இலட்சத்துக்கு வீடே கிடைக்காது. வாடகைக்கு அட்வான்சே ரெண்டு கேக்கறாங்க.

வீ : ஆ… அதுக்கு ஒரு காரணம் உண்டு. இந்த வீடு மொத்தமா உங்களுக்கு தான். ரெண்டு இலட்சம் குடுங்க. ஆனா, வீட்ல பெட் ரூம்ல ஒரு ஆணி மட்டும் இருக்கும். அது மட்டும் என்னுது. அதை நீங்க யூஸ் பண்ணக் கூடாது. டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. நான் அப்பப்போ வந்து பாப்பேன், அலோ பண்ணணும்… அவ்ளோ தான்.

பையன் : நீங்க உண்மையிலேயே சொல்றீங்களா ? இல்லை கிண்டல் பண்றீங்களா ?

வீ. ஆ : தம்பி உண்மையைத் தாம்பா சொல்றேன்… வாங்க வீட்டைக் காட்டறேன்….

( வீட்டைக் காட்டுகிறார் )

வீ.ஆ : இதான்பா அந்த ஆணி .. இதை மட்டும் நீங்க டிஸ்டர்ப் பண்ணக் கூடாது, சரியா ?

பையன் : சரி சார்.. கண்டிப்பா..

வீ. ஆ : அப்போ, உடனே நாம வீட்டு டாக்குமெண்ட் எல்லாம் ரெஜிஸ்டர் பண்ணி வீட்டை உங்க பேருக்கு மாத்திடலாம்.

அம்மா : சரி சார்.. நன்றி…

காட்சி 3

( பையனும், அம்மாவும், அக்காவும், பாட்டியும் பேசுகிறார்கள் )

பையன் : என்னம்மா யோசிக்கிறீங்க..

அம்மா : இல்ல அந்த வீட்டு விஷயத்துல … ஏதோ ஒரு உள்குத்து இருக்கோன்னு எனக்கு ஒரு டவுட். ரெண்டு இலட்ச ரூபாய்க்கு வருதே…

பையன் : ஒருவேளை அந்த ஆணில… ஏதாச்சும் மந்திரம் செஞ்சு வெச்சிருப்பாரோ ?

மகள் : அப்படியெல்லாம் இருக்காது.. அந்த ஆணியை அவங்க பரம்பரையில யாராச்சும் அங்கே அடிச்சிருப்பாங்க, அதை பிடுங்க மாட்டேன்னு அவரு வாக்கு குடுத்திருப்பாரு.

பையன் : நீ சினிமா கதை மாதிரி பேசறே.. ஆமா. பெரிய பரம்பரை ஆணி..

பாட்டி : அப்படியும் இருக்கலாம். ராசியான ஆணி… செண்டிமெண்ட் ஆணி.. இப்படி ஏதோ ஒரு ஆணி.

பையன் : ஆமா. ஆணியே புடுங்க வேண்டாம்ன்னு சொல்றது இது தானா ?

மகள் : எப்படியோ சீப்போ சீப்பா ஒரு வீடு கிடைக்குது. அப்பாக்கு வீடியோ அனுப்பினேன், செம சூப்பர் ந்னு சொன்னாரு. எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் வாங்கிடுங்கன்னு சொன்னாரு. வாங்கிடுவோம்.

காட்சி 4

( வீட்டு ஓனர், இந்த குடும்பம் )

வீ.ஓ : எப்படியோ வீட்டு ரெஜிஸ்ட் ரேஷன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. இனி இந்த வீடு உங்களுது. நல்லா என் ஜாய் பண்ணுங்க. ஆனா அந்த ஆணி மட்டும் என்னுது ஞாபகம் வெச்சுக்கோங்க.

பையன் : ஓக்கே… ஓக்கே

வீ.ஓ : சரி, நான் ஒரு தடவை அதைப் போய் பாத்துட்டு வந்துடறேன்.

பையன் : வாங்க, போய் பாக்கலாம்.

( அவர் போய் பார்க்கிறார் .. கிளம்புகிறார் )

வீ. : சரிப்பா.. நான் கிளம்பறேன்.

பையன் : சரி சார்.

காட்சி 5

(வீ.ஓ வருகிறார் )

பையன் : வாங்க, வாங்க… என்ன இந்தப் பக்கம்.

வீ : இல்ல, அந்த ஆணியைப் பாக்கலாம்ன்னு வந்தேன்.

பையன் : ஆணி அங்கே தான் சார் இருக்கும்.. நம்புங்க.

வீ : ஹா..ஹா.. எதுக்கும் ஒரு தடவை பாத்துட்டு போயிடறேன்.

பையன் : சரி வாங்க.

( அவர் பார்த்து விட்டுக் கிளம்புகிறார் )

மகள் : இவரு என்ன மெண்டலா ? ஆணியை பாக்க வந்துட்டே இருக்காரு…

பையன் : சரி.. வந்தாரு பாத்தாரு போயிட்டாருல்ல, யாருக்கும் தொந்தரவு இல்லையே.. விட்டுடு.

காட்சி 6

(வீ. ஓ வருகிறார் )

பையன் : என்ன சார்… என்ன விசேஷம்

வீ : இல்ல, அந்த ஆணில என்னோட போட்டோ ஒண்ணு மாட்டணும்.

பையன் : என்ன சார் சொல்றீங்க.. அது எங்க பெட் ரூம்ல இருக்கு.. அதுல போய் உங்க போட்டோவை மாட்டணும்ன்னு சொல்றீங்க.

வீ : இத பாருங்க… வீட்டை விக்கும்போ தெளிவா சொல்லியிருக்கேன். அந்த ஆணி என்னுதுன்னு. ஒரு போட்டோ மாட்டிட்டு போயிட போறேன்.. அவ்ளோ தானே.

பையன் : சரி.. வாங்க… ( கடுப்பாக )

( போட்டோவை மாட்டி விட்டுக் கிளம்பி விடுகிறார் )

அம்மா : என்னடா. இந்தாளு நிஜமாவே லூசா ? இல்ல நம்மளை லூசுன்னு நினைக்கிறாரா ?

பையன் : சரி.. விடும்மா.. வந்தாரு போயிட்டாரு.. ஒரு போட்டோ தானே.. இருந்துட்டு போகட்டும்.

காட்சி 7

( வீ.ஓ வருகிறார் .. நள்ளிரவு…)

பையன் : சார்.. என்னசார் இது.. மிட் நைட் சார்.. ஏன் இப்போ வந்தீங்க

வீ. ஓ : பாத்தீங்களா.. அதுக்குள்ளே டென் சன் ஆயிட்டீங்க.. நாம ஏற்கனவே அக்ரீமெண்ட் போட்டது தானே. எனக்கு.. என்னோட… ஆணில ஒரு வேலை இருக்கு அதான் வந்தேன்.

பையன் : ஆணில தான் போட்டோ இருக்கே…

வீ. ஓ : அதை எடுத்துட்டு இந்த பையை மாட்டிட்டு கிளம்பிடறேன்… ஓக்கே வா ?

பையன் : அது காலைல வந்திருக்கலாம்ல..

வீ. ஓ : இத பாருங்க, மறுபடியும் மறுபடியும் பேச்சு மாறாதீங்க. ஆணியை பாக்க வரும்போ நீங்க என்னை அலோ பண்ணணும்.

பையன் : அப்பப்போ தான் வருவேன்னு சொன்னீங்க.. இப்போ டெய்லி வரீங்க

வீ.ஓ : தம்பி.. ஒரு நாளைக்கு 1440 நிமிஷம் இருக்கு, அதுல அஞ்சே அஞ்சு நிமிஷம் தான் நான் எடுக்கறேன். அது .05 % கூட இல்லை, அதுக்கு போயி டென் சன் ஆகறீங்க !

பையன் : சரி.. சரி.. வந்துட்டு போங்க.. சீக்கிரம்

வீ.ஓ : பொறுங்க தம்பி….

( அவர் போய், போட்டோவை எடுத்து விட்டு ஒரு பையை மாட்டி விடுகிறார். கிளம்பி விடுகிறார் )

காட்சி 8

( அதிகாலை நேரம்.. வீடு முழுதும் நாற்றம் )

அம்மா : என்னடா.. ஒரே வாடையா இருக்கு.. கெட்ட வாடை.

அக்கா : ஆமா.. எங்கேயிருந்து வருதோ தெரியலையே…

பையன் : ஆமா… என்ன இது வீடு புல்லா நாறுது.

அக்கா : பெட் ரூம்ல இருந்து தான் வருதுன்னு நினைக்கிறேன்

பையன் : அந்த ஆளு வேறு ஒரு பையை கொண்டு மாட்டிட்டு போனாரு, அதுல ஏதாச்சும் வெச்சிருக்காரோ தெரியலையே.

அம்மா : போய் பாருடா…

( பையன் போய் பார்க்கிறான்.. அதில் கருவாடு இருக்கிறது )

பையன் : அம்மா. இதுல கருவாடு இருக்கும்மா..

அம்மா : கருவாடா.. அய்யோ கடவுளே.. அவன் என்ன மெண்டலா.. கருவாடை கொண்டு வந்து வெச்சிருக்கான்.

அக்கா : அதை தூக்கி வீசுடா..

பையன் : அது முடியாதுக்கா.. அவருக்கு நாம வாக்கு குடுத்திருக்கோம்.

அம்மா : இப்போ என்ன பண்ண.. அவருக்கு போன் பண்ணி பேசு டா

( பையன் போன் பண்ணுகிறான் )
போனில் : தம்பி.. என்ன ரொம்ப சவுண்ட் வுடறீங்க. அது என்னோட ஆணி… அது என்னோட பை.. அதெல்லாம் எடுக்க முடியாது. நான் நினைக்கும்போ வந்து எடுத்துக்கறேன்.. போனை வைங்க.

பையன் : சார்..சார்….ச்ச்சே.. அவரு டார்ச்சர் பண்றாரும்மா…

காட்சி 9

( வெளியே நின்று பேசுகிறார்கள் )

அக்கா : டேய்.. இனிமே முடியாதுடா.. ரொம்ப கொடுமையா இருக்கு.. வீட்டுக்குள்ள நுழையவே முடியல. அவரு நம்மை டார்ச்சர் பண்றாரு.

அம்மா : ஆமாடா… அவரு திட்டம் போட்டு நம்மை கவுத்துட்டாரு.. இந்த வீட்ல நாம இருக்கவே முடியாது. நாளைக்கு கருவாட்டுக்கு பதிலா வேணும்ன்னா செத்த எலியை கொண்டு வைப்பாரு.. நாம கேக்க முடியாது.

அக்கா : ஒண்ணு அதை அrங்கேயிருந்து வெளியே எறியணும்… இல்லேன்னா நாம இங்கேயிருந்து வெளியே போணும்.. வேற வழியில்லை.

பையன் : ஆமாம்மா… சின்ன ஒரு ஆணி தானேன்னு அலோ பண்ணினது இன்னிக்கு எவ்ளோ பெரிய சிக்கலா மாறிடுச்சு… நம்பவே முடியல

அம்மா : ஆமா.. நம்ம வாழ்க்கையில பாவத்துக்கு ஒரு சின்ன இடம் குடுத்தா கூட கடைசில பாவம் எல்லா இடத்துலயும் நிறைஞ்சு நம்மை கடவுளை விட்டு வெளியே தள்ளிடும்டா…

பையன் : உண்மை தாம்மா.. நீங்க படிச்சு படிச்சு சொன்னீங்க அப்போ புரியல… இப்போ தான் புரியுது.. வாங்கினா முழுசா வாங்கணும்.

அம்மா : கடவுளை ஏத்துக்கும்போ முழுசா நம்ம இதய வீட்டை புல்லா அவருக்கே குடுக்கணும். ஒரு ரூமை மட்டும் பூட்டி வெப்பேன், கொஞ்சம் பாவம் மட்டும் வெச்சுப்பேன்னு சொன்னா அது கடைசில நம்ம மீட்பையே கேள்விக்குள்ளாக்கிடும்.

பையன் : உண்மை தாம்மா.. தப்பு பண்ணிட்டோம்… நாம வேணும்ன்னா இந்த வீட்டை மறுபடியும் அவருக்கே குடுத்துடலாம்மா…

அக்கா : ஆமாம்மா.. இது வேண்டாம்.. நாம வாடகை வீட்ல இருந்தப்பவே சந்தோசமா, நிம்மதியா இருந்தோம். வேற எங்கயாவது போயிடலாம். முழுசா நமக்கே சொந்தமான வீட்ல.

அம்மா : ஆமாப்பா. அதனால தான் நான் உங்க கிட்டே அடிக்கடி சொல்லுவேன். நம்ம வாழ்க்கைல கடவுள் மட்டுமே முழுசா இருக்கணும். சாத்தானுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தா அவ்வளவு தான். மொபைல்ல கொஞ்ச நேரம் பாவமான காரியம் பண்ண தொடங்கினா, அதுவே நம்ம வாழ்க்கையை முழுசா காலி பண்ணிடும்.

பையன் : ஆமாம்மா.. புரிஞ்சுகிட்டேன்…. சாத்தான் உண்மையிலேயே ஒரு தந்திர சாலி தான். ஒரு சிலந்தி வலை மாதிரி பின்னி, நம்மை அதுல சிக்க வைப்பான்.

அம்மா : கரெக்டா சொன்னே.. முதல்ல உன் பிரண்டை புடிப்பான்.. அவன் மூலமா உனக்கு கொஞ்சம் கெட்ட பழக்கத்தை சொல்லித் தருவான். அப்புறம் உன் மூலமா இன்னொருத்தருக்கு சொல்லித் தருவான்.. இப்படியே பாவத்துல மூழ்கடிச்சுடுவான்.

அக்கா : ஆமாம்மா.. நானும் புரிஞ்சுகிட்டேன்… சின்ன ஒரு தப்பு தானேன்னு நான் ஆரம்பிக்கிற ஒரு விஷயம்.. நாளுக்கு நாள் வளந்துட்டே போவுது. அப்புறம் கடவுளுக்கான நேரம் குறைஞ்சு சாத்தானுக்கான நேரம் அதிகமாவுது. இனிமே நானும் அந்த பழக்கத்துல இருந்து வெளியே வர போறேன்.

அம்மா : ரொம்ப சந்தோசம்பா… இது தான் எனக்கு வேணும். அணையில ஒரு சின்ன விரிசல் விழுந்தா கூட உடனே சரி செய்யணும். இல்லேன்னா அந்த விரிசல் பெருசாகி அணையையே உடைச்சுடும். அப்புறம் அது ஊரையே அழிச்சுடும். பாவமும் அப்படித் தான். பாவத்தைக் கண்டா விலகிப் போ ன்னுபைபிள் சொல்லல, விலகி ஓடுன்னு சொல்லுது.. அவ்ளோ டேஞ்சர் அது. புலியைக் கண்டா பாய்ஞ்சு நாம ஓடற மாதிரி ஓடணும்.

அக்கா : சரிம்மா….

பையன் : கண்டிப்பாம்மா….

அம்மா : சரிப்பா. தம்பி.. நீ அவருக்கு போன் பண்ணி, கருவாடை மட்டுமல்ல, வீட்டையும் எடுத்துக்கச் சொல்லு.. நமக்கு இந்த வீடே வேண்டாம். நாம இன்னிக்கே கிளம்பலாம்….

பையன் : சரிம்மா…

காட்சி 10

( அம்மா, போனில் பேசுகிறார் )

அம்மா : என்னங்க.. நம்ம பிளான் வர்க் அவுட் ஆச்சு… நம்ம பாஸ்கர் வீட்ல தங்கற மாதிரி செட் பண்ணி… நாம நினைச்சபடியே எல்லாம் நடந்துச்சு. பசங்க திருந்திட்டாங்க. தப்பு பண்ணிட்டிருந்தோம்ன்னு அவங்க ரியலைஸ் பண்ணிட்டாங்க.

அம்மா : ஆமா.. பாஸ்கர் தான் பாவம். ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே தங்கியிருந்தாரு.. நமக்காக.. நம்ம பிள்ளைங்களை சரி பண்ணணும்ன்னு… கருவாட்டுக் பை யை எல்லாம் தூக்கிட்டு அலைஞ்சாரு… எஸ்..எஸ்…. நான் போண் பண்ணி தேங்க்ஸ் சொல்லிட்டேன்.

அம்மா : சரி..நீங்க வரும்போ…புது பிள்ளைங்களைப் பாப்பீங்க.. வைக்கிறேன்.

——

கற்றுக் கொள்ளும் பாடம்

*
பார்த்தீர்களா… ஒரு ஆணி தானே இருந்து விட்டுப் போகட்டும் என நினைத்தது கடைசியில் அந்த குடும்பத்தை வீட்டை விட்டே வெளியேற வைத்தது. அப்படித் தான் பாவமும், சின்ன பாவம் தானே என நம் வாழ்க்கையில் அதற்கு இடம் கொடுத்தால் அது காட்டுத் தீயாய் பரவி நம்மை அழித்துவிடும்.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நம்மை முழுமையாக இயேசுவிடம் ஒப்படைப்பதாகும். 99 சதவீதம் கிறிஸ்தவனாக இருந்தாலும் ஒருவன் பரலோகம் போக முடியாது, 100 சதவீதம் இயேசுவிடம் தன்னை ஒப்படைத்தால் மட்டுமே இரட்சிப்பு உண்டு.

அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இருப்பவர்களைக் குறித்து இயேசு திருவெளிப்பாடு நூலில் என்ன சொல்றாரு தெரியுமா ? “நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.” என்று. எனவே அப்படிப்பட்ட ஒரு அரைவேக்காட்டுக் கிறிஸ்தவர்களாக நாம் இருக்கவே கூடாது.

பவுலின் போதனைகளைக் கேட்டு அதன் பால் ஈர்க்கப்பட்டாலும் அகிரிப்பா ராஜா கிறிஸ்தவ வாழ்க்கை வாழவில்லை, பாவ வாழ்க்கைக்குள் சென்றே அவனது நாட்கள் முடிகின்றன. இயேசுவின் போதனைகளைக் கேட்பதால் மட்டும் நாம் முழுமையான கிறிஸ்தவனாக மாற முடியாது. நமக்குள் இருக்கின்ற கிறிஸ்துவுக்குப் பிடிக்காத விஷயங்கள் முழுவதையும் நீக்கி விட வேண்டும்.

இதயத்தின் ஒரு ஓரத்தில் பாவத்துக்கு இருக்கை போட்டுக் கொடுத்துக் கொண்டு, மற்ற இடங்களிலெல்லாம் இயேசுவை அமர வைக்க முடியாது. பாவம் வாசலில் படுத்திருக்கும், அலகை கர்ஜிக்கும் சிங்கம் போல நம்மைத் தாக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கும். நாம முழுமையாக இறைவனிடம் இருந்தால் மட்டுமே அவற்றை மேற்கொள்ள முடியும்.

நமது இறைவன் நம் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார், நம்மை முழுமையாய்க் கொடுத்தால் மட்டுமே அவர் ஏற்றுக் கொள்கிறார். பவுல் தனது வாழ்க்கையை முழுமையாக இயேசுவிடம் ஒப்படைத்தார். அதனால் தான், “நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்” என அவரால் சொல்ல முடிந்தது. நீங்கள் என்னைப் போல் ஆகுங்கள் என்கிறார் அவர். அப்படித் துணிச்சலாய் சொல்லக் கூடிய கிறிஸ்தவ வாழ்க்கையை நாமும் வாழ்வோம். அதற்காய் நம்மை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைப்போம்.

நன்றி

Posted in Articles, Sunday School

நாடகம் : பிற இனத்தாரின் கடவுள்

பிற இனத்தாரின் கடவுள்

காட்சி 1

( அர்பெல்லாவும், அவளது அம்மாவும் , பாட்டியும் மீட்பின் படகில் போகிறார்கள் )

பாடல் ….

அர்பெல்லா : அம்மா … இப்படி ஒரு மீட்பின் படகில ஏறி பரலோகம் போவோம்ன்னு நான் கனவுல கூட நினைச்சதேயில்லை. எவ்ளோ அற்புதமா இருக்கு.

அம்மா : ஆமா அர்பெல்லா… இப்படி ஒரு மீட்பின் படகு இருக்கு, இதன் மூலமா தான் மரண ஆற்றைக் கடக்கணும்ன்னு நமக்குத் தெரிஞ்சிருக்கவே தெரிஞ்சிருக்காது.

அர் : ஆமாம்மா.. மீனுக்கு உள்ளே இருந்து வந்த அந்த மனுஷரு மட்டும் இல்லேன்னா, உண்மை தெய்வத்தைப் பற்றி நாம அறிஞ்சிருக்கவும் மாட்டோம், மரண ஆற்றைக் கடந்திருக்கவும் மாட்டோம்.

அம்மா : உண்மை தான்.. பாகாலுக்கு பலியிடுறதும், அஸ்ரோத் கம்பங்களை வழிபடுறதும் தானே உண்மையான வழின்னு நினைச்சிட்டிருந்தோம். உண்மையிலேயே யோனா தீர்க்கத்தரிசிக்கு நாம நன்றி சொல்லணும்.

அர் : சொர்க்கத்துக்கு போனதும் அதை செய்வோம்மா….

அர் : அம்மா.. அம்மா.. அதோ பாருங்க.. தூரத்துல நெருப்பு பற்றி எரியுது… என்னம்மா அது ? இந்த மரண ஆறைக் கடக்கிற மாதிரி அதையும் கடக்கணுமா..

அம்மா : இல்லை…இல்லை, அது நரகம்.. அந்தப் பக்கம் நாம போக தேவையே இல்லை. நாம சொர்க்கத்துக்குப் பக்கம் போணும்.. சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையே பெரிய பள்ளம் உண்டு, அதை யாரும் கடக்க முடியாது.

அர் : ஓ.. அப்போ ஒரு தடவை நரகத்துக்கு போயிட்டா அவ்ளோ தானா.. அவங்க இங்கே வரவே முடியாதா ?

அம்மா : இல்லை… அவ்ளோ தான். நாம வாழும்போ கடவுளை நம்பி, அவருக்குப் பிரியமா வாழணும். இல்லேன்னா நரகம் தான் முடிவு. செத்தப்புறம் நம்மளோட பாவத்துக்கு மன்னிப்பு கிடையாது.

குரல் : ஐயோ.. மன்னியுங்கள் கடவுளே.. உம்ம வார்த்தையைத் தானே பேசினேன்.. இஸ்ரவேலரை சபிக்காதீங்கன்னு சொன்னீங்க, அதுக்கு கீழ்ப்படிஞ்சு அவர்களை நான் சபிக்கவே இல்லை. பண ஆசை மட்டும் தானே இருந்துச்சு.. எல்லா மனுஷரைப் போல நானும் நாலு காசு சம்பாதிக்கணும்ல கடவுளே… அதுக்கு தானே வழி பார்த்தேன்…. மத்தபடி நான் உங்க கூட தானே ஐக்கியமா இருந்தேன்… ஐயோ… தினமும் என் கூட பேசுவீங்களே… இப்போ பேச மாட்டேங்கறீங்களே….

அர் : அம்மா.. அங்கேயிருந்து ஒரு குரல் கேக்குதே… யாரும்மா.. அவரு.. ரொம்ப பாவமா இருக்கு….

அம்மா : அவரு தான் பிலேயாம்ன்னு ஒரு தீர்க்கத் தரிசி.

அர் : என்னம்மா சொல்றீங்க.. ? தீர்க்கத் தரிசி எப்படிம்மா அங்கே இருப்பாரு.. இறைவனோட வார்த்தைகளைப் பேசறவங்க எப்படி நெருப்பில.. என்னால நம்ப முடியல.

அம்மா : கடவுள் நீதி தவறாதவர்ம்மா.. அவரு பாரபட்சம் காட்ட மாட்டாரு. அன்பு காட்டறதுலயும் அவருக்கு பாரபட்சம் இல்லை, நீதி செய்றதுலயும் பாரபட்சம் இல்லை. கடவுளோட தீர்க்கத்தரிசியா இருந்தாலும் சரி, பாமரனா இருந்தாலும் சரி அவரோட நீதி தவறாது.

அர் : இருந்தாலும் என்னால நம்ப முடியலைம்மா… அவரு இஸ்ரேலர் தானே.. ? கடவுளோட மக்களினம் தானே ? அப்புறம் ஏன் இப்படி…

பாட்டி : இல்லம்மா.. அவரு இஸ்ரேலர் கிடையாது… அவரு புற ஜாதி மனுஷன்.

அர் : என்ன பாட்டிம்மா சொல்றீங்க ? புற ஜாதியா.. அங்கே இருந்து கூட கடவுளோட தீர்க்கத் தரிசியா ஆக முடியுமா ? ?

பாட்டி : ஆமாம்மா.. அதுவும் சாதாரண தீர்க்கத் தரிசி இல்லை, மோசே மாதிரி பெரிய தீர்க்கத் தரிசி. கடவுளே டெய்லி வந்து பேசற அளவுக்கு பெரிய தீர்க்கத் தரிசி அவரு.நல்லா குறி சொல்வாரு, யஹோவாவை தன்னோட கடவுளா ஏத்துகிட்டு வாழ்ந்தாரு.

அர் : அப்புறம் எப்படிம்மா அவரு இங்கே…

அம்மா : அவரோட பண ஆசை தாம்ம்மா காரணம். பணத்துக்காக எல்லாத்தையும் பண்ணலாம்ன்னு நினைச்சாரு. இஸ்ரேலர்களுக்கு எதிரியான மோவாப் மன்னன் பாராக் – கோட டீல் வெச்சு கிட்டாரு. அவனோட தந்திர சூழ்ச்சிக்கு இணங்கி நடந்தாரு. கடவுள் போகாதேன்னு சொன்னப்புறம் கூட கேக்காம தன்னோட ஆசையை சாதிச்சுட்டாரு… கடைசில அவர் மேலயே சாபம் வந்துச்சு..வாளால வெட்டப்பட்டு செத்துப் போனாரு.

அர் : ம்ம்.. அவரு தானே ஒரு கழுதைல போனதும், கழுதை பேசினதும்.

அம்மா : ஆமா.. அர்பெல்லா.. கரெக்டா தெரிஞ்சு வெச்சிருக்கே… ஆனா இவரைப் பற்றி நாம படிக்கிறதெல்லாம் இவர் பண ஆசையினால தீவினை செய்யத் துணிந்தவர் ந்னு தான் ம. வெறும் செல்வத்துக்காக, விண்ணக செல்வத்தையே விட்டுட்டாரு.

அர் : ஆமா நானும் கேள்விப்பட்டிருக்கேன், பிலயாம் கீழ்த்தரமான ஆலோசனை கொடுத்தாரு. அதை மோசே “பிலேயாம் கொடுத்த ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள் அதனால் அவர்கள் மேல் வாதை வந்தது” ந்னு கூட சொல்லியிருக்காரு.

பாட்டி : ஆமா, இன்னும் நிறைய இடங்கள்ல அவரைப் பற்றி சொல்லியிருக்கு…

அர் : ஆனாலும், கடவுள் பழைய ஏற்பாட்டு காலத்துல கூடவா புற ஜாதியாரை நேசிச்சாரு.. பிலயாம் மேல அவ்ளோ அன்பு வெச்சிருந்தாரே… என்னால நம்பவே முடியலை… நான் என்னவோ கடவுள் இஸ்ரேல் மக்களை. மட்டும் தான் நேசிச்சதா நினைச்சேன்.

அம்மா : கடவுள் பிற இன மக்களையும் இஸ்ரேல் மக்களைப் போலவே நேசிச்சாரு. இல்லேன்னா நாம நினிவேல பாவத்தின் உச்சத்துல இருந்தப்போ நம்மளை அழிச்சிருப்பாருல்ல. நேசிச்சதால தான் நமக்கு மீட்பைத் தந்திருக்காரு.

அர் : ஆமாம்மா.. பாவம் பிலேயாம். அவரும் நம்மள மாதிரி கடவுள் கிட்டே மன்னிப்பு கேட்டிருந்தா, மன்னிச்சிருப்பாருல்ல…

பாட்டி: ஆமா.. கண்டிப்பா… மன்னிப்பு கேக்கறவங்களை அவரு எப்பவுமே மன்னிக்காம இருந்ததில்லை.

அர் : வாவ்.. அம்மா.. அங்கே பாருங்க… நாம பரலோகத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைக்கிறேன்..

காட்சி 2

( பரலோகக் கரையில் இருவரும் இறங்குகிறார்கள். அங்கே ஒரு இடத்தில் யோனா அமர்ந்திருக்கிறார் )

யோனா : ( சோகமாக அமர்ந்திருக்கும் போது இவர்கள் அருகே வருகிறர்கள் )

அர் : அம்மா..அம்மா. அதோ பாருங்க.. அங்கே உக்காந்திருக்கிறது அவர் தானா ?

அம்மா : ஹே.. ஆமா..ஆமா.. நம்ம…. தீர்க்கத்தரிசி யோனா தான்… வா ..வா போய் பேசுவோம்

அர் :.. யோனா அங்கிள்… யோனா அங்கிள்.. எப்படி இருக்கீங்க ? சொர்க்கத்துல வந்து சோகமா இருக்கீங்க ? ஆச்சரியமா இருக்கே.. உங்களை இங்கே சந்திச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோசம்.

யோனா : வாங்க, வாங்க.. நீங்க யாரு.. உங்களைப் பாத்ததே இல்லையே…
அம்மா : என்ன இப்படி சொல்றீங்க.. நீங்க எங்களைப் பாத்திருக்கீங்க.. மறந்திருப்பீங்க.

யோனா : நீங்க எங்கேயிருந்து வரீங்க ?

பாட்டி : நாங்க .. நினிவேல இருந்து வரோம்… நான் அங்குள்ள அரண்மனைல வேலை பாத்திட்டிருந்தேன்.

யோனா : ஓ.. நினிவேயா…. அது ஒரு அற்புதமான வரலாறு….

( பிளாஷ் பேக் காட்சி : காட்சி 3 – நினிவே )

யோனா : இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்

யோனா : இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்

யோனா : இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்

யோனா : இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்

( சொல்லிக்கொண்டே போகிறார். )

( மக்கள் எல்லாரும் அங்கும் இங்கும் ஓடுகிறார்கள் )

பாட்டி : நினிவே இன்னும் நாற்பது நாள்ல அழிக்கப்படுமாம். நான் அரண்மனையில வேலை பாக்கிறேன் இல்லையா ? மன்னனே அரண்மனையை விட்டு கீழே இறங்கி, சாக்கு உடுத்தி, சாம்பல்ல உட்கார்ந்துட்டான்.

அம்மா : ஓ… அரசனே அப்படின்னா, மக்கள் எல்லாருமே அப்படித் தான் பண்ணுவாங்க.

பாட்டி : ஆமா, அரசன் ஏதோ ஒரு அறிவிப்பு குடுக்கப் போறாரு… சீக்கிரம் நமக்குத் தெரிஞ்சுடும்.

அர்பெல்லா : அப்போ, நாமளும் அப்படி இருக்கணுமாம்மா ? சாக்கு உடுத்தி ? நோன்பு இருக்கணுமா ?

அம்மா : நாற்பது நாள்ல நினிவே அழிக்கப்படும்ன்னா, நம்மளை கடவுள் தானே காப்பாத்தணும்… நாம கண்டிப்பா கடவுளை நோக்கி கதறி மன்றாட வேண்டியது தான்.

அர் : அம்மா.. ஏதோ ஒரு அறிவிப்பு சத்தம் கேக்குது.. முரசறிவிப்பு போல

குரல் : எல்லோரும் சாக்கு உடை உடுத்திக் கொள்ள வேண்டும், ஏன் விலங்குகளுக்குக் கூட சாக்கு உடுத்த வேண்டும். எல்லோரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும். தீய பழக்கங்களை உடனே விட்டு விலக வேண்டும். யாருமே உணவைச் சுவைத்துப் பார்க்கவே கூடாது. தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. விலங்குகள் கூட நோன்பு இருக்கணும்.இப்படிச் செய்தால் ஒருவேளை கடவுள் மனமிரங்கி நம்மைக் காப்பார். இல்லையேல் அழிவு நிச்சயம். இது அரசரும், அரசவையினரும் கொடுக்கின்ற அறிவிப்பாகும்… டும் டும் டும்

அர் : அம்மா.. பாட்டி சொன்னது மாதிரி தான் நடக்குது.. நாம சீக்கிரம் போய் சாக்கு உடுத்தி, சாம்பல்ல உக்காந்து நோன்பு அனுசரிப்போம்.

( அப்போது யோனா அந்த வழியாக சொல்லிக் கொண்டு போகிறார் )

யோனா : இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்

யோனா : இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்

பாட்டி : இனிமே வெயிட் பண்ணவே கூடாது… சீக்கிரம் போய் நோன்பு இருப்போம்… எப்படியாவது கடவுள் மனமிரங்கணும், நாம கொஞ்ச நஞ்ச பாவமா செஞ்சோம்… வாங்க.. சீக்கிரம்

அம்மா : ஆமா.. கடவுள் தான் நம்மளைக் காப்பாத்தணும்.

( நாற்பது நாட்களுக்குப் பின் … கடவுள் நகரை அழிக்கவில்லை .. யோனா புலம்புகிறார் )

யோனா : இதான்.. இதுக்காகத் தான் நான் நினிவே வராம தர்சீஷ்க்கு ஓடிப் போனேன்.. உட்டீங்களா ? இல்ல, ஒரு மீன் மூலமா எனக்கு தூண்டில் போட்டீங்க. மீனுக்குள்ளே என்னை உக்கார வெச்சீங்க. சரி போகட்டும், மன்னிப்பும் கேட்டேன். நினிவே வந்தேன். கீழ்ப்படிஞ்சு இங்கே நினிவேக்கு வந்தேன். நினிவே அழியும்ன்னு .. நினிவே அழியும்ன்னு நான் ஒரு பைத்தியக்காரன் போல அவங்க மேல உள்ள கோபத்துல கத்தி கிட்டே போனேன். …. நீங்க சொன்னதை செஞ்சீங்களா ? அழிக்கலையே !

யோனா : இப்போ என்னாச்சு… நான் சொன்னது தப்புன்னு ஆச்சு. அசீரியர்கள் நமக்கு எதிரிகள், அவர்கள் அழியணும்ன்னு நினைச்சது நிறைவேறாம போச்சு. நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும் உள்ளவர்ன்னு தெரியும். இப்படித் தான் பண்ணுவீங்கன்னு தெரியும்.

யோனா : அவங்களை அழிக்கலல்ல…. அதுக்கு பதிலா, நீங்க என்னை காலி பண்ணிடுங்க ! நான் ஏன் உயிரோட இருக்கணும் ?

கடவுள் : என்ன யோனா, நீ… இப்படி கோபமா எரிச்சலோட இருப்பது உனக்கு…. நல்லதா ?

யோனா : நான் ஊருக்கு வெளியே பந்தல் போட்டு உக்காந்திருப்பேன்.. நினிவே அழியணும்.. அதை நான் பாக்கணும்…

யோனா : அட.. இதென்ன ஒரு ஆமணக்கு செடி, சட்டுன்னு முளைச்சு சடசடன்னு வளருது.. நல்ல நிழலும் தருது…

யோனா : அட.. ஒரு நாள்லயே அது அழிஞ்சும் போச்சே…. இந்த வெயில்ல நான் காயறதுக்கு பதிலா… நான் சாகறதே நல்லது.

கடவுள் : நீ உழைக்காத , நீ வளர்க்காத ஒரு ஆமணக்குச் செடிக்காக இப்படி பரிதபிக்கிறாயே… வலக்கை எது, இடக் கை எதுன்னு தெரியாத இந்த நாட்டிலுள்ள இலட்சத்து இருபதாயிரம் மக்களுக்காக நான் இரக்கப்பட மாட்டேனா ?

( பிளாஷ் பேக் முடிகிறது )

 யோனா : ம்ம்ம்.. நினிவே கதையை நினைச்சா சோகம் தான்….

அம்மா : பழைய கதையை நினைச்சு என்ன சோகம்… உண்மையிலே… நீங்க ரொம்ப சந்தோசப்படணும்.. நினிவேங்கற ஒரு மாபெரும் பட்டணத்தையே மீட்டுட்டீங்களே.. நாங்க எல்லாம் தீயில கருகாம காப்பாத்திட்டீங்களே.

யோனா : இல்லை, அந்த பெருமை ஏதும் எனக்கில்லை. நான் நீங்க எல்லாம் மீட்கப்படணும்ன்னு நினைக்கவேயில்லை. அசீரியர்கள் அழியணும்ன்னு தான் நினைச்சேன். உங்க மேல உண்மையான அன்பு எனக்கு இருக்கல…

அர் : ஆனா கடவுள் உங்க மூலமா மிகப்பெரிய வேலையை செய்தாருல்லயா அங்கிள்.. நீங்களும் மன்னிப்பு கேட்டுட்டீங்க அப்போவே…. அவரு உடனே மன்னிப்பும் கொடுத்துட்டாரு.. மறந்தே போயிட்டாரு…. நீங்க பரலோகத்துக்கும் வந்துட்டீங்க… இனிமே ஏன் சோகம், சந்தோசமா இருங்க.

யோனா : இருந்தாலும் அவரு பிற இன மக்கள் மேல இவ்ளோ அன்பு வெச்சிருந்தாரே.. நான் அப்படி வைக்காம இருந்தேனே.. ஒரு பெரிய தீர்க்கத்தரிசின்னு பெயரு வாங்கிட்டு, பிற இன மக்கள் அழியணும்ன்னு நினைச்சேனே ந்னு நினைச்சா வருத்தமா இருக்கு.

அர் : அங்கிள் பழைய கதைகளை நினைச்சு சொர்க்கத்தோட இனிமையை ஏன் இழக்கறீங்க ? யஹோவா… உங்களை இங்கே கொண்டு வந்திருக்காருன்னா அவரு உங்க மேல எவ்ளோ அன்பு வெச்சிருக்காருன்னு அர்த்தம்.

யோனா : ம்ம்.. அது உண்மை pதான்… இருந்தாலும் நினிவே வர சொன்னா தர்ஷீஸ் ஓடினேன். கடலுக்கு மேலே பயணம் பண்ண வேண்டியவனை மீனுக்கு உள்ளே டிராவல் பண்ண வெச்சாரு கடவுள்.

அர் : ஆமா அங்கிள்… உலகத்துலயே முதல் நீர்மூழ்கிக் கப்பல் நீங்க போனது தான். மீனுக்குள்ளே புகழ் பாட்டு பாடினதும் நீங்க தான். செம. எல்லாம் நல்லதுக்கு தான் முடிஞ்சிருக்கு.

யோனா : ஆனாலும், தன்னோட மிஷனரி பணி சக்சஸ் ஆனதுக்காக வருத்தப்பட்ட ஒரே ஆள் நான் தானே… நினிவே முழுசும் மனம் மாறிச்சு, என் மனம் மாறவே இல்லை. நான் அசீரியர்கள் அழியணும்ன்னே நினைச்சிட்டிருந்தேன். மக்கள் மனம் மாறினதுக்காக நான் சந்தோசப்படவே இல்லை.

அம் : அதுக்கு காரணம் இருக்குல்ல, நாங்க கொஞ்ச நஞ்ச கொடுமையா இஸ்ரேல் மக்களுக்குச் செய்தோம். இருந்தும் எங்களை இவ்ளோ அன்பு செய்து கடவுள் ஏத்துகிட்டாருன்னு நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு.

யோனா : எல்லாம் சரி தான்.. ஆனாலும், கடவுள் கிட்டயே சண்டை போட்டேன். உம்மைப் பத்தி எனக்குத் தெரியும், இப்படியெல்லாம் பண்ணுவீங்கன்னு அதனால தான் இந்தப் பக்கமே வரலேன்னு சண்டை போட்டேன். அவரு ஒரு ஆமணக்குச் செடியை முளைக்க வைத்து, அதை புழுக்களால அழிக்க வைத்து ஒரு பாடம் சொல்லித் தந்தாரு.. ஊஹூம்.. நான் கேக்கவே இல்லையே…

அம் : அந்த கதையெல்லாம் எங்களுக்கு தெரியும். என்ன தான் இருந்தாலும் இவ்ளோ அன்பா கடவுள் இங்கே வெச்சிருக்காரே.. சந்தோசப்படுங்க.

காட்சி 4

( அங்கே பவுல் வருகிறார் .. இந்த காட்சியின் இடையிடையே பவுலின் பணிகள் / அனுபவங்கள் பின்னணியில்… )

பவுல் : ஹலோ…. யோனா அங்கிள் .. எவ்ளோ பெரிய தீர்க்கத் தரிசி.. சின்ன வயசில இருந்தே உங்களை பிரமிப்பா பாத்திருக்கேன். என்ன இங்கே உக்காந்திருக்கீங்க.. யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?

அர் : இல்ல பவுல் அங்கிள்.. இவரு சோகமா இருக்காரு..

பவுல் : சோகமாவா.. சேன்சே இல்லையே… சொர்க்கத்துல சோகம் ங்கற வார்த்தைக்கே இடமில்லையே.

அர் : அப்படியில்ல அங்கிள். இவரு பிற இன மக்களுக்கு எதிரா இருந்ததை நினைச்சு வருத்தப்படறாரு.

பவுல் : அட… அதுக்காக கவலைப்படலாமா. நான் ஒரு காலத்துல கிறிஸ்தவர்களைத் தேடித் தேடி கொன்னிட்டிருந்தேன். யூதர்களைத் தவிர வேற யாருக்குமே மீட்பு இல்லைன்னு நினைச்சிட்டிருந்தேன். கமாலியேல் கிட்டே யூதர்களுடைய நியாயப்பிரமாணத்தை கரைச்சு குடிச்சதை நினைச்சு பெருமையா இருந்தேன். ஆனா கடவுள் என்னை எப்படி ஆக்கினாரு பாத்தீங்கல்ல.

யோனா : ஆமா.. பிற இன மக்களோட மீட்புக்கு நீங்க தான் மிகப்பெரிய காரணம். கடவுள் உங்களை அங்கே தானே அனுப்பினார். அற்புதமா பணி செய்தீங்க…

பவுல் : ஆமா.. தமஸ்கு போற வழியில எனக்கு இயேசு காட்சி கொடுத்தாரு… பார்வையும் போச்சு, அப்புறம் பார்வையை குடுத்தாரு.. பிற இன மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சொன்னாரு… எனக்கு புரியல, குழப்பமா இருந்துச்சு. அதனால நான் என்ன பண்ணினேன் தெரியுமா ?

அர் : தெரியாது அங்கிள் சொல்லுங்க

பவுல் : நான் நேரா அரேபிய பாலை வனத்துக்கு போனேன். மூணு வருஷம் அங்கே இருந்து பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணங்கள் என்ன சொல்லுது, மேசியா யாரு ? இயேசு தான் மேசியாவா ? அப்படியெல்லாம் ஆராய்ந்து பாத்துட்டு இருந்தேன். கடவுளே எனக்கு வந்து எல்லாத்தையும் கற்றுத் தந்தாரு. இயேசு தான் மேசியான்னும் புரிஞ்சுது, பழைய ஏற்பாடு சொல்றதெல்லாம் இயேசுவைத் தான்னும் புரிஞ்சுது. கடவுள் இஸ்ரேல் மக்களை மட்டும் தான் நேசிக்கிறார்ன்னு நான் கமாலியேல்ட்ட முந்தி படிச்சதெல்லாம் தப்புன்னு புரிஞ்சுட்டேன். புற ஜாதியாரையும் அவரு ஒரே மாதிரி நேசிக்கிறதனால, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கணும்ன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு.

அர் : அப்புறம் தான் பிரீச் பண்ண போனீங்களா ?

பவுல் : ஆமா… அப்போ தான் கமாலியேல் கற்றுத் தந்த நியாயப்பிரமாணத்துக்கும், கடவுளோட அன்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சு கிட்டேன். அப்புறம் தான் புற ஜாதியினருக்கு நற்செய்தி அறிவிக்க போனேன். அதுக்கு அப்புறம் பின் வாங்கவே இல்லை.

அர் : அப்படியா பவுல் அங்கிள்.. நாங்களும் பிற இன மக்களா இருந்து யஹோவாவுக்குள்ள வந்தவங்க தான். ஆமா பழைய ஏற்பாட்டுக் காலத்துல ராகாப்பு… ரூத் கதையெல்லாம் அப்படித் தானே…

பவுல் : இயேசு ஒரு கானானேயப் பெண், ரோம நூற்றுவர் தலைவன் ரெண்டு பேரும் இஸ்ரேலரை விட பெரிய விசுவாசம் உடைவர்கள்ன்னு பாராட்டினாரு. ஒதுக்கப்பட்டவர்களோடு தான் வாழ்ந்தாரு. சமாரியப் பெண்ணைத் தேடிப் போய் மீட்டாரு.

அர் : ரொம்ப ஆச்சரியமா இருக்கு… தேடிப் போய் மீட்கிற ஒரு கடவுளைப் பற்றி தெரிஞ்சுக்கறதும், அவரைப் பின்பற்றி வாழறதும் எவ்வளவு பெரிய பாக்கியம் இல்லையா ?

பவுல் : கண்டிப்பா… கிறிஸ்துன்னா கிறிஸ்தவர்களுக்கு மட்டும்ன்னு ஒரு தப்பான எண்ணம் மக்களுக்கு உண்டு. அதனால பிற இன மக்களை வெறுக்கிற நிலமைக்கு நாம போறதும் உண்டு. அதெல்லாம் தப்பு. கடவுள் எல்லாருக்குமே கடவுள் தான். ஆதி முதல் அவர் அப்படித் தான்.

யோனா : ஆமா. கரெக்டா சொன்னீங்க பவுல். உங்களுக்கு நல்ல தெளிவு இருக்கு. நான் அப்போ கடவுளோட மனசை புரிஞ்சுக்காம இருந்துட்டேன். இல்லேன்னா இப்போ ரொம்ப சந்தோசமா இருந்திருப்பேன்.

பவுல் : ஹலோ. மிஸ்டர் யோனா… உங்களை மாதிரி பெரிய இறைவாக்கினரே இல்லை தெரியுமா ? இயேசு என்ன சொன்னாரு தெரியுமா ? “யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” ந்னு ஒரு தடவை சொன்னாரு. அப்படின்னா என்ன அர்த்தம், யோனா மிகப்பெரிய தீர்க்கத் தரிசி, அவரை விடப் பெரியவர்ன்னா இயேசு தான்.

யோனா : ( சிரித்தபடி ) ஓ..வாவ்.. இயேசுவுக்கும் என் மேல எவ்ளோ அன்பு. என்னை எவ்ளோ உயர்வா பேசியிருக்காரு.

பவுல் : அது மட்டுமா.. யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷ குமாரனும் மண்ணில் மூன்று நாள் இருக்கணும்ன்னு உங்க பயணத்தையும் சொல்லியிருக்காரு இயேசு.

யோனா : வாவ்.. இப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என்னோட பாவத்தையெல்லாம் அவரு கணக்கில வைக்கல.

பவுல் : ஹா..ஹா.. என்ன யோனா, அப்படிப் பாத்தா பாவிகளிலே பிரதான பாவி நான். அதை பைபிள்ல கூட எழுதி வெச்சிருக்கேன். என்னையே மன்னிச்சு இங்கே கொண்டு வந்திருக்காருல்ல. அவரு ஆள் பார்த்து செயல்படுபவர் அல்ல.

யோனா : இப்போ தான் ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா, நீங்க நற்செய்தி அறிவிக்க ஆரம்பிச்சப்புறம் தான் கடவுள் பிற இனத்தாரை அன்பு செய்றவருன்னு உலகிற்கு ரொம்ப தெளிவா தெரிஞ்சிருக்கு.

பவுல் : உண்மை தான், ஆனா கடவுள் தொடக்கத்துல இருந்தே எல்லாரையும் தான் நேசிக்கிறார். எல்லாருமே ஆதாமின் வழி மரபு தானே. ஏனோக், நோவா இப்படி ஆபிரகாம் வரைக்கும் வாழ்ந்தவங்க யாரும் ஆபிரகாம் சந்தயினர் இல்லையே. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமே ஆபிரகாமுக்கு அப்புறம் தானே ஆரம்பமாகுது. அவங்களையும் கடவுள் எவ்ளோ நேசிச்சாருன்னு நமக்குத் தெரியும்ல.

அம்மா : ஆமா… ஆதாம் ஏவாள் பாவம் செய்தப்பவோ கடவுள் மீட்பின் திட்டத்தையும் சொன்னாரு. பெண்ணின் வித்து சர்ப்பத்தில் தலையை நசுக்கும்ன்னு. நோவாவின் காலத்துல பாவம் நிறைஞ்சப்போ கடவுள் உலகத்தையே அழிச்சாரு. ஆனா நோவா குடும்பத்தை மீட்பின் பேழையில வெச்சு காப்பாற்றினாரு. பாபேல் கோபுரம் கட்டி மக்கள் கர்வமா இருந்தப்போ மக்களோட மொழியை பிரிச்சு சிதறடிச்சாரு. ஆனாலும், சிதறடிக்கப்பட்டவர்களை மீட்கணும்ன்னு நற்செய்தி அறிவித்தலை நமக்குத் தந்தாரு.

பவுல் : அழகா சொன்னீங்க நற்செய்தியை. ஒரு அசீரியப் பெண்ணா இருந்து இவ்ளோ விஷயம் கத்துகிட்டிருக்கீங்களே ரொம்ப மகிழ்ச்சி.

அம்மா : எல்லாத்துக்கும் காரணம் யஹோவாவும், அவரைக் காட்டித் தந்த இந்த யோனா ஐயாவும் தான்.

அர் : ம்ம்ம்.. நீங்க பேசறதெல்லாம் கேட்டிட்டு இருக்கும்போ எனக்கு ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரியுது. கடவுள் பிற இன மக்களை அன்பு செய்றது ஒண்ணும் புதுசுல்ல. கடவுள் அன்பானவர். அன்பின் நிறைவு அவர் தான். அந்த அன்பில பாகுபாடு இருக்குன்னு நினைக்கிறது நம்மோட இருதயக் குறைபாடு தானே தவிர இறைவனோட குறைபாடு இல்லை.

யோனா : கரெக்ட்.. இப்போ எனக்கும் சந்தோசமா இருக்கு. சரி, வாங்க புகழ் பாக்கள் பாட நேரமாச்சு.

*