+
காட்சி 1
( ஒரு கன்சல்டன்சியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார் , முன்னால் ஒரு பைபிள் இருக்கிறது. சின்ன சிலுவை ஒன்று இருக்கிறது. )
நபர் 1 : இயேசப்பா இந்த நாளை ஆசீர்வதியுங்க. இன்னிக்கு பிஸினஸ் நல்லா நடக்கணும். உங்களுக்கு பத்து பர்சண்ட் கண்டிப்பா உண்டு.
( போன் அடிக்கிறது )
நபர் 1 “ இதான், ஒரு பிரேயர் பண்ணிட்டு நாளை ஆரம்பிச்சா எல்லாமே நல்லாதா நடக்கும்.
(போனை எடுத்து பேசுகிறார் )
நபர் 1 : என்னது ? ஓ.. சூப்பர்.. கிடைச்சுடுச்சா. ஓக்கே ஓக்கே..நாம ரெடி பண்ணி விட்டா வேலை கிடைக்கிறது ரொம்ப சிம்பிள்.. ம்ம்ம்.. என்ன சிக்கல் ? பே சிலிப் ஆ… ஒரு நிமிசம்
( கம்ப்யூட்டரை திறக்கிறார் )
நபர் 1 : ம்ம்… நீங்க வந்து.. ஓகே.. 20 தவுசன்ட் ந்னு போட சொல்லியிருந்தேன்.. என்னாச்சு. ஓ.. ம்ம்ம், சரி சரி.. ஒண்ணும் பிரச்சினையில்லை. சாயங்காலம் ஆறு மணிக்கு ஆபீஸ் வாங்க.. நான் ரெடி பண்ணி வைக்கிறேன்.
அட. நாம என்ன ரொம்ப பெரிய தப்பா பண்றோம்.. ஆல்ரெடி நீங்க 15 ஆயிரம் வாங்கறீங்க.. அதை 20ந்னு சொல்ல போறோம் அவ்ளோ தானே… ஒரு சின்ன மாற்றம்.. நோ பிராப்ளம்… ஆங்.. பை தவே.. நீங்க இதுக்கு ஒர் ஃபோர் தவுசண்ட் பே பண்ணணும்… நோ ப்ராப்ளம்.. பேக்ரவுண்ட் இன்ஃபர்மேஷன் எல்லாம் நல்லா போகும். நான் டேட்டாபேஸ்லயே ஏத்திடுவேன்.. ஓக்கே..
நபர் 1 ( போனை வைத்து விட்டு..) நன்றி இயேசப்பா.. காலையிலயே நல்ல செய்தி.
காட்சி தொடர்ச்சி
( இரண்டு பேர் வருகிறார்கள் )
நபர் 1 : வாங்கப்பா நீங்க..
ரெய்னா : சார், நீங்க தான் மெயில் அனுப்பியிருந்தீங்க … வேலை விஷயமா… பத்து மணிக்கு வர சொல்லியிருந்தீங்க…
நபர் 1 : ஓ.. யெஸ்… ரெய்னா & ரயன் சரியா.. உக்காருங்க.. உக்காங்க…
நபர் 1 : வேலை வேணும்ன்னு ரெஜிஸ்டர் பண்ணியிருந்தீங்க இல்லையா ?
ரெய்னா : ஆமாங்க சார்.
நபர் 1 : வெரி குட்… ஒரு நிமிஷம்… ( கம்ப்யூட்டரைப் பார்க்கிறார் ) .. ஆங்.. நீங்க இப்போ ஃபோக்கஸ் இன்ஃபோடெக்ல வேலை பாக்கறீங்க… 4 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் சரியா…
ரெய்னா : ஆமா சார்…
நபர் 1 : குட்..குட்.. உங்களுக்கு .. டார்வின் இன்ஃபோ டெக்ல ஒரு வேலை இருக்கு… சீனியர் அசோசியேட்.. வேலை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாப்போம்.
நபர் 1 : தம்பி உங்க பேர் ரயன் தானே..
ரயன் : ஆமா சார்…
நபர் 1 : ம்ம்ம்.. ஆங்.. உங்களுக்கு கேட்2பிஸ் ந்னு கம்பெனில ஒரு வேலை இருக்கு.. நீங்க ஒரு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் தானே
ரயன் : ஆமா.. சார்..
நபர் : நல்லா கான்ஃபிடண்டா பேசுங்கப்பா.. அப்போ தான் வேலை கிடைக்கும்
ரயன் : சரி சார்.
நபர் : ( கம்ப்யூட்டரில் நோண்டுகிறார் ).. ஓ.. ஓக்கே.. சரி, ஒரு விஷயம் பண்ணுவோம். உங்களுக்கு அங்கே ஜூனியர் அசோசியேட் வேலை இருக்கு. அதுக்கு டெஸ்டிங் தெரியணும்ன்னு போட்டிருக்கு… ம்ம்.. என்ன பண்ணுங்க.. உங்க புரஃபைல்ல கொஞ்சம் மாத்துவோம் சரியா
ரயன் : எப்படி மாத்தணும் சார்
நபர் : கொஞ்சத்தை தூக்குவோம், கொஞ்சத்தை சேப்போம் அவ்ளோ தான்..
ரயன் : புரியலை சார்.
நபர் : நோ ப்ராப்ளம்.. நீங்க வேலை பாக்கற கம்பெனில டெஸ்டிங் தான் பண்றீங்கன்னு நான் உங்க புரஃபைலை மாத்திடறேன். நீங்க நெட்ல பாத்து கொஞ்சம் டெஸ்டிங் பத்தி தெரிஞ்சுக்கோங்க.. சரியா… மார்க்கும் சரியில்லை, சரி அந்த காலத்தை தூக்கிடறேன்… அப்புறம்.. ஹயிட்டு வெயிட்டு.. ஆஹா.. அதெல்லாம் வேண்டாம்.
சரி..சரி.. நான் உங்க புரஃபைல கொஞ்சம் கை வெச்சு அப்டி இப்டி மசாலா சேத்து அனுப்பறேன். அதை எடுத்துட்டு கமிங் மண்டே நீங்க கேட்2பிஸ் போயிடுங்க சரியா
ரயன் : சரி சார்… மாத்தறது தான் மாத்தறீங்க, வேலை கிடைக்கிற அளவுக்கு மாத்திடுங்க சார்.
நபர் : ஹா.. அதெல்லாம் பக்காவா பண்ணுவோம், கடவுள் பாத்துப்பாரு.. நீங்க கிறிஸ்டியன் தானே ?
ரயன் : ஆமா சார்… என்ன இப்படி கேட்டுட்டீங்க… பக்கா கிறிஸ்டியன் ஃபேமிலி.
நபர் : வெரி குட்.. நல்லா பிரேயர் பண்ணிக்கோங்க. முடிஞ்சா பொருத்தனை பண்ணிக்கோங்க, ஏதாச்சும் நேந்துக்கோங்க..… முதல் மாச சம்பளத்தை காணிக்கை வைப்பேன்.. … அப்படி இப்படி… ஓக்கே வா ?
ரயன் : கண்டிப்பா சார்..
நபர் : வெரி குட்.. உங்க வேலை ஓவர்.. ஆங்..ரெய்னா.. உங்களுக்கு என்ன பண்ணலாம். ஆஹா.. நீங்க டாட் நெட் தான் படிச்சிருக்கீங்க. உங்களுக்கு வேலை போயிடுச்சு இல்லையா ?
ரெய்னா : ஆமா சார், லே ஆஃப் ல மாட்டிகிட்டேன். டாட் நெட்ல தான் வேலை பாத்திருக்கேன்.
நபர் : ம்ம்.. தட்ஸ் ஓக்கே.. ஆனா, இவங்க கேட்டிருக்கிறது ஜாவா… அதுல ஒரு ரெண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிற மாதிரி போட்டுடறேன். கொஞ்சம் பிரிப்பேர் பண்ணிக்கோங்க சரியா
ரெய்னா : வேண்டாம் சார்.. அப்படி பொய் எல்லாம் பேசி வேலை வாங்க வேண்டாம். என்னோட திறமைக்கு என்ன கிடைக்குதோ அது போதும்.
நபர் : வாட்… பொய்யா.. ? எல்லா திறமையும் கடவுள் தரது தான்ம்மா… எங்களை மாதிரி கன்சல்டன்சி வேலையே உங்களை மாதிரி திறமை சாலிகளுக்கு வேலை வாங்கி தரது தான்.
ரெய்னா : அது நல்லது சார்.. ஆனா இல்லாததை இருக்கிற மாதிரி போடறது வேண்டாம் சார்
நபர் : ஹா..ஹா.. பயப்படாதீங்க.. இதெல்லாம் ரொம்ப சிம்பிள் மேட்டர். என்ன பண்ணணும்ன்னு நான் சொல்லி தரேன்.
ரெய்னா : இல்ல சார்.. அதுக்கெல்லாம் என் மனசு ஒத்துக்கல…
நபர் : அடடா.. நீங்கள் இவ்ளோ ஸ்மார்ட்டா இருக்கீங்க.. நீட்டா பேசறீங்க. ஒரு சின்ன சேஞ்ச் தான். யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க… உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைய இருக்கு, நோ ப்ராப்ளம்.
ரெய்னா : இல்ல சார்.. சின்ன சேஞ்ச் ந்னு நீங்க சொல்றீங்க.. ஆனா நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்ததா சொல்றது சரியில்லை…
நபர் : நீங்க புரிஞ்சுக்காம பேசறீங்க.. உங்க ஓவரால் எக்ஸ்பீரியன்ஸை நான் மாத்தலை, உங்க சம்பளத்தை மாத்தல, உங்க எந்த விஷயத்தையும் நான் மாத்தல. சின்னதா ஒரு சேஞ்ச் அவ்ளோ தான்
ரெய்னா : வேண்டாம் சார், அதுவும் வேண்டாம். அதெல்லாம் கடவுளுக்குப் புடிக்காது. பொய் சொல்றது பாவம்.
நபர் : இதெல்லாம் பொய் இல்லம்மா, ஸ்றாட்டஜி… இப்போ சமையல் பண்றோம்.. உப்பு கொஞ்சம் கம்மிய இருந்தா சேத்துக்கறதில்லையா.. அப்படி தான்
ரெய்னா : உப்பு சேத்துக்கிறது தப்பில்ல சார்… ஆனா தப்பு செய்றது தப்பு தான். சம்பந்தம் இல்லாத ரெண்டு விஷயத்தை முடிச்சு போட்டு பேசாதீங்க சார். வேண்டாம்.
நபர் : பொழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க.. உங்களுக்கு வேலை வேணும்ன்னா இப்படிப் பண்ணினா தான் முடியும்
ரெய்னா : வேணாம் சார். பொய் சொல்றது கடவுளுக்கு அருவருப்பானதுன்னு நான் படிச்சிருக்கேன். அதெல்லாம் வேண்டாம்.
நபர் : ஏம்மா.. அவன் உன் தம்பி தானே.. அவனுக்கு உலகம் புரிஞ்சிருக்கு.. நீ இன்னும் புரியாம இருக்கே..
ரெய்னா : நான் உலகத்தைப் புரிஞ்சுக்கறதை விட, கடவுளை புரிஞ்சுக்க விரும்பறேன் சார்.
நபர் : சரி, சரி.. நீங்க கிளம்புங்க… ஏதாச்சும் உங்க புரஃபைலுக்கு ஏற்ற மாதிரி வந்தா சொல்றேன்
( அவர்கள் போகும்போது தனியே ரயனை அழைத்து )
நபர் : ஏம்பா.. நீயாச்சும் எடுத்து சொல்லுப்பா.. அக்கா வேலை இல்லாம இருக்காங்க, ஒரு நல்ல வேலையை வாங்கிக் குடுக்கலாம்ன்னு பாத்தா முரண்டு புடிக்கிறாங்க
ரயன் : அவ எப்பவுமே அப்படி தான் சார்… பைபிள்ல போட்டிருக்கிறதுக்கு எதிரா எதையுமே பண்ண மாட்டா.. அதனால தான் நானும் சைலன்டா உக்காந்திருக்கேன்.
நபர் : சரி.. சரி.. போயிட்டு வாங்க
காட்சி 2
( அம்மாவும் பிள்ளைகளும் )
அம்மா : என்னப்பா… போன காரியம் என்னாச்சு ?
ரயன் : அம்மா எனக்கு மண்டே இண்டர்வியூம்மா.. ரெடி பண்ணிதரேன்னு சொல்லியிருக்காரு. பிரிப்பேர் பண்ணணும்
அம்மா : வெரிகுட்.. உனக்கு என்னாச்சு ரெய்னா
ரெய்னா : ஒண்ணும் சரியாகலேம்மா.. ஜாவா ஓப்பணிங் இருக்கு, பட் டாட்நெட் இல்லை.
அம்மா : ஓ.. சரி, சரி… கவலைப்படாதே… கடவுள் உனக்கு ஒரு நல்ல வேலை குடுப்பாரு.
ரயன் : அவரு பயோடேட்டாவை கொஞ்சம் மாத்த சொன்னாரு.. இவ தான் மாத்த மாட்டேன்னு அடம் புடிக்கிறா.. இல்லேன்னா எப்படியாச்சும் ஒரு வேலை வாங்கி தந்திருப்பாரு..
அம்மா : பயோடேட்டாவை மாத்தறதா ? அப்படின்னா ? புரியலை
ரயன் : அம்மா, கொஞ்சம் அப்படி இப்படி பண்றதும்மா… இருக்கிறதை இல்லாதது மாதிரியும், இல்லாததை இருக்கிற மாதிரியும் போடறது
அம்மா : என்ன சொல்றே ? புரியற மாதிரி சொல்லு. ரெஸ்யூம்ன்னா நாம என்ன பண்ணினோமோ அதை போடறது தானே.
ரயன் : ஆமாம்மா.. நாம என்ன பண்ணினோம், நாம என்ன படிச்சோம், எவ்ளோ வருஷ எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் போடறது தாம்மா பயோடேட்டா… உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணும்ன்னா… எங்க ஸ்கூல் ரிப்போர்ட் கார்ட் மாதிரி..
அம்மா : ரிப்போர்ட் கார்ட்ன்னா அதை மாத்தக் கூடாதுல்ல ? அதை நீ மாத்தறியா ? மாத்தி தான் என் கிட்டே காட்டுவியா ?
ரயன் : அம்மா.. இப்போ அதெல்லாம் எதுக்கு பேசிட்டு… சரி.. தப்பான எக்ஸாம்பிள் சொல்லி நானே மாட்டிகிட்டேன் போல.. இப்போ டூர் போறதுக்கு நூறு ரூபா கேட்டா, நூத்தம்பது ரூபா கேட்டாங்கன்னு பொய் சொல்ற மாதிரி…
அம்மா : என்னடா.. டூர் போறதுலயும் பொய் சொல்லி காசு வாங்கறியா ?
ரயன் : அம்மா… நான் உங்களுக்கு புரியறதுக்காக சொல்றேம்மா… அதுக்காக எல்லாத்தையும் நான் செய்றேன்னு சொல்லாதீங்க…
ரெய்னா : அம்மா.. சிம்பிளா நான் சொல்றேம்மா.. இப்போ நம்ம வாட்ஸப்ல போட்டோ போடும்போ ரொம்ப அழகா தெரியறதுக்காக போட்டோவை எடிட் பண்ணி, லைட் அதிகப்படுத்தி, கலர் அதிகப்படுத்தி, டச் அப் பண்ணி போடறாங்கல்லம்மா அது மாதிரி..
அம்மா : ஆமாமா நான் பாத்திருக்கேன்.. ஏதோ பி.எஸ்12 அப்படி இப்படி ஏதோ ஆப் எல்லாம் இருக்குல்ல. அதை வெச்சு போட்டோ எடுத்தா ஏதோ நடிகை மாதிரி தெரியும். நேர்ல பாத்தா வேற மாதிரி இருப்பாங்க.
ரெய்னா : அதே தாம்மா… இருக்கிறதை அப்படியே போட்டா பிரண்ட்ஸ் லைக் பண்ண மாட்டாங்கன்னு அழகா இருக்கிற மாதிரி காட்டிக்கிறதும்மா… அதுவும் தப்பு தானே
அம்மா : ஆமா.. பின்னே.. நமக்கு கடவுள் தந்த அழகு தான் நமக்கு. அதை ஒரு காரணத்துக்காக தந்திருக்காரு.. அதை ஏன் மாத்தணும். மக்களோட அப்ரிசியேஷன் முக்கியமா, கடவுளோட அக்சப்டன்ஸ் முக்கியமா
ரெய்னா : இப்போ உங்களுக்கு புரிஞ்சுச்சுல்ல.. இப்படி தான். எனக்கு .நெட் தெரியாது, ஆனா தெரியும்ன்னு போட சொல்றாங்க.. முடியாது, இயேசுவுக்கு இதெல்லாம் புடிக்காதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
ரயன் : கடவுள் அப்படியெல்லாம் சொல்லியிருக்காராம்மா ? சும்மா இவளா ஏதாச்சும் யோசிச்சு கிடைக்கிற வேலையையும் கெடுக்கறா. இயேசுவோட காலத்துல ஐடியும் இல்லை, பயோடேட்டாவும் இல்லை, வேலை கிடக்க கஷ்டமும் இல்லை.
அம்மா : என்னடா பேசறே.. கடவுள் தெளிவா சொல்லியிருக்காரு, “உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்”ந்னு அதைத் தான் அக்கா சொல்லியிருக்கா. இல்லாததை இருக்கிற மாதிரி சொல்றது பாவம்.
ரயன் : போங்கம்மா.. நீங்களும் அவ கூட சேர்ந்துட்டு.. ஏன் என்னோட ரெஸ்யூம்ல கூட மாத்த சொன்னாரு..ஓக்கே சொன்னேன்.
அம்மா : டேய்.. என்னடா சொல்றே.. பொய் சொல்லி வேலை வாங்க போறியா ? அப்படி ஒரு வேலை கிடைக்கிறதை விட, வேலை இல்லாம இருக்கிறது நல்லது டா.
ரயன் : இதென்னம்மா பெரிய பொய்.. ஒரு சின்ன சேஞ்ச் அவ்ளோ தான்
அம்மா : இதெல்லாம் சின்ன விஷயம் கிடையாதுப்பா… நீ அப்பப்போ போன்ல கூட பேசறதை கேட்டிருக்கேன், அந்த புக் படிச்சிருக்கேன், இந்த புக் படிச்சிருக்கேன்னு கதை விடறதும், அந்த படம் பாத்திருக்கேன் இது பாத்திருக்கேன்னு கதை விடறதும். அதெல்லாம் தப்புன்னு சொல்லியிருக்கேன்ல…
ரயன் : அம்மா அது பொய் இல்லம்மா.. ஹாம்லெஸ்.. சும்மா பிரண்ட்ஸ் ஐ இம்ப்ரஸ் பண்ண சொல்றது… இட்ஸ் அ வயிட் லை. யாருக்கும் இதனால பாதிப்பே இல்லை.
அம்மா : அப்படி இல்லப்பா.. பொய்ல வயிட் லை, பிளாக் லைன்னு ஏதும் இல்லை. அதெல்லாம் தவறான போதனை. பொய் ந்னா பொய். அது சாத்தானோட விஷயம்.. அவ்ளோ தான்.
ரயன் : அம்மா.. ஒரு சின்ன பொய்… ஜஸ்ட் ஒன் லை…
அம்மா : ஆதியில பாம்பு சொன்னது ஒரு சின்ன பொய் தான். பாவம் பூமி முழுசும் நிறைஞ்சுடுச்சா. இல்லையா ? அனனியா சப்பிரா எத்தனை பொய் சொன்னாங்க ? ஒரே ஒரு பொய்.. உயிரு போயிடுச்சா இல்லையா ? ஒரு துளி விஷம் போதும்பா ஒரு டம்ப்ளர் பாலை முழுசும் விஷமாக்க. இதெல்லாம் பாவம். நமக்கு வேலை வேணும்ன்னு சொர்க்கத்தை இழந்திடக் கூடாது.
ரயன் : இந்த காலத்துல அதெல்லாம் கஷ்டம்மா
அம்மா : கஷ்டமான விஷயத்தை தான் கடவுள் நமக்கு ஈசியா மாத்தி தருவாரு. அவரை நம்பினா போதும். உனக்கு என்ன கிடைக்கணும்ன்னு கடவுள் நினைக்கிறாரோ, அது உனக்குக் கிடைக்கும். எது கிடைக்கக் கூடாதுன்னு இருக்கோ அது கிடைக்காது. நாம குறுக்கு வழியில போய் எதையும் பறிக்க நினைக்கக் கூடாது சரியா
ரயன் : ம்ம்.. சரிம்மா.. அப்போ நானும் அவர் கிட்டே போன் பண்ணி வேண்டாம்ன்னு சொல்லிடறேன்.
அம்மா : கண்டிப்பா.. அதெல்லாம் நமக்கு வேண்டாம். நேர்மையா கடவுள் நமக்கு எதைத் தராரோ அது போதும். உள்ளதை உள்ளதுன்னும், அல்லதை அல்லதுன்னும் சொல்லிப் பழகணும் சரியா….
ரயம் : சரிம்மா…
*