இயேசுவளரவளரஞானத்திலும், உடல்வளர்ச்சியிலும்மிகுந்துகடவுளுக்கும்மனிதருக்கும்உகந்தவராய்வாழ்ந்துவந்தார்.
( லூக்கா 2:52 )

*
நம்முடைய வாழ்க்கை கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையாய் அமைய வேண்டும் என்பது தான் கிறிஸ்தவப் போதனைகளின் அடிப்படை. அதற்காகத் தான் இயேசு பூமிக்கு வந்தார். ஒரு மனிதன் எப்படி இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை அவர் தனது வாழ்க்கை மூலமாக வாழ்ந்து காட்டினார்.
அவர் வளர வளர ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்தார் என்றும், கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார் என்றும் விவிலியம் சொல்கிறது.
நாம் வளரும் போது எப்படி வளர வேண்டும் என்பதை இந்த வசனம் நமக்கு மிகத் தெளிவாக விளக்குகிறது.
நான்கு நிலைகளில் நாம் வளரவேண்டும்.
- ஞானத்தில் வளரவேண்டும்
- உடல் வளர்ச்சியில் வளரவேண்டும்
- இறைவனுக்கு உகந்தவராய் வளரவேண்டும்
- மனிதருக்கு உகந்தவராய் வளரவேண்டும்.
ஞானத்தில் வளர்வது எப்படி ? இறைவனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்கிறது பைபிள். உலகக் கல்வி நமக்குத் தருவது அறிவு ! இறைவன் நமக்குத் தருவது ஞானம். அறிவை நாம் வாசிப்பதன் மூலமாகக் கற்றுக் கொள்ளலாம், ஞானத்தை நாம் நேசிப்பதன் மூலமாகத் தான் கற்றுக் கொள்ள முடியும். அதுவும் இறைவனை நேசிப்பதன் மூலமாகத் தான் கற்றுக் கொள்ள முடியும்.
இந்த வாலிப வயதில் நாம் இறைவனுக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழவேண்டும். இறைவனுக்குப் பயப்படுவது என்பது என்ன ? இறைவன் மிகப்பெரிய கொடுங்கோலராய் இருக்கிறார், அவரைப் பார்த்து நாம் பயந்து நடுங்க வேண்டும் என்பதல்ல.! இந்தப் பயப்படுதல், அவருக்கு முழுமையாய்ப் பணிந்திருப்பதைப் பேசுகிறது.
எதையும் இறைவனிடம் அற்பணிப்பதைப் பேசுகிறது. நமது ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதைப் பேசுகிறது. எப்படி ஒரு அடிமையானவன், அனைத்தையும் தன் தலைவனுக்குப் பயந்து செய்வானோ. எப்படி நல்ல பையன் தன் தந்தைக்குப் பயந்து அனைத்தையும் செய்வானோ, அதே போல நாம் இறைவனுக்குப் பயந்து அவரது போதனைகளின் படி நடக்க வேண்டும். இறைவனை மீறினால் நமக்குக் கிடைப்பது நிலையான நரகம் என்பதைப் புரிய வேண்டும்.
சாலமோனுக்கு. ஞானம் இருந்தது, அது தான் மக்களுக்கு நீதி வழங்கும் பணியில் அவரை சிறக்க வைத்தது. இயேசுவுக்கு ஞானம் இருந்தது, அது தான் அவரை எல்லா சூழல்களையும் சிறப்பாய் எதிர்கொள்ள வைத்தது. நாம் முதலில் தேடவேண்டியது ஞானமே, அதற்காய் இறைவனில் சரணடைவோம்.
இரண்டாவது, உடல் வளர்ச்சியில் வளரவேண்டும். ஏன் உடல் வளர்ச்சியைப் பற்றி பைபிள் பேசுகிறது ? அது ஆன்ம வளர்ச்சியைத் தானே பேசவேண்டும் என பலர் நினைக்கலாம். நமது உடல் இறைவனின் ஆலயம் என்கிறது பைபிள். உடலை வலிமையாக, நேர்த்தியாக, தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அது பேசுவதில் வியப்பில்லை. அதே போல, பைபிள் நமக்கான வாழ்வியல் நெறி, ஆன்மிக வழிகாட்டி. அது யதார்த்தங்களின் மீதே போதனைகளை அமைக்கிறது.
நாம் நம்முடைய இளம் வயதில் எப்படி உடலைப் பாதுகாப்பது ? உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். உடலைக் கெடுக்கும் துரித உணவுகளுக்கு விடைகொடுப்போம். வீட்டில் அன்பாகச் சமைத்துத் தரும் உணவுகளை மட்டுமே உண்போம். தேவையான உடற்பயிற்சி நமது உடலையும் மனதையும் வலுவாக்கும். எனவே சரியான உடற்பயிற்சியைச் செய்வோம்.
நமது உடலை எந்த விதமான சிற்றின்பத் தேவைகளுக்காகவும் பாவத்தில் புரட்டாமல் இருப்போம். டிஜிடல் மோகத்தில் விழும்போதோ, போதை போன்றவற்றை அணுகும் போதோ நாம் உடலை அவமானப்படுத்துகிறோம். நம் உடலை நாம் களங்கப்படுத்தும் போது, கடவுளையே அவமானப்படுத்துகிறோம்.
மூன்றாவது, கடவுளுக்கு உகந்தவராய் வாழ்தல். நமது வாழ்க்கை கடவுளுக்குப் பிரியமானதாய் இருப்பதே கிறிஸ்தவ போதனைகளின் அடிநாதம். கடவுளுக்கு உகந்தவராய் வாழ்வது எப்படி ? மிக எளிது. ஒவ்வொரு செயலை நாம் செய்யும் போதும் “இயேசு இந்த செயலை செய்வாரா ?” “இயேசு இந்தச் செயலை இப்படித் தான் செய்வாரா ? என யோசித்து செய்ய வேண்டும். எந்த ஒரு சொல்லை பேசும் போதும், இயேசு இந்த வார்த்தையைப் பேசுவாரா என யோசிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தைச் சிந்திக்கும் போதும், இயேசு இந்த விஷயத்தை இப்படித் தான் சிந்திப்பாரா என யோசிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழும்போது நாம் கடவுளுக்கு உகந்தவராய் வாழ்கிறோம் என்று அர்த்தம். எப்போதும் கடவுளின் புகழைப் பாடுவதோ, அவரது பெயரை உச்சரிப்பதோ, வார்த்தைகளால் இயேசுவை அறிவிப்பதோ அவருக்குப் பிரியமான வாழ்க்கையல்ல. நமது சமூக வீதியில் ஏழை எளியவர்களுக்கு உதவும் போது, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் போது, நோயாளிகளின அருகில் அமர்ந்து அவர்களின் துயரக் கதைகளை அன்புடன் கேட்கும் போது – நாம் இறைவனுக்குப் பிரியமானவராய் வாழ்கிறோம் என்று பொருள். அப்படித் தான் இயேசு வாழ்ந்தார்.
நான்காவது, மனிதருக்கு உகந்தவராய் வாழ்தல். நாம் இறைவனுக்குப் பிரியமானவராய் வாழவேண்டுமெனில் மனிதருக்கு உகந்தவராய் வாழவேண்டியது அவசியம். இயேசுவே சொல்கிறார், கண்ணில் காணும் சகோதரனை நேசிக்காமல் கண்ணில் காணாத கடவுளை நேசிக்க முடியாது என்று. இளம் வயதினராகிய நாம் முதலில் பெற்றோருக்கு முழுமையாய் கீழ்ப்படிபவர்களாய் இருக்க வேண்டும். நம்மைச் சார்ந்திருப்போருக்கு நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைச் சிதைக்காதவர்களாக இருக்க வேண்டும். எங்கும் எல்லா இடங்களிலும் மனிதர்கள் நம்மை நேசிக்கும்படி வாழவேண்டும்.
இந்த நான்கு விஷயங்களும் இருந்தால், நமது வாழ்க்கை இறைவன் விரும்பிய வாழ்க்கையாய் அமையும். இயேசுவைப் போல வாழ வேண்டுமெனில், இயேசுவைப் போல வளரவேண்டியது அவசியம்.
இயேசுவைப் போல் வளர்வோம்
இயேசுவைப் போல் வாழ்வோம்
இயேசுவோடு வாழ்வோம்
நன்றி.
*