Posted in Articles, Christianity, WhatsApp

என் மேலுடையைத் தொட்டவர் யார்?

என் மேலுடையைத் தொட்டவர் யார்? ( மாற்கு 5 : 30 )

தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகள் சாகக் கிடக்கிறாள். இயேசு வந்து தொட்டால் சுகம் கிடைக்கும் என்பது யாயிரின் நம்பிக்கை. ஒவ்வொரு வினாடியும் முக்கியமானது. பரபரப்பான சூழல். மரணிக்கும் முன் சென்றால் தான் ஏதாவது பலன் உண்டு. எனவே இயேசுவின் காலில் விழுந்து வேண்டுகிறார் அவர். இயேசுவும் அவருடன் செல்கிறார். 

இயேசுவைக் கண்டதும் கூட்டம் சேர்ந்து விட்டது. அவர்கள் அவரை நெருக்கியடித்தார்கள். மக்கள் கூட்டத்துக்கு நடுவே சென்று கொண்டிருக்கிறார் இயேசு. திடீரென ஒரு பெண் அவரைப் பின் தொடர்கிறார். பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் கஷ்டப்படும் பெண் அவர். கிட்டத்தட்ட மருத்துவர்கள் கைவிட்டனர். சொத்துகளெல்லாம் மருத்துவத்திலேயே கரைந்தும் விட்டது.  

அவள் தொழுகைக் கூடத் தலைவி அல்ல. உயரிய இருக்கைகளில் இருப்பவளல்ல. இயேசுவின் முன் வந்து நிற்கும் அருகதை இல்லையென சமூகத்தால் ஒதுக்கப்பட்டவள். இயேசுவின்  ஆடையின் விளிம்பைத் தொட்டாலே நலமாவேனும் எனும் நம்பிக்கை மட்டும் அவளுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது.  கூட்டமோ இயேசுவை நெருக்கியடிக்கிறது. அந்தக் கூட்டத்தினரிடையே வந்து இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டாள் அவள்.

எரியும் நெருப்பில் பெரு மழை பொழிந்தது போல அவளுக்குள் மாற்றங்கள் கண நேரத்தில் நிகழ்ந்தன. அவள் நலமானாள். எத்தனையோ பேர் இயேசுவைத் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். நெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கிடையே தனது மெல்லிய தொடுதலை இயேசு அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாள் அவள். ஆனால் இயேசுவோ நின்றார்,

“என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார்.  சீடர்கள் சிரித்தனர். ‘தொட்டது யாரென்றா கேட்கிறீர். விட்டால் உம்மைக் கீழே தள்ளிவிடுமளவுக்கல்லவா கூட்டம் நெருக்குகிறது. எத்தனையோ கைகள் உம்மைத் தொட்டன, எத்தனையோ உடல்கள் உம்மை நெருக்கின, இதென்ன கேள்வி ? என மனதில் நினைத்தனர். 

இயேசு பார்த்தார். அவரிடமிருந்து வல்லமை வெளியேறியதை அவர் உணர்ந்திருந்தார். இது நம்பிக்கையின் விரல் கொண்டு அந்தப் பெண்மணி மென்மையாய்ப் பறித்தெடுத்த வல்லமை. இயேசு விரும்பிக் கொடுத்த வல்லமை அல்ல, அவள் வலிந்து எடுத்த வல்லமை. அந்தப் பெண் நடுங்கியபடியே வந்து நடந்ததைச் சொன்னாள். 

இயேசு சொன்னார், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” . சிரித்த சீடர் குழம்பினர். இத்தனை கூட்டத்தில் இவள் மட்டுமா இயேசுவைத்  தொட்டாள் ! ?

கூட்டம் இயேசுவை நெருக்கியது, அவளோ

இயேசுவை நெருங்கினாள்.

நெருக்கியடிக்கும் கூட்டத்தில் செல்வதற்கும், இயேசுவை நெருங்கிச் செல்வதற்கும் இடையேயான மாபெரும் வித்தியாசத்தை அந்த நிகழ்வு விளக்குகிறது.  

வேடிக்கை பார்க்கும் மனிதருக்கும் , விசுவாசத்தில் பார்க்கும் மனிதருக்கும் இடையேயான வேறுபாட்டை அந்த நிகழ்வு புரிய வைக்கிறது.

எல்லோரும் போகிறார்கள் என கூட்டத்தோடு கூட்டமாகச் செல்வதல்ல, இதயத்தால் தனி நபராக இயேசுவை நெருங்கிச் செல்வதே முக்கியமானது. சாதாரண கூட்டத்தின் வன்மையான அழுத்தங்களைக் கூட இயேசு கவனிப்பதில்லை, ஆனால் நெருங்கி வருபவரின் மெல்லிய தொடுதலைக் கூட அவர் உணர்ந்து கொள்கிறார். 

நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது ?

இயேசுவை நெருக்கும் கூட்டத்திலா ?

இயேசுவை நெருங்கும் கூட்டத்திலா 

ஆலயத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நான் சத்தமிட்டுத் திரிகிறேனா, இதயத்தால் இறைவனோடு ஒரு மெல்லிய உரையாடலின் மூலம் உறவாடுகிறேனா ? 

இயேசுவின் தொடுதல் கூட தேவையில்லை, 

இயேசுவைத் தொட்டாலே போதும், எனும் உயரிய விசுவாசத்தை உள்ளுக்குள் வைத்திருக்கிறேனா ?

ஆண்டவரைத் தொடுதல் கூட தேவையில்லை

அவரது ஆடையைத் தொட்டாலே போதுமெனும் உடையா விசுவாசம் உடையவனாய் இருக்கிறேனா ?

புரிந்து கொள்வோம்.

இயேசுவின் அன்பினைப் பெற, ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை

நமது மெல்லிய அன்பின் தொடுதலே போதுமானது

*

சேவியர்

Posted in Articles, WhatsApp

நெருக்கப்படும் வார்த்தை

உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள் ( மாற்கு 4 :19 )

“ நான் சொன்னதை திரிச்சு வேற மாதிரி சொல்லிட்டாங்க “ ! 

“ நான் அதை மீன் பண்ணவே இல்லை”. 

“வேண்டுமென்றே என் கருத்து தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது” 

இப்படியெல்லாம் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் அடிக்கடி பேட்டி கொடுப்பதைக் கேட்க நேர்கிறது. சில சூழல்களில் பேசப்படுகின்ற வார்த்தைகள் வேறு சூழலில் வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பது தான் அதன் பொருள். 

இயேசுவும் இறைவார்த்தைகளைப் பற்றிய ஒரு அற்புதமான உவமையைச் சொன்னார். விதைப்பவன் விதைக்கிறான். சில விதைகள் வழியோரம் விழுகின்றன, சில பாறை நிலத்தில் விழுகின்றன, சில முட்செடிகளிடையே விழுகின்றன, சில நல்ல நிலத்தில் விழுகின்றன. 

விதை என்பது இறைவார்த்தை. விதைப்பவர் இறைமகன். வழியோர நிலம் போன்ற மனிதர்கள் வார்த்தைகளைக் கேட்கலாமா ? வேண்டாமா எனும் சந்தேகத்தில் இருக்கும் போதே சாத்தான் வந்து அதைக் கொத்திச் செல்கிறான். அதன்பின் விதை முளைக்கும், கனிகொடுக்கும் எனும் பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

பாறை நில விதை, சட்டென முளைக்கிறது. உள்ளுக்குள் வேரிறங்க முடியாமல் இதயம் இறுகிக் கிடக்கிறது. வேர்களை நிராகரித்த முளைகள் நிலைப்பதில்லை. அவை கருகி விடுகின்றன, அழிந்து விடுகின்றன. அந்த விதைகளினால் அந்த நிலத்துக்கோ, பிறருக்கோ எந்த பயனும் விளைவதில்லை. 

நல்ல நிலத்தில் விழுந்த விதை, நிலத்தின் தன்மைக்கு ஏற்ப முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்காய் பயனளிக்கிறது. 

இவற்றுக்கு இடையே, முள்ளிடையே விழுகின்ற விதைகள் வருகின்றன. இவற்றை நிலம் ஏற்றுக் கொள்கிறது. முளைகள் விடுகின்றன. வேர்கள் விடுகின்றன. ஆனால் பயன் கொடுக்கவில்லை. 

இயேசு சொல்கிறார், “உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து “அவ்வார்த்தையை” நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்” என்று.  நமது வாழ்க்கையில் நாம் இந்த நிலையில் தான் பெரும்பாலும் தவிக்கிறோம்.  

இறைவார்த்தைகளுக்கு நம்மிடம் குறைவே இல்லை. அவை தாராளமாய் வருகின்றன. இறைவார்த்தை நம்மிடம் வரும்போது முழுமையாய் வருகிறது. முளைக்கிறது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அந்த இறைவார்த்தை நமது சுயநலத்தின் தேடல்களால் சேதம் அடைகிறது. 

உலகக் கவலை இறைவார்த்தையை சற்றே மாற்றுகிறது. செல்வ மாயை அதை இன்னும் கொஞ்சம் மாற்றுகிறது. ஏனைய தீய ஆசைகள் அதை மீண்டும் மாற்றுகிறது. கடைசியில் இறைவார்த்தையானது குறைவார்த்தையாகி பதரைப் போல சிதறிவிடுகிறது. 

இறை வார்த்தை நம் வாழ்க்கையை மாற்றுவதற்குப் பதில்,

நம் வாழ்க்கை, 

இறை வார்த்தையை மாற்றுகிறது !

இறைவார்த்தை நெருக்குதலுக்கு உள்ளாகிறது. அதன் தீவிரம் சமரசம் செய்யப்படுகிறது. ‘இந்த காலத்துல இறைவார்த்தையை இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும்’ எனு நெருக்குதல் அதை சாய்க்கிறது. “இந்த வார்த்தையை முழுமையாய்ப் பின்பற்றத் தேவையில்லை” எனும்போது அது காயப்படுகிறது. கடைசியில் சிதிலமடைந்த இறைவார்த்தை பயனற்ற வாழ்க்கையை பரிசளிக்கிறது.

உதாரணமாக, “ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று” என்பது இறைவார்த்தை. “பார்ப்பது தவறில்லை” என்பது தீய ஆசை. அது இறை வார்த்தையின் வீரியத்தைக் குறைக்கிறது. அந்த இறைவார்த்தை பின் நமது வாழ்க்கையில் முழுமையான பயனை அளிப்பதில்லை.

முள்ளை முள்ளால் எடுப்போம் !

நமது மனம், முள்நிலம். 

அந்த முள்நிலம் இறைவார்தைகளை கறைபடுத்துகிறது. பாவத்தில் அமிழ்த்துகிறது.

இயேசுவின் சிரசில்  முள்முடி

அந்த முள்முடி நமக்காய் சூட்டப்படுகிறது, மீட்புக்குள் நிறுத்துகிறது.

இறைவனின் முள்முடி, நமது வாழ்க்கையின் முட்களின் முனைகளை ஒடிக்கட்டும். இறைவார்த்தைகள் நம் இதயத்தில் விழுந்து முழுப் பயனையும் அளிக்கட்டும்

*

சேவியர்

Posted in Articles, Christianity, WhatsApp

அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்

அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்? ( மாற்கு 4 : 35 )

மகேஷ், பெரிய நிறுவனம் ஒன்றின் சேல்ஸ் துறைத் தலைவர். இன்னொரு ஒரு பெரிய நிறுவனத்தில் விற்பனை விஷயமாக பேசுவதற்குச் செல்ல வேண்டும். குழப்பமாக இருந்தார் மகேஷ். என்ன செய்வது , என்ன பேசுவதென்று தெரியவில்லை. அப்போது, திடீரென சி.ஈ.ஓ அழைத்தார். அந்த நிறுவனத்தில் சென்று என்னென்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதையெல்லாம் அவரிடம் சொன்னார்.

இப்போது மகேஷின் குழப்பம் முழுமையாகத் தீர்ந்து விட்டது. சி.ஈஓ வே சொல்லிவிட்டதால் அதை நம்பிக்கையுடன் செயல்படுத்தலாம். ஒருவேளை அந்த திட்டம் தோல்வியடைந்தாலும் சி.ஈ.ஓ பார்த்துக் கொள்வார் எனும் உத்தரவாதம் உண்டு. “நீங்க சொன்னதைத் தான் நான் செய்தேன்” என நியாயப்படுத்தவும் மகேஷுக்கு வாய்ப்பு உண்டு. யார் சொல்கிறார்கள் என்பது முக்கியம் !

ஒருமுறை இயேசு சீடர்களிடம், ‘அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்’ என அழைத்தார். சீடர்களும் அவரோடு சென்றார்கள். பயணத்தில் இயேசு அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார், கடலோ கொந்தளித்துப் பொங்கி ஆக்ரோஷம் காட்டியது. புயல் படகை மோத உலர்ந்த படகுக்குள் ஈரம் வந்து நிறைந்தது. சீடர்களுக்குப் பயம் வர, அவர்கள் தலையணையில் தலைவைத்து நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருந்த இயேசுவை எழுப்பினார்கள். இயேசு எழுந்து பார்த்தார், கோரத் தாண்டவம் ஆடும் நீரைப் பார்த்து, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். கடல் அமைதியானது.

சாகப் போகிறோம் என பயந்து நடுங்கிய சீடர்களைப் பார்த்து இயேசு சொன்னார், “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?”. கடலில் இரைச்சலைக் கண்டு பயந்த அவர்கள், கடலின் அமைதியைக் கண்டு பேரச்சம் கொள்கின்றனர்.

கடல் இரைவது இயற்கையான நிகழ்வு,
அது அச்சமூட்டுகிறது.
கடல் கீழ்ப்படிவது அதிர்ச்சியான நிகழ்வு
அது பேரச்சமூட்டுகிறது.

நமது வாழ்க்கையிலும் வருகின்ற அச்சமூட்டும் நிகழ்வுகளை, அமைதியாய் மாற்ற இயேசுவால் முடியும். ஆனால் அதற்கு ஒரே ஒரு முன் நிபந்தனை உண்டு. “அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்” என அழைப்பது இயேசுவாக இருக்க வேண்டும். இயேசு அழைக்கும்போது, அவர் அழைக்கும் இடத்துக்குச் சென்றால் இயேசு முழுமையான பாதுகாப்பை அளிக்கிறார்.

யோனா, கடவுளின் அழைப்புக்கு எதிர்திசையில் சென்றார்,
கடல் அவரை கபளீகரம் செய்தது.
சீடர்கள் இயேசுவின் அழைப்புக்கு உடன்பட்டுச் சென்றனர்,
கடல் கைகட்டி நின்றது.

இயேசு அழைக்கும் இடத்துக்கு இயேசுவோடு செல்லும்போதும் புயல் வந்து புஜவலிமை காட்டலாம், படகு அலைக்கழிக்கப்படலாம். ஆனால் இயேசுவின் வார்த்தை எந்த கொந்தளிப்பையும் நிசப்தமாக்கும்.

அலை வாழ்வைத் தாண்டினால் தான் ,
நிலை வாழ்வு !

நமது வாழ்க்கையில் இயேசு நம்மை எங்கே அழைக்கிறார் ? எதற்காக அழைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு அவரோடு பயணிக்கத் தயாராவோம். நாம் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்பதில் அவர் அக்கறை கொண்டிருக்கிறார். எனவே தான், “அக்கரைக்கு போ” என்று சொல்லவில்லை, “அக்கரைக்குச் செல்வோம் வா” என்கிறோம்.

செவிமடுப்போம், உடன் நடப்போம்

*

சேவியர்

Posted in Articles, Christianity, WhatsApp

நான் என்ன கேட்கலாம்?

“நான் என்ன கேட்கலாம்? ( மார் 6 : 24 )

ஒருநாள் மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து மகனை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தேன். பள்ளிக்கூட கேட்டுக்கு வெளியே பெற்றோர் கூட்டம் கூட்டமாக நின்று பிள்ளைகளை விட அதிகமாய் படிப்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சி கண்ணில் விழுந்து திடுக்கிட வைத்தது. ஒரு அப்பா அவனது பையனின் தலையில் வேகமாக ஒரு அடி வைத்தார்.

“எல்லாரும் காப்பியடிக்கிறாங்கன்னா நீயும் அடிக்க வேண்டியது தானே. நீயும் புக்கை எடுத்து ஒளிச்சு வெச்சிருக்க வேண்டியது தானே. ” என்று கேட்டபடி கோபத்தில் திட்டிக்கொண்டிருந்தான். அந்தப் பையன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். “அறிவு கெட்டவன் .. இதெல்லாம் எங்க உருப்படப் போவுது ” என்று சொல்லிக் கொண்டே அவனையும் இழுத்துக் கொண்டு அவர் போய்விட்டார்.

பிள்ளைகளின் மனதில் எத்தகைய மதிப்பீடுகளை நாம் கட்டியெழுப்புகிறோம் என்று நினைக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. விதைகளில் நஞ்சைச் செலுத்தி முளைக்க வைத்தால், நாளை அந்த விதைகளின் விளைச்சல் விஷத்தைத் தானே தரமுடியும் ?

ஏரோது மன்னனின் முன்னாள் நடனமாடுகிறாள் ஏரோதியாளின் மகள். ஏரோது மன்னன் கவர்ந்தெடுத்த தனது சொந்த சகோதரனின் மனைவி தான் இந்த ஏரோதியாள். நாட்டியத்துக்கு பெரிய தலைகள் பலர் வந்திருக்கின்றனர். நாட்டியத்தின் முடிவில் மெய்மறந்த ஏரோது மன்னன் கேட்டான், “உனக்கு என்ன வேண்டுமோ கேள், தருகிறேன்”. சிறுமி கள்ளம் அறியாதவள். அவள் தாயிடம் சென்று “நான் என்ன கேட்கலாம் ?” என்று கேட்டாள்.

“நான் என்ன செய்யலாம்” எனக் கேட்கும் பிள்ளைகளை உடைய பெற்றோர் பேறு பெற்றவர்கள். பெற்றோரின் விருப்பப்படி தங்களுடைய செயல்களை அமைத்துக் கொள்ளும் பிள்ளைகள் பெற்றோரைக் கனம் பண்ணுகின்றனர். ஆனால் பிள்ளைகளைத் தவறான வழிநடத்தும் பெற்றோர் சபிக்கப்பட்டவர்கள். ‘சின்னஞ் சிறிய’ சகோதரர் ஒருவருக்கு இடறலாய் இருப்பவருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டிக் கடலில் போடுவது நல்லது என்றார் இயேசு.

இங்கே சிறுமியின் கேள்விக்கு ஏரோதியாளின் வஞ்சக மனம் பதில் தேடியது. திருமுழுக்கு யோவான் அவர்களது பாவ வழியில் குறுக்கிட்டு எச்சரிக்கை செய்து வந்தவர். தவறான உறவைக் கொண்டிருப்பது மன்னனே ஆனாலும் தவறென சுட்டிக்காட்டும் முதுகெலும்பு யோவானிடம் மட்டுமே இருந்தது. அந்தக் குரலை அழித்தால் தன்னுடைய தகாத உறவுக்கு தடையேதும் எழுவதில்லை என நினைத்தாள். போதாக்குறைக்கு தன் திருட்டுக் கணவன் வேறு யோவானின் போதனைகளின் மீது ஈடுபாடு கொண்டிருக்கிறான். எப்போது மனம் மாறி தன்னை உதறுவானோ தெரியாது. எதற்கு வம்பு ? அந்த யோவானை இல்லாமல் செய்ய, இதோ ஒரு வாய்ப்பு என அவளது வல்லூறுக் சிந்தனைகள் கணக்குப் போட்டன.

“யோவானின் தலையைக் கேள்” என்றாள் தாய் ! மகள் தாயின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தாள். யோவானின் தலை வெட்டப்பட்டது. தனது வன்மத்தைத் தீர்க்க, ஒரு பிஞ்சு மனதில் தவறான பாடத்தை விதைத்தாள் அன்னை.

நாமும் பல வேளைகளில் நம்மிடம் ஆலோசனை கேட்கும் பிள்ளைகளிடம் அவர்களுக்கு நல்லது எது ? இறைவன் பார்வையில் நல்லது எது என்பதைப் பார்க்காமல், நமது உடைபட்ட கனவுகளை மீண்டெடுக்கும் சந்தர்ப்பமாக அவற்றைப் பார்க்கிறோம். நமது கல்வியின் ஏக்கங்கள், நமது பொருளாதார நோக்கங்கள், நமது புகழின் எதிர்பார்ப்புகள் இவற்றையெல்லாம் குழந்தைகளின் தலையில் சுமத்த நினைக்கிறோம். அவர்களுடைய தேடல்களுக்கு தடைக்கல்லாய் இருக்கிறோம்.

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், என்றார் இயேசு. அவரிடம் பிள்ளைகளை வர அனுமதிக்க வேண்டும். பிள்ளைகள் அவருடன் வளர அனுமதிக்க வேண்டும். அதுவே ஒரு பெற்றோராக நாம் செய்ய வேண்டியது. அவர்கள் நம் குழந்தைகளல்ல, நம் மூலமாக வந்த குழந்தைகள் எனும் உணர்வு இருக்க வேண்டும். காரணம், இறைவனே அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார். எனவே, அவர்கள் இறைவனின் விருப்பத்தின் படி வளர்வதே மிகச் சரியானதாகும்.

“நான் என்ன கேட்கலாம்? ( மார் 6 : 24 ) எனக் கேட்கும் பிள்ளைகளிடம்
இயேசுவைக் கேட்கச் சொல்லுங்கள். !
இயேசுவிடம் கேட்கச் சொல்லுங்கள்.

பிள்ளைகளை விண்ணக வாழ்வின் பாதைகளுக்காய் தயாராக்குவதே நமது முதல் பணீயாய் இருக்க வேண்டும்.

“அத்திமரம் ஒலிவப்பழங்களையும் திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே, உப்பு நீர்ச் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது” என்கிறது பைபிள் ( யாக்கோபு 3 : 12 ) ! சரியான வழியில் பிள்ளைகளை வளர்ப்போம்.

*

சேவியர்

Posted in Articles, Christianity, WhatsApp

போய்ப் பாருங்கள்

உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்”
மாற்கு 6 : 38

“உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” ! அந்த அளவுக்கு இயேசுவையும், அவரது சீடர்களையும் சுற்றி மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாய் இருக்கிறது. இறை வார்த்தையின் மீது பசி தாகத்தோடு வருபவர்களை விட தனது பசியொன்றும் பெரிதல்ல என செயலாற்றுகிறார் இயேசு. ஆனால் சீடர்களின் பசி அவரை கவலைக்குள்ளாக்குகிறது. “பாலை நிலத்தில் தனிமையான இடத்தில் போய் ஓய்வெடுங்கள்” என்கிறார். அவர்கள் செல்கின்றனர்.

ஆனால், அவர்கள் அந்த இடத்துக்குப் போய்ச் சேரும் முன்னே மக்கள் கூட்டம் ஆவலின் கால்களோடு ஓடிப் போய் அந்த இடத்தை அடைகிறது. “யப்பா.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடமாட்டீங்களா ? ” என இயேசு கேட்கவில்லை. அவர்கள் ஆயனில்லாத ஆடுகள் போல இருப்பதைக் கண்டு கவலை கொள்கிறார். அவர்களுக்குப் போதிக்கிறார்.

இப்போது வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்குப் பசி வருகிறது. ‘இவங்களை அனுப்பிடலாமே, எங்கேயாச்சும் போய் சாப்பிடட்டும்’ என்கிறார்கள் சீடர்கள். பிரச்சினையைக் கைகழுவி விடலாமே என்பது அதன் சாராம்சம். இயேசுவோ, ‘நீங்களே சாப்பாடு குடுங்களேன்’ என்கிறார். எல்லாருக்கும் சாப்பாடு குடுக்க வேண்டுமெனில் 200 தெனாரியம் தேவைப்படும், அப்படி செலவு செய்து போய் வாங்குக் குடுக்கவா சொல்றீங்க ? சீடர்கள் கேட்டார்கள். அப்பொது இயேசு சொன்னது தான், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்” எனும் வாக்கியம்.

வந்திருக்கும் கூட்டத்தோடு ஒப்பிட்டால் கையிலிருப்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போலத் தான். ஐந்து அப்பமும் இரண்டு மீனும் தான் இருக்கிறது. ரெண்டு பேரு வேணும்ன்னா சாப்பிடலாம், இங்கே வந்திருக்கிறதோ ஐயாயிரம் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் ! சீடர்களின் புருவங்கள் பேசின.

இயேசு சொன்னார், “எல்லாரையும் வரிசையாக உட்காரச் சொல்லுங்கள். “. கையில் அப்பமில்லை, வாங்கி வர நேரமும் இல்லை. ஆனாலும் சீடர்கள் தயங்கவில்லை. எல்லோரையும் பந்தியில் அமரச் செய்தார்கள். இயேசு அந்த ஐந்து அப்பம் இரண்டு மீனை கைகளில் எடுத்தார், கடவுளைப் போற்றினார் பிட்டுக் கொடுத்தார். சீடர்கள் எல்லோருக்கும் பகிர்ந்தளித்தார். கொடுத்தது போக மீதி இருந்ததை பன்னிரண்டு கூடைகளிலும் எடுத்தார்கள். பசி ஆறுமா என சந்தேகப்பட்டவர்களுக்கு விருந்து கிடைத்த திருப்தி.

இயேசுவின் கரங்களில் வரும்போது வெறும் ஐந்து அப்பங்கள் ஐயாயிரம் ஆண்கள், போதும் போதுமென சாப்பிடும் அளவுக்கு மாறிவிடுகிறது. நமது கண்களுக்கு நடக்கவே நடக்காது என கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யும் விஷயங்கள் கூட இறைவனின் தொடுதலால் மிக எளிதாக நடந்தேறிவிடுகின்றன.

எவ்வளவு இருக்கிறது என்பதல்ல‌
யாரிடம் இருக்கிறது என்பது தான் முக்கியம்.

எங்கே இருக்கிறோம் என்பதல்ல‌
யாரோடு இருக்கிறோம் என்பது தான் முக்கியம்.

எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல‌
யாரிடம் கொடுக்கிறோம் என்பது முக்கியம்.

எதிரே எத்தனைபேர் என்பதல்ல‌
நம்முடன் யார் என்பது தான் முக்கியம்.

இயேசுவின் கரங்களில் கொடுக்கும் போது, நம்மிடம் இருக்கும் சிறு துளி வெளிச்சம் விரிந்து பரவுகிறது. நம்மிடம் இருக்கும் ஒரு துளி தண்ணீர், அருவியாகி ஆர்ப்பரிக்கிறது. நம்மிடம் இருக்கும் ஒரு துளி நேசம் பொங்கிப் பிரவாகம் எடுக்கிறது.

இயேசு சொல்கிறார், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்” ! நம்மிடம் இருக்கின்ற திறமைகள் என்ன ? நம்மிடம் இருக்கின்ற நேரம் என்ன ? நம்மிடம் இருக்கின்ற பொருளாதாரம் என்ன ? “போய்ப் பாருங்கள்” என்கிறார் இயேசு.

எதுவுமே இல்லையென முடங்கிக் கிடந்தால் அதிசயங்களைக் காண முடியாது.
இருப்பதை எல்லாம் இறைவனிடம் கொடுக்கும் போது அதிசயங்களைத் தவிர்க்க முடியாது.

நமக்காகச் சேர்த்து வைக்கும் போது எதுவும் பெருகுவதில்லை, பிறருக்காய் கொடுக்கும் போது தான் அதிரடியாய்ப் பெருகுகிறது. ‘கொடுங்கள் அப்போது கொடுக்கப்படும்’ என்பதே இறைவன் வாக்கு.

போய்ப் பாருங்கள் ! எனும் இறைவனின் வார்த்தையை ஏற்று நமது வாழ்க்கைக்குள் நுழைந்து பார்ப்போம். இருப்பதை மொத்தமாய் இறைவனிடம் கொடுப்போம். நமது வாழ்க்கை வளம் பெறும், சமூகமும் நலன் பெறும்.

*

சேவியர்