Posted in Articles

நான், கடவுள் பேசுகிறேன்

நான், கடவுள் பேசுகிறேன்* 


மனிதனை
அழைக்கும் விதம் தெரியாமல்
கையைப் பிசைகிறேன். 

பச்சை மரத்தில்
பற்றி எரிந்தேன்,
‘காடே எரிகிறது என 
கடந்து போகிறான்

நதியைப் பிளந்து
விளக்க நினைத்தேன் !
மணல் மாஃபியாக்களால்
நதியே
பிளந்து தான் கிடந்தது. 
அவன் 
பொருட்படுத்தவில்லை. 

இடி முழக்கத்தில்
பேச நினைத்தேன்
அடைத்த அறைகளுக்குள்
தொலைக்காட்சி அலற
அவன்
தேனீரில் திளைத்திருந்தான்.

அக்கினித் தூணாய்
விரட்டினேன்,
குளிர் கதவுகளுக்குள்
குடியிருந்தான்.

மேகத் தூணில்
முன்வந்தேன்,
வானிலை சரியில்லையென
வெதர் சேனல் பார்த்தான்

வறியவர் விழிவழியே
அவனைப் பார்த்தேன்
தொடுதிரையைத் தடவியபடி
நடந்து கடந்தான்.

என் செய்திகளை
அவன்
வாட்சப் வாசல்களில்
வெட்டிச் சாய்த்தான்.

என்
மெல்லிய குரலை
அவனது
சமூக வலைத்தளங்கள்
சம்மதிக்கவில்லை.

எல்லா 
முயற்சியும் தோற்றுப் போக
சற்று நேரம்
ஓய்வெடுத்தேன்.

அப்போது
சாத்தான் 
ஒரு 
கொள்ளை நோயோடு 
களமிறங்கினான்.

இப்போது
எல்லா மனிதர்களும் 
ஓங்கிச் சொல்கின்றனர்
இது 
கடவுளின் குரல்

*

சேவியர்

x

Posted in Articles, Christianity, Desopakari

ஆளுமை உருவாக்கத்தில் கல்வி

Image result for education and personality

உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மாபெரும் மாற்றங்களெல்லாம் வெகு சில ஆளுமைகளால் உருவாகியிருப்பதைக் கண்டு கொள்ள முடியும். எப்படி ஒரு சிறு விதையானது ஒரு மிகப்பெரிய ஆலமரத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறதோ, அது போல தான் ஆளுமை உடையவர்கள் மாபெரும் திறமைகளை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள். அவை மிகப்பெரிய மாற்றத்துக்கான விதைகளாக பின்னர் உருமாறுகின்றன

மார்ட்டின் லூத்தர் கிங் எனும் தனிமனிதருடைய ஆளுமைத் திறமை தான் கருப்பின மக்களின் விடுதலைக்கான கருவியானது. வட அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தின் நிற வேற்றுமைக்கு முடிவு கட்டியது அவர் தான்.

கார்ல் மார்க்ஸ் எனும் மனிதருடைய சமத்துவச் சித்தாந்தம் தான் உலக அளவிலேயே மிகப்பெரிய சமூகப்புரட்சியை உருவாக்கியது. பல நாடுகளின் அரசியல் கட்டமைப்புக்கும், சமூக மறுமலர்ச்சிக்கும் அவரது சிந்தனைகளே அடித்தளமிட்டன. இப்படி ஏராளம் உதாரணங்களைச் சொல்ல முடியும்.

விவிலிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலும் அதே கதை தான். மோசே எனும் ஆளுமை தான் இஸ்ரேல் மக்களுடைய விடுதலைக்கான விதை. அவருடைய செயல்பாடுகள் தான் பல நூற்றாண்டு அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து மக்களை விடுதலை வழியில் நடத்தியது.

தாவீது எனும் மன்னனுடைய ஆளுமைத் தன்மை தான் இஸ்ரேல் மக்களுக்கு நீண்ட நெடிய காலம் மிகச் சிறந்த ஆட்சியைக் கொடுக்க முடிந்தது. இஸ்ரேல் நாட்டின் ஒருமைப்பாட்டையும், கண்ணியத்தையும் கட்டிக் காத்தது.

இப்படிப்பட்ட ஆளுமைகளை நாம் கூர்ந்து கவனித்தால் அவர்களுக்கிடையே சில ஒற்றுமைகளைக் கண்டு கொள்ளலாம். அவற்றில் மிக முக்கியமான ஒன்று சக மனித கரிசனை. இன்னொன்று தார்மீகக் கோபம். இவை இரண்டுமே இரண்டறக் கலந்தவை எனலாம். சக மனிதன் மீதான நேசம் இருப்பவர்களால் மட்டுமே, அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக தார்மீகக் கோபம் கொள்ள முடியும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஆளுமைகளைத் தீர்மானிப்பது அவர்களுடைய வீரம் அல்ல, ஈரம் !

வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம் ; என்றிருக்கும் மக்களால் சமூகப் பங்களிப்பு செய்ய இயலாது. அவர்கள் சமூகத்தின் ஆளுமைகளாக எப்போதுமே உருவாக முடியாது. சூழல்களின் அடிமைகளாக மட்டுமே வாழமுடியும் என்பதே உண்மை.

இந்த ஆளுமைத் தன்மையைக் கட்டமைக்கும் வேலையைச் செய்வதில் கல்வி மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. மழலைப் பருவத்திலேயே இந்த கல்வியின் நீரூற்றப்படும் செடிகள் தான் பருவ காலத்தில் கனிகளை பரிசளிக்கின்றன. ஒரு குயவனைப் போல வனைகின்ற ஆசிரியரின் கைகள் தான் அழகிய கலைகளையும், பயனுள்ள பாண்டங்களையும் உருவாக்குகிறது.

இயேசு சொன்ன வீடுகட்டுபவரின் உவமை இதன் ஒரு சிறந்த உதாரணம் எனலாம். ஒருவர் வீட்டை மணலின் மீது அடித்தளமிட்டுக் கட்டுகிறார். அது புயல்காற்றின் விரல்கள் தீண்டியபோதே விழுந்து அழிகிறது. இன்னொருவர் வீட்டை பாறையின் மீது கட்டுகிறார். அதை புயலின் கரங்கள் புரட்டிப் போட முடியவில்லை. நிலைத்து நிற்கிறது.

கல்வி எனும் அடித்தளத்தின் மீது கட்டப்படுகின்ற வாழ்க்கையானது, அலைகளையும் புயல்களையும் சந்தித்தாலும் நிலைகுலையாது. நிலைபெயராது. எனவே தான் ஒரு சமூகம் கல்வி கற்கவேண்டியது அக்மார்க் தேவையாகிறது. அதனால் தான் ஒரு சமூகத்திற்கு கல்வி மறுக்கப்படும்போது அங்கே சமூக அநீதி தாண்டவமாடுகிறது.

வேர்களில் பாதரசம் ஊற்றி விட்டால், கிளைகளில் கனிகளை எதிர்பார்க்க முடியாது. ஊற்றுக்கண்ணை அடைத்து விட்டார் ஈர நிலங்களை இறக்குமதி செய்ய முடியாது.

அதனால் தான் சமூகத்தின் புறக்கணிப்புக்குள்ளாகும் மக்களுக்கு கல்வியை நிராகரிக்கும் செயலை பலரும் செய்கின்றனர். அதன் காரணம், ஆளுமைகள் எவரும் அங்கிருந்து புறப்பட்டு விடக் கூடாது என்பது தான்.

“உனக்குக் கல்வி தரப்படமாட்டாது” என இன்று யாரும் சொல்ல முடியாது. காரணம் நமது தேசம் சுதந்திர தேசம். ஆனால், “இந்தத் தகுதிகள் இருந்தால் தான் உனக்குக் கல்வி” என முட்டுக்கட்டை போடமுடியும். காலம் காலமாய் அடிமை நிலையில் இருக்கும் ஒருவனிடம், உனக்கு வில்வித்தை தெரிந்தால் தான் வேலை என சொல்வது எவ்வளவு குரூரமானது. காலம் காலமாய் நீரில் வாழ்கின்ற ஆமையிடம், நீ மரமேறினால் தான் உனக்கு கல்வி என சொல்வது எவ்வளவு நயவஞ்சகமானது ? அத்தகைய சூழல் உருவாக்கப்படலாம்.

இந்த இடத்தில் தான் நமது பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. “தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எங்கும் இல்லை” என்றார் இயேசு. அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்ற நாம் செய்ய வேண்டியது எதுவென சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. அவரை மூலைக்கல்லாய்க் கொண்டு நமது வீட்டைக் கட்ட வேண்டியது அவசியம்.

கல்வி என்பது வெறுமனே தகவல்களைச் சேமித்து வைக்கும் இடம் அல்ல. அது வாழ்வியலுக்கான பாடங்களைக் கற்றுக் கொள்ளும் இடம். ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் எழுத்துகளை நமக்குள் ஊற்றிச் செல்பவர்கள் அல்ல, எண்ணங்களை நமக்குள் ஊன்றிச் செல்பவர்கள். அவை தான் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன.

தவறு செய்கின்ற தருணங்களில், “படிச்சவன் தானே நீ” என நம்மை நோக்கிக் கேள்விகள் எழுவதுண்டு. படித்தவனுக்குள் நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும், செயல்பாடுகளும் இருக்கும் எனும் நம்பிக்கை தான் அதன் காரணம்.

ரவுடிகளுடைய வாழ்க்கையைப் பற்றிக் கேள்விப்படும்போது “படிச்சிருந்தா உருப்பட்டிருப்பான்” என்பதையும் கேட்கிறோம். கல்வியின் தேவையை அது இன்னொரு விதத்தில் வெளிப்படுத்துகிறது.

பாடங்கள் தருகின்ற நன்னெறிகள், போதனைகள், அறிவுகள், சிந்தனைகள் தவிர்த்து ஆளுமை உருவாக்கத்தில் கல்வி தருகின்ற மிக முக்கியமானவை எவை ?

1. இணைந்து செயலாற்றுதல்

கல்வி தருகின்ற படிப்பினைகளில் மிக முக்கியமானது இணைந்து செயலாற்றுகின்ற தன்மை. சமூக வாழ்வுக்கும், சமூக மாற்றத்துக்கும் அடிப்படையாய் அமைவது ‘இணைந்து வாழவேண்டும்’ எனும் சிந்தனைதான். சக மனித உறவுகளைக் கட்டியெழுப்பும் முதல் தளமாக கல்வி இருக்கிறது. பிறருடைய உணர்வுகளை மதிக்கவேண்டும் என்பதும், பிறரையும் தன்னைப் போல நினைக்க வேண்டும் என்பதும் இந்த காலகட்டத்தில் தான் கட்டமைக்கப்படும்.நட்புகளுக்காக வாழ்வதும், விட்டுக்கொடுப்பதும், உதவுவதும் என சமூகத்துக்குத் தேவையான ஆளுமைத் தன்மைகளை இங்கே கற்றுக் கொள்ளலாம்.

2. மதித்து வாழ்தல்

பிறரை மதிக்க கற்றுக்கொள்கின்ற முக்கியமான இடம் கல்வி நிலையம் எனலாம். தலைமைக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதன் தேவையை நாம் கற்றுக் கொள்வது இங்கே தான். எந்த ஒரு தலைவருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணாதிசயம் பிறரை மதிப்பது என்பதில் சந்தேகமில்லை. தலைமையை மதிப்பது, பிறருடைய கருத்துகளுக்கு மரியாதை கொடுப்பது போன்றவையெல்லாம் ஆளுமை உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்காற்றுபவை.

3. சமத்துவ சிந்தனை

இதயத்தில் உருவாக வேண்டிய இன்னொரு முக்கியமான சிந்தனை சமத்துவம் சார்ந்தது. சமத்துவம் என்பது உள்ளம் சார்ந்தது. சமத்துவம் என்பது வாய்ப்புகள் சார்ந்தது. சமத்துவம் என்பது மனிதம் சார்ந்தது. எல்லோரும் சமம். எல்லோருக்கும் ஒரே மாதியான வாய்ப்புகள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கவனிப்பு என்றிருக்கும் கல்வி அமைப்பு நமது ஆளுமைத் தன்மையை உரம்போட்டு வளர்க்கும் முக்கியமான தளம்.

4. எல்லைகளற்ற கற்பனை

கல்வி நமக்கு எல்லைகளற்ற கற்பனையைத் தருகிறது. நமது கலை ஆர்வத்துக்கும், புதுமைகளைத் தேடவேண்டும் எனும் ஆர்வத்துக்கும் தீனி போடும் தளம் அது தான். அதனால் தான் சிறுவயதிலேயே ‘செயல்பாடுகள்’ குறித்த பாடங்கள் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகின்றன. அவை வழக்கமான வழக்கத்துக்கு வெளியே மாணவர்களை சிந்திக்க வைக்கிறது. பிள்ளைகளின் ஆக்டிவிடி பாடங்களை செய்து கொடுக்கும் பெற்றோர் அவர்களின் கற்பனைக்கு மதில்சுவர் கட்டுகின்றனர்.

5 தன்னம்பிக்கையின் தளம்

தன்னம்பிக்கை தான் எந்த ஒரு வெற்றிக்கும் அடிப்படைத் தேவை. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் வெற்றியாளர்களாய் பரிமளிப்பதில்லை. எந்த ஒரு ஆளுமைத் தன்மையுடைய மனிதரைப் பார்த்தாலும், அவர்களுடைய திறமைகளுக்கும் முன்னால் வந்து நிற்பது அவர்களுடைய தன்னம்பிக்கை தான். திறமையில் குறைந்தவர்கள் கூட தன்னம்பிக்கையில் நிரம்பியிருக்கையில் வெற்றி வசமாகும்.

இப்படி ஆளுமை உருவாக்கத்தில் கல்வியின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. அதை அனைவருக்கும் கிடைக்க வழிசெய்வதே மிகச்சிறந்த பிறர்நலப் பணி. பிறர்நலம் பேசுவதே ஆன்மீகத்தின் முக்கிய நிலை.

*

சேவியர்

#Desopakari #Writerxavier

Posted in Articles, WhatsApp

பாவத்தை விடப் பெரிய பாவம்…

பாவிகளது தீய நாட்டத்தைத்
தூண்டிவிடாதே;
அது உன்னைப் பொசுக்கிவிடும்

சீராக் 8 : 10

Image result for gossip

“இன்னிக்கு ப்ரைடே.. வாடா.. போய் ஒரு கட்டிங் போட்டு ஜாலியா இருப்போம்” என நிகழ்கின்ற உரையாடல்கள் அலுவலக வராண்டாக்களில் சர்வ சாதாரணம். அதற்கு பதில் சொல்பவர்கள் யாருமே, “தண்ணி அடிக்கிறது தப்புடா.. வேண்டாம்” என சொல்லி நான் கேட்டதில்லை. “நீ என் ஜாய் பண்ணு மச்சி, எனக்கு வேலை இருக்கு” என்றோ. “நீங்க கலக்குங்க, எனக்கு டிரைவ் பண்ணணும்” என்றோ தான் பேசுகிறார்கள்.

“குற்றம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, குற்றம் செய்யத் தூண்டுபவர்களுக்கும் தண்டனை உண்டு” என்பதை நாம் உலக சட்ட நூல்கள் பேசுகின்றன. ஒருவர் குற்றம் செய்ய நாம் எந்த விதத்திலும் காரணியாய் இருக்கக் கூடாது, அதை ஊக்கிவிக்கக் கூடாது என்பதை நமக்கு எச்சரிக்கையாய் சொல்லும் விஷயம் இது.

தண்ணி அடிப்பது தவறெனில், புகை பிடிப்பது தவறெனில், பாலியல் பிழை செய்வது தவறெனில், ஒருவனை இகழ்வது தவறெனில் ஏதோ ஒரு வகையில் இதற்கு துணையாகவோ, தூண்டுதலாகவோ இருப்பது மிகப்பெரிய தவறு.

விவிலியத்திலுள்ள சீராக் நூல் இதை இரத்தின சுருக்கமாக இப்படிச் சொல்கிறது. “பாவிகளது தீய நாட்டத்தைத் தூண்டிவிடாதே; அது உன்னைப் பொசுக்கிவிடும்”. பாவிகள் என்றவுடன் கடும் கொலைகாரர்களுக்கு கத்தியை எடுத்துக் கொடுப்பது என்று அர்த்தமல்ல. “அலுவகத்தில் சொல்கின்ற ஒரு பொய் குற்றச்சாட்டுக்கு” உடந்தையாய் இருந்தாலே அது மிகப்பெரிய பாவம் தான். தவறான சிந்தனையுடன் செய்யப்படுகின்ற ஒரு உரையாடலை ஊக்கப்படுத்தினாலே அது பாவம் தான்.

பிறரைப் பாவம் செய்யத் தூண்டும் எதையும் நாம் செய்யக் கூடாது என்கிறது விவிலியம். இவ்வளவும் ஏன், உண்பது கூட அடுத்தவரை சஞ்சலப்படுத்தக் கூடாது என்கிறது உரோமையர் நூல் “அடுத்தவருக்குத் தடையாக அமையும் எந்த உணவும் அதை உண்போருக்குத் தீயதுதான்” எனும் வசனம் இதை விளக்குகிறது.

“இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வதைவிட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது” என இயேசு பாவத்தின் காரணியாய் இருக்கும் மனிதர்களைக் கடுமையாய் எச்சரிக்கிறார்.

இயேசு பாவிகளோடு பழகினார், அவர்களுடைய பாவங்களை ஊக்கப்படுத்தவில்லை. பாவத்தை விட்டு அவர்கள் வெளியேற அன்பு எனும் இறை குணத்தை பயன்படுத்தினார்.

நம்முடன் பழகும் மக்களுக்கு சில பலவீனங்கள், பாவ சிந்தைகள் இருக்கலாம். நமது பணி பாவங்களை விட்டு வெளியே வர உதவுவது தான். அவர்களுடைய பாவங்களை எந்தவிதத்திலும் ஊக்கப்படுத்துவதோ, அங்கீகரிப்பதோ அல்ல. அது மிகப்பெரிய பாவம். அது வெறுமனே நம்மைச் சுடுகின்ற பாவமல்ல, நம்மை பொசுக்குகின்ற பாவம் என்பதை உணர்வோம். செயல்படுவோம்

*

சேவியர்

Posted in Articles, WhatsApp

ஆறுதல் எங்கே கிடைக்கும் ?

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்
ஆண்டவர் இருக்கின்றார்;
நைந்த நெஞ்சத்தாரை
அவர் காப்பாற்றுகின்றார்

சங்கீதம் 34:18

Image result for stressed man shadow“தற்கொலை பண்ணிக்கலாமான்னு யோசிச்சேன்” காபியை அருந்தியபடியே நண்பன் என்னிடம் சொன்ன வார்த்தை நிலைகுலைய வைத்தது.

என்ன சொன்னே ? காபி கோப்பையை டேபிளில் கவனமாய் வைத்தபடி கேட்டேன்.

“கொஞ்ச நாளாவே மனைவி கூட சண்டை. ஆத்மார்த்தமான அன்பு இல்லாம போனது போல ஒரு ஃபீலிங். வாழ்க்கைல பாசிடிவ் விஷயங்களைத் தேடித் தேடிப் பாராட்டிட்டு இருந்த நாங்க‌ இப்போ நெகடிவ் விஷயங்களை புடிச்சிட்டு தொங்கறோம்” என்றார் நண்பர்.

“எல்லாம் நல்லா தானே போயிட்டிருந்துது ?”

“சில பழம் வெளிப்பார்வைக்கு அழகா இருக்கும். சாப்பிட்டா தான் அதோட சுவை தெரியும். சில பழம் பலாப்பழம் மாதிரி வெளிப்பார்வைக்கு கரடு முரடா இருக்கும். ஆனா உள்ளே சுளை தித்திக்கும். அப்படி தான்டா லைஃப். “

“உன்னோட வாதமெல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா இனிமே இப்படி நீ தற்கொலை கிற்கொலைன்னு ஜெர்க் குடுக்காதே” என்றேன். சிரித்துக் கொண்டான். அவரும் ஆழமான கிறிஸ்தவ விசுவாசத்தில் நடப்பவர் என்பது குறிப்பிடத் தக்கது.

யோசித்துப் பார்த்தேன். வாழ்க்கை என்பது பல வேளைகளில் நம்மைச் சுழற்றி அடிக்கிறது. உயிர்வலிக்க துடுப்பை இழுத்தால் தான் கரையேற முடியும் எனும் நிலை இருக்கும். தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தால் தான் கரையைக் காண முடியும்.

சில வேளைகளில் அது பாய்மரக் கப்பலைப் போல தேவையற்ற திசையிலெல்லாம் இழுத்துக் கொண்டு போகும். சரியான திசையில் படகைத் திசைதிருப்பும் சுக்கானைப் பயன்படுத்த வேண்டும்.

இன்னும் சில வேளைகளில் சொகுசுக் கப்பலைப் போல அது நம்மைச் சுமந்து செல்லும். ஒரு ஓய்வு நேரத்தின் மெல்லிசையாய் அதை ரசித்து, இறைவனுக்கு நன்றி சொல்லலாம்.

எந்தக் கணத்திலும் இறைவன் நமக்குத் தந்திருக்கின்ற பணியை விட்டு விலகி விடக் கூடாது. இறைவன், கணவன், மனைவி எனும் மூன்று இழைகளால் பின்னப்பட்ட திருமண பந்தத்தை வலுவிழக்கச் செய்யக் கூடாது. எந்த ஒரு இழை அறுந்தாலும் நூல் பலவீனமடைந்து அழியும் என்பதே உண்மை.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன், என்கிறார் இயேசு.

துயரங்கள் நம்மைத் துரத்தினால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது யூதாசின் வழியையல்ல, பேதுருவின் வழியை.

அழுத்தங்கள் நம்மை அலைக்கழிக்கும்போது இறைவனை தேடுவோம். நமக்கு உதவுவார்.
மகிழ்ச்சி நம்மை நிரப்பிக் கொள்ளும் போது இறைவனை நாடுவோம். நம்முடன் உலவுவார்.

*

சேவியர்

Posted in WhatsApp

யார் உயர்ந்தவன் ?

கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால்
ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில்
மேன்மை பாராட்டுகிறது
( சாலமோனின் ஞானம் : 8:3 , இணை திருமறை )

Image result for being with god

எத்தனை முறை அழித்தாலும் மறையாத ஏற்றத்தாழ்வு மனநிலை சமூகத்தில் மனிதரிடையே புரையோடிக் கிடக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர் குடிப் பிறப்பு, கீழ் குடிப் பிறப்பு எனும் மறைமுக யுத்தம் திருச்சபைகளிலும் நிலவி வருகிறது. சில இடங்களில் வெளிப்படையாய் நடக்கிறது, பல இடங்களில் மறை முகமாய் நடக்கிறது. அது ஒன்று மட்டுமே வித்தியாசம்.

இந்த சமத்துவமற்ற சூழலில் யார் உயர்குடிப் பிறப்பு என்பதை விவிலியம் நமக்குக் கற்றுத் தருகிறது. “கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்வது உயர்குடிப் பிறப்பு” என்கிறது சாலமோனின் ஞானம் நூல். இறைவனோடு ஒன்றுபட்டு வாழாத வாழ்வு கீழ்குடிப் பிறப்பு எனப் புரிந்து கொள்ளலாம்.

உயர்குடியும், தாழ் குடியும் பிறப்பினால் வரவில்லை, வாழ்வினால் வருகிறது எனும் புதிய சிந்தனையை விவிலியம் தருகிறது. யார் வேண்டுமானாலும் உயர்குடியாய் மாறலாம், யார் வேண்டுமானாலும் கீழ் குடியைத் தேர்வு செய்து அழியலாம். இதையே விவிலியம் நமக்கு விளக்குகிறது.

கடவுளோடு ஒன்று பட்ட வாழ்வை வாழ்வதே மேன்மையானது. அத்தகைய வாழ்வு வாழ்பவர்கள் மட்டுமே மேன்மையை அடைவார்கள். கடவுளை விட்டு விலகி வாழும் போது நமது வாழ்க்கை மேன்மையிழக்கிறது.

பிறப்பின் போது நாம் எந்த பெற்றோருக்குப் பிறந்தோம் என்பதை வைத்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த தொழிலைச் செய்து வாழ்கிறோம் என்பதைப் பார்த்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த பொருளாதார வசதியில் இருக்கிறோம், என்னென்ன திறமைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை வைத்தும் நாம் மதிப்பிடப்படுவதில்லை. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பதே முக்கியம்.

ஒன்றுபட்ட வாழ்வு என்பது ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத வாழ்வு. இதைத்தான் இயேசு “செடி நிலைத்திருக்கும் கிளைகள்” என குறிப்பிடுகிறார். செடியோடு இணைந்தாலன்றி, கிளையானது கனிகொடுப்பதில்லை. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துவிட்டால் கிளையானது விறகாகும். தனது கனி கொடுக்கும் தன்மையை இழந்து விடும். தனது வாழ்வை இழந்து விடும். நெருப்புக்கு தன்னை அர்ப்பணித்து விடும்.

நாம் உயர்குடிகளாக வாழ இறைமகன் இயேசு அழைப்பு விடுக்கிறார். அதை நமது முதல் பிறப்பு முடிவு செய்வதில்லை, இரண்டாம் பிறப்பு முடிவு செய்கிறது. இறைவனோடு வாழப் போகிறேன் எனும் தீர்மானம் முடிவு செய்கிறது. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்க்கை வாழ்வதில் அது முழுமையடைகிறது.

அத்தகைய வாழ்க்கை வாழ, இறைவனின் ஞானத்தை நாம் வேண்டுவோம்.

*

சேவியர்