Posted in Articles

6 கிறிஸ்மஸ் என்பது நினைவூட்டல்

6.

கிறிஸ்மஸ் என்பது

நினைவூட்டல்

6.

கிறிஸ்மஸ் என்பது
நினைவூட்டல்

*

கிறிஸ்மஸ்
ஒரு நினைவூட்டல்.

அதோ அந்த‌
குடிலின் மடியில்
வடிவான குழந்தையாய்
விரல்கடித்துக் கிடக்கிறாரே !

அவர் தான்
பிரபஞ்சத்தின் பிதா !
ராஜாதி ராஜா
எனும் நினைவூட்டல்.

அதோ.
ஆடுகளில் நடுவில்
அயர்ந்து தூங்கிறாரே,
அவர் தான்
தொலைந்த ஆட்டினை
தேடித் திரிந்தவர்
எனும் நினைவூட்டல்.

பாருங்கள்,
கிழிந்த கந்தை அவரை
சுற்றியிருக்கிறது !
நீதியெனும் ஆடையை
நமக்கு நீட்டுபவர்
எனும் நினைவூட்டல்.

குடிலுக்கு மேல்
வானின் நட்சத்திர ஒளி
வட்டமிடுகிறது,
“நானே ஒளி” எனும்
அவரது வார்த்தையின் நினைவூட்டல்.

நசுக்கப்பட்டோரையும்
த‌ம்
தலைமுறையில் இணைத்துப்
பிறந்திருக்கிறார் !
நிராகரிக்கப்பட்டோரின் நம்பிக்கை
எனும் நினைவூட்டல்.

தாவீதின் வம்சமாய்
தாயவளின் அம்சமாய்
தரணியில்
பிறந்திருக்கிறார்
இறைவார்த்தைகள் நிறைவாகும்
எனும் நினைவூட்டல்.

ஞானியரின் பரிசினையும்
புன்னகையோடு பெற்றிருக்கிறார்
மீட்பின் பாதையில்
பேதங்கள் இல்லையெனும்
நினைவூட்டல்.

தொழுவினில்
பிறந்திருக்கிறார்
கழுவினில்
இறப்பார் எனும் நினைவூட்டல்.

ஆடுகளுக்கான‌
தீவனத் தொட்டியில்
படுத்திருக்கிறார்,
‘நானே உணவெனும்’
பலியதன் நினைவூட்டல்.

ஏழ்மையின் தழுவல்களில்
தவழ்கிறார்,
பணிவின் படிகளில்
பயணிப்பாரெனும் நினைவூட்டல்.

இயேசுவின் பிறப்பு
அவரது முதல் வருகை !
இது
மீண்டும் வருவாரெனும்
இரண்டாம் வருகையின்
நினைவூட்டல்

இயேசுவின் முதல் வருகை
பாவிகளுக்கானது !
இரண்டாம் வருகை
நீதிமான்களுக்கானது
!

*
சேவியர்

Posted in Articles, WhatsApp

நான் பற்ற வைத்த நெருப்பு

என்னைச் சூழ்ந்துகொண்டு
திணறடித்த தீயினின்றும்
நான் மூட்டிவிடாத நெருப்பின்
நடுவினின்றும் என்னைக்
காப்பாற்றினீர்

சீராக் 51:4

Image result for mistake

சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக ஒருவருக்கு காவல்துறை அதிகாரி அபராதம் விதித்தார். அவர் எவ்வளவோ மன்றாடியும் அந்த அபராதத்திலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. கோபம் கொண்ட அவர், நேரடியாகச் சென்று அந்த காவல்துறை அதிகாரியின் காவல் நிலையத்துக்கு வருகின்ற மின் இணைப்பைத் துண்டித்தார். காரணம் அவர் ஒரு மின்வாரிய அதிகாரி. அந்த காவல் நிலையம் சரியான மின் கட்டணத்தைச் செலுத்தவில்லையாம். விக்கிரமாதித்யன் கதையைப் போல, யார் செய்தது சரி ? எனும் கேள்விக்கு இந்த நிகழ்ச்சி முன்னுரை எழுதுகிறது இல்லையா ?

நமக்கு ஒரு சிக்கல் வந்தால் உடனே அதற்கான சலுகை நமக்குக் கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். அது தெரிந்தே செய்த தவறானாலும், தெரியாமல் செய்த பிழையானாலும் நாம் தப்ப வேண்டும் என விரும்புகிறோம். அதற்கு “ஆபத்து காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு” எனும் வசனத்தை உடனே உதவிக்கும் அழைக்கிறோம்.

உண்மையில் நாமாகவே செய்கின்ற தவறுகளுக்கு இறைவனின் உடனடி உதவி கிடைப்பதில்லை. அதை விவிலியம் பல இடங்களில் தெளிவாக விளக்குகிறது.

பழைய ஏற்பாட்டைப் பொறுத்தவரை பாவங்களுக்குக் கழுவாயாக விலங்குகளோ, பறவைகளோ பலியிடப்பட்டன. ஆனால் அவை எல்லாமே, “தெரியாமல் செய்த” பாவங்களுக்கான பலிகள். தெரிந்தே செய்த பாவங்களுக்கு மன்னிப்பு இருந்ததில்லை என்பது தான் உண்மை.

புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லும் போதும் “நீதியின் நிமித்தம் துன்பப்படுவதையும்”, “இறைவனின் பொருட்டு துன்பப்படுவதையும்” பேசுகிறார். “என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே (மத் 5: 11). என்கிறார் இயேசு. அப்போது நமக்கான பிரதிபலன் கிடைக்கிறது.

ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு எனும் சங்கீதம் 50 எதைப் பேசுகிறது என்பதை முழுமையாய்ப் படித்தால் புரிந்து கொள்ளலாம். அது எல்லா துன்பங்களுக்குமானதல்ல. பொல்லாரைப் பார்த்து அடுத்த வசனத்தில், “என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?” என்கிறார். இறைவனோடு இணைந்து அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழும்போது எழுகின்ற துன்பங்களை இறைவன் மாற்றுகிறார்.

சீராக்கின் நூல் அதை இன்னும் அழகாக, “நான் மூட்டி விடாத நெருப்பு” என குறிப்பிடுகிறது. நெருப்பில் சிக்கித் தவிக்கின்றேன். ஆனால் அந்த நெருப்பு நான் மூட்டி விடாத நெருப்பு. எனது துணிகரப் பாவத்தினால் விளைந்த நெருப்பல்ல. அத்தகைய சூழலில் இருந்து இறைவன் நம்மை காக்கின்றார். நமது வேண்டுதல்களை உடனே நிறைவேற்றுகிறார். நானே பற்ற வைத்த நெருப்பில் நான் துயரப்படுவது எனது தேர்வு, அதை இறைவனின் அருளோடு இணைத்துப் பேசுவது அறியாமை.

எனவே, துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் எனும் வசனத்தை இழுத்துக் கொண்டு, தவறான செயல்களுக்காக துயரம் அனுபவிப்போமெனில் நாம் அனுதாபத்துக்குரியவர்களே.

கடைசியாக, தெரிந்தே செய்யும் பாவங்களை இறைவன் மன்னிப்பதில்லையா ? எனும் கேள்விக்கு ஒரு அன்பான தந்தை மகன் உறவை எடுத்துக் கொள்ளலாம். மகன் தெரியாமல் செய்யும் பிழைகளை தந்தை உடனடியாக மன்னிக்கிறார். தெரிந்தே பாவம் செய்கையில் துயரமடைகிறார். தொடர்ந்து கீழ்ப்படியாமல் பாவம் செய்யும் போது கண்டிக்கிறார். எனினும், மனம் திருந்தி மீண்டும் தந்தையிடன் வருகின்ற எந்த மகனையும் தந்தை தள்ளி விடுவதில்லை.

உலகிலுள்ள தந்தையே இப்படியெனில்,
உலகத்துக்கே தந்தையானவர் எப்படியிருப்பார் ?

*
சேவியர்

 

#WriterXavier, #ChristianArticles, #Sin, #Jesus

Posted in Articles, Vettimani

எளியவரை வதைக்காதே

Image result for poor people working

வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது

லேவியர் 19 : 13

+

கடவுள் ஏழைகளின் பக்கமாகவும், எளியவர்கள் சார்பாகவும் நிற்பவர் என்பதை விவிலியம் நமக்கு தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் எளியவருக்கு எதிராக நிற்பவர்கள் இறைவனுக்கே எதிராக நிற்பவர்கள் ஆகின்றனர். இறைவனின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டுமெனில் மிக எளிய வழி ஒன்றுண்டு. ஏழைகளுக்கு எதிரான மனப்பான்மையைக் கொண்டிருப்பது தான் அது.

“வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது” எனும் இந்த வசனத்தில், கடவுள் இரண்டு விஷயங்களை நமக்குப் புரிய வைக்கிறார். ஒன்று, வேலையாளுக்கு சரியான கூலி கொடுக்கவேண்டும். இரண்டு, கூலியை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும்.

இதையே, “வேலை செய்வோர் அனைவருக்கும் கூலியை உடனே கொடுத்துவிடு; இரவு முழுவதும் அதை உன்னோடு வைத்திராதே” எனும் இறைவார்த்தையும் ( தோபித்து 4:14 இணைதிருமறை) ம் உறுதி செய்திறது.

தாமதமாய் வழங்கப்படும் நீதி, பயனற்றுப் போகலாம். தாமதமாய் வழங்கப்படும் பணம் பயனில்லாமல் போகலாம். இன்னொருவருக்குச் சொந்தமான பணத்தை நாம் வழங்காமல் இருக்கும் ஒவ்வொரு கணமும், அவருடைய பணத்தை அபகரித்து வைத்திருப்பதாகவே அர்த்தம்.

சமரசத்தையும், நீதியையும் உடனுக்குடன் வழங்குபவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதையே இயேசு வலியுறுத்துகிறார்.

“நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்” என்றார் இயேசு. உடனடி ஒப்புரவே தேவை என்றார்.

சிலுவையில் தொங்கிய நல்ல கள்ளனைப் பார்த்து, “இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்றார் “. உயிர்த்தப்புறம் பாக்கலாம் என்று சொல்லவில்லை, உடனடி மன்னிப்பை வழங்குகிறார். மீட்பை வழங்குகிறார்.

ஏழைகளின் மீது கரிசனம் இல்லாத செல்வந்தன் உவமையில், “இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் போகும், நீ சேமித்தவையெல்லாம் யாருக்குச் சேரும் ? ” என்றார்.

ஒப்புரவையும், மன்னிப்பையும், நீதியையும் தாமதப்படுத்தக் கூடாது என்பதே இயேசு சொல்ல வரும் செய்தி.

காரணம், அடுத்த கணம் என்பது நம்மிடம் இல்லை. அடுத்த செயல் நமது கட்டுப்பாட்டில் இல்லை. இந்த கணத்தில் நமக்குக் கிடைக்கின்ற, இந்த வாய்ப்பிலேயே நம்மைச் சரிசெய்து கொள்ளவேண்டும், நன்மையைச் செய்ய வேண்டும். மனமாற்றம் கொள்ள வேண்டும்.

வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது ! சிந்திப்போம். அடுத்தவருக்குச் சொந்தமான எது நம்மிடம் இருக்கிறது ? கொடுக்க வேண்டும் என முடிவெடுப்போம். அதையும் உடனடியாகக் கொடுக்க வேண்டும் என முடிவெடுப்போம்.

உலக செல்வங்களை இழந்து
விண்ணக வாழ்க்கையை சம்பாதிப்போம்.

*

சேவியர்

Posted in Articles, Vettimani

எஸ்தரின் செபம்

Image result for esther prayer bible

ஆண்டவரே, நீர்
அனைத்தையும் அறிவீர்.
தருக்குற்ற ஆமானுக்கு
நான் வணக்கம் செலுத்த
மறுத்ததற்குக் காரணம்
செருக்கோ இறுமாப்போ
வீண்பெருமையோ அல்ல
என்பதையும் நீர் அறிவிர்.
இஸ்ரயேலின் மீட்புக்காக
நான் அவனுடைய
உள்ளங்கால்களைக்கூட
முத்தமிட்டிருப்பேன்.
ஆனால் கடவுளைவிட மனிதரை
மிகுதியாக மாட்சிமைப்படுத்தக்கூடாது
என்பதற்காகவே
இவ்வாறு நடந்து கொண்டேன்.

எஸ்தர் ( கிரேக்கம் ) 4 : 17

பைபிளில் எஸ்தர் நூல் இடம்பெற்றிருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இரண்டு எஸ்தர் நூல்கள் இடம்பெற்றிருப்பது பலருக்கும் தெரியாது. ஒன்று பழைய ஏற்பாட்டில் அமைந்துள்ளது. இது எபிரேயத்தில் எழுதப்பட்ட எஸ்தர் நூல். இன்னொன்று இணை திருமறையில் அமைந்துள்ளது, இது கிரேக்கத்தில் எழுதப்பட்ட நூல்.

எஸ்தரின் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் இரண்டு நூல்களையும் வாசிக்க வேண்டியது கட்டாயம். பிடிவாதத்தினால் புறக்கணிப்பவர்கள் கடவுள் சொல்ல வருகின்ற பல செய்திகளைப் புறந்தள்ளி விடுகிறார்கள் என்பதே உண்மை.

எஸ்தர் (கி) நூலில் எனக்குப் பிடித்த அதிகாரம் 4ம் அதிகாரம். இதில் இரண்டு மன்றாட்டுகள் அமைந்துள்ளன. ஒன்று மொர்தகாய் இறைவனை நோக்கி மன்றாடும் மன்றாட்டு. “ஆண்டவரே, அனைத்தையும் ஆளும் மன்னராகிய ஆண்டவரே, அனைத்தும் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன. நீர் இஸ்ரயேலைக் காக்கத் திருவுளம் கொள்ளும்போது எவராலும் உம்மை எதிர்த்து நிற்கமுடியாது” எனத் தொடங்கும் அந்தப் பாடல் இறைவனின் இரக்கத்துக்காக இறைஞ்சுகிறது.

அந்தப் பாடலின் மூலமாகத் தான் ஏன் மொர்தக்காய் ஆமானை வணங்கவில்லை என்பது தெளிவாகத் தெரியவருகிறது. “கடவுளைவிட மனிதரை மிகுதியாக மாட்சிமைப்படுத்தக்கூடாது” எனும் ஆழமான இறை அன்பே அவரைத் தடுத்தது என்பதை வசனங்கள் விளக்குகின்றன. இஸ்ரேலின் மீட்புக்காக எனில் அவனது ‘உள்ளங்காலைக்’ கூட முத்தமிட்டிருப்பேன் என்பதில் அவருடைய தாழ்மையும், இஸ்ரேலின் மீட்பை அவர் எவ்வளவு ஆசிக்கிறார் என்பதும் விளங்குகிறது.

எஸ்தரின் பாடல், “ஆதரவற்றவளும் உம்மைத்தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன்” எனத் தொடங்குகிறது. அதில் இறைவன் மீது எஸ்தர் கொண்டிருக்கும் பக்தியும், இறைவனின் இரக்கத்தை அவர் இறைஞ்சுவதும் மிக அற்புதமாக விளக்கப்பட்டிருக்கிறது. உயிரைப் பயணயம் வைத்து அவர் மன்னர் முன்னால் செல்வதற்கு முன் பாடுவதாக இது அமைந்துள்ளது.

“ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, உம் அடியவளாகிய நான் இங்கு வந்த நாள் முதல் இன்றுவரை
உம்மிலன்றி வேறு எவரிடமும் மகிழ்ச்சி கொண்டதில்லை” எனும் எஸ்தரின் வார்த்தைகள் இறைவன் பால் அவர் கொண்டிருந்த பக்தியையும், அன்பையும் விளக்குகிறது.

சில கிரேக்க பெயராக்கங்களைத் தவிர்த்து பழைய ஏற்பாட்டு எஸ்தர் நூலோடு கதையோட்டத்தில் எந்த ஒரு வேறுபாடையும் இந்த நூல் கொண்டிருக்கவில்லை. இறைவனின் உண்மையான வார்த்தைகள் என்பதற்குக் கட்டியம் கூறுகின்றன இந்த நூலின் வசனங்கள்.

“இந்தக் காலத்தில் நீ வாளாயிருந்தால் இஸ்ரேலுக்கு மீட்பு இன்னொரு இடத்திலிருந்து தோன்றும்” போன்ற அடிப்படை வசனங்கள் இரண்டு நூல்களிலும் மாற்றமின்றி காணப்படுவது இந்த நூலின் சிறப்பம்சம்.

மாட்சி என்பதை இறைவனுக்கு மட்டுமே வழங்கவேண்டும் என்பதையும், பணிவினையும் துணிவினையும் இதயத்தில் இரண்டறக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

*

சேவியர்

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் 15 : ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்

Image result for jesus feeds 5000

(மாற் 6:30 – 44; லூக் 9:10 – 17; யோவா 6:1 – 14)

இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர்.

இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள். அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.

மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர்.

எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.


இயேசு செய்த புதுமைகளில் இந்த புதுமைக்கு ஒரு சிறப்புத் தகுதி உண்டு. மத்தேயு, மார்க், லூக்கா, யோவான், எனும் நான்கு நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ள ஒரே புதுமை இது தான் ! இது அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாகியிருக்க வேண்டும்.

திருமுழுக்கு யோவான் படுகொலை செய்யப்படுகிறார். அவருடைய ஆதரவாளர்களும், அவரை தலைவராய் நினைத்தவர்களும் தளர்ந்து போகின்றனர். இன்னொரு புறம் இயேசுவின் சுகமாக்கும் வல்லமையும், போதனைகளும் மக்களை உற்சாகப்படுத்துகின்றன. எனவே திரள் திரளான மக்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்க அவரைப் பின் தொடர்கின்றனர்.

திருமுழுக்கு யோவானின் படுகொலை இயேசுவை மனதளவில் கலக்கமடையச் செய்திருக்க வேண்டும். அவர் தனிமையான இடத்துக்குச் செல்ல விரும்பினார். இயேசு தனிமையான இடத்துக்குச் செல்வது துயருற்று அழவோ, ஒளிந்து கொள்ளவோ அல்ல. தந்தையிடம் செபித்து பணிவாழ்வுக்கான ஊக்கத்தைப் பெற.

அந்த சூழலிலும் தன்னை நோக்கி மக்கள் வந்ததைக் கண்ட இயேசு அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். மக்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. மாலையானது. எல்லோருக்கும் பசி ! சீடர்கள் மக்களுக்குப் பசிக்குமே, இங்கே எதுவும் கிடைக்காதே, அனுப்பி விடுங்கள் என இயேசுவிடம் கூறுகின்றனர்.

போதித்துக் கொண்டிருந்த இயேசுவின் பசி யாருக்கும் தெரியவில்லை. இயேசு அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. நாற்பது நாள் உண்ணா நோன்பு இருக்குமளவுக்கு அவரது மனம் வலிமையாய் இருந்தது.

“நீங்களே உணவு கொடுங்கள்” என்ற இயேசு, அங்கே இருந்த ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆசீர்வதித்து சீடர்களிடம் கொடுக்க, சீடர்கள் பரிமாற, அப்பம் பெருகிக் கொண்டே இருந்தது. மக்கள் அனைவரும் வயிறார உண்டனர். பன்னிரண்டு கூடைகள் நிறைய மீதியும் கிடைத்தது ! இயேசு வெறுமனே நமது தேவைகளை நிறைவேற்றுபவர் மட்டுமல்ல, தேவைக்கு அதிகமாகவே கொடுப்பவர்.

ஐயாயிரம் ஆண்கள் இருந்த கூட்டம் அது. மனைவி குழந்தைகள் என ஏராளமானவர்கள் வந்திருக்கக் கூடும். எப்படியும் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை மக்கள் இருந்திருக்கலாம். அவர்களுக்குப் பசியாற்றியது, ஐந்து அப்பங்களும் இரண்டு மீனும் அல்ல ! இறைவனின் பரிவும், அன்பும்.

தன்னிடமிருந்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் பல்லாயிரம் பேருக்குப் பசியாற்றி, தன் முன்னால் பன்னிரண்டு கூடைகள் நிறைய நிரம்பி வழிந்ததைக் கண்ட அந்த சிறுவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியும், வியப்பும், பரவசமும் இருந்திருக்கும் !!! அதே சிறுவன் செய்த செயலை நாமும் செய்தால், அதே பரவசம் நம்மையும் பற்றிக் கொள்ளலாம்.

இந்த நிகழ்வு நமக்கு பல்வேறு ஆன்மீக சிந்தனைகளைக் கற்றுத் தருகிறது.

1. ஓய்வு கொள்ள நினைக்கும் இயேசு, மக்கள் தன்னைத் தேடி வருகையில் அவர்கள் மீது அன்பு கொள்கிறார். பரிவு கொள்கிறார். தன்னுடைய விருப்பத்தை, தன்னுடைய ஓய்வை, தன்னுடைய தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி வைத்து விட்டு, மக்களுக்காய் அந்த நேரத்தைச் செலவிடுகிறார். தன்னைத் தேடி வரும் மக்களை, ‘நாளைக்கு வாங்க’ என அனுப்பி வைப்பவர் இயேசு அல்ல ! எப்போதெல்லாம் மக்கள் வருகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களுக்குச் செலவிட அவரிடம் நேரம் இருந்தது ! அதுவே சுயநலமற்ற அன்பு !

பிறர் நம்மைத் தேடி வரும்போது நம்முடைய அசௌகரியங்களை விலக்கி வைத்து விட்டு, அவர்களுக்காக நேரம் செலவிட நாம் தயாராக இருக்க வேண்டும்.

2. “ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்”. என சீடர்கள் இயேசுவிடம் சொல்கின்றனர். அதன் காரணம், மக்கள் மீதான சீடர்களின் கரிசனையாகவோ, அவர்களுக்கு நம்மால் உணவு கொடுக்க முடியாதே எனும் யதார்த்தமாகவோ இருக்கலாம். சீடர்கள் மக்களுக்காக பேசியதால், சீடர்கள் மூலமாகவே இயேசு மக்களின் தேவையை நிவர்த்தி செய்கிறார்.

பிறருடைய தேவைகளுக்காக நாம் இயேசுவிடம் வேண்டும் போது, நம்மைக் கொண்டே பிறருடைய துயரை தீர்த்து வைக்க இயேசு கரம் கொடுக்கிறார். பிறருக்காக நாம் தொடர்ந்து இயேசுவிடம் மன்றாட தயாராக வேண்டும்.

3. “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என சீடர்கள் சொன்னார்கள். உண்மையில் அவர்களிடம் அப்பங்கள், மீன்களோடு இயேசுவும் இருந்தார். இயேசு ஒரு இடத்தில் இருக்கும்போது எத்தகைய குறைவுகளும் அபரிமிதமாய் வளர்ச்சியடைந்து விடும். பலவீனத்தில் பலத்தை புகுத்துவது இறைவனின் பணி.

எந்த ஒரு எண்ணுடனும் முடிவிலியை கூட்டும் போது, முடிவிலியே விடையாய் வருவது போல, நம்மிடமிருக்கும் எந்த ஒரு விஷயத்துடனும் இயேசுவை கூட்டும் போது முடிவிலியாய் அது மாறிவிடுகிறது. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்துடனும் இயேசுவை இணைத்துக் கொள்ள நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். அதற்கு இயேசு எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும்.

4. அந்த மாபெரும் கூட்டத்தில் ‘அப்பங்களையும், மீன்களையும்’ வைத்திருந்தவன் ஒரு சின்னப் பையன். ஐயாயிரம் பேர் எனும் கணக்கில் அவன் எண்ணப்படவில்லை. அவனிடம் உணவு இருக்கும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்கவும் முடியாது. அவன் தான் அந்த மாபெரும் கூட்டத்துக்கு உணவு கொடுத்தவனாக மாறிப் போனான் !

வாழ்க்கையில் யாரையும் நாம் குறைவாய் எடை போடவே கூடாது. எதிர்பாராத இடத்திலிருந்து மிகப்பெரிய ஆன்மீக ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கலாம். எந்த ஒரு எளிய மனிதர் மூலமாகவும் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கும் வலிமை இயேசுவுக்கு உண்டு. அவர் எப்போதுமே வலியவர்களை விட எளியவர்களையே தனது பணிக்காய் பயன்படுத்துகிறார்.

5. சிறுவன் தன்னிடமிருந்த அனைத்தையும் அப்படியே ஒப்படைக்கிறான். தனக்கென எதையும் அவன் வைத்திருக்கவில்லை. சுயநல சிந்தனைகள் ஏதும் அவனிடம் இல்லை. பிறருக்குப் பயன்படுவதற்காக தன்னிடமிருக்கும் அனைத்தையும் இழந்து விடவும் அவன் தயாராய் இருந்தான். எங்கும் அவன் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை. அவனுடைய பெயர் எங்கும் குறிப்பிடப்படவும் இல்லை !

நாமும் நம்மிடம் இருக்கும் அனைத்தையும் இறைவனிடம் முழுமையாய் ஒப்படைக்கும் மனம் கொண்டவர்களாக இருக்க வேன்டும். எவையெல்லாம் நாம் இறைவனிடம் ஒப்படைக்கிறோமோ அவையெல்லாம் வளர்ச்சியடைகின்றன. நம்முடைய உலகப் பொருட்களையும், ஆன்மீக தேவைகளையும் முழுமையாய் இறைவனிடம் ஒப்படைத்தால் அது நமக்கும் பிறருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதமாய் மாறிவிடும்.

6. இயேசு அந்த அப்பங்களையும், மீன்களையும் எடுத்து தந்தையைப் போற்றினார். சிறுவன் இயேசுவிடம் ஒப்படைத்ததை, இயேசு தந்தையிடம் ஒப்படைத்தார். பின்னர் அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார்கள். இயேசுவின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பொருள், தந்தையின் ஆசீர்வாதங்களை வாங்கிக் கொண்டு சீடர்களின் கைகளில் திரும்ப வந்தது. இப்போது அது ஒருவருடைய பசி அடக்குவதாக இல்லாமல், பல்லாயிரம் மக்களின் தேவை தீர்க்கும் உணவாக மாறிவிட்டிருந்தது.

நமது வாழ்க்கையில் கிடைக்கின்ற அனைத்து விஷயங்களும் இயேசுவின் கரங்களில் நாம் ஒப்படைத்தபின், அவரது ஆசீரோடு திரும்பக் கிடைத்தால் அது மிக அதிக பயனளிப்பதாக மாறிவிடும். இறைவனின் ஆசீர் பெறாமல் நம்மிடம் இருக்கும் எந்தப் பொருளுமே மிகுந்த பயனளிப்பதில்லை. அனைத்தையும் இறைவனின் ஆசீரோடு பயன்படுத்தும் மனதை நாம் பெற வேண்டும்.

7. இயேசுவின் ஆசீரோடு வந்த அப்பங்கள், சீடர்களின் கைகளில் வந்தபின் தான் அது புதுமையாய் மாறுகிறது. இயேசு ஆசீர்வதித்தபோது அப்பங்கள் பலுகிப் பெருகவில்லை. இயேசு உடைத்த அப்பங்களை சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களின் கைகளில் அவை பெருகத் துவங்கின. சீடர்களின் கையால் அவை பிறருக்கு ஆசீர்வாதமாய் மாறின. சீடர்களின் பகிர்தலால் அவை பன்மடங்கு அதிகரித்தன.

இயேசு நம்மிடம் தருகின்ற பொருட்களை நாம் பகிர்தல் குணத்தோடு அணுக வேண்டும். பிறருக்குப் பகிர்ந்தளிக்க அளிக்க இறைவனின் அருளால் அது மக்களுக்கு ஆசீர்வாதமானதாக மாறிவிடும். இறைவன் தருகின்ற அப்பம், நமது கைகளில் பொத்தி வைக்க அல்ல, பிறருக்குப் பகிர்ந்தளிக்க எனும் சிந்தனை நமக்கு வேண்டும்.

8. கைகளில் போதுமான உணவு இல்லை, ஆனாலும் மக்களை பந்தியமரச் சொன்னார் இயேசு. அந்த சின்ன கட்டளையை அவர்கள் அப்படியே நிறைவேற்றினார்கள். புதுமையின் கதவுகள் திறக்க, கீழ்ப்படிதலின் செயல்கள் நடைபெற வேண்டும். இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது சின்னச் சின்ன நம்பிக்கைகளை. கடுகளவு விசுவாசத்தை. அதன் வெளிப்பாடான அன்பின் செயல்களை. அதன் பயனாக நாம் அடைவதோ மலையளவு ஆசீர்வாதங்களை.

இயேசு சொன்னார் எனும் காரணத்துக்காக, ஒரு மழலையைப் போல கேள்வி கேட்காமல் கீழ்ப்படியும் மனம் இருந்தால் ஆன்மீகத்தின் உயர்நிலையை நாம் தொட்டு விட்டோம் என்று பொருள். ‘அது அந்தக்கால மக்களுக்கானது’, ‘இது இந்தக்காலத்துக்கு சரி வராது’ என சாக்குப்போக்குகள் சொல்வோமென்றால் விசுவாசத்தின் கடைசிப் படிக்கட்டில் உழல்கிறோம் என்று அர்த்தம்.

9. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மாபெரும் கூட்டம் அது. பாலை நிலம். மன்னாவை பாலை நிலத்தில் பொழிந்த இறைவன், இப்போது பாலை நிலத்தில் அப்பத்தைப் பகிர்ந்தளிக்கிறார். தொலைவில் இருந்தவர்களுக்கு அது வெறும் உணவாய் தெரிந்தது. அருகில் இருந்தவர்களுக்கு மட்டுமே அது ‘இயேசுவின் அற்புதம்’ எனும் உண்மை தெரிந்தது.

இயேசு நமது வாழ்வில் செய்கின்ற அற்புதங்களைக் கண்டு கொள்ள வேண்டுமெனில் நாம் இயேசுவோடு நெருங்கி இருக்க வேண்டும். தொலைவில் இருந்தால் “எப்படியோ நமது தேவைகள் நிறைவேற்றப்பட்டன” என்றே எண்ணுவோம். அருகில் இருந்தால் மட்டுமே “இறைவனின் அருளால் அனைத்தும் நடந்தன” எனும் உண்மை புரியும். எப்போதும் இறைவனோடு நெருங்கி இருக்க வேண்டும். நம்முடைய முதன்மையான நேரங்களை நாம் இயேசுவுக்காய் கொடுத்தால், நமக்கு முதன்மையான இடத்தை அவர் தருவார்.

10. சீடர்களுக்கும் இயேசுவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. ‘நமது வழிகளில்… ‘ நாம் யோசிப்போம். ‘அவர் வழி..’ என தனியே ஒன்று உண்டு என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.

* மக்களை அனுப்பி விடுவோம், என்பது சீடர்களின் குரல்
* மக்களை அமர வையுங்கள், என்பது இயேசுவின் பதில்

* நம்மிடம் உணவு இல்லை, என்பது சீடர்களின் குரல்
* நம்மிடம் தந்தை உண்டு, என்பது இயேசுவின் பதில்.

நம்மிடம் என்ன இல்லை என்பதை சீடர்கள் பார்த்தார்கள். நாம் சிந்திக்காத ஒரு வழியில் இறைவன் செயலாற்ற மாட்டார் என அவர்கள் தப்புக்கணக்கு போட்டார்கள். இயேசுவோ அனைத்தையும் தனது ஆச்சரியமான பாதைகளில் செயல்படுத்தினார்.

நமது வாழ்க்கையில் இறைவன் செயலாற்றுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நமது வழிகளில் அவரை வலுக்கட்டாயமாய் இழுக்கக் கூடாது ! அவருடைய வழிகளில் நாம் அவரைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம். அனைத்தையும் அவரில் ஒப்படைத்து அவரோடு நெருங்கி வாழ்வோம்.

*