Posted in Articles, Christianity, WhatsApp

கனிகொடுக்கும் காலம்

இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை இயேசு தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில், அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார் ( மார்க் 11 : 13, 14 )

*

எங்கள் வீட்டுக்கு அடிக்கடி பழம் விற்கும் சகோதரி ஒருவர் வருவார். அந்தந்த சீசனில் விளைகின்ற பழங்களை அவரது சைக்கிள் தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு வருவார்.

“ஏம்மா.. மாம்பழம் இல்லையா ? ” என்று கேட்டால். “ம்க்கூக்ம்… இன்னா சீசன்ல வந்து இன்னா பழம் கேக்கறே… இது மாம்பழ சீசனே கிடையாது” என்பார். ஒவ்வொரு மரமும் கனிகொடுக்க ஒவ்வொரு காலம் உண்டு. அந்தக் காலத்தில் தான் அந்தப் பழங்கள் கிடைக்கும்.

சூப்பர் மார்க்கெட் ஆனாலும், ரோட்டோரத் தள்ளுவண்டிக் கடைகளானாலும் எங்கும் ஒரே கதை தான். அப்படியே எங்கேனும் ஆஃப் சீசன் பழங்கள் கிடைத்தால், “வாங்காதீங்கப்பா, நல்லா இருக்காது” என பெரியவர்கள் அட்வைஸ் செய்வார்கள்.

இந்த உலகப் பின்னணியில் இயேசுவின் செயல் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. இயேசுவுக்குப் பசிக்கிறது. பார்க்கிறார், அங்கே ஒரு அத்தி மரம் நிற்கிறது. தூரத்திலிருந்து பார்த்தால் செழித்து நிற்கிறது மரம். இலைகள் சிலிர்த்து அசைகின்றன. அதில் ஏதாவது கனி இருக்கும் பசியாற்றிக் கொள்வோம் என நினைக்கிறார் அவர்.

நெருங்கிச் சென்ற இயேசு மரத்தை உற்றுப் பார்க்கிறார். கனிகள் இல்லை. ஒவ்வொரு கிளையாக எட்டிப் பார்க்கிறார். ஊஹூம்.. எங்கும் கனிகளைக் காணோம். பசியோடு வந்த இயேசு, பசியோடு திரும்ப வேண்டிய சூழல். எதிர்பார்ப்போடு வந்த இயேசு, ஏமாற்றத்தோடு திரும்ப வேண்டிய கட்டாயம்.

ஏன் கனி இல்லை என்பதற்குக் காரணம் இருக்கிறது ! அது உலகம் ஒத்துக் கொண்ட காரணம். அது ஒரு சர்வதேச விதி போல, நிராகரிப்புக்கு உள்ளாகாத காரணம். சீசன் இல்லை, அதனால பழம் இல்லை ! அந்த மரம் உலக வழக்கத்தோடும், உலக நியதிகளோடும் நூறு சதவீதம் பொருந்திப் போகிறது.

ஆனால், அந்த அத்திமரத்தை இயேசு சபித்தார். அது பட்டுப் போனது !

கிறிஸ்தவ வாழ்க்கை கனி கொடுக்கும் வாழ்க்கையாய் இருக்க வேண்டும் என இயேசு தனது பல முறை வலியுறுத்துகிறார். கனிகொடுக்காத வாழ்வினால் பயனில்லை என எச்சரிக்கையும் விடுக்கிறார். இந்த அத்திமர நிகழ்வின் வாயிலாக இயேசு சொல்ல வருகின்ற செய்தி, “கிறிஸ்தவன் கனி கொடுக்க தனியாக சீசன் ஏதும் இல்லை” என்பது தான்.

எப்போதுமே கனிகொடுக்கின்ற வாழ்க்கையையே இயேசு விரும்புகிறார்.

நினையாத நேரத்தில் தான் மனுமகன் வருவார், கனிகளோடு தயாராய் இருக்க வேண்டும்.

நினையாத நேரத்தில் தான் கன்னமிட்டுத் திருட திருடன் வருவான், விழிப்பாய் இருக்க வேண்டும்.

நினையாத நேரத்தில் தான் தொலை தூரம் சென்ற தலைவன் வருவான், தயாராய் இருக்க வேண்டும்.

அங்கே சாக்குப் போக்குகளுக்கோ, சால்ஜாப்புகளுக்கோ இடமே இல்லை.

இது எனது சீசன் அல்ல என கிறிஸ்தவர்கள் சொல்ல முடியாது. காரணம் அவர்கள் படைப்பின் இயல்போடு இருப்பவர்கள் அல்ல, படைத்தவரின் இயல்போடு இருப்பவர்கள்.

ஓய்வு நாள் மட்டுமே இறைவனுக்கானது, அந்த நாளில் கனிகளைக் கொடுப்பேன். கிறிஸ்மஸ் சீசன் வருகையின் காலம், அதில் கனிகொடுப்பேன். தவக்காலம் அதாவது லெந்து காலம் மனம் திரும்புதலின் காலம், அப்போது கனி கொடுப்பேன் என்றெல்லாம் சொல்லும் சீசன் கிறிஸ்தவர்களை இறைவன் விரும்புவதில்லை.

காரணம் பிறரைப் போல இருப்பதில் அல்ல, இறையைப் போல் இருப்பதில் தான் நமது ஆன்மிகம் ஆழப்படுகிறது. இலைகளின் வசீகரம் மக்களை ஈர்க்கலாம், கனிகள் இல்லையேல் இறைவனால் நிராகரிக்கப்படுவோம். கனி கொடுப்பதற்குக் காலம் தாழ்த்தினால், நாம் கனி கொடுக்கவே முடியாதபடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம்.

இலை வாழ்வு, நமக்கு நிலை வாழ்வைத் தருவதில்லை.

கனிகொடுப்போம்.

சீச‌னில் கனிகொடுக்கும் சாதாரண வாழ்க்கையல்ல,

ஈசனில் கனிகொடுக்கும் புது வாழ்வு !

எப்போது கனிகொடுப்போம் என்பதல்ல,

எப்போதும் கனிகொடுப்போம் என்பதே சிந்தையாய் இருக்கட்டும்.

*

சேவியர்

Posted in Parables of JESUS

இயேசு சொன்ன உவமைகள் 11 : நல்ல சமாரியன்

Image result for Good samaritan

லூக்கா 10 : 25..36

திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார்.

அவர் மறுமொழியாக,
‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’
என்று எழுதியுள்ளது” என்றார்.

இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.

அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:

“ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை⁕ எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.

“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

இயேசுவிடம் கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் அவரை எப்படியாவது மாட்டி விடவேண்டும் எனும் நோக்கத்தில் தான் கேள்விகளைக் கேட்டார்கள். அதிலும் குறிப்பாக, மறைநூல் அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், பரிசேயர்கள், குருக்கள் போன்றவர்களுடைய கேள்விகள் இரண்டு சிந்தனைகளை உள்ளடக்கியனவாகவே இருந்தன.

1. தங்களுடைய மறை ஆளுமையை, மத அறிவை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கம்.

2. இயேசுவை அவரது வாயாலேயே மாட்ட வைக்க வேண்டும் எனும் சிந்தனை.

இந்த கேள்வியும் அப்படிப்பட்ட‌ ஒரு கேள்வி தான். இங்கே கேள்வி கேட்ட நபர் திருச்சட்டத்தை அலசி ஆராய்ந்தவர். மத சட்டங்களின் சந்து பொந்துகளில் உலவியவர். அவருடைய கேள்வி “நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்” என்பது.

யூதர்களுடைய நம்பிக்கைப்படி, நிலைவாழ்வு பெறவேண்டுமெனில் மத சட்டங்களைக் கடைபிடித்தால் போதும். இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்பதற்காக அவன் அந்தக் கேள்வியை இயேசுவின் முன்னால் வைக்கிறான்.

சட்ட வல்லுநருக்கு இயேசு சட்டத்தின் வழியிலேயே சென்று ஒரு கேள்வியைக் கேட்கிறார். “திருச்சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறது ?”

கேள்வி கேட்டவனுக்கு குஷி. இந்த ஏரியாவில் அவன் எக்ஸ்பர்ட். சட்டென சொல்லி விடுகிறான் பதிலை. எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, உன்னைப் போல உனக்கு அடுத்திருப்பவனை நேசி. அது தான் திருச்சட்டத்தின் சாரம்சம் என்றான்.

சரியாகச் சொன்னாய். அப்படியே செய், உனக்கு நிலைவாழ்வு கிடைக்கும் என்றார் இயேசு.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிப்பவன், மனிதனை நேசிக்காமல் இருக்க முடியாது. “என்னை நேசிப்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிப்பான்” என்பதே இயேசுவின் வாக்கு. இறைவனின் கட்டளைகள் மனிதனை அன்புசெய்வதில் தான் நிறைவு பெறுகின்றன.

கேள்வி கேட்டவனுக்கு அத்துடன் திருப்தி வரவில்லை. தான் எல்லாமே பக்காவாக செய்து வருவதாக அவனுக்கு ஒரு தற்பெருமை. கேள்வி கேட்டவன் ஒரு யூதனாய் இருக்கலாம். அவன் தன்னுடைய நேர்மைத் தன்மையை வெளிப்படுத்தி விடும் நோக்கில் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“யார் எனக்கு அடுத்திருப்பவன்”, எனது அயலான் யார் ? யார் எனக்கு பிறன் ?

அப்போது தான் இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.

வழியிலேயே கள்வர்களால் குற்றுயிராக்கப்பட்ட நிலையில் கிடக்கிறார் ஒரு மனிதர். ஒரு குரு, குருவுக்கு உதவி செய்யும் லேவியர் இருவரும் தற்செயலாய் அந்த வழியாய் வருகின்றனர். ஆனால் அவனைக் கண்டதும் விலகிச் சென்றனர். அவனுக்கு உதவ மத மனங்கள் முன்வரவில்லை. அப்போது அங்கே பயணமாய் வருகிறான் சமாரியன் ஒருவன். யூதர்களின் ஜென்ம விரோதி.

அவன் அடிபட்டவனை நெருங்கி, முதலுதவி செய்து, விலங்கின் மீது ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டு சென்று, பணம் கொடுத்து, மீண்டும் தேவைப்பட்டால் தருவதாக உத்தரவாதமும் கொடுத்து கிளம்பிச் செல்கிறான்.

இப்போது இயேசு கேள்வியை திருப்பிக் கேட்கிறார். அடிபட்டவனுக்கு யார் அயலான் ? “அவனுக்கு இரக்கம் காட்டியவனே” என்கிறான் திருச்சட்ட வல்லுநர். அவனுடைய வாயில் அந்த ‘சமாரியன்’ எனும் வார்த்தையே வரவில்லை. அந்த அளவுக்கு வெறுப்பு அவனுக்குள் இருந்தது.

இயேசு சொன்னார், “நீயும் போய் அவ்வாறே செய்”

தேவையில் இருக்கும் நபருக்கு உதவுபவனே அடுத்திருப்பவன். அதாவது இதயங்களால் அடுத்திருக்க வேண்டும், உடலாலோ, நில எல்லைகளாலோ அடுத்திருப்பதில் எந்த பயனும் இல்லை. மனித நேயத்தை மறுதலிக்கும் விஷயங்களில் இறைவன் இருப்பதில்லை.

இந்த உவமை நமக்கு பல்வேறு விஷயங்களைக் கற்றுத் தருகிறது. அந்த படிப்பினைகளில் ஒரு பத்து சிந்தனைகளைப் பார்ப்போம்.

1. மிக முக்கியம் என நாம் நினைக்கின்ற நமது அன்றாட வேலைகளுக்கும், பிறருடைய தேவைகளுக்கும் இடையேயான போராட்டம் இங்கே வெளிப்படுகிறது. குருவும், லேவியும் தங்களுடைய ஆலயப் பணியே மனித நேயப் பணியை விட முக்கியம் என நினைத்து ஒதுங்கிச் சென்றார்கள். ஆனால் கடவுள் அவர்களை விட்டு விலகியே இருக்கிறார்.

2. மத சட்டங்கள், சம்பிரதாயங்களை மனித நேயப் பணிகளுக்காக விட்டு விடுவதும், மீறுவதுமே இறைவன் விரும்புவது. அதையே தனது போதனைகளில் அவர் பலமுறை சுட்டிக் காட்டுகிறார். ஆலயச் சடங்கை விட அடிபட்டவனுக்கான உதவியே இறைவனின் சித்தம்.

3. தற்செயலான நிகழ்வுகள், இறைவன் நமக்கு தரும் வாய்ப்புகள். குருவும், லேவியனும் அந்த வழியே தற்செயலாக இறைவனால் அழைத்து வரப்பட்டனர். ஆனால் தங்களுக்குக் கொடுத்த வாய்ப்பை அவர்கள் தவற விட்டனர். எதேச்சையாய் நடக்கும் நிகழ்வுகளின் மூலமாய் இறைவன் நம்மிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

4. அந்த சமாரியன் அடிபட்டவனை நெருங்குகிறான். உடனடித் தேவை என்ன என்பதை நிறைவேற்றுகிறான். அவனை பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறான். இந்த மூன்று நிலையிலான உதவிகளை நாம் பிறருக்குச் செய்யத் தயாராய் இருக்க வேண்டும்.

5. அந்த சமாரியன் தனது பயணத்தில் அசொகரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டான். தன்னிடமிருந்த திராட்சை ரசம், மது, பணம் போன்றவற்றை இழக்க தயாரானான். தனது நேரத்தை இழக்க துணிந்தான். இந்த மூன்று நிலையிலான இழப்புகளை பிறருதவிப் பணிகளில் நாம் விரும்பி ஏற்க வேண்டும்.

6. இயேசு தனது விண்ணக மாண்பிலிருந்து இறங்கி, பாவத்தில் அடிபட்டுக் கிடந்த நம்மை மீட்டு, மீட்புக்குள் அழைத்துச் செல்லும் ஆன்மீகப் பாடம் இந்த சமாரியனின் செயல்களில் மிளிர்கிறது. அந்த நல்ல சமாரியனின் பாதையில் பயணம் செய்ய தயாராக வேண்டும்.

7. உதவிக்கரம் நீட்ட வந்தபோது சமாரியன் வேறு எதையும் யோசிக்கவில்லை. அடிபட்டுக் கிடந்தவனுடைய மதம் இனம் குலம் கோத்திரம் எதுவுமே அவனுடைய மனதில் எழவில்லை. தன்னைப் போல அவனும் ஒரு மனிதன் எனும் சிந்தனையே அவனிடம் இருந்தது. அதுவே மனிதநேயப் பணிகளின் முக்கியமான தேவை.

8. இயேசுவிடம் கேள்விகள் கேட்பது நல்லது. அந்த கேள்விகளின் நோக்கம் நமது ஆன்மீக வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே தவிர வேறு எதற்காகவும் இருக்கக் கூடாது. தெளிவுகள் கிடைக்கும்போது அதை பின்பற்றும் மன உறுதியும் நமக்கு இருக்க வேண்டும்.

9. நிலைவாழ்வுக்குள் செல்ல வேண்டுமெனில் நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதும், பிறரை மன்னிப்பது மட்டுமே போதாது. மனிதநேயப் பணிகளுக்காக நமது இதயத்தை விருப்பமுடன் திறந்து வைத்திருக்கவும் வேண்டும். பிறரை நிராகரித்துவிட்டு, நாம் விண்ணகம் செல்ல முடியாது.

10. எருசலேம் முதல் எரிகோ வரை என்பது நமது வாழ்க்கையின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பயணம் எனலாம். அதில் நாம் சந்திக்கும் நபர்கள் எக்கச்சக்கம். அவர்களுக்கு உதவும் மனம் நமக்கு வேண்டும். குறிப்பாக அடிபட்டுக் கிடந்தவனைப் போல, “வாய் திறந்து உதவி கேட்காத‌” நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய தேவையை அறிந்து உதவும் நிலை வேண்டும். உதவி என்பது ஆறுதல், பொருளாதாரம், நேரம், என எதுவாகவும் இருக்கலாம்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

Posted in Parables of JESUS

இயேசு சொன்ன உவமைகள் 12 : எதிர்பார்க்கும் நண்பன்

Image result for the friend in need parable

“உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார்.

எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ‍என்றார் இயேசு (Luke 11 5-8 )

இயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக பைபிள் சொல்கிறது. இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது.

“இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார் ( லூக்கா 11 : 1 )

அப்போது இயேசு அவர்களுக்கு பிரபலமான அந்த ஜெபத்தைச் சொல்லிக் கொடுக்கிறார். அது கர்த்தர் கர்ப்பித்த ஜெபம் என அழைக்கப்படுகிறது. அந்த செபம் இது தான்.

‘தந்தையே, உமது பெயர்
தூயதெனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
எங்கள் அன்றாட உணவை
நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம்
செய்வோர் அனைவரையும்
நாங்கள் மன்னிப்பதால் எங்கள்
பாவங்களையும் மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு
உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்”

அதைச் சொல்லி முடித்ததும் இயேசு இந்த உவமையையும் சொல்கிறார். தனக்காக செபிக்கும் செபமாக கர்த்தர் கர்ப்பித்த செபத்தைச் சொன்ன இயேசு, பிறருக்காக எப்படி செபிக்க வேண்டும் என்பதற்காக அந்த உவமையைச் சொல்கிறார்.

இந்த உவமையும், நிகழ்வும் பல பாடங்களை நமக்கு கற்றுத் தருகின்றன.

1. இயேசு செபிப்பதை கவனிக்கும் சீடர்கள் தாங்களும் அதே போல செபிக்க ஆர்வம் கொள்கின்றனர். அதற்காக இயேசுவை அணுகுகின்றனர். செபம் வாழ்க்கையின் முக்கியமான அம்சம் என்பதைப் புரிந்து கொள்கின்றனர். நாமும் நமது வாழ்க்கையில் இயேசுவின் செயல்பாடுகளைக் கவனித்து, அதே போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக செபத்தின் தேவையை உணரவேண்டும்.

2. நள்ளிரவில் வீட்டுக்கு வருகின்ற நண்பரின் “உடனடித் தேவை” என்ன என்பதை சக நண்பர் கண்டு கொள்கிறார். நண்பர் கேட்பதற்கு முன்பாகவே அந்தத் தேவையை நிவர்த்தி செய்ய முயல்கிறார். நாமும் நமது சக நண்பர்கள், சுற்றியிருப்பவர்கள், நம்மை அணுகுபவர்கள் இவர்களின் தேவைகளை “அவர்கள் சொல்லாமலேயே” புரிந்து கொண்டு அதை நிவர்த்தி செய்யும் மனநிலையில் நாம் இருக்க வேண்டும்.

3. தன்னிடம் எதுவும் இல்லாத சூழலில் இறைவனை தேடி ஓடுகிறார் அவர். இறைவன் நம்மிடம் தந்திருப்பவை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காகவே. நம்மிடம் பகிர்தலுக்கான வாய்ப்புகள் இருக்கும் போது முதலில் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, “உனக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்” என்பது போலித்தனம். எதுவும் இல்லாத சூழலில் நாம் இறைவனையே நாடவேண்டும்.

4. நாம் ஒன்றுமற்ற நிலையில் இருக்கும் போது நள்ளிரவின் இருளிலும், மிரட்டும் சூழலிலும் இறைவனை தேடிப் போக தயங்காத மனம் வேண்டும். பிறருக்காக நாம் இறைவனை நாடிச் செல்வதை இறைவன் விரும்புகிறார். பிறருக்காக வேண்டுகின்ற செபங்கள் கேட்கப்படும் என்பதை பைபிள் நமக்கு பல இடங்களில் தெளிவாக்குகிறது.

5. கதவைத் தட்டும் மனம் வேண்டும். தயக்கத்தின் படிகளைத் தாண்டி, ‘சுயத்தை’ அழித்து இறைவனின் கதவைத் தட்டி உதவி தேடும் மனம் ரொம்ப முக்கியம். கதவு அடைக்கப்பட்டிருந்தாலும் அது திறக்கும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

6. “மூன்று அப்பங்கள் வேண்டும்” என்கிறார் நண்பர். நாம் இறைவனிடம் வேண்டும்போது அந்த சூழலுக்கு, அந்த நபருக்கு என்ன தேவையோ அதை கேட்டுப் பெறுவதே சரியானது. அதிகமாகவோ, குறைவாகவோ கேட்பது சரியானதல்ல. இறைவன் ஆசைகளை நிவர்த்தி செய்பவரல்ல, தேவைகளை நிவர்த்தி செய்கிறவர்.

7. நண்பருக்காய் இறைவனிடம் வேண்டுவதை தன்மேல் விழும் “கடனாகக்” கேட்கும் மனநிலை உயர்வானது. அது சக நண்பரை தமது பாகமாகப் பார்க்கும் உயரிய மனநிலை. என்னைப் போல அயலானை நேசிக்கும் மனநிலை. அந்த மனநிலையோடு இறைவனிடம் கேட்கவேண்டும். நமக்காகக் கேட்கும் போது எப்படி உருக்கமாக, நெருக்கமாக, ஆழமாக கேட்கிறோமோ அந்த அளவுக்கு அல்லது அதற்கு மேலாகவே நாம் நண்பர்களுக்காகக் கேட்கவேண்டும்.

8. தொடர்ந்து கேட்கும் மனநிலை வேண்டும். நண்பரின் நிராகரிப்புக் குரல் கேட்டாலும், அவர் தருவார் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு வெற்றி தரும். இறைவனும் பல வேளைகளில் நமக்கான வரங்களை தாமதப்படுத்துவார். அது நமது விசுவாசத்தை பலப்படுத்துவதாகவோ, நாம் சரியான நேரத்தில் கேட்காத காரணத்தாலோ இருக்கலாம். ஆனால் கேட்பது பயனுள்ள விஷயமென இறைவன் கண்டால் அதைத் தராமல் இருப்பதில்லை.

9. பிறருக்காக அசௌகரியங்களைத் தாங்கும் மனநிலை வேண்டும். நள்ளிரவு நேரம், இருளான சூழல் என்றாலும் கூட கை விரிக்காமல் நண்பனின் தேவையை நிவர்த்தி செய்ய புறப்படும் மனம் வேண்டும். அவமானங்கள், நிராகரிப்புகளைத் தாண்டி நண்பனுக்காய் நிற்கும் நெஞ்சுரம் வேண்டும்.

10. இறைவனோடு ஆழமான நட்புறவு கொள்ள வேண்டும். தேவையான நேரத்தில் சென்று அறிமுகம் செய்து கொண்டு உதவி கேட்பது சரியான வழிமுறை அல்ல. இறைவனோடு ஆழமான நட்பு கொண்டு தினமும் அவர் வழியில் நடக்க வேண்டும். அப்போது தான் நள்ளிரவிலும் கதவைத் தட்டும் அன்னியோன்யம் உருவாகும். போ என்றாலும் கூட விடாப்பிடியாய் தட்டும் உரிமை உருவாகும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

Posted in Parables of JESUS

இயேசு சொன்ன உவமைகள் 13 : கடைசி இடத்தில் அமருங்கள்

Image result for parable of lowest place

லூக்கா 14 : 7 முதல் 14 வரை

விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை;

“ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.

உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள்.

அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”

பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.

மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

***

இயேசுவின் இந்த போதனை, நேரடியான உவமையாக இல்லாமல் ஒரு அறிவுரை போல வந்திருக்கிறது. பந்திகளில் முதன்மையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என முண்டியடித்த மக்களைக் கண்ட இயேசு பொதுப்படையாக இந்த அறிவுரையைச் சொல்கிறார். அது ஆன்மீகச் செறிவான அறிவுரையாய் அமைந்திருக்கிறது.

அந்தக் காலத்தில் யூதர்கள் விருந்துக்கு தங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலையாட்கள், பெரிய மனிதர்கள் போன்றவர்களை அழைப்பதுண்டு. ஆங்கில யூ வடிவிலான மேஜையில் அவர்கள் வந்தமர்வார்கள். விருந்துக்கு அழைத்தவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருப்பது மிகப்பெரிய கவுரவமாய் பார்க்கப்பட்டது. கடைசி இடத்தில் இருப்பது, குறைவானதாகக் கருதப்பட்டது. இந்த சூழலில் தான் இயேசு இந்த அறிவுரையைச் சொல்கிறார்.

இந்த பகுதி நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது.

1. மேன்மை இறைவனிடமிருந்து கிடைக்க வேண்டுமெனில், தாழ்மை நம்மிடம் இருக்க வேண்டும். மற்றவர்களை உயர்வாகக் கருதி அவர்களுக்கு வழிவிட்டு நாம் கடைசி இடங்களில் அமரும் போது, நமது தாழ்மையைக் காணும் இயேசு நமக்கு மேன்மையைத் தருகிறார். இதற்கு மேல் தாழ்வான இடமில்லை எனுமளவில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பது நமக்குள் கர்வமில்லை என்பதன் அடையாளம்.

2. மனிதர்கள் முன்னிலையில் பெருமையடைய வேண்டும் எனும் சிந்தனையே தவறானது. மனிதர்களின் முன்னால் உயர்வாய்க் கருதிக் கொள்வதில் எந்த ஆன்மீக வளர்ச்சியும் இல்லை. இறைவன் முன்னிலையில் நாம் உயர்வாய் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். எனவே எந்த விஷயத்தைச் செய்யும் போதும் மனிதர் பார்வையில் இழச்சிக்குரியதாய் இருந்தாலும், இறைவன் பார்வையில் புகழ்ச்சிக்குரியதையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

3. இறைவனால் நமக்குக் கிடைக்கும் அழைப்பே மிகப்பெரிய விருது. எனவே அழைக்கப்பட்ட இடத்தில் நாம் முண்டியடிக்க தேவையில்லை. என்னை இறைவன் அழைத்திருக்கிறார் எனும் மகிழ்ச்சி மட்டுமே போதுமானது. இவ்வளவு பாவியான என்னை இறைவன் அழைத்திருக்கிறார் எனும் உணர்வு இருந்தால் நாம் வேறெந்த புகழ் தேடலுக்குள்ளும் புக மாட்டோம்.

4. அழைத்தவரே இருக்கைகளை நமக்கு அளிப்பவர். எந்த இருக்கையில் அமர வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கக் கூடாது. அது இறைவனின் திட்டப்படியே நடக்க வேன்டும். நம்மை அழைத்தவருக்குத் தெரியும் நம்மை எங்கே அமர வைக்க வேண்டும் எனும் திட்டம். அதற்காய்க் காத்திருக்க வேண்டும்.

5. தாழ்மை என்பது உண்மையாய், ஆத்மார்த்தமாய் வரவேண்டும். இறைவனிடம் மேன்மை கிடைக்கும், இறைவனால் ஏதோ ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காக வெளிக்காட்டப்படும் போலித்தனமான தாழ்மையாய் இருக்கக் கூடாது. உண்மையிலேயே இதயத்தில் “நான் இந்த இடத்துக்கானவன் தான்” எனும் சிந்தனை இருக்க வேண்டும்.

6. விருந்துக்கு நாம் அழைக்கும்போது பதிலுக்குப் பதில் செய்ய வலிமை அற்றவர்களையே அழைக்க வேண்டும். மற்ற அனைத்து வித விருந்துகளும் ஆன்மீக வெளிச்சத்தில் வெற்றிடங்களே. நண்பர், உறவினர், உடன் ஊழியர் எனும் எல்லா எல்லைகளையும் தாண்டிய ஏழைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோரை விருந்துக்கு அழைக்க இறைவன் அறிவுறுத்துகிறார்.

7. மனிதரால் கிடைக்கும் கைமாறு, இறைவனால் கிடைக்கும் கைமாறு. இதில் எது வேண்டும் என தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது நமது ஆன்மீகத்தின் வெளிப்பாடு. இறைவனுக்கானதை விருப்பத்தோடு தேர்ந்தெடுக்கையில் மனிதர்களால் வரும் அங்கீகாரம் அர்த்தமற்றதாகிவிடும். மனிதர்களின் அங்கீகாரங்களை விரும்புகையில் ஆன்மீகம் அங்கே அஸ்தமனமாகிவிடும்.

8. இறைவன் பார்வையில் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், செல்வந்தர்கள், தலைவர்கள் எல்லோருமே ஒன்று தான். நாம் பிறரைப் பார்க்கும் போது இறைவனின் பார்வையில் பார்க்க வேண்டுமே தவிர நமது பார்வையில் பார்க்கக் கூடாது.

9. நமது பார்வை மனிதர்களை அவர்களுடைய பொருளாதாரம், பதவி, அந்தஸ்து போன்றவற்றின் அடிப்படையிலேயே அளவிடுகிறது. எனவே தான் விருந்துகளில் இவர்கள் இடம் பெறுகின்றனர். ஏழைகள் மீதியானவற்றின் பிள்ளைகளாய் வீதியில் நிற்கின்றனர். அந்த நிலையை மாற்ற வேண்டும். இறைவனின் பந்தியில் அனைவரும் சமம். அது போல, நமது அன்பின் பந்தியிலும் அனைவரும் சமமாய் இருக்க வேண்டும்.

10. தாழ்மையை அணிந்து கொண்டு இறை பணி ஆற்றுபவர்களுக்கும், இறைவனின் சித்தப்படி வாழ்பவர்களுக்கும் இந்த வாழ்வில் அவமானங்கள் கிடைக்கலாம். ஆனால் மறுவாழ்வில் நிச்சயம் வெகுமானம் உண்டு என்பதை இந்த அறிவுரை நமக்கு விளக்குகிறது.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.
தாழ்மையை இதயத்தில் அணிந்திருப்போம்,
ஏழைகளை இதயத்தால் அரவணைப்போம்.

*

Posted in Parables of JESUS

இயேசு சொன்ன உவமைகள் 14 : விருந்துக்கான அழைப்பு

Image result for the great feast parable

லூக்கா 14 : 15..24

இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்றார். இயேசு அவரிடம் கூறியது:

“ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ‘வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது’ என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்.

முதலில் ஒருவர், ‘வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார். ‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார் வேறொருவர். ‘எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது’ என்றார் மற்றொருவர்.

பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், ‘நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்’, என்றார். பின்பு பணியாளர், ‘தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது’ என்றார்.

தலைவர் தம் பணியாளரை நோக்கி, ‘நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்’ என்றார்.”

கதையின் பின்னணி இது தான் :

இயேசுவை ஒருவர் விருந்துக்கு அழைக்கிறார். அங்கே எல்லோரும் முதன்மை இடங்களுக்குப் போட்டி போடுகிறார்கள். இயேசு அவர்களிடம், எப்போதும் கடைசி இடங்களையே தேர்ந்து கொள்ளுங்கள். தாழ்மையை விரும்புவதே மேன்மையின் முதல்படி என்கிறார். பின் விருந்து ஏற்பாடு செய்திருந்தவரிடம், விருந்துக்கு அழைக்கும்போது ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டோர் ஆகியோரை அழையுங்கள். அப்போதுதான் அவர்கள் உமக்கு கைமாறு செய்ய மாட்டார்கள். கடவுள் உம்மை ஆசீர்வதிப்பார் என்கிறார்.

இந்த சூழலில் தான் பந்தியிலிருந்த ஒருவர் இந்த வாக்கியத்தைச் சொல்கிறார்.

“இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்”. மரணத்துக்குப் பிந்தைய வாழ்வைப்பற்றியும், அந்த மறுவுலக விருந்தைப் பற்றியும் யூதர்களும், ஆபிரகாமின் வழித்தோன்றல்களும் அறிந்திருந்தனர். எனவே தான் தாங்கள் ஏற்கனவே அழைக்கப்பட்டவர்கள் எனும் மெல்லிய கர்வத்தில் அவர் அதைச் சொல்கிறார்.

இயேசு பதிலாகச் சொன்ன கதையோ அவர்களைக் குழப்பமும் கோபமும் அடையச் செய்திருக்க வேண்டும். இப்போது அந்தக் கதையை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்.

இந்தப் பகுதி சொல்லும் சிந்தனைகள் இவைதான்.

1. இறையாட்சி விருந்துக்கு “அழைக்கப்பட்டவர்கள்” மட்டுமே கலந்து கொள்ள முடியும். அழைப்பு பெரும்பாலும் இறைவனின் பணியாளர்கள் மூலமாகவே வரும். அவர்களே நற்செய்தியை அறிவிக்கும் உரிமையாளர்கள். அழைப்பு கிடைக்காதவர்கள் இறையாட்சி விருந்தில் நுழைய முடியாது.

2. அழைப்பு வந்ததும் ஏற்றுக் கொள்ளும் மக்களுக்கே நித்திய வாழ்வு கிடைக்கும். அழைப்பை நிராகரிப்பவர்களை இறைவன் நிராகரிக்கிறார். இயேசு எனும் ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டு, மாபெரும் மீட்பின் விருந்து தயாராகியிருக்கிறது. அந்த விருந்துக்கான அனுமதி இலவசமாய் தரப்படுகிறது. அந்த விருந்தை நிராகரிப்பவர்கள் இறைவனின் தியாகத்தையும், மீட்பின் திட்டத்தையும் முழுமையாய் புறக்கணிப்பவர் ஆகின்றனர்.

3. ஒரு காலம் உண்டு, அதன்பின் அழைப்பு கிடைப்பதில்லை. நிராகரித்தவர்கள் விலக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. விருப்பமே முக்கியம். அரசரின் விருந்தானது பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். அழைப்பு பல வாரங்களுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும். எனினும் மக்கள் அதை உதாசீனம் செய்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் அழைப்பு கிடைப்பதில்லை.

4. மூன்று விதமான மனிதர்கள் இங்கே இருக்கின்றனர். முதல் வகையினர் , “தாங்கள் ஏற்கனவே நீதிமான்கள். நிச்சயம் விண்ணகம் செல்வோம்” எனும் கர்வத்தில் இருப்பவர்கள். இரண்டாவது வகையினர், “பிற இன மக்கள்” மீட்பின் திட்டத்துக்கு வெளியே இருந்தவர்கள். அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் போது அதற்காய்த் தயாராகி வந்து விடுகின்றனர். மூன்றாவது வகையினர், “தாங்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள்” என புழுங்கிக் கிடப்பவர்கள். அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் போது அவர்களால் அதை நம்ப முடியவில்லை.

5. மூன்று விதமான அழைப்புகள் விடுக்கப்படுகின்றன. முதல் குழுவினருக்கு விருந்து தயாராகிவிட்டது என “அறிவிக்கப்படுகிறது”. இரண்டாவது பிரிவினரிடம் அழைப்பு மட்டும் விடுக்கப்படவில்லை, அவர்களைக் கையோடு “கூட்டி வரும்” முயற்சி நடக்கிறது. மூன்றாவது பிரிவினரை “வற்புறுத்திக் கூட்டி வருகின்றனர்”. ஏனென்றால் அவர்கள் தங்களுக்கு மீட்பின் திட்டத்தில் பங்கில்லை என நினைத்திருப்பவர்கள். அவர்களுக்கு மீட்பைப் புரியவைக்க அதிக அழுத்தம் தேவைப்படுகிறது.

6. மூன்று சாக்குப் போக்குகள் இங்கே சொல்லப்படுகின்றன. ஒருவர் வயல் வாங்கியிருக்கிறார், ஒருவர் மாடுகள் வாங்கியிருக்கிறார், இன்னொருவர் திருமணம் செய்திருக்கிறார். இது மனிதன் கடவுளின் அழைப்பை விட உலக செல்வங்களை அதிகமாய் நேசிக்கிறான் என்பதன் வெளிப்பாடு. வயலை நீண்ட கால சொத்தாகவோ, ஒரு தொழிலாகவோ கொள்ளலாம். மாடுகள் தற்காலிக இன்பங்கள், திருப்திகள் எனக் கொள்ளலாம். திருமணம் என்பது உறவுகளுக்குத் தரும் முன்னுரிமை எனலாம். அழைப்பா, உலகா எனும் கேள்வி இங்கே கேட்கப்படுகிறது. சாக்குப் போக்கு சொல்பவர்கள் உலகு என்கின்றனர்.

7. இறைவனின் விருந்தொன்றும் பெரிதல்ல, தங்களுடைய வாழ்க்கை அதை விட இனிமையானது என கருதும் மக்கள் மீட்படைவதில்லை. அவர்கள் விருந்தை நிராகரிக்க சாக்குப் போக்குகளைத் தேடுகின்றனர்.

8. அழைப்பு விடுக்கப்படுவதால் மட்டும் ஒருவர் மீட்பில் நுழைவதில்லை. அழைப்பை ஏற்றுக் கொண்டு பயணிக்கும் போது தான் இரட்சிப்பில் இணைய முடியும். அழைப்புக்குச் செவி கொடுக்காத எவருமே இறை விருந்தில் பங்கு கொள்வதில்லை.

9. அழைப்பை நிராகரிக்கும் போது இறைவனின் சினம் நம்மீது விழும் எனும் உண்மை வெளிப்படுகிறது. அழைப்பு எளிமையானதல்ல. அது இறைமகனின் மரணத்தின் மீது உருவாக்கப்பட்டது. அதை நிராகரிப்பது என்பது இறைவனின் அதிகபட்ச அன்பை உதாசீனம் செய்வது போல. அங்கே இறைவனின் கோபம் வெளிப்படுகிறது.

10. எல்லாம் ஏற்பாடு செய்தபின்பே அழைப்பு விடுக்கப்படுகிறது. அந்த விருந்துக்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் எதுவுமே இல்லை. அழைப்பை ஏற்பதும், அழைப்பின்படி நடப்பதும் மட்டுமே நாம் செய்ய வேண்டிய காரியங்கள்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம். அழைப்புக்கு செவிமடுக்கத் தயாராய் இருப்போம்.