Posted in இயேசு, இலக்கியம், கிறிஸ்தவ இலக்கியம், Bible Poems

கற்பனையில் ஒரு கானாவூர்

கானாவூர் களேபரத்தில்
முற்றங்கள்
இயலாமையின் 
கரங்களைப் பிசைந்து கிடந்தன.

இன்னும் சிறிது நேரத்தில்
ஏளனத்தின் எச்சங்கள்
இந்த 
எல்லைகள் எங்கும விதைக்கப்படும். 

தீர்ந்து போன இரசம்
கவுரவத்தின்
மெல்லிய கழுத்தை
முடிச்சு போட்டு மூழ்கடித்துவிடும்.

அந்தத்
திருமண களிப்பிடையே
இழையோடியது
வெளிக்காட்டா தவிப்பு !

வேளை வரும் முன்பே
வேலை வந்தது
பரமனுக்கு !

அவர்
செய்வதெல்லாம் செய்யுங்கள்
என்றார் அன்னை !

சாடிகளில்
நீர் நிறையுங்கள் என்றார் இயேசு !

பதட்டத்தின்
குழந்தைகளாயிருந்த
பணியாளர்கள்,
எரிச்சலின் ஏவலர்கள் ஆனார்கள்.

தீர்ந்தது
நீரல்ல, இரசம் !
அவர்களுடைய உதடுகள்
அசையாமல் கூக்குரலிட்டன. 

தூய்மைச் சடங்கின்
தருணமல்ல இது
திருமண விருந்தின் தினம் !
அவர்களின்
வெறித்த பார்வைகள் சத்தமிட்டன. 

இருக்கும் பிரச்சினைக்கு
தீர்வைக் கேட்டால்
புதிய பிரச்சினைக்கு
பதியம் போடுகிறாரே
என பல் கடித்தனர்.

நீர் நிரப்பச் சொன்னவரை
நிர்கதியாய் விட்டுவிட்டு
நீங்கினர்.

பக்கத்தில் எங்கேனும்
இரசம் கிடைக்குமா 
என
பக்கமிருந்தவர் ஓடினர். 

இரவல் இரசமேனும் 
கிடைக்குமா 
என
மிச்சம் இருந்தவர்கள் ஓடினர். 

காலியாய்க் கிடந்தன
கற்சாடிகள் !
மலைத்து நின்றார் மரியா. 

பிதாவே இவர்களை மன்னியும் !
இயேசு
வெற்றிடத்தின் வெற்றிக்காய்
பிரார்த்தனை செய்தார் 

முதல் புதுமையின்
முதுகெலும்பு
நம்பிக்கை இல்லாத பணியாளர்களால்
உடைந்து விழுந்தது. 

கானாவூர் களையிழந்தது !

*

சேவியர்
Posted in Articles

சிறுவனும் அப்பமும்

சிறுவனும் அப்பமும்

கூட்டம்
பசியைத் தின்று
வார்த்தைகளைக் 
குடித்துக் கொண்டிருந்தது.

பாலை நிலத்தின்
சுடுவெளியில்
வயிற்றின் வெறுமை அனலடித்தது.

இயேசு
கூட்டத்தின்
வயிற்றுப் பசியை 
விரட்ட விரும்பினார்.

“நீங்களே 
உணவு கொடுங்கள்”
சீடர்களிடம் சொன்னார் !

சீடர்கள்
வெறுமையோடு வழக்காடி
தோற்று நின்றனர். 

இயேசுவின் வார்த்தைகள்
அந்த
சிறுவனின் காதுகளில் 
வந்து விழுந்தன.

என்னிடம்
ஐந்து 
வார்க்கோதுமை அப்பங்களும்
இரண்டு மீன்களும் 
இருக்கின்றன !
அவன்
பேசிமுடிக்கும் முன்
வாயைப் பொத்தினார் 
வறுமைத் தாய்.

வார்க்கோதுமை 
அவரது வாழ்க்கையை
வறுமை வார்த்தெடுத்திருந்ததை.
விளக்கியது. 

முழுமையாய் கொடுத்தால்
நமக்கு பட்டினிதான்
வேறேதும் இல்லை
என்றார் ! 

ஏழு என்பது முழுமை
நாம்
முழுமையாய் கொடுப்பதே
வளமை !
சிறுவன் சொன்னான்.

இயேசுவின் வார்த்தை
அவனுக்குள்
சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது.

எல்லோருக்கும்
பத்தாதே, என்றார் தந்தை.

பற்ற வைப்போம்
சிறு நெருப்பு போதுமே
பெருங்காட்டைப் பொசுக்க
சிறுவன் சொன்னான்.

கொடுக்கத் தான் வேண்டுமா 
கடைசியாய் கேட்டனர்
பெற்றோர் !
கொடுக்காவிட்டால்
இதுவரை
போதனைகளைப
பெற்றுக் கொண்டிருந்ததில்
அர்த்தமில்லை, என்றான் அவன்.

எழுந்தான்,
கொடுத்தான் !

இயேசு சிரித்தார். 

முழுவதும் கொடுத்ததால்
முழுமை அடைந்தாய்,
பற்றற்று இருந்ததால்
பெற்றுக் கொள்வாய்

போகும்போது
கூடை நிறைய தருகிறேன்
எடுத்துப் போ !


*

சேவியர்
Posted in Articles, Sunday School

நாடகம் : பிற இனத்தாரின் கடவுள்

பிற இனத்தாரின் கடவுள்

காட்சி 1

( அர்பெல்லாவும், அவளது அம்மாவும் , பாட்டியும் மீட்பின் படகில் போகிறார்கள் )

பாடல் ….

அர்பெல்லா : அம்மா … இப்படி ஒரு மீட்பின் படகில ஏறி பரலோகம் போவோம்ன்னு நான் கனவுல கூட நினைச்சதேயில்லை. எவ்ளோ அற்புதமா இருக்கு.

அம்மா : ஆமா அர்பெல்லா… இப்படி ஒரு மீட்பின் படகு இருக்கு, இதன் மூலமா தான் மரண ஆற்றைக் கடக்கணும்ன்னு நமக்குத் தெரிஞ்சிருக்கவே தெரிஞ்சிருக்காது.

அர் : ஆமாம்மா.. மீனுக்கு உள்ளே இருந்து வந்த அந்த மனுஷரு மட்டும் இல்லேன்னா, உண்மை தெய்வத்தைப் பற்றி நாம அறிஞ்சிருக்கவும் மாட்டோம், மரண ஆற்றைக் கடந்திருக்கவும் மாட்டோம்.

அம்மா : உண்மை தான்.. பாகாலுக்கு பலியிடுறதும், அஸ்ரோத் கம்பங்களை வழிபடுறதும் தானே உண்மையான வழின்னு நினைச்சிட்டிருந்தோம். உண்மையிலேயே யோனா தீர்க்கத்தரிசிக்கு நாம நன்றி சொல்லணும்.

அர் : சொர்க்கத்துக்கு போனதும் அதை செய்வோம்மா….

அர் : அம்மா.. அம்மா.. அதோ பாருங்க.. தூரத்துல நெருப்பு பற்றி எரியுது… என்னம்மா அது ? இந்த மரண ஆறைக் கடக்கிற மாதிரி அதையும் கடக்கணுமா..

அம்மா : இல்லை…இல்லை, அது நரகம்.. அந்தப் பக்கம் நாம போக தேவையே இல்லை. நாம சொர்க்கத்துக்குப் பக்கம் போணும்.. சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையே பெரிய பள்ளம் உண்டு, அதை யாரும் கடக்க முடியாது.

அர் : ஓ.. அப்போ ஒரு தடவை நரகத்துக்கு போயிட்டா அவ்ளோ தானா.. அவங்க இங்கே வரவே முடியாதா ?

அம்மா : இல்லை… அவ்ளோ தான். நாம வாழும்போ கடவுளை நம்பி, அவருக்குப் பிரியமா வாழணும். இல்லேன்னா நரகம் தான் முடிவு. செத்தப்புறம் நம்மளோட பாவத்துக்கு மன்னிப்பு கிடையாது.

குரல் : ஐயோ.. மன்னியுங்கள் கடவுளே.. உம்ம வார்த்தையைத் தானே பேசினேன்.. இஸ்ரவேலரை சபிக்காதீங்கன்னு சொன்னீங்க, அதுக்கு கீழ்ப்படிஞ்சு அவர்களை நான் சபிக்கவே இல்லை. பண ஆசை மட்டும் தானே இருந்துச்சு.. எல்லா மனுஷரைப் போல நானும் நாலு காசு சம்பாதிக்கணும்ல கடவுளே… அதுக்கு தானே வழி பார்த்தேன்…. மத்தபடி நான் உங்க கூட தானே ஐக்கியமா இருந்தேன்… ஐயோ… தினமும் என் கூட பேசுவீங்களே… இப்போ பேச மாட்டேங்கறீங்களே….

அர் : அம்மா.. அங்கேயிருந்து ஒரு குரல் கேக்குதே… யாரும்மா.. அவரு.. ரொம்ப பாவமா இருக்கு….

அம்மா : அவரு தான் பிலேயாம்ன்னு ஒரு தீர்க்கத் தரிசி.

அர் : என்னம்மா சொல்றீங்க.. ? தீர்க்கத் தரிசி எப்படிம்மா அங்கே இருப்பாரு.. இறைவனோட வார்த்தைகளைப் பேசறவங்க எப்படி நெருப்பில.. என்னால நம்ப முடியல.

அம்மா : கடவுள் நீதி தவறாதவர்ம்மா.. அவரு பாரபட்சம் காட்ட மாட்டாரு. அன்பு காட்டறதுலயும் அவருக்கு பாரபட்சம் இல்லை, நீதி செய்றதுலயும் பாரபட்சம் இல்லை. கடவுளோட தீர்க்கத்தரிசியா இருந்தாலும் சரி, பாமரனா இருந்தாலும் சரி அவரோட நீதி தவறாது.

அர் : இருந்தாலும் என்னால நம்ப முடியலைம்மா… அவரு இஸ்ரேலர் தானே.. ? கடவுளோட மக்களினம் தானே ? அப்புறம் ஏன் இப்படி…

பாட்டி : இல்லம்மா.. அவரு இஸ்ரேலர் கிடையாது… அவரு புற ஜாதி மனுஷன்.

அர் : என்ன பாட்டிம்மா சொல்றீங்க ? புற ஜாதியா.. அங்கே இருந்து கூட கடவுளோட தீர்க்கத் தரிசியா ஆக முடியுமா ? ?

பாட்டி : ஆமாம்மா.. அதுவும் சாதாரண தீர்க்கத் தரிசி இல்லை, மோசே மாதிரி பெரிய தீர்க்கத் தரிசி. கடவுளே டெய்லி வந்து பேசற அளவுக்கு பெரிய தீர்க்கத் தரிசி அவரு.நல்லா குறி சொல்வாரு, யஹோவாவை தன்னோட கடவுளா ஏத்துகிட்டு வாழ்ந்தாரு.

அர் : அப்புறம் எப்படிம்மா அவரு இங்கே…

அம்மா : அவரோட பண ஆசை தாம்ம்மா காரணம். பணத்துக்காக எல்லாத்தையும் பண்ணலாம்ன்னு நினைச்சாரு. இஸ்ரேலர்களுக்கு எதிரியான மோவாப் மன்னன் பாராக் – கோட டீல் வெச்சு கிட்டாரு. அவனோட தந்திர சூழ்ச்சிக்கு இணங்கி நடந்தாரு. கடவுள் போகாதேன்னு சொன்னப்புறம் கூட கேக்காம தன்னோட ஆசையை சாதிச்சுட்டாரு… கடைசில அவர் மேலயே சாபம் வந்துச்சு..வாளால வெட்டப்பட்டு செத்துப் போனாரு.

அர் : ம்ம்.. அவரு தானே ஒரு கழுதைல போனதும், கழுதை பேசினதும்.

அம்மா : ஆமா.. அர்பெல்லா.. கரெக்டா தெரிஞ்சு வெச்சிருக்கே… ஆனா இவரைப் பற்றி நாம படிக்கிறதெல்லாம் இவர் பண ஆசையினால தீவினை செய்யத் துணிந்தவர் ந்னு தான் ம. வெறும் செல்வத்துக்காக, விண்ணக செல்வத்தையே விட்டுட்டாரு.

அர் : ஆமா நானும் கேள்விப்பட்டிருக்கேன், பிலயாம் கீழ்த்தரமான ஆலோசனை கொடுத்தாரு. அதை மோசே “பிலேயாம் கொடுத்த ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள் அதனால் அவர்கள் மேல் வாதை வந்தது” ந்னு கூட சொல்லியிருக்காரு.

பாட்டி : ஆமா, இன்னும் நிறைய இடங்கள்ல அவரைப் பற்றி சொல்லியிருக்கு…

அர் : ஆனாலும், கடவுள் பழைய ஏற்பாட்டு காலத்துல கூடவா புற ஜாதியாரை நேசிச்சாரு.. பிலயாம் மேல அவ்ளோ அன்பு வெச்சிருந்தாரே… என்னால நம்பவே முடியலை… நான் என்னவோ கடவுள் இஸ்ரேல் மக்களை. மட்டும் தான் நேசிச்சதா நினைச்சேன்.

அம்மா : கடவுள் பிற இன மக்களையும் இஸ்ரேல் மக்களைப் போலவே நேசிச்சாரு. இல்லேன்னா நாம நினிவேல பாவத்தின் உச்சத்துல இருந்தப்போ நம்மளை அழிச்சிருப்பாருல்ல. நேசிச்சதால தான் நமக்கு மீட்பைத் தந்திருக்காரு.

அர் : ஆமாம்மா.. பாவம் பிலேயாம். அவரும் நம்மள மாதிரி கடவுள் கிட்டே மன்னிப்பு கேட்டிருந்தா, மன்னிச்சிருப்பாருல்ல…

பாட்டி: ஆமா.. கண்டிப்பா… மன்னிப்பு கேக்கறவங்களை அவரு எப்பவுமே மன்னிக்காம இருந்ததில்லை.

அர் : வாவ்.. அம்மா.. அங்கே பாருங்க… நாம பரலோகத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைக்கிறேன்..

காட்சி 2

( பரலோகக் கரையில் இருவரும் இறங்குகிறார்கள். அங்கே ஒரு இடத்தில் யோனா அமர்ந்திருக்கிறார் )

யோனா : ( சோகமாக அமர்ந்திருக்கும் போது இவர்கள் அருகே வருகிறர்கள் )

அர் : அம்மா..அம்மா. அதோ பாருங்க.. அங்கே உக்காந்திருக்கிறது அவர் தானா ?

அம்மா : ஹே.. ஆமா..ஆமா.. நம்ம…. தீர்க்கத்தரிசி யோனா தான்… வா ..வா போய் பேசுவோம்

அர் :.. யோனா அங்கிள்… யோனா அங்கிள்.. எப்படி இருக்கீங்க ? சொர்க்கத்துல வந்து சோகமா இருக்கீங்க ? ஆச்சரியமா இருக்கே.. உங்களை இங்கே சந்திச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோசம்.

யோனா : வாங்க, வாங்க.. நீங்க யாரு.. உங்களைப் பாத்ததே இல்லையே…
அம்மா : என்ன இப்படி சொல்றீங்க.. நீங்க எங்களைப் பாத்திருக்கீங்க.. மறந்திருப்பீங்க.

யோனா : நீங்க எங்கேயிருந்து வரீங்க ?

பாட்டி : நாங்க .. நினிவேல இருந்து வரோம்… நான் அங்குள்ள அரண்மனைல வேலை பாத்திட்டிருந்தேன்.

யோனா : ஓ.. நினிவேயா…. அது ஒரு அற்புதமான வரலாறு….

( பிளாஷ் பேக் காட்சி : காட்சி 3 – நினிவே )

யோனா : இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்

யோனா : இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்

யோனா : இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்

யோனா : இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்

( சொல்லிக்கொண்டே போகிறார். )

( மக்கள் எல்லாரும் அங்கும் இங்கும் ஓடுகிறார்கள் )

பாட்டி : நினிவே இன்னும் நாற்பது நாள்ல அழிக்கப்படுமாம். நான் அரண்மனையில வேலை பாக்கிறேன் இல்லையா ? மன்னனே அரண்மனையை விட்டு கீழே இறங்கி, சாக்கு உடுத்தி, சாம்பல்ல உட்கார்ந்துட்டான்.

அம்மா : ஓ… அரசனே அப்படின்னா, மக்கள் எல்லாருமே அப்படித் தான் பண்ணுவாங்க.

பாட்டி : ஆமா, அரசன் ஏதோ ஒரு அறிவிப்பு குடுக்கப் போறாரு… சீக்கிரம் நமக்குத் தெரிஞ்சுடும்.

அர்பெல்லா : அப்போ, நாமளும் அப்படி இருக்கணுமாம்மா ? சாக்கு உடுத்தி ? நோன்பு இருக்கணுமா ?

அம்மா : நாற்பது நாள்ல நினிவே அழிக்கப்படும்ன்னா, நம்மளை கடவுள் தானே காப்பாத்தணும்… நாம கண்டிப்பா கடவுளை நோக்கி கதறி மன்றாட வேண்டியது தான்.

அர் : அம்மா.. ஏதோ ஒரு அறிவிப்பு சத்தம் கேக்குது.. முரசறிவிப்பு போல

குரல் : எல்லோரும் சாக்கு உடை உடுத்திக் கொள்ள வேண்டும், ஏன் விலங்குகளுக்குக் கூட சாக்கு உடுத்த வேண்டும். எல்லோரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும். தீய பழக்கங்களை உடனே விட்டு விலக வேண்டும். யாருமே உணவைச் சுவைத்துப் பார்க்கவே கூடாது. தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. விலங்குகள் கூட நோன்பு இருக்கணும்.இப்படிச் செய்தால் ஒருவேளை கடவுள் மனமிரங்கி நம்மைக் காப்பார். இல்லையேல் அழிவு நிச்சயம். இது அரசரும், அரசவையினரும் கொடுக்கின்ற அறிவிப்பாகும்… டும் டும் டும்

அர் : அம்மா.. பாட்டி சொன்னது மாதிரி தான் நடக்குது.. நாம சீக்கிரம் போய் சாக்கு உடுத்தி, சாம்பல்ல உக்காந்து நோன்பு அனுசரிப்போம்.

( அப்போது யோனா அந்த வழியாக சொல்லிக் கொண்டு போகிறார் )

யோனா : இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்

யோனா : இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்

பாட்டி : இனிமே வெயிட் பண்ணவே கூடாது… சீக்கிரம் போய் நோன்பு இருப்போம்… எப்படியாவது கடவுள் மனமிரங்கணும், நாம கொஞ்ச நஞ்ச பாவமா செஞ்சோம்… வாங்க.. சீக்கிரம்

அம்மா : ஆமா.. கடவுள் தான் நம்மளைக் காப்பாத்தணும்.

( நாற்பது நாட்களுக்குப் பின் … கடவுள் நகரை அழிக்கவில்லை .. யோனா புலம்புகிறார் )

யோனா : இதான்.. இதுக்காகத் தான் நான் நினிவே வராம தர்சீஷ்க்கு ஓடிப் போனேன்.. உட்டீங்களா ? இல்ல, ஒரு மீன் மூலமா எனக்கு தூண்டில் போட்டீங்க. மீனுக்குள்ளே என்னை உக்கார வெச்சீங்க. சரி போகட்டும், மன்னிப்பும் கேட்டேன். நினிவே வந்தேன். கீழ்ப்படிஞ்சு இங்கே நினிவேக்கு வந்தேன். நினிவே அழியும்ன்னு .. நினிவே அழியும்ன்னு நான் ஒரு பைத்தியக்காரன் போல அவங்க மேல உள்ள கோபத்துல கத்தி கிட்டே போனேன். …. நீங்க சொன்னதை செஞ்சீங்களா ? அழிக்கலையே !

யோனா : இப்போ என்னாச்சு… நான் சொன்னது தப்புன்னு ஆச்சு. அசீரியர்கள் நமக்கு எதிரிகள், அவர்கள் அழியணும்ன்னு நினைச்சது நிறைவேறாம போச்சு. நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும் உள்ளவர்ன்னு தெரியும். இப்படித் தான் பண்ணுவீங்கன்னு தெரியும்.

யோனா : அவங்களை அழிக்கலல்ல…. அதுக்கு பதிலா, நீங்க என்னை காலி பண்ணிடுங்க ! நான் ஏன் உயிரோட இருக்கணும் ?

கடவுள் : என்ன யோனா, நீ… இப்படி கோபமா எரிச்சலோட இருப்பது உனக்கு…. நல்லதா ?

யோனா : நான் ஊருக்கு வெளியே பந்தல் போட்டு உக்காந்திருப்பேன்.. நினிவே அழியணும்.. அதை நான் பாக்கணும்…

யோனா : அட.. இதென்ன ஒரு ஆமணக்கு செடி, சட்டுன்னு முளைச்சு சடசடன்னு வளருது.. நல்ல நிழலும் தருது…

யோனா : அட.. ஒரு நாள்லயே அது அழிஞ்சும் போச்சே…. இந்த வெயில்ல நான் காயறதுக்கு பதிலா… நான் சாகறதே நல்லது.

கடவுள் : நீ உழைக்காத , நீ வளர்க்காத ஒரு ஆமணக்குச் செடிக்காக இப்படி பரிதபிக்கிறாயே… வலக்கை எது, இடக் கை எதுன்னு தெரியாத இந்த நாட்டிலுள்ள இலட்சத்து இருபதாயிரம் மக்களுக்காக நான் இரக்கப்பட மாட்டேனா ?

( பிளாஷ் பேக் முடிகிறது )

 யோனா : ம்ம்ம்.. நினிவே கதையை நினைச்சா சோகம் தான்….

அம்மா : பழைய கதையை நினைச்சு என்ன சோகம்… உண்மையிலே… நீங்க ரொம்ப சந்தோசப்படணும்.. நினிவேங்கற ஒரு மாபெரும் பட்டணத்தையே மீட்டுட்டீங்களே.. நாங்க எல்லாம் தீயில கருகாம காப்பாத்திட்டீங்களே.

யோனா : இல்லை, அந்த பெருமை ஏதும் எனக்கில்லை. நான் நீங்க எல்லாம் மீட்கப்படணும்ன்னு நினைக்கவேயில்லை. அசீரியர்கள் அழியணும்ன்னு தான் நினைச்சேன். உங்க மேல உண்மையான அன்பு எனக்கு இருக்கல…

அர் : ஆனா கடவுள் உங்க மூலமா மிகப்பெரிய வேலையை செய்தாருல்லயா அங்கிள்.. நீங்களும் மன்னிப்பு கேட்டுட்டீங்க அப்போவே…. அவரு உடனே மன்னிப்பும் கொடுத்துட்டாரு.. மறந்தே போயிட்டாரு…. நீங்க பரலோகத்துக்கும் வந்துட்டீங்க… இனிமே ஏன் சோகம், சந்தோசமா இருங்க.

யோனா : இருந்தாலும் அவரு பிற இன மக்கள் மேல இவ்ளோ அன்பு வெச்சிருந்தாரே.. நான் அப்படி வைக்காம இருந்தேனே.. ஒரு பெரிய தீர்க்கத்தரிசின்னு பெயரு வாங்கிட்டு, பிற இன மக்கள் அழியணும்ன்னு நினைச்சேனே ந்னு நினைச்சா வருத்தமா இருக்கு.

அர் : அங்கிள் பழைய கதைகளை நினைச்சு சொர்க்கத்தோட இனிமையை ஏன் இழக்கறீங்க ? யஹோவா… உங்களை இங்கே கொண்டு வந்திருக்காருன்னா அவரு உங்க மேல எவ்ளோ அன்பு வெச்சிருக்காருன்னு அர்த்தம்.

யோனா : ம்ம்.. அது உண்மை pதான்… இருந்தாலும் நினிவே வர சொன்னா தர்ஷீஸ் ஓடினேன். கடலுக்கு மேலே பயணம் பண்ண வேண்டியவனை மீனுக்கு உள்ளே டிராவல் பண்ண வெச்சாரு கடவுள்.

அர் : ஆமா அங்கிள்… உலகத்துலயே முதல் நீர்மூழ்கிக் கப்பல் நீங்க போனது தான். மீனுக்குள்ளே புகழ் பாட்டு பாடினதும் நீங்க தான். செம. எல்லாம் நல்லதுக்கு தான் முடிஞ்சிருக்கு.

யோனா : ஆனாலும், தன்னோட மிஷனரி பணி சக்சஸ் ஆனதுக்காக வருத்தப்பட்ட ஒரே ஆள் நான் தானே… நினிவே முழுசும் மனம் மாறிச்சு, என் மனம் மாறவே இல்லை. நான் அசீரியர்கள் அழியணும்ன்னே நினைச்சிட்டிருந்தேன். மக்கள் மனம் மாறினதுக்காக நான் சந்தோசப்படவே இல்லை.

அம் : அதுக்கு காரணம் இருக்குல்ல, நாங்க கொஞ்ச நஞ்ச கொடுமையா இஸ்ரேல் மக்களுக்குச் செய்தோம். இருந்தும் எங்களை இவ்ளோ அன்பு செய்து கடவுள் ஏத்துகிட்டாருன்னு நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு.

யோனா : எல்லாம் சரி தான்.. ஆனாலும், கடவுள் கிட்டயே சண்டை போட்டேன். உம்மைப் பத்தி எனக்குத் தெரியும், இப்படியெல்லாம் பண்ணுவீங்கன்னு அதனால தான் இந்தப் பக்கமே வரலேன்னு சண்டை போட்டேன். அவரு ஒரு ஆமணக்குச் செடியை முளைக்க வைத்து, அதை புழுக்களால அழிக்க வைத்து ஒரு பாடம் சொல்லித் தந்தாரு.. ஊஹூம்.. நான் கேக்கவே இல்லையே…

அம் : அந்த கதையெல்லாம் எங்களுக்கு தெரியும். என்ன தான் இருந்தாலும் இவ்ளோ அன்பா கடவுள் இங்கே வெச்சிருக்காரே.. சந்தோசப்படுங்க.

காட்சி 4

( அங்கே பவுல் வருகிறார் .. இந்த காட்சியின் இடையிடையே பவுலின் பணிகள் / அனுபவங்கள் பின்னணியில்… )

பவுல் : ஹலோ…. யோனா அங்கிள் .. எவ்ளோ பெரிய தீர்க்கத் தரிசி.. சின்ன வயசில இருந்தே உங்களை பிரமிப்பா பாத்திருக்கேன். என்ன இங்கே உக்காந்திருக்கீங்க.. யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?

அர் : இல்ல பவுல் அங்கிள்.. இவரு சோகமா இருக்காரு..

பவுல் : சோகமாவா.. சேன்சே இல்லையே… சொர்க்கத்துல சோகம் ங்கற வார்த்தைக்கே இடமில்லையே.

அர் : அப்படியில்ல அங்கிள். இவரு பிற இன மக்களுக்கு எதிரா இருந்ததை நினைச்சு வருத்தப்படறாரு.

பவுல் : அட… அதுக்காக கவலைப்படலாமா. நான் ஒரு காலத்துல கிறிஸ்தவர்களைத் தேடித் தேடி கொன்னிட்டிருந்தேன். யூதர்களைத் தவிர வேற யாருக்குமே மீட்பு இல்லைன்னு நினைச்சிட்டிருந்தேன். கமாலியேல் கிட்டே யூதர்களுடைய நியாயப்பிரமாணத்தை கரைச்சு குடிச்சதை நினைச்சு பெருமையா இருந்தேன். ஆனா கடவுள் என்னை எப்படி ஆக்கினாரு பாத்தீங்கல்ல.

யோனா : ஆமா.. பிற இன மக்களோட மீட்புக்கு நீங்க தான் மிகப்பெரிய காரணம். கடவுள் உங்களை அங்கே தானே அனுப்பினார். அற்புதமா பணி செய்தீங்க…

பவுல் : ஆமா.. தமஸ்கு போற வழியில எனக்கு இயேசு காட்சி கொடுத்தாரு… பார்வையும் போச்சு, அப்புறம் பார்வையை குடுத்தாரு.. பிற இன மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சொன்னாரு… எனக்கு புரியல, குழப்பமா இருந்துச்சு. அதனால நான் என்ன பண்ணினேன் தெரியுமா ?

அர் : தெரியாது அங்கிள் சொல்லுங்க

பவுல் : நான் நேரா அரேபிய பாலை வனத்துக்கு போனேன். மூணு வருஷம் அங்கே இருந்து பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணங்கள் என்ன சொல்லுது, மேசியா யாரு ? இயேசு தான் மேசியாவா ? அப்படியெல்லாம் ஆராய்ந்து பாத்துட்டு இருந்தேன். கடவுளே எனக்கு வந்து எல்லாத்தையும் கற்றுத் தந்தாரு. இயேசு தான் மேசியான்னும் புரிஞ்சுது, பழைய ஏற்பாடு சொல்றதெல்லாம் இயேசுவைத் தான்னும் புரிஞ்சுது. கடவுள் இஸ்ரேல் மக்களை மட்டும் தான் நேசிக்கிறார்ன்னு நான் கமாலியேல்ட்ட முந்தி படிச்சதெல்லாம் தப்புன்னு புரிஞ்சுட்டேன். புற ஜாதியாரையும் அவரு ஒரே மாதிரி நேசிக்கிறதனால, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கணும்ன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு.

அர் : அப்புறம் தான் பிரீச் பண்ண போனீங்களா ?

பவுல் : ஆமா… அப்போ தான் கமாலியேல் கற்றுத் தந்த நியாயப்பிரமாணத்துக்கும், கடவுளோட அன்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சு கிட்டேன். அப்புறம் தான் புற ஜாதியினருக்கு நற்செய்தி அறிவிக்க போனேன். அதுக்கு அப்புறம் பின் வாங்கவே இல்லை.

அர் : அப்படியா பவுல் அங்கிள்.. நாங்களும் பிற இன மக்களா இருந்து யஹோவாவுக்குள்ள வந்தவங்க தான். ஆமா பழைய ஏற்பாட்டுக் காலத்துல ராகாப்பு… ரூத் கதையெல்லாம் அப்படித் தானே…

பவுல் : இயேசு ஒரு கானானேயப் பெண், ரோம நூற்றுவர் தலைவன் ரெண்டு பேரும் இஸ்ரேலரை விட பெரிய விசுவாசம் உடைவர்கள்ன்னு பாராட்டினாரு. ஒதுக்கப்பட்டவர்களோடு தான் வாழ்ந்தாரு. சமாரியப் பெண்ணைத் தேடிப் போய் மீட்டாரு.

அர் : ரொம்ப ஆச்சரியமா இருக்கு… தேடிப் போய் மீட்கிற ஒரு கடவுளைப் பற்றி தெரிஞ்சுக்கறதும், அவரைப் பின்பற்றி வாழறதும் எவ்வளவு பெரிய பாக்கியம் இல்லையா ?

பவுல் : கண்டிப்பா… கிறிஸ்துன்னா கிறிஸ்தவர்களுக்கு மட்டும்ன்னு ஒரு தப்பான எண்ணம் மக்களுக்கு உண்டு. அதனால பிற இன மக்களை வெறுக்கிற நிலமைக்கு நாம போறதும் உண்டு. அதெல்லாம் தப்பு. கடவுள் எல்லாருக்குமே கடவுள் தான். ஆதி முதல் அவர் அப்படித் தான்.

யோனா : ஆமா. கரெக்டா சொன்னீங்க பவுல். உங்களுக்கு நல்ல தெளிவு இருக்கு. நான் அப்போ கடவுளோட மனசை புரிஞ்சுக்காம இருந்துட்டேன். இல்லேன்னா இப்போ ரொம்ப சந்தோசமா இருந்திருப்பேன்.

பவுல் : ஹலோ. மிஸ்டர் யோனா… உங்களை மாதிரி பெரிய இறைவாக்கினரே இல்லை தெரியுமா ? இயேசு என்ன சொன்னாரு தெரியுமா ? “யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” ந்னு ஒரு தடவை சொன்னாரு. அப்படின்னா என்ன அர்த்தம், யோனா மிகப்பெரிய தீர்க்கத் தரிசி, அவரை விடப் பெரியவர்ன்னா இயேசு தான்.

யோனா : ( சிரித்தபடி ) ஓ..வாவ்.. இயேசுவுக்கும் என் மேல எவ்ளோ அன்பு. என்னை எவ்ளோ உயர்வா பேசியிருக்காரு.

பவுல் : அது மட்டுமா.. யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷ குமாரனும் மண்ணில் மூன்று நாள் இருக்கணும்ன்னு உங்க பயணத்தையும் சொல்லியிருக்காரு இயேசு.

யோனா : வாவ்.. இப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என்னோட பாவத்தையெல்லாம் அவரு கணக்கில வைக்கல.

பவுல் : ஹா..ஹா.. என்ன யோனா, அப்படிப் பாத்தா பாவிகளிலே பிரதான பாவி நான். அதை பைபிள்ல கூட எழுதி வெச்சிருக்கேன். என்னையே மன்னிச்சு இங்கே கொண்டு வந்திருக்காருல்ல. அவரு ஆள் பார்த்து செயல்படுபவர் அல்ல.

யோனா : இப்போ தான் ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா, நீங்க நற்செய்தி அறிவிக்க ஆரம்பிச்சப்புறம் தான் கடவுள் பிற இனத்தாரை அன்பு செய்றவருன்னு உலகிற்கு ரொம்ப தெளிவா தெரிஞ்சிருக்கு.

பவுல் : உண்மை தான், ஆனா கடவுள் தொடக்கத்துல இருந்தே எல்லாரையும் தான் நேசிக்கிறார். எல்லாருமே ஆதாமின் வழி மரபு தானே. ஏனோக், நோவா இப்படி ஆபிரகாம் வரைக்கும் வாழ்ந்தவங்க யாரும் ஆபிரகாம் சந்தயினர் இல்லையே. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமே ஆபிரகாமுக்கு அப்புறம் தானே ஆரம்பமாகுது. அவங்களையும் கடவுள் எவ்ளோ நேசிச்சாருன்னு நமக்குத் தெரியும்ல.

அம்மா : ஆமா… ஆதாம் ஏவாள் பாவம் செய்தப்பவோ கடவுள் மீட்பின் திட்டத்தையும் சொன்னாரு. பெண்ணின் வித்து சர்ப்பத்தில் தலையை நசுக்கும்ன்னு. நோவாவின் காலத்துல பாவம் நிறைஞ்சப்போ கடவுள் உலகத்தையே அழிச்சாரு. ஆனா நோவா குடும்பத்தை மீட்பின் பேழையில வெச்சு காப்பாற்றினாரு. பாபேல் கோபுரம் கட்டி மக்கள் கர்வமா இருந்தப்போ மக்களோட மொழியை பிரிச்சு சிதறடிச்சாரு. ஆனாலும், சிதறடிக்கப்பட்டவர்களை மீட்கணும்ன்னு நற்செய்தி அறிவித்தலை நமக்குத் தந்தாரு.

பவுல் : அழகா சொன்னீங்க நற்செய்தியை. ஒரு அசீரியப் பெண்ணா இருந்து இவ்ளோ விஷயம் கத்துகிட்டிருக்கீங்களே ரொம்ப மகிழ்ச்சி.

அம்மா : எல்லாத்துக்கும் காரணம் யஹோவாவும், அவரைக் காட்டித் தந்த இந்த யோனா ஐயாவும் தான்.

அர் : ம்ம்ம்.. நீங்க பேசறதெல்லாம் கேட்டிட்டு இருக்கும்போ எனக்கு ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரியுது. கடவுள் பிற இன மக்களை அன்பு செய்றது ஒண்ணும் புதுசுல்ல. கடவுள் அன்பானவர். அன்பின் நிறைவு அவர் தான். அந்த அன்பில பாகுபாடு இருக்குன்னு நினைக்கிறது நம்மோட இருதயக் குறைபாடு தானே தவிர இறைவனோட குறைபாடு இல்லை.

யோனா : கரெக்ட்.. இப்போ எனக்கும் சந்தோசமா இருக்கு. சரி, வாங்க புகழ் பாக்கள் பாட நேரமாச்சு.

*

Posted in Articles, Lent days

தவக்காலம் – அவசரங்களின் காலம்

தவக்காலம்
அவசரங்களின் காலம்

தவக்காலம்
அவசரங்களின் காலம் !

இயேசுவின்
நள்ளிரவுப் பிரார்த்தனையில்
காலம்
முடியப் போகிறதே எனும்
அவசரம் இருந்தது.

வெளிச்சத்தின்
வரவுக்கு முன்
இயேசுவின்
தோள் தொட்டு நடந்த யூதாஸ்
ஆள்காட்டும் விரலோடு
வன்மமாய் வந்தான்.

கபடத்தின் முத்தத்தை
இயேசுவின்
கன்னத்தில் பதிக்கும்
அவசரம் அவனுக்கு.

தீப்பந்தங்களை மிஞ்சும்
அனல் மூச்சோடு
வந்த
படைவீர்களுக்கு
பரமனைப் பிடிக்கும் அவசரம்.

மின்னல் வேகத்தில்
உடைவாள் உருவி
செவிதனைச் செதுக்கிய
சீடருக்கு
தப்பிக்க வேண்டுமெனும் அவசரம்.

வீரனுக்கு அழகு
போரிடுவது,
சீடனுக்கு அழகு
போரிடாமல் இருப்பது
என
புதுமையின் நாயகன்
அவசரமாய்ப் புரிய வைத்தார்

தவக்காலம்
அவசரங்களின் காலம்.

அதிகாலையில்
இருட்டுக் கயிறுகட்டி
இழுத்து வந்தவரை
வெளிச்சம் விழித்தெழும் முன்
கொன்று தீர்க்கும் அவசரம்
மதவாதிகளுக்கு.

நிலவரம்
கலவரமாகும் முன்
கைகழுவி விட்டால் போதுமெனும்
அவசரம்
பிலாத்துவுக்கு !

அதிகாலையில்
பிடித்து வந்தவரை,
ஒன்பது மணிக்கே
சிலுவையில் அறையும்
அவசரம்
எதிராளிகளுக்கு !

அதற்குள்
இறந்து விட்டானா
என
வியக்குமளவுக்கு
விரைவில் வரவேண்டிய
அவசரம் மரணத்துக்கு !

தவக்காலம்
அவசரங்களின் காலம்.

பாவம் அவசரமாய்
வினாக்களை எறியும்
புனிதம்
நிதானமாய்
பதில்களை நெய்யும்.

சாத்தான்
அவசரங்களின் பிதாமகன்.
உடனே
கல்லை அப்பமாக்கு
கீழே குதி
தெண்டனிட்டு வணங்கு
என
அவசரத்தின் வால் பிடிப்பான்.

இயேசு
நிதானத்தின் இறைமகன்.

தவறிய ஆட்டை
காடு மலையெங்கும்
தேடித் திரியும்
நிதானம்.

தவறிய மைந்தனுக்காய்
காலமெல்லாம்
காத்திருக்கும் நிதானம்.

பணிவாழ்வின்
துவக்கம் வரை
பணிவுடன் காத்திருக்கும்
நிதானம்.

தவக்காலம்
அவசரங்களின் காலம்.

அவசரமாய்ச் செய்யும்
பாவங்கள்
நிதானமாய் அழவைக்கும் !
என்பதைப்
புரிய வைக்கும் காலம்.

சிற்றின்பத்தின்
அவசர அழைப்புகளை
நிராகரித்து,
புனிதத்தின் நிதானத்தில்
நுழைய வைக்கும் காலம்.

*

சேவியர்

 

Posted in Articles, Christianity, Desopakari

உள்நாட்டு இறைபணியாளர்கள்

உள்நாட்டு இறைபணியாளர்கள்

இங்கிலாந்து இறை பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த கால கட்டம். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காரோ எனும் பகுதி. அன்றைய காலத்தில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர், “ஹெட் ஹண்டர்ஸ்” என அழைக்கப்படும் தலை வெட்டும் குணம் படைத்தவர்கள். மக்களுடைய தலையை வெட்டுவது அவர்களுக்கு உறுத்தலாய் இருந்ததில்லை. உற்சாகமாக இருந்தது. அன்றைய வாழ்க்கைச் சூழலில், அவர்களுடைய கலாச்சாரப் பின்னணியில் அது அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப் பட்டது.

உதாரணமாக, திருமணத்துக்கு பெண் கொடுக்க வேண்டுமென்றால் அந்த ஆண்மகன் வீரமுடையவனாக இருக்க வேண்டும். வீரத்தை எப்படி நிரூபிப்பது ? அவன் வெட்டிய தலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு தான் அது நிர்ணயிக்கப்பட்டது. முப்பது தலையை வெட்டினவன் வீரனாகக் கொண்டாடப்பட்டான். கேட்கவே திடுக்கிட வைக்கும் இத்தகைய மனிதர்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்தார்கள். அவர்களுடைய வீடுகளின் நிலைக்கால்களில் மண்டை ஓடுகள் தோரணங்களாகத் தொங்குவதும், அவர்களுடைய கழுத்தில் மண்டையோடுகள் மாலைகளாகத் தொங்குவதும் சர்வ சாதாரணம்.

அப்படிப்பட்ட ஒரு பகுதியில் வேல்ஸ் இறை பணியாளர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு குடும்பம் இறைவனின் அன்பினால் தொடப்படுகிறது. தொடப்பட்டவர் ஊர் மக்களால் வெறுக்கப்படுகிறார். கிராமத்தின் நடுவே, கிராமத் தலைவரின் முன்னால் அந்த கிறிஸ்தவக் குடும்பம் நிறுத்தப்படுகிறது. இயேசுவை ஏற்றுக் கொண்டவரோ, விசுவாசத்தில் ஆழமாய் நிற்கிறார். இயேசுவை ஏற்காதவர்கள், கலாச்சாரத்தில் காலூன்றி நிற்கிறார்கள்.

கிராமத் தலைவர் அந்த நபரைப் பார்த்துக் கேட்கிறார். “இயேசுவை விட்டு விடு… மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பு. இல்லையேல் நீயும் குடும்பமும் கொல்லப்படுவீர்கள்.”

அந்த நபர் சொன்னார், “இயேசுவை பின் பற்ற நான் முடிவு செய்து விட்டேன். இனிமேல் திரும்பிப் பார்க்கும் எண்ணமில்லை”. இது அவர் எழுதி வைத்த பாடலின் ஒரு வரி. இந்த வரியைக் கேட்டதும் கிராமம் கொந்தளித்தது. கிராமத் தலைவர் கட்டளையிட்டார். அந்த மனிதருடைய இரண்டு பிள்ளைகளும் அவருடைய கண் முன்னால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அப்பா என தோளில் தொங்கிய பிள்ளைகள் கண் முன்னால் துடித்துச் சாவதைக் கண்ட தந்தையின் மனம் துடிதுடித்தது.

தலை வெட்டுவதில் மனம் சஞ்சலப்படாத தலைவன் சொன்னான். “இயேசுவை விட்டு விடு.. இல்லையேல் அடுத்ததாக உன் மனைவி கொல்லப்படுவாள்”

அவர் கண்ணீர் குரலோடு பாடினார், “என்னோடு யாருமே இணையாமல் போனாலும், நான் இயேசுவைப் பின் செல்வேன்”

அவருடைய மனைவியை அம்பு துளைத்தது. கண் முன்னாலேயே அவர் கதறியபடி விழுந்து இறந்தார். இயேசுவுக்காய் தன் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இறந்து போனதைக் கண்ட அந்த மனிதர் உயிர் துடித்தார்.

கிராமத் தலைவர் அவரைப் பார்த்துக் கடைசியாய்க் கேட்டார். “மிஞ்சியிருப்பது உனது உயிர். நீ என்ன முடிவு செய்கிறாய் ? இயேசுவை விடப் போகிறாயா ? உயிரை விடப் போகிறாயா ?”

அவர் உறுதியான குரலோடு பாடினார், “சிலுவை என் முன்னால் இருக்கிறது, உலகம் என் பின்னால் இருக்கிறது”. அது தான் அவர் சொன்ன கடைசி வாக்கியம். அவரது உயிர் அந்த இடத்திலேயே பிடுங்கப்பட்டது. தன் குடும்பத்தினரோடு அவரும் அதே இடத்தில் இயேசுவுக்காக இரத்த சாட்சியாய் இறந்தார்.

சில நாட்கள் கடந்தன. அந்தக் கிராமத் தலைவரின் மனதை விட்டு அந்தக் காட்சி அகலவேயில்லை. எத்தனையோ தலைகளை வெட்டி, கிராமத்துக்கே தலைவராய் இருந்த அவரால் அந்த நிகழ்வை ஜீரணிக்க முடியவில்லை. போரிட்டு மடிந்த மக்களை அவர் பார்த்திருக்கிறார். கெஞ்சிக் கெஞ்சி உயிரை விட்ட மனிதர்களைப் பார்த்திருக்கிறார். அச்சத்தில் வெலவெலத்து உயிரை விட்டுப் பார்த்திருக்கிறார். ஆனால் உறுதியோடு, கடவுளுக்காக உயிரை விட்ட நபர்களை அவர் பார்த்ததேயில்லை. அதுவும் கண் முன்னால் பிள்ளைகள், மனைவி கொல்லப்பட்ட போதும் இறை விசுவாசத்தில் சலனமில்லாமல் நிலைத்திருந்த அவரது உறுதி அவரை அலைக்கழித்தது. அப்படி ஏசுவிடம் என்ன தான் இருக்கிறது என அவர் மனம் கேள்விகளை எழுப்பியது.

அவர் கிறிஸ்தவராய் மாறினார்.

அவர் கிறிஸ்தவராக மாறியதுடன் நிற்கவில்லை, அந்த கிராமத்திலுள்ள அத்தனை நபர்களும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். ஒரு குடும்பம் பலியானது, ஒரு கிராமம் மீட்கப்பட்டது. ஒரு விதை அந்தப் பகுதியில் விழுந்தது, அந்த கிராமம் முழுவதும் கனி கொடுக்கும் விளை நிலமாய் மாறியது.

புனித தோமா கிபி 52ல் இந்தியாவுக்கு நுழைந்த போது கிறிஸ்தவம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. தமிழகம், கேரளா என்றெல்லாம் பிரிக்கப்படாத அந்தக் காலகட்டத்தில் இன்றைய கேரளாவின் கரையோரப் பகுதிகளில் அவரது பணி நடந்தது. அவர் ஆரம்பித்த ஆலயம் ஒன்று கிபி 60 களிலிருந்தே செயல்பாட்டில் இருக்கிறது. அது குமரிமாவட்டத்தில் இருக்கிறது. அது தான் உலகிலேயே மிகப் பழமையான ஆலயம்.

அவர்களுடைய வரவு நமது நாட்டில் மனிதத்தை விதைத்தது, பல்வேறு கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது, மக்களுடைய அடிப்படைத் தேவைகளான உடை, உணவு, ஆரோக்கியம், உறைவிடம், கல்வி என்பவற்றில் கவனம் செலுத்தியது. மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, கூடவே இறைமகன் இயேசுவைப் பற்றிய செய்தியையும் அவர்கள் அறிவித்தார்கள். நற்செய்தி அவர்களுடைய ஆன்மாவுக்கு மட்டுமல்லாமல் உலக வாழ்வுக்குமே நற்செய்தியாய் அமைந்தது. அவர்களுடைய பணிகளில் ஈர்க்கப்பட்டு தான் பலர் கிறிஸ்தவ பணியாளர்களாக மாறினார்கள்.

சாது சுந்தர் சிங் இன்று கொண்டாடப்படுகிறார் எனில் கிறிஸ்தவராய் மாறிய பின் அவர் விதைத்த விதைகளே காரணம். அவர் தன்னிடம் விதைக்கப்பட்ட நற்செய்தியை அறுவடை செய்து தனக்காய் சேமித்து வைக்கவில்லை. அவற்றை விதைகளாய் பிறருக்கு வினியோகம் செய்தார். அதனால் தான், தான் பெற்றுக் கொண்ட மீட்பின் செய்தியை உலகுக்கே அளித்தார்.

சீர்திருத்தத் திருச்சபையின் இசை உலகை ஆக்கிரமித்திருக்கும் சாஸ்திரியார், இசை நற்செய்தி அறிவித்தலில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் ஆழமாய் தனது சிறுவயதைச் செலவிட்டவர். சிறு வயதிலேயே இயேசுவின் சிலுவையைக் காட்சியாய்க் கண்டவர். பிற்காலத்தில் சீர்திருத்தத் திருச்சபையின் மூலமாக நற்செய்தி அறிவித்தலை தீவிரமாகச் செய்தார். வாழையடி வாழையாக அவரது குடும்பமே கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்வதற்கு அவர் இட்ட விதையே காரணம்.

நட்டாலத்தில் பிறந்த நீலகண்டனான தேவசகாயம், அரசவையில் ஏற்படுத்திய ஆன்மிகப் புரட்சி மகத்தானது. அன்றைய சமூக ஆன்மிக களத்தில் அவரது பங்களிப்பு கணிசமானதாய் இருந்தது. கிறிஸ்தவத்தைப் பின்பற்றியதற்காகவும், அதை செயல்படுத்தியதர்களாகவும் அவருக்கு மிகக் கடுமையான சித்திரவதைகள் செய்யப்பட்டதாய் பதிவுகள் சொல்கின்றன. அதன் பின்னர் நிலமை மாறியது. அவர் மக்களாலும், அதிகாரிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஒரு விதையாக விழுந்த அவரை அறியாதவர்கள் இன்று குமரிமாவட்டத்தில் இல்லை எனலாம்.

ஐடா ஸ்கட்டர் எனும் ஒரு இறை பணியாளர் நமது மாநிலத்தில் உருவாக்கிய பணியாளர்கள் ஏராளம் ஏராளம். மருத்துவத் துறையில் அவரது பங்களிப்பு உள்ளூர் மக்களை இறைபணிக்கு தயாராக்கியது. அவர்கள் இயேசுவின் பணியை ஏழைகளுக்கு மருத்துவப் பணி செய்யும் பாதையில் சுமந்து சென்றனர்.

உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருத்து ஒன்றுண்டு. இறைவன் தனித்தனி நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை விண்ணக விதைகளாக ஆங்காங்கே நடுகிறார். அவர்கள் அங்குள்ள நிலங்களை பதப்படுத்தி வாழையடி வாழையாக, மூங்கிலின் புது முளைகளாக நற்செய்தியை தலைமுறை தோறும் சுமந்து கொண்டே திரிகிறார்கள்.

துவக்க காலக் கிறிஸ்தவ சமூகத்தோடு ஒப்பிடுகையில் நாம் இன்று சந்திக்கின்ற பிரச்சினைகள் கடுகளவு எனலாம். பொதுவெளியில் கிறிஸ்துவுக்காக உயிரை விட்டவர்களும், அதை ஆனந்தமாய் ஏற்றுக் கொண்டவர்களும் எண்ணிலடங்கா என வரலாறு குருதிப் பிசுபுசுப்புடன் இருக்கிறது.

இந்த சூழலில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் இரண்டு உண்டு.

1. நமக்காக, நமது சமூக, ஆன்மிக வாழ்வின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட, பாடுபடுகின்ற இறை பணியாளர்களை நன்றியுடன் நினைவு கூர்வது. அவர்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவர்கள் இயேசுவுக்காக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் என்பதை உணர்ந்து அவர்களை நேசிப்பது.
2. அவர்கள் காட்டும் இயேசுவின் வழியில் நமது வாழ்க்கையை அமைப்பது. பெற்றுக் கொள்பவர்களாக மட்டும் இருக்காமல், இறைவனுக்காக பணி செய்பவர்களாகவும் மாறுவது. அது தான் அவர்களுடைய பணியின் இழையை அறுபடாமல் காப்பாற்றும். விண்ணக வாழ்க்கையை நழுவ விடாமல் நம்மைப் பாதுகாக்கும்.

அன்று முதல், இன்று வரை பணி செய்கின்ற உள்நாட்டுப் பணியாளர்களை நேசிப்போம். அவர்களுக்குத் தோள்கொடுப்போம். அவர்களுடைய பணியில் நம்மை முழுமையாய் ஈடுபடுத்துவோம்.

*

சேவியர்

தேசோபகாரி, மார்ச் 2020