Posted in இயேசு, இலக்கியம், கிறிஸ்தவ இலக்கியம், Bible Poems

கற்பனையில் ஒரு கானாவூர்

கானாவூர் களேபரத்தில்
முற்றங்கள்
இயலாமையின் 
கரங்களைப் பிசைந்து கிடந்தன.

இன்னும் சிறிது நேரத்தில்
ஏளனத்தின் எச்சங்கள்
இந்த 
எல்லைகள் எங்கும விதைக்கப்படும். 

தீர்ந்து போன இரசம்
கவுரவத்தின்
மெல்லிய கழுத்தை
முடிச்சு போட்டு மூழ்கடித்துவிடும்.

அந்தத்
திருமண களிப்பிடையே
இழையோடியது
வெளிக்காட்டா தவிப்பு !

வேளை வரும் முன்பே
வேலை வந்தது
பரமனுக்கு !

அவர்
செய்வதெல்லாம் செய்யுங்கள்
என்றார் அன்னை !

சாடிகளில்
நீர் நிறையுங்கள் என்றார் இயேசு !

பதட்டத்தின்
குழந்தைகளாயிருந்த
பணியாளர்கள்,
எரிச்சலின் ஏவலர்கள் ஆனார்கள்.

தீர்ந்தது
நீரல்ல, இரசம் !
அவர்களுடைய உதடுகள்
அசையாமல் கூக்குரலிட்டன. 

தூய்மைச் சடங்கின்
தருணமல்ல இது
திருமண விருந்தின் தினம் !
அவர்களின்
வெறித்த பார்வைகள் சத்தமிட்டன. 

இருக்கும் பிரச்சினைக்கு
தீர்வைக் கேட்டால்
புதிய பிரச்சினைக்கு
பதியம் போடுகிறாரே
என பல் கடித்தனர்.

நீர் நிரப்பச் சொன்னவரை
நிர்கதியாய் விட்டுவிட்டு
நீங்கினர்.

பக்கத்தில் எங்கேனும்
இரசம் கிடைக்குமா 
என
பக்கமிருந்தவர் ஓடினர். 

இரவல் இரசமேனும் 
கிடைக்குமா 
என
மிச்சம் இருந்தவர்கள் ஓடினர். 

காலியாய்க் கிடந்தன
கற்சாடிகள் !
மலைத்து நின்றார் மரியா. 

பிதாவே இவர்களை மன்னியும் !
இயேசு
வெற்றிடத்தின் வெற்றிக்காய்
பிரார்த்தனை செய்தார் 

முதல் புதுமையின்
முதுகெலும்பு
நம்பிக்கை இல்லாத பணியாளர்களால்
உடைந்து விழுந்தது. 

கானாவூர் களையிழந்தது !

*

சேவியர்
Posted in Articles

சிறுவனும் அப்பமும்

சிறுவனும் அப்பமும்

கூட்டம்
பசியைத் தின்று
வார்த்தைகளைக் 
குடித்துக் கொண்டிருந்தது.

பாலை நிலத்தின்
சுடுவெளியில்
வயிற்றின் வெறுமை அனலடித்தது.

இயேசு
கூட்டத்தின்
வயிற்றுப் பசியை 
விரட்ட விரும்பினார்.

“நீங்களே 
உணவு கொடுங்கள்”
சீடர்களிடம் சொன்னார் !

சீடர்கள்
வெறுமையோடு வழக்காடி
தோற்று நின்றனர். 

இயேசுவின் வார்த்தைகள்
அந்த
சிறுவனின் காதுகளில் 
வந்து விழுந்தன.

என்னிடம்
ஐந்து 
வார்க்கோதுமை அப்பங்களும்
இரண்டு மீன்களும் 
இருக்கின்றன !
அவன்
பேசிமுடிக்கும் முன்
வாயைப் பொத்தினார் 
வறுமைத் தாய்.

வார்க்கோதுமை 
அவரது வாழ்க்கையை
வறுமை வார்த்தெடுத்திருந்ததை.
விளக்கியது. 

முழுமையாய் கொடுத்தால்
நமக்கு பட்டினிதான்
வேறேதும் இல்லை
என்றார் ! 

ஏழு என்பது முழுமை
நாம்
முழுமையாய் கொடுப்பதே
வளமை !
சிறுவன் சொன்னான்.

இயேசுவின் வார்த்தை
அவனுக்குள்
சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது.

எல்லோருக்கும்
பத்தாதே, என்றார் தந்தை.

பற்ற வைப்போம்
சிறு நெருப்பு போதுமே
பெருங்காட்டைப் பொசுக்க
சிறுவன் சொன்னான்.

கொடுக்கத் தான் வேண்டுமா 
கடைசியாய் கேட்டனர்
பெற்றோர் !
கொடுக்காவிட்டால்
இதுவரை
போதனைகளைப
பெற்றுக் கொண்டிருந்ததில்
அர்த்தமில்லை, என்றான் அவன்.

எழுந்தான்,
கொடுத்தான் !

இயேசு சிரித்தார். 

முழுவதும் கொடுத்ததால்
முழுமை அடைந்தாய்,
பற்றற்று இருந்ததால்
பெற்றுக் கொள்வாய்

போகும்போது
கூடை நிறைய தருகிறேன்
எடுத்துப் போ !


*

சேவியர்
Posted in Articles, Sunday School

கர்த்தரை நோக்கி

Image result for interview

காட்சி 1

ஆல்பர்ட் : டேய் விக்கி… நாளைக்கு இன்டர்வியூவை நினைச்சாலே பயமா இருக்கு. எல்லாம் பிரிபேர் பண்ணிட்டியா ?

விக்கி : பண்ணிட்டேன்டா… பிரிபேரும் பண்ணிட்டேன், பிரேயரும் பண்ணிட்டேன். ஆனா என்ன, ரொம்ப நாளா வேலை தேடித் தேடி ரொம்ப கஷ்டமா இருக்கு.

ஆல்பர்ட் : நாளைக்கு இன்டர்வியூ கண்டக்ட் பண்றது யாருன்னு தெரிஞ்சா ஏதாச்சும் மூவ் பண்ண முடியுமா பாக்கலாம்டா..

விக்கி : மூவ் பண்ணின்னா ?

ஆல்பர்ட் : இப்போ எல்லாத்துக்கும் ஒரு ரேட் இருக்குல்ல, அந்த ரேட்டைக் குடுத்தோம்னா வேலை கிடைக்கப் போவுது. ஆனா சரியான ஆள் கிட்டே குடுக்கலேன்னா பணமும் போச்சு வேலையும் போச்சு.

விக்கி : டேய்… ஒரு கிறிஸ்டியன் மாதிரியாடா பேசறே.. லஞ்சம் கிஞ்சம்ன்னு.. கையூட்டு பாவம்ன்னு பைபிள்ல போட்டிருக்கு. தெரியுமா இல்லையா ?

ஆல்பர்ட் : இந்தக் காலத்துல அப்படி இப்படி இருந்தா தான்டா வேலை நடக்கும்.

விக்கி : அப்படியெல்லாம் இல்லைடா. அதெல்லாம் சாத்தான் கொண்டு வர சோதனைகள். கர்த்தரை நோக்கியிருந்தா போதும். அவர் எல்லாத்தையும் கரெக்டா பண்ணுவாரு.

ஆல்பர்ட் : நான் இல்லேன்னு சொல்லலடா.. ஆனா கர்த்தரை மட்டுமே நோக்கியிருக்கிறது இந்தக் காலத்துக்கு சரியா வராது. பி எ ரோமன் இன் ரோம்.. ந்னு கேள்விப்பட்டதில்லையா ?

விக்கி : உன்னோட வசதிக்கு ஏற்ப வாழ்றது தப்பு. வசனத்துக்கு ஏற்ப வாழ்றது தான் சரி. சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உன்னோட இஷ்டம்.

ஆல்பர்ட் : சீரியசா சொல்றேன்… நான் ஒருத்தர் கிட்டே சொல்லியிருக்கேன். அவரு கிறிஸ்டியன் தான். பொதுவா ரெண்டு வாங்குவாராம், கிறிஸ்டியன்ஸ்க்குன்னா ஒண்ணரைல முடிச்சுக்கலாம். என்ன சொல்றே.

விக்கி : இல்லடா.. அப்படி ஒரு வேலை கிடைக்கிறதை விட, வேலை இல்லாம இன்னும் கொஞ்ச நாள் நான் தேடிட்டிருப்பேன். நோ.. பிராப்ளம்.

ஆல்பர்ட் : டேய்.. இது நம்ம வில்லியம்ஸ் அங்கிள் ரெஃபரன்ஸ் தான். அவரு நம்ம சர்ச்ல மூப்பர். அவருக்குத் தெரியாததா உனக்கு தெரியப் போவுது.

விக்கி : பைபிள் சொல்றதுக்கு எதிரா யார் சொன்னாலும் தப்பு தாண்டா..

ஆல்பர்ட் : சரி..சரி.. பிரீச்சிங்கை நிறுத்து. நீ என்னோட குளோஸ் பிரண்ட்.. யூத் குரூப்ல எல்லாம் இருக்கேன்னு தான் உன் கிட்டே சொன்னேன். இதை வெளியே யார்கிட்டேயும் சொல்லாத.

விக்கி : ஹி..ஹி.. வெளியில தெரிஞ்சா நீ லஞ்சம் குடுத்து தான் வேலை வாங்கினேன்னு தெரிஞ்சுடுமா ? நீ “கர்த்தரை நோக்கி” இருக்கிறதுக்கு பதிலா, “மனுஷனை நோக்கி” இருக்கேப்பா.. அதை முதல்ல மாத்து.

ஆல்பர்ட் : சரி..சரி.. உன்னை திருத்த முடியாது. நீ அப்படியே வானத்தை பாத்துட்டு இரு, மன்னா வந்து விழும், அப்படியே சாப்பிடு. ஒருவேளை காடையும் கிடைக்கும், அதையும் நல்லா வறுத்து சாப்பிடு. ஆளை விடு.

காட்சி 2

(ஆல்பர்ட் , இன்டர்வியூ செய்பவரிடம் )

ஆல்பர்ட் : பிரைஸ் த லார்ட் பிரதர்.

இன்ட் : பிரைஸ் த லார்ட்.. நீங்க தான் Mr. வில்லியம் சொன்ன ஆல்பர்ட்டா ?

ஆல் : ஆமா சார். எப்படியாவது ஒரு வேலை வேணும்ன்னு அவர் கிட்டே சொல்லி வெச்சிருந்தேன். அவரு தான் உங்க ரெஃபரன்ஸ் குடுத்தாரு. எங்க சர்ச் மெம்பர் தான் அவரு. ஃபேமிலி பிரண்ட் மாதிரி…

இன்ட் : ம்ம்.. நீ… வேளச்சேரி சர்ச் தானே ?

ஆல் : ஆமா சார்… குட் ஷெப்பர்ட் சர்ச் தான். இப்போ ரெனவேட் எல்லாம் பண்ணியிருக்கோம். பக்காவா இருக்கு.

இன் : வெரி குட். அங்கே… பாஸ்டர் யாரு இப்போ ? Rev. வெலிங்டன் ஜேசுதாஸ் தானே ?

ஆல் : ஆமா சார்.. தெரியுமா உங்களுக்கு ?

இன் : ஆமாமா.. முன்னாடி எங்க சர்ச் ல இருந்தாரு. நல்ல மனுஷன். ஊழியத்தின் பாதையில சர்ச்சை கொண்டு போவாரு.

ஆல் : ஆமா சார்.. கரெக்டா சொன்னீங்க. இப்போ நாங்க சர்ச்ல எல்லா வருஷமும் அவுட் ரீச்.. தியாகத் திருவிழா… கிராம ஊழியம்ன்னு நிறைய பண்றோம். சர்ச்சே ஆன்மீகத் தளமா மாறிடுச்சு.

இன் : வெரி குட் வெரி குட்.. சரிப்பா உக்காரு

ஆல் : (உட்கார்கிறான் )

இன் : உன் புரஃபைல் வில்லியம்ஸ் அனுப்பியிருந்தாரு. மார்க் எல்லாம் ரொம்ப கம்மியா தான் வாங்கியிருக்கே. இன்னும் கொஞ்சம் படிச்சிருக்கலாம். சர்ட்டிபிகேஷன் ஏதாச்சும் பண்ணியிருக்கியா ?

ஆல் : அது.. இன்னும் ஒண்ணும் பண்ணல சார்.. இனிமே பண்ணலாம்ன்னு இருக்கேன்.

இன் : ம்ம்.. உன் கேஸை புஷ் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா வாங்கிடலாம். நமக்கு தெரிஞ்ச பையனா போயிட்டே. ம்ம்ம்.. பொதுவா நான் ரெண்டு வாங்குவேன்..

ஆல் : வில்லியம்ஸ் அங்கிள் சொன்னாங்க..

இன் : ஓ.. ஆனா அதெல்லாம் எனக்கில்லப்பா.. எல்லா இடத்துலயும் கட்டிங் போட்டா தான் நேம் மூவ் ஆகும். பேக்கிரவுண்ட் வேலை நிறைய பண்ண வேண்டியிருக்கு. உன் கேஸ்ல இன்னும் கொஞ்ச பேரை சமாளிக்க வேண்டி வரும்.

ஆல் : ஓ… ஒண்ணரைல முடிக்கலாம்ன்னு வில்லியம்ஸ் அங்கிள் தான்…. ( இழுக்கிறான் )

இன் : கொஞ்சம் அதிகமாகும் போல இருக்கு. சரி பரவாயில்ல. வில்லியம்ஸ் கிட்டே சொல்லிட்டேன். நமக்கு ஒண்ணும் நிக்காது, பரவாயில்ல. ஒண்ணரையே குடு.. பாத்துக்கலாம்.

ஆல் : தாங்க்ஸ் சார். ( பணத்தைக் கொடுக்கிறான் ). எப்படியாவது முடிச்சு குடுங்க சார். சண்டே சர்ச்ல ஸ்தோத்திரக் காணிக்கை வைக்கணும். ஐஞ்சாவது சண்டே சாட்சி சொல்லணும்ன்னு நான் நேர்ச்சை நேர்ந்திருக்கேன்.

இன் : எல்லாம் கடவுள் பாத்துப்பாருப்பா.. நல்லா பிரேயர் பண்ணிக்கோ.

ஆல் : சரிங்க சார். அப்போ நான் வரட்டுமா ?

இன் : ஆங்.. நாளைக்கு இன்டர்வியூ வரும்போ என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே. நீட்டா டிரெஸ் பண்ணி எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி வந்து பேசு. அப்போ தான் மத்தவங்களுக்கு சந்தேகம் வராது.

ஆல் : சரி சார்..

இன் : சரி, அப்போ கிளம்புங்க.

( ஆல்பர்ட் கிளம்புகிறான். இன்டர்வியூவர் பணத்தை புரட்டிப் பார்த்து ரசிக்கிறார்.

காட்சி 3

விக்கி : டேய் ஆல்பர்ட்.. எங்கெல்லாம் உன்னை தேடறதுடா.

ஆல்பர்ட் : என்ன விஷயம் டா…

விக்கி : எனக்கு செலக்ஷன் ஆயிருக்கு.. உனக்கு வரலையா ?

ஆல்பர்ட் ( அதிர்ச்சியுடன் ) : செலக்ஷனா… இல்லையே.. எப்போ வந்துது ? லெட்டரா ?

விக்கி : லெட்டர் இல்ல, போன் வந்துது. காலைல தான் வந்துது. போன்ல அவுட்கோயிங் இல்லை, இல்லேன்னா உனக்கு உடனே போன் பண்ணியிருப்பேன்.

ஆல்பர்ட் : ஓ.. எனக்கு போன் இன்னும் வரலையே…

விக்கி : ஓ.. இனிமே வருமாயிருக்கும். கவலைப்படாதே. கடவுள் பாத்துப்பாரு.

ஆல் : ம்ம்ம்.. நான் ஒருத்தரை புடிச்சிருந்தேன். பணம் எல்லாம் குடுத்தேன். கண்டிப்பா கிடைக்கும், பர்ஸ்ட் லிஸ்ட்ல வரும்ன்னெல்லாம் சொன்னாரே.

விக்கி : ஓ.. ஏண்டா அப்படியெல்லாம் போய் நம்ம விசுவாசத்தைக் கெடுத்துக்கறே. நமக்குத் தேவையானதை கடவுள் தரமாட்டாரா என்ன ?

ஆல் : சும்மா கடுப்பேத்தாதே.. வேலை என்னாச்சோன்னு நானே டென்ஷனா இருக்கேன். ஆமா உனக்கெப்படி கிளிக் ஆச்சு ?

விக்கி : நான் ஒண்ணும் பண்ணலடா… இன்டர்வியூவுக்கு பிரிபேர் பண்ணினேன். பிரேயர் பண்ணினேன். கர்த்தர் கிட்டே விஷயத்தைச் சொல்லி அவரை நோக்கினேன். அவ்ளோ தான்.

ஆல் : ம்ம்.. உனக்கு லக் இருந்திருக்கு.. அதான்.. வில்லியம்ஸ் அங்கிள் சொன்ன ஆளு தான்.. அவரு, கிறிஸ்டியன் தான்.. ஏன் இப்படி பண்ணினாரு ?

விக்கி : அவரு உன்னை ஏமாத்திட்டாரோ என்னவோ.. போய் என்னான்னு கேளு. உங்கப்பா உழைச்சு சம்பாதிச்ச பணம் அதையாவது வாங்கிட்டு வந்துடு.

ஆல் : ம்ம். .சரிடா.. நாளை பாப்போம்.

காட்சி 4

( இன்டர்வியூ நடத்தியவரின் வீடு , ஆல்பர்ட் நுழைகிறான் )

இன் : வாப்பா ஆல்பர்ட்… நானே உன்னை வந்து பாக்கணும்ன்னு நினைச்சேன்.

ஆல் : சார்.. என்னாச்சு.. எல்லாருக்கும் ரெசல்ட் வந்துச்சு போல, பர்ஸ்ட் லிஸ்ட்ல நமக்கு இல்லையா ?

இன் : ( பணத்தை எடுத்துக் கொடுக்கிறார் ) பர்ஸ்ட்ல இல்லப்பா… எந்த லிஸ்ட்லயும் உன்னோட பேர் இல்லை. சாரி.

ஆல் : என்னசார் .. இப்படி சொதப்பிட்டீங்க .. எல்லாம் பக்காவா இருக்குன்னு சொல்லிட்டு கவுத்துட்டீங்களே.

இன் : அன்னிக்கு உன்கிட்டே பணம் வாங்கிட்டு சந்தோசமா பைபிள் வாசிச்சு ஜெபம் பண்ணிட்டு தூங்கலாம்ன்னு போனேன். நான் ஒரு நாள் ஒரு அதிகாரம்ன்னு வாசிப்பேன். அன்னிக்கு வாசிச்சது யோபு 15

ஆல் : ம்ம்.. யோபு நானும் படிச்சிருக்கேன். இன்டரஸ்டிங் புக். விஷயத்துக்கு வாங்க.

இன் : அதுல “மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்” ந்னு போட்டிருந்துது. லஞ்சம் குடும்பத்தை அழிக்கும் ந்னு எனக்கு கடவுள் எச்சரிக்கை செய்த மாதிரி இருந்துச்சு. பதறிப் போயிட்டேன்.

ஆல் : ஐயா.. அந்த வசனம் என்ன நேத்திக்கா பைபிள்ல வந்துச்சு. எப்பவும் இருக்கிறது தானே. புதுசா என்ன ஒரு பீலிங் வேண்டிக்கிடக்கு ? அதுவும் எனக்கு வேலை வாங்கி தர டைம்ல தான் நீங்க இப்படியெல்லாம் யோசிக்கணுமா ? ரெண்டு நாள் கழிச்சு யோசிச்சிருக்கலாம்ல.

இன் : அன்னிக்கு அதே போல ஒரு கனவு தம்பி. லஞ்சத்தை வாங்காதே நேர்மையா செயல்படுன்னு கடவுள் ரொம்ப தெளிவா சொன்னாரு.

ஆல் : ஐயா.. கனவுங்கறதே ஆழ் மன சிந்தனைகளோட வெளிப்பாடுன்னு அறிவியல் சொல்லுது. நேத்து யோபு படிச்சீங்க, யோசிச்சீங்க, தூக்கத்துல அது கனவா வந்துச்சு. அதுக்குப் போய் என் வாழ்க்கையோட விளையாடிட்டீங்களே.

இன் : இல்ல தம்பி. ஒரு கனவு தான் யோசேப்பை நீதிமானுக்குரிய செயலைச் செய்ய வெச்சுது. ஒரு கனவு தான் இயேசுவை எகிப்துக்கு கூட்டிட்டு போய் காப்பாற்றிச்சுது. ஒரு கனவு தான்…

ஆல் : போதும் சார்.. அப்படியே இனி யோசேப்பு.. யாக்கோபுன்னு இழுக்காதீங்க.. கனவு எல்லாரும் தான் கண்டிருக்காங்க.

இன் : தம்பி.. நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதே. “கடவுளை நோக்கி” வாழ்க்கையை நடத்தணும்னு கடவுள் என் கிட்டே சொன்னாரு. நீயும், குறுக்கு வழியில போறதை விட்டுட்டு, கர்த்தரை நோக்கியிருப்பா. உன்னோட கடமைகளை சரியா செய். அப்புறம் கர்த்தரை நோக்கியிரு.

ஆல் : ஐயா.. நீங்க திருந்தினது தப்பில்ல. ஆனா திருந்தின டைம் தான் தப்பு. ரெண்டு நாள் கழிச்சு திருந்தியிருந்தீங்கன்னா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பேன். ச்ச்சே.. எனக்கு எங்கயும் லக்கே இல்லை. எல்லாம் தோல்வி தான்.

இன் : தம்பி, இது உனக்கு தோல்வியில்லை. வெற்றி ! நீ ஒரு பாவத்துல விழாம கடவுள் காப்பாத்தியிருக்காரு. என்னையும் காப்பாத்தியிருக்காரு.

ஆல் : என்ன சொல்றீங்க ?

இன் : ஆமாப்பா.. நீ கையூட்டு கொடுத்து பாவத்தை ஊக்குவிக்கவும் இல்லை, நான் கையூட்டு வாங்கி பாவத்தில் விழவும் இல்லைன்னு ஆயிடுச்சு இப்போ. பண்ணின தப்புக்கெல்லாம் கடவுள் கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு, இனிமே கர்த்தரை நோக்கியிருக்கக் கத்துக்கோப்பா. குதிரை…

ஆல் : குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.. ந்னு தானே சொல்ல வரீங்க. ம்ம்ம்.. என் பிரண்ட் கூட சொன்னான்.. கர்த்தரை நோக்கியிருடான்னு… நான் தான் உங்களை தேடி வந்துட்டேன். சரி, உங்களால முடியலை. நான் இன்னொருத்தரை போய் பாக்க போறேன்.

இன் : இன்னொருத்தரையா ? யாரை

ஆல் : ( மேலே கையைக் காட்டி ) அவர் தான்.. வேற யாரு. இனிமே நானும் என் வாழ்க்கையில எல்லாத்துக்கும் கர்த்தரை நோக்கி இருக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன். வரேன்.

இன் : அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. நிச்சயம் உனக்குத் தேவையான வேலையை கடவுள் தருவார். காட் பிளஸ் யூ.

*

Posted in Bible Poems, Christianity, Poem on People, Songs, Sunday School

Kavithai : யார் எதிரி

யார் எதிரி ?

Image result for joseph and potiphar's wife

இச்சைக்கு
இணங்கென்று
கண்ணி வெடி வைத்தாள்
கன்னியொருத்தி.

தனிமையின்
நெருக்கத்திலும்
தேகத் தீயில் விழாமல்
தப்பித்தார் யோசேப்பு !

போர்த்திபாவின்
மனைவி,
யோசேப்பின் தூய்மையை
உலகறியச் செய்தவள் !

கடவுளுக்கு எதிராகவே
கர்ஜித்து நின்றான்
ஒருவன்.

வீரனே இல்லாத
கோழை தேசமா என
கொக்கரித்தான்.

கோலியாத்,
தாவீதிடம்
கடவுள் இருந்ததை
வரலாற்றுக்கே
புரிய வைத்தவன்.

புனித முத்தத்தை
புனிதரின் முகத்தில்
பதித்தான் ஒருவன்.

எனினும்
அது புனிதமடையவில்லை.
போலியின் பிசுபிசுப்பால்
கறைபடிந்தது.

யூதாஸ்
சிலுவைப் பயணத்தை
முத்தத்தால்
துவங்கி வைத்தவன்.

கொலையாளிகளின்
ஆடைகளுக்குக்
காவலிருந்தான் ஒருவன்.

கொன்றே தீருவேனென
அழிக்கும் அனலுடன்
சீறிப் பாய்ந்தான்.

பயணம்
சவுலின் சத்தத்தை
பவுலின்
போதனையாய் மாற்றியது.

இறைவன்
வியப்பானவர்.

எதிரியின்
விரல்களைப் பிடித்தும்
எழுதுகிறார்
வெற்றியின் வரலாறுகளை

*

சேவியர்

Posted in Bible Poems, Christianity, Poem on People, Songs, Sunday School

எதிரே வருவதெல்லாம், எதிரியல்ல

எதிரே வருவதெல்லாம்,
எதிரியல்ல

Image result for red sea and moses
செங்கடல்
எதிரே வந்ததால் தான்
இரண்டாகப் பிரிந்தது.

யோர்தான்
குறுக்கே வந்ததால் தான்
குறுக்கு வெட்டுத்
தோற்றம் பெற்றது.

எதிரே வருவதெல்லாம்
எதிரியல்ல
சாதாரண வெற்றியை
அசாதாரணமாக்கும்
காரணிகள்.

எரிகோ மதில்
இல்லையெனில்
ஆராவாரமும்
ஆண்டவரின் ஆயுதமென்பது
புரிந்திருக்குமா ?

நாமான்
மட்டும் இல்லையென்றால்
நீர் கூட
நோய் தீர்க்குமென
விளங்கியிருக்குமா ?

சிலுவை மட்டும்
இல்லையென்றால்
பூட்டிய கல்லறையும்
புரட்டப்படுமென
புரிந்திருக்குமா ?

எதிரே வருவதெல்லாம்
எதிரியல்ல.
இறைவன் யாரென்பதை
நமக்கே உணர்த்தும்
உதிரிகள்

• சேவியர்