Posted in Articles

சிறுவனும் அப்பமும்

சிறுவனும் அப்பமும்

கூட்டம்
பசியைத் தின்று
வார்த்தைகளைக் 
குடித்துக் கொண்டிருந்தது.

பாலை நிலத்தின்
சுடுவெளியில்
வயிற்றின் வெறுமை அனலடித்தது.

இயேசு
கூட்டத்தின்
வயிற்றுப் பசியை 
விரட்ட விரும்பினார்.

“நீங்களே 
உணவு கொடுங்கள்”
சீடர்களிடம் சொன்னார் !

சீடர்கள்
வெறுமையோடு வழக்காடி
தோற்று நின்றனர். 

இயேசுவின் வார்த்தைகள்
அந்த
சிறுவனின் காதுகளில் 
வந்து விழுந்தன.

என்னிடம்
ஐந்து 
வார்க்கோதுமை அப்பங்களும்
இரண்டு மீன்களும் 
இருக்கின்றன !
அவன்
பேசிமுடிக்கும் முன்
வாயைப் பொத்தினார் 
வறுமைத் தாய்.

வார்க்கோதுமை 
அவரது வாழ்க்கையை
வறுமை வார்த்தெடுத்திருந்ததை.
விளக்கியது. 

முழுமையாய் கொடுத்தால்
நமக்கு பட்டினிதான்
வேறேதும் இல்லை
என்றார் ! 

ஏழு என்பது முழுமை
நாம்
முழுமையாய் கொடுப்பதே
வளமை !
சிறுவன் சொன்னான்.

இயேசுவின் வார்த்தை
அவனுக்குள்
சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது.

எல்லோருக்கும்
பத்தாதே, என்றார் தந்தை.

பற்ற வைப்போம்
சிறு நெருப்பு போதுமே
பெருங்காட்டைப் பொசுக்க
சிறுவன் சொன்னான்.

கொடுக்கத் தான் வேண்டுமா 
கடைசியாய் கேட்டனர்
பெற்றோர் !
கொடுக்காவிட்டால்
இதுவரை
போதனைகளைப
பெற்றுக் கொண்டிருந்ததில்
அர்த்தமில்லை, என்றான் அவன்.

எழுந்தான்,
கொடுத்தான் !

இயேசு சிரித்தார். 

முழுவதும் கொடுத்ததால்
முழுமை அடைந்தாய்,
பற்றற்று இருந்ததால்
பெற்றுக் கொள்வாய்

போகும்போது
கூடை நிறைய தருகிறேன்
எடுத்துப் போ !


*

சேவியர்
Posted in Articles, Bible Animals

விவிலியமும் நானும் – குதிரை

உயர்திணையான அஃறிணைகள்

குதிரை

*

குதிரைகள்
வலிமையின் வசீகரங்கள்
கம்பீரத்தின்
முகவரிகள் !.

வீரத்தின் விலாசங்களை
வரலாறுகள்
குதிரைகளின்
குளம்படிகளைக் கொண்டே
குறித்து வைத்திருக்கிறது !

போர்க்களத்தின்
நீள அகலங்களை
குதிரைகளின்
ஆவேசப் பாய்ச்சல்களே
அளவெடுத்து வைத்திருக்கின்றன !

எங்கள்
எண்ணிக்கையைக் கொண்டே
போர்களின்
அடர்த்தி அறியப்பட்டது !

சேணம் பூட்டப்பட்ட
எங்கள்
ஆண்மையின் அணிவகுப்பே
எதிரிப் பாசறையில்
நில நடுக்கத்தையும்
குலை நடுக்கத்தையும்
கொண்டு வருகிறது .

விவிலியத்திலும்
நாங்கள்
திரையிட முடியாத
திண்மையின் அடையாளமே.

தொடக்கநூல் முதல்
திருவெளிப்பாடு வரை
நாங்கள்
அகலாமல்
ஆக்கிரமித்திருக்கிறோம் !

எங்கள் இருப்பிடத்தை
நாங்கள் தேர்வு செய்வதில்லை
எனினும்
இருப்பிடமே எங்கள்
வாழ்வினை முடிவு செய்கிறது !

தாவீதோடு இருக்கையில்
மேன்மையில்
திளைக்கிறோம்,
பார்வோனோடு இருக்கையில்
செங்கடலில் அழிகிறோம்.

சாலமோனோ
உலகின் திசைகளெங்கிலும்
இருந்து
தரத்தில் மிளிர்ந்த
குதிரைகளைச் சேகரித்தார் !

நாங்கள்
அடிமைகளின் அடையாளமல்ல
அடிமைகள்
எங்கள் முதுகில் ஏறும்
மகத்துவம் காண்பதில்லை !

எருசலேமின்
ஒரு வாயில் தன் பெயரை
“குதிரை வாயில்”
என்றழைத்து
எங்களைக் குதூகலப்படுத்துகிறது.

நிலத்தையே அசைக்கும்
எங்கள்
குளம்படியின் ஆவேசம்
அடக்கிவிட முடியாத
காட்டாறாய் சீறிப் பாயும்.

குதிக்கும் எங்களின்
குதிகால்
நரம்பு நறுக்கி
முடமாக்கும் சூட்சுமத்தை
விவிலியம் பேசுகிறது !

கடவுளின்
கடிந்துரையினால்
மடிந்து வீழ்ந்த எங்கள் கதையை
சங்கீதம் பேசுகிறது.

பாறைமேல்
ஓடமுடியாத எங்கள்
ரகசியப் பலவீனத்தைக
அது
பகிரங்கமாய்ப்
பதிவு செய்து வைத்திருக்கிறது.

பயிற்றுவிக்கப்படாத குதிரையும்
கட்டுப்பாடற்ற மகனும்
அடக்கமற்ற
முரட்டுத்தனத்தின்
அடையாளங்களென்கிறது
சீராக் நூல் !

குதிரை என்றதும்
ஒரு வசனம் நிச்சயம்
கடிவாளமின்றி
உங்கள்
இதயத்தில் கடந்து வரும்.

குதிரை
யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்
ஜெயமோ
கர்த்தரால் வரும் !

சில சோம்பேறிகள்
என்னை ஆயத்தமாக்குவதை
மறந்து விட்டு
ஜெயத்தைக் கர்த்தர் தருவாரென
கனவு காண்கின்றனர்.

வெற்றுப் பாத்திரத்தால்
பசியாற்ற நினைக்கும்
அறிவிலிகள் அவர்கள்.

நாங்கள்
பல அவதாரங்கள் எடுத்ததுண்டு.
ஒரு முறை
எலிசாவைக் காக்க
நெருப்புக் குதிரைகளாய்
நெருங்கி வந்தோம்.

ஈசபேலை
எங்கள்
கால்களால் மிதித்து
கொன்றோம்.

திருவெளிப்பாட்டில்
வெள்ளை, சிவப்பு, கறுப்பு, பச்சை
என
பல வண்ணத் தேகத்துடன்
மேகங்களிலும்
வேகம் கொள்கிறோம்.

அழிவுக்காய் அழைக்கப்பட்ட
குதிரைப்படையின் எண்ணிக்கை
இருபது கோடி
என
பிரமிக்க வைக்கிறோம்.

கடைசியாய்
எங்கள்
லாடங்களில் இருக்கும்
உங்களுக்கான ஒரு செய்தி
இது தான்.

குதிரைகளிலும்
ரதங்களிலும்
அல்ல,
ஆண்டவரின் பெயரில்
பெருமை கொள்க !

*

சேவியர்

Posted in Animals Birds, Bible Poems

உயர் திணையான அஃறிணைகள் – பன்றி

உயர் திணையான அஃறிணைகள்
பன்றி

புறக்கணிப்பின்
பின்வாசலாய் இருக்கிறது
என் வாழ்க்கை !

குதித்து வந்து
தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ
படுக்கையில்
புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ
பொதுவாக
நான் இருப்பதில்லை !

சகதியின் சகவாசமும்
அழுக்கின் அருகாமையும்
என்னை
புனிதத்தின் தேசத்திலிருந்து
புறந்தள்ளியிருக்கிறது.

நான்
அசைபோடாததால்
என்னை
அசைபோடக் கூடாதென
மோசேயின் சட்டம்
முட்டுக்கட்டை இடுகிறது.

என்
இறுதிச் சடங்கில் கூட
தொட்டு விடாத் தீண்டாமையுடன்
சட்டம்
என்னை தூரமாய் வைக்கிறது.

நான்
அருவருப்புகளின் உருவகமாய்
அறியப்படுவதில் வருத்தமுண்டு.

கடவுளின் சொல்லுக்கு
அஞ்சாதவரின்
உணவுப் படையலானது,
பன்றியின் இரத்தப் படையல் போல
வெறுக்கத்தக்கது
என்கிறது விவிலியம்.

உங்கள் முத்துகளை
என் முன்னால் எறிந்தால்
நாங்கள்
அதன் மதிப்பை உணராமல்
மிதித்துப் போடுவோம்
என
இயேசுவே சொல்லிவிட்டார்.

இலேகியோன்
எனும்
பேய்களின் படையையும்
எங்களிடமே அனுப்பி
நாங்கள்
தண்ணீருக்குள் தாவி
தற்கொலை செய்யவும் வைத்தார்.

ஊதாரி மைந்தனின்
இழிநிலையைச் சொல்லவும்
என்
உணவு தானே உவமையானது.

பன்றியைக் கழுவினாலும்
அது
சேற்றில் புரளுமென
சொல்லிச் சொல்லி
யாரும் எங்களைக் கழுவுவதுமில்லை.

நாங்கள்
தோராவின் காலம் முதல்
தூரமாகவே இருக்கிறோம்.

மனிதனின்
உடலுக்குள் செல்வதொன்றும்
மனிதனைத்
தீட்டுப்படுத்தாதென
ஒருமுறை
சற்றே ஆறுதல் தந்தார் இயேசு.

இஸ்லாமியர்களுக்கும்
நான்
இகழப்படும் விலங்கு.

ஆனாலும்
தவிர்க்கமுடியா சூழலில்
என்னைத் தின்பது
பாவமல்ல,
ஏனெனில் கடவுள் இரக்கமுள்ளவர்
என
குரானும் கொஞ்சம் கருணை காட்டியது.

எனினும்
எனக்கு
மகிழ்ச்சி தரும்மனிதர்
சாலமோன் தான்.

அவர் மட்டும் தான்
எனது மூக்கில் ஒரு
வைர மூக்குத்தியை
கற்பனையேனும் செய்து பார்த்தவர்

அவர் சொன்னார்.

மதிகேடான
பெண்ணின் அழகு,
பன்றிக்குப் போட்ட
வைர மூக்குத்தி !

*

சேவியர்

Posted in Bible Poems, Christianity, Poem on People, Songs, Sunday School

Kavithai : யார் எதிரி

யார் எதிரி ?

Image result for joseph and potiphar's wife

இச்சைக்கு
இணங்கென்று
கண்ணி வெடி வைத்தாள்
கன்னியொருத்தி.

தனிமையின்
நெருக்கத்திலும்
தேகத் தீயில் விழாமல்
தப்பித்தார் யோசேப்பு !

போர்த்திபாவின்
மனைவி,
யோசேப்பின் தூய்மையை
உலகறியச் செய்தவள் !

கடவுளுக்கு எதிராகவே
கர்ஜித்து நின்றான்
ஒருவன்.

வீரனே இல்லாத
கோழை தேசமா என
கொக்கரித்தான்.

கோலியாத்,
தாவீதிடம்
கடவுள் இருந்ததை
வரலாற்றுக்கே
புரிய வைத்தவன்.

புனித முத்தத்தை
புனிதரின் முகத்தில்
பதித்தான் ஒருவன்.

எனினும்
அது புனிதமடையவில்லை.
போலியின் பிசுபிசுப்பால்
கறைபடிந்தது.

யூதாஸ்
சிலுவைப் பயணத்தை
முத்தத்தால்
துவங்கி வைத்தவன்.

கொலையாளிகளின்
ஆடைகளுக்குக்
காவலிருந்தான் ஒருவன்.

கொன்றே தீருவேனென
அழிக்கும் அனலுடன்
சீறிப் பாய்ந்தான்.

பயணம்
சவுலின் சத்தத்தை
பவுலின்
போதனையாய் மாற்றியது.

இறைவன்
வியப்பானவர்.

எதிரியின்
விரல்களைப் பிடித்தும்
எழுதுகிறார்
வெற்றியின் வரலாறுகளை

*

சேவியர்

Posted in Bible Poems, Christianity, Poem on People, Songs, Sunday School

எதிரே வருவதெல்லாம், எதிரியல்ல

எதிரே வருவதெல்லாம்,
எதிரியல்ல

Image result for red sea and moses
செங்கடல்
எதிரே வந்ததால் தான்
இரண்டாகப் பிரிந்தது.

யோர்தான்
குறுக்கே வந்ததால் தான்
குறுக்கு வெட்டுத்
தோற்றம் பெற்றது.

எதிரே வருவதெல்லாம்
எதிரியல்ல
சாதாரண வெற்றியை
அசாதாரணமாக்கும்
காரணிகள்.

எரிகோ மதில்
இல்லையெனில்
ஆராவாரமும்
ஆண்டவரின் ஆயுதமென்பது
புரிந்திருக்குமா ?

நாமான்
மட்டும் இல்லையென்றால்
நீர் கூட
நோய் தீர்க்குமென
விளங்கியிருக்குமா ?

சிலுவை மட்டும்
இல்லையென்றால்
பூட்டிய கல்லறையும்
புரட்டப்படுமென
புரிந்திருக்குமா ?

எதிரே வருவதெல்லாம்
எதிரியல்ல.
இறைவன் யாரென்பதை
நமக்கே உணர்த்தும்
உதிரிகள்

• சேவியர்