Posted in Articles

இயேசு கேட்ட கேள்விகள்

நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?

நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?

( யோவான் 18 : 34 )

இயேசுவைப் படுகொலை செய்ய வேண்டுமென யூத மதத் தலைவர்கள் அவரை பிலாத்துவின் முன்னால் நிறுத்துகிறார்கள். பிலாத்து அவர்களிடம், ‘நீங்களே கொண்டு போய் உங்கள் சட்டப்படி இவனுக்கு தண்டனை வழங்குங்கள்’ என்கிறான். அதாவது யூத சட்டப்படி தண்டனை வழங்கச் சொல்கிறார். அப்போது யூதர்கள் “சட்டப்படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது” என்கின்றனர். 

யூதர்களுடைய மரண தண்டனை என்பது கல்லால் எறிந்து கொல்வது. ஆனால் இயேசு சிலுவையில் அறையுண்டு மரிக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம். எனவே ரோம முறைப்படி தான் தண்டனை நிறைவேற்றியாக வேண்டும். யூதர்கள் தங்களை அறியாமலேயே இறைவார்த்தைகளை அங்கே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

பிலாத்து இயேசுவைப் பார்த்துக் கேட்டான், ‘நீ யூதர்களின் அரசனா ?’

அந்தக் கேள்வியை பிலாத்து அலட்சியமாய்க் கேட்டிருக்கலாம். அல்லது ஏளனமாய்க் கேட்டிருக்கலாம். காரணம் மரண தண்டனைக்காக அவனிடம் கொண்டு வரப்படுபவர்கள் பெரும்பாலும் கலகக் காரர்கள். அல்லது அதிகாரத்துக்கு எதிராய் கடுமையாய்ப் போராடுபவர்கள். அவர்கள் யாருமே இயேசுவைப் போல அமைதியாய் நிற்பதும் இல்லை. தெளிவாய்ப் பேசுவதும் இல்லை. 

தன்னை ஒருவன் அரசனாக்கிக் கொள்ள வேண்டுமெனில், அவருக்கு ஆதரவாளர்கள் இருக்க வேண்டும். அவருடைய ஆடைகள் கண்டிப்பாக பகட்டின் ஆடையாய் இருக்க வேண்டும். ஆனால் இயேசுவிடம் எதுவும் இல்லை. தனியாய் நிற்கிறார். மிகவும் எளிமையாய் நிற்கிறார். அமைதியாய் நிற்கிறார். இப்போது பிலாத்துவிடம் வியப்பும் ஏளனமும் சரி விகிதத்தில் கலந்திருக்கலாம். எனவே தான் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். 

இயேசு அதற்கு ஒரு கேள்வியையே பதிலாய்த் தருகிறார். அந்தக் கேள்வி தான் மிகப்பெரிய ஆன்மிக சிந்தனைகளை உள்ளடக்கிய ஒரு கேள்வி. “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்கிறார் இயேசு ! அதாவது நான் யார் என்பதை அறியும் ஆவல் உமக்கு இருக்கிறதா ? அல்லது அடுத்தவர்கள் என்னை அரசன் என்கிறார்கள் அது உண்மையா என அறியும் ஆவல் இருக்கிறதா ? இதுவே இந்தக் கேள்வியின் பொருள். 

நீராகக் கேட்கிறீர் என்றால், இயேசு உண்மையில் யார் என்பதை அறியும் முயற்சி.

பிறர் சொல்வதை வைத்துக் கேட்பதெனில், இயேசுவைச் சிலுவையில் அறையும் முயற்சி !

பிலாத்து, 

இயேசுவை அறிய விரும்புகிறானா ? அறைய விரும்புகிறானா ?

இயேசுவின் கேள்வியில் பிலாத்து தடுமாறியிருக்க வேண்டும். உண்மையிலேயே இயேசுவை பிலாத்து அறிய விரும்பினானா ? இயேசு நோய்களை நீக்கினாரே, பேய்களை விரட்டினாரே, நீர் மீது நடந்தாரே, அதிசய அப்பங்களைத் தந்தாரே, அற்புதமான போதனைகள் தந்தாரே, விண்ணக வாழ்வின் வழியைக் காட்டினாரே.. இவற்றையெல்லாம் அறிய விரும்பினானா பிலாத்து ?

இல்லை, கூட்டத்தினர் இவரைக் கொலை செய்ய வேண்டுமெனும் வெறியில் கொண்டு வந்திருக்கிறார்களே. அந்த குற்றச் சாட்டை நிரூபிக்க நினைத்தானா ? குற்றம் நிரூபிக்கப்பட்டால் கொலை செய்வது எளிதாகிவிடும் என நினைத்தானா ?

நம்மை நோக்கி இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன சொல்வோம் ?

நாம் 

இயேசுவை அறிய நினைக்கிறோமா ?

இயேசுவைப் பற்றி அறிய நினைக்கிறோமா ?

இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஒன்று அன்பினால் இணைவது. இன்னொன்று தகவல்களினால் கட்டமைக்கப்படுவது. ஒன்று சித்தாந்தங்களோடு ஒன்றிப்பது, இன்னொன்று மேம்போக்காக தெரிந்து கொள்வது. ஒன்று அவரை நம் வாழ்வின் பாகமாய் மாற்றுவது, இன்னொன்று அவரை தூரத்தில் வைத்து எட்டிப் பார்ப்பது !

நாம் இயேசுவை எப்படி அறிய விரும்புகிறோம் ?

பிலாத்து இயேசுவை அறிய விரும்பவில்லை. இயேசு அவனிடம் சொன்னார், ‘அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்”  என்று. பிலாத்து இயேசுவைப் பார்த்து, ‘உண்மையா அது என்ன?’ என்று கேட்டான்.

பிலாத்து

உண்மையா அது என்ன ? என கேட்காமல்

உண்மையா அது யார் ? என கேட்டிருக்கலாம். ஏனெனில் நானே உண்மை என்றவரிடம், எது உண்மை என்று கேட்கிறான் பிலாத்து. யார் உண்மை என கேட்டிருந்தால், விடை கிடைத்திருக்கும். களம் மாறியிருக்கும். 

பிலாத்து உண்மையின் முன்னால் நின்ற பொய் ! அவனுக்கு உண்மை என்ன என்பது தெரிந்திருந்தது. இயேசுவைப் பொறாமையால் தான் கையளித்தார்கள் எனும் உண்மை ! இயேசு குற்றம் செய்யவில்லை எனும் உண்மை ! இயேசு சாவுக்குரியவர் அல்ல எனும் உண்மை ! தான் நினைத்தால் இயேசுவை விடுதலை செய்ய முடியும் எனும் உண்மை. எல்லா உண்மையும் தெரிந்த அவனுக்கு, ‘உண்மை’ என்பதே இயேசு தான் என்பது தெரியவில்லை. அவன் உண்மையைக் கொன்ற பொய்யாய் மாறிப் போனான்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபின் அவன் சிலுவையில் வைக்க ஒரு பலகை தயாராக்குகிறான். அதில் எழுதுகிறான் “யூதர்களின் அரசன்”.  சீனாய் மலை கட்டளைகளை எழுதியது, கல்வாரி மலை அதில் கையொப்பமிட்டது ! ‘நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசன்” என !

நீ யூதனின் அரசனா ? என மரணத்துக்கு முன் கேள்வி எழுப்பியவன். ‘நீர் யூதரின் அரசன் தான்” என மரணத்திற்குப் பின் விடை எழுதுகிறான். விடையைத் திருத்தச் சொன்னவர்களை கோபத்துடன் திருப்பி அனுப்புகிறான் ! 

நான் விண்ணில் உயர்த்தப்படும் போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றார் இயேசு ! அதில் பிலாத்துவும் ஒருவனா ? 

இன்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம் ! 

நான் இயேசுவை அறிய விரும்புகிறேனா

அறைய விரும்புகிறேனா ?

*

சேவியர்

Posted in Sunday School

மரியா, மார்த்தா & இயேசு

Sunday School / Catechism / மறைக்கல்வி

மார்த்தா , மரியா & இயேசு 

மார்த்தா : ஏ.. மரியா… அதோ பாரு.. இயேசு வந்திட்டிருக்காரு

மரியா : ஓ.. அப்போ நம்ம வீட்டுக்கு தான் வராருன்னு நினைக்கிறேன். 

மார்த்தா : அப்படியெல்லாம் நினைக்க கூடாது.. நான் போய் கூட்டிட்டு வரேன்… ( ஓடிப் போய்… இயேசுவை அழைத்து வருகிறார் ) .. இயேசுவே வாங்க.. வாங்க எங்க வீட்டுக்கு வாங்க சாப்டு போலாம்

இயேசு : சரி… போலாம்.

மரியா : இயேசுவே வாங்க, உட்காருங்க…

மார்த்தா : இயேசுவே… எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. கண்டிப்பா ஏதாச்சும் ஸ்பெஷலா உங்களுக்கு செஞ்சு தரணும்… நான் பாக்கறேன் என்ன இருக்குன்னு.

(இயேசுவும் மரியாவும் பேசுகின்றனர் )

இயேசு – மரியாவிடம்.  : நானே திராட்சைச் செடி, நீங்கள் அதன் கிளைகள்.. நீங்கள் என்னில் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவீர்கள்..

மார்த்தா : ( ஓடி வருகிறார்… ) கனி..கனி.. இயேசுவே கொஞ்சம் பழங்கள் நான் வெட்டி வைக்கிறேன் முதல்ல…. செமயா இருக்கும்….  சொல்லிக் கொண்டே ஓடுகிறாள் 

இயேசு – மரியாவிடம் : நானே ஜீவ தண்ணீர், என்னைப் பருகுபவனுக்கு தாகமே எடுக்காது.

மார்த்தா : ( மார்த்தா ஓடி வருகிறார்.. ) ஐயோ.. தண்ணி… தண்ணியே இல்லை.. வீட்ல… நான் இதோ ஓடிப் போய் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வரேன் 

இயேசு – மரியாவிடம் : நானே வாழ்வளிக்கும் உணவு.. என்னை உண்ண வேண்டும்.

மார்த்தா…: (பரபரப்பாய் வருகிறார் ) ஆமா..உணவு உணவு…. அப்பம் சுட்டு வைக்கிறேன்… இதோ இன்னும் கொஞ்சம் நேரம் தான்…. 

இயேசு – மரியாவிடம் : எதை உடுப்போம் எதை உண்போம் என கவலைப்படாதீர்கள்…. கடவுள் வானத்துப் பறவைக்கே உணவளிப்பவர், உங்களுக்கு அளிக்க மாட்டாரா

மார்த்தா : ( இயேசுவிடம் ) இயேசுவே.. இது நல்லாவே இல்லை.

இயேசு : ஏன் என்னாச்சு…

மார்த்தா : பாத்திரம் கழுவி, தண்ணி எடுத்து, பழம் கட் பண்ணி, எல்லாம் செஞ்சிட்டு இருக்கேன். மாவு பிசைஞ்சாச்சும் தரலாம்ல இந்த மரியா… கொஞ்சம் அனுப்பி வையுங்க. 

இயேசு : என்னுடைய கடைசிப் பயணமா எருசலேம் போயிட்டிருக்கேன். இப்போ உணவா முக்கியம் ? அழியா உணவாகிய வார்த்தை அல்லவா முக்கியம் 

மார்த்தா : என்ன சொன்னீங்க இயேசுவே ? புரியல.

இயேசு : ஒண்ணுமில்லை.. நீ பல விஷயங்களைக் குறித்து கவலைப்பட்டுட்டே இருக்கிறாய்

மார்த்தா : என்ன இயேசுவே… வீட்டுக்கு வந்திருக்கீங்க, நல்ல சாப்பாடாச்சும் தர வேண்டாமா ? நான் தான் உங்களை கூப்பிட்டேன்.. எனக்கு அந்த பொறுப்பு இருக்குல்ல.

இயேசு : அதெல்லாம் தேவையில்லாத கவலை. 

மார்த்தா : கொஞ்சம் மரியா ஹெல்ப் பண்ணலாம்ல..

இயேசு : மரியா நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள். அது அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படாது. 

மார்த்தா : புரியலையே…. 

இயேசு : சில வேளைகளில் என் அருகில் அமர்ந்து, அமைதியாய் என் குரலைக் கேட்பது.. எனக்காக ஓடி ஆடி பணி செய்வதை விடச் சிறந்தது.

மார்த்தா : ஓ… அப்போ சாப்பாடு.

இயேசு : ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததை நீ அறிவாய்… இப்போ நானே உணவாகப் போகிறேன்… எனக்கான உணவுக்கா நான் கவலைப்படுவேன்… 

மார்த்தா : சாரி இயேசுவே.. எனக்கு இது தெரியாம போச்சு.. நானும் உங்க காலடியில அமர்ந்து உங்க வார்த்தைகளைக் கேட்கப் போகிறேன்.

இயேசு : மகிழ்ச்சி ! மகிழ்ச்சி ! நானே வாசல்.. என் வழியாய் அன்றி எவனும் தந்தையிடம் வர முடியாது !

*

Posted in Sunday School, skit

சிங்கள் டீ

ஒருகுவளைதேநீர்

தெருவில் ஒருவர் இருக்கிறார். 

இளைஞன் ஒருவர் அவருக்கு தேனீர் கொண்டு கொடுக்கிறான். 

நபர் : என்னப்பா விசேஷம்

இளை : விசேஷம் ஒண்ணும் இல்லை.. எங்க வீடு அது தான். வீட்ல டீ குடிச்சிட்டு இருந்தேன். நீங்க இங்க நிக்கறதை பாத்தேன். அதான் ஒரு டீ குடுக்கலாமேன்னு நினைச்சேன்

நபர் : ஏன்பா.. யாருக்குமே தோணாதது உனக்கெப்படி தோணிச்சு ?

இளை : எங்கப்பாவும் இப்படி ஒரு வேலை பாத்தவரு தான்… இந்த கஷ்டம் என்னன்னு எனக்கு தெரியும்.. 

நபர் : அப்படியா… ஆனா….பெரிய வீட்ல இருக்கீங்க ?

இளை : அப்பா என்னை நல்லா படிக்க வெச்சாரு… . பை காட்ஸ் கிரேஸ்…நான் நல்லா இருக்கேன்… 

நபர் : உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லா அமையும்பா.. பெரிய இடத்துல இருந்தாலும், உன் கண்ணுக்கு சிறியவங்க தெரியறாங்க…. 

இளை : எங்க அப்பா சொல்லுவாரு… குப்பை பொறுக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கும்பா.. அந்த டைம்ல…. யாராச்சும் ஒரு வாய் டீ தந்தா நல்லா இருக்கும்ன்னு .. ஆனா யாரும் நெருங்கினது கூட இல்லை.. மூக்கை பொத்திட்டு போயிடுவாங்க…

நபர் : உண்மை தான்பா..

இளை : ஒரு தடவையாச்சும் அடுத்தவங்க பக்கத்துல நின்னு பாத்தா தான்.. இந்த கஷ்டம் புரியும். அதான் நான் இப்படி யாரையாச்சும் பாத்தா.. ஓடிப் போய் ஒரு டீயோ, தண்ணியோ ஏதாச்சும் குடுப்பேன். 

நபர் : ரொம்ப சந்தோசப்பா.. யாருன்னே தெரியாத எனக்கு நீ டீ குடுத்தது ரொம்ப சந்தோசம்பா…

இளை : இப்போ தான் தெரிஞ்சிடுச்சே.. இனிமே நாம தெரியாதவங்க இல்லை.. தெரிஞ்சவங்க.

நபர் : ம்ம்.. அப்பா பிள்ளையை ரொம்ப நல்லா வளர்த்திருக்காரு

இளை : பரம பிதா, அவரோட பிள்ளையை நமக்காக சாவடிச்சாரு.. அதோட ஒப்பிடும்போ நாம பண்றதெல்லாம் ஒண்ணூமே இல்லையே சார்

நபர் : அதென்னப்பா கதை

இளை : உக்காருங்க சார்.. நான் சொல்றேன். ஸ்டோரி ஆஃப் கிறிஸ்மஸ்.. அது ஒரு பெரிய பெயின்ஃபுல் ஸ்டோரி… 

Posted in skit, Sunday School

நான் அழகா இல்லை

ந1 : என்னடா டல்லா இருக்கே

ந 2 : இல்ல .. என் கிளாஸ்ல எல்லாருமே என்னை விட ஹைட்டா இருக்காங்க.. நான் மட்டும் தான் இப்படி குள்ளமா இருக்கேன் அதான்.

ந 1 : ஹைட்ல என்னடா இருக்கு.. எத்தனையோ பெரிய பெரிய வரலாற்று மனிதர்கள் குள்ளமா தான் இருக்காங்க‌

ந 2 : எனக்கு ஹிஸ்டாரிக்கல் பீப்பிள் ஆக ஆசையில்லை, நார்மலா இருந்தா போதும்.. அதுக்கு ஐ நீட் ஹைட்

ந 1 : ம்ம்… ஹைட் வரும் கவலைப்படாதே

காட்சி 2

ந 1 : மறுபடியும் என்னடா டல் ?

ந 2 : என் கலர் ரொம்ப டல்லா இருக்கு.. நேற்று குரூப் போட்டோ ஒண்ணூ எடுத்தோம்.. நான் மட்டும்  கருப்பா….  இருக்கேன்

ந 1 : டேய்.. நீ நல்ல அழகா தாண்டா இருக்கே

ந 2 : நீயும் கலாய்க்காதே.. கறுத்துப் போன‌ கருப்பட்டி மாதிரி இருக்கேன்…

ந 1 : டேய்.. உலகத்துல..

ந 2 : போதும் போதும்.. வரலாற்றுல மண்டேலா எல்லாம் கருப்பு ந்னு சொல்ல வரே.. அப்படி தானே… போதும்.

காட்சி 3

ந 1 : டேய்.. இப்ப என்னடா டல் ?

ந 2 : என் வாய்ஸ் இருக்கே…நல்லாவே இல்லடா..

ந 1 : டேய்.. உன்னை திருத்தவே முடியாது.. எதையாவது ஒண்ணை கண்டு பிடிச்சு ஃபீல் பண்றே.. உன்னை இன்ஃபீரியரா நினைச்சுக்கறே.

ந 2 : நான் அப்படி தானே இருக்கேன். தட்ஸ் த ஃபேக்ட்… 

ந 1 : நீ அமெரிக்க ஜனாதிபதியோட பிள்ளையா இருந்தா இப்படி எல்லாம் யோசிப்பியா ?

ந 2 : அப்படின்னா நான் எதுக்கு இதெல்லாம் யோசிக்கணும்.. எப்படி இருந்தாலும் கெத்துன்னு நினைப்பேன்.

ந 1 : அதை விட ஆயிரம் ஆயிரம் மடங்கு பெரிய ராஜாதி ராஜா இயேசுவோட பிள்ளைடா நீ.. அப்படின்னா நீ இளவரசன்…

ந 2 : ஓ.. அப்படி சொல்றே

ந 1 : யா… அப்படிப்பட்ட நீ இப்படி சப்ப மேட்டருக்கு ஃபீல் பண்ணலாமா ? இயேசு மனுஷனா வந்தப்போ உயரம், நிறம், பேச்சு, ஒல்லி குண்டு பத்தியெல்லாம் பேசினாரா என்ன ? 

ந 2 : ம்ம்ம்நோ.. பேசவே இல்லை

ந 1 : அதெல்லாம் முக்கியமே இல்லை… இனிமே நீ இப்படிப்பட்ட குறைகளைப் பற்றி பாக்காம, நீ யாரோட பிள்ளைன்னு பாரு .. அப்போ உனக்கு தன்னம்பிக்கை தானா வரும்.

ந 2 : யா.. உண்மை தான்… 

ந 1 : தட்ஸ் த மெசேஜ் ஆஃப் கிறிஸ்மஸ் டா… எல்லாரும் இறைவனின் பிள்ளைகள். அவர் நம்மோட மூத்த அண்ணன்.

ந 2 : இனிமே இந்த தேவையற்ற மேட்டர் பேசமாட்டேன்டா… கருப்போ சிவப்போ, நான் கடவுளோட மகன். ! ஹிஸ் பிரின்சஸ் ! இளவரசன்…  தட்ஸ் இட்

ந1 : ஹேப்பி கிறிஸ்மஸ் டா

ந 2 : ஹேப்பி கிறிஸ்மஸ்

Posted in Christmas Special, skit

பகிர்தல் (SKIT) Christmas Special

மாணவி : ஏண்டா… சாப்பிடலையா

மாணவன் : இல்ல.. இன்னிக்கு நான் சாப்பிடறதில்லை…

மாணவி : இண்ணிக்கு என்ன ?

மா : அ..அ..அது அமாவாசை.. இன்னிக்கு அமாவாசை… நான் அமாவாசைக்கு சாப்பிடறதில்லை

மாணவி : டேய்.. அமாவாசை முடிஞ்சு மூணு நாளாச்சு

மா : ஓ…. அ..அப்போ பௌர்ணமி.. பௌர்ணமிக்கும் சாப்ட மாட்டேன்…

மாணவி : பௌர்ணமிக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு

மா : அப்படியா… இ…இன்னிக்கு… செவ்வாய் இல்ல ?

மாணவி : இல்ல.. புதன்… என்னாச்சு ? சாப்பாடு எடுத்துட்டு வரலையா ? 

மா : ( மெதுவாக ) இல்ல…

மாணவி : ஏன் ? மறந்துட்டியா ?

மா : பசியை மறக்க முடியுமா ? வீட்ல சாப்பாடு இல்லை.. அதான் எடுத்துட்டு வரலை

மாணவி ( சோகமாய் ) : இதுக்கு போய் ஏன் வருத்தப்படறே.. வா.. நாம ஷேர் பண்ணுவோம்

மா : வேணாம் வேணாம்… நீ சாப்பிடு

மாணவி : பரவாயில்லப்பா.. என்ன இருக்கோ, அதை ஷேர் பண்ணுவோம்… அம்மா கொஞ்சம் நல்லாவே சமைப்பாங்க‌… பயப்படாதே…. 

மா : பட்டினி கிடக்கிறவனுக்கு பாவக்காயும், பாயாசம் மாதிரி தான்.

மாணவி : ஹி ஹி.. இனிமே டெய்லி நாம ஷேர் பண்ணி சாப்பிடலாம்… 

மா : உனக்கெதுக்கு கஷ்டம்.பரவாயில்ல… பழகிடுச்சு…. 

மாணவி : அடப்பாவி.. இது கஷ்டமா ? கஷ்டம்ன்னா என்ன தெரியுமா ? சிலுவையை சுமந்து நமக்காக ஒருத்தர் மரித்தாரே.. அது கஷ்டம்.. இதெல்லாம் என்னப்பா

மா : யூ மீன் ஜீஸஸ்

மாணவி : யா… அவரு அவரோட உடலையே பகிர்ந்து கொடுத்தாரு, நான் என் உணவை தானே பகிர்ந்து கொடுக்கிறேன். இட்ஸ் கிறிஸ்மஸ்

மா : கிறிஸ்மஸா

மாணவி : யா.. கிறிஸ்மஸ் ஈஸ் பகிர்தல்.. கடவுள் தன் மகனை நமக்கு கொடுத்தாரு… நாம இருக்கிறதை இல்லாதவங்க கூட பகிர்ந்து கொள்ளணூம்

மா ; தேங்க்யூ… இட் மீன்ஸ் எ லாட்… ஐ வில் ரிமம்பர் யுவர் ஹெல்ப்

மாணவி : நோ..நோ.. ஜஸ்ட் ரிமம்பர் கிறிஸ்மஸ்… இட்ஸ் ஷேரிங் காட்ஸ் லவ். நீயும் இப்படியே ஒரு காலத்துல அடுத்தவங்களுக்கு அன்பு காட்டு.. தேட்ஸ் இட்.

மா : யா… ஐ லைக் திஸ் கிறிஸ்மஸ்.