
ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ரோபாட்டிக் மென்பொருட்களை பயன்படுத்தி வருகிறது. அவற்றுக்கு ‘சேட்பாட்’ என்பது பெயர். அதாவது சேட் செய்யும் ரோபாட்கள் என்பதன் சுருக்கம் தான் அது. நாற்பது மொழிகள் அவற்றுக்குள் பதித்து வைக்கப்பட்டுள்ளன. எந்த மொழியைத் தேர்ந்தெடுத்து உரையாடுகிறோமோ அதற்குத் தக்கபடி அதுவும் அதே மொழியில் பதில் தரும்.
சமீபத்தில் ஒரு நிகழ்வு. இப்படிப்பட்ட ரோபாட்களில் இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டன. அதுவும் மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு சமிக்ஜை மொழியில் ! இதைப் பார்த்த மென்பொருள் பொறியாளர்கள் அதிர்ந்து போய்விட்டனர். நிலமையின் விபரீதத்தை உணர்ந்த நிறுவனம் அந்த சேட் போட்களை தற்காலிகமாய் செயலிழக்கச் செய்து விட்டது.
ரோபோட்டிக் தொழில்நுட்பம் நாளை மனுக்குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாய் மாறலாம் என்பதன் ஒரு சின்ன உதாரணம் இது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெறும் அறிவியல் புனைக் கதைகளிலும், ஹாலிவுட் திரைப்படங்களிலும் மட்டுமே வலம் வந்த ரோபோக்கள் இன்று இலட்சக்கணக்கான வீடுகளில் நுழைந்து விட்டன. எல்லா துறைகளிலும் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ரோபோ என்பது கைகால் வைத்த மனித உருவ ரோபோக்கள் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவோடு வலம் வரும் எல்லா மென்பொருட்களும் இந்த வகையறாவில் வந்து விடுகிறது.
சமீபத்தில் ஒரு குழந்தை வடிவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. குடும்பத்தில் ஒரு சின்னக் குழந்தையைப் போல இது வாழுமாம். குழந்தைகள் இல்லாத வீடுகளில் இந்த குழந்தைகள் ஒரு செல்லப்பிராணியைப் போல தவழ்ந்து திரியும். பெற்றோரின் உணர்வுகளை உள்வாங்கி அதற்குத் தக்கபடி செயல்பட இவற்றுக்குள் செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்டிருக்கிறது.
தனிமையில் வாடும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் நட்பு பாராட்ட ‘கம்பேனியன் ரோபோக்கள்’ உருவாக்கப்படுகின்றன. இன்றைய இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆகுமென்டட் ரியாலிடி, மெஷின் லேர்னிங், கிளவுட் என எல்லா தொழில்நுட்ப அம்சங்களும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் எனும் செயற்கை நுண்ணறிவுக்குள் நுழைந்து விட்டது.
முன்பெல்லாம் மனிதர்கள் எழுதும் மென்பொருளுக்குத் தக்கபடி தான் ரோபோக்கள் செயல்பட்டு வந்தன. அந்த மென்பொருட்களைத் தாண்டி அவை எதையும் யோசிப்பதில்லை. ஆனால் இன்றைய நவீன ரோபோக்கள் அப்படியல்ல. தங்களுடைய மென்பொருட்களை தாங்களே உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. எனவே சூழலுக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப அவை மென்பொருட்களை சொந்தமாக எழுதிச் சேர்க்கின்றன. ‘சிற்பமே தன்னை செதுக்கிக் கொள்வது போன்ற’ ஒரு புதுமையான நுட்பம் இது.
உதாரணமாக ஒரு ரோபோ செஸ் விளையாடும் வகையில் வடிவமைக்கப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். தொடக்கத்தில் அதற்கு அடிப்படை செஸ் அறிவு மட்டுமே இருக்கும். அந்த ரோபோ எதிராளி ஒருவருடன் செஸ் விளையாடும் போது எதிரியின் சிறந்த விளையாட்டு உத்தியைக் கற்றுக் கொண்டு தனக்குள் புதிய மென்பொருளை தனக்குள் எழுதிச் சேர்க்கும்! இப்படி படிப்படியாக தனது அறிவை வளர்த்துக் கொண்டு வெல்ல முடியாத நிலைக்கு உயர்ந்து விடும்.
இப்படி தன்னைத் தானே வலிமைப்படுத்தும் ரோபோக்கள் ஆபத்தானவை என்பது தான் பெரும்பாலான அறிவியலார்களின் கருத்து. இன்றைக்கு இராணுவம். அணு உலைகள், விண்வெளிப் பயணங்கள் என எல்லா இடங்களிலும் ரோபோக்கள் இருக்கின்றன. அவை தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைத் தாண்டி ஒரு பணியை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் போது அது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது.
சர்வதேச யுத்தங்களோ, உலகப் பேரழிவுகளோ, அண்ட சராசர நிலைகுலைவுகளோ ஏற்பட சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. தன்னை விட அறிவு குறைந்த விலங்குகளை எப்படி மனிதன் அடக்கி ஆள்கிறானோ, அப்படி தன்னை விட அறிவு குறைந்த மனிதனை செயற்கை நுண்ணறிவு கருவிகள் அடக்கி ஆள்வது சாத்தியமே. காரணம் இன்றைக்கு கிடைக்கின்ற தகவல்களை மனிதனை விட பல இலட்சம் மடங்கு வேகத்திலும், பல கோடி மடங்கு அதிகமாகவும் பயன்படுத்தும் வாய்ப்பு அந்த இயந்திரங்களுக்கு உண்டு. இயற்கை வளர்ச்சியில் இருக்கும் மனிதனால் அந்த விஷயத்தில் போட்டி போடவே முடியாது. இதை நான் சொல்லவில்லை உலகில் தலை சிறந்த அறிவியலார் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்.
இன்றைக்கு நமது ஒவ்வொரு செயல்களையும் கவனித்து நம்மை பிந்தொடரும் நுட்பங்கள் மலிந்து விட்டன. ‘ஆபீஸ் போக நேரமாச்சு’ என காலையில் போன் நோட்டிபிகேஷன் அனுப்புகிறது. மாலையில் ‘வீட்டுக்கு போகலையா ?’ என்கிறது. வார இறுதியில் மதிய நேரம் செய்தி அனுப்பி, ‘நீங்கள் புக் பண்ணின படம் இன்னும் அரை மணி நேரத்தில் ஆரம்பமாகும். இப்போ கிளம்பினா சரியா இருக்கும்’ என்கிறது. உணவகம் சென்றால், ‘இங்கே இந்த சாப்பாடு நல்லா இருக்கும், சாப்பாடு எப்படின்னு ஃபீட் பேக் குடுங்க’ என நச்சரிக்கிறது. உங்க கூட இருக்கிற நண்பர்கள் சுரேஷ், ரமேஷ் இரண்டு பேருக்கும் ஹாய் சொல்லுங்க என சொல்லி அதிர்ச்சியளிக்கிறது. அடுத்த மாதம் அமெரிக்கா போறீங்களே ஷாப்பிங் எல்லாம் ஓவரா என ஷாக் குடுக்கிறது.
எல்லாம் பிக்டேட்டா, செயற்கை நுண்ணறிவு இவற்றின் உபயம் தான். நமது மொபைலில் இருப்பிடம், அந்த மொபைலைச் சுற்றியிருக்கும் மொபைல்களில் இருப்பிடம், அந்த பிற மொபைல் எண்கள் நமது கான்டாக்டில் இருக்கிறதா எனும் அறிவு, நமது ஜிமெயிலுக்கு வரும் டிக்கெட்களின் தகவல் என எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து நமக்குப் பின் ஒரு நிழலாய் இந்த டிஜிடல் கரம் நெருக்கிக் கொண்டே இருக்கிறது.
இவை எல்லாமே பயன் தரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, பயம் தரும் பாதையில் பயணிப்பது தான் கவலைக்குரியது. ஓட்டுநர் இல்லாத கார், செயற்கைக் கை, ஆபத்தான வேலைகள் செய்தல், காலநிலை கணித்தல், விளையாட்டுப் பயிற்சிக்கு உதவுதல், ஆராய்ச்சிப் பணிகள் என செயற்கை நுண்ணறிவின் நோக்கங்கள் நல்லவையாகவே இருக்கின்றன. ஆனால் முடிவுகள் தான் வேறு விதமாய் அமைந்து விடுகின்றன.
கடவுளை நிராகரிக்கும் அறிவியல், கருவிகளை அரவணைக்கிறது. இயந்திரத்தை அரவணைக்கும் நவீனம், இதயங்களை நிராகரிக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவின் யுகத்தை தவிர்த்து விட முடியாது. எனில், இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையை எப்படி வலுப்படுத்துவது ?
- சமத்துவம் காப்போம்!
செயற்கை நுண்ணறிவு சமூக ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகரிக்கும். கருவிகளை வைத்து செல்வங்களை சேர்ப்பவர்கள் இன்னும் அதிகமாய், பல மடங்கு சேர்ப்பார்கள். கருவிகள் சம்பளம் கேட்பதில்லை, எனவே செலவற்ற வருமானங்கள் ஒரு புறம், வருமானமற்ற செலவினங்கள் ஒரு புறம் என சமூக சமநிலை பாதிக்கப்படும்.
இந்த சூழலில் நாம் சமத்துவம் பேணும் மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கின்ற பாகுபாடுகளின் வேறுபாடுகளை அவிழ்த்து விட்டு சமத்துவத்தின் சட்டையை மாட்டிக் கொள்ள வேண்டும்.
- மனிதம் காப்போம் !
இன்றைக்கு நம்மோடு உரையாடுகின்ற பல ஆன்லைன் குரல்களும், ஆன்லைன் சேட் களும் ரோபோக்களின் கைங்கர்யம் தான். அதை நாம் உணர்வது கூட இல்லை. இன்று அவற்றையெல்லாம் தாண்டி நட்பு ரோபோ, குழந்தை ரோபோ, குடும்ப ரோபோ, காதல் ரோபோ என பல்வேறு ரோபோக்கள் வந்து விட்டன.
இந்த சூழலில் இயந்திர சார்பை கழற்றி விட்டு, சக மனிதர்களோடான உரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும். சமூகத்தில் நிராகரிக்கப்பட்ட மனிதர்களோடு நேரம் செலவிடுதலே மனிதம் காப்பதன் முதல் பணி. டிஜிடல் வெளியில் மீட்பு விற்கப்படுவதில்லை. மனிதத்தின் பிடியில் மீட்பு நிராகரிக்கப்படுவதில்லை.
- புனிதம் காப்போம் !
மனிதர்கள் ஒன்று கூடி பாபேல் கோபுரம் கட்டி தங்களுடைய கர்வத்தை பறை சாற்ற நினைத்தனர். கடவுள் அவர்களை சிதறடித்தார். மனிதர்கள் ஒன்றிணைந்து கர்வத்தை தலையில் சூடும்போது கடவுள் தண்டிக்கிறார். தனக்கும் மக்களுக்கும் இடையே தடையாய் வரும் எதையும் கடவுள் விரும்புவதில்லை. எனவே தான் ஈசாக்கை பலியிட ஆபிரகாமிடம் கடவுள் கட்டளையிடுகிறார். எதையும் இறைவனுக்காய் பலியிடுகையில் ஆன்மீகம் வலுவடைகிறது. இறைவனை எதற்காகவும் பலியிடுகையில் புனிதம் புதைபடுகிறது.
புனிதம் காப்பது என்பது இறைவனோடு நடப்பது. நடப்போம்.
- பாதுகாப்போம் !
செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தல் பல்வேறு வகையில் வரலாம். ஒரு விளையாட்டு அடிமைத்தனத்தில் தொடங்கி, ஒரு தேசத்தின் அழிவுத் தனம் வரை இது நீளலாம். இதைக் குறித்த விழிப்புணர்வு கொள்வது மிகவும் அவசியம். எந்த அளவுக்கு, இறைவனோடும், இயற்கையோடும், மனிதர்களோடும் இணைந்து வாழ்கிறோமோ அந்த அளவுக்கு பாதுகாப்பாய் வாழ்வோம் என்று அர்த்தம். தொழில்நுட்பங்கள் தொட்டுக் கொள்ளும் தூரத்தில் இருப்பதே பாதுகாப்பானது, கட்டிக் கொள்ளும் நெருக்கத்தில் வருவது ஆபத்தானது. தேவைக்கு மட்டுமே அவற்றை தேர்ந்தெடுப்போம், ஆசைக்காய் அல்ல !
நமது பாதுகாப்பு செயற்கை நுண்ணறிவோடு அல்ல, இறையெனும் விண்ணறிவோடு இருக்க வேண்டும்.
- உறவுகள் காப்போம்
முதியோர்களைப் பாதுகாக்கவும், நோயாளிகளைப் பாதுகாக்கவும் ரோபோக்கள் இருக்கின்றன எனும் செய்திகள் மனித நேயம் உடைய எவரையும் பதற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்குத் தேவை பணிவிடை மட்டுமல்ல, பரிவும் தான். அவர்களுக்குத் தேவை உதவிகள் மட்டுமல்ல உறவுகளும் தான். இயந்திர இருப்பை விட அன்பின் அரவணைப்புகள் தானே முக்கியம். உறவுகளை நேசிப்போம். அவர்கள் நம்மை விட்டுப் பிரியும் வரை அவர்களோடு பிரியமாய் இருப்பதே உறவுகளை நேசிப்பதன் வெளிப்பாடு.
உலகில் நிகழும் எந்த மாற்றங்களும் நம்மை அழிவுக்குள் அழைத்துச் செல்லாது. ஆனால் நம் உள்ளுக்குள் நிகழும் மாற்றங்கள் நம்மை அழிவுக்குள்ளும் அழைத்துச் செல்லலாம், வாழ்வுக்குள்ளும் வழிநடத்திச் செல்லலாம்.
எனவே
உள்ளத்தைக் காப்போம்,
உள்ளதைக் காப்போம்.
இறைவனை மட்டுமே இதயத்தில் காப்போம்.
Like this:
Like Loading...