Posted in Articles, Desopakari

மண்வளம் காப்போம்

*

இன்றைய சமூகம் உள்ளங்களிலும், ஊரிலும் அழுக்குகளால் நிரம்பியதாய் மாறிக் கொண்டிருக்கிறது. நெகிழிகள் முதல், உதாசீனப்படுத்துதல் வரை நிலம் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அன்பும், மனித நேயமும் நிறைந்த மனிதர்கள் அருகி வரும் உயிரினம் போல எங்கேனும் தான் தட்டுப்படுகிறார்கள். மனிதர் மீது அன்பு பாராட்டாதவர்கள் நிலத்தின் மீது எப்படி நேசம் காட்டுவார்கள் ? சுயநலத்தின் சாலைகளில் தான் பொதுநலத்தின் சிந்தனைகளும் புதைக்கப்படுகின்றன. 

பொதுவில் கிடந்த வளங்கள் வரங்களாய் இருந்தன. அவை சுரண்டப்பட்டு அதிகாரத்தின் பைகளில் பதுங்கியபோது சாபமாக மாறிவிட்டது. மண் வளமே பிற வளங்களைத் தாங்கிப் பிடிக்கிறது. உயிர்களின் இருப்பிடமாகவும், பயிர்களின் பிறப்பிடமாகும், வாழ்வின் மகிழ்விடமாகவும் இருப்பது நிலமே. 

நிலம் என்னுடையது என்கிறார் கடவுள் லேவியர் ஆகமத்தில் ! நிலத்தை மனிதன் வெட்டிக் கூறுபோட்டு, பூர்வ குடிகளை விரட்டியடிக்கும்போது கடவுளின் சினம் நிலத்தின் மீது விழுகிறது. 

இந்த மண் வளத்தை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும் ?

 1. நாம் மண்ணின் பாகமாய் இருக்கிறோம்.

கடவுள் நம்மைப் படைத்தபோது மண்ணிலிருந்து தான் உருவாக்கினார். நமக்குள் மண் இருக்கிறது. மண் தான் மனிதனின் முதல் மூலக்கூறு. கடவுளின் உயிர் மூச்சு நமக்குள் உலவுகிறது, மண்ணின் உடல் வடிவம் தான் நமக்குள் நிலவுகிறது. எனவே அடிப்படையிலேயே நாம் மண்ணோடு உறவாய் இருக்கிறோம். அந்த உறவைப் பேணவேண்டியது நமது கடமை !

உருவாகும்போது எப்படி மண் மனிதனாய் மாறியதோ, அதே போல விடை பெறுகையில் மனிதன் மண்ணாகிறான். மண்ணோடு உறவாடுகிறான். மண்ணோடு கலந்து விடுகிறான். மனிதன் மண்ணின் பாகமாய் மாறிவிடுகிறான். சுழற்சி நிறைவு பெறுகிறது. மண்ணினால் துவங்கி, மண்ணுடன் அடங்கிவிடும் வாழ்க்கை முறையையே இறைவன் நமக்குத் தந்திருக்கிறார். எனவே மண் வளம் காக்க வேண்டியது நம் கடமையாகும்.

 1. மண் வளம் காத்தல் நமக்கு இறைவன் அளித்த பணி

கடவுள் மனிதனுக்கு இட்ட முதல் பணியே நிலத்தைப் பண்படுத்துவதும், பாதுகாப்பதும் தான். “ ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார் “ ! அது தான் கடவுள் மனிதனுக்குக் கொடுத்த முதல் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர். 

மண்ணைப் பண்படுத்த மறுக்கும் போது நாம் கடவுளின் விருப்பத்தை நிராகரிக்கிறோம். மண்ணை புண்படுத்தும் போது நாம் கடவுளையே நிராகரிக்கிறோம்.

நிலத்தைப் பாதுகாப்பது என்பது நிலத்தின் மாண்பினைப் பாதுகாப்பதும், வளத்தினைப் பாதுகாப்பதுமாகும். எப்படி நிலம் மாசுகளால் மலட்டுத் தன்மை ஆகாமல் தடுக்க வேண்டுமோ, அதே போல நிலம் சாத்தானின் ஊடுருவல் இல்லாமலும் தடுக்க வேண்டும். ஆதாம் செய்த பிழைகளையே நாமும் செய்யாமல் கவனமாய் இருக்க வேண்டும். 

 1. மண், கடவுள் பிரித்து வைத்த இடம்.

கடவுள் மனிதனுக்குக் கொடுத்த பணியை மனிதன் செய்யத் தவறியிருக்கலாம். ஆனால் இயற்கைக்குக் கொடுத்த பணியை அவை செவ்வனே செயல்படுத்துகின்றன. கரையைத் தாண்டி வராதே எனும் கட்டளையை ஏற்று கடல் அங்கேயே நிற்கிறது. நிலத்தைத் தனியே பிரித்த இறைவன் அதற்குத் தேவையான வளம் தரும் நதிகளையும் தருகிறார். 

நிலத்தைப் பண்படுத்துவதும், பாதுகாப்பதுமே நம்மால் செய்ய இயன்ற பணிகள். ஒரு விதையை முளைக்க வைப்பது இறைவனே. விதைப்பதால் ஒரு விதை முளைப்பதில்லை, அதற்குத் தேவையான வளங்களைக் கொடுப்பதால் முளை வருவதில்லை.  எல்லாவற்றுக்கும் மேல் இறைவனின் அருள் தேவைப்படுகிறது. நமது பணி ஐந்து அப்பம் கொடுத்த சிறுவனைப் போன்றது. அதை ஐயாயிரம் பேருக்கு அளிப்பது இறைவனின் பணி.

கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது அதைத் தான். நிலத்துக்காக நாம் வானத்தை இழுத்து வந்து வாய்க்காலில் போடவேண்டுமென அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் தந்ததை காயப்படாமல் காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறார். மண் கடவுளின் கட்டளையைக் கேட்கிறது, நாம் கடவுளின் கட்டளைக்குச் செவி சாய்க்கிறோமா ?

 1. மண் கடவுளை மகிமைப்படுத்துகிறது !

படைப்புகள் இறைவனைப் புகழ்கின்றன. நிலத்தில் முளைக்கும் செடிகளும் கொடிகளும் பூக்களும் கனிகளும் இறைவனின் மாட்சியைப் பறைசாற்றுகின்றன. இறைவனைப் புகழும் நாவினை நாம் நறுக்கிவிடக் கூடாது. இறைவனை நேசிக்கும் இயற்கையை நாம் சிதைத்து விடக் கூடாது. ஒருவரை நாம் நேசிக்கிறோம் என்பதன் அடையாளம் இரண்டு. ஒன்று அவர் சொல்வதைச் செய்கிறோம், இரண்டு அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாய் செயல்படுகிறோம்.  

இறைவன் சொல்வதை நாம் செய்கிறோமா ? இறைவனுக்குப் புகழ் சேரும் வகையில் செயல்படுகிறோமா ? இயேசு வாழ்ந்த காலத்தில் நிலத்தைத் தன் போதனைகளில் பயன்படுத்தினார். கடவுளின் ஆசீர்வாதத்தின் அடையாளமாக பழைய ஏற்பாடு விளைச்சலைப் பேசியது !  

இயேசு நல்ல நிலமாய் வாழ நமக்கு அழைப்பு விடுத்தார். நாம் நல்ல நிலமாய் இருக்கிறோமா ? நம்மிடம் இருக்கும் நல்ல நிலத்தைக் கெட்ட நிலமாய் மாற்றுகிறோமா ? இயற்கையை அழகுபடுத்தி, அதன் மூலம் இறைவனை மகிமைப்படுத்துவோம். எல்லாவற்றுக்கும் மேலாய், இயேசு மீண்டும் மண்ணில் வரப் போகிறார். அவரை வரவேற்க மண் புனிதமாய் இருப்பதல்லவா சிறப்பானது !

5 மண்வளம் காத்தல், நம் கடமை !

கிறிஸ்தவர்களின் கடமை என்பது கனிகொடுக்கும் வாழ்க்கை தான். வெறுமனே வாயால் பாடுதலோ, புகழ்தலோ, பேசுதலோ அல்ல ! நமது அன்பின் செயல்கள் எப்படி வெளிப்படுகின்றன என்பதை வைத்துத் தான் நமது வாழ்க்கை அளவிடப்படுகிறது. 

சக மனித கரிசனையையும், மனித நேயத்தையும் இயேசு தனது அத்தனை போதனைகளிலும் முன்னிறுத்தினார். நாம் வாழும் சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீகக் கடமையை அவரது போதனைகள் அடிநாதமாய்க் கொண்டிருக்கின்றன. சக மனிதன் வாழ்வதற்கான ஒரு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுப்பது நம் கடமை. 

சக மனிதனின் மேம்பாட்டுக்கானவற்றைச் செய்வது நம் கடமை. சக மனிதனை நம்மைப் போல நேசிப்பது நம் கடமை ! அதற்கு நிலத்தை நேசிப்பது மிக முக்கியம் ! வளத்தை மேம்படுத்துவது மிக மிக அவசியம். 

*

சேவியர்

Posted in Articles, Christianity, Questions Jesus Asked

இயேசு கேட்ட கேள்விகள்

“திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?”

லூக்கா 10 : 26

*

இயேசு கேட்ட கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்விக்கான சூழல் சுவாரஸ்யமானது, அதற்கான விளக்கம் ஆன்மிக வாழ்வில் மிக மிக அவசியமானது.

இயேசுவின் போதனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் திருச்சட்ட அறிஞர் ஒருவர். பின்னர் அவர் எழுந்து இயேசுவைப் பார்த்து “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என கேட்கிறார். போதகரே என மரியாதையுடன் அழைத்துக் கேட்டாலும், அது இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி என்கிறது பைபிள். 

இயேசுவும் அதே போல மரியாதையோடு அவரை அணுகுகிறார். ““திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என கேட்கிறார். கேள்வி கேட்டவர் திருச்சட்ட அறிஞர் என்பதால் அவரது ஏரியாவிலேயே இயேசு கேள்வியை ஆரம்பிக்கிறார். 

திருச்சட்ட அறிஞர், “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என எழுதியுள்ளது என்றார். தனது திருச்சட்ட அறிவை சுருக்கமாய் வெளிப்படுத்திய திருப்தி அவருக்கு. ஏனென்றால் இயேசுவே இன்னொரு இடத்தில், திருச்சட்டத்தின் சாராம்சமாக இதையே சொல்லியிருந்தார். 

இயேசு திருச்சட்ட அறிஞரின் பதிலை ஏற்றுக் கொண்டார். அப்படியே செய்யுங்கள், வாழ்வடைவீர்” என்றார். அந்த அறிஞருக்கு அந்தப் பதில் போதுமானதாக இருக்கவில்லை. தான் நேர்மையாளன் என்பதைக் காட்ட விரும்பிய அவர்  “எனக்கு அடுத்திருப்பவன் யார் ?” என கேட்கிறார். அப்போது தான் இயேசு மிகப் பிரபலமான அந்த உவமையைச் சொல்கிறார்.

எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும் மனிதர் ஒருவர் கள்வர் கையால் அடிபட்டுக் குற்றுயிராகிறார். அவ்வழியே வந்த குரு அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் செல்கிறார், அவ்வழியே வந்த லேவியரும் விலகிச் செல்கிறார். ஆனால் அவ்வழியே வந்த சமாரியர் ஒருவர் அவரைக் கண்டு இரங்கி அவருக்கு முதலுதவி செய்து அவரை சத்திரத்தில் சேர்த்துப் பராமரிக்கிறார். அடிபட்ட இந்த மனிதனுக்கு யார் அடுத்திருப்பவர் ? என இயேசு கேட்க, அந்த திருச்சட்ட அறிஞர் ‘அவருக்கு இரக்கம் காட்டியவரே’ என்கிறார்.

நீரும் போய் அப்படியே செய்யும் ! என்றார் இயேசு. வாழ்வடைய என்ன செய்ய வேண்டும் எனும் கேள்விக்கான பதில் அவருக்கு இங்கே தரப்படுகிறது. வாழ்வில் உதவி தேவைப்படும் மனிதனுக்கு, சாதி, இன மொழி வேறுபாடுகளைப் பார்க்காமல் உதவி செய்ய வேண்டும் என்கிறார் இயேசு. 

எருசலேமிலிருந்து எரிகோ செல்பவர் எனும் கூற்றின் வழியே, பயணித்தவர் ஒரு யூதர் என இயேசு புரிய வைக்கிறார். ஒரு யூதருக்கு உதவி செய்வது யூதர்களால் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சமாரியன். அந்த சமாரியனே அடுத்திருப்பவன். 

ஆலயத்தில் பணி செய்யும் குரு அல்ல, குருவுக்கு உதவும் லேவியன் அல்ல – மாறாக தனது கடமையில் கண்ணாயிருந்தாலும் தேவையில் உழலும் மனிதனுக்காகப் பரிதவிப்பவனே உண்மையில் இறையரசுக்குத் தகுதி உடையவன். இதையே இயேசு இறுதித் தீர்வை நாளில், ‘சின்னஞ் சிறிய சகோதர் ஒருவருக்கு நீங்கள் இதைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்றார். 

திருச்சட்ட நூலில் என்ன எழுதியுள்ளது என இயேசு கேள்வியை ஆரம்பிக்கிறார். நமது வாழ்க்கையில் நாம் திருச்சட்ட நூலில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்பதை அவர் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த அறிவானது வெறும் ஏட்டுச் சுரைக்காயாய் இருக்கக் கூடாது, செயல்படும் அறிவாய் மாற வேண்டும் அப்போது தான் நிலைவாழ்வு சாத்தியம் என்கிறார் இயேசு. 

நேர்மையாளராய் இருப்பதற்கு இரக்கம் காட்டுபவராய் இருக்க வேண்டும். திருச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மனிதாபிமானம் வேண்டும். விண்ணரசில் நுழைவதற்கு அயலானுக்காய் உதவுகின்ற கரம் வேண்டும் .

இன்று உலகில் கிறிஸ்தவர்கள் அருகிவிட்டார்கள். பவுலியர்கள் பெருகி விட்டார்கள். தாவீதியன்கள் பெருகி விட்டார்கள். சாலமோனியர்கள் நிறைந்து விட்டார்கள். பவுலையும், தாவீதையும், சாலமோனையும் புரட்டுமளவுக்கு கிறிஸ்துவின் போதனைகளை மக்கள் புரட்டுவதில்லை. அதனால் தான் அவர்களின் வாழ்க்கை புரட்டப்படாமல் கிடக்கிறது. 

எந்த விதமாய்ப் பாட்டுப் பாடினால் இயேசு மகிமைப்படுவார் ? எப்படி ஆடுவது கடவுளுக்குப் பிரியம் ? ராப் பாடல்கள் தேவையா ? எந்த போதனை சிறந்தது – என வீடியோக்களைப் போட்டுத் தள்ளும் ஆன்மிக அறிவு ஜீவிகள் எவ்வளவு தூரம் இயேசுவின் போதனைகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று பார்த்தால் தோல்வியே மிஞ்சும். பரபரப்புகளை விரும்புமளவுக்கு போதர்கள் பரமனை விரும்புவதில்லையோ என தோன்றுகிறது. 

இன்றைய இயேசுவின் கேள்வி நம்மிடம் நீள்கிறது. திருச்சட்ட நூலில் என்ன வாசிக்கிறீர் ? அதை செயல்படுத்தும் ! வாசிப்பது உம்மை நிலை வாழ்வுக்குக் கொண்டு செல்லாது ! வாசிப்பதைச் செயல்படுத்தினால் மட்டுமே வாழ்வீர் என்கிறார் இயேசு !

இயேசுவின் போதனைகள் தெளிவாக இருக்கின்றன. போதகர்களின் விளக்க உரைகளைக் கேட்டுக் குழம்பாமல், வாருங்கள் திருச்சட்ட நூலை வாசியுங்கள், அன்பின் செயல்களை அவனியில் செய்யுங்கள்

*

சேவியர்

Posted in Articles

பகை

பகை

*

காட்சி 1

( நண்பர் 1 & நண்பர் 2 )

நண்பர் 1 :  நல்லபடியா காலேஜ் படிச்சு முடிஞ்சதை நினைச்சா சந்தோசமா இருக்கு

நண்பர் 2 : ஆமா, வருஷங்கள் ஓடிப் போனதே தெரியல. லைஃபே ஜாலியா போயிட்டிருந்துச்சு..

ந 1 : இனிமே தான் இந்த இண்டர்வியூ, வேலை, அலைச்சல் அது இதுன்னு எக்கச்சக்க டென்ஷன்

ந 2 : நீ எதுக்கு டென்ஷன் ஆகறே ? கடவுள் எல்லாத்தையும் பாத்துப்பாரு… இதுவரைக்கும் ஏதாச்சும் குறை வெச்சிருக்காரா என்ன ? இனிமேலும் வைக்க மாட்டாரு

ந 1 : யா.. தட்ஸ் ட்ரூ….  தேங்க்யூ டா.

ந 2 : எதுக்கு… 

ந 1 : ஸ்கூல்ல இருந்தே நீதான் என்னோட பெஸ்ட் பிரண்ட்… எல்லா விஷயத்துலயும் என் கூடவே இருப்பே… ஒரு மிகப்பெரிய மாரல் சப்போர்ட்…  பிரண்ட்ஷிப்பை ரொம்ப மதிக்கிறவ

ந 2 : என்னப்பா.. ஒரே செண்டி அடிக்கிறே.. ஏதோ விட்டுட்டு போற மாதிரி.. நாம எல்லாம் எப்பவும் நட்பா தான் இருப்போம்…. 

ந 1 : யா.. தட் ஐ நோ.. இருந்தாலும் சொல்றேன்…

ந 2 : சொன்னதெல்லாம் போதும், நான் கிளம்பறேன்… அப்பா ஊருக்கு வராரு, பிக்கப் பண்ணணும்…

ந 1 : ஓக்கே.. டேக் கேர்

காட்சி 2

( ந 1 & 2 )

ந 1 : ஹலோ…. 

ந 2 : ஹேய் சொல்லுப்பா.. எப்படி இருக்கே 

ந 1 : ஒரு ஹேப்பி நியூஸ்பா.. எனக்கு யூனிவர்சிட்டில இருந்து லெட்டர் வந்திருக்கு… 

ந 2 : லெட்டரா ? என்ன லெட்டர் ? ரிசல்ட் தான் ஏற்கனவே வந்துச்சே.. நாம தான் எல்லா பேப்பரையும் கிளியர் பண்ணிட்டோமே

ந 1 : அதில்ல.. வேற நியூஸ்…. 

ந 2 : சொல்லுப்பா அப்படி என்ன ஹேப்பி நியூஸ் 

ந 1 : எனக்கு யூனிவர்சிட்டி டாப் ரேங்க் கிடைச்சிருக்கு. அதனால யூனிவர்சிடி அவார்ட் செரிமணில கலந்துக்க சொல்லி லெட்டர் வந்திருக்கு.

ந 2 : வாவ்.. செம ஹேப்பி நீயூஸ் டா கன்கிராட்ஸ் 

( நெட்வர்க் பிரேக் ஆகிறது ந1 க்கு கேட்கவில்லை )

ந 1 : ஹேய்.. என்னடா.. சைலண்ட் ஆயிட்டே.. இவ்ளோ ஹேப்பி நியூஸ் சொல்லியிருக்கேன்.

ந 2 : ஹேய்.. ஹேப்பிடா.. அதான் சொன்னேனே.. கேக்கலையா…

ந 1 : எங்கே சொன்னே.. அமைதியாயிட்டே.. சரி சரி.. வர 18ம் தியதி பங்ஷன்.. நீ கண்டிப்பா வரே… 

ந 2 : வரேண்டா… வரேன்.. கண்டிப்பா வரேன்..நான் வராமலா…. 

ந 1 : அதானே பாத்தேன்… வரலேன்னா அப்புறம் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன் பாத்துக்க…

ந 2 : ஹா..ஹா… நான் வராம இருப்பேனா … நீ போனை வை… நான் இங்கே மூணாறுல இருக்கேன்.. சிக்னல் ஒழுங்கா கிடைக்கல.

( ந 1 நினைக்கிறார் )

ந 1 : என்ன.. ஒரு சுவாரஸ்யம் இல்லாம பேசறாங்களே… நமக்கு அவார்ட் கிடைச்சது அவங்களுக்கு புடிக்கலையோ…. சே…சே அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை… ம்ம்ம்

காட்சி 3

( அவார்ட் பங்ஷன் )

ந 1 : ( போன் அடிக்கிறார்.. யாரும் எடுக்கவில்லை .. மீண்டும் மீண்டும் அடிக்கிறார் )

ந 1 : சே.. பங்ஷன் ஆரம்பமாகப் போவுது..இன்னும் ஆளைக் காணோம்… சே…

ந 3 : என்னடா டென்ஷனா இருக்கே… 

ந 1 : இல்லடா.. என் பிரண்ட் ஜெனி வரணும்.. ஆளைக் காணோம் அதான் பாக்கறேன்…

ந 3 : ஜெனியா… ம்ம்ம்.. அவ வர மாதிரி தெரியல

ந 1 : என்னடா சொல்றே..

ந 3 : ஐ திங்க் ஷி ஈஸ் நாட் ஹேப்பி தேட் யூ ஆர் கெட்டிங் ஹானர்ஸ்..

ந 1 : ஹா..ஹா. ஜோக் அடிக்காதே.. அதுக்கெல்லாம் சான்சே இல்லை

ந 3 : எனக்கு அப்படி தோணுது…. அவளோட பிரண்ட்ஸ் கிட்டே பேசும்போ அவளுக்கு கிடைக்க வேண்டியது மிஸ் ஆயிடுச்சு.. செம டிஸ்ஸப்பாயிண்ட் மெண்ட்ன்னு பேசினதா கேள்விப்பட்டேன்.

ந 1 : நெஜமாவா ? நீ கேட்டியா ?

ந 3 : நான் கேக்கல, பட் அப்படி சொன்னதா கேள்விப்பட்டேன்.

( ந 1 – மறுபடியும் போன் அடிக்கிறார் கிடைக்கவில்லை ) 

ந 1 : சே… இப்படி வராம இருப்பாங்கன்னு நினைக்கவே இல்லை.. சே… நான் தான் ஏமாந்துட்டேனா ?

( பரிசளிப்பு விழா முடிகிறது )

காட்சி 4

ந 1 – போன் அடிக்கிறார்.. சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது.

ந 1 : சே.. ஒரு போன் கூட பண்ணல.. இனிமே பேசவே கூடாது… 

காட்சி 5

ந 2 : ( ஹாஸ்பிடலில் ) ஐயோ… அப்பாவுக்கு ஆக்சிடண்ட் ஆன பதட்டத்துல விஜயோட அவார்ட் செரிமணியையே மறந்துட்டேன்.. சே… அப்செட் ஆயிருப்பான்.. சே. போனை வேற எடுக்காம வந்துட்டேன்… 

( சிக்னல் கிடைக்கவில்லை.. போன் செய்கிறார் )

ந 2 : சே.. ஹில்ஸ் ஏரியால சிக்னலே கிடைக்க மாட்டேங்குது…. 

ந 2 : சே.. டேட்டா சுத்தம்…. என்ன பண்ண… ம்ம்ம்.. ஒரு வாய்ஸ் மெசேஜ் போடுவோம்… சிக்னல் வரும்போ கேக்கட்டும்… 

ந 2 : ஹேய்.. ஐம் வெரி சாரிடா.. என்னால உன்னோட ஃபங்க்‌ஷனுக்கு வர முடியல.. எல்லாம் நேர்ல சொல்றேன்.. சரியா… டேக் கேர். ( வாய்ஸ் மெசேஜ் விடுகிறார் ). இது டெம்பரரி நம்பர்… சேவ் பண்ணி வெச்சுக்கோ…. 

காட்சி 6

ந 1 : ( வாய்ஸ் மெசேஜ் கேட்கிறான் ) கோபமடைகிறான். ம்ம்.. பங்ஷன் முடிஞ்சு நாலு நாளைக்கு அப்புறம் பார்மாலிட்டிக்கு ஒரு மெசேஜ் போட்டிருக்கா… ஐ டோண்ட் நீட் திஸ் பிரண்ட்ஷிப்

ந 1 : ( வாய்ஸ் மெசேஜ் ) நீ ஒண்ணும் என்னை நேர்ல பாக்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம். இன்னில இருந்து நீ எனக்கு மெசேஜ் பண்ணாதே, கால் பண்ணாதே… நம்ம நட்பு முறிஞ்சு நாலு நாள் ஆச்சு.. பை

( எல்லா…நம்பரையும் பிளாக் செய்கிறான் )

காட்சி 7

ந 2 – செய்தியைக் கேட்டு வருந்துகிறார் 

( போன் அடித்தால் போகவில்லை… )

காட்சி 8

ந 2 : இண்டர்வியூ அட்டண்ட் பண்ணுகிறார், செலக்ட் ஆகிறார். 

ந 2 : அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார். 

காட்சி 9

( சில வருடங்களுக்குப் பிறகு )

ந 1 : ( அந்த வாய்ஸ் மெசேஜை கேட்கிறார் ) அப்போது இன்னொரு நண்பர் வருகிறார்.

ந 4 : ஹேய்.. என்ன இந்த பக்கம்… இது ஜெனி வாய்ஸ் தானே. இப்போ என்ன பண்றாங்க ?

ந 1 : ஹேய்.. வாப்பா.. உன்னை பாக்க தான் இந்தப் பக்கம் வந்தேன்

ந 4 : ஜெனி என்ன பண்றாங்கன்னு சொல்லவே இல்லையே..

ந 1 : தெரியலடா…. நோ காண்டாக்ட்

ந 4 : என்னடா சொல்றே நம்பவே முடியல… ஐ தாட்.. ஐ ஹியர் ஹர் வாய்ஸ்..

ந 1 : யா.. தட்ஸ் ஓல்ட் மெசேஜ்… லீவ் இட்…. வர இருபத்திரண்டாம் தியதி என்னோட என்கேஜ்மெண்ட்… உன்னை ஸ்பெஷலா கூப்பிட தான் நான் வந்தேன்…. 

ந 4 :  வாவ்.. செம டா… அதுக்குள்ள கல்யாணமா ?

ந 1 : அதை போன வருஷமே கல்யாணம் பண்ணின நீ சொல்றே பாரு.. அதான் காமெடி.

ந 4 : ஹா..ஹா.. ஓக்கே ஓக்கே… ஆமா ஜெனியை கூப்பிடுவியா

ந 1 : நோ டா.. ஐதிங் உன் கல்யாணத்துல கூட அவளை நான் பாக்கல…

ந 4 : நான் அவங்களை இன்வைட் பண்ண போனேன்.. பட் அவங்க காலி பண்ணிட்டு மூணாறு போனதா சொன்னாங்க.. 

ந 1 : சரி சரி… அவ பேச்சை எடுக்காதே.. ஐ டோண்ட் வாண்ட் டு டாக் எபவுட் இட்…  நீ என்னோட என்கேஜ்மெண்டுக்கு வந்து சேரு

ந 4 : ஓக்கேப்பா

காட்சி 9 ஆ 

ந 4 : ( சிந்திக்கிறார். ) என்னாச்சு விஜய்க்கு.. அவனுக்கு ஜெனி மேல நட்பு இருக்கு, அதான் பழைய மெசேஜ் எல்லாம் கேட்டுட்டு இருக்கான்.. ஆனா ஈகோ தடுக்குது… ம்ம்ம் என்ன பண்ணலாம். 

காட்சி 9 இ

( ந 1 & 4 , காபி ஷாப்பில் )

ந 1 : என்னப்பா, ஏதோ பேசணும்ன்னு வரச் சொன்னே என்ன விஷயம். 

ந 4 : என்னோட புது பிஸினஸ் விஷயமா உன்னோட கைடன்ஸ் கொஞ்சம் வேணும்பா… 

ந 1 : என் கைடன்ஸா… நான் என்ன பிஸினஸ் புலியா ? காமெடி பண்ணாதே.. ? ( அப்போது போன் அடிக்கிறது .. மேனேஜர் ) 

ந 1 ( உள்ளுக்குள் ) பத்து நிமிஷம் சந்தோசமா இருந்திட கூடாதே.. கழுகுக்கு மூக்கில வியர்க்கிற மாதிரி இவருக்கு வியர்த்திடும். 

ந 1 : சார்.. வணக்கம் சார்.. சொல்லுங்க சார்.

மேலதிகாரி : ஹாய் விஜய் எப்படி இருக்கீங்க

ந 1 : நல்லா இருக்கேன் சார்

மே : ஒரு ஹேப்பி நியூஸ்.. உங்களை மறுபடியும் அமெரிக்கா அனுப்பறேன்..

ந 1 : சார் மறுபடியுமா.. நான் வந்து மூணு மாசம் தான் சார் ஆச்சு..

மே : யா.. என்ன பண்ண ? நீங்க போன வேலையை சூப்பரா முடிச்சிருக்கீங்க. கிளையண்ட் இம்ப்ளிமெண்டேஷனுக்கு நீங்க தான் வேணும்ன்னு அடம் புடிக்கிறாரு.. ஓக்கே சொல்லிட்டேன்

ந 1 : ஓக்கே சொல்லிட்டீங்களா ?

மே : யா… போயிட்டு வாங்க ஜாலியா ஒரு மூணு மாசம்… இருபதாம் தியதி கிளம்புங்க

ந 1 : இருபதாம் தியதியா ?.. 

மே : என்னப்பா எல்லாத்துக்கும் ஷாக் குடுக்கிறே

ந 1 : சார்.. என்னோட என்கேஜ்மெண்ட் 22 ம் தியதி பிக்ஸ் பண்ணியிருக்கோம் சார்.

மே : வாட்.. என்கேஜ்மெண்டா ? யாரைக்கேட்டு பிளான் பண்ணினீங்க

ந 1 : பொண்ணு வீட்டில கேட்டு சார்.

மே : ஹலோ.. இப்படிப்பட்ட பிளான் எல்லாம் யூ ஷுட் இன்ஃபாம் மி ஃபர்ஸ்ட்… கஸ்டமருக்கு கமிட்மெண்ட் குடுத்துட்டேன்..  யூ மஸ்ட் கோ

ந 1 : சார்.. என்ன சார் .. என்கேஜ்மெண்ட்ட்ன்னு சொல்றேன்.. டிராவல் பண்ண சொல்றீங்க

மே : என்கேஜ்மெண்ட் தானே.. மேரேஜ் இல்லையே

ந 1 : சார்… என்ன சார் பேசறீங்க… இட்ஸ் மை பிரையாரிடி.. ஐ காண்ட் டிராவல் நௌ… வேணும்ன்னா நெக்ஸ்ட் மந்த் டிராவல் பண்றேன்.

மே : ஹலோ.. இங்க நான் தான் மேனேஜர்.. உன் என்கேஜ்மெண்ட் உன் தலைவலி.. ஐ டோண்ட் கேர்.. யூ மஸ்ட் டிராவல் ஆன் 20யத்.. அவ்ளோ தான்

( போனை வைக்கிறார் )

ந 1 : ( கோபத்தில் ) என்ன நினைச்சிட்டிருக்காங்க…. அடுத்தவங்க பக்கத்துல நின்னு யோசிக்கவே மாட்டாங்களா ? ஐ காண்ட் டு திஸ்

ந 4 : கூல் டவுன் பா.. என்னாச்சு..

ந 1 : என்கேஜ்மெண்டுக்கு எல்லாம் பிளான் பண்ணிட்டேன்.. இப்போ என்னை ஆன்சைட் போக சொல்றாரு மேனேஜர்.. அடுத்தவனோட நிலமையை பத்தி யோசிக்கிறதே இல்லையா… 

ந 4 : யா… we should think from others perspective பா.. அப்போ நிறைய பிரச்சினைகள் தீரும். 

ந 1 : யா.. அறிவு கெட்டவங்க.. நான் போகமாட்டேன்.. என்ன செய்வான்னு பாப்போம். திஸ் ஈஸ் மை லைஃப், மை பிரையாரிடி.. நினைக்க நினைக்க கடுப்பா இருக்குப்பா

ந 4 : நம்மளோட நிலமையை அவன் புரிஞ்சுக்கலேன்னு உனக்கு கடியா இருக்கு இல்லையா ?

ந 1 : யா… இருக்காதா பின்னே

ந 4 : அப்போ ஜெனியோட நிலமையை நீ புரிஞ்சுக்கலேன்னு அவளுக்கு வருத்தமா இருக்காதா ?

ந 1 : ஜெனி நிலமையா ? வாட் டு யூ மீன்

ந 4 : என் மேரேஜ் இன்விடேஷன் குடுக்க போகும்போ தான் கேள்விப்பட்டேன்.. அவ அப்பாக்கு ஒரு ஆக்சிடண்ட் ஆச்சு, உடனே அவ கிளம்பி மூணாறு போயிட்டா.. அந்த பதட்டத்துல போனை வீட்டிலயே விட்டுட்டு போயிருக்கா… அதனால யாரையும் ரீச் பண்ண முடியல.. அப்புறம் குடும்பத்தோட காலி பண்ணிட்டு மூணாறுக்கே போயிட்டாங்களாம்.. ஐ திங்க், அவரு அப்பாவால இனிமே நடக்க முடியாது போல

ந 1 : வாட்.. என்ன சொல்றே.. நிஜமாவா ? 

ந 4 : யா… வெரி ஷாக்கிங்டா

ந 1 : இதெல்லாம் நீ என்கிட்டே சொல்லவே இல்லை

ந 4 : நீங்க தான் திக் பிரண்ட்ஸ் ஆச்சே, எல்லாம் உனக்கு தெரியும்ன்னு நினைச்சேன். 

ந 1 : ஓ..மை காட்… பெரிய தப்பு பண்ணிட்டேண்டா… அவ என் அவார்ட் பங்ஷனுக்கு வரலேங்கற கோபத்துல அவ நம்பரையும் பிளாக் பண்ணி பிரண்ட்ஷிப்பையும் கட் பண்ணிட்டேன்..

ந 4 : ம்ம்ம்.. உனக்கு ஆன்சைட் டிராவலை விட என்கேஜ்மெண்ட் முக்கியமா இருக்கு. அவளோட சூழல்ல அன்னிக்கு அப்பாவோட ஆக்சிடண்ட் விஷயம் தான் உன்னோட அவார்டை விட முக்கியம் இல்லையா 

ந 1 : யா. .உண்மை தாண்டா… 

ந 4 : ஸீ.. நீ இந்த சூழ்நிலையில அவளை மீட் பண்ணி ஹெல்ப் பண்ணியிருக்கணும். அப்படி தான் அவ எதிர்பார்த்திருப்பா..  

ந 1 : ட்ரூ.. ஐ ஃபீல் கில்ட்டி.. நான் கிளம்பறேன்.. அப்புறம் பேசறேன் உன் கிட்டே. 

காட்சி 11

ந 1  & ந 2

ந 1 : ஜெனி ஐம் வெரி சாரி..எவ்ளோ முட்டாள்தனமா நான் நடந்துட்டேன்…. 

ந 2 : தட்ஸ் ஓக்கே… நீ எவ்ளோ ஆர்வமா என்னை எதிர்பார்த்திருப்பே.. எவ்ளோ பெரிய ஏமாற்றமா இருந்திருக்கும்.. ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட்

ந 1 : உன்னோட கஷ்டத்தை புரிஞ்சுக்காம நடந்துட்டேன்.. சே… ஐம் நாட் ஏபிள் டு ஃபர்கிங் மைசெல்ஃப்

ந 2 : தட்ஸ் ஓக்கே… பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.. இனிமே லெட்ஸ் பி பிரண்ட்ஸ் எகெயின்..

ந 1 : கண்டிப்பா.

காட்சி 12 

ந 4 & மேனேஜர் 

ந 4 :  சார்.. ரொம்ப நன்றி.. நான் சொன்னமாதிரி போன் பண்ணி விஜய்க்கு ஒரு ஷாக் குடுத்தீங்க.. எதிர்பார்த்த மாதிரியே.. அவனும் ஜெனியும் மறுபடியும் பிரண்ஸ் ஆயிட்டாங்க…

மே : நோ பிராப்ளம்.. என்ன, உங்க பிராப்ளம் சால்வ் ஆச்சு.. நான் தான் ஏகப்பட்ட சாபத்தையும் திட்டையும் வாங்கியிருப்பேன்.

ந 4 : ஹா ஹா அப்போ போன் பண்ணி யூ எஸ் டிரிப் கேன்சல்னு சொல்லுங்க, சாபம் எல்லாம் வாழ்த்தா மாறும்

மே : யெஸ்.. வில் டூ நௌ. 

*

Posted in Articles, Desopakari

மருத்துவமும், கிறிஸ்தவமும்

*

கிறிஸ்தவர்கள் மருத்துவமனை பக்கமே செல்லக் கூடாது ! அது பாவம் ! என்ன நோயாய் இருந்தாலும் ஆண்டவரே சரி பண்ணுவார் ! என்று ஆணித்தரமாய் நம்பக்கூடிய ஒரு கூட்டத்தினர் கிறிஸ்தவத்தில் உண்டு. அவர்களின் பேச்சை நம்பி அவசர அவசரமாய் ஆயுளை முடித்துக் கொண்டவர்களும் ஏராளம் உண்டு. 

கிறிஸ்தவர்கள் மருத்துவம் பாக்கக் கூடாது என்று சொல்பவர்கள் இரண்டு பேரை அவமானப்படுத்துகிறார்கள். 

ஒன்று, உலகெங்கும் சென்று மருத்துவப் பணி செய்து, நற்செய்தியை அறிவித்த ஆயிரக்கணக்கான இறை ஊழியர்கள். இவர்கள் காடுகள், மலைகள் என சுற்றித் திரிந்து, கொள்ளை நோய்களை நீக்கவும், தொழுநோயாளிகளை பராமரிக்கவும், அடிப்படை சுகாதார வசதிகளை உருவாக்கவும் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் அர்ப்பணித்தவர்கள். அதற்காகவே தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள்.

இரண்டாவது, இறைமகன் இயேசு. அவர் தான், ‘மருத்துவர் நோயுற்றவருக்குத் தேவை’ என வெளிப்படையாய் அறிவித்தவர். கிறிஸ்துவைப் பின்பற்றும் மக்கள் கிறிஸ்துவின் போதனைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது அடிப்படை சித்தாந்தம். மருத்துவத்தை விலக்குபவர்கள் கிறிஸ்துவை விலக்கிய மறையைப் பின்பற்றுபவர்கள். 

மருத்துவத் துறையில் இருப்பவர்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் மருத்துவத் துறையில் இருக்கும் போது கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தூக்கிச் சுமப்பவர்களாக இருக்க வேண்டும். எந்தப் பணி செய்தாலும் அதை இறை பணியாகவே செய்ய வேண்டும் என அறைகூவல் விடுத்த பவுலின் வார்த்தைகளை மனதில் கொள்ள வேண்டும்.

மருத்துவம் இன்றைக்கு வியாபாரமாகிவிட்டது. சவப்பெட்டி செய்பவர் எப்போது பிணம் விழும் என பார்த்துக் கொண்டிருப்பது போல பல மருத்துவர்கள் எப்போது ஒரு நோயாளி வருவார், அவரை அச்சுறுத்தியே லாபம் சம்பாதிக்கலாம் என நினைப்பது உண்டு. ‘எவ்ளோ செலவு செஞ்சு இந்த இடத்துக்கு வந்திருக்கேன், கடனை அடைக்க வேண்டாமா ? நான் சம்பாதிக்க வேண்டாமா ?’ என்றெல்லாம் வெளிப்படையாகவே பேசுகின்ற மருத்துவர்களையும் நாம் தவறாமல் சந்திக்கிறோம். 

உலகம் எப்படிச் சென்றாலும் சரி, மருத்துவம் என்பது குருத்துவம் போல மிக முக்கியமான பணி என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும். 

ஒன்று ஒருவரை நிலைவாழ்வுக்குள் அழைத்துச் செல்கிறது என்றால், இன்னொன்று ஒருவரை சுக வாழ்வுக்குள் அழைத்து வருகிறது. இரண்டுமே மரணக் கட்டுகளிலிருந்து நம்மை விடுவிக்கும் பணிகளே. இரண்டையும் புனிதமாய் நினைத்துச் செய்ய வேண்டும். 

‘அவரு கிறிஸ்டியன் டாக்டர், நியாயமா இருப்பாரு’ என்று சொல்வதே இறைவனை மகிமைப்படுத்தும் நற்செய்திப் பணியாகும். இதைத் தான் இயேசு, ‘உங்கள் செயல்களின் மூலமாக பிதா மகிமைப்படவேண்டும் ‘ என்றார். கிறிஸ்தவப் பெயர்களிலோ, கிறிஸ்தவ அடையாள அட்டையிலோ, கிறிஸ்தவப் படங்களை தாங்குவதிலோ அல்ல இயேசு மகிமைப்படுவது ! இயேசுவை வெளிப்படுத்தும் செயல்களில் தான் இயேசு மகிமைப்படுகிறார். 

மருத்துவப் பணி இன்றைக்கு தன் மகத்துவம் இழந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் நாம் என்ன செய்யவேண்டும் ? எதை நினைவில் கொள்ள வேண்டும்.

 1. போதனைகளின் பாதையில் பயணித்தல்

மருத்துவர்களுக்கு எதிராக நிற்கக் கூடிய மிகப்பெரிய சவால், இறைவனின் போதனைகளா ? இல்லை நோயாளிகளின் விருப்பமா எனும் கேள்வி தான். உதாரணமாக உயிர்கள் இறைவனிடமிருந்து வருகின்றன என்பது நமது கிறிஸ்தவப் போதனை. உயிர்களைக் கொல்வது பாவம் என்பது நமது நம்பிக்கை.  ஆனாலும் உலகமெங்கும் கருக்கலைப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அவற்றைச் செய்யும் கிறிஸ்தவ மருத்துவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் ! கடவுளின் கட்டளையா ? மனிதனின் விருப்பமா ? எது நம் தேர்வு ?

ஒருவர் முழுக்க முழுக்க படுக்கையில் கிடக்கிறார். வலியோடு இருக்கிறார். அவருக்கு ஒரு நிம்மதியான மரணம் மட்டுமே தேவையாய் இருக்கிறது ! ஒரு கருணைக் கொலையே அவருக்குத் தேவையாகிறது. அவரைச் சார்ந்தவர்களும் அவருக்கு ஒரு நிம்மதியான மரணம் வேண்டுமென நினைக்கிறார்கள். எனில் எது நியாயம் ? கடவுளின் கட்டளையா ? மனிதனின் விருப்பமா ?

 1. மூடநம்பிக்கைகளை புறந்தள்ளுதல்

மருத்துவம் தேவையில்லை என்பவர்கள் இறைவனைப் பற்றிய அறிவும், விவிலியத்தைப் பற்றிய அறிவும் இல்லாதவர்கள். மோசே கொடுத்த கட்டளைகளில் எத்தனை கட்டளைகள் மருத்துவம் சார்ந்து இருக்கின்றன என்பதைப் பற்றி ஒரு நூலே எழுதலாம். உண்ணக்கூடாது என கடவுளால் விலக்கப்பட்ட விலங்குகள், மருத்துவ ரீதியாக உடலுக்கு ஆபத்தானவை என்பதை சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு தான் மருத்துவமே புரிந்து கொண்டது. 

மருந்து எடுத்துக் கொள்வது மூடத்தனமல்ல, மருத்து எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே மூடத்தனம். எந்த மருந்தை நாம் எடுத்துக் கொண்டாலும், சுகமளிப்பவர் இயேசுவே என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் நாம் எடுக்கின்ற மருந்துகளின் வழியாகவே நமக்கு நலமளிக்கிறார். மண்ணையே மருந்தாய்ப் பயன்படுத்தியவர் இயேசு. மருத்துவர் லூக்காவைக் கொண்டு நற்செய்தியையும், வரலாற்றையும் எழுத வைத்தவர் இறைவன். எனவே ஆன்மிகத்தில் மூடநம்பிக்கைகளைப் புறந்தள்ளுவோம்.

 1. புதிய மருத்துவக் கட்டமைப்புகள் உருவாக்குதல்.

வரலாறுகளைப் புரட்டிப் புரட்டியே நிறைவடையும் மனநிலை நமக்கு உண்டு. அதனால் தான் மெடிக்கல் மிஷனரிகளின் வரலாறுகளைப் பேசிப் பேசி நாம் புளகாங்கிதம் அடைந்து விடுகிறோம். அந்த ஹாஸ்பிடலோட வரலாறு தெரியுமா ? இந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கியது யார் தெரியுமா ? இந்தியால எத்தனை கிறிஸ்தவ மிஷனரி ஹாஸ்பிடல்ஸ் இருக்கிறது தெரியுமா ? என்றெல்லாம் பட்டியலிட்டு நாம் ஆனந்தமடைகிறோம். 

இரண்டு கேள்விகளை நாம் நமக்குள் எழுப்ப வேண்டும். ஒன்று, கிறிஸ்தவ மருத்துவமனைகள், நிறுவனங்கள் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிறதா ? அல்லது உலக மருத்துவமனைகளைப் போல இயங்குகின்றதா ?

இரண்டு, கடந்த பத்து ஆண்டுகளில் நாம் உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்புகள் எத்தனை. ஒன்றுமில்லாத காலத்தில் தன் சொத்துகளை விற்று மருத்துவமனைகளை உருவாக்கினார்கள் மிஷனரிகள். இன்று எல்லாம் பெற்ற நாம் உருவாக்கியது என்ன ?

4 நமது செயல்களை சரிபார்த்தல்.

மருத்துவர்கள் அன்பு நிறைந்தவர்களுக்காகவும், சமாதானமும் பொறுமையும் நிறைந்தவர்களாகவும், கனிவு உடையவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் ஒவ்வொரு மனிதரிலும் இறைவனைக் காண்பவராகவும் இருக்க வேண்டும். நோயாளிகள் நலமடைய மருந்தைப் போலவே அவர்களுடைய தன்னம்பிக்கையும், பாசிடிவ் சிந்தனையும் முக்கியம் என்கிறது உளவியல். அப்படிப்பட்ட மனநிலையை உருவாக்க மருத்துவர்கள் பரிவு உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

இயேசு தான் சந்தித்த நோயாளிகளிடம் முதலில் வெளிப்படுத்தியது கனிவைத் தான். மனதுருக்கம் இல்லாமல் எந்த புதுமையையும் இயேசு செய்யவில்லை. மருத்துவர்கள் தங்களுடைய அத்தனை முதன்மைகளையும் விட, நோயாளிகளின் நலனை முன்னிறுத்தி செயலாற்ற வேண்டும். இயேசு பிறருக்காக வாழ்ந்தது போல, மருத்துவப் பணியாளர்களும் அப்படியே செய்ய வேண்டியது அவசியம். 

 1. சரியான வழிகாட்டுதல்.

மருத்துவர்கள் சமூகத்திற்கு ஏராளம் பணியாற்ற முடியும். குறிப்பாக குழப்பத்தில் தவிக்கும் மக்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல் நல்க முடியும். யார் சொல்றது உண்மை என்பதே தெரியாமல் குழம்புகின்ற சூழலே இன்றைக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. சுயநலமா பேசறாங்களா ? உண்மையான அக்கறையோட பேசறாங்களா என்பதே தெரியாததால் தான் செகண்ட் ஒப்பீனியன், தேர்ட் ஒப்பீனியன் என உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இணைய உலகம் மக்களை குழப்போ குழப்பென குழப்பிக் கொண்டிருக்கிறது.

நல்ல மருத்துவ வழிகாட்டல், நல்ல மருத்துவ ஆலோசனைகள், குறைந்த செலவிலான மருத்துவம் போன்றவற்றின் மூலமாக உண்மையிலேயே மிகப்பெரிய இறைப் பணியை கிறிஸ்தவ மருத்துவர்கள் ஆற்ற முடியும். மருத்துவம் என்பது ஒரு மகத்தான பணி, அதை நற்செய்திப் பணியாய் மாற்றுவதும் – வாய்ப்பை நழுவ விடுவதும் நம்கையில் தான் இருக்கிறது

*

சேவியர்

Posted in Articles, Christianity, WhatsApp

இயேசுவைப் போல…

இயேசுவளரவளரஞானத்திலும், உடல்வளர்ச்சியிலும்மிகுந்துகடவுளுக்கும்மனிதருக்கும்உகந்தவராய்வாழ்ந்துவந்தார்

( லூக்கா 2:52 )

*

நம்முடைய வாழ்க்கை கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையாய் அமைய வேண்டும் என்பது தான் கிறிஸ்தவப் போதனைகளின் அடிப்படை. அதற்காகத் தான் இயேசு பூமிக்கு வந்தார். ஒரு மனிதன் எப்படி இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை அவர் தனது வாழ்க்கை மூலமாக வாழ்ந்து காட்டினார். 

அவர் வளர வளர ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்தார் என்றும், கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார் என்றும் விவிலியம் சொல்கிறது. 

நாம் வளரும் போது எப்படி வளர வேண்டும் என்பதை இந்த வசனம் நமக்கு மிகத் தெளிவாக விளக்குகிறது. 

நான்கு நிலைகளில் நாம் வளரவேண்டும். 

 1. ஞானத்தில் வளரவேண்டும்
 2. உடல் வளர்ச்சியில் வளரவேண்டும்
 3. இறைவனுக்கு உகந்தவராய் வளரவேண்டும்
 4. மனிதருக்கு உகந்தவராய் வளரவேண்டும்.

ஞானத்தில் வளர்வது எப்படி ? இறைவனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்கிறது பைபிள். உலகக் கல்வி நமக்குத் தருவது அறிவு ! இறைவன் நமக்குத் தருவது ஞானம். அறிவை நாம் வாசிப்பதன் மூலமாகக் கற்றுக் கொள்ளலாம், ஞானத்தை நாம் நேசிப்பதன் மூலமாகத் தான் கற்றுக் கொள்ள முடியும். அதுவும் இறைவனை நேசிப்பதன் மூலமாகத் தான் கற்றுக் கொள்ள முடியும்.

இந்த வாலிப வயதில் நாம் இறைவனுக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழவேண்டும். இறைவனுக்குப் பயப்படுவது என்பது என்ன ? இறைவன் மிகப்பெரிய கொடுங்கோலராய் இருக்கிறார், அவரைப் பார்த்து நாம் பயந்து நடுங்க வேண்டும் என்பதல்ல.! இந்தப் பயப்படுதல், அவருக்கு முழுமையாய்ப் பணிந்திருப்பதைப் பேசுகிறது. 

எதையும் இறைவனிடம் அற்பணிப்பதைப் பேசுகிறது. நமது ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதைப் பேசுகிறது. எப்படி ஒரு அடிமையானவன், அனைத்தையும் தன் தலைவனுக்குப் பயந்து செய்வானோ. எப்படி நல்ல பையன் தன் தந்தைக்குப் பயந்து அனைத்தையும் செய்வானோ, அதே போல நாம் இறைவனுக்குப் பயந்து அவரது போதனைகளின் படி நடக்க வேண்டும். இறைவனை மீறினால் நமக்குக் கிடைப்பது நிலையான நரகம் என்பதைப் புரிய வேண்டும். 

சாலமோனுக்கு. ஞானம் இருந்தது, அது தான் மக்களுக்கு நீதி வழங்கும் பணியில் அவரை சிறக்க வைத்தது. இயேசுவுக்கு  ஞானம் இருந்தது, அது தான் அவரை எல்லா சூழல்களையும் சிறப்பாய் எதிர்கொள்ள வைத்தது. நாம் முதலில் தேடவேண்டியது ஞானமே, அதற்காய் இறைவனில் சரணடைவோம்.

இரண்டாவது, உடல் வளர்ச்சியில் வளரவேண்டும். ஏன் உடல் வளர்ச்சியைப் பற்றி பைபிள் பேசுகிறது ? அது ஆன்ம வளர்ச்சியைத் தானே பேசவேண்டும் என பலர் நினைக்கலாம். நமது உடல் இறைவனின் ஆலயம் என்கிறது பைபிள். உடலை வலிமையாக, நேர்த்தியாக, தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அது பேசுவதில் வியப்பில்லை. அதே போல, பைபிள் நமக்கான வாழ்வியல் நெறி, ஆன்மிக வழிகாட்டி. அது யதார்த்தங்களின் மீதே போதனைகளை அமைக்கிறது. 

நாம் நம்முடைய இளம் வயதில் எப்படி உடலைப் பாதுகாப்பது ? உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். உடலைக் கெடுக்கும் துரித உணவுகளுக்கு விடைகொடுப்போம். வீட்டில் அன்பாகச் சமைத்துத் தரும் உணவுகளை மட்டுமே உண்போம். தேவையான உடற்பயிற்சி நமது உடலையும் மனதையும் வலுவாக்கும். எனவே சரியான உடற்பயிற்சியைச் செய்வோம். 

நமது உடலை எந்த விதமான சிற்றின்பத் தேவைகளுக்காகவும் பாவத்தில் புரட்டாமல் இருப்போம். டிஜிடல் மோகத்தில் விழும்போதோ, போதை போன்றவற்றை அணுகும் போதோ நாம் உடலை அவமானப்படுத்துகிறோம். நம் உடலை நாம் களங்கப்படுத்தும் போது, கடவுளையே அவமானப்படுத்துகிறோம்.

மூன்றாவது, கடவுளுக்கு உகந்தவராய் வாழ்தல். நமது வாழ்க்கை கடவுளுக்குப் பிரியமானதாய் இருப்பதே கிறிஸ்தவ போதனைகளின் அடிநாதம். கடவுளுக்கு உகந்தவராய் வாழ்வது எப்படி ? மிக எளிது. ஒவ்வொரு செயலை நாம் செய்யும் போதும் “இயேசு இந்த செயலை செய்வாரா ?” “இயேசு இந்தச் செயலை இப்படித் தான் செய்வாரா ? என யோசித்து செய்ய வேண்டும். எந்த ஒரு சொல்லை பேசும் போதும், இயேசு இந்த வார்த்தையைப் பேசுவாரா என யோசிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தைச் சிந்திக்கும் போதும், இயேசு இந்த விஷயத்தை இப்படித் தான் சிந்திப்பாரா என யோசிக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழும்போது நாம் கடவுளுக்கு உகந்தவராய் வாழ்கிறோம் என்று அர்த்தம். எப்போதும் கடவுளின் புகழைப் பாடுவதோ, அவரது பெயரை உச்சரிப்பதோ, வார்த்தைகளால் இயேசுவை அறிவிப்பதோ அவருக்குப் பிரியமான வாழ்க்கையல்ல. நமது சமூக வீதியில் ஏழை எளியவர்களுக்கு உதவும் போது, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் போது, நோயாளிகளின அருகில் அமர்ந்து அவர்களின் துயரக் கதைகளை அன்புடன் கேட்கும் போது – நாம் இறைவனுக்குப் பிரியமானவராய் வாழ்கிறோம் என்று பொருள். அப்படித் தான் இயேசு வாழ்ந்தார். 

நான்காவது, மனிதருக்கு உகந்தவராய் வாழ்தல். நாம் இறைவனுக்குப் பிரியமானவராய் வாழவேண்டுமெனில் மனிதருக்கு உகந்தவராய் வாழவேண்டியது அவசியம். இயேசுவே சொல்கிறார், கண்ணில் காணும் சகோதரனை நேசிக்காமல் கண்ணில் காணாத கடவுளை நேசிக்க முடியாது என்று. இளம் வயதினராகிய நாம் முதலில் பெற்றோருக்கு முழுமையாய் கீழ்ப்படிபவர்களாய் இருக்க வேண்டும். நம்மைச் சார்ந்திருப்போருக்கு நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைச் சிதைக்காதவர்களாக இருக்க வேண்டும். எங்கும் எல்லா இடங்களிலும் மனிதர்கள் நம்மை நேசிக்கும்படி வாழவேண்டும். 

இந்த நான்கு விஷயங்களும் இருந்தால், நமது வாழ்க்கை இறைவன் விரும்பிய வாழ்க்கையாய் அமையும். இயேசுவைப் போல வாழ வேண்டுமெனில், இயேசுவைப் போல வளரவேண்டியது அவசியம். 

இயேசுவைப் போல் வளர்வோம்

இயேசுவைப் போல் வாழ்வோம்

இயேசுவோடு வாழ்வோம் 

நன்றி. 

*