Posted in Articles

கிறிஸ்மஸ் என்பது இணைப்பு

கிறிஸ்மஸ் என்பது இணைப்பு

 கிறிஸ்மஸ் என்பது இணைப்பு

*

புழுதியில் விரல் விரவி
மண்ணில்
மனிதனை வடித்தார் கடவுள்
முதல் இணைப்பின்
முதலெழுத்தாய்.

சொந்த மூச்சினை
ஊதி
மண்ணுக்கு உயிரூட்டி
ஆதாமென அழைத்தார் ஆண்டவர்
இணைப்பு இறுக்கமானது.

ஏதேனின் பாதைகளில்
கரம்பிடித்த
கடவுளின் கைகள்
ஆதாமுடனான
இணைப்பை வலுவாக்கியது.

சாத்தானின் வருகை
கடவுளோடான இணைப்பை
சந்தேகத்தின்
கோடரிகொண்டு
வெட்டி வீழ்த்தியது.

மனிதன் தவறிழைத்தான்
பரமன் பரிதவித்தார்.

ஆதாம் விரட்டப்பட்டார்
ஆண்டவர் வருத்தப்பட்டார்.

நீர்த்துப் போன
உறவின் இணைப்பை வலுவாக்க
கடவுள் செய்த
முயற்சிகளெல்லாம்
மனிதனால் மறுதலிக்கப்பட்டன.

இறைவார்த்தைகளை
அனுப்பினார்
மனிதன் நிராகரித்தான்.

இறைவாக்கினர்களை
அனுப்பினார்
மனிதன் அழித்தொழித்தான்

கடவுளுக்கும்
சாத்தானுக்குமிடையே
கண்ணாமூச்சி ஆடினான்.

கடைசியில் கடவுள்
வார்த்தைகளை நிறுத்திவிட்டு
வார்த்தையானவரை
அனுப்பினார்.

இணைப்பு மீண்டும்
உயிர்பெற்றது

வானுக்கும் மண்ணுக்குமிடையே
உறவுப் பாலம்
உருவாக்கப்பட்டது.

விண்ணகத்துக்கும்
மண்ணகத்துக்குமிடையே
ஏணி ஒன்று
இறக்கப்பட்டது.

கடவுளும் மனிதனும்
கடைசியில்
மீண்டும்
கைகுலுக்கிக் கொண்டனர்.

கிறிஸ்மஸ்
இணைப்பின் விழா.

உடைக்கப்பட்ட
உறவுகளையும்
அடைக்கப்பட்ட கதவுகளையும்
சீராக்கும் விழா.

இருளை வெளுத்து
வெளிச்சத்தில்
இணைக்கும் விழா.

பாவத்தை அழித்து
புனிதத்தில்
பிணைக்கும் விழா

அடிமைகளையும்
அரசர்களாக
அழைக்கும் விழா.

கிறிஸ்மஸ் விழாவில்
இணைப்பின் இனிமையை
உணர்வோம்.

வலுவிழந்த
உறவுகளையெல்லாம்
அன்பின் இழைகொண்டு
பின்னுவோம்.

இருளடைந்த
இதயங்களிலெல்லாம்
இறைவனின் ஒளிகொண்டு
மின்னுவோம்

*

சேவியர்

Posted in Articles

6 கிறிஸ்மஸ் என்பது நினைவூட்டல்

6.

கிறிஸ்மஸ் என்பது

நினைவூட்டல்

6.

கிறிஸ்மஸ் என்பது
நினைவூட்டல்

*

கிறிஸ்மஸ்
ஒரு நினைவூட்டல்.

அதோ அந்த‌
குடிலின் மடியில்
வடிவான குழந்தையாய்
விரல்கடித்துக் கிடக்கிறாரே !

அவர் தான்
பிரபஞ்சத்தின் பிதா !
ராஜாதி ராஜா
எனும் நினைவூட்டல்.

அதோ.
ஆடுகளில் நடுவில்
அயர்ந்து தூங்கிறாரே,
அவர் தான்
தொலைந்த ஆட்டினை
தேடித் திரிந்தவர்
எனும் நினைவூட்டல்.

பாருங்கள்,
கிழிந்த கந்தை அவரை
சுற்றியிருக்கிறது !
நீதியெனும் ஆடையை
நமக்கு நீட்டுபவர்
எனும் நினைவூட்டல்.

குடிலுக்கு மேல்
வானின் நட்சத்திர ஒளி
வட்டமிடுகிறது,
“நானே ஒளி” எனும்
அவரது வார்த்தையின் நினைவூட்டல்.

நசுக்கப்பட்டோரையும்
த‌ம்
தலைமுறையில் இணைத்துப்
பிறந்திருக்கிறார் !
நிராகரிக்கப்பட்டோரின் நம்பிக்கை
எனும் நினைவூட்டல்.

தாவீதின் வம்சமாய்
தாயவளின் அம்சமாய்
தரணியில்
பிறந்திருக்கிறார்
இறைவார்த்தைகள் நிறைவாகும்
எனும் நினைவூட்டல்.

ஞானியரின் பரிசினையும்
புன்னகையோடு பெற்றிருக்கிறார்
மீட்பின் பாதையில்
பேதங்கள் இல்லையெனும்
நினைவூட்டல்.

தொழுவினில்
பிறந்திருக்கிறார்
கழுவினில்
இறப்பார் எனும் நினைவூட்டல்.

ஆடுகளுக்கான‌
தீவனத் தொட்டியில்
படுத்திருக்கிறார்,
‘நானே உணவெனும்’
பலியதன் நினைவூட்டல்.

ஏழ்மையின் தழுவல்களில்
தவழ்கிறார்,
பணிவின் படிகளில்
பயணிப்பாரெனும் நினைவூட்டல்.

இயேசுவின் பிறப்பு
அவரது முதல் வருகை !
இது
மீண்டும் வருவாரெனும்
இரண்டாம் வருகையின்
நினைவூட்டல்

இயேசுவின் முதல் வருகை
பாவிகளுக்கானது !
இரண்டாம் வருகை
நீதிமான்களுக்கானது
!

*
சேவியர்

Posted in Bible Poems

டிஜிடல் வணக்கம்

டிஜிடல் வணக்கம்
Image result for bible  facebook
அதிகாலையில் எழுந்ததும்
பைபிள் வாசிப்பது
என்
அப்பாவின் பழக்கம்

சூரிய நம்ஸ்காரம் செய்வதோ
நமாஸ் செய்வதோ
உங்கள்
அப்பாவின் வழக்கமாய்
இருந்திருக்கலாம்.

அம்மாக்களுக்கு
இருள் விலகாத
கொல்லைப்புற தாழ்ப்பாழ் விலக்கி
சத்தமிடாத பாத்திரங்களோடு
சகவாசம் செய்வது மட்டுமே
கற்காலப் பழக்கம்.

எனக்கும்
உனக்கும்
இதில் எதுவும் பழக்கமில்லை.

விடிந்தும் விடியாமலும்
போர்வை விலக்கா
அதிகாலைகளில்,
வாட்ஸப்பின் நெற்றி தேய்த்து
தூக்கம் கலைக்கிறோம்.

நள்ளிரவின்
திடீர் விழிப்புகளிலும்
வெளிச்சம் துப்பும்
மொபைலின் முகத்தை
அனிச்சைச் செயலாய்
பார்த்துக் கொள்கிறோம்.

காலத்தின்
பாசி படிந்து கிடக்கும்
புனித நூல்களில்
லைக் பட்டன் வைக்காத குறைக்காய்
தன்னையே
நொந்து கொள்கிறார் கடவுள்.

*

சேவியர்

Posted in JESUS Kaaviyam

இயேசுவின் கதை – கவித்துவம் நிறைந்த மொழி – என்.சொக்கன்

இயேசுவின் கதை – கவித்துவம் நிறைந்த மொழி

– என்.சொக்கன்


சங்க காலத்தில் தொடங்கி, பெரும்பான்மைக் கதைகள் / காவியங்கள் கவிதை நடையிலேயே சொல்லப்பட்டுவந்தபோதும், புதுக்கவிதை என்கிற விஷயம் அறிமுகமானபிறகுதான், கவிதைகளின் நோக்கம் கதை அல்லது சம்பவங்களைச் சொல்வது(மட்டும்)தானா என்கிற சந்தேகம் எழுந்து, இன்றுவரை தீராமலேயே இருக்கிறது.

இந்தச் சந்தேகத்தின் நீட்சியாகவே, புதுக் கவிதைகளில் காவியங்கள் எழுதப்படமுடியுமா, எழுதப்படவேண்டுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல சிந்தனையாளர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளார்கள்.

மரபுக் கவிதைகளோடு ஒப்பிடுகையில், புதுக் கவிதைகள் கதை சொல்வதைக்காட்டிலும், சிந்தனை அல்லது உளவியல் ஓட்டங்களைப் பதிவு செய்வதற்குதான் அதிகப் பொருத்தமானவையாகத் தோன்றுகின்றன. எனினும், வைரமுத்துவின் ‘கவிராஜன் கதை’, ‘சிகரங்களை நோக்கி’, ‘தண்ணீர் தேசம்’ உள்ளிட்ட படைப்புகள், இந்த இரண்டுக்கும் இடையிலான மெல்லிய கயிற்றில் சாமர்த்தியமாக நடந்து சென்றிருக்கின்றன.

சேவியர் எழுதியுள்ள, ‘இயேசுவின் கதை’ நூல், தலைப்பிலேயே தனது நோக்கத்தைத் தெளிவாகப் பிரகடனப்படுத்திவிடுகிறது. இயேசுபெருமானின் வாழ்க்கையை எல்லோரும் வாசித்துப் புரிந்துகொள்ளும்வண்ணம் புதுக்கவிதையில் பதிவு செய்யவேண்டும் என்கிற எண்ணத்துடன், எளிய வார்த்தைகளில் தெளிவான நீரோடைபோன்ற கதையோட்ட பாணியைப் பயன்படுத்தியிருக்கிறார் கவிஞர்.

1982ல் கவியரசர் கண்ணதாசன், இதே நோக்கத்துடன், ‘இயேசு காவியம்’ என்கிற நூலை எழுதினார். அதிலிருந்த பெரும்பான்மைக் கவிதைகள், அற்புதமான சந்த நயத்துடனும், இசைப் பாடல்களுக்குரிய நளினத்துடனும் அழகுற அமைந்திருந்தன. அதேசமயம், வாசகனைச் சிரமப்படுத்தாத எளிய மொழியால் அந்தப் புத்தகம் லட்சக் கணக்கான வாசகர்களைச் சென்று சேர்ந்தது.

கிட்டத்தட்ட அந்தக் காவியத்தின் தொடர்ச்சிபோலவே, சேவியரின் இந்தப் புத்தகம் அமைந்திருப்பது ஆச்சரியம்தான். தொடர்ச்சி என்றால், கதையளவில் அல்ல, மதப் புத்தகங்களில்மட்டும் பேசப்பட்ட இயேசுவின் கதையை, எல்லோருக்கும் புரியும்படி எளிய தமிழில் எழுதினார் கண்ணதாசன், கால் நூற்றாண்டு காலத்துக்குப்பிறகு, இன்றைய மொழியில் அதை மேலும் எளிமைப்படுத்தித் தந்திருக்கிறார் சேவியர்.

அதேசமயம், எளிமைக்காகச் சொல்லவந்த விஷயம் நீர்த்துப்போய்விடாமலும் பார்த்துக்கொண்டிருப்பதுதான் கவிஞருடைய சாமர்த்தியம். இயேசுவின் வாழ்க்கையைச் சம்பவங்களின் பட்டியலாக விவரிக்காமல், பிரசாரம் செய்கிற தொனியும் தலைகாட்டாமல், ஜனங்களுக்கான கவிதையின் சகல பலங்களையும் பயன்படுத்திக்கொண்டு வெற்றியடைந்திருக்கிறது இந்நூல்.

ஆனால், அனைவருக்கும் சுலபத்தில் புரியும்படி சொல்வதுதான் ஒரே நோக்கம் என்றால், அதற்காகக் கவிதையைத் தேர்வு செய்யவேண்டிய அவசியம் என்ன? நேரடியாகக் கதையாகவோ, உரையாடல் அல்லது நாடக வடிவிலோ சொல்லிவிடமுடியாதா?

அடிப்படையில் ஒரு கவிஞரான சேவியர், தனக்குப் பழக்கமான ஊடகத்தைத் தேர்வு செய்திருக்கிறார் என்பதுமட்டும் இதற்கான காரணம் அல்ல. இந்நூலின் ‘உவமைகள்’போன்ற பகுதிகளை வாசிக்கும்போது, புதுக் கவிதைக்குரிய கனத்தை இயேசுவின் வாழ்க்கையில் அவர் கண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. நூல்நெடுக, இதுபோன்ற கவிதைத் தருணங்கள் இதமான வாசிப்பு அனுபவத்தை அளிக்கின்றன.

அந்தவிதத்தில், இது ஒரு முக்கியமான இலக்கியப் பதிவாகிறது. கவித்துவம் நிறைந்த எளிய மொழியில், இக்காலத்துக்குரிய காவியங்களும் எழுதப்படமுடியும், கவியரசர் கண்ணதாசன் விரும்பியதுபோல், அவை இறவாக் காவியங்களாகவும் நிலைத்திருக்கும் என்பதை, இந்தக் க(வி)தை நூல் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.

Thanks : புதியபார்வை

(இயேசுவின் கதை – சேவியர் – யாளி பதிவு வெளியீடு – 346 பக்கங்கள் – ரூ 200/-)

Posted in JESUS Kaaviyam

இறவாக் காவியம் : 1

வாசல்

jesus_185

மதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரியவேண்டும். மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளைக் கருணையின்றிக் கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தைத் தொலைத்துவிடுகிறது.

கிறிஸ்தவம்,
அது எப்போதுமே அன்பின் அடிச்சுவடுகளில் பாதம் பதித்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம். பல்லுக்குப் பல் என்னும் பழி வாங்கல் கதைகளிலிருந்து விலகி வாழ்வியல் எதார்த்தங்களின் கரம் பிடித்து சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வியர்வையும், குருதியும் கலந்த வேதனைப் பிசு பிசுப்பை துடைத்தெறியத் துடித்தவர் தான் இயேசு.
கடவுளினின்று மனிதனாக, மனிதனிலிருந்து கடவுளாக நிரந்தர நிவாரணமாக, உலவுபவர் தான் இயேசு.

சமுதாயக் கவிதைகளின் தோள் தொட்டு நடந்த எனக்கு ‘இயேசுவின்’ வாழ்க்கையை எப்படி எழுதவேண்டும் என்று தோன்றியது, அதை எப்படி எழுதி முடித்தேன் என்பதெல்லாம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த படைப்பிற்குள் நீங்கள் காண்பதெல்லாம் ஒரு சரித்திரக் கதாநாயகனின் சாதனைப் பயணம் தான்.

இயேசு யார் என்பதை அறியாத மக்களுக்கு அவரை எளிமையாக அழுத்தமாக அறியவைக்க வேண்டும் என்னும் எண்ணமே இந்தப் படைப்பு உருவாகக் காரணம்.

தோப்புக்குத் தெரியாமல் குருவிக்குக் கூடுகட்டிக் கூட கொடுக்காத ஒரு சமுதாயத்தினரிடம்,
‘நீ வலக்கையால் செய்யும் தானம் இடக்கைக்குத் தெரியவேண்டாம்’ என்று அன்பின் ஆழத்தை அகலப்படுத்துகிறார்.
எதிரியை நேசி – என்னும் அறிவுரையால் அன்பை ஆழப்படுத்துகிறார்,
இன்னும் இதயம் தொடும் ஏராளம் அறிவுரைகளை அளித்து அன்பை நீளப்படுத்துகிறார்.

0

சாரத்தைத் தொலைத்துவிட்ட
உப்பும்,
ஈரத்தைத் தொலைத்து விட்ட
மனசும்,
உபயோகமற்றுப்போன உதிரிகள்.

0

உன் வார்த்தைகளுக்குள்
செயல்களின் சுடரை ஏற்றி வை.
விளக்குக்குத் திரியிட்டு
திரிக்குத் தீப் பொட்டிட்டு,
அதை
மூடிவைப்பது முட்டாள் தனம்…

0

விபச்சாரம்
உடல்சார்ந்த வன்முறை
மட்டுமல்ல.
இச்சைப் பார்வையின் மிச்சம்
விபச்சாரத்தின் எச்சமே…

0

அயலானுக்காய்
நீ
தொங்க விடும்
தராசுத் தட்டில் தான்,
உனக்கானதும் நிறுக்கப்படும்.

0

தீமையின் நெடுஞ்சாலையை
நிராகரியுங்கள்,
நன்மையின் ஒற்றையடிப்பாதையை
கண்டு பிடியுங்கள்.

0

என்று சின்ன சின்ன வார்த்தைகளால் அவர் சொன்ன போதனைகளுக்குள் ஒரு சமுத்திரத்தின் ஆழம் ஒளிந்திருக்கிறது.
சின்ன வரிகளுக்குள் ஒரு சீனச் சுவரே சிறைப்பட்டிருக்கிறது

இந்தப் படைப்பு, என் கவிதைத் திறமையை சொல்வதற்காய் செய்யப்பட்ட ஒரு படைப்பு அல்ல. விவிலியம் ஒரு கவிதை நூல் தான். அதை முறைப்படுத்தி, எளிமையாய் புதுக்கவிதையில் இறக்கிவைத்திருப்பது மட்டுமே நான் செய்த பணி.

பைபிளின் பழைய ஏற்பாடுகளில் ஆண்டவர் மேகம், இடி மின்னல் , தீ என்று இயற்கைக்குள் இருந்து மனிதனிடம் நேரடியாய் பேசுகிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவாய் அவதாரம் எடுத்து மனிதரோடு பேசுகிறார். நம்பிக்கை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, புதுமை என்று இயேசு தொடாத இடங்கள் இல்லை எனலாம்.

தீவிழும் தேசத்தில் இருந்துகொண்டு அவர் விதைத்த விசுவாச விதைகள் இன்னும் என் வியப்புப் புருவங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவில்லை.  காலம் காலமாய் அடையாளங்களோடு வாழ்ந்து வந்த மதங்களின் அஸ்திவாரங்களில் கடப்பாரையாய் இறங்க அவரால் எப்படி இயன்றது ? சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது ? ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது ? எதிர்த்து நின்ற அத்தனை மக்களைளோடும் ‘பாவமில்லாதவன் முதல் கல் எறியட்டும்’ என்று எப்படி அவரால் சொல்ல முடிந்தது, ஆணிகளால் அறையப்பட்டு வலியோடு எப்படி பயணம் முடிக்க முடிந்தது. அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் ‘அவர் இயேசு’ என்பது தான்.

சாதாரணக் கவிதைகளை மட்டுமே எழுதிப் பழக்கப்பட்ட என் விரல்கள் ஒரு இறைமகனை எழுதியதால் இன்று பெருமைப் படுகிறது. ஆனால் இந்தப் பெருமை எல்லாம் என்னைச் சேராது என்னும் எண்ணம் மட்டுமே என்னை மீண்டும் இறைவனில் ஆழமாய் இணைக்கிறது.

இந்தப் படைப்பைப் தொடராய் வெளியிட்ட நிலாச்சாரல் இணைய தளத்தின் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான்கு ஆண்டுகளாக இந்தப் படைப்பை புத்தக வடிவில் பார்க்கவேண்டுமென்று நான் செய்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் முளைத்தபோதெல்லாம் எனக்கு ஆதரவாய் நின்ற இறைவனுக்கும், ஆறுதலாய் நின்ற பெற்றோருக்கும், தோள்கொடுத்து நின்ற துணைவிக்கும், ஊக்கம் தந்த உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

இயேசுவின் சமகாலத்தில், அவர் மடியில் தவழ்ந்த குழந்தைகளில் ஒன்றாய் வாழ இயலாமல் போன வருத்தம் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும், அதற்கு அவரே சொல்லும் ஆறுதல் ‘என்னைக் காணாமல் விசுவசிப்பவன் பேறுபெற்றவன்’.