
*
இளமைக் காலம் என்பது ஒரு வரப்பிரசாதம். பொங்கிப் பிரவாகமெடுக்கும் ஆற்றலின் காலம். காட்டாறுபோல, தடைகளைக் கண்டு அஞ்சி நடுங்காமல் சீறிப் பாயும் காலம். இளமைக் காலம் விளைவுளை எண்ணித் தயங்காமல் களம் புகும் காலம். உலகம் எப்போதுமே இளைஞர்களை அரவணைக்கிறது. மாற்றங்கள் எப்போதுமே இளையவர்களைச் சுற்றியே அமைகிறது.
எனக்கு நூறு இளைஞர்களைக் கொடுங்கள் நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என விவேகானந்தர் சொன்னதாகச் சொல்வார்கள். நிறுவனங்களில் இளைஞர்கள் அதிகமாய் இருக்கும்போது அந்த நிறுவனம் வளர்ச்சியை நோக்கி தாவி ஓடும். திருச்சபைகளில் இளைஞர்கள் ஆர்வமாய் ஈடுபடும்போது திருச்சபை மறுமலர்ச்சியடையும்.
விவிலியமும் ஏராளமான இளைஞர்களைப் பற்றிப் பேசுகிறது. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஏராளம் இளைஞர்கள் பவனிவருகிறார்கள். அவர்கள் ஆன்மிகப் பாடத்தை தங்கள் வாழ்க்கையில் சுமந்து திரிகிறார்கள்.
வெறும் பன்னிரண்டு இளைஞர்களைக் கொண்டு உலகையே மாற்றிக் காட்டியவர் இயேசு. அவரே இளைஞராகத் தான் இந்தப் பூமியில் பவனி வந்தார்.
இளைஞர்களின் இந்தப் பேராற்றல் சரியான இடங்களில் செலுத்தப்படும்போது குவி லென்ஸ் போல அவர்கள் எரிக்கிறார்கள். அவர்களுடைய ஆற்றல் தவறான இடங்களைத் தழுவும் போது அணைந்து போகிறார்கள். இளைஞர்கள் இறைப் பற்றில் வளரும் போது திருச்சபை நிமிர்கிறது. அவர்களுடைய செயல்களால் சமூகம் மாற்றமடைகிறது.
காலம் முன்பு போல் இல்லை. காலையில் எழுந்து காலைக் கடன்கள் முடித்து, பேப்பர் படித்து, சாப்பிட்டு, வேலைக்குப் போய், மாலையில் வீடு திரும்பி, சாப்பிட்டு, செபித்து தூங்கும் அன்றைய காலம் தொழில்நுட்பம் தீண்டாத தூய்மைக் காலம். அப்போது எல்லாமே மெதுவாய் நடந்தன. ஆனாலும், எல்லோருக்கும் நேரம் இருந்தது. ஆலயம் செல்லவும், செபிக்கவும், உறவினர்களோடு செலவிடவும் நேரம் இருந்தது.
ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. டிஜிடல் முகத்தோடு ஸ்மார்ட் போன்கள் இரவுப் போர்வைக்குள் வெகுநேரம் விழித்திருக்கின்றன. நள்ளிரவு தாண்டிய ஏதோ ஒரு ஜாமத்தில் தான் இளைஞர்கள் தூங்கப் போகிறார்கள். விழித்தெழும் போது அவர்களுக்கு வாட்சப் தான் வாசல் திறக்கிறது, இன்ஸ்டாகிராம் தான் கோலம் போடுகிறது. சமூக வலைத்தளங்கள் தான் அவர்களுடைய பொழுதுகளை புற்றீசல் போல சுற்றிக் கொள்கின்றன.
எதைச் சாப்பிடுகிறோம், எங்கே போகிறோம், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாத ஒரு வாழ்க்கை ஓட்டத்தை இந்த தொழில்நுட்பங்கள் இளைஞர்களின் கையில் திணித்து விட்டன. இந்தக் காலகட்டத்திலும் இறைப் பற்றை இளைஞர்களின் இதயத்தில் விதைக்க வேண்டும். அதுவே மிகப்பெரிய பணி. அதுவே அடுத்த தலைமுறைக்கு கிறிஸ்தவத்தைச் சுமந்து செல்லும் வழி.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?
- நல்ல குடும்பம் !
ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதற்கான அடிப்படை குடும்பங்களில் தான் இருக்கிறது. ‘நல்ல குடும்பத்துல இருந்து பெண் எடுக்கணும்’ என பெண் பார்க்கும் போது சொல்வார்கள். காரணம், குடும்பம் நன்றாக இருந்தால் அங்கே வளர்கின்ற பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள் என்பது தான்.
இளைஞர்களின் இறைப்பற்றை வளர்க்கும் முயற்சிகள் குடும்பங்களில் தொடங்க வேண்டும். இறைவனின் போதனைகளை மீறாத செயல்களை குடும்பத் தலைவரும், தலைவியும் செய்ய வேண்டும். குடும்பத்தில் பேசப்படும் வார்த்தைகள் கனிவின் வார்த்தைகளாக இருக்க வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் முதல் – எதேச்சையாய் வந்து சேரும் வழிப்போக்கர் வரை நம் செயல்களில் இறைவனைக் காண வேண்டும். அப்படிப்பட்ட குடும்பம் அமையும் போது அங்கே வாழ்கின்ற இளைஞர்கள் இறைப்பற்றை இயல்பாகவே உருவாக்கிக் கொள்வார்கள்.
ஒருவருடைய பேச்சும், செயலும், சிந்தனையும் இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டுமெனில் குடும்பம் எனும் நல்ல நிலத்தில் அவர்கள் விதைக்கப்பட வேண்டும்.
- நல்லநண்பர்கள் !
குடும்பத்தில் இளைஞர்கள் கற்றுக் கொள்கின்ற நல்ல பண்புகளை வளர்த்தெடுப்பதும், வார்த்தெடுப்பதும் அவர்களுக்கு அமைகின்ற நண்பர்கள் தான். நல்ல நண்பர்கள் அமைந்து விட்டால் ஒருவருடைய வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும். சாத்ராக் மேஷாக் ஆபெத்நெகோவுக்கு தானியேல் எனும் ஒரு நல்ல நண்பன் இருந்தார். அவர்கள் நெருப்பிலும் இறைவனை வெறுக்காம போற்றிப் பாடினார்கள். தாவீதின் வாழ்க்கையில் ஒரு நல்ல நண்பர் யோனத்தான் இருந்தார். ஆபத்துகள் வந்தபோது காப்பாற்றினார்.
நல்ல நட்பு அமைவதிலும் இறைவனின் கருணை நமக்குக் கிடைக்க வேண்டும். நல்ல நண்பர்களுக்காய் செபிக்க வேண்டும். கெட்ட நண்பர்களைத் திருத்தும் முயற்சிகள் பயனளிக்காவிட்டால், அவர்களை விட்டு உடனடியாக விலக வேண்டும். ஒரு கெட்ட ஆப்பிளை எடுத்து, நல்ல ஆப்பிள்கள் இருக்கும் கூடையின் நடுவே வைத்தால் சில நாட்களிலேயே எல்லா ஆப்பிள்களும் கெட்டுப் போய்விடும். எனவே துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பதைப் போல, தீய நண்பர்களை தூர நிறுத்த வேண்டும்.
- நல்லவழிகாட்டி !
ஒருவனுக்கு ஒரு நல்ல வழிகாட்டி அமைந்து விட்டால் அவருடைய வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்து விடும். அப்துல் கலாம் வாழ்க்கையில் ஒரு ஆசிரியர் அவருக்கு வழிகாட்டியாய் இருந்தார். அவருடைய வளர்ச்சி சிறப்பானதாக இருந்தது. எலிசாவுக்கு ஒரு எலியா கூடவே இருந்தார், ஆசானாக இருந்தார். குருவை மிஞ்சிய சிஷ்யனாக எலிசா மாறினார். சாமுவேலுக்கு வழிகாட்டியாக ஏலி இருந்தார், சாமுவேல் மாபெரும் தீர்க்கத் தரிசியானார்.
இளைஞர்கள் தங்களுடைய வழிகாட்டியாக ஒரு நல்ல இறை மனிதரை தேர்ந்தெடுத்தால் அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் சரியான வழியில் செல்லும். இறைப்பற்றில் இளைஞர்கள் வளர அவர்களுக்கு ஒரு நல்ல ஆன்மிக வழிகாட்டியை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். இல்லையேல் அவர்கள் உலகப் பிரபலங்களை தங்கள் வழிகாட்டியாய் அமைத்து ஆன்மிக பாதையை விட்டு விலகி விடுவார்கள்.
- நல்லபொழுதுபோக்கு !
பொழுதுபோக்கும் இறைப்பற்றை வளர்க்க முடியும். ஒரு மனிதனுடைய வாழ்க்கை மன அழுத்தங்கள் இல்லாத வாழ்வாய் அமைய இந்த பொழுது போக்கு பெருமளவில் கை கொடுக்கும். உள்ளம் அமைதியான நீரோடையாய் இருக்கும் போது அங்கே தவறான சிந்தனைகள் எழாது. நல்ல ஒரு பொழுது போக்கைத் தேர்ந்தெடுத்தால் அது இளைஞர்களுடைய இறைப் பற்றை ஆழமாக்கும்.
இன்றைக்கு யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என்றெல்லாம் இளைஞர்களின் வாழ்க்கை நீச்சலடிக்கிறது. அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வரவேண்டுமெனும் அவசியம் இல்லை. அந்த இடங்களில் எல்லாம் அவர்கள் இறைவனுக்கு ஏற்புடைய செயல்களைச் செய்ய வழிகாட்டலாம். யூடியூப் வீடியோக்களோ, இன்ஸ்டா ஸ்டோரிகளோ கிறிஸ்தவ மதிப்பீடுகள் சார்ந்ததாக இருக்கும் போது, அவர்களுடைய பொழுது போக்கே பொழுதை ஆக்கும் ! இசையோ, இலக்கியமோ, நாடகமோ, புகைப்படமோ – எது விருப்பமோ அதில் இறைவனைப் பிரதிபலிக்க முடியும்
5 நல்லசெயல்கள் !
நல்ல செயல்களை சிறுவயதிலிருந்தே பழக்க வேண்டும். வித்தியாசமான அனுபவங்களை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உதாரணமாக , தினமும் நாம் சந்திக்கும் மனிதர்களில் நமக்கு பரிச்சயமே இல்லாத ஒரு நபருக்காக ஒவ்வொரு நாளும் செபிக்கலாம். அந்த நபர் நாம் பேருந்தில் சந்தித்த முதியவராய் இருக்கலாம், சாலையோரம் உட்கார்ந்திருந்த இளைஞராய் இருக்கலாம், கடந்து சென்ற ஆம்புலன்சில் இருந்த நபராய் இருக்கலாம், தலைவிரி கோலமாய் ஒடிய ஒரு பெண்ணாய் இருக்கலாம். பெயர் தெரியாத அந்த ஒரு மனிதருக்காக உருக்கமாய் செபித்தால் அது மறைவான ஆசீர்வாதமாய் நமக்குள் நிரம்பும். பிறருக்காய் வாழும் வாழ்க்கை இறைவனின் இதயத்தைத் தொடும்.
உண்மையான அன்பு என்பது கொடுப்பதில் இருக்கிறது என்பதைப் பழக்கலாம். கொடுத்தல் என்பது காசுகளைக் கொடுப்பது மட்டுமல்ல. நேசத்தோடு பேசுகின்ற ஒரு வார்த்தை கூட மேலானதே. கரிசனையோடு கேட்கின்ற ஒரு புலம்பல் கூட உயர்வானதே. நேரம், உழைப்பு, பணம் என எது நம்மிடம் இருக்கிறதோ அதை அடுத்தவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எது இல்லையென்றாலும் ஒரு புன்னகையை நீங்கள் நிச்சயம் கொடுக்க முடியும். அந்தப் பழக்கத்தை உருவாக்கலாம்.
இளைஞர்களின் வாழ்க்கை செம்மையாகும்போது
இறை சமூகம் செம்மையாகிறது !
இறை சமூகம் செம்மையாகும் போது
மனித உறவுகள் செழுமையாகின்றன
*
சேவியர்
( தேசோபகாரி )