ந 1 : அப்பா கண்டிப்பா மன்னிச்சுடுவாராடா ?
ந 2 ; என்ன சந்தேகம் ? அப்பாக்கள் எப்பவுமே மன்னிக்கிறவங்க தான்
ந 1 : இல்ல.. நான் ஊரை விட்டு ஓடி வந்தவன்…
ந 2 : தெரியும்
ந 1 : ஊரை விட்டு ஓடி வந்தப்போ ஊரே அப்பாவையும், அம்மாவையும் கிண்டல் பண்ணிச்சு.. எவளையோ இழுத்துட்டு ஓடிட்டான்னு.. ஊர்ல நிமிந்து நின்ன அப்பா கூனிக் குறுகிட்டாரு..
ந 2 : ம்ம்.. சொல்லியிருக்கே..
ந 1 : வரும்போ.. தங்கச்சி கல்யாணத்துக்காக அம்மா சேத்து வெச்சிருந்த நகையை எல்லாம் எடுத்துட்டு ஓடினேன்.. கல்யாணமே நின்னு போயிருக்கும்….
ந 2 : ம்ம்… அதையும் சொல்லியிருக்கே
ந 1 : இப்போ எல்லாமே இழந்து நிக்கறேன் ( உன்னால தான் தங்குறதுக்காச்சும் ஒரு இடம் இருக்கு ) .. இந்த நிலமைல போனா அவரு ஏத்துப்பாருன்னா நினைக்கிறே…
ந 2 : கண்டிப்பாடா.. எல்லா பொருளையும் விட அன்பு உயர்ந்தது
ந 1 : சினிமால பாக்கற மாதிரி பெரிய ஆள் ஆகி, பெரிய கார்ல போய் இறங்கி கட்டுக்கட்டா பணத்தை அப்பாக்கு குடுக்கணும்ன்னு நினைச்சேண்டா
ந 2 : சினிமா எப்பவும் கனவு தாண்டா தரும்.. நிஜம் அவளோ ஈசி இல்லை
ந 1 : ஹீரோவா போக நினைச்சவன், சீரோவா போறதுக்கு பேசாம…
ந 2 : டேய்.. லூசு மாதிரி பேசாதே… உனக்கு கெட்ட குமாரன் கதை தெரியும் தானே… அப்பாவோட சொத்தையெல்லாம் வித்து, இழந்து ஒரு வேலைக்காரனா ஏத்துப்பீங்களான்னு கேட்டு வந்தான். அப்பா என்ன செய்தாரு ? எல்லாத்துலயும் பெஸ்டை குடுத்து அவனை ஏத்துகிட்டாரு
ந 1 : அதெல்லாம் பைபிள் கதைடா
ந 2: இயேசு அப்படி தானேடா… நாம மன்னிக்கவே முடியாத பாவம் செஞ்சிருக்கோம்.. ஆனா அவரு மன்னிச்சு ஏத்துக்கலையா
ந 1 : நீ சொல்லும்போ ஆறுதலா தான் இருக்கு
ந 2 : திருந்தி வரணும், திரும்பி வரணும்ன்னு தாண்டா.. எல்ல அப்பாவும், இயேசப்பாவும் விரும்புவாங்க… நீ கடவுள் கிட்டே மன்னிப்பு கேட்டு உன் அப்பா கிட்டே போடா…
ந 1 : எனக்கென்னவோ தைரியமே வரலைடா…
ந 2 : அப்போ உன் அப்பா நம்பரையோ,அட்றசையோ எனக்கு குடு. அதையும் தரமாட்டேங்கறே
ந 1 : இல்லடா.. ஐ..மீன்.. எனக்கு…
ந 2 : ஒண்ணும் யோசிக்காதே.. இட்ஸ் கிறிஸ்மஸ் சீசன்.. நம்மளோட பாவத்தின் அளவைப் பாத்து இயேசு நம்மை ஏத்துக்கல, அவரோட அன்பின் அளவை வெச்சு தான் நம்மை ஏத்துக்கறாரு..
ந 1 : சோ… என்ன சொல்ல வரே
ந 2 : நீ உன் பக்கத்துல இருந்து எல்லாத்தையும் பாக்கறதை நிறுத்திட்டு.. உன் அப்பா பக்கத்துல இருந்து பாக்க ஆரம்பி…. அப்போ தான் உனக்கு எல்லாம் புரியும்
ந 1 : ம்ம்.. நான் அப்படி யோசிச்சதே இல்லடா… லெட் மி திங்க்..
( சற்று நேரத்துக்குப் பின் இருட்டு…. )
போன் : ஹலோ…. அஅ…அப்பா….
அப்பா : டேய்.. மகனே எங்கடா இருக்கே.. நல்லா இருக்கியா..ஒண்ணும் பிரச்சினை இல்லையே… ஏதாச்சும் பணம் தேவைப்படுதா… வசதியா இருக்கியா…. எங்கே இருக்கேன்னு சொல்லுப்பா.. நான் உடனே வரேன்… நீ ..நீ இங்க வரவேண்டாம் பிரச்சினை இல்ல.. உன்னை ஒரு தடவை வந்து பாத்துக்கறேன்..
போன் : அப்பா… ( பையன் விசும்புகிறான் )
பின் குரல் : என்னிடம் வருபவர்களை புறம்பே தள்ளிவிடுவதில்லை என்கிறார் இயேசு