
பைபிளை திறந்தவுடன் தெரிகின்ற முதல் நூல் ‘தொடக்க நூல்’ அதன் முதல் சில வரிகளிலேயே நீரைக் குறித்த பதிவு இருக்கிறது. அப்படியே நூலின் கடைசிப் பக்கத்தைப் புரட்டினால் அதில், ‘திருவெளிப்பாடு’ நூல் தெரியும். அங்கும் நீரைக் குறித்த பதிவைக் காணலாம். விவிலியத்தின் முதல் பக்கம் தொடங்கி, கடைசி பக்கம் வரை தண்ணீர் ஈரமாகவும், கோபமாகவும் பாய்ந்து கொண்டே இருக்கிறது. அது ஒரு குறியீடாகவும், அடையாளமாகவும், உவமையாகவும், புதுமையாகவும், அழிவாகவும், வாழ்வாகவும் பன்முகம் காட்டி விவிலியத்தின் வார்த்தைகளோடு வாழ்கிறது.
“நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது” எனும் அற்புதமான கவித்துவ வசனத்தோடு தண்ணீரின் பயணம் துவங்குகிறது. தண்ணீர், கடவுள் நடமாடும் இடமாக, கடவுள் அசைந்தாடும் இடமாக மனதுக்குள் காட்சிகளை அழகுற விரிக்கிறது. துவக்கத்திற்கும் முன்னால் தண்ணீர் இருந்தது. அது இறைவனோடு இருந்தது. என்பது அழகியலின் காட்சியமைப்பு. அது தண்ணீரின் முக்கியத்துவத்தை பளிச் என உணர வைக்கிறது.
அப்படியே பைபிளைப் புரட்டி, கடைசிப் பக்கத்துக்கு வந்தால் அங்கும் தண்ணீரைப் பார்க்கலாம். “தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்” என்பதே தண்ணீர் குறித்த கடைசி விவிலிய வார்த்தை. அது முடிவுக்குப் பின்னான வாழ்வைக் குறிக்கிறது. நிலைவாழ்வு என்பது இங்கே தண்ணீரோடு ஒப்பிடப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், துவக்கத்துக்கு முன்பே தொடங்கி, முடிவுக்குப் பின்னும் தொடரும் ஒரு குறியீடாய் நீர் இருக்கிறது. அதாவது இருத்தலின் குறியீடு.
விவிலிய நிகழ்வுகள் நடைபெற்ற மத்திய கிழக்கு நாடுகளெல்லாம் தண்ணீரை தங்கத்தை விட அதிகமாய் போற்றியவை. மழை பெய்தால் தான் வாழ்வு. அல்லது ஊற்று இருந்தால் தான் உயிர் எனும் சூழலே அங்கு நிலவியது. தண்ணீரின் வருகை என்பது இறைவனின் தருகை என்பதாகவே பார்க்கப்பட்டது. மிகவும் முக்கியமானதாக, மிகவும் போற்றத்தக்கதாக தண்ணீர் விவிலியத்தில் பதிவு செய்யப்பட அதுவும் ஒரு காரணம்.
மிக முக்கியமான நிகழ்வுகளிலெல்லாம் தண்ணீர் தவறாமல் இடம்பெறுவதை விவிலியத்தில் கண்டு கொள்ளலாம். “டென் கமான்ட்மென்ட்” படம் பார்த்திருப்பீர்கள். மாபெரும் விடுதலை வீரரான மோசே எகிப்திலிருந்து இஸ்ரேல் மக்களை மீட்டு வரும் நிகழ்வு அதில் இடம்பெற்றியிருக்கும். சுமார் இருபது இலட்சம் மக்கள் உற்சாகக் குரலுடன், அடிமைச் சங்கிலிகளை உடைத்து, தங்கள் பொருட்கள், கால்நடைகளுடன் எகிப்தை விட்டு வெளியேறிய மாபெரும் நிகழ்வு அது. அதில் எல்லோரைடைய கவனத்தையும் ஈர்க்கின்ற ஒரு காட்சி இரண்டாய்ப் பிளந்திருக்கும் செங்கடல் நடுவே பெருந்திரளான மக்கள் நடந்து செல்வது.
மோசேயும் மக்களும் தண்ணீரைக் கடந்து செல்ல, பிந்தொடரும் எகிப்தியப் படைகள் தண்ணீருக்குள் மூழ்கிவிடுகின்றனர். அடிமைகள் விடுதலையாகின்றனர். விடுதலையாய் வாழ்ந்தவர்கள் தண்ணீருக்குள் அடங்கிவிடுகின்றனர். இங்கே, தண்ணீர், மிகப்பெரிய விடுதலையின் அடையாளமாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அப்படியே புதிய ஏற்பாட்டில் இயேசுவின் காலத்தில் நுழைந்தால், ‘திருமுழுக்கு’ எனும் விஷயத்தைப் பார்க்கலாம். தண்ணீரில் மூழ்குவதை புதிய வாழ்வுக்குள் நுழைவதன் அடையாளமாய் திருமுழுக்கு பிரகடனப்படுத்துகிறது. செங்கடலை மக்கள் கடந்தது அடிமை வாழ்விலிருந்து பெற்ற விடுதலை. திருமுழுக்கில் மக்கள் நுழைவது பாவ வாழ்க்கையை பெறுகின்ற விடுதலை. தண்ணீர் விடுதலையின் குறியீடு.
நோவாவின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். குறைந்தபட்சம் நோவா ஒரு பேழையைச் செய்தார் எனும் செய்தியாவது தெரிந்திருக்கும். விஷயம் இது தான். உலகில் பாவம் நிரம்பி வழிகிறது. கடவுள் பூமியை அழிக்க முடிவெடுக்கிறார். நோவாவிடம் ஒரு பேழையைச் செய்யச் சொல்கிறார். நோவா நீண்ட நெடிய வருடங்கள் அமர்ந்து அந்த பேழையைச் செய்கிறார். உலகில் பெருமழை பெய்கிறது. நீரின் கால்களுக்குள் பூமி சமாதியாகிறது. சர்வமும் மூழ்கிப் போகின்றன. நோவாவின் பேழைக்குள், நோவாவின் குடும்பமும், ஐந்தறிவு ஜீவிகளும் காப்பாற்றப்படுகின்றனர்.
பெருமழையின் பிரவாகம் பூமியை மூடி நர்த்தனம் ஆடியது. மலைகளின் தலைகளும் நீருக்குள் தலைகவிழ்ந்தன. மனித இனம் அழிந்தது. தண்ணீர் ஒரு அசுரனாய் மாறி வதம் செய்த நிகழ்வாய் நோவாவின் காலத்தைய மழை சித்தரிக்கப்படுகிறது. தண்ணீர் அழிவின் குறியீடு.
கடவுளின் ஆவி தண்ணீரின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தது என துவங்கிய பைபிள், தண்ணீரின் முழு அதிகாரமும் கடவுளின் கையில் இருப்பதை போகிற போக்கில் பதிவு செய்து கொண்டே செல்கிறது. மோசே முலம் கடவுள் தண்ணீரை இரத்தமாக்கினார். பாறையிலிருந்து நீரூற்று பீறிட்டுக் கிளம்பச் செய்தார். கடலை எல்லைக்கோட்டில் அடக்கினார். இயேசு தண்ணீரின் மீது நடந்தார். கொந்தளித்த கடலை ஒற்றை வாக்கால் அடக்கினார். என தண்ணீரின் மீதான கடவுளின் ஆளுகையை விவிலியம் ஒரு மெல்லிய மழைத்துளிச் சரம் போல தொடுத்துக் கொண்டே செல்கிறது. மனிதன் இறை கட்டளைகளை மீறி நடக்கும்போது, இயற்கை இறைவனுக்கு கீழ்ப்படிகிறது என புரியவைக்கிறது பைபிள். தண்ணீர் இறை அதிகாரத்தின் குறியீடு.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு முறை பாலை நிலத்தில் மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். கடைசியில் ஒரு நீர்நிலையில் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் அது கசப்பாய் இருக்கிறது. மோசே ஒரு மரத்தின் கிளையை வெட்டி அதில் போடுகிறார். அந்த நீர் நல்ல சுவையான நீராய் மாறுகிறது. நிராகரிப்பிற்குரிய நீர், வரவேற்புக்குரியதாய் மாறியது. வறண்ட நாவில் ஈரத்தை இறக்குமதி செய்தது. இயேசுவின் காலத்தில் கானா ஊரில் ஒரு திருமணம். அங்கே திராட்சை இரசம் தீர்ந்து விடுகிறது. உதவுங்கள் எனும் விண்ணப்பம் அம்மா மூலம் மகனுக்கு வருகிறது. மகன் இயேசு, கற்சாடிகளில் இருந்த தண்ணீரை திராட்சை இரசமாய் மாற்றுகிறார். தண்ணீர் திராட்சை இரசமாகிறது. வெளியே இருந்த தண்ணீர், பந்திக்கு முன்னேறுகிறது. தண்ணீர் புதுமைகளின் குறியீடு.
விவிலியத்தில் ஒரு கதை உண்டு. நாமான் என்றொரு படைவீரன். அவனுக்கு உடலெல்லாம் தொழுநோய். தொழுநோயாளிகள் நிராகரிக்கப்பட்டவர்களாய் வாழ்ந்து வந்த காலகட்டம் அது. அவர்கள் ‘தீட்டு தீட்டு’ என கத்திக் கொண்டு தான் வீதிகளுக்கும் வரவேண்டும். அவர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாய் தான் வாழவேண்டும் என்பது தூய்மைச்சட்டம். கடைசி நம்பிக்கையாக, இறைவாக்கினர் எலிசாவிடம் வருகிறார் நாமான். எலிசா அவரிடம் யோர்தான் நதியில் மூழ்கி எழும்பச் சொல்கிறார். நாமான் நீரில் மூழ்கி எழும்புகிறார். ஆச்சரியம் நிகழ்கிறது. அவருடைய உடலில் இருந்த நோயெல்லாம் சட்டென மறைய உடல் புத்தம் புதிதாய் மாறுகிறது. மாபெரும் உருமாற்றத்தின் அடையாளமானது தண்ணீர். காலங்கள் கடக்கின்றன. இயேசுவின் காலத்தில் பார்வையிழந்த ஒருவருடைய கண்களில் சகதியைப் பூசிய இயேசு, குளத்தில் சென்று கழுவச் சொல்கிறார். கழுவிய மனிதன் பார்வை பெறுகிறார். இருந்த நோய் மறைந்தது, இல்லாத பார்வை மலர்ந்தது. தண்ணீர் மாற்றத்தின் குறியீடு.
ஆதியில் படைப்பு நிகழ்கின்ற காலகட்டம். “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார் கடவுள். தண்ணீரிலிருந்து உயிரினங்கள் பிறந்து வருகின்றன. தண்ணீரின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் தூய ஆவியானவர். இப்போது, அந்த தண்ணீரிலிருந்து உயிரினங்கள் தோன்றுகின்றன. தண்ணீர் உயிரின் பிறப்பிடமாகிறது. இறைமகன் இயேசு தன்னிடம் விசுவாசம் கொள்ளும் மக்களிடம் வாழ்வளிக்கும் ஊற்று புறப்படும் என்கிறார். நிறைவாழ்வின் அடையாளமாகவும், தூய ஆவியின் அடையாளமாகவும் தண்ணீர் வெளிப்படுகிறது. தண்ணீர் உயிர்களின் தாயாகிறது. பன்னீர்க்குடம் வாழும் சிசுவைப் போல, உலக உயிர்களின் பன்னீர்க்குடமாய் நீர்நிலைகள் சித்தரிக்கப்படுகின்றன. தண்ணீர் படைப்புப் பயணத்தின் உயிர்த்துளி !
தண்ணீர் ஆறுதலின் அடையாளமாகவும் பரிமளிக்கிறது. “ஆண்டவர் என் ஆயன். அமைதியான நீர்நிலைகளுக்கு
எனை அழைத்துச் செல்வார்” என விவிலியம் சொல்வது நமக்கான ஆறுதல். அமைதியற்ற நீர்நிலைகளிலிருந்து ஆடுகள் தண்ணீர் அருந்துவதில்லை. அவற்றின் தாகம் தணிவதில்லை. தண்ணீர் ஆறுதலின் ஊற்று. நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பொழியச் செய்பவராய் கடவுள் சித்தரிக்கப்படுகிறார். அவனிக்கே தூவப்படும் ஆறுதல் அது. இறைவனில் நிலைத்திருப்பவர்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரங்கள் போன்றவர்கள் என்கிறது விவிலியம். தண்ணீர் ஈரத்தின் இருப்பிடம். தண்ணீர் வளங்களின் இருப்பிடம். தண்ணீர் ஆறுதலின் பிறப்பிடம் !
யோர்தான் நதியில் யோவான் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். ‘இது மனமாற்றத்தின் அடையாளம், புதுவாழ்வின் நுழைவாயில்” என முழங்குகிறார். தண்ணீர் உற்சாகமாய் உடலோடு உரையாடிக்கொண்டே கடந்து போகிறது. அப்போது நீருக்குள் இறங்குகிறார் இயேசு. “எனக்கும் திருமுழுக்கு கொடுங்கள்” என்கிறார். தடுமாறுகிறார் யோவான். ‘நெருப்பால் திருமுழுக்கு கொடுப்பவர் நீர். நீரால் பெற என்னிடம் வருகிறீரா ?” என கேட்கிறார். ஆனாலும் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது. நீர்மேல் இருந்தவர், நீருக்குள் நுழைகிறார். விண்ணகம் திறக்கிறது குரல் ஒலிக்கிறது, புறா இறங்குகிறது என காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. யோர்தானில் யார்தான் நிற்கிறார் ?! என கூட்டம் பிரமித்தது. இயேசு தனது பணிவாழ்வை அங்கே துவங்குகிறார். தண்ணீர் பணிகளின் ஆரம்பம் !
ஒரு முறை சீடர்கள் மாலை நேரம் ஒன்றில் அவரை விட்டு விட்டு தனியே படகில் சென்று விடுகின்றனர். இயேசுவோ மலைமேல் ஏறி செபிக்கச் செல்கிறார். பின்னர், நள்ளிரவில் அவர் நீர்மேல் நடந்து படகை நோக்கிச் சென்றார். சீடர்கள், “பேய்” என பயந்து நடுங்கினார்கள். அஞ்சாதீர்கள்.. நான் தான் என அவர் சீடர்களிடம் கூறி அவர்களுடைய பயத்தைப் போக்கி, பிரமிப்பை வருவித்தார் இயேசு. சிறு கல்லையும் கபளீகரம் செய்து விடும் தண்ணீர் இயேசுவின் பாதங்களுக்குக் கீழே தண்ணீர் கம்பளமாய் விரிந்திருப்பதை அவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். தண்ணீர் இறைபணியின் துணைவன்.
ஒருமுறை, யூதரான இயேசு சமாரியாவுக்குச் செல்கிறார். யூதர்களும் சமாரியர்களும் எலியும் பூனையும் போன்றவர்கள். நண்பகல் வேளையில் ஒரு கிணற்றின் அருகே அமர்ந்தார் இயேசு. அப்போது ஒரு சாமாரியப் பெண் அங்கே வருகிறார். அவரிடம் இயேசு “குடிக்க தண்ணீர் கொடு” என கேட்கிறார். அந்தப் பெண் அதிர்ச்சியடைகிறார். யூதரான நீர் சமாரியரிடம் தண்ணீர் கேட்கிறீரே என்கிறார். “இயேசுவோ, வாழ்வளிக்கும் நீரை நான் அளிப்பேன். “ என்கிறார். தண்ணீர் இரு இனங்களின் இடையே தூதுவனாய் நிற்கிறது. தண்ணீர் உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புகிறது. தண்ணீர் இரண்டு எதிரிகளை ஈரக் கரம் கொண்டு இணைக்கிறது. தண்ணீர் உறவின் கைகுலுக்கல் !
விவிலியத்தில் ஒரு அற்புதமான கதை உண்டு. ஏழை செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் சுகமாய் உண்டு குடித்து, நண்பர்களுடன் ஜாலியாக வாழ்ந்து வந்தார். அவரது வீட்டு வாசலருகே லாசர் எனும் ஏழை ஒருவர் இருந்தார். பசியுற்று , நோய்வாய்ப்பட்டு, நாய்கள் வந்து புண்களை நக்குமளவுக்கு கவனிப்பாரின்றிக் கிடந்தார். செல்வந்தரின் வீட்டு உணவின் மிச்சத்தைக் கொண்டு பசியாற்ற விரும்பினார் அவர். காலங்கள் கடந்தன. இருவரும் இறந்தனர். செல்வந்தர் நரகத்தீயில் எறியப்பட்டார். ஏழையோ விண்ணகத்தில் அமர்ந்தார். செல்வந்தர் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
“செல்வந்தனே நீ உலகில் வாழ்ந்தபோது இனிமையாய் வாழ்ந்தாய். ஏழை லாசருக்கு நீ அன்பு செலுத்தவில்லை. இப்போது அவன் இனிமையாய் இருக்கிறான். நீ கஷ்டப்படுகிறாய்.” என அவருக்கு விண்ணகம் பதிலளிக்கிறது. அப்போது செல்வந்தர் தனது தவறை உணர்ந்தார். ஆனால் இனிமேல் இங்கிருந்து மீட்பு இல்லை என்பது அவருக்குப் புரிந்தது. கடைசியாய் ஒரே ஒரு விண்ணப்பம் வைக்கிறார். “ஏழை லாசரின் விரல் நுனியில் ஒரு துளி தண்ணீரை அனுப்புங்கள் என் நாவு குளிரும்” என்கிறார். இந்த பூமியில் வாழும்போது மனிதநேயமற்றவர்களாய் வாழ்ந்தால் நாம் நரகத்தில் தான் அனுப்பப்படுவோம் எனும் செய்தியை இந்த நிகழ்ச்சி அழுத்தமாய் விளக்குகிறது. ஒரு துளி தண்ணீர் என்பது எத்தனை மேன்மையுடையதாய் இருக்கிறது என்பதை இந்தக் கதை நமக்கு புரிய வைக்கிறது. தண்ணீர் சொர்க்கத்தின் சொந்தம்.
மரணத்துக்கு முந்தைய கடைசி இரவு உணவில் இயேசு ஒரு வேலை செய்தார். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து தனது சீடர்களின் பாதங்களைக் கழுவினார். உலகத் துவக்கத்தில் தண்ணீருக்கு மேல் அசைவாடியவர். தண்ணீருக்கு மேல் நடந்தவர். தண்ணீருக்கு மேல் படகில் அமர்ந்து போதித்தவர். இப்போது தண்ணீரை தனது கரங்களில் எடுத்து சீடர்களின் அழுக்குப் பாதங்களைக் கழுவுகிறார். சீடர்கள் பதட்டமடைகின்றனர். இயேசுவோ, ‘நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது தான். பணிவு !’ என்கிறார். தண்ணீர் இறைவனின் விரல்கள் வழியே வழிந்து மனிதரின் பாதங்களை தூய்மையாக்குகிறது. தண்ணீர் பணிவின் குறியீடு.
பிலாத்துவின் முன்னால் இயேசு குற்றவாளியாய் நிறுத்தப்படுகிறார். அவருக்கு சிலுவைச் சாவை தண்டனையாய்த் தரவேண்டுமென கூக்குரலிடுகிறது மதவாதம். இது பொய்க்குற்றச்சாட்டு என்பது ஆளுநர் பிலாத்துவுக்குப் புரிகிறது. ஆனாலும் அவர் இயேசுவை விடுவிக்கவில்லை. தனது பதவிக்கு ஆபத்து வருமோ ? தனது பெயர் களங்கப்படுமோ என அஞ்சுகிறார். எனவே தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என அவர் நழுவிவிடுகிறார். அதற்கு அடையாளமாய் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து தனது கைகளைக் கழுவுகிறார். நீங்களே பாத்துக் கொள்ளுங்கள் என இயேசுவை எதிரிகளிடம் கையளிக்கிறார். இங்கே கைகழுவப்பட்ட தண்ணீர், கடமையிலிருந்தும் நேர்மையிலிருந்தும் தப்பிப்பதைச் சுட்டி நிற்கிறது. தண்ணீர் தப்பித்தலின் குறியீடாகிறது.
விண்ணகத்தின் காட்சி ஒன்று விவிலியத்தின் கடைசிப் பகுதியில் வருகிறது. “வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு,நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது” என்கிறது வசனம். வாழ்வளிக்கும் நீரின் விண்ணக இருப்பை அது குறிப்பிடுகிறது. ஆதி மனிதர்களான ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த ஏதேன் தோட்டத்தில் வாழ்வின் மரம் இருந்தது. வளமாக்கும் நதிகள் பாய்ந்தன. மண்ணக சொர்க்கமாய் அது இருந்தது. விண்ணக தோட்டத்தில் வாழ்வளிக்கும் இறைவன் இருக்கிறார். வாழ்வின் நதி பாய்கிறது. அது விண்ணக மகிமையை விவரிக்கிறது.
இப்படி விவிலியத்தின் பாதை முழுவதும் தண்ணீர் தனது காலடிச் சுவடுகளை பதித்துக் கொண்டே இருக்கிறது. சொல்லப் போனால் விவிலியத்தில் 722 இடங்களில் தண்ணீர் குறிப்பிடப்படுகிறது. இது எதேச்சையான நிகழ்வன்று. தண்ணீரின் மகத்துவத்தையும், தேவையையும், தன்மையையும் முக்கியத்துவப்படுத்தும் நிகழ்வுகளே. ஊற்றப்படும் பாத்திரத்துக்கு ஏற்ப தண்ணீர் தன்னை மாற்றிக் கொண்டே இருப்பது போல, நடக்கின்ற நிகழ்வுகளுக்கு ஏற்ப இறைவன் தண்ணீரைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார். உதாரணமாக, ஒரு நகரைத் தாக்க வேண்டுமெனில் நகருக்கு வருகின்ற தண்ணீரை அடைத்து விடுவது புதுமையான அம்சம். இறைவன் வழங்குகின்ற ஆசீர்வாதங்களையும் தண்ணீரோடு ஒப்பிட்டுப் பேசுவது இன்னொடு அழகியல்.
தண்ணீர்அழுக்கைக்கழுவுவதுபோல, இறைவனுடையவார்த்தைகள்பாவத்தைக்கழுவும்ஆற்றல்படைத்தவைஎனஇறைவார்த்தையோடுதண்ணீர்ஒப்பீடுசெய்யப்படுகிறது. மான்கள்நீரோடையைத்தேடிஓடுவதுபோலஎன்உள்ளம்இறைவனைத்தேடுகிறதுஎனதண்ணீர்இறைதேடலோடுஒப்பீடுசெய்யப்படுகிறது. ஒருவன்தண்ணீராலும்தூயஆவியாலும்பிறந்தாலொழியவிண்ணகஅரசில்நுழையமுடியாதுஎனதண்ணீர்இறைசங்கமத்தோடுஒப்பீடுசெய்யப்படுகிறது.
அதேபோல, ‘சின்னஞ்சிறியசகோதரன்ஒருவனுக்குஒருகுவளைதண்ணீர்குடிக்கக்கொடுப்பவனுக்கும்கைமாறுகிடைக்கும்‘ எனமனிதநேயத்தைஊக்குவிக்கவும்இயேசுதண்ணீரைப்பயன்படுத்துகிறார். எல்லாவற்றுக்கும்மேலாக, இறைவனேதன்னை “பொங்கிவழிந்தோடும்நீரூற்று” எனஅழைத்துதண்ணீரைஉச்சத்தில்வைக்கிறார்.
எனவேதான்சொல்கிறேன். நீரின்றிஅமையாதுபைபிள்