Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்

27
தானியேல்

Image result for book of daniel

விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம்.

இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட்சியில் இருக்கிறார்.

தானியேல் பாபிலோனில் இறைவனுக்கு சாட்சியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார், அங்குள்ள மக்களையும் இறைவனின் அருஞ்செயல்களைக் காண வைக்கிறார். மக்கள் இறைவனை நாடி வர காரணமாகிறார் என்பது இந்த நூலின் ஒரு வரிச் செய்தி எனலாம்.

எபிரேய மொழியிலும், அரேமிய மொழியிலும், கிரேக்க மொழியிலும் என மூன்று மொழிகளில் கலந்து எழுதப்பட்ட நூல் தானியேல். விவிலியத்தில் மொத்தம் 735 எதிர்கால தீர்க்கதரிசனங்கள் உண்டு. அதில் 166 தானியேல் நூலில் இடம்பெற்றிருக்கிறது என்பது வியப்பான விஷயம். இதில் பெரும்பாலானவை குறியீடுகள்.

கிமு 605, 606 களில் தானியேல் பாபிலோனுக்கு கொண்டு வரப்படுகிறார். அரசவையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரும் அவருடைய மூன்று நண்பர்களும் அங்கே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு பாபிலோனிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயர்களை மாற்றிக் கொண்டாலும் இறைவனை மாற்றிக் கொள்ளவில்லை அவர்கள். இறைவன் தந்த கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்கின்றனர்.

இந்த நூல் தானியேலின் 75 ஆண்டு கால வாழ்க்கையையும், இஸ்ரேல் மக்களின் 440 ஆண்டு கால வரலாற்றையும் பதிவு செய்கிறது. தானியேல் நூலில் பன்னிரண்டு அதிகாரங்கள் உள்ளன. முதல் ஆறு அதிகாரங்களும் எளிமையாகவும், வியப்பூட்டும் அற்புதங்களாலும் நிரம்பியிருக்கின்றன.

ஒரு நிகழ்வில் மன்னன் நெபுகத்நேசர் ஒரு கனவு காண்கிறார். பொதுவாக கனவுக்கு விளக்கம் கேட்கத் தான் அறிஞர்களை அழைப்பார்கள். இங்கே கொஞ்சம் வித்தியாசமாக மன்னன் ஒரு கட்டளை இடுகிறார். அறிஞர்கள் மன்னர் கண்ட கனவையும் சொல்ல வேண்டும், அதன் பலனையும் சொல்ல வேன்டும். யாராலும் விடுவிக்க முடியாத இந்தப் புதிரை தானியேல் விடுவித்தார். கனவையும் சொல்லி அதன் பலனையும் அவர் விளக்கினார். அந்தக் கனவு கடவுளால் நெபுகத்நேசருக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை. அரசுகளை அமைப்பதும், கலைப்பதும் என்னால் ஆகும் என்பதை இறைவன் இந்த கனவின் மூலம் மன்னருக்குப் புரிய வைக்கிறார்.

இன்னொரு நிகழ்வில், மன்னன் தன்னுடைய பொற்சிலை ஒன்றை வடிக்கிறான். அது 90 அடி உயரமும், ஒன்பது அடி அகலமும் உடையது. அதை மக்கள் எல்லோரும் வணங்க வேண்டும் என்பது அரச கட்டளை. எல்லோரும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுகிறார்கள். ஆனால் தானியேலின் நண்பர்கள் “சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ” ஆகியோர் மன்னனை வணங்காமல் கடவுளை மட்டுமே வணங்குகின்றனர். அதனால் கோபமுற்ற மன்னன் அவர்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பை வழங்குகிறார். அவர்களோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

வழக்கத்தை விட ஏழு மடங்கு சூடான நெருப்புச் சூளையில் அவர்கள் எறியப்பட்டனர். அவர்களை நெருப்பில் எறியச் சென்றவர்கள் அந்த வெப்பத்தில் கருகி இறந்தனர். ஆனால் நெருப்புக்குள் விழுந்தவர்களோ நெருப்பின் நடுவே இறைவனோடு உலவினார்கள். அதிர்ந்து போன மன்னன், இவர்களின் கடவுளே உண்மைக் கடவுள் என பிரகடனம் செய்தான்.

இன்னொரு கனவில் ஒரு மிகப்பெரிய மரம் வானளாவ வளர்ந்து நிற்கிறது. எல்லா வித விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அது நிழலும், கனியும் தருகிறது. அது பின்னர் கடவுளின் தூதனால் வெட்டி வீழ்த்தப்படுகிறது. ஆனாலும் அதன் அடிமரம் மட்டும் விட்டு வைக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகள் அது அப்படியே இருக்கும் என உரைக்கப்படுகிறது. அதன் விளக்கத்தையும் தானியேலால் மட்டுமே கூற முடிந்தது.

கனவின் படி மன்னனே அந்த மரம். மன்னன் வீழ்வான். ஏழு ஆண்டுகள் அவன் விலங்கைப் போல அலைவான். புல் தின்று, பனியில் நனைந்து ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவனாய் வாழ்வான். ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அரசு அவனுக்குக் கிடைக்கும். தானியேலின் விளக்கத்தின் படியே அனைத்தும் நடந்தன.

இன்னொரு முக்கியமான நிகழ்வில் மன்னனை வழிபட மறுத்த தானியேல் சிங்கத்தின் குகையில் வீசப்படுகிறார். அப்போது மன்னனாய் இருந்தவர் தாரியு. தானியேலின் வயது 90 ! தானியேல் சிங்கத்தின் குகைக்குள் அமைதியாய் துயில்கிறார் சிங்கங்கள் அவரை எதுவும் செய்யவில்லை. மறுநாள் எல்லோரும் வியப்படைகின்றனர். தானியேலின் மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்போது குகையில் எறியப்படுகின்றனர். தரையை அடையும் முன் சிங்கங்கள் அவர்களைக் கவ்விக் கிழிக்கின்றன !

இரண்டாம் பாகமான ஏழு முதல் 12 வரையிலான அதிகாரங்கள் கொஞ்சம் கடினமான குறியீடுகளால் ஆனது. அவை மிகப்பெரிய இறையியல் சிந்தனைகளும், துல்லியமான எதிர்கால தீர்க்கத்தரிசனங்களும் அடங்கியது.

மொத்தத்தில், தானியேல் நூல் இறைவனின் வலிமையையும், திட்டங்களையும் விளக்கும் ஒரு அற்புதமான பெட்டகம்.

Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்

Image result for book of Ezekiel

அதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் எசேக்கியேல் என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான்.

எசேக்கியேல் எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் நாற்பத்தெட்டு அதிகாரங்களும், 1273 வசனங்களும், 39407 வார்த்தைகளும் அமைந்துள்ளன.

எசேக்கியேல் நூலின் சில பகுதிகள் மிகவும் பிரபலமானவை. உதாரணமாக உலர்ந்த எலும்புக் கூடுகள் எசேக்கியேல் இறைவாக்கு உரைத்த போது உயிர்பெற்று எழுந்த புதுமை நிகழ்வு. அதே போல, “பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள்” எனும் வசனமும் மிகவும் பிரபலமானது.

எசேக்கியேல் நூலை முழுமையாகப் படித்தால் இறைவனின் அன்பு நூல் முழுவதும் இழையோடுவதைக் காண முடியும். நமது வேண்டுதல்களுக்கு அவர் எப்படி செவிகொடுக்கிறார். அவர் எப்படி நம்மை அரவணைக்கிறார். நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார், போன்றவற்றையெல்லாம் புரிந்து கொள்ளவேண்டுமெனில் எசேக்கியேல் நூலை நாம் முழுமையாய் வாசிக்க வேண்டும்.

பன்னிரண்டு கோத்திரங்களான இஸ்ரேலின் பத்து கோத்திரங்கள் வடக்கே “இஸ்ரேல்” என்றும் இரண்டு கோத்திரங்கள் தெற்கே “யூதா” என்றும் எல்லை பிரித்து ஆட்சியமைத்து வந்தன. அதில் இஸ்ரேல் நாடு இறைவாக்கினர்களின் வார்த்தைகளை நிராகரித்து பாவத்தின் மேல் பாவம் செய்து குவித்தது. எனவே அவர்கள் கடவுளால் கைவிடப்பட்டு அசீரியர்களால் நாடுகடத்தப்பட்டனர்.

தென் நாடான யூதா இறைவனோடு நெருங்கியும், விலகியும் வாழ்ந்து வந்தது. பிற்காலங்களில் அதுவும் இறைவனை விட்டு விலகி வேற்று தெய்வங்களின் காலடியில் விழுந்தது. எசாயா போன்ற பெரிய இறைவாக்கினர்களின் வார்த்தைகளும் அவர்களது இதயத்தில் விழவில்லை.

எசேக்கியேல் இறைவாக்கினரும் கடைசி காலத்தில் யூதாவில் இறைவாக்கு உரைத்தார். ஆனால் அவரது வார்த்தைகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. யூதா பாவத்தில் மூழ்கியது. அவர்கள் பாபிலோனியரின் கைகளில் சிக்கிக் கொண்டு, பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

கடவுள் எசேக்கியேலிடம், ‘மக்கள் கேட்கமாட்டார்கள், மனம் மாற மாட்டார்கள், உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து இறைவாக்கு உரைக்க வேண்டும் என கட்டளை கொடுத்திருந்தார். எனவே மக்கள் இறைவார்த்தையைக் கேட்காமல் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்துக் கொண்டபோதும் எசேக்கியா தொடர்ந்து இறைவாக்குரைத்தார்.

பாபிலோனுக்கு மக்கள் நாடுகடத்தப்பட்ட காலகட்டத்தில் பாபிலோன் பகுதியில் இருந்து இறைவாக்குரைத்தார். எனினும் தொலைவில் இருந்த எருசலேமில் என்ன நடக்கிறது என்பதை தீர்க்கத்தரிசனமாய் காணும் வரம் அவருக்கு இருந்தது. ஒருமுறை ஒரு மனிதர் எருசலேமில் கீழே விழுந்து இறந்து போவதைக் காட்சியாகக் கண்டார், அதே நேரத்தில் அந்த மனிதர் அதே போல இறந்தும் போனார்.

நிகழ்காலத்தை மட்டுமல்லாமல் எதிர்காலத்தைக் காட்சிகளாய் காண்பதிலும் எசேக்கியேல் இறையருள் பெற்றிருந்தார். பைபிளில் மொத்தம் 735 எதிர்கால தீர்க்கத்தரிசனங்கள் உண்டு. அதில் 593 எதிர்கால தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறிவிட்டன. இந்த தீர்க்கத்தரிசனங்களில் பெருமாலானவை இருப்பது எசேக்கியேல் மற்றும் தானியேல் நூல்களில் தான்.

எசேக்கியேலின் இறைவார்த்தைகள் மூன்று கட்டங்களாக வருகின்றன. அவருடைய முப்பது வயதுக்கும், முப்பத்து மூன்று வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் முதல் இறைவாக்கு காலம் வருகிறது. எருசலேமின் அழிவு தான் அதன் முதன்மையான விஷயமாய் இருக்கிறது. மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் பாடம் தொடர்ந்து உரைக்கப்படுகிறது. அதன்பின் யூதா பாபிலோனின் ஆட்சிக்குள் அடங்கிவிட்டது.

அடுத்த கட்டமான இறைவாக்கு அவரது 36, 37 வயதுகளில் வருகிறது. இப்போது ஏருசலேமைச் சுற்றி இருக்கின்ற நாடுகளைக் குறித்தும் அவர் இறைவாகு உரைக்கிறார். அந்த காலகட்டத்துக்குப் பின் இறைவன் அவரை இறைவாக்கு உரைக்க நீண்டகாலம் அனுமதிக்கவில்லை.

மூன்றாவது கட்டமாக அவரது 50 வது வயதில் இறைவாக்கு உரைக்க ஆரம்பித்தார். மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் என்பதே அவரது அந்த செய்தியின் அடிப்படை. வறண்டு எலும்புக் கூடாய் கிடக்கும் மக்கள் மீண்டும் உயிர் பெற்று எழவேண்டும் எனும் செய்தி அறிவிக்கப்பட்டது. எருசலேம் தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதைக் குறித்த இறைவாக்கும் அவரிடம் இருந்தது. ஆனாலும் அவர் அதைக் காணுமுன் இறந்து விட்டார்.

மக்கள் சிலைவழிபாடு செய்வதை எதிர்த்தார். நாடு முழுவதும் ஏழைகள் சுரண்டப்படுவதைக் கண்டு கடுமையான இறைவாக்குகளை உரைத்தார். அவர்களுடைய நன்றி இல்லாத நிலமையையும் கடுமையாகக் கடிந்து கொண்டார்.

இறைவன் தீர்ப்பிடுவார் என்பதையும், இறைவன் பழிவாங்குவார் என்பதையும், மீண்டும் மக்களை ஒருங்கிணைப்பார் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது. விவிலியத்தின் கடைசி நூலான திருவெளிப்பாடு நூலுக்கான சாவி இந்த எசேக்கியேல் நூலில் இருப்பதாக இறையியலார் குறிப்பிடுகின்றனர்.

Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு 25 : புலம்பல்

25
புலம்பல்

Image result for book of Lamentations

எரேமியா எழுதிய நூல் புலம்பல். ஐந்து எபிரேயக் கவிதைகளால் ஆனது. துயரத்தின் விளிம்பில் ஒலிக்கின்ற பாடல்களாக இந்தக் கவிதைகள் இருக்கின்றன. இவை எருசலேமின் அழிவையும், மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட துயரத்தையும் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன.

விவிலியத்தில் உள்ள நூல்களிலேயே கண்ணீரின் ஈரத்தால் நிரம்பியிருக்கும் நூல் இது தான். ஒரு தேசத்தின் நிலைகண்டு கண்ணீர் வடிக்கின்ற ஒரு இறைவாக்கினரின் வலிகள் இதில் வரிகளாய் இருக்கின்றன.

இந்த நூலில் உள்ள சில செய்திகள் நமது உயிரையும் உலுக்கி எடுக்கும் வலிமை கொண்டவை. இஸ்ரேல் முற்றுகையிடப்பட, வாழவே வழியில்லாமல் தாய் சொந்த குழந்தைகளையே கொன்று தின்கின்ற செய்தியை வாசித்து விட்டு அதிர்ச்சியடையாமல் கடந்து செல்ல முடியாது.

எரேமியா ஒரு கவிஞர். எனவே துயரத்தையும், மக்களின் வலியையும், இயலாமையையும் கண்ணீரால் பதிவு செய்கிறார். இவருக்கு அழும் இறைவாக்கினர் எனும் பட்டப்பெயரும் உண்டு.

இந்த நூலின் பாடல்கள் எருசலேமின் துன்பம், எரிசலேமின் தண்டனை, தண்டனைத் தீர்ப்பும் நம்பிக்கையும், வீழ்ச்சியடைந்த எருசலேம், இரக்கத்திற்கான இறைவேண்டல் எனும் சிந்தனைகளில் அமைந்துள்ளன. எபிரேய எழுத்துகள் இருபத்து இரண்டு. அதன் அடிப்படையில் இருபத்திரண்டு வசனங்கள் என பாடல்கள் அமைந்துள்ளன. ஒருபாடல் மட்டும் 66 வசனங்களோடு இருக்கிறது. ஒவ்வொரு எழுத்துக்கும் மூன்று வசனங்கள் எனும் கணக்கில்.

அழுகையையும், கண்ணீரையும் விவிலியம் ஊக்கப்படுத்தியே வந்திருக்கிறது. கண்ணீர் சரணடைதலின் அடையாளம், உடைதலின் அடையாளம், உணர்வின் அடையாளம். எபிரேயச் சிந்தனை கண்ணீரை ஆதரித்தது. கிரேக்கச் சிந்தனையே கண்ணீரை அவமானமாக்கியது.

இந்த ஐந்து பாடல்களும் இலக்கிய நயத்தோடும், ஆன்மீக புரிதலோடும், உணர்வின் மொழியோடும் வடிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாடல் “அவள்” எனும் கருப்பொருளில் அமைகிறது. நகரை அவள் என்றும், நகரிலுள்ள மக்களை ‘எருசலேம் மகளிர்’ என்றும் இந்த பாடல் குறிப்பிடுகிறது.

இரண்டாவது பாடல், “அவன்” எனும் பெயரில் அமைகிறது. இந்த துயரங்களுக்கெல்லாம் காரணமான அவன் யார் ? இறைவனை மையப்படுத்தும் பாடல் இது.

மூன்றாவது பாடல் நான், எனது என தன்னிலைப்படுத்தும் பாடல் . இது எருசலேமைப் பற்றிப் பாடுகிறது. நான்காவது பாடல் “அவர்கள்” எனும் மையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பாடல் நாம், நமது எனும் பொருளில் அமைந்துள்ளது.

முதல் பாடல் அழிந்து கிடக்கின்ற நகரையும் நகரின் மக்களையும் பார்க்கிறது. பாவம் தான் இந்த அழிவின் காரணம். அது அவரை இன்னும் காயப்படுத்துகிறது. பாலை நிலம் போல வெற்றிடமாய்க் கிடக்கும் நகர் அவரை கண்ணீர் விட வைக்கிறது.

இரண்டாவது பாடல் இறைவனின் கோபம் கொதித்தெழுவதைப் பற்றிப் பாடுகிறது. கடவுள் பொறுமையுடன் காத்திருக்கிறார். ஆனால் மக்களுக்கு அது புரியவில்லை. பாவம் புரிகின்றனர். இனிய வாழ்வை இழக்கின்றனர். கடவுளின் தண்டனையை இந்த பாடல் பேசுகிறது.

மூன்றாவது பாடலை தன்னை மையப்படுத்தி எரேமியா எழுதியுள்ளார். இத்தனையோ மன வருத்தங்களைக் கடவுளுக்குக் கொடுத்தபின்னும் அவர் மக்களை முழுமையாய் அழிக்கவில்லை. அவர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் வேலையை மட்டுமே செய்கிறார் என்பதே அவரது ஆறுதல். அதில் இறைவனின் இரக்கத்தை அவர் கண்டு கொள்கிறார்.

நான்காவது பாடல் மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் சிந்தனையின் அடிப்படையில் இருக்கிறது. ஏதேன் தோட்டத்தின் ஆதாம் ஏவால் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பாவத்தைப் பேசுகிறார். மனம் திரும்புதல் நிச்சயம் தேவை என்பதை புலம்பலாய் வடிக்கிறார்.

ஐந்தாவது பாடல் ஒரு செபம். ஒரு இறைவேண்டல். இறைவனின் இரக்கம் வேண்டுமென இறைஞ்சுகின்ற விண்ணப்பம். இறைவன் மனம் இரங்குவார் எனும் நம்பிக்கை இதில் இழையோடுகிறது.

எரேமியாவும், இறைமகன் இயேசுவும் பல இடங்களில் ஒரே சிந்தனையுடன் செயல்படுவதை அவரது வாழ்க்கையும், எழுத்துகளும் எடுத்துரைக்கின்றன. அதனால் தான் பல நூற்றாண்டுகளுக்குப் பின் “என்னை மக்கள் யார் என சொல்கிறார்கள்” என இயேசு தன் சீடர்களிடம் கேட்டபோது “சிலர் எரேமியா என்கின்றனர்” என்று சீடர்கள் பதில் சொன்னார்கள்.

இருவரும் சொந்த ஊரில் மதிக்கப்படவில்லை, இருவரும் ஆட்டுக்குட்டியோடு ஒப்பிடப்படுகிறார்கள். ஆலயத்தின் புனிதம் கெடுகையில், “இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ” என இருவருமே கூறுகின்றனர்.

இந்த புலம்பல் நூல் பைபிளுக்கு மட்டும் உரியதல்ல. இன்றும் யூதர்கள் அபிப் (ஜூலை) மாதத்தின் ஒன்பதாம் நாள் இந்த முழு நூலையும் தொழுகைக் கூடங்களில் பாடிப் புலம்புவார்கள். காரணம் கிமு 586ல் அதே நாளில் தான் எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது ! வியப்பான இன்னொரு விஷயம் என்னவெனில், அந்த தேவாலயம் புதுப்பிக்கப்பட்ட பின் இரண்டாவது முறையும் இடிக்கப்பட்டது. கிபி 70ல் அதே நாளில் !!!

பைபிள் வியப்பின் நூல், புலம்பல் அந்த வியப்பின் ஒரு துளி.

Posted in Bible Books, Christianity

பைபிள் கூறும் வரலாறு : 24 எரேமியா

24

எரேமியா

Image result for book of jeremiah

விவிலியத்திலுள்ள முக்கியமான இறைவாக்கினர்களில் ஒருவர் எரேமியா. இருந்தாலும் இந்த நூல் எசாயா நூலைப் போல பிரபலமானதாகவோ, பிரியமானதாகவோ இல்லை. காரணம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அச்சுறுத்தலாகவோ, புரிந்து கொள்ளக் கடினமாகவோ, மன அழுத்தம் தரக்கூடியதாகவோ இருக்கின்றன என்பது தான்.

எரேமியா நூல் ஐம்பத்து இரண்டு அதிகாரங்கள் கொண்ட ஒரு பெரிய நூல். நாற்பது ஆண்டு கால இறைவாக்குரைத்தலின் தொகுப்பு இது. ஆங்கிலத்தில் ஜெரமியட் என்றால் துயரத்தின் பாடல் என்று பொருள். இந்த நூலும் ஒரு துயரத்தின் பாடலாய் தான் இருக்கிறது. எபிரேய மொழியில் எரேமியா என்பது கட்டியெழுப்பு என்றும் பொருள்படும், உடைத்தெறி என்றும் பொருள் படும். அவருடைய இறை செய்தியும் அவரது பெயரைப் போலவே இருக்கிறது. “கீழ்ப்படிபவர்களை கடவுள் கட்டியெழுப்புவார், நிராகரிப்பவர்களை கீழே தள்ளுவார்” என்பதே அவரது இறைவாக்கின் மையம்.

இந்த நூலில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. எரேமியாவின் நீண்ட பணிவாழ்வின் காரணமாக அவருடைய போதனைகளில் சில முரணாக மாறுகின்றன. உதாரணமாக பாபிலோனுக்கு எதிரான கடுமையான மனநிலை இவரது ஆரம்ப காலகட்டங்களில் இருந்தது. பிந்தைய காலகட்டங்களில் அவர் பாபிலோனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அந்தந்த கால சூழலுக்கு ஏற்ப இவரது வாக்கை இறைவன் பயன்படுத்தியிருந்தார் என புரிந்து கொள்வதே சரியானது.

இவரது காலம் கிமு ஏழாம் நூற்றாண்டு. மனாசேவின் காலத்தில் இவர் பிறந்தார். மனாசே கொடூரமான மன்னன். தனக்கு எதிராக இறைவாக்கு உரைத்தார் எனும் காரணத்துக்காக இறைவாக்கினர் எசாயாவை படுகொலை செய்தவர் . தனது சொந்தப் பிள்ளைகளையே நரபலி கொடுத்தவன். இவனது ஆட்சியில் தெருக்களெங்கும் இரத்த வாடை வீசியது. அந்த காலகட்டத்தில் பிறந்த எரேமியா யூதாவில் முக்கியமான ஏழு மன்னர்களின் அரசாட்சியில் வாழ்ந்தார்.

எருசலேமிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது இவரது பிறந்த ஊர். பிறக்கும் முன்பே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எரேமியா. தயக்கமும், கோழைத்தனமும் , கூச்ச சுபாவமும் கொண்ட இளைஞனாகவே இவரது வாழ்க்கை இருந்தது. பதின் வயதுகளின் பிந்தைய காலகட்டத்தில் அவர் இறைவாக்குரைக்க ஆரம்பித்தார். இவருக்கு ‘அழும் இறைவாக்கினர்’ எனும் பெயருண்டு. மக்களுக்காக இதயத்தில் கடும் துயரை அனுபவித்தவர் அவர்.

அவரது காலம் கொஞ்சம் சிக்கலானது. வடக்கிலுள்ள இஸ்ரேல் நாடு அசீரியர்களின் கட்டுப்பாட்டில் வந்திருந்த காலம். யூதாவிலும் அத்தகையை ஒரு நிலை வரும் என்பதைக் கடைசியாக உரைத்த இறைவாக்கினர் இவர் தான். ஆபகூக்கு, செப்பனியா, எசேக்கியேல் மற்றும் தானியேல் போன்றவர்களின் காலத்தவர் இவர்.

குயவன் பானை செய்வதன் மூலமாக இறைவன் எரேமியாவுக்குச் சொன்ன ஆன்மீக பாடம் முக்கியமானது. கடவுள் அவரை குயவனின் இடத்துக்குப் போகச் சொன்னார். எரேமியா சென்று பார்த்தார். அங்கே குயவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தார். கையில் சரியாகச் சுழலாத மண் சரியான பானையாக மாறவில்லை. அதை மீண்டும் தரையில் போட்டார் குயவன்.

நல்ல பானை உருவாவதும், மோசமான பானை உருவாவதும் குயவனின் கையிலல்ல. மண்ணின் கையில் தான். மண் தன்னை குயவன் கைக்கு முழுமையாய் ஒப்புக் கொடுத்தால் மட்டுமே அழகான பானையாய் உருமாறும். அதுபோல இஸ்ரேல் மக்கள் தங்களை முழுமையாய் இறைவனின் கையில் ஒப்புக் கொடுக்க வேண்டும் என அவர் போதித்தார்.

அதே போல, சுடப்பட்ட பானை இறுகி விடுகிறது. அதைக் கீழே போட்டு உடைத்த எரேமியா அதன் மூலமும் ஒரு பாடத்தைச் சொன்னார். கடின இதயம் கொண்டவர்களை இறைவன் உடைத்தெறிவார் என்பதே அந்த பாடம்.

இஸ்ரேல் மக்களை இறைவன் கைகழுவி விடப் போகின்ற கடைசி நாட்களில் கூட ஒரு நம்பிக்கையின் ஒளியாய் அவரது எச்சரிக்கையும், அச்சுறுத்தலும், இறைவாக்கும் இருந்தது.

எரேமியாவின் எழுத்துகள் கவிதைகளாய் இருக்கின்றன. இறைவன் மக்களிடம் செய்திகளை உரைநடையாகவும், தனது இதயத்தின் உணர்வுகளைக் கவிதையாகவும் சொல்வது வழக்கம். எரேமியாவின் நூலிலும் அந்த அழகியலைக் காணலாம்.

இவரது நூலில் அழகிய நாடகத் தன்மையும் உண்டு. ஒரு முறை அழுக்கான உள்ளாடை ஒன்றை மண்ணிப் புதைத்து வைத்தார். ஏன் என்று கேட்டபோது இது மக்களுடைய அக வாழ்க்கையைக் குறிக்கிறது என்றார். மக்களின் பாவ வாழ்க்கையை பளிச் என விளக்க இத்தகைய நாடக பாணி போதனையைப் பின்பற்றினார்.

வெளிப்படையான ஆன்மீக வாழ்வு பயனற்றது எனவும், இறைவன் தனித்தனியே மக்களை நியாயம் விசாரிப்பார் எனவும், கடவுள் புதிய உடன்படிக்கையைத் தருவார் எனவும் அவர் சொன்ன இறை செய்திகள் அவரை மற்ற அனைத்து இறைவாக்கினர்களிடமிருந்தும் வேறுபடுத்துகிறது.

இறைவனின் தன்மையையும், அன்பையும் ஆழமாகப் புரிந்து கொள்ள எரேமியா நூல் நமக்கு துணை செய்கிறது.

Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 23 எசாயா

23
எசாயா

Image result for book of songs of isaiah

விவிலியத்திலுள்ள நூல்களில் மிக முக்கியமான தீர்க்கத் தரிசன நூல் எசாயா நூல் தான். 1948ல் சாக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிடைத்த நூல்களில் எசாயா நூலின் பதிப்பு ஒன்றும் இருந்தது. அது கிமு 100 ஐச் சேர்ந்தது. விவிலியத்தில் இடம்பெற்றுள்ள எசாயா நூலிலிருந்து அது வேறுபடாமல் இருந்தது நூலின் நம்பகத் தன்மையை உறுதியாக்கியிருக்கிறது.

எசாயா நூலைப் பிரித்திருப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. நூலில் 66 அதிகாரங்கள் உண்டு. விவிலியத்தில் உள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கையும் 66. ( இணைதிருமறைகள் தவிர ). அந்த அதிகாரங்களும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் 39 அதிகாரங்கள் ஒரு பிரிவு, அடுத்த 27 அதிகாரங்கள் இரண்டாவது பிரிவு. சுவாரஸ்யம் என்னவென்பது புரிந்திருக்கும் ! பழைய ஏற்பாட்டு நூல்கள் 39, புதிய ஏற்பாட்டு நூல்கள் 27 என்பது இந்த அதிகாரங்களின் எண்ணிக்கைகளோடு ஒத்துப் போகிறது.

அது வெறும் எண்ணிக்கைக் கணக்கோடு முடியவில்லை. முதல் முப்பத்தொன்பது அதிகாரங்களில் பழைய ஏற்பாட்டின் சாராம்சத்தையும் அடுத்த இருபத்தேழு அதிகாரங்களில் புதிய ஏற்பாட்டின் சாராம்சத்தையும் நாம் கண்டுகொள்ளலாம். அதிலும் குறிப்பாக ‘குரலொளி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்’ எனும் வார்த்தையோடு இரண்டாவது பாகம் துவங்குவது வியப்பு. அது புதிய ஏற்பாட்டில் இயேசுவை வரவேற்க யோவான் கூறிய வார்த்தைகள் என்பது குறிப்பிடத் தக்கது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், ஒட்டு மொத்த பைபிளின் ஒரு சுருங்கிய வடிவமாக இந்த நூலைச் சொல்லலாம். கிமு 740 க்கும் 680 இடைப்பட்ட காலத்தில் அவர் பணி செய்தார். இவரை மெசியானிக் இறைவாக்கினர், பழைய ஏற்பாட்டின் பவுல், இறைவாக்கினர்களின் சேக்ஷ்பியர் என்றெல்லாம் புகழ்வதுண்டு.

மிகவும் அழகான இலக்கியத்தரத்தோடும், கவிநயத்தோடும் எழுதப்பட்ட நூல் எசாயா. ஆன்மீகச் செறிவும், அழகியலும் கலந்த நூல் இது. இந்த நூலில் 1292 வசனங்களும், 37,044 வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.

எசாயா எனும் பெயருக்கு கடவுள் மீட்கிறார் என்பது பொருள். இயேசு, யோசுவா என்ற பெயர்களைப் போலவே பொருளுடைய பெயர். யூதர்கள் மோசே, எலியா போன்றோரோடு எசாயாவையும் இணைத்துப் பார்க்கின்றனர். இவர் நல்ல ஆன்மீகப் பெற்றோரின் மகனாகப் பிறந்தவர். யோவாஸ் மன்னனின் பேரன். உசியாவின் உடன்பிறவா சகோதரன். நல்ல செல்வமும், படிப்பும், புகழும் உடையவர். ஆன்மீகத்தில் ஆழமாய் இருந்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி வரலாற்றாசிரியர் ஜோசபஸ் குறிப்பிடுகிறார்.

இவரது மனைவியும் ஒரு இறைவாக்கினராய் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருந்திருக்கலாம் என்பது வரலாறு. இறைவனின் புனிதத்தன்மையைப் பார்த்தபின் அவரால் தனது அழுக்குகளை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. உதடுகளை சூடுவைத்துக் கொண்டவர் இவர்.

“யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்” என பேசும் இறைவார்த்தையின் மூலமாக இறைவனின் “மூவொரு தன்மை”யை வெளிப்படுத்தியவர் எசாயா. இறைமகன் இயேசுவின் பிறப்பும், அவரது வாழ்வு, மரணமும் இவரது நூலில் அழகான வெளிப்படுகிறது.

எசாயாவின் காலத்தில் பல முக்கியமான மன்னர்கள் ஆட்சி செலுத்தினார்கள்.அவர்களுக்கெல்லாம் இறைவனின் செய்தியையும், எச்சரிக்கையையும் எசாயா வழங்கினார். உசியா மன்னன் 52 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். நல்லமுறையில் ஆட்சியைத் துவங்கிய அவர் பின்னர் வழி விலகிப் போனார். யோத்தாம் பத்தொன்பது ஆண்டுகள் ஆண்டார். நல்லவராக இருந்த மன்னர்களில் ஒருவர் இவர். ஆகாஸ் இருபது ஆண்டுகள் மோசமான ஆட்சியை நடத்தினார். எசேக்கியா நல்ல ஆட்சியை இருபத்தொன்பது ஆண்டுகள் கொடுத்தவர். மனாசே ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் மோசமான ஆட்சியை வழங்கினார்.
இவர்கள் எல்லோருடைய காலத்திலும் எசாயா வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய நூலின் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. சிலர் இதை இரண்டாம் எசாயா எழுதினார் என்று கூட சொல்வதுண்டு. உதாரணமாக முதல்பாகம் அதிகமான கெட்ட செய்தியைச் சொல்கிறது, இரண்டாம் பாகம் நல்ல செய்திகளை அதிகமாய் பேசுகிறது. முதலாவது பாவம், பழிவாங்குதல் போன்றவற்றைப் பேசுகிறது. இரண்டாவது மீட்பையும், காப்பாற்றுதலையும் பேசுகிறது. முந்தையது நீதியையும், அடுத்தது இரக்கத்தையும் பேசுகிறது. முந்தையது யூகர்களையும் பிந்தையது பிற இனத்தாரையும் பேசுகிறது. முந்தையது நிகழ்காலத்தையும், பிந்தையது எதிர்காலத்தையும் பேசுகிறது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

எசாயா நீண்டகாலம் வாழ்ந்தார் என்பதும், பல காலகட்டங்களில் வாழ்ந்தார் என்பதும், பலவகையான சூழல்களில் அவர் இறைவாக்குரைத்தார் என்பதும் தான் இந்த நூலின் பன்முகத் தன்மைக்குக் காரணம். இறைவனின் தெளிவான வெளிப்பாடை இவர் பெற்றிருந்தார் என்பதற்கு கடைசி இருபத்தேழு அதிகாரங்கள் மிகச் சிறந்த சான்று.

பெரிய இறைவாக்கினர்களில் முதலானவர் என அழைக்கப்படும் எசாயா நூலை அதன் இறைத் தன்மைக்காகவும், நிலைத் தன்மைக்காகவும், இலக்கியத் தன்மைக்காகவும் வாசிக்கலாம்.