Posted in Articles, WhatsApp

பிள்ளைகளை கண்டிக்கலாமா

பயிற்றுவிக்கப்படாத குதிரை
முரட்டுத்தனம் காட்டுகிறது;
கட்டுப்பாடில்லாத மகன்
அடக்கமற்றவன் ஆகிறான்

தம் மகனிடம் அன்பு
கொண்டிருக்கும் தந்தை அவனை
இடைவிடாது கண்டிப்பார்;
அப்போது அவர்
தம் இறுதி நாள்களில்
மகிழ்வோடு இருப்பார்

சீராக் 30 : 8,1

Image result for discipline your children
எனக்கு அப்போது ஐந்து வயது இருக்கும் என நினைக்கிறேன். பக்கத்து வீட்டிலிருந்து நாலணாவை மிக சாதுர்யமாகத் திருடி விட்டேன். என்னுடைய திறமையை நானே மெச்சிக்கொண்டு முதலில் அம்மாவிடம் கொண்டு போய் காட்டினேன்.

“எங்கேயிருந்து எடுத்தே ?” என்று கேட்டார் அம்மா. அப்போது நாலணா என்பது எங்கள் வீட்டில் பெரிய பணம்.

“பக்கத்து வீட்ல இருந்து நைசா எடுத்தேன்”. பெருமிதத்துடன் சொன்னேன்.

பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்த்து நின்ற எனக்கு பளார் பளார் என ரெண்டு அடி தான் கிடைத்தது. அப்படியே தரதரவென இழுத்துக் கொண்டு போய் அந்த வீட்டில் விட்டார்கள்.

“எங்கேயிருந்து எடுத்தியோ அதே இடத்துல வெச்சுட்டு, மன்னிப்பு கேட்டுட்டு வா” என்றார் அம்மா.

என்னுடைய முதல் உழைப்பு வீணாய்ப் போன விரக்தியிலும், முதல் சம்பளம் பயனில்லாமல் போன ஆதங்கத்துடனும் நான் அதைச் செய்து முடித்தேன்.

அன்றைய அந்த அடியும், திருத்தலும் திருட்டு என்பது தவறு என்பதைப் புரிய வைத்தது. அதற்கான அங்கீகாரம் எனது வீட்டில் கிடைப்பதில்லை என்பதும் புரிந்தது.

எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் என் பெற்றோரிடம் ஒன்றோ இரண்டோ தடவை தான் அடி வாங்கியிருக்கிறேன். அந்த தருணங்களே மிக மிக முக்கியமானவை. அவை தான் என்னை திருத்தியிருக்கின்றன. சரியான பாதைக்குத் திருப்பியிருக்கின்றன.

நான் வகுப்பில் முதல் மாணவனாக வரவில்லை என்பதற்காகவோ, பக்கத்து வீட்டுப் பையனை விட குறைவாக மார்க் எடுத்தேன் என்பதற்காகவோ நான் அடி வாங்கியதில்லை. திருடினேன், கீழ்ப்படியவில்லை போன்ற காரணங்களுக்காக மட்டுமே தண்டனை வாங்கியிருக்கிறேன்.

பிள்ளைகளைத் தண்டித்தும், கண்டித்தும் வளர்க்க வேண்டும் என விவிலியம் நமக்கு பல இடங்களில் வலியுறுத்துகிறது. சீராக்கின் நூலும் அதே சிந்தனையையே பிரதிபலிக்கிறது. “தம் மகனை நன்னெறியில் பயிற்றுவிப்பவர் அவனால் நம்மை அடைவார்” என்றும், “உன் மகனுக்கு நற்பயிற்சி அளி; அவனைப் பயன்படுத்த முயற்சி செய். அப்போது அவனது வெட்கங்கெட்ட நடத்தையால் நீ வருந்தமாட்டாய்” என்றெல்லாம் சீராக் நமக்கு சிந்தனைகளை விதைக்கிறது.

பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்துவது எதை நோக்கி என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் நடத்தை, குணாதிசயம், ஆன்மிகம் போன்ற இலக்குகளை நோக்கிய திருத்துதல்களே மிக‌ முக்கியம். நாமோ பல வேளைகளில், நமது விருப்பங்களுக்கு ஏற்ப பிள்ளைகள் வளரவில்லையேல் தண்டிக்கிறோம். நமது சுயநலத்துக்கும், நமது ஈகோவின் நிறைவேறலுக்கும் பிள்ளைகள் ஒத்துழைக்க வில்லையேல் கண்டிக்கிறோம். நமது கனவுகளைச் சுமந்து செல்லும் புரவிகளாய் அவர்கள் இல்லையேல் அடிக்கிறோம்.

பிள்ளைகளை கண்டித்தும் தண்டித்தும் வளர்த்துவோம். அது நமது கோபத்தின் வெளிப்பாடாய் இல்லாமல் அன்பின் வெளிப்பாடாய் இருக்கட்டும். அது அவர்கள் நல்லவர்களாகவும், நன்மை செய்பவர்களாகவும், மனிதநேயம் உடையவர்களாகவும் வளரவேண்டும் எனும் நோக்கத்தோடு இருக்கட்டும்.

*
சேவியர்

Posted in Articles, Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 5 : எண்ணிக்கை

எண்ணாகமம்

Image result for Numbers bible book

விவிலியத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது நூல் எண்ணிக்கை. எபிரேய மொழியில் இந்தநூலின் பெயர் “பெமிபார்’ என்பதாகும். இதற்கு பாலை நிலத்தில் என்பது பொருள். இஸ்ரயேல் மக்களின் பாலை நில வாழ்க்கையைச் சொல்வதால் இந்த பெயர் இடப்பட்டது. ஆனால் கிரேக்க மொழிபெயர்ப்பு செய்தபோது அதன் தலைப்பை ‘அரித்மோய்’ என்று மொழிபெயர்த்தனர். இதற்கு எண்ணிக்கை என்பது பொருள்.  

இந்த நூலில் இரண்டு முறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. துவக்கத்தில் ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. பின்னர் ஒரு தலைமுறை கடந்தபின் மீண்டும் ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது. 

இந்த நூலின் ஆசிரியரும் மோசே தான். விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களும் ‘தோரா’ எனஅழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து நூல்களையும் மோசே தான் எழுதியுள்ளார். 

எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் கடவுள் வாக்களித்த கானான் நாட்டிற்கு நுழையச் சென்றார்கள். ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவராக பன்னிரண்டு பேர் முதலில் ஒற்றர்களாக நாட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சென்று நாட்டை வேவுபார்த்துத் திரும்பினர். நாடு வளத்தின் உச்சமாக இருந்தது. ஆனால் அங்குள்ள மக்கள் வலிமையாய் இருந்தனர். 

காலேபு, யோசுவா என்பவர்களைத் தவிர மற்ற எல்லாருமே உள்ளே செல்வது ஆபத்து, நமக்கு அழிவு நிச்சயம் என அஞ்சினர். கடவுள் தங்களோடு இருப்பதை மறந்தனர். இஸ்ரயேல் மக்களும் அந்த நாட்டுக்குள் செல்ல பயந்து கடவுளுக்கு எதிராகவும், மோசேக்கு எதிராகவும்முணு முணுத்தனர். கடவுள் அவர்கள் மீது கடும் கோபம் கொண்டார்.

இந்தத் தலைமுறையில் இருக்கும் எவனுமே இந்த நாட்டுக்குள் நுழையமாட்டான் என கடவுள் சாபமிட்டார். மக்கள் அதிர்ந்து போய் நாட்டுக்குள் நுழைய முயன்றார்கள். மோசே அவர்களைத் தடுத்தார். இதுவும் கடவுளின் கட்டளையை மீறிய செயலாகி விடும் எனசொல்லி, மக்களைத் தடுத்தார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறினால் பாலை நிலத்தில்அலைந்து திரியத் துவங்கினார்கள். இந்த நூல் மக்கள் சீனாய் மலையிலிருந்து மோவாபின் சமவெளிகளில் வந்து சேர்வதுவரையான நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. 

இந்த நூலிலும் குருக்கள் ஆற்றவேண்டிய பணிகள், லேவியரின் பணிகள், லேவியருக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஊதியம், தூய்மையாக்கும் சட்டங்கள் என பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. கடவுளின் கோபம் இஸ்ரயேல் மக்கள் மேல் இருந்தாலும் அவர்களை கடவுள் பாலை நிலத்தில் பாதுகாத்தார். அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றினார் என இறைவனின் கரிசனையை இந்த நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. 

இந்த நூலில் தான் பிரபலமான பிலயாம் தீர்க்கத் தரிசியின் கதை இடம்பெறுகிறது. இஸ்ரயேல் மக்களைச் சபிக்க வேண்டுமென பாலாக் மன்னன் பிலயாமை அழைக்கிறார். கழுதையில் பிலயாம் வருகையில் கடவுளின் தூதர் வழிமறிக்கிறார்.  பிலயாமின் கழுதை பேசுகிறது. மக்களைச் சபிப்பதற்காக வந்தவர் இறைவனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இஸ்ரயேல் மக்களை மூன்று முறை வாழ்த்துகிறார். 

இந்த நூலிலும் இறைமகன் இயேசுவை மையப்படுத்தும் நிகழ்வுகளின் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பாலை நிலத்தில் பாம்பு கடிபட்டு மக்கள் இறந்து போகின்றனர். அப்படி பாம்பு கடிபட்டவர்கள் பிழைக்க வேண்டுமெனில் வெண்கலத்தில் ஒரு பாம்பைச் செய்து அதை மோசே உயர்த்தில் பிடிக்கவேண்டும் என்கிறார் கடவுள். உயர்த்திப் பிடிக்கப்பட்ட வெண்கலப் பாம்பைப் பார்த்தவர்கள் பிழைத்துக் கொள்கின்றனர். 

புதிய ஏற்பாட்டில் பாம்பு என்பது பாவம் அல்லது சாத்தான் என்பதன் குறியீடு. பாவத்தில் வீழ்ந்தவர்கள் கண்களை ஏறெடுத்து சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கிப்பார்த்தால் மீட்பைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது இது சொல்கின்ற ஆன்மீகப் பாடம். ‘பாலை நிலத்தில் மோசே பாம்பை உயர்த்தியது போல மனுமகனும் உயர்த்தப்பட வேண்டும்’எனும் இயேசுவின் வார்த்தை இதை விளக்குகிறது. 

லேவியர் நூலில் காணப்படும் பல சிந்தனைகள் இந்த நூலிலும் காணப்படுகின்றன. இரண்டு நூல்களையும் ஒரே நபர் எழுதினார் என்பதும், அவர் கடவுளிடமிருந்து கட்டளைகளை நேரடியாகப் பெற்றார் என்பதும், இது ஒரே ஒரு நீள் பயணத்தின் பதிவுகள் என்பதும் அதன் காரணமாக இருக்கலாம். 

விடுதலைப் பயண நூலில் கம்பீரமாகக் காட்டப்பட்ட மோசே இந்த நூலில் ஒரு பக்குவப்படுத்தப்பட்ட மக்கள் தலைவராக மாறுகிறார். இரக்கம், மன உருக்கம், தாழ்மை,பணிவு, எளிமை கொண்ட ஒரு அற்புதமான தலைவராக அவர் சித்தரிக்கப்படுகிறார். பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார் என்கிறது(எண் 12:3) இந்த நூல். 

கடவுளின் கோபம் வெளிப்படும் என்பதை இந்த நூல் ஊர்ஜிதப்படுத்துகிறது. ஒரு தந்தையாக வழிநடத்தும் அவர் தவறுகளைக் கண்டால் தண்டிப்பவராக மாறுகிறார். அவருடைய தண்டனைக்கு முன்னால் சிறியோர் பெரியோர் என்று இல்லை. தன் பிரியத்துக்குரியவர் மற்றவர் என்றில்லை. தலைவர் தொண்டர் என்றில்லை. கீழ்ப்படியாமை உடைய மக்களையும், பாவம் செய்யும் மக்களையும் கடவுள் பாகுபாடின்றி தண்டிக்கிறார். இந்த சிந்தனை இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

thinathanthi

 

Posted in Bible Feasts

விவிலிய விழாக்கள் 7 கூடாரப் பெருவிழா

Image result for feast of tabernacle

இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் பின்பற்றுமாறு சொன்ன மாபெரும் விழாக்கள் ஏழு. அந்த ஏழு விழாக்களின் கடைசி விழா இந்த கூடாரப்பெருவிழா. இது இஸ்ரயேலர்களின் ஏழாம் மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாளில் தொடங்கி ஏழு நாட்கள் கொண்டாடப்படும் .

“விழாவின் முதல் நாள் ‘திருப்பேரவை கூடும் நாள்’. அந்த நாளில் எந்த வேலையும் செய்யாமல் எல்லோரும் ஓய்வாய் இருக்கவேண்டும். எட்டாம் நாள் மீண்டும் திருப்பேரவை கூடும் நாள் ! அது நிறைவு நாள். அந்த எட்டு நாட்களும் தவறாமல் கடவுளுக்குநெருப்புப் பலி செலுத்த வேண்டும். அந்த ஏழு நாட்களும் இஸ்ரவேல் மக்கள் கூடாரங்களில் குடியிருக்க வேண்டும். “ என்பதே இறைவன் கொடுத்த கட்டளையின் சுருக்கம்.

எகிப்தில் அடிமையாய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் அந்த நாட்டை விட்டு கடவுளின் அருளால், மோசேயின் தலைமையில்வெளியேறியபின் கூடாரங்களில் குடியிருந்தார்கள். அந்த நினைவை புதுப்பித்துக் கொள்ளும் விதமாக இந்த விழாநாட்களில் இஸ்ரயேலர்கள் அனைவரும் கூடாரங்களில் குடியிருந்தார்கள்.

சாலமோன் மன்னனும் இந்த பண்டிகையைத் தவறாமல் கொண்டாடினார் என்கிறது 2 குறிப்பேடு 8:13. “ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத் திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்றுவிழாக்களிலும், அந்தந்த நாளுக்குரிய பலிகளைச் செலுத்தினார்” என விவிலியம் விளக்குகிறது.

இறைவன் காட்டிய பேரன்பை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் மிகப்பெரிய பணியை இத்தகையவிழாக்கள் செய்கின்றன. குறிப்பாக தகவல்தொழில்நுட்பங்கள் வலுவாக இல்லாத பண்டைய காலங்களில் இத்தகைய செய்திகளைநினைவுகூர விழாக்களே அடிப்படைக் காரணிகளாக இருந்தன.

பாலை நிலத்தில் அலைந்து திரிந்த நாற்பது வருடங்களும் இறைவன் அவர்களை பல அதிசயங்கள் மூலம் ஆசீர்வதித்துவழிநடத்தினார். அவர்கள் உண்ண தினமும் வானிலிருந்து மன்னா எனும் உணவு வழங்கினார். இஸ்ரயேலர் கூட்டம் , பெண்கள்குழந்தைகள் உட்பட, மொத்தமாக 20 இலட்சம் பேர் இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அப்படிப்பார்த்தால் தினமும் மூன்று வேளை சாப்பிட அவர்களுக்குத் தேவையான பல இ லட்சம் மன்னா தேவைப்பட்டிருக்கும். அப்படியே நாற்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக சாப்பிட எவ்வளவு தேவைப்பட்டிருக்கும் ? இவை கடவுளின் மிகப்பெரிய அற்புதமன்றிவேறு எந்த விதமாகவும் நடந்திருக்க சாத்தியமே இல்லாத ஒன்று !

அதே போல அவர்கள் இறைச்சி வேண்டும் என கேட்டபோது இறைவன் பறவைகளை அவர்களுடைய கூடாரங்கள் அருகேவிழவைத்தார். அத்தனை கூட்டம் கூட்டமான பறவைகள் வந்து விழுவது இறைவனின் அதிசயச் செயல் அன்றி வேறில்லை. தாகம்எடுத்த போது மோசே பாறையில் அடித்தார். தண்ணீர் பாய்ந்தோடியது. இத்தனை இலட்சம் பேர் குடிக்க வேண்டுமெனில் தண்ணீர்ஒரு ஆறு போல பாய்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் இத்தனை மக்கள் பேரணியாகச் சென்றாலே பலப் பல கிலோமீட்டர் நீளமாய்அந்த பேரணி இருந்திருக்கும்

இப்படி இறைவன் செய்த அதிசயங்களை நினைவு கூரும் விதமாகக் கொண்டாடப்படுவது தான் கூடாரப் பெருவிழா. இந்தநாட்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது இறைவன் இவர்களுக்குக் கொடுத்த ஒரு கட்டளை ! இந்த விழாவைக்கொண்டாடாதவர்கள் அழிவுக்குள்ளாவார்கள் என செக்கரியா 14ம் அதிகாரம், அன்றைய மக்களை எச்சரித்தது.

புதிய ஏற்பாட்டில் இந்த விழா இயேசுவின் இரண்டாம் வருகை தரப்போகும் ஆயிரம் ஆண்டைய அரசாட்சியை குறிப்பால்உணர்த்துகிறது. பாவம் எனும் பாலை நிலத்தில் இத்தனை ஆண்டுகள் அலைந்து திரிந்த நாம், இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுஅவரது அன்பில் இணைகிறோம். இதுவே புதிய ஏற்பாட்டு சிந்தனை.

இறைமகன் இயேசுவும் தான் மனிதனாக வாழ்ந்த காலத்தில் இந்த விழாவைக் கொண்டாடினார். இந்த விழாவில் வெளிச்சமும், தண்ணீரும் குறியீடுகளாக உள்ளன. அதை வெளிப்படுத்தும் விதமாகத் தான் இயேசு, விழாக்காலத்தில் ஆலய பகுதியில் நின்றுகொண்டு, ““யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவதுபோல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என அறைகூவல் விடுத்தார்.

இந்த காலத்தில் கூடாரவிழாவானது புதிய அர்த்தத்தை நமக்குத் தருகிறது. முதலில் இது இயேசுவின் இரண்டாம் வருகையையும், அவர் நம்மோடு ஆளப்போகின்ற ஆயிரம் ஆண்டு ஆட்சியையும் குறிப்பிடுகிறது. அவர் நம்மோடு கூடாரமடித்து தங்குவார் எனும்நம்பிக்கை விழாவாக இது அமைகிறது. இன்னொன்று, ‘வார்த்தையான இறைவன் நம்மிடையே குடிகொண்டார்” எனும் முதல்வருகையின் நினைவு கூர்தலாகவும் அமைகிறது.

இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக, நமது பாவங்களை விட்டு விலகி அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அவரால் நிராகரிக்கப்படுபவர்களாக இல்லாமல், வரவேற்கப்படுபவர்களாக இருக்க முயற்சிகள்மேற்கொள்ள வேண்டும். இதையே இந்த விழா நமக்கு எடுத்துச் சொல்கிறது.

Posted in Bible Feasts

விவிலிய விழாக்கள் 6. பாவக்கழுவாய் பண்டிகை !

Image result for day of atonement feast

மக்களுடைய பாவங்களுக்கு பரிகாரம் செலுத்துகின்ற விழா தான் பாவக் கழுவாய் விழா என என அழைக்கப்படுகிறது.

” ஆண்டவர் மோசேயிடம் ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். அந்த நாளை ஓய்வு நாளாய் அனுசரிக்க வேண்டும்.” என கட்டளை கொடுத்தார்.

அது மிகவும் முக்கியமான நாளாகக் கொண்டாடப்பட்டது. அந்த பலியில் பங்கு பெறாதவர்கள் அழிக்கப்படுவார்கள். உயிர் வாழவேண்டுமென்றால் அந்த பண்டிகையைக் கடைபிடித்தே ஆகவேண்டும் எனுமளவுக்கு அந்த விழா கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

கடவுளின் ஆலயத்தில் தூயகம் அதாவது மகா பரிசுத்த ஸ்தலம் ஒன்று உண்டு. அங்கே யாரும் நுழைய முடியாது. தூயகத்துக்கு முன்னால் ஒரு தொங்கு திரை இருக்கும். அதைத் தாண்டி யாராவது நுழைந்தால் கடவுளால் அவர்கள் கொல்லப்படுவார்கள்.

அந்த நாளில் மோசேயின் சகோதரர் ஆரோன் தான் பலி செலுத்தும் அனுமதி பெற்ற குருவாக இருந்தார். அவர் அந்த தூயகத்துக்கு நுழையும் முன் இரண்டு பலிகளைச் செலுத்த வேண்டும்.

நன்றாகக் குளித்து சுத்தமானபின், நார்ப்பட்டினாலான ஆடைகளைத் உடுத்த வேண்டும். கச்சை, தலைப்பாகை போன்றவற்றை அணிய வேண்டும். முதலில் அவர் ஒரு காளையைப் பலியிட்டு தனக்கும், தன் குடும்பத்துக்கும் இருக்கும் பாவக் கறைகளை நீக்க வேண்டும்.

அதன்பின் இரண்டு வெள்ளாட்டுக் கிடாக்களைக் கொண்டு வருவார். அதில் ஒரு ஆடு பலியாகப் போகும் ஆடு. இன்னொன்று போக்கு ஆடாக அனுப்பப்படப் போகும் ஆடு.

பலி கொடுக்கப்படுவதெற்கென தெரிந்து கொள்ளப்பட்ட ஆட்டை முதலில் ஆரோன் அடிப்பார். அந்த இரத்தத்துடன் தான் தூயகத்தில் தொங்கு திரையைத் தாண்டி அவர் நுழைய முடியும். அவர் ஒற்றை ஆளாக தனியாக தூயகத்தில் நுழைந்து சடங்குகளைச் செய்வார். அப்போது அந்த சந்திப்புக் கூடாரத்திலேயே யாரும் இருக்கக் கூடாது.

பின்னர் இரண்டாவது ஆடு கொண்டு வரப்படும். அதன் மீது ஆரோன் கைகளை வைப்பார். இஸ்ரேல் மக்கள் செய்த அத்தனை பாவங்களையும் அதன் மேல் சுமத்துவார். அந்த ஆட்டை ஒருவர் கொண்டு சென்று பாலை நிலத்தில் அலைய விடுவார். பின் அவர் குளித்து தூய்மையானபின் ஊருக்குள் வருவார்.

அன்றைய தினம் முழுவதும் மக்கள் நோன்பிருந்து தங்கள் பாவங்களையெல்லாம் கடவுளிடம் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்பார்கள்.

இதுவே அன்றைய காலத்தில் கொண்டாடப்பட்ட பாவக் கழுவாய் சடங்கு விழா. விவிலியத்தில் கொண்டாடப்படும் விழாக்கள் குறியீடுகளே. அவற்றுக்கான உண்மையான பொருள் மறைவாய் இருக்கும்.

இதுவும் இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிப்பிடுகின்ற ஒரு விழா. பலியாகும் ஆடு, இறைமகன் இயேசு. அவர் கல்வாரியில் பலியானார். அவர் பலியான போது ஆலயத்தின் தொங்கு திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. அதன் மூலம் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயிருந்த திரையை இறைமகன் இயேசு அழித்து விட்டார். கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே இப்போது நேரடியான உறவு இயேசுவின் மூலம் உருவாகி விட்டது.

அவரே பாவம் இல்லாத முதன்மை குரு ! பிரதான ஆசாரியன். “கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்” எனும் எபிரேயர் 5:5 வசனம் அதை தெளிவாக்குகிறது.

இரண்டாவது ஆடு குறித்து பல்வேறு இறையியல் சிந்தனைகள் உலவுகின்றன. அதில் பெரும்பாலானோர் ஒத்துக் கொள்ளும் சிந்தனை, இரண்டாவது ஆடு சாத்தான் என்பது.

பாவம் மனுக்குலத்தில் நுழைய முக்கிய காரணமாக இருந்தவன் சாத்தான். எனவே அவனே பாவத்தின் சுமையைச் சுமக்க வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையின் போது ஆயிரம் ஆண்டுகள் அரசாட்சி நடக்கும். அப்போது சாத்தான் கட்டி வைக்கப்படும். அதன் பின் சில காலம் கட்டவிழ்த்து விடப்படும் என்கிறது திருவெளிப்பாடு 20ம் அதிகாரம்.

பாஸ்கா விழா ஒருவகையில் இஸ்ரேல் மக்களுக்கான ஒரு மீட்பு வாழ்க்கையை குறிப்பிடுகிறது. பாவக் கழுவாய் விழாவோ சர்வதேச இறை சமூகத்துக்கான மீட்பாக அமைகிறது.

இன்றைக்கு இந்த விழா நமக்கு உணர்த்தும் பாடம், இறைமகன் இயேசுவின் பலியை உணர்ந்து கொள்வதும், அதன் மூலம் கிடைக்கும் மீட்பை அணிந்து கொள்வதும், பாவமற்ற ஒரு வாழ்க்கையை ஆரம்பிப்பதும் தான்.

இரண்டாம் வருகை எப்போது வரும் என்பதல்ல கேள்வி, வந்தால் நாம் தயாராக இருக்கிறோமா என்பது மட்டுமே கேள்வி !

*

Posted in Bible Feasts

விவிலிய விழாக்கள் 5. எக்காளத் திருவிழா

Image result for feast of trumpet

விவிலிய விழாக்களில் நான்காவதாக வருகின்ற விழா எக்காளத் திருவிழா என அழைக்கப்படுகிறது. எக்காளம் என்பது ஒரு கருவி ! அது விலங்கின் கொம்பினாலோ, அல்லது வெள்ளி போன்ற உலோகங்களினாலோ உருவாக்கப்படக் கூடிய ஒரு கருவி.

விவிலியத்தில் எக்காளம் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. வலிமையின் அடையாளமாகவும், இறைசெய்தியின் அடையாளமாகவும் எக்காளம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

எக்காளப் பண்டிகையைக் குறித்து விவிலியம் குறிப்பிடுகின்ற செய்தி இவ்வளவு தான், ” ஏழாம் மாதம் முதல்நாள் உங்களுக்கு ஓய்வு நாள்; அதைத் திருப்பேரவையாகக் கூடி எக்காளம் ஊதிக் கொண்டாடுங்கள். எத்தகைய வேலையும் அன்று செய்யாமல் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள்”

ஏழாவது மாதத்தை யூதர்கள் திசிரி மாதம் என அழைக்கின்றார்கள். அவர்களுடைய மாதங்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தான் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன நாள்காட்டியின் படி இது புத்தாண்டின் துவக்க நாள். எனவே புத்தாண்டு விழா என்றும் இப்போது அழைக்கப்படுகிறது.

விவிலியத்தின் முக்கியமான பண்டிகைகள் ஏழு. எல்லாமே இயேசுவின் வாழ்வோடு தொடர்புடையவை. இயேசு அருள்கின்ற மீட்போடு தொடர்புடையவை. முதல் நான்கு பண்டிகைகளான பாஸ்கா விழா, புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, முதற்பலன் விழா, பெந்தேகோஸ்தே விழா ஆகிய நான்கு விழாக்களும் இயேசுவின் முதலாம் வருகையோடு நிறைவு பெற்ற விழாக்கள் !

அடுத்த மூன்று பண்டிகைகளும் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிப்பால் உணர்த்தக் கூடிய பண்டிகைகளாக அமைந்திருக்கின்றன.

ரோஷ் ஹா சனா என எபிரேய மொழியில் அழைக்கப்படும் இந்த விழாவானது இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையை முன்னறிவிக்கும் ஒரு அடையாள ஒலியாக, எச்சரிக்கையின் ஒலியாக ஒலிக்கிறது. முதல் நான்கு விழாக்களும் நடந்து முடிந்தபின் சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு இந்த விழா ஆரம்பமாகிறது. இயேசுவின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலம் என இதைக் கருதலாம்.

அறுவடைக்காலத்தின் முடிவு நாட்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. விதைப்பின் காலமும், விளைச்சலின் காலமும் முடிந்து விட, அறுவடையாம் நியாயத் தீர்ப்பின் காலம் வரப்போகிறது என்பதன் குறியீடு அது.

“ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்; ” என்கிறது 1 கொரிந்தியர் 15:52. .

இயேசுவின் முதல் வருகை அமைதியாய் நடந்தது. ஆனால் இரண்டாம் வருகையோ உலகமே அறியும் வகையில் மிகப் பெரிய அளவில் நடக்கும். இதை விவிலியம் இவ்வாறு கூறுகிறது.

“கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்” ! இது ஒரு கடைசி எச்சரிக்கை என எடுத்துக் கொள்ளலாம்.

விவிலியத்திலுள்ள திருவெளிப்பாடு நூல் இறைவனின் இரண்டாம் வருகையை குறியீடுகளால் விளக்குகின்ற நூல். அதில் ஏழு எக்காளங்கள் வருகின்றன. கடைசியாக வருகின்ற எக்காளம் இறுதித் தீர்வையில் நிறைவடைகிறது. அதன் பின் எந்த திரும்பிப் பார்த்தலுக்கும், திருந்தி வாழ்தலுக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்பது திண்ணம்.

பழைய ஏற்பாட்டில் எப்போதெல்லாம் எக்காளம் ஊதப்பட்டதோ அப்போதெல்லாம் வாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன! யாருமே அசைக்க முடியாத எரிகோ கோட்டை எக்காளத்தின் சத்தத்தினால் தானே இடிந்து தரைமட்டமாகிவிட்டது !

பத்து கட்டளைகளை மோசே இறைவனிடம் பெற்று வரும் போது எக்காளமே அடையாளமானது !

எக்காளம் என்பது அழைப்பு ! இயேசு தனது உயிரை நமது பாவங்களுக்காய் கையளித்தபோது புதிய ஏற்பாடு எனும் ஒரு புதிய வாழ்வுக்கான அழைப்பைக் கொடுத்தார். அது ஒரு எக்காளத் தொனி ! அந்த அழைப்புக்குச் செவிகொடுத்து அவரது வழியில் நடந்தால் இரண்டாம் வருகையைக் குறித்த அச்சமோ, விண்ணக வாழ்வைக் குறித்த சந்தேகமோ எழத் தேவையில்லை.

எக்காளம் ! நமக்கு இறைவனிடமிருந்து ஒரு செய்தி இருக்கிறது என்பதன் அடையாளம். எக்காளம் ! எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதன் அடையாளம் ! எக்காளம் போருக்குத் தயாராக வேண்டும் என்பதன் அடையாளம். எக்காளம் ! தலைவர் திரும்ப வருகிறார் என்பதன் அடையாளம். எக்காளம் நினைவூட்டுதலின் அடையாளம்.

இறைவனின் வழியில் மகிழ்வோடு நடந்தால் இறைமகனின் எக்காளத் தொனி நமக்கு அக்களிப்பின் தொனியாகக் கேட்கும். இல்லையேல் நரகத்தின் நகக்கீறல்களே நமது ஆன்மாவை ஊடுருவும்.

எக்காளப் பண்டிகை ! நிகழப் போவதன் முன்னறிவிப்பு ! நாம் எப்படி வாழவேண்டும் என்பதன் எச்சரிக்கை !

*