உயர்திணையான அஃறிணைகள்
குதிரை
*
குதிரைகள்
வலிமையின் வசீகரங்கள்
கம்பீரத்தின்
முகவரிகள் !.
வீரத்தின் விலாசங்களை
வரலாறுகள்
குதிரைகளின்
குளம்படிகளைக் கொண்டே
குறித்து வைத்திருக்கிறது !
போர்க்களத்தின்
நீள அகலங்களை
குதிரைகளின்
ஆவேசப் பாய்ச்சல்களே
அளவெடுத்து வைத்திருக்கின்றன !
எங்கள்
எண்ணிக்கையைக் கொண்டே
போர்களின்
அடர்த்தி அறியப்பட்டது !
சேணம் பூட்டப்பட்ட
எங்கள்
ஆண்மையின் அணிவகுப்பே
எதிரிப் பாசறையில்
நில நடுக்கத்தையும்
குலை நடுக்கத்தையும்
கொண்டு வருகிறது .
விவிலியத்திலும்
நாங்கள்
திரையிட முடியாத
திண்மையின் அடையாளமே.
தொடக்கநூல் முதல்
திருவெளிப்பாடு வரை
நாங்கள்
அகலாமல்
ஆக்கிரமித்திருக்கிறோம் !
எங்கள் இருப்பிடத்தை
நாங்கள் தேர்வு செய்வதில்லை
எனினும்
இருப்பிடமே எங்கள்
வாழ்வினை முடிவு செய்கிறது !
தாவீதோடு இருக்கையில்
மேன்மையில்
திளைக்கிறோம்,
பார்வோனோடு இருக்கையில்
செங்கடலில் அழிகிறோம்.
சாலமோனோ
உலகின் திசைகளெங்கிலும்
இருந்து
தரத்தில் மிளிர்ந்த
குதிரைகளைச் சேகரித்தார் !
நாங்கள்
அடிமைகளின் அடையாளமல்ல
அடிமைகள்
எங்கள் முதுகில் ஏறும்
மகத்துவம் காண்பதில்லை !
எருசலேமின்
ஒரு வாயில் தன் பெயரை
“குதிரை வாயில்”
என்றழைத்து
எங்களைக் குதூகலப்படுத்துகிறது.
நிலத்தையே அசைக்கும்
எங்கள்
குளம்படியின் ஆவேசம்
அடக்கிவிட முடியாத
காட்டாறாய் சீறிப் பாயும்.
குதிக்கும் எங்களின்
குதிகால்
நரம்பு நறுக்கி
முடமாக்கும் சூட்சுமத்தை
விவிலியம் பேசுகிறது !
கடவுளின்
கடிந்துரையினால்
மடிந்து வீழ்ந்த எங்கள் கதையை
சங்கீதம் பேசுகிறது.
பாறைமேல்
ஓடமுடியாத எங்கள்
ரகசியப் பலவீனத்தைக
அது
பகிரங்கமாய்ப்
பதிவு செய்து வைத்திருக்கிறது.
பயிற்றுவிக்கப்படாத குதிரையும்
கட்டுப்பாடற்ற மகனும்
அடக்கமற்ற
முரட்டுத்தனத்தின்
அடையாளங்களென்கிறது
சீராக் நூல் !
குதிரை என்றதும்
ஒரு வசனம் நிச்சயம்
கடிவாளமின்றி
உங்கள்
இதயத்தில் கடந்து வரும்.
குதிரை
யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்
ஜெயமோ
கர்த்தரால் வரும் !
சில சோம்பேறிகள்
என்னை ஆயத்தமாக்குவதை
மறந்து விட்டு
ஜெயத்தைக் கர்த்தர் தருவாரென
கனவு காண்கின்றனர்.
வெற்றுப் பாத்திரத்தால்
பசியாற்ற நினைக்கும்
அறிவிலிகள் அவர்கள்.
நாங்கள்
பல அவதாரங்கள் எடுத்ததுண்டு.
ஒரு முறை
எலிசாவைக் காக்க
நெருப்புக் குதிரைகளாய்
நெருங்கி வந்தோம்.
ஈசபேலை
எங்கள்
கால்களால் மிதித்து
கொன்றோம்.
திருவெளிப்பாட்டில்
வெள்ளை, சிவப்பு, கறுப்பு, பச்சை
என
பல வண்ணத் தேகத்துடன்
மேகங்களிலும்
வேகம் கொள்கிறோம்.
அழிவுக்காய் அழைக்கப்பட்ட
குதிரைப்படையின் எண்ணிக்கை
இருபது கோடி
என
பிரமிக்க வைக்கிறோம்.
கடைசியாய்
எங்கள்
லாடங்களில் இருக்கும்
உங்களுக்கான ஒரு செய்தி
இது தான்.
குதிரைகளிலும்
ரதங்களிலும்
அல்ல,
ஆண்டவரின் பெயரில்
பெருமை கொள்க !
*
சேவியர்