Posted in Articles, Vettimani

எளியவரை வதைக்காதே

Image result for poor people working

வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது

லேவியர் 19 : 13

+

கடவுள் ஏழைகளின் பக்கமாகவும், எளியவர்கள் சார்பாகவும் நிற்பவர் என்பதை விவிலியம் நமக்கு தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் எளியவருக்கு எதிராக நிற்பவர்கள் இறைவனுக்கே எதிராக நிற்பவர்கள் ஆகின்றனர். இறைவனின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டுமெனில் மிக எளிய வழி ஒன்றுண்டு. ஏழைகளுக்கு எதிரான மனப்பான்மையைக் கொண்டிருப்பது தான் அது.

“வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது” எனும் இந்த வசனத்தில், கடவுள் இரண்டு விஷயங்களை நமக்குப் புரிய வைக்கிறார். ஒன்று, வேலையாளுக்கு சரியான கூலி கொடுக்கவேண்டும். இரண்டு, கூலியை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும்.

இதையே, “வேலை செய்வோர் அனைவருக்கும் கூலியை உடனே கொடுத்துவிடு; இரவு முழுவதும் அதை உன்னோடு வைத்திராதே” எனும் இறைவார்த்தையும் ( தோபித்து 4:14 இணைதிருமறை) ம் உறுதி செய்திறது.

தாமதமாய் வழங்கப்படும் நீதி, பயனற்றுப் போகலாம். தாமதமாய் வழங்கப்படும் பணம் பயனில்லாமல் போகலாம். இன்னொருவருக்குச் சொந்தமான பணத்தை நாம் வழங்காமல் இருக்கும் ஒவ்வொரு கணமும், அவருடைய பணத்தை அபகரித்து வைத்திருப்பதாகவே அர்த்தம்.

சமரசத்தையும், நீதியையும் உடனுக்குடன் வழங்குபவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதையே இயேசு வலியுறுத்துகிறார்.

“நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்” என்றார் இயேசு. உடனடி ஒப்புரவே தேவை என்றார்.

சிலுவையில் தொங்கிய நல்ல கள்ளனைப் பார்த்து, “இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்றார் “. உயிர்த்தப்புறம் பாக்கலாம் என்று சொல்லவில்லை, உடனடி மன்னிப்பை வழங்குகிறார். மீட்பை வழங்குகிறார்.

ஏழைகளின் மீது கரிசனம் இல்லாத செல்வந்தன் உவமையில், “இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் போகும், நீ சேமித்தவையெல்லாம் யாருக்குச் சேரும் ? ” என்றார்.

ஒப்புரவையும், மன்னிப்பையும், நீதியையும் தாமதப்படுத்தக் கூடாது என்பதே இயேசு சொல்ல வரும் செய்தி.

காரணம், அடுத்த கணம் என்பது நம்மிடம் இல்லை. அடுத்த செயல் நமது கட்டுப்பாட்டில் இல்லை. இந்த கணத்தில் நமக்குக் கிடைக்கின்ற, இந்த வாய்ப்பிலேயே நம்மைச் சரிசெய்து கொள்ளவேண்டும், நன்மையைச் செய்ய வேண்டும். மனமாற்றம் கொள்ள வேண்டும்.

வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது ! சிந்திப்போம். அடுத்தவருக்குச் சொந்தமான எது நம்மிடம் இருக்கிறது ? கொடுக்க வேண்டும் என முடிவெடுப்போம். அதையும் உடனடியாகக் கொடுக்க வேண்டும் என முடிவெடுப்போம்.

உலக செல்வங்களை இழந்து
விண்ணக வாழ்க்கையை சம்பாதிப்போம்.

*

சேவியர்

Posted in Articles, WhatsApp

எது நல்ல நோன்பு ?

Image result for fasting and praying

+

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும்,
நுகத்தின் பிணையல்களை அறுப்பதும்
ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து
அனுப்புவதும், எவ்வகை
நுகத்தையும் உடைப்பதும் அன்றோ
நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு

ஏசாயா 58 :6

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல அமைந்துள்ளது இந்த இறைவார்த்தை. நோன்பு இருப்பது என்பது சாம்பலில் அமர்ந்து, உண்ணாமல் இருந்து, இறைவனை வேண்டுவது தானே ! அப்படித் தானே காலம் காலமாய் நடந்து கொண்டிருக்கிறது ! அது இல்லை என்கிறாரே கடவுள் ?

ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணா நோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு ?

என்கிறாரே கடவுள். ! பழங்காலத்தில் அது தானே நடந்திருக்கிறது. நமக்கள் சாம்பல் உடுத்தி, உண்ணாமல் இருந்து வேண்டியபோது கடவுள் மனம் இரங்கியிருக்கிறாரே ! அப்படியெனில் ஏன் இப்போது கடவுள் அதை வெறுக்கிறார் ?

காரணம் இருக்கிறது. கடவுள் நமது சிந்தனைகளையும், செயல்களையும் சீர்தூக்கிப் பார்த்து நம்மை அளவிடுபவர். ஏழையை ஒடுக்கி, சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்கி, பிறர் நலனின் அக்கறை கொள்ளாமல் இருக்கின்ற போது, நமது நோன்பு பயனற்றதாகிவிடுகிறது.

மக்கள் அடிமைத்தளையில் உழன்று கொண்டிருக்கும் போது, அதை நிவர்த்தி செய்ய சிறு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் கடவுளை நோக்கி உண்ணா நோன்பு இருக்கும் போது, நோன்பு செல்லாக்காசாகி விடுகிறது.

ஏழைகளை ஏழைகளாகவே வாடவிட்டு அவர்கள் மீது கரிசனை இல்லாமல் உண்ணா நோன்பு இருக்கும் போது, அது கேலிக்கூத்தாக மாறிவிடுகிறது.

பிறரை நேசிப்பதன் மூலமாக இறைவனை நேசிப்பதே இறைவன் விரும்பும் நோன்பு. அந்த பணியில் வயிறாரச் சாப்பிட்டாலும் இறைவன் மகிழ்ச்சியடைவார். ஆனால், பிறரை நேசிக்காமல் கடவுளை நேசிக்கிறேன் என உண்ணா நோன்பு இருந்தால் கடவுள் கண்டுகொள்வதில்லை.

கண்டுகொள்வதில்லை என்பதை விட கோபம் கொள்கிறார் என்பதே பொருத்தமானது. நமது ஆதாயத்துக்காக இருக்கின்ற நோன்புகள் இறைவன் பார்வையில் புனிதமானதல்ல. பிற மனிதர்கள் ஒடுக்கப்படும் சூழலில் நாம் ஒதுங்கிக் கிடந்து நோன்பு இருப்பது கடவுளுக்கு ஏற்புடையதல்ல.

நம்மை சுற்றியிருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற, நாம் என்ன செய்யப் போகிறோம். அந்த நோன்புக்காய் நாம் எப்போது தயாராகப் போகிறோம்

*

சேவியர்

Posted in Articles, WhatsApp

தலைமை இறைவரம்

திரளான மக்களை ஆள்வோரே, பல மக்களினங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவோரே,எனக்குச் செவிசாயுங்கள். ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது.
அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்; உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே ( சாலமோனின் ஞானம் 6 : 2,3 )

 

Image result for leaders

மண்ணுலகில் உள்ள ஆட்சியும், தலைமைத்துவமும் இறைவனால் ஏற்படுத்தப்படுபவை என்பதை சாலமோனின் ஞானம் நூல் மிகத் தெளிவாக விளக்குகிறது. இறைவனே தலைவர்களை ஏற்படுத்துகிறார். இறைவனே மக்களினங்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்.

புதிய ஏற்பாட்டில் “ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள்; ஏனெனில் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை; இப்பொழுதுள்ள ஆட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஏற்படுத்தினார்” என ரோமர் 13:1 குறிப்பிடுகிறது.

தலைமையை இறைவன் ஏற்படுத்துகிறார். அதை நம் மூலமாகவே அவர் நிறுவுகிறார். இறைவன் மேஜிக் மூலமாக எதையும் செய்வதில்லை, மனிதர்களைக் கொண்டும், இயற்கையைக் கொண்டும் அவர் செயலாற்றுகிறார். செங்கடலை வற்றச் செய்யவேண்டும்னில் கீழைக்காற்றை வீசச்செய்பவர் அவர். ஐந்து மீன்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு பசியாற்றுபவர். நமது பங்களிப்பைக் கொண்டே தலைமைகளை அவர் நிர்ணயிக்கவும் செய்கிறார்.

இறைவன் சில வேளைகளில் மோசமான தலைவர்களையும் உருவாக்குவதுண்டு. அதற்கு மிகச்சிறந்த ஒரு நல்ல காரணம் இறைவனிடம் இருக்கும். அதை நாம் பலவேளைகளில் புரிந்து கொள்வதில்லை. நெருப்பில் வீசப்பட்டதால் தான் முடி கூட கருகாத, புகை வாசம் கூட வீசாத சாத்ராக், மேசாக், ஆபத்நெகோ இறைவனின் வல்லமையை வெளிக்காட்டினார்கள்.

எகிப்தில் வளமையாக இருந்த காலம் வரை இஸ்ரேல் மக்கள் நன்றாக இறைச்சியும், அப்பமும் உண்டு வாழ்ந்து வந்தனர். இறைவனை மறந்தனர். அடக்குமுறையின் கரங்களில் அவர்களைச் சிக்க வைத்து என்றைக்கு இறைவன் அவர்களைச் சோதித்தாரோ அப்போது தான் அவர்கள் இறைவனை நோக்கி அபயக் குரல் எழுப்பினார்கள்.

இறைவன் பல வேளைகளில் தவறான தலைவர்களைக் கொடுத்து, அதன் மூலம் இறைமக்களின் அன்பை இறைவனை நோக்கித் திருப்புகிறார். தன் பிள்ளைகள் எப்போதும் தன்னைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதையே இறைவன் ஆசிக்கிறார்.

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களுடைய கடமைகளைச் செய்யும் போது, இந்தப் பணி இறைவனால் எனக்குக் கொடுக்கப்பட்டது எனும் சிந்தனையுடன் பணியாற்றினால் அந்தப் பணி மிகச்சிறப்பாக அமையும். தன்னுடைய ஆள்பலம், ஆளுமைப் பலம், பண பலம் இவையே தனக்குத் தலைமைப் பதவியைத் தந்தது என தலைவர்கள் நினைக்கும் போது அந்த பதவி இறைவனுக்குப் பிரியமில்லாத ஒரு திசையில் பயணிக்க ஆரம்பிக்கிறது.

நாட்டின் தலைமைப் பதவிகள் ஆனாலும் சரி, வீட்டின் தலைமைப்பதவிகள் ஆனாலும் சரி, சமூகத்தின், திருச்சபையின் என எந்த இடத்திலுள்ள தலைமைப் பதவியானாலும் சரி, அது இறைவனால் தரப்பட்டது எனும் சிந்தனையுடன் அதை நாம் அணுகவேண்டும்.

“நாடுகளை ஆளும் மன்னர்களே, உங்களுடைய அரியணையிலும் செங்கோலிலும் நீங்கள் மகிழ்ச்சி அடைய விரும்பினால்,
எப்பொழுதும் ஞானத்தை மதியுங்கள்” ( சாலமோனின் ஞானம் 6 : 21 ) எனும் இறைவார்த்தை நமக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும்.

“கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உங்கள்மேல் வருவார்; உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார் (சாலமோனின் ஞானம் 6 : 5 ) நமக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்

*

சேவியர்

Posted in Articles, WhatsApp

இரண்டும் சந்தித்துக் கொள்ளும் போது !

Image result for Heaven good people vs bad peopleஇறைப்பற்றில்லாதவர்களின் நம்பிக்கை காற்றில் அடித்துச் செல்லும்
பதர்போன்றது; புயலால் சிதறடிக்கப்படும் உறைபனிபோன்றது; காற்றால் அங்கும் இங்கும் கலைக்கப்படும் புகைபோன்றது. ஒரே நாள் தங்கும் விருந்தினர்களின் நினைவுபோல் அது மறக்கப்படும்.

நீதிமான்களோ என்றென்றும் வாழ்கிறார்கள். அவர்களுக்குரிய கைம்மாறு ஆண்டவரிடம் உள்ளது. அவர்களைப்பற்றிய கவலை உன்னத இறைவனுக்கு உண்டு. அவர்கள் மாட்சிமிக்க பொன்முடியைப் பெறுவார்கள்; ஆண்டவருடைய கையிலிருந்து மணிமுடியைப் பெறுவார்கள்

சாலமோனின் ஞானம் 5 : 14, 15

நீதிமான்களுக்கும், இறைப்பற்றில்லாதவர்களுக்குமான வேறுபாட்டை விவிலியம் நமக்கு பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகிறது.

இறுதி நாளில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி மத்தேயு நற்செய்தி குறிப்பிடும் காட்சி, செயல்களற்ற விசுவாசம் நம்மை சுவர்க்கத்தில் சேர்க்காது என்பதை விளக்குகிறது. “பசித்தோருக்கு உணவளித்தாயா, நோயாளிகளை சந்தித்தாயா ? ஆறுதல் வழங்கினாயா ?” என இறைவன் கேட்கும் காட்சி ஏழைகளுக்கு இரங்காதவர்கள், இறைவனின் இரக்கத்தில் பங்குபெற மாட்டார்கள் என்பதை பறைசாற்றுகிறது.

சாலமோனின் ஞானம் நூல், இன்னொரு அருமையான காட்சிப்படுத்துதலை நமக்குத் தருகிறது. இறுதித் தீர்வை நாளில் நீதிமான்களும், இறைப்பற்றில்லாதவர்களும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை அது விளக்குகிறது.

இறைப்பற்றில்லாதவர்கள் நீதிமான்களை எதிர்கொள்ள அஞ்சுவார்கள். இவர்களுக்கு எப்படி மீட்பு கிடைத்தது என திடுக்கிடுவார்கள். இவர்களை எள்ளி நகையாடி வசை சொன்ன நாம் மூடர்கள் என்பார்கள். அவர்கள் முடிவு இழிவு எனக் கருதினோமே என நொந்து கொள்வார்கள். இவர்கள் எப்படி தூயவர்கள் நடுவில் நுழைந்தார்கள், என கலங்குவார்கள். நாம் ஆண்டவரின் வழியை அறியவில்லையே, என புலம்புவார்கள்.

இறுமாப்போடும், செருக்கோடும் வாழ்ந்து சாதித்தது என்ன என வருந்துவார்கள். நெறிகெட்ட வழியில் நடந்து அனைத்தையும் இழந்து விட்டோமே என வெலவெலப்பார்கள். நம்மிடம் நற்பண்புகள் எதுவும் இல்லையே, தீமையால் அனைத்தையும் அழித்து விட்டோமே என கலங்குவார்கள்.

என்றெல்லாம் இறைப்பற்றில்லாதவர்களின் மலநிலையை சாலமோனின் ஞானம் நூல் வழியாக இறைவன் தருகிறார்.

காலம் தாழ்த்திய இத்தகைய புரிதல்கள் எந்த பயனையும் அளிப்பதில்லை. மதிப்பெண் பட்டியல் வந்தபிறகு, ‘ஐயோ படிக்கவில்லையே’ என கலங்கும் மாணவனுக்கு எந்த பயனும் இல்லை. அதே போல தான் வாழ்க்கையில் சரியாக வாழாதவர்கள், இறந்தபின் தான் வாழ்ந்த வாழ்க்கையைக் குறித்து கலங்குவதாலும் பயனில்லை.

எப்படி அம்பு தைத்த வானில் கீறல் இல்லையோ, எப்படி கப்பல் பாய்ந்த கடலில் தடம் இல்லையோ, எப்படி பறவை சிறகடித்த வானத்தில் அடையாளம் இல்லையோ அப்படித் தான் இறைப்பற்றில்லாதோருடைய வாழ்க்கையும். எந்த வித பதிவையும் இறைவனிடம் சமர்ப்பிக்காது, என்கிறது இந்த நூல்.

நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது என யோசிப்போம். இறைப்பற்றில்லாதோரால் இகழப்படும் வாழ்வா, ‘இவன் பெரிய உத்தமன்’ என நகைக்கப்படும் வாழ்வா, ‘ரொம்ப பக்திமான்னு நினைப்பு’ என எள்ளி நகையாடப்படும் வாழ்வா ? ‘மடப்பய’ என இழித்துரைக்கப்படும் வாழ்வா ? பொறுமை காப்போம். இறைவன் காட்டும் வழியில் தொடர்ந்து நடப்போம்.

பொல்லாதவரின் பேரணியில் பயணித்து அழிவை அடைவதல்ல வாழ்வு. ஒற்றையாளாய் ஒற்றயடிப்பாதையில் நடந்தேனும் இறையை அடைவதே வாழ்வு. அகலமான பாதை அழிவுக்கானது, இடுக்கமான வழியே இறைவனுக்கானது.

நீதியை மார்புக்கவசமாகவும், நடுநிலை தவறாத தீர்ப்பைத் தலைக்கவசமாகவும் கொண்டுள்ள இறைவனின் முன்னால் நிற்கும் நாளை நினைத்துப் பார்ப்போம். நமது வாழ்க்கையை அதன்படி அமைத்துக் கொள்வோம்

*

சேவியர்

Posted in Articles, WhatsApp

ஏன் சாத்தான் ஆதாம், ஏவாளை ஏமாற்றினான் ?

Image result for satan adam eve

அலகையின் பொறாமையால்
சாவு உலகில் நுழைந்தது.
அதைச் சார்ந்து நிற்போர்
இறப்புக்கு உள்ளாவர்

சாலமோனின் ஞானம் 2 : 24

உலகில் பாவம் நுழைந்த வரலாறு நாம் அறிந்ததே. அலகை பாம்பு வடிவத்தில் வந்து ஏதேனில் மகிழ்ச்சியாய் இருந்த ஏவாளை தன் தந்திர வார்த்தைகளால் ஏமாற்றியது. அவள் அதை நம்பினாள். பாவத்தில் வழுக்கினாள். ஆதாமும் விழுந்தான். பழுதற்ற முதல் தம்பதியினரை பாவம் பாதித்தது. அவர்கள் இறைவனின் தோட்டத்தை விட்டு, மனிதரின் நிலப்பரப்புக்கு தள்ளப்பட்டார்கள்.

அலகை ஏன் ஏவாளை ஏமாற்றியது ? அதனால் அதற்குக் கிடைக்கப் போகும் பயன் என்ன ? அதனால் அதற்குக் கிடைக்கப் போகும் லாபம் என்ன ? கடவுள் படைத்த முதல் மனிதனையே கண்ணி வைத்து கவிழ்க்க வேண்டிய அவசியம் என்ன ? கடவுள் சொன்னவையே பொய் என சொல்லி மனிதனை ஏன் பாவத்துக்குள் விழ வைக்க வேண்டும் ? இந்தக் கேள்விக்கான விடை தொடக்கநூலில் / ஆதியாகமத்தில் இல்லை. அதை இறைவன் இணைதிருமறைகள் நூலில் எழுதி வைத்திருக்கிறார்.

அலகை ஏவாளை ஏமாற்றியதன் காரணம், “பொறாமை” என்கிறது சாலமோனின் ஞானம் நூல். புதிய ஏற்பாட்டுக்கு முந்தைய நூல்களில் கடைசியாக எழுதப்பட்ட நூல் சாலமோனின் ஞானம் நூல் தான். இதை எழுதியவர் சாலமோன் மன்னர் அல்ல. சாலமோன் மன்னனைப் பற்றிய சில குறிப்புகளை இந்த நூல் கொண்டிருக்கிறது. இதை சாலமோன் எனும் பெயருடைய வேறு ஒரு யூதர் எழுதியிருக்கலாம். கிமு முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் இது.

இறைவனோடு இணைந்து உன்னதத்தில் வாழ்ந்து வந்த தேவதூதர்களில் ஒரு பிரிவினர் தான் ‘கர்வத்தினால்’ இறைவனை எதிர்த்தனர். இறைவனை விட மேலானவனாக தன்னைக் காட்டிக் கொள்ள நினைத்த லூசிபர் அந்தக் கூட்டத்தின் தலைவனானான். அவனையும், அவன் தூதர்களையும் கடவுள் விண்ணிலிருந்து தள்ளிவிட்டார் என்கிறது ஏசாயா நூல்.

“நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்; இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்; வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன். மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்’ என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே! ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்” என்கிறது ஏசாயா 14:12

அப்படி வீழ்த்தப்பட்ட அலகை, வேறு யாரும் இறைவனோடு அத்தகைய ஒரு நெருக்கமான உறவைக் கொண்டிருக்கக் கூடாது என விரும்புகிறது. இறைவனோடு இணைந்திருப்பது எத்தனை இன்பமானது என்பதை அலகை அறியும். காரணம், ஒருகாலத்தில் அத்தகைய பரவச நிலையில் அது இருந்தது. இப்போது புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதால், பிறரும் அந்த மகிழ்வின் நிலைக்குள் சென்று விடக் கூடாது என்று தன் முழு சக்தியையும் பயன்படுத்தி முயல்கிறது.

கடவுளிடம் நம்மைப் பற்றி இடையறாது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பவன் சாத்தான் தான். “நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள்மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான் ( திருவெளிப்பாடு 12:10) என்கிறது இறைவார்த்தை.

ஆதாமையும், ஏவாளையும் ஏமாற்றியவன் சாத்தான் தான். இறைவனோடு நெருங்கி வாழ்பவர்களுக்கு சோதனைகள் கொடுத்து வழிவிலகச் செய்பவன் சாத்தான் தான். தவறான போதனைகளின் மூலம் ஆன்மீகத்தை நீர்த்துப் போகச் செய்பவனும் சாத்தான் தான். இன்றும் நமக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவு பலப்படும் போதெல்லாம் அவன் பொறாமைப் படுகிறான்.

சாலமோனின் ஞானம் நூல், பொறாமை எத்தனை கொடுமையானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. சாத்தானின் இயல்பான அந்த பொறாமைக் குணத்தை நம் உள்ளத்திலிருந்து முழுமையாய் விலக்குவோம். நமக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவை உடைக்கும் நிகழ்வுகள் சாத்தானின் பொறாமையின் பிள்ளைகள் என்பதைப் புரிந்து கொள்வோம்.

சாத்தானைச் சார்ந்து நிற்பதும், பொறாமையைச் சார்ந்து நிற்பதும் ஒன்றே எனும் உண்மை உணர்வோம்.

*