Posted in Christianity, Desopakari

பேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்

பேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்

நற்செய்தி அறிவித்தல் எப்போதுமே ஒரே மாதிரி இருந்ததில்லை. காலத்துக்குத் தக்கபடி அது தன்னை மாற்றியமைத்துக் கொண்டே இருக்கிறது.  ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நற்செய்தி அறிவித்தல் நடந்ததை வரலாறு நமக்குச் சொல்லித் தருகிறது. படுகொலை செய்யப்படுவோம் என தங்கள் உயிருக்குப் பயந்து அறைகளில் அடைபட்டு ஆரம்ப காலங்களில் மக்கள் நற்செய்தியை அறிவித்தார்கள், வழிபாடுகளை நடத்தினார்கள். குகைகள், மலைப்பிரதேசங்கள் போன்ற இடங்களிலும் ஒளிந்து ஒளிந்து நற்செய்தியை அறிவித்தார்கள்.

பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். 

பைபிள் இல்லாத, எதுவும் எழுத்து வடிவம் பெறாத அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் செவி வழிச் செய்திகளே நற்செய்திகளாய் மக்களுக்குப் பகிரப்பட்டு வந்தன. பவுலின் காலத்தில் நற்செய்தி அறிவித்தல் பரவலான வீச்சை அடைந்தது. எல்லா இடங்களுக்கும் சென்று போதிக்க முடியாத அந்தக் காலகட்டத்தில் பவுல் கடிதங்களை எழுதி பல இடங்களுக்கும் அனுப்பினார். அதுவே நற்செய்தியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அமைந்தது. பைபிளில் இடம்பெற்று இன்று வரை நம்மை வழிநடத்தியபடியும் இருக்கிறது.

கடவுள் நம்மை ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப பயன்படுத்துகிறார். பேசுவதற்கான சூழலில் பேச அழைக்கிறார், எழுதுவதற்கான சூழலில் எழுத அழைக்கிறார், செயல்களுக்கான சூழலில் செயல்பட அழைக்கிறார். அவரது அழைப்பு எப்படி இருக்கிறதோ அதற்குத் தக்கபடி நாம் நம்மை ஒப்புக்கொடுப்பது ஒன்றே நற்செய்தி அறிவித்தலுக்கான அடிப்படையாய் அமைகிறது.

பேரிடர் காலங்கள் எப்போதுமே ஆன்மீகச் செழுமையை அதிகரித்திருக்கின்றன. எகிப்தில் நானூறு ஆண்டுகள் சுகமான இறைச்சியும் அப்பமும் சாப்பிட்டு வாழ்ந்து வந்த எபிரேயர்களுக்கு விடுதலை தேவைப்படவில்லை. எப்போது நுகத்தடி கடினமானதோ அப்போது தான் பக்தி அதிகரித்தது. அப்போது தான் செபம் அதிகரித்தது. அப்போது தான் கடவுளின் வல்லமை செயல்பட்டது. விடுதலை கிடைத்தது. நசுக்க நசுக்க அதிகரிக்கும் மூட்டைப் பூச்சி போல அழிவின் விளிம்பில் தான் ஆன்மீகம் விஸ்வரூபம் எடுக்கிறது. 

ஒன்றை மட்டும் நாம் மனதில் எழுதவேண்டும். சர்வதேச அழிவைக் கொண்டு வரும் கோவிட் அல்ல கொள்ளை நோய் ! பாவமே அதை விடப் பெரிய கொள்ளை நோய். நம்மை முழுமையாய் அழிக்கும் வல்லமை பாவத்துக்கே உண்டு. ஆனால், ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் அதற்கு தடுப்பூசி நமக்கு உண்டு. இறைமகன் இயேசுவின் இரத்தமே அது. 

இப்போதைய பேரிடர் காலமும் நமக்கு அதைத் தான் கற்றுத் தருகிறது. சமூக இடைவெளி போல, பாவத்தை விட்டு விலகியிருப்பதை அது நமக்குக் கற்றுத் தருகிறது. சுத்தமான செயல்களைச் செய்ய வேண்டும், தப்பித் தவறி கூட பாவம் நம் மீது படிந்து விடக்கூடாது என்பதில் சானிடைசர் பயன்படுத்தும் அக்கறை தேவைப்படுகிறது. தவறானவற்றைப் பேசாமல் இருக்கும் முகக் கவசம் தேவைப்படுகிறது. வருமுன் காக்கும் கபசுரக் குடிநீர் போலவோ, மாத்திரைகள் போலவோ நமக்கு இறைவார்த்தைகள் தேவைப்படுகின்றன. 

இன்றைய கோவிட் காலம் நமது நற்செய்தி அறிவித்தலை முடக்கியிருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் உலகெங்கும் நற்செய்தி பரவுதலுக்கான ஒரு புதிய விதையை இந்த காலம் நமக்கு வழங்கியிருக்கிறது. இந்தக் கால கட்டத்தில் புதுமையான பல வகைகளில் நற்செய்தி அறிவித்தல் நடைபெறுகிறது. 

  1. ஆன்லைன் ஆராதனைகள். 

‘திருச்சபை’ என்பது இறைமக்களின் கூட்டம், அது ஒரு கட்டிடம் அல்ல எனும் உண்மை இந்த காலகட்டத்தில் மீண்டும் ஒரு முறை அழுத்தமாய் எழுதப்படுகிறது. ரெண்டு கோடி ரூபாய் செலவாக்கிக் கட்டுகின்ற மணிக்கூண்டு அல்ல, விசாலமாய்க் கட்டுகின்ற ஆலயம் அல்ல. இறைமக்கள் இறைவனைத் தேடி வருகின்ற கூடுகை தான் திருச்சபை. அதை இன்றைய டிஜிடல் உலகம் யதார்த்தமாக்கிக் காட்டியிருக்கிறது. ஆராதனைகள் ஆன்லைன் வசதிகளில் வரும்போது பல மக்கள், பல முறை பார்க்கவும் முடிகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு நேரத்தைத் தவற விட்டவர்கள் இன்னொரு நாள் அதைப் பாக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது

யூடியூப், ஃபேஸ்புக், சமூக வலைத்தளங்கள் போன்றவையெல்லாம் ஆன்மிக வளர்ச்சிக்குப் பயன்படும் எனும் புரிதல் இன்றைக்கு திருச்சபைக்கு வந்திருக்கிறது. சாதி இன பேதங்களற்ற வீதியில் ஆராதனைகள் நடக்கின்றன. ஆலயங்களுக்குள் நிலவி வந்த சாதீய குழுக்களெல்லாம் டிஜிடல் வெளியில் காணாமல் போய்விட்டன. ஒரு சமத்துவ நற்செய்தி பரிமாறப்படுகிறது.

  1. டிஜிடல் கற்றல் 

ஆலய குழுக்கள், பைபிள் ஸ்டடி போன்ற செயல்களெல்லாம் ஆன்லைன் வீடியோக்கள் மூலம் நடப்பதால் எல்லோருமே பங்குபெற முடிகிறது. ஊர்ல இல்ல, வெளியூர்ல இருக்கேன் எனும் சாக்குப் போக்குகள் இன்றி ஸூம் கால்களோ, கூகிள் டியோவோ, டீம்ஸோ எல்லாரையும் வீடியோ கால் மூலமாக இணைக்கிறது. பல நாடுகளில் இருப்பவர்கள் கூட சொந்த ஊரிலுள்ள ஒரு குழுவோடு இணைகின்ற ஒரு சூழலையும் இது உருவாக்கித் தருகிறது. 

நல்ல செய்தி வழங்கும் நபர்களை ஒரு செய்திக்காக அணுகுவது எளிதாக இருக்கிறது. அதிக செலவில்லாமல், பயணத்தின் அலைச்சல் ஏதும் இல்லாமல் அவர்களும் இந்தப் பணியைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கிறது. நற்செய்தி அறிவித்தலும், நற்செய்தியை அறிந்து கொள்தலும் ஒருவகையில் எளிதாகியிருக்கிறது என்றே சொல்லலாம்.

  1. அன்பின் செயல்கள்

பேரிடர் காலங்கள் அன்பின் செயல்களை அதிகப்படுத்துவதற்கான காலங்கள். மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து மிகக் கடுமையான சூழலில் வாழ்கின்றனர். முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு அன்பின் செயல்களைச் செய்ய நமக்கு இன்றைக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். செயல்களால் அறிவிக்கும் நற்செய்தியே மிக முக்கியமானது என்பதை இயேசு பல முறை குறிப்பிடுகிறார். செயல்களற்ற விசுவாசம் செல்லரித்துப் போகும், செயலுடன் கூடிய விசுவாசமே விண்ணகத்தில் செல்வமாய் மாறும். இந்த உண்மையைப் புரிந்து கொள்ள இந்த பேரிடர் காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நற்செய்தி அறிவித்தலை கரம் கூப்பும் நிலையிலிருந்து, கரம் நீட்டும் நிலைக்கு பேரிடர் காலம் கொண்டு வந்திருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு உதவும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

  1. வீடியோ பதிவுகள் 

டிஜிடல் நற்செய்தி அறிவித்தலிலுள்ள ஒரு மிகப்பெரிய குறைபாடு என்னவெனில் நேருக்கு நேர் நாம் பேசும்போது கிடைக்கின்ற அன்னியோன்யமும், உடல் மொழிப் பரிமாற்றமும் கிடைக்காது என்பது தான். நேரடியான செய்தி நீண்ட நேரம் இருந்தால் கூட ரசிக்கும்படியாய் இருப்பதற்குக் காரணம் அந்த நேரடி அனுபவம் தான். டிஜிடல் வெளியில் வீடியோக்கள் மிகச் சுருக்கமாக, நேரடியாக ஒரு விஷயத்தை ஒரு நிகழ்வின் மூலமாகவோ, ஒரு கதையின் மூலமாகவோ சொல்வதாக இருப்பது சிறப்பானது. இன்றைக்கு நீண்டநேரம் வீடுகளிலேயே அடைபடும் சூழல் நிலவுகிறது. அப்போது நற்செய்தியை இத்தகைய சிறு வீடியோக்கள், சிறு குறுச் செய்திகள் போன்றவை சுமந்து செல்லும். 

எவ்வளவு புதுமையாக அந்தச் செய்தியைச் சொல்ல முடியும் என்பதைப் பொறுத்து அந்த செய்தி பலரை சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை. இறைவனின் அருளை நாடினால் அவர் இதில் மிகத் தெளிவான வழியைக் காட்டுவார் என்பதில் சந்தேகமில்லை. 

  1. தனித்திருக்கிறோம், தனியாக அல்ல !

நாம் வீடுகளில் தனித்திருக்கிறோம். தனியாக அல்ல, நம்முடன் இறைவன் இருக்கிறார்.  இறைவன் எங்கே இருக்கிறார் ? இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? எனும் கேள்விகள் தேவையற்றவை. மீனுக்குள் மூழ்கிக் கிடந்த போது யோனா, கடவுளைப் புகழ்ந்தார். நமது அறைகள் அதை விட வசதியானவை. நற்செய்தி அறிவித்தலுக்காகவும், மக்களுக்காகவும், உலகிற்காகவும் செபிக்க நமக்கு மாபெரும் வாய்ப்பைத் தருகிறது. 

நாம் விலகியிருக்கிறோம், உலகின் நெருக்கத்திலிருந்து, ஆனால் கடவுளின் அன்பிலிருந்து அல்ல. நாம் அடைபட்டுக் கிடக்கிறோம், ஆனால் இறைவனில் சுதந்தரமாய் இருக்கிறோம். இந்த உணர்வு ஒன்றே போதும் நம்மை எந்த சூழ்நிலையும் நற்செய்தி அறிவித்தலுக்குத் தயாராக்கும். இயேசு வாழ்நாளில் பயணித்த தூரம் சுமார் 200 மைல்கள் என்கிறது வரலாற்றுக் கணக்கு, இன்றைய டிஜிடல் வசதிகளோ கண நேரத்தில் நம்மை பல்லாயிரம் மைல்கள் பயணிக்க வைக்கிறது. இந்த சூழ்நிலையை இறைவனின் அருளுடன் பயன்படுத்துவோம். 

பேரிடர் காலம் அச்சத்தின் காலமல்ல, இறைவனின் பேரன்பைப் பறைசாற்றும் காலம்.

*

சேவியர்

Desopakari Oct 2020

Posted in Animals Birds, Bible Animals

உயர்திணையான அஃறிணைகள் – மீன்

உயர்திணையான அஃறிணைகள்

மீன்

நீரின் மீது
அசைவாடிக் கொண்டிருந்தார்
ஆவியானவர்
அப்போது !

நீரின் உள்ளே
நீராடுகிறேன் நான்
இப்போது !!

விவிலியத்தில்
நீரற்ற பக்கங்களிலும்
நான்
நீச்சலடித்துக் கொண்டே
இருக்கிறேன் !

வாலாட்டுதல்
என் இயல்பு, எனினும்
கட்டளைக்குக்
கீழ்ப்படியாமல்
வாலாட்டியதில்லை.

யோனாவை
விழுங்கச் சொன்னபோது
விழுங்கினேன்,
செரிக்காமல் பதுக்கி வைத்து
கரையோரம் துப்பினேன் !

உலகின்
முதல் நீர்மூழ்கிக் கப்பல் நான் !

வாயில்
நாணயத்தைச் சுமந்து
இயேசுவின் சீடரிடம்
கொடுத்தேன் !

உலகின்
முதல்
பணப் பரிவர்த்தனைக்காரன்
நான் !

இயேசு சொன்னபோது,
வரிசையாய்ப் போய்
வலைகளில் நுழைந்தோம் !
வலை கிழியாமல்
வாய்மூடிக் கிடந்தோம் !

இறந்தபின்னும்
இறைவனுக்காய் உழைத்தோம்,
இரண்டு பேர்
ஐயாயிரம் பேருக்கு
ஆகாரமாக ஆனோம் !

இயேசுவின் வாழ்க்கை
மீன்களோடும்
மீனவர்களோடும் தானே
கழிந்தது.

அவரது
புதுமைகளில் நாங்கள்
புகுந்து கொண்டோம்,
உவமைகளிலும் நாங்கள்
உட்கார்ந்து இருந்தோம்.

ஆதிக் கிறிஸ்தவர்கள்
ஒளிந்து செபித்த
இடங்களில்
மீன் குறியீடு தான் அடையாளமானது !

தங்களை
ரகசியமாய் வெளிப்படுத்த
மீன் குறியீடு பயன்பட்டது !
என்றெல்லாம்
வரலாறு என்னை
வரைந்து வைத்திருக்கிறது.

எருசலேம் தேவாலயத்தின்
எட்டு வாசல்களில்
ஒன்றை
மீன்வாசல் என்று
விவிலியம் என்னை
பெருமைப்படுத்தியிருக்கிறது.

கல்லறையின்
இருளுடைத்து உயிர்த்த இயேசு
முதலில் சமைத்தது
என்னைத் தான் !

நான்
ஆழத்துக்கு வலை வீசினால்
அங்கே செல்கிறேன்,
வலப்பக்கம் வலை வீசினால்
அங்கே செல்கிறேன்.

கட்டளைக்குக் கட்டுப்படும்
என்னைப் பிடிப்பது
எளிது !

ஆனால்
மனிதர்கள் அப்படியல்ல !

அதனால் தான்
இயேசு சொன்னார்
வாருங்கள்
உங்களை
மனிதர்களைப் பிடிப்போராக்குவேன்

*

சேவியர்

Posted in Articles, கிறிஸ்தவம், Christianity, Desopakari

கிறிஸ்மஸ் மனுக்குலத்தின் மாபெரும் அருட்கொடை

Image result for christmas

*

கிறிஸ்மஸுக்கு என்னடா கிஃப்ட் ?
கிறிஸ்மஸ் தாண்டா மிகப்பெரிய கிஃப்ட் !

இந்த இரண்டு வரிகளும் சொல்கின்ற செய்தியை உள்வாங்கிக் கொண்டோமென்றால் இந்தக் கட்டுரையை விரிவாக எழுதத் தேவையில்லை. கிறிஸ்மஸ் என்பது தந்தையாம் கடவுள் இயேசுவை மீட்பின் பரிசாக நமக்கு அளித்தது தான். இதொன்றும் ஏனோ தானோவென்று கடவுள் எடுத்த முடிவல்ல. சத்திரங்கள் சாத்திக் கொண்டதால் வேறு வழியில்லாமல் தொழுவத்தைத் தஞ்சம் புகுந்தது எதேச்சையான நிகழ்வல்ல. சிலுவையின் உச்சியில் இயேசு நமக்காகப் பாவியானதும் பலியானதும் துரதிர்ஷமாய் நடந்ததல்ல. “சே.. பேட் லக்” என நாம் நினைப்பது போன்ற நிகழ்வு எதுவுமே இயேசுவின் வாழ்க்கையில் நடக்கவில்லை.

இயேசுவின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் தந்தையாம் இறைவன் உலகத் தோற்றத்துக்கு முன்பே எழுதி வைத்தவையே. இவற்றைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நமது சிந்தனைகளுக்கு நீள அகல ஆழம் இல்லை என்பது தான் உண்மை.

கிறிஸ்மஸ் என்றாலே பரிசுகள் வழங்கவேண்டுமென ஓடித் திரியும் போது, பரிசாய் வந்தவரை பல வேளைகளில் மறந்து விடுகிறோம். இதை விடப் பெரிய பரிசு கிடைக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். யாருக்கேனும் பரிசு கொடுக்க மறந்து விட்டால் தவித்து விடுகிறோம், யாரேனும் நமக்குப் பரிசு தராவிட்டால் கடுப்பாகி விடுகிறோம். இந்த கிறிஸ்மஸ் தினத்தில் நாம் மனதில் இருத்த வேண்டிய முதல் சிந்தனை. கிறிஸ்மஸுக்குப் பரிசு என்பதல்ல, கிறிஸ்மஸே பரிசு என்பது தான்.

கிறிஸ்மஸுக்கு மிக முக்கியமான இரண்டாவது விஷயம் சாப்பாடு. ஒருவருடமாக கூட்டில் வளர்த்து வருகின்ற கோழிகளின் கழுத்து வெட்டப்படும். அதிகாலையிலேயே மட்டன் கடைகளில் டோக்கன் கொடுக்குமளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும். ஹோட்டல்களிலும் ஸ்பெஷல் பிரியாணிகள் வாசனை நிரப்பும். கிறிஸ்மஸ் தினத்தில் நல்ல சாப்பாடு வாய்க்கவில்லையென்றால் அது ஒரு மிகப்பெரிய குறையாய் நமக்கு தெரியும்.

கிறிஸ்மஸுக்கு என்ன சாப்பாடு ?
கிறிஸ்து !

நானே வானிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு என்றார் இயேசு. நாம் பிரியாணி தேடும் அவசரத்தில் பிரியமானவரை பரிதவிக்க விட்டு விடுகிறோம். வாழ்வளிக்கும் உணவை விட்டு விட்டு வாய்க்கு சுவையளிக்கும் உணவின் பின்னால் அலைந்து திரிகிறோம். தமது உடலையே நமக்காய் தந்த இறைமகனை மறந்து விடுகிறோம். இந்த கிறிஸ்மஸ் தினத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய இரண்டாவது சிந்தனை. கிறிஸ்மஸுக்கு ஸ்பெஷல் உணவு என்ன ? கிறிஸ்து தான் ! என்பதே.

மூன்றாவதாக கிறிஸ்மஸ் நம்மை துரத்துவது ஆடை விஷயத்தில் தான். ஆடை வாங்குவதற்கான முன்னேற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே துவங்கி விடுவதும் உண்டு. சிலர் ஸ்பெஷலாக ஆடைகளை வடிவமைக்கவும் கொடுப்பார்கள். நண்பர்களென்றால் ஒரே மாதிரி ஆடை வேண்டும் என அடம்பிடிப்பார்கள். அடுத்த நபரின் ஆடைகளின் அழகையையும், தரத்தையும், நிறத்தையும், விலையையும் ஆய்வு செய்து செய்தே சர்ச் நேரம் முடிந்து விடும். அந்த அளவுக்கு மிக முக்கியமான விஷயமாய் இருக்கிறது ஆடை.

கிறிஸ்மஸுக்கு சிறந்த ஆடை எது ?
ம்ம்…கிறிஸ்து என்ன போர்த்தியிருந்தார் ?

தொழுவத்தில் பிறந்த இயேசுவைப் போர்த்தியிருந்தது பழைய கந்தை. மரியாவும், யோசேப்பும் பணக்காரர்களல்ல. அவர்கள் ஏழைகளின் பிரதிநிதிகள். அவர்களிடம் மழலை இயேசுவைப் போர்த்துவதற்குக் கூட ஒரு நல்ல துணி இருக்கவில்லை. கந்தை என்பது தமிழுக்காக எடுக்கப்பட்ட வார்த்தை தான். உண்மையில் அது வெட்டப்பட்ட துண்டு துணிகளை இணைத்து கயிறு போலக் கட்டி வைப்பது என்பது தான் எபிரேய விளக்கம். அதைக் கொண்டு தான் இயேசு போர்த்தப்பட்டார். அல்லது சுற்றிக் கட்டப்பட்டார்.

ஒரு சின்ன பரிசுப் பொருளைக் கொடுக்க வேண்டுமென்றால் கூட நாம் அதற்காக சூப்பர் “ரேப்பர்” வேண்டுமென கேட்டு ஒட்டுகிறோம். அதன் மேல் அழகான அலங்கார ரிப்பனையோ, அட்டையையோ ஒட்டுகிறோம். சாதாரணப் பரிசுக்கே அத்தனையெனில், உலகின் உச்சபட்சமான பரிசுக்கு என்ன வழங்கப்பட்டிருக்க வேண்டும் ? கந்தை ! அது தான் இறைவனின் தேர்வு. இறைவன் பார்வையில் எது விலைமதிப்பானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு இறைவனைப் போன்ற சிந்தை வேண்டும். இந்த கிறிஸ்மஸ் நாளில் மனதில் கொள்ள வேண்டிய மூன்றாவது சிந்தனை, ஆடை என்பது தேவைக்கானது, மேன்மைக்கானதல்ல.

கிறிஸ்மஸ் என்பது மனுக்குலத்துக்குக் கிடைத்திருக்கின்ற மாபெரும் பரிசு. இந்தப் பரிசு நமக்குச் சொல்லும் செய்திகள் என்னென்ன ?

1. அளிப்பவரின் பிரியமே, பரிசு.

எந்த ஒரு பரிசும் முதலில் வெளிப்படுத்துவது அந்தப் பரிசை அளிப்பவர் நம்மீது வைத்திருக்கின்ற அன்பு தான். அதுவும் நினையாத நேரத்தில் அளிக்கப்படுகின்ற பரிசுகள் அதீத பிரியத்தைப் பிரதிபலிக்கின்றன. பரிசுகள் கட்டாயத்தினாலோ, கடமைக்காகவோ அளிக்கப்படுவது பரிசுகளையே அவமானப்படுத்துகின்ற செயல். இயேசு இந்த உலகிற்கு பரிசாக வந்தது, தந்தையாம் இறைவனின் ஆழமான அன்பைப் பிரதிபலிக்கிறது. அந்தத் தந்தையின் அன்பை அப்படியே பிரதிபலிக்கும் பரிசுப் பொருளாக இயேசுவின் வாழ்க்கை இருந்தது. நமது பரிசுகள் உண்மையான நம் அன்பைப் பிரதிபலிக்கிறதா ?

2. பெற்றால் மட்டுமே, பரிசு.

பரிசைக் கொடுக்கலாம். எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. “உன் பரிசெல்லாம் எனக்கு வேண்டாம், என உதறிவிட்டுச் செல்லக் கூடிய ஏராளம் மக்கள் உண்டு”. யப்பா.. இலவசம் தான்பா என்று வலியுறுத்தினாலும் கூட, ‘உன் பரிசை நீயே வெச்சுக்கோ’ என சொல்லிவிட்டுக் கடந்து போகிறவர்கள் அநேகர். இயேசு எனும் பரிசையும் எத்தனையோ கோடி மக்கள் உதாசீனம் செய்து, நிராகரிக்கின்றனர். எனினும் பரிசுப் பொருள் திரும்பப்படவில்லை. விரும்பும் போது எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம், இறைமகன் இயேசு எனும் பரிசை உவகையோடு ஏற்றுக் கொள்கிறோமா ?

3. தகுதியைப் பார்க்காத, பரிசு

கிறிஸ்மஸின் ஆகச் சிறந்த மகிழ்ச்சிக்குக் காரணம், நாம் அந்தப் பரிசுக்குத் தகுதியற்றவர்கள் என்பதே. வாழ்வில் நிராகரிக்கப்பட்ட ஒருவரை அரவணைத்து ‘இதோ உலகின் மிகப்பெரிய பரிசு’ என கொடுப்பது எவ்வளவு இனிமையானது. பட்டினியின் அகோரப் பிடியில் இருப்பவனுக்கு லாட்டரி அடிப்பதைப் போன்ற அனுபவம் அது. நாம் தகுதியற்றவர்களாய் இருந்தபோதே, நாம் பாவிகளாய் இருந்த போதே இறைமகன் இயேசு எனும் மீட்பின் பரிசு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசை இதயத்தில் அமர வைக்க நம் மனதை சலவை செய்திருக்கிறோமா ?

4. ஆராய்ந்து அளிக்கப்படும், பரிசு

ஒருவருக்குப் பரிசு கொடுக்கவேண்டுமெனில் என்ன செய்வோம் ? முதலில் அந்த நபருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது ? எது அவருக்குப் பயனுள்ளதாக இருக்கும், எது பயனளிக்காது ? எது அவரிடம் இருக்கிறது, எது இருக்காது ? போன்ற பல விஷயங்களை அலசி ஆராய்வோம். பரிசைப் பெறப் போகும் நபருக்குத் தேவையானதையே நாம் பரிசாக கொடுப்போம். அல்லது பெறப் போகும் நபருக்கு மகிழ்ச்சியை அளிப்பதையே பரிசாகக் கொடுப்போம். கடவுளும் அப்படித் தான். உலக மக்களின் மகிழ்ச்சிக்காக இயேசு வழங்கப்படுகிறார். இயேசுவின் வருகை அவர் நமது பாவ வாழ்வை அறிந்ததன் வெளிப்பாடு. நமக்கு மீட்பு தேவை என்பதன் வெளிப்பாடு. அதை நாம் உணர்கிறோமா ? அந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொண்டோமா ?

5. நீண்டகாலப் பயனளிக்கும், பரிசு.

பரிசுகளின் விஷயத்தில் நாம் பார்க்கின்ற இன்னொரு விஷயம், “இது கொஞ்ச நாளாச்சும் நல்லா இருக்குமா ? ” என்பது தான். மிகவும் மலிவான, விரைவிலேயே நாசமாகின்ற பொருட்களை நாம் பிரியமானவர்களுக்குக் கொடுப்பதில்லை. நல்ல தரமானதாக இருக்க வேண்டும் என்றே ஆசிப்போம். இறைவன் தந்த பரிசு அந்தவகையில் எப்போதுமே அழியாதது. நிலைவாழ்வைத் தரக்கூடியது. நிலைவாழ்வைத் தருகின்ற வேறு எந்த பரிசும் நம்மிடம் இல்லை என்பதால் தான் இயேசு உன்னத பரிசாக மாறுகிறார். பரிசு நமக்கு நிலைவாழ்வைத் தரவிரும்புகிறது, நாம் அதை உணர்கிறோமா ?

இந்த கிறிஸ்மஸ் நாளில் உலகிற்கு அளிக்கப்பட்ட மாபெரும் பரிசான இறைமகன் இயேசுவை ஏற்றுக் கொள்வோம். அவரைப் பரிசாகத் தந்தவரின் அன்பை புரிந்து கொள்வோம். அந்தப் பரிசு நமக்குச் சொன்ன மனித நேயப் பணிகளை தொடர்ந்து செய்வோம். அந்தப் பரிசின் நோக்கமான நிலைவாழ்வை சொந்தமாக்கிக் கொள்வோம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்

*

சேவியர்

Desopakari

Posted in Articles, WhatsApp

நீ பாவம் செய்யமாட்டாய்

எல்லாவற்றிலும் உன் முடிவை
நினைவில் கொள்;
அவ்வாறெனில் ஒருபோதும்
நீ பாவம் செய்யமாட்டாய்

சீராக் 7 : 36

Image result for sirach 7:36  bible

பாவம் செய்யாமல் இருக்க விவிலியம் நமக்கு பல்வேறு வழிகளையும், அறிவுரைகளையும் தருகிறது. “எல்லாவற்றையும் இறைவனுக்குப் பிடித்தமானதாகச் செய்வது பாவத்தில் நாம் விழாமல் இருக்க உதவும். புதிய மனிதனை அணிந்து கொண்டு பழைய இயல்புகளை விட்டு விடுவது பாவத்தில் விழாமல் நம்மைத் தடுக்கும். தூய ஆவியானவரின் துணையோடு வாழும் போது பாவத்தை மேற்கொள்ளும் வலிமை கிடைக்கும்”, என்றெல்லாம் விவிலியம் நம்மை சிறப்பாக வழிநடத்துகிறது.

சீராக்கின் நூல் இன்னொரு அழகான வழிகாட்டுதலைத் தருகிறது. “நீ பாவம் செய்யாமல் தப்பிக்க வேண்டுமெனில், எப்போதும் வாழ்வின் முடிவைக் குறித்த சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும்” என்கிறது அந்த நூல். நரகமா, சொர்க்கமா ? இறைவனோடான ஐக்கியமா, சாத்தானோடான சங்கமமா ? எனும் கேள்வியை ஒவ்வொரு செயலிலும் கேட்டு, சரியான வழியைத் தேர்ந்தெடுத்தால் நமது வாழ்க்கை பாவத்தைக் கடந்த வாழ்க்கையாய் மாறும்.

சீராக் நூல் இணை திருமறைகள் என இப்போது அழைக்கப்படுகிறது. துவக்க காலத்தில் திருப்பாடல்கள் நூலுக்கு அடுத்தபடியாக பயன்படுத்தப்பட்டு வந்த நூல் இது என்பது குறிப்பிடத் தக்கது. இதை சபை நூல் என்றும் அழைப்பார்கள். இந்த நூல் எபிரேயத்தில் எழுதப்பட்டு அந்த குறிப்புகள் தொலைந்து போக, கிரேக்க மொழிபெயர்ப்பை வைத்தே இந்த நூல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. எனவே இது கிரேக்கத்தில் எழுதப்பட்ட நூல் எனும் தவறான சிந்தனையுடன் பலரால் நிராகரிக்கப்பட்டு வந்தது. எனினும் ஆதித் திருச்சபை இது இறைவனின் நூல் என அரவணைத்தே வந்தது.

சமீபத்தில் நடந்த கும்ரான் மலைப்பகுதி கண்டுபிடிப்புகளில் ஏசாயா நூலின் பழைய படிவங்களும், சீராக்கின் எபிரேய பதிவுகளும் கிடைத்திருக்கின்றன.

சீராக்கின் நூலின் ஆசிரியர் தருகின்ற இந்த அறிவுரை வெகு எதார்த்தமான அறிவுரையாய் நமக்கு முன்னால் நிற்கிறது. சிலுவையில் இறைமகன் இயேசு சாத்தானைத் தோற்கடித்தார். அவனது முடிவு இயேசுவின் பலியோடு ஊர்ஜிதமானது. நமது துவக்கம் இயேசுவின் மரணத்தோடு துவங்க வேண்டும்.

நம்மை அழித்து, இறைவனில் முளைப்போம். செய்யும் செயல்கள் யாவற்றிலும் நமது வாழ்க்கையின் முடிவு பற்றிய சிந்தனை எச்சரிக்கையாய் ஒலிக்கட்டும்.

*

சேவியர்

Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்

Image result for mark 8:22-26

மார்க் 8:22..26

அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்.

அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார்.

அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

இயேசு அவரிடம், “ஊரில் நுழைய வேண்டாம்” என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

*

இயேசுவின் புதுமைகள் ஒவ்வொன்றும் நம்மை வியப்புக்குள் அழைத்துச் செல்லும் அனுபவமாக இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இயேசுவிடம் நம்பிக்கையோடு வருகின்ற மக்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட திருப்தியோடு திரும்பிச் செல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் இயேசுவின் குணமாக்கும் முறை சீடர்களையும், மக்களையும் வியப்புக்கும் கேள்விகளுக்கும் உள்ளாக்கி விடுகின்றன. “கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? (மார்க் 8:18) ” என சற்று நேரத்திற்கு முன்பு தான் சீடர்களிடம் அவர் கேட்டிருந்தார். இப்போது இந்த அதிசயம் அவர்களுக்கு மறைமுகமாய் சொல்லப்பட்ட பாடமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இயேசு செய்த அற்புதங்கள், நமது வாழ்வில் அற்புதங்களை விளைவிக்க வேண்டுமெனில் அவை கூறும் மறைவான உண்மைகளை நாம் கண்டு கொள்தல் அவசியம். அப்படி மறை உண்மைகளைக் கண்டு கொள்ள நாம் தூய ஆவியானவரின் வெளிப்படுத்துதலை தொடர்ந்து நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

இந்த அற்புதமும் நமக்கு பல்வேறு ஆன்மீகப் புரிதல்களைக் கற்றுத் தருகிறது.

1. பார்வையற்ற ஒரு நபரை இயேசுவிடம் கொண்டு வந்து அவரைக் குணமாக்க இயேசுவிடம் வேண்டுகின்றனர் நண்பர்கள். ஆன்மீகப் பார்வை இழந்த நண்பர்களை நாம் இயேசு எனும் வெளிச்சத்தின் முன் கொண்டு வரவேண்டிய கடமை உணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்.

அதே போல, ஆன்மீக இருளில் நாம் இருக்கும் போது நம்மை இயேசு எனும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்ற நண்பர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களைச் சார்ந்தும், அவர்களுக்கு நன்றியுடையவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். உலக விஷயங்களுக்கும், கேளிக்கைகளுக்கும் கொண்டு செல்லும் நண்பர்கள், “பலர்” இருப்பார்கள். அவர்களைத் தவிர்த்து விட்டு நம்மை இயேசுவிடம் திரும்பத் திரும்ப அழைத்து வரும் அந்த “சிலர்” மீது நமது கவனமும், சார்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்க்கை சரியான வழியில் தொடர்ந்து நடக்கும்.

2. “உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.( உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.) என்கிறது விவிலியம். நாம் ஆன்மீக வெளிச்சம் விழாத மனிதர்களாக இருக்கிறோம். வேதத்தின் அதிசயங்களைக் காண முடியாமல் நமது கண்கள் அடைபட்டுக் கிடக்கின்றன. அவற்றை இயேசுவின் தொடுதல் மட்டுமே திறக்க முடியும்.

தூய ஆவியின் கரம்பிடித்தலோடு இன்று நமது அகக்கண்கள் திறக்கப்பட வேண்டும். அப்போது தான் மறை உண்மைகள் நமது கண்களுக்கு மறைவாய் இருக்காமல் வெளிப்படத் துவங்கும். அதற்காக நாம் இயேசுவை நாடி வருபவர்களாக இருக்க வேண்டும்.

3. இயேசு பார்வையற்றவருடைய கரத்தைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். இயேசுவிடம் வருகின்ற நபர்களை அவர் கரம் பிடித்து அழைத்துச் செல்பவராக இருக்கிறார். நம்பிக்கையற்ற கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் செல்கிறார். ‘நீ ஊருக்கு வெளியே வா’ என அவரிடம் இயேசு சொல்லவில்லை. ‘இவரைக் கூட்டி வாருங்கள்’ என சீடர்களிடம் சொல்லவில்லை. அவரைக் கூட்டி வந்த மனிதர்களிடமும் அந்த பொறுப்பை ஒப்படைக்கவில்லை. தானே அவரது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். இது ஒரு அற்புத அனுபவம்.

நாமும் இயேசுவிடம் வரும்போது அவர் நமது கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார். நம்பிக்கையற்றோர் கூட்டத்திலிருந்து நம்பிக்கையின் நாட்டுக்கு. கவலையின் கூடாரத்திலிருந்து மகிழ்வின் தோட்டத்துக்கு. அழிவின் உலையிலிருந்து, வாழ்வின் நிலைக்கு. குழப்பத்தின் பிடியிலிருந்து தெளிவின் பாதைக்கு. அவர் நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். அவரை நாடி வரவேண்டியது மட்டுமே நமது வேலை ! இயேசு நமது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்கிறார் எனில் ஒன்று மட்டும் நிச்சயம் ! ஏதோ ஒரு அதிசயத்தை நாம் காணப் போகிறோம் !

4. இயேசு அவருடைய விழிகளில் உமிழ்ந்து அவரைத் தொடுகிறார். இயேசு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக தொடுகிறார். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் குணமாக்குகிறார். அவருடைய வழிகள் நமது வழிகளைப் போல இருப்பதில்லை. ஏன் அவர் அப்படி செய்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தாமல் நாம் உணரவும் முடியாது. ஆனால் அவர் என்ன செய்தாலும் அதற்காக நம்மை முழுமையாய் ஒப்படைப்பதில் இருக்கிறது நமது நம்பிக்கையின் வெளிப்பாடு.

நமது வாழ்க்கையை நாம் முழுமையாய் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். அடுத்த நபருக்கு அவர் அளித்த கொடைகளையோ, நன்மைகளையோ, ஆசீர்வாதங்களையோ அடிப்படையாய் வைத்து அவர் நமக்குச் செய்யப்போகும் நலன்களை சிந்திக்கக் கூடாது. அல்லது, ‘இப்படி கடவுள் செய்வதில்லையே’ என சந்தேகம் கொள்வதும் கூடாது. ஒவ்வொருவரையும் இறைவன் ஒவ்வொரு விதமாய் ஆசீர்வதிப்பார் எனும் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம்.

5. ‘ஏதாவது தெரிகிறதா ?’ எனும் இயேசுவின் கேள்வி அவரது தாழ்மையையும், அவரது அன்பையும் எடுத்துக் காட்டுகிறது. ‘தன்னிடம் வல்லமை இல்லை’ என்பதல்ல இயேசுவின் கேள்வியின் பொருள், அந்த வல்லமை உன்னில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமே அது. அவரது வல்லமை நம்மில் செயலாற்றியிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள அவர் ஆர்வமாய் இருக்கிறார்.

அவரது தொடுதலும் அவரது வல்லமையும் நம்மை ஒரு புதிய அனுபவத்துக்கு கொண்டு செல்லும். அந்த அனுபவத்தை அவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென இயேசு விரும்புகிறார். இதுவரை காணாத ஆன்மீகத்தின் வெளிச்சத்தை அவரது தொடுதலினால் நாம் கண்டு கொள்கிறோமா ? இதுவரை நம்மை வந்தடையாத உண்மைகள் நம்மை வந்தடைகிறதா ? இருளின் பள்ளத்தாக்கில் கிடந்த நாம், ஒளியில் மேட்டுக்கு ஏறிவந்திருக்கின்றோமா ? இயேசு நம்மிடம் விசாரிப்பவராய் இருக்கிறார்.

6. அந்த மனிதர் முழுமையாய்ப் பார்வையடையவில்லை. அதை அவர் இயேசுவிடம் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார். ‘மனிதர்கள் நடக்கும் மரங்களாய் இருக்கிறார்கள்’ என்கிறார் அவர். ஆன்மீக இருட்டிலிருந்து வெளியே வருகின்ற அனுபவம் அலாதியானது. ஆனால் முழுமையான தெளிவான பார்வை கிடைக்கவில்லையேல், இயேசுவிடம் அதை ஒப்புக் கொள்வது மிகவும் முக்கியம். நாம் நமது குறைகளை, பலவீனங்களை, நமது யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளும் போது பெரிய அதிசயங்கள் நமக்காய் காத்திருக்கும்.

இறைவனின் அருகாமை நமக்கு இறைவார்த்தையின் பொருளையோ, ஆன்மீகத்தின் பாதையையோ மெல்ல மெல்ல காட்டித் தரும். அதை முழுமையாய் தெளிவாய் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் வாழ்க்கையை நாம் வாழ முடியும்.

மீட்பு என்பது சட்டென கிடைக்கும் அனுபவம், மீட்பின் வழியில் நடப்பது என்பது தொடர்ச்சியாய் கிடைக்கும் அனுபவம். பாதைக்குக் கீழ் பரவும் வெளிச்சம் போல, ஆன்மீக வெளிச்சத்தின் வழியில் தொடர்ந்து நடந்திட வேண்டும்.

7. இயேசு இரண்டாவது முறையாக அவரது ‘கண்களில்’ தொட்டபோது அவருடைய கண்கள் தெளிவடைய பார்வையை தெளிவாகப் பெற்றுக் கொண்டார். இறைவனின் இரண்டாம் தொடுதல் நமக்கு தெளிவான பார்வையைப் பெற்றுத்தரத் தேவையாகிறது. பல வேளைகளில் நாம் இறைவனின் தொடர் தொடுதலுக்காகக் காத்திருப்பதில்லை. ஒரு முறை கிடைத்த அனுபவத்தோடு திருப்திப்பட்டு விடுகிறோம்.

இரண்டாவது தொடுதல் என்பது இயேசுவின் இயலாமையின் வெளிப்பாடல்ல, அவரது அன்பின் வெளிப்பாடு. “நான் பார்வை பெறவேண்டும்” என இந்த மனிதர் சொல்லவில்லை. அவரது நண்பர்கள் தான் வேண்டுகின்றனர். அவரது விசுவாசத்தின் பலவீனம் அவருக்கு இரண்டாவது தொடுதலில் தேவையை உருவாக்கியிருக்கலாம். நாம் அனைவருமே விசுவாசத் தேவையில் இருக்கிறோம். பல வேளைகளில் தடுமாறுகிறோம். இயேசுவின் இரண்டாம் தொடுதல் நிச்சயம் வேண்டும் எனும் உண்மையை உணர்கிறோமா ?

8. ஊரில் நுழைய வேண்டாம் என இயேசு அவரை அனுப்பி வைக்கிறார். பழைய வாழ்க்கையை விட்டு வெளியே வந்தபின் மீண்டும் அந்த பழைய வாழ்க்கைக்குள் நுழையும் ஆர்வத்தை நாம் காட்டக் கூடாது. இயேசு நம்மைக் கரம்பிடித்து, நமது வாழ்க்கையில் ஆன்மீகப் பார்வையைக் கொண்டு வந்தபின் மீண்டும் இருட்டுக்குள் வாழ செல்லக் கூடாது என்பதே இயேசு சொன்ன அறிவுரை.

நமது வாழ்க்கை இயேசுவின் தொடுதலுக்கு முன், இயேசுவின் தொடுதலுக்குப் பின் என இரண்டு பிரிவாக இருக்க வேண்டும். தொடுதலுக்குப் பின்னான தூய வாழ்வு, பழைய வாழ்க்கையோடு கலந்து விடாமல் இருக்க வேண்டும். புதிய ரசத்தைப் பழைய தோற்பையில் ஊற்றி வைப்பது ஆபத்தானது. பழைய ஆடையிலுள்ள கிளிசலில், புதிய ஆடையை ஒட்டுப் போடுதல் பயனளிக்காது. எனவே புது வாழ்க்கை பெற்ற நாம் பழைய பாவத்தின் அழுக்குகளைத் தேடி செல்லக் கூடாது.

9. பார்வையற்ற நபரை இயேசுவிடம் கொண்டு வருகின்ற நபர்கள் அவரைத் தொடுமாறு வேண்டுகின்றனர். இயேசு எப்படி நலமளிக்க வேண்டும் எனும் ஒரு சிந்தனையை அவர்களுடைய மனதில் அவர்கள் வைத்திருக்கின்றனர். ஆனால் இயேசுவோ அவருக்கென ஒரு வழியை வைத்திருக்கிறார். இரண்டாவது தொடுதல் தவறல்ல என்பதை சீடர்களுக்கு புரிய வைக்கிறார். முதல் முறையில் எல்லாம் சரியாய் அமைந்து விடவேண்டுமெனும் கட்டாயமில்லை என அவர் புரிய வைக்கிறார்.

நாமும் பல வேளைகளில், ‘இயேசுவே இது எனக்கு வேண்டும், இப்படி வேண்டும்’ என இயேசுவுக்கு கட்டளையிடுகிறோம். அல்லது அவருக்குத் தெரியாதது போல நாம் அவருக்குக் கற்றுக் கொடுக்க முயல்கிறோம். அது தவறான அணுகுமுறை. நமது தேவைகளை இயேசுவிடம் சொல்ல வேண்டும், அதற்கான தீர்வை அவர் பார்த்துக் கொள்வார்.

10. கடைசியாக இயேசு, அந்த மனிதரை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். அவருடைய பார்வையின் மகிழ்ச்சியை அவரது குடும்பம் அனுபவிக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். அவரது மகிழ்ச்சி இல்லத்தில் நிரம்ப வேண்டும் என அவர் ஆசிக்கின்றார்.

நமது வாழ்க்கையிலும் நமக்குக் கிடைக்குன்ற ஆன்மீக வெளிச்சங்கள் முதலில் நமது குடும்பத்தினரிடம் ஒளிரப்பட வேண்டும். அவர்களும் இறைவனின் வெளிச்சத்தில் நடக்க வேண்டும். நற்செய்தி முதலில் குடும்பத்தில் பகிரப்பட வேண்டும். குடும்பங்கள் குட்டித் திருச்சபைகளாக உருவாகும் போது தான் சமூகம் அதன் பலனை அனுபவிக்கும்.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*