Posted in Articles, Sunday School

சோம்பலை உதறி விடு

சோம்பலை உதறி விடு சொர்க்கத்தைத் தொட்டு விடு !

Image result for don't be lazy clipart

சோம்பலை உதறி எறிந்து விட்டு இங்கே வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் !

சோம்பலை உதறிவிடு, சொர்க்கத்தைத் தொட்டு விடு ! எனும் தலைப்பு மனதுக்குள் பல்வேறு சிந்தனைகளை எழுப்பியது !

சோர்வு வந்து சேரும் முன்பே ஓய்வெடுக்கத் துடிக்கும் மனநிலையைத் தான் சோம்பல் என்று சொல்வார்கள். சோம்பல் ஒரு தற்காலிக சுகம் !
ஆனால் அது ஒரு நீண்டகாலத் துயரம் !

படுக்கையிலே புரண்டு படுத்து,
எழும்ப வேண்டுமெனும் மனதை தடுத்து,
இன்னும் கொஞ்சம் இளைப்பாறுவோம் என்பதில் சோம்பல் தொடங்குகிறது !

பாடங்களை சற்றே ஒதுக்கி
இமைகளை சற்றே இறக்கி
கடமையைக் கொஞ்சம் பதுக்கி வைக்கும் இடத்தில் சோம்பல் தொடருகிறது !

சோம்பல் !
நாளைய தோல்விகளுக்காக இன்று நாம் நடத்தும் ஒத்திகை !

சோம்பலின் வால் பிடித்துக் கிடப்பவர்கள் எப்போதுமே வெற்றியின் தோள் தொட்டு நடப்பதில்லை !
சோம்பல் வெற்றியின் எதிரி !

ஓடி ஓடிக் களைத்து விட்டேனென காற்று சோம்பல் பட்டால் பூமி வாழுமா ?
நடந்து நடந்து கால் வலிக்கிறதென நதிகள் நின்று விட்டால் தண்ணீர் கிடைக்குமா ?
சுட்டது போதும் ஒருமாதம் விடுப்பில் போகிறேன் என சூரியன் சொன்னால் பச்சையம் தயாரிக்க பயிர்கள் எங்கே போகும் !

ஐம்பூதங்கள் சோம்பல் கொண்டால் பூமிப் பந்து அழிந்து விடும் ! அவை சுறுசுறுப்பாய் இயங்குகின்றனர்.

அதே போல, ஐம்புலன்கள் சோம்பல் கொண்டால் உடல் அழிந்து விடும்.
நுகர்ந்தது போதுமென நாசி நிறுத்துவதில்லை !
உணர்ந்தது போதுமென மெய்யது சொல்வதில்லை !
எனில்
நாம் மட்டும் ஏன் சோம்பலைச் சுற்றிக்கொண்டு திரிய வேண்டும் ?

சோம்பல் ஒரு புதைகுழி !
காலை வைத்தால் ஆளை விழுங்கும் புதைகுழி.

சோம்பல் ஒரு காட்டுத் தீ
எத்தனை போட்டாலும் திருப்திப் படாத காட்டுத் தீ !

எனவே தான் சோம்பல் வாழ்வுக்கு எதிரியாய் இருக்கிறது !
சுறுசுறுப்பு வெற்றிக்கு நண்பனாய் இருக்கிறது.

இயற்கை நமக்கு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தருகிறது. உயிரினங்கள் நமக்கு சுறுசுறுப்பின் பாடத்தைக் கற்றுத் தருகின்றன. மனிதர்கள் மட்டுமே சோம்பலின் படுக்கையில் சோம்பிக் கிடக்கின்றனர்.

சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்; அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள் .. என்கிறது பைபிள். வாழ்க்கையின் வெற்றி சுறுசுறுப்பின் கைகளில் இருக்கிறது. அதைக் கற்றுக் கொள்ள ஒரு எறும்பின் முன்னால் கூட மண்டியிடத் தயாராய் இருக்க வேண்டும்.

சோம்பல் என்பது ஒரு நோய்.. என்கிறது பிரிட்டனில் நடந்த ஆய்வு ஒன்று. பிற நோய்களைப் போலவே உடலையும், மனதையும் சோம்பல் அழிக்கிறது. சோம்பல் கொண்ட உடலில் நோயாளியின் உடலைப் போன்ற தன்மை இருப்பதாய் அந்த ஆய்வு கூறுகிறது !

மாணவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக, ஒரு தேனீயைப் போல இருக்க வேண்டும்.

சுறுசுறுப்பான உடலே சுறுசுறுப்பான மனதில் அடிப்படைத் தேவை. உடல் சோர்வாக இருக்கும் போது மூளைக்குத் தேவையான உயிர்வழி கிடைப்பதில்லை. எனவே அது சோர்வடைகிறது. மூளையின் சோர்வு படிப்பைப் பாதிக்கும். எனவே தான் மாணவர்கள் சுறுசுறுப்பாய் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

தேங்கிக் கிடக்கும் நீரில் தான் கொசு உற்பத்தியாகும் !
ஓடிக்கொண்டே இருக்கும் நீரில் ஆரோக்கியம் தங்கும் !

வெற்றியாளர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து தங்கள் இலட்சியத்தை நோக்கி உற்சாக நடை போட்டவர்களாகவே இருப்பார்கள். அதனால் தான் அவர்களுடைய வாழ்க்கை வெற்றியின் சிம்மாசனங்களில் இருக்கிறது ! அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து சுறுசுறுப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும்

சோம்பல் என்பதும் ஓய்வு என்பதும் வேறு. உடலுக்குத் தேவையான தூக்கத்தை இரவில் கொடுக்க வேண்டியது கட்டாயம். அது சோம்பல் அல்ல !

அந்த நேரத்தை டிஜிடல் கருவிகளில் தொலைத்து விடக் கூடாது. அவை நமது வாழ்க்கையை நோயின் வாசலுக்குள் துரத்திவிடும். அது தான் தவறு.

தினமும் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் எனும் துடிப்பு உடையவர்களையும்,
அடுத்து ஏதாவது சாதிக்க வேண்டும் எனும் ஆர்வம் உடையவர்களையும் சோம்பல் பிடித்துக் கொள்ளாது !

சோம்பல் என்பது விக்கிரமாதித்ய வேதாளம் போன்றது ! தோளில் தொற்றிக் கொண்டால் விட்டு விடாது !
சோம்பல் என்பது சாத்தானைப் போன்றது ! பிடித்துக் கொண்டால் அழித்து விடும்.

எனவே சுறுசுறுப்பானவர்களை நண்பர்களாகக் கொண்டிருக்க வேண்டும்.
அல்லது நமது நண்பர்களை சுறு சுறுப்பானவர்களாக நாம் மாற்ற வேண்டும்.

நமது வீணான நேரங்களில் நல்ல பொழுது போக்குகளை, கலைகளைக் கற்கவேண்டும்.
அது நமது நேரத்தைச் சாம்பலாக்கும் சோம்பலை விரட்டி ;
நேரத்தை ஆனந்தத்தின் ஆம்பலாய் மலரவைக்கும் !

“சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்” என்கிறது நீதிமொழிகள்.

பயிர்செய்யும் காலத்தில் சோம்பல் பட்டால் அறுவடை காலத்தில் அழுகை சுரக்கும்.
படிக்கும் காலத்தில் சோம்பல் பட்டால் எதிர்காலம் இனிமை இழக்கும்.
இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை என்பது பிரபலமான பழமொழிகளில் ஒன்று !

சோம்பலின் பாதை
வெற்றியின் வீட்டில் போய்ச் சேராது !

சொர்க்கத்தின் வாசல் சோம்பல் கொள்பவர்களுக்கானதல்ல !
அது உற்சாகத்தின் பிள்ளைகளுக்கானது !

எனவே சோம்பலை களைவோம் !
சுறுசுறுப்பை அணிவோம்

என்று கூறி விடைபெறுகிறேன்

நன்றி
வணக்கம்

 

Posted in Articles, Sunday School

Kid Speech : மண்ணில் விதைத்தால் விண்ணில் அறுக்கலாம்

Image result for Kid preaching

அவையோருக்கு என் அன்பின் வணக்கம் !

வயலிலே நெல்லை விதைத்தால்
மலையிலே அறுவடை செய்ய முடியுமா ?

தமிழகத்தில் நட்ட மாமரம்
கேரளாவில் கிளை விரிக்குமா ?

இங்கே ஊன்றிய விதை
வேர்களை வேறிடத்தில் இறக்குமா ?

இல்லை என்பது தான் சட்டென கிடைக்கும் பதில் !
அது தான் வாழ்க்கையின் யதார்த்தம் !

அப்படியானால் மண்ணில் விதைப்பதை எப்படி விண்ணில் அறுப்பது ?

மண்ணில் விதைத்தால் விண்ணில் கனிகொடுக்கும் ஒரே ஒரு அதிசய விதை தான் நம்மிடம் இருக்கிறது. அந்த விதை தான் மனித நேயம் !

மனித நேயத்தை நாம் மண்ணில் விதைக்கும் போது அதன் கனிகளை நாம் விண்ணில் கொய்தெடுக்கலாம். உழைப்பு இங்கே, விளைச்சல் அங்கே !
வியர்வை இங்கே, பரிசு அங்கே !
கடமை இங்கே, கோப்பை அங்கே !

அத்தகைய விதைகளைத் தான் நாம் அதிகமாய் விதைக்க வேண்டும்.
மனித நேயம் என்பது சக மனிதன் மீது நாம் காட்டும் கரிசனை !

சுயநலத்தின் சுருக்குப் பைகளை உதறி விட்டு
தன்னலத்தின் தெருக்களை விலக்கி விட்டு
மனிதத்தின் மலர்களோடு நடப்பதே மனித வாழ்வின் மகத்துவம்

நமது வாழ்க்கை நமக்கு மட்டுமே பயனளிப்பதாக இருப்பது மண்ணில் விதைப்பதை மண்ணில் அறுப்பது போன்றது !
நமது வாழ்க்கை பிறருக்குப் பயனளிப்பதாக இருப்பதே மண்ணில் விதைத்து விண்ணில் அறுப்பது போன்றது !

சுயநலம் என்பது என்ன ?
தன்னை மட்டும் கவனிப்பது !
உலகம் தன்னை மட்டும் கவனிக்க வேண்டும்
என நினைப்பது !

அடுத்த வீட்டு நபர் பட்டினியில் இருக்கும் போது நாம் விருந்துண்பது சுயநலம் !
அதை அவரோடு பகிர்ந்துண்பது மனிதம் !

அடுத்த வீட்டு நபர் கிழிந்த ஆடையோடு இருக்கையில் நாம் புத்தாடை உடுத்துதல் சுயநலம்
அவருக்கும் ஆடை கொடுத்தல் மனித நேயம்.

அடுத்த வீட்டு நபர் மருத்துவமனையில் இருக்கையில் நாம் டோரேமான் பார்ப்பது சுயநலம்
அவருக்கு ஆறுதல் சொல்வது மனிதநேயம்.

மனித நேயத்தின் விதைகள் மனதில் விதைக்கப்பட வேண்டும் !

நமது குணங்கள் சிறப்பான குணங்களாக இருக்கும் போது நமது வாழ்க்கை இறைவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையாக மாறிவிடுகிறது. இறைவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை நாம் இந்த மண்ணில் வாழும் போது அதற்கான பலன் நமக்கு விண்ணக வாழ்வில் கிடைத்து விடுகிறது !

மாணவர்களாகிய நாம் எப்படி விண்ணக விளைச்சலை சம்பாதிப்பது ?

கீழ்ப்படிதல் உள்ள பிள்ளைகளாக நாம் இருக்க வேண்டும். கீழ்ப்படிதல் இறைவனுக்கு பிடித்தமான செயல். வீடுகளிலும் சரி, பள்ளிக்கூடத்திலும் சரி பொது இடங்களிலும் சரி. நாம் கீழ்ப்படிதலுடன் பயணிக்கையில் நமக்கு விண்ணகத்தில் விளைச்சல் கிடைக்கும் !

கீழ்ப்படிதல் ஒரு படி !
அதை தவறாமல் கடை பிடி !

பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். பணிவாய் இருப்பது இறைவனுக்குப் பிரியமானது ! திமிராய் இருப்பது அவருக்கு தூரமான விஷயம். நாம் பணிவின் பாதைகளில் பயணிக்கும் போது நமக்கான விளைச்சல் விண்ணகத்தில் கிடைக்கும்.

மரியாதை அழகு!
அதை தவறாமல் வழங்கு !

எல்லோருடனும் அன்பாய் பழக வேண்டியது முக்கியமான விஷயம். வேற்றுமைகள் பார்க்காமல், யாரையும் ஒதுக்காமல் எல்லோரிடமும் அன்பாய் பழகும் போது இறைவன் மகிழ்ச்சியடைகிறார். நமது பாதச் சுவடுகள் அன்பில் நடக்கும் போது விண்ணகம் விளைச்சல் தரும்.

அன்பின்றி அமையாது உலகு
அதுதானே உலகத்தின் வழிகாட்டும் விளக்கு.

கடமைகளைத் தவறாமல் செய்கின்ற பிள்ளைகளாக நாம் இருக்க வேண்டும். நமது கடமை படிப்பது என்றால் அதைத் தவறாமல் செய்ய வேண்டும். நமக்கு இடப்பட்ட கடமைகளைச் சரியாகச் செய்யும் போது விண்ணகத்தில் அறுவடை செய்ய முடியும் !

தவறாமல் செய்யும் கடமை
அதைத் தவறுதல் மாபெரும் மடமை !

இத்தகைய விதைகளை நாம் மண்ணில் விதைக்கும் போது அதன் விளைச்சல் விண்ணில் அறுவடை செய்ய முடியும்.

நல்ல வாழ்க்கை வாழ்வோம்
நல்ல விதைகளை விதைப்போம்

என்று கூறி விடைபெறுகிறேன்
நன்றி

வணக்கம்

 

Posted in Articles, WhatsApp

நன்கொடை

Image result for church father preaching

ஆலயத்தில் போதகர் அறிவிப்புகளை அறிவித்துக் கொண்டிருந்தார். ஒரு இலட்சம் நன்கொடை வழங்கியவர்கள் பெயர் முதலில், ஐம்பதாயிரம் வழங்கியவர்கள் இரண்டாவது, அப்படியே குறைந்து குறைந்து பத்தாயிரம் நன்கொடை வரை வழங்கியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

ஐம்பதாயிரத்துக்கும் மேல் நன்கொடை வழங்கியவர்களின் பெயர் கொடிமரத்தின் கீழே பொறிக்கப்படும் என்ற அறிவிப்பு பலருடைய முகத்தில் புன்னகையை உருவாக்கியது.

அடுத்ததாக உதவித்தொகை பெறுகின்றவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. அவர்கள் ஆலயத்தில் மக்கள் கூட்டத்திற்கு முன்பு வரிசையாய் நின்று மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

ஆலயத்திற்கு நன்கொடை தருபவர்கள் அதிகமாகிவிட்டதாகவும், நமது திருச்சபையே மற்ற திருச்சபைகளுக்கு முன்மாதிரி என்றும், நாம் செய்த பணிகளின் அறிக்கை பிற திருச்சபைகளுக்கும், தலைமைச் சபைக்கும் அனுப்பப்படும் எனவும் போதகர் சொன்னபோது கைத்தட்டல் சத்தம் சுவரில் இருந்த சிலுவையையே கொஞ்சம் அசைத்தது.

இப்போது நற்செய்தி வாசகம் என்றார் போதகர்.

நரைத்த தலையுடன் இருந்த ஒருவர் எழுந்து விவிலியத்தைத் திறந்து வாசித்தார். மத்தேயு ஆறாம் அதிகாரம் !

” நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்”

கூட்டம் ஆமென் என்றது !

ஆலயத்துக்கு வெளியே நின்று கையேந்திக் கொண்டிருந்த ஏழை முதியவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார், ஆலயத்தை விட்டு எப்போதோ வெளியேறிய இயேசு !

*

 

Posted in Articles, Sunday School

வாழ்வது ஒரு முறை !

Image result for africa girl  auction

காட்சி 1

( ஆப்பிரிக்க நாட்டில் ஒரு கிராமம். ஊழியர் பெல்லார்மின் அமர்ந்திருக்கிறார். அவருடன் இன்னொரு நபர் பேசிக்கொண்டிருக்கிறார் )

நபர் 1 : ரொம்ப நாளா உங்க கிட்டே ஒன்ணு கேக்கணும்ன்னு நினைச்சுட்டே இருந்தேன் கேக்கலாமா ?

பெல்லார்மின் : கேளுங்க.. இதில என்ன தயக்கம் ?

ந 1 : இந்தியாவில நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்திட்டிருந்தீங்க ? இப்போ குடும்பத்தோட இந்த ஆப்பிரிக்க கிராமத்துல வந்திருக்கீங்க. இங்கே பிள்ளைங்க படிக்க நல்ல ஸ்கூல் கிடையாது. நல்ல வருமானம் கிடையாது. இருந்தாலும் ஏன் ?

பெல் : ஐயா… நான் இங்கே வந்திருக்கிறது பிள்ளைங்களை படிக்க வெச்சு டாக்டராக்கவோ, இல்லை பெரிய வேலைல சேர்ந்து பணம் சம்பாதிக்கவோ இல்லை.

ந1 : ஐயா… அது தெரியும். எவ்ளோ நாளா உங்க கூடவே இருக்கேன். நீங்க இயேசுவைப் பற்றி இங்குள்ள மக்களுக்கு சொல்றதுக்காகத் தான் வந்திருக்கீங்க. ஆனா கஷ்டமா இல்லையா ?

பெல் : இல்லவே இல்லை. எத்தனையோ பேருக்கு கிடைக்காத அழைப்பு எனக்கு கிடைச்சிருக்குன்னு டெய்லி நான் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டே இருக்கேன்.

ந1 : இருந்தாலும் பிள்ளைகளையாவது இந்தியாவில படிக்க வெச்சிருக்கலாம். அவங்களாவது நல்ல வசதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.

பெல் : ஐயா.. எல்லாருக்குமே கடவுள் கொடுக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை தான். அதை அப்படியே கடவுள் கிட்டே குடுக்கிறதில இருக்கிற சந்தோசமே தனி. நான் ரொம்ப லேட்டா, பெரியவன் ஆனப்புறம் தான் என் வாழ்க்கையை கடவுள் கிட்டே குடுத்தேன். என் பிள்ளைகளுக்கு சின்ன வயசிலயே அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. இது எவ்ளோ பெரிய சந்தோசமான விஷயம்.

ந 1 : நீங்க சொல்றதும் சரிதான்.. இருந்தாலும் பிள்ளைங்க இந்த உலகத்துல இருக்கிற எந்த ஜாலியான விஷயங்களையும் அனுபவிக்காம இருக்காங்களேன்னு கேட்டேன்.

பெல் : ஐயா.. தற்காலிக சுகம், நிரந்தர நரகத்துக்கு தான் கொண்டு போகும். உங்க கிட்டே ஒரே ஒரு பாட்டில் தண்ணி தான் இருக்கு ! பாலைவனத்துல நாலு நாள் நடக்கணும். வேறு தண்ணியே கிடைக்காதுன்னு வெச்சுக்கோங்க. அந்த ஒரு பாட்டில் தண்ணீரை எவ்ளோ கவனமா பாதுகாப்பீங்க. ஒவ்வொரு சொட்டு செலவழிக்கும்போதும் எவ்வளவோ எச்சரிக்கையா இருப்போம் இல்லையா ?

ந 1 : ஆமாங்கய்யா… அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

பெல் : அதே மாதிரி தான் நமக்கும் ஒரே ஒரு வாழ்க்கை. ஒரே ஒரு பாட்டில் தண்ணி மாதிரி எண்ணப்பட்ட நாட்கள். அதை எவ்வளவோ கவனமா செலவிடணும். எவ்வளவோ பயனுள்ள வகையில அதை செலவிடணும். அதுல கொஞ்சம் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது இல்லையா ? அதை அப்படியே கடவுளுக்காக கவனமா செலவிடணும். அது தான் உண்மையான மகிழ்ச்சி.

( அப்போது ஒரு நபர் ஓடி வருகிறார் )

ந 2 : ஐயா… நம்ம ரிவர் சைட் மார்க்கெட்ல அடிமை ஏலம் நடக்குதுங்கய்யா…

ந 1 : ம்ம்ம்… நம்ம நாடு எப்ப தான் உருப்படுமோ ! இந்த அடிமை ஏலத்தை இன்னும் நிறுத்த முடியல. வாழ்க்கையை ஓட்டறதுக்கு மனுஷன் என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு.

பெல் : இப்படித் தான் பாவத்தைச் செய்திட்டு இருக்கிறவன் பாவத்துக்கு அடிமையா இருக்கிறான்னு இயேசு சொல்லியிருக்காரு.

ந 2 : இருந்தாலும் பாவம்யா.. இன்னிக்கு ஏதோ ஒரு இளம்பெண்ணை ஏலம் போடறாங்க.

பெல் : எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு.. வாங்க அங்கே போலாம்.

காட்சி 2

( ஒரு இளம் பெண் மேடையில் நிற்கிறாள். தலைகுனிந்து சோகமாக நிற்கிறாள். ஏலம் நடக்கிறது )

ஏலம் நடத்துபவர் : ( சிரித்துக் கொண்டே ) இந்த பெண்.. இளம் பெண்.. அழகான பெண்.. இதுக்கு முன்னாடி பெல்ஷா மாளிகைல அடிமையா இருந்தா. அங்கிருந்த முதலாளி இப்போ இவளை ஏலத்துல வித்துட்டு வேற பொண்ணை பாக்க போறாரு. அதனால தான் இந்த ஏலம். ஆரம்பிக்க போறேன்.

ஏலம் வாங்குபவர் : இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கு. எவ்ளோ பணமானாலும் நான் வாங்கப் போறேன்.

ந4 : எவ்ளோ பணம்ன்னாலுமா ?

வாங்குபவர் : பொதுவா ஒரு பத்தாயிரம் பணத்துக்கு வாங்கிடலாம். கொஞ்சம் கூட ஆனா கூட பரவாயில்லை. ஏலத்துல எடுத்துர வேண்டியது தான்

( அப்போது பெல்லார்மின் & ந 1 வருகின்றனர் )

பெல் : அந்த பொண்ணை நான் ஏலத்துல எடுக்க போறேன்.

ந 1 : ஐயா.. நீங்களா ?

பெல் : ஆமா.. கடவுள் அந்த பொண்ணை ஏலத்துல எடுக்க மனசுக்குள்ள சொல்றாரு

ந 1 : சரிங்கய்யா.. ஆனா இருக்கிற பணத்தை ஏலத்துல விட்டீங்கன்னா ?

பெல் : உனக்கு தெரியாதது இல்லை. என்கிட்டே மொத்த சேமிப்பா ஒரு ஐம்பதாயிரம் பணம் இருக்கு. அதுல கொஞ்சத்தை பயன்படுத்தி வாங்கிடலாம்.

ந1 : சரிங்கய்யா.. உங்க விருப்பம்.

( ஏலம் தொடங்குகிறது )

ஏலம் நடத்துபவர் : ஏலம் ஆரம்பிக்க போறேன். ஆரம்ப விலை ஆயிரம் பணம் !

ஏலம் வாங்குபவர் : இரண்டாயிரம் பணம்

பெல் : மூவாயிரம்

ஏ. வா : ஐயாயிரம்

பெல் : ஆறாயிரம்

ஏ. வா : ஏழாயிரம்

பெல் : எட்டாயிரம்

ஏ. வா : பத்தாயிரம்

ந 1 ( பெல்லார்மினிடம் ) : ஐயா.. வேண்டாம்.. இதுக்கு மேல செலவு செய்ய வேண்டாம்.

பெல் : பதினையாயிரம்

ஏ. வா : இருபதாயிரம்

பெல் : முப்பதாயிரம்

ஏ. வா : ( கொஞ்சம் யோசிக்கிறார். தலையைச் சொறிகிறார் பின் கேட்கிறார் ) நாற்பத்து ஐயாயிரம்.

( ஏ.வா வின் நண்பர்.. ந 4 : ஐயா.. என்ன உங்களுக்கு புத்தி கித்தி கெட்டு போச்சா.. இந்த பணத்துக்கு இதே மாதிரி பத்து பொண்ணு வாங்கலாம். இப்போ அவரு பேசாம போனா நமக்கு பெரிய நஷ்டம்.. தப்பு பண்ணிட்டீங்களே )

( பெல் ஏலம் கேட்க போகும் போது நண்பர் தடுக்கிறார் )

ந1 : ஐயா வேணாம். உங்க வாழ்நாள் சொத்தே ஐம்பதாயிரம் பணம் தான். உங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. மனைவி இருக்காங்க. ஏதாச்சும் மருத்துவ தேவை வந்தா கூட கைல காசு இருக்காது. இந்த பொண்ணு நமக்கு எவ்வளவு தான் சம்பாதிச்சு தர முடியும் ? வேணாம்யா விட்டுடுங்க.

பெல் : ஐம்பதாயிரம் !

( ஏலம் கேட்ட மற்ற நபரும், நண்பர்களும்.. “அப்பாடா தப்பிச்சோம்” என போய் விடுகின்றனர். )

ஏலம் இடுபவர் : ஐம்பதாயிரம் பணம் ஒரு தரம். வேற யாராவது ஏலம் கேட்கிறீங்களா ?

( மக்கள் ஒவ்வொருவராகப் போகின்றனர் )

ஏலம் இடுபவர் : ஐம்பதாயிரம் பணம் இரண்டு தரம் …. ஐம்பதாயிரம் பணம் மூணு தரம்.

( பெல்லார்மின் ஒரு செக் எழுதி அவரிடம் கொடுக்கிறார். அந்தப் பெண் குனிந்த தலையுடன் அவரது அருகே வந்து நிற்கிறாள் )

பெல் நண்பரிடம் : வாங்க போலாம்

( பெண் பின்னாடியே வருகிறார் )

பெல் : அம்மா .. நீங்க போலாம். என் கூட வரவேண்டிய அவசியம் இல்லை. இப்போ நீங்க அடிமையில்லை.

( ந 1 புரியாமல் பார்க்கிறார் )

பெண் : ஐயா.. என்ன சொல்றீங்க ? புரியல.

பெல்லார்மின்: அம்மா.. உங்களை அடிமைத்தனத்தில இருந்து மீட்கத் தான் நான் ஏலம் எடுத்தேன். உங்களுக்கு விடுதலை வாங்கி தர. உங்களை மீண்டும் அடிமையா மாற்ற இல்லை.

பெண் : ஐயா.. ஏன் ? என்னை உங்களுக்கு தெரியுமா ? இவ்ளோ பணம் குடுத்து என்னை ஏலத்துல எடுத்து சும்மா விடுறீங்களா ?

பெல் : நீ யாருன்னு எனக்கு தெரியாதும்மா. ஆனா இயேசு யாருன்னு எனக்கு தெரியும். நாம பாவ அடிமைத்தனத்துல இருந்தப்போ அவரோட உயிரையே கொடுத்து நம்மையெல்லாம் மீட்டவர். நாம சுதந்திர வாழ்க்கை வாழணும்ன்னு மண்ணுக்கு மனுஷனா வந்தவர். வந்து சிலுவையில அறையப்பட்டு உயிர்விட்டு நமக்காக இறந்தவர்.

பெண் : ஐயா என்ன சொல்றீங்க ? அப்படி ஒரு நபரைப் பற்றி எனக்கு தெரியாதே.

பெல் : உண்மைதாம்மா.. அவரைப் பற்றி சொல்ல தான் நான் இந்த நாட்டுக்கே வந்தேன். உன்னை மீட்க நான் இழந்தது என் சொத்து மட்டும் தான். அவரோ தன்னோட சொந்த ஜீவனையே இழந்தார்.

பெண் : ஏன் ஐயா அவர் அப்படி இறக்கணும் ?

பெல் : அது தான் நாம கடவுளுடைய மீட்பில் இணைய ஒரே வழி. அது தான் நாம சொர்க்கம் செல்ல ஒரே வழி. அது தான் நம்முடைய பாவங்களைக் கழுவ ஒரே வழி. அவருக்கு ஒரே ஒரு மனித வாழ்க்கை தான் தரப்பட்டது, அதை பிறருக்காக கொடுத்தார். அதே மாதிரி எனக்கு ஒரே வாழ்க்கை தான் தரப்பட்டிருக்கு. ஏழேழு ஜென்மம் பிறவி எல்லாம் நமக்கு கிடையாது. அதெல்லாம் மாயை. இந்த ஒரே ஒரு வாழ்க்கையை நான் அவருக்காக கொடுக்கிறேன்.

பெண் : ஐயா.. ( கண்ணீருடன் ) நான் மறுபடியும் அடிமையாவே போயிடறேன்.

பெல் : என்னம்மா சொல்றே..

பெண் : ஆமாங்கய்யா.. .இந்த தடவை நான் இயேசுவுக்கு அடிமையா போக போறேன். எனக்கு இந்த விடுதலை வாழ்க்கை உங்களால கிடைச்சுது. அதுவும் இயேசுவால கிடைச்சுது. இந்த சுதந்திர வாழ்க்கையை அவருக்கு அடிமையா வாழ்றதுல செலவிட போறேன். எனக்கு கிடைச்சிருக்கிற இந்த ஒரே ஒரு வாழ்க்கையை நான் அவருக்காகவே கொடுக்க போறேன்.

பெல் : ரொம்ப மகிழ்ச்சிம்மா.. ஒரு நபரை மீட்பதை விட பெரிய சொத்து எதுவுமே இல்லை. எனக்கு இப்போ ரொம்ப மன நிறைவா இருக்கு.

பெண் : ஐயா.. எனக்கு என் எஜமானர் இயேசுவைப் பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க. என் வாழ்க்கைல நான் அவருக்காக வாழணும். நீங்க எனக்கு சொல்லப்போற உண்மையை எல்லாம் நாம் எங்க ஊர் மக்களுக்குச் சொல்லணும்.

பெல் : ரொம்ப மகிழ்ச்சிம்மா.. வாங்க.. நாம அப்படி ஓரமா அமர்ந்து பேசுவோம். அவரைப் பற்றி பேசறதை விட பெரிய மகிழ்ச்சி ஏதும் இல்லை.

பின் குரல்

இது மிஷனரி ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வின் சிந்தனையை எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டது. நமது வாழ்க்கையை இறைவன் தனது ஒரே மகனின், ஒரே மனித பிறவியின், ஒரே ஜீவனைக் கொண்டு மீட்டார். நமக்குத் தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. ஒரே ஒரு பிறவி. நாம் அதை முழுமையாய் இறைவனுக்காய் அற்பணித்திருக்கிறோமா ? இல்லையேல் இதோ இந்த கணமே.. அதைச் செய்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

( நன்றி )

 

Posted in Articles

மறந்து போயிடறேன்

Image result for father reading bible

காலையில் பால்கனியில் அமர்ந்து பைபிள் வாசித்துக் கொண்டிருந்த தந்தையின் அருகில் கையில் காஃபியுடன் வந்தமர்ந்தான் வாலிப மகன்.

“பரவாயில்லைப்பா.. நீங்க டெய்லி பைபிள் படிக்கிறீங்க.. நமக்கு தான் டைமே செட் ஆக மாட்டேங்குது” என்றான் வந்தமர்ந்தவன்.

” நேரத்தை உருவாக்கி படிக்கணும்பா.. அதான் நமக்கு எனர்ஜி தரும்” அப்பா சொன்னார்.

“உண்மைதான்பா.. மறந்து போயிடறேன்” சிரித்துக் கொண்டே சொன்னான் மகன்.

“சரி அதிருக்கட்டும்… உன் போன் எங்கே ?”

“சார்ஜர்ல இருக்குப்பா.. நைட் போட்டு வெச்சேன்.. இல்லேன்னா சார்ஜ் இருக்காது” மகன் சொன்னான்.

“சார்ஜ் இல்லேன்னா என்னப்பா.. போன் இருக்குல்ல… “

“ஜோக் அடிக்காதீங்கப்பா.. சார்ஜ் இல்லேன்னா அந்த போனால எந்த பயனும் இல்லை”

“அப்படித் தாம்பா நம்ம வாழ்க்கையும். எப்படி மொபைல் போன்ல சார்ஜ் தினசரி தேவைப்படுதோ அதே மாதிரி நமது வாழ்க்கைக்கும் இறை வார்த்தைங்கற சார்ஜ் தேவைப்படுது. சார்ஜ் ஏத்தாம போயிட்டா லைஃப் பயனில்லாம போயிடும்”

“உண்மை தான்பா.. பட்… மிஸ் ஆயிடுது” மகன் சொன்னான்.

“இது மிஸ் கிடையாதுப்பா… இது சின் ! பாவம். போன்ல சார்ஜ் முழுசா போறதுக்கு முன்னாடி தேடித் தேடி சார்ஜ் பண்றே. நைட் போடறே.. காலைல செக் பண்றே. அடிக்கடி மெசேஜ் ஏதாச்சும் வந்திருக்கான்னு பாத்துக்கறே… அதெல்லாம் மிஸ் ஆகலையே !”

மகன் அமைதியானான்.

எது முக்கியம்ன்னு தோணுதோ, அதைத் தான் நாம செய்வோம். எது முக்கியம்ன்னு நாம முடிவு பண்றோமோ அது தான் நம்ம வாழ்க்கையை நிர்ணயிக்கும். கடவுள் தான் முக்கியம்ன்னு நீ முடிவெடுத்தா அவரே படிக்க நேரத்தைத் தருவார். அப்பா சொல்லிக்கொண்டே மகனின் கையிலிருந்த காபியை வாங்கி கொஞ்சம் குடித்து விட்டு அவனிடமே திருப்பிக் கொடுத்தார்.

‘ம்ம்.. அம்மாவோட காபியே தனி தான்’ என சிரித்துக் கொண்டே அவனுடைய‌ தோளில் தட்டிக் கொடுத்தார்.

அந்த பைபிள் கொடுங்கப்பா..

ஏன்பா ? இப்போ டைம் இருக்கா ?

இப்போ இந்த கணம், இந்த நேரம் அது தான் என் கைல இருக்கு. இப்பவே சார்ஜ் பண்ணலேன்னா ஒருவேளை நான் சார்ஜ் பண்ண நினைக்கும்போ கரண்டு இருக்குமோ இருக்காதோ. சொல்லிவிட்டு மகன் புன்னகைத்தான்.

அப்பாவின் கண்களில் நிறைவின் சாயல் தெரிந்தது.

நமது வாழ்க்கையில் சார்ஜ் இருக்கிறதா ?
அதை அடிக்கடி பரிசோதிக்கிறோமா ?

போன் சார்ஜ் இல்லை என்பதை கண்டு கொள்ளும் நாம்.. நமது வாழ்க்கையில் உயிர்ப்பு இல்லை என்பதை உணர்கிறோமா ?

இது ஆடம்பரமல்ல.. அத்தியாவசியம் !
பைபிள் நிராகரிப்புக்கானதல்ல, நிலை வாழ்வுக்கானது.

*