Posted in Life of JESUS

இயேசு வரலாறு 42 : உயிர்த்த இயேசுவின் காட்சிகள்

john-20-_christ-appears-to-mary-magdaleneஅந்த நேரத்தில் மகதலா மரியாளும், யாக்கோபின் தாய் மரியாவும், சலோமியுமாக இயேசுவின் கல்லறையருகே வந்தார்கள்.

அவர்கள் கைகளில் நறுமணப் பொருட்கள். யூத மரபுப்படி கல்லறையிலிருக்கும் உடலில் நறுமணப் பொருட்கள் பூசுவது வழக்கம்.

‘காவலர்கள் இருப்பார்கள். நாம் கேட்டால் அவர்கள் கல்லைப் புரட்டி நமக்கு உதவுவார்களா ?’ என்று உரையாடிக் கொண்டே நடந்தார்கள் அவர்கள்.

கல்லறையை நெருங்க நெருங்க அவர்கள் இதயத்துடிப்பு அதிகரித்தது. கல்லறை வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருக்கிறது ! அவர்கள் கல்லறையை நோக்கி ஓடினார்கள். அங்கே கல்லறையின் கல் புரட்டப்பட்டிருக்க அதன்மேல் வானதூதர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

வெண்ணிற ஆடையணிந்த வானதூதர்களையும், மின்னலைப்போல் ஒளிரும் அவருடைய தோற்றத்தையும் கண்ட இருவரும் நடுங்கினார்கள். வானதூதர் அவர்களிடம்

‘அஞ்சாதீர்கள். இயேசுவைத் தேடித் தானே வந்திருக்கிறீர்கள். அவர் இங்கே இல்லை. சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார்’ என்றார்.

அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.

‘செல்லுங்கள். போய் பேதுருவிடமும் மற்ற சீடர்களிடமும் இயேசு உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குச் சென்றிருக்கிறார். அவர் உங்களுக்குச் சொன்னது போல அவரை அங்கே காண்பீர்கள் என்று சொல்லுங்கள் என்றார்’

அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே சிறிது நேரம் பிடித்தது. தாங்கள் காண்பது கனவா? இல்லை நிஜமா என்பதைப் புரிந்து கொள்ளவே அவர்களுக்கு சற்று நேரம் பிடித்தது..

அவர்கள் பயமும் பரவசமும் அடைந்தவர்களாக கல்லறைக்கு உள்ளே உற்றுப் பார்த்தார்கள் அங்கே இயேசு இல்லை. அவர்கள் இருவரும் சீடர்கள் தங்கியிருந்த இடத்தை நோக்கி தலை தெறிக்க ஓடினார்கள்.
Related image

இயேசுவின் சீடர்களில் இரண்டு பேர் எம்மாவு என்னும் ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். எம்மாவு எருசலேமிலிருந்து ஏழு மைல் தொலைவில் இருந்தது.

இயேசுவின் மரணத்தைக் குறித்தும், அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்தும் அவர்கள் பேசிக்கொண்டே சென்றனர். இரவு நேரம். அவர்களுடைய கண்களிலும், பேச்சிலும் சோகம் வழிந்தது.

இயேசு வந்தார்.

இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்தார். அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை.

என்ன பேசுகிறீர்கள் ?, இயேசு வினவினார்.

எருசலேமில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி தான் பேசிக்கொண்டே வருகிறோம், அவர்கள் சொன்னார்கள்.

எருசலேமில் என்ன நடந்தது, இயேசு கேட்டார்.

நடந்து கொண்டிருந்த சீடர்களில் ஒருவரான கிளயோப்பா குரலில் கொஞ்சம் கோபம் கலந்து கேட்டார்.
‘எருசலேமில் நடந்த நிகழ்ச்சிகள் உமக்கு மட்டும் தான் தெரியாது போலிருக்கிறது. நாங்கள் இயேசுவைப் பற்றித் தான் பேசுகிறோம். அவர் மிகவும் நல்லவர். சொல்லிலும், செயலிலும் கை தேர்ந்த இறைவாக்கினராக இருந்தார். அவர் வந்து உலகை மீட்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரை மதவாதிகளும், அரசியல்வாதிகளும் சிலுவையில் அறைந்து கொன்று விட்டார்கள்’ என்றார்.

‘ஓ… அப்படியா ?’ இயேசு விஷயம் தெரியாதவர் போல காட்டிக் கொண்டார்.

‘ஆம். ஆனால் இன்றைக்கு என்ன நடந்ததென்றால், சிலர் கல்லறைக்குச் சென்று பார்த்தபோது அவர் இல்லையாம். யாருக்கோ காட்சி கொடுத்தாராம். இவையெல்லாம் எங்கலைக் குழப்புகின்றன’ என்றார்கள் அவர்கள்.

‘இறைவாக்கினர் உரைப்பதெல்லாம் நடந்து தானே ஆகவேண்டும்’ என்று சொன்ன இயேசு மறை நூலில் எழுதப்பட்டிருந்த தீர்க்கத் தரிசனங்கள் யாவற்றையும் விளக்கத் துவங்கினார். அவர்கள் அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டு நடந்தார்கள்.

சீடர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கினார்கள்.

‘நீங்கள் எங்கே போகிறீர்கள் ?’

‘இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது’ இயேசு சொன்னார்.

இன்று இரவு எங்களோடு தங்கிவிட்டு நாளை செல்லுங்கள். சீடர்கள் கேட்டார்கள். இயேசுவும் இசைந்தார்.

உணவு உண்ணும் நேரம்.

இயேசு அப்பத்தை எடுத்தார். வானத்தை அண்ணந்து பார்த்து கடவுளைப் போற்றி அப்பத்தைப் பிட்டார். அவர்கள் பார்த்தார்கள்.

இயேசு !!! சட்டென்று அவர்கள் அவரை அடையாளம் கண்டார்கள். இயேசு புன்னகையுடன் அவர்கள் முன்னால் அமர்ந்திருக்கிறார். இத்தனை நேரம் எப்படி நாம் அவரை அடையாளம் காணாமல் இருந்தோம் ? அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

அவர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே இயேசு அவர்களிடமிருந்து மறைந்தார்.

அவர்கள் இந்த செய்தியை சீடர்களுக்குத் தெரிவிக்க எருசலேம் நோக்கி ஓடினார்கள்.

சீடர்கள் ஒரு அறையில் கதவுகளை மூடி அமர்ந்திருந்தார்கள். அவர்களுடைய மனமெங்கும் ஏராளமான கேள்விகள். இயேசு அரசராவார் என்று ந்¢னைத்திருந்தோம், இயேசு ஒரு மிகப்பெரிய தலைவராவார் என்று நினைத்திருந்தோம். ஆனால் இப்படி எதிர்ப்புத் தெரிவிக்காமலேயே சிலுவையில் உயிர்விடுவார் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இனிமேல் என்ன செய்வது ? நம் பழைய தொழிலுக்கே திரும்பிப் போவதா ? இயேசு சொன்னதுபோல அவருடைய கொள்கைகளைச் சொல்லித் திரிவதா ?

அவர்கள் பல்வேறு கேள்விகளை தங்களுக்குள்ளேயே கேட்டுக் குழம்பிக் கொண்டிருக்கையில், மகதலா மரியாவும், மற்ற மரியாவும் மூச்சிரைக்க ஓடி வந்தனர்.

‘என்ன ஆச்சு ? ஏதேனும் பிரச்சினையா ? ஏன் ஓடி வருகிறீர்கள் ? உங்களை யாராவது பின் தொடர்ந்து வருகிறார்களா ? கயபாவின் ஆட்களா ? இல்லை வேறு யாராவதா ? ‘ சீடர்கள் பரபரத்தார்கள்.

‘இல்லை… இல்லை….’ அவர்கள் இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை.

‘என்ன ? சொல்லுங்கள். இங்கிருந்து நாம் தப்பி ஓடவேண்டுமா ? விரைவாய் சொல்லுங்கள். என்ன செய்தி’ சீடர்களின் பதட்டம் அதிகரித்தது.

‘இயேசு… இயேசுவின் கல்லறை திறந்திருக்கிறது !’

‘என்ன ? கல்லறை திறந்திருக்கிறதா ? அதைப் பூட்டி சீல்வைத்துக் காவலிருந்தார்களே’

‘உண்மை தான். ஆனால் காவலர்களைக் காணவில்லை. வானதூதர் கல்லறைக்கு அருகிலே நின்றிருக்கிறார்’

‘வானதூதரா ?’ சீடர்கள் சட்டென்று பரவசமானார்கள்.

‘ஆம். இயேசு உயிர்த்துவிட்டாராம். விரைவில் நமக்கெல்லாம் காட்சி தருவாராம்’ அவர்கள் சொல்ல சொல்ல சீமோன் பேதுரு கதவைத் திறந்து கொண்டு கல்லறையை நோக்கி ஓடினார். அவருடன் இன்னொரு சீடரும் ஓடினார்.

அவர்கள் ஓடி வந்து கல்லறையைப் பார்க்க, கல்லறை காலியாய் இருந்தது. இயேசுவைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த துணிகள் மட்டும் கல்லறைக்குள் தனியே கிடந்தன.

‘இயேசு உயிர்த்துவிட்டாரா ? மூன்றாவது நாளில் உயிர்ப்பேன் என்று சொன்னாரே ! சொன்னபடி உயிர்த்துவிட்டாரா ‘ அந்த எண்ணமே சீடர்களுக்குள் மலை மலையாய் புத்துணர்ச்சியை ஊட்டியது. அவர்கள் முகங்களில் பிரகாசம். அவர்கள் ஆனந்தத்துடன் ஓடினார்கள்.

Image result for Mary Magdalene and jesus after resurrection

மகதலா மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார். அப்போது இயேசு அவருக்குக் காட்சி கொடுத்தார். கண்ணீர் மல்க தலை குனிந்திருந்த மகதலா மரியா இயேசுவை அடையாளம் காணவில்லை. அவரை தோட்டக்காரன் என்று நினனத்தாள்.

‘அம்மா ஏன் அழுகிறாய் ?’ இயேசு கேட்டார்.

‘ஐயா… இயேசுவின் உடலைக் காணவில்லை. அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா ?’ மரியா அழுகையுடன் கேட்டாள்.

‘மரியா….’ இயேசு அழைத்தார்.

மரியா என்ற குரலைக் கேட்டதும் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அங்கே இயேசு நின்று கொண்டிருந்தாள்.

‘ராபூனி………….’ அவள் ஆனந்தத்தில் அலறினாள்.

‘மரியா. என் நண்பர்களிடம் போய் நான் விண்ணகத் தந்தையிடம் செல்லவேண்டும் என்று சொல் என்று கூறிவிட்டு மறைந்தார். மகதலா மரியா ஆனந்தத்தின் உச்சிக்குத் தாவினாள்.


கயபா முன்னிலையில் செய்திகள் பரிமாறப்பட்டன.

கயபா படை வீரர்களை அழைத்தான். ‘இயேசுவின் சீடர்கள் தான் உங்களைத் தாக்கி சங்கிலிகளை உடைத்துவிட்டு இயேசுவின் உடலை திருடிக் கொண்டு சென்று விட்டார்கள் என்று ஊரெங்கும் செய்தி பரப்புங்கள்’ என்று ஆணையிட்டான்.

கயபாவின் படைவீரர் ஒருவரைத் தாக்கி விட்டு கல்லறையைக் கவர்கதெல்லாம் கனவிலும் நடக்க முடியாத நிகழ்ச்சி. அதுவும் பயந்து நடுங்கி, இயேசுவின் மரண நேரத்திலேயே அருகில் இல்லாத சீடர்களால் இது நிகழ்ந்திருக்கிறது என்பது கடுகளவும் ஒத்துக் கொள்ள முடியாதது. மக்கள் கயபாவின் வதந்தியை நம்பவில்லை.

கயபாவின் செய்தி வினியோகம் உண்மையில் இயேசுவுக்கு மீண்டும் பல ஆதரவாளர்களைச் சம்பாதித்து தந்தது.

Image result for Jesus appearing with his disciples in room

இயேசுவும் சீடர்களும் தனியறையில் அடைபட்டுக் கிடந்தார்கள். எப்போது தலைவர்கள் வருவார்களோ, எப்போது தங்களைக் கொல்வார்களோ என்னும் பயம் அவர்களைப்பிடித்து ஆட்டியது.

பூட்டிய கதவுகள் பூட்டியபடி இருக்க, இயேசு அவர்கள் மத்தியில் வந்து நின்று
‘உங்களுக்குச் சமாதானம்’ என்றார்.

சீடர்கள் அதிர்ந்தார்கள். ஏதோ பேயைக் காண்பது போல அவர்கள் திகிலுற்றார்கள்.

‘பயப்படாதீர்கள். நான் தான். ஆவியல்ல. என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காணும் இந்த எலும்பும் சதையும் ஆவிகளுக்குக் கிடையாது.’ இயேசு சொன்னார்.

சீடர்கள் ஆனந்தமாய் அதிர்ந்தார்கள்.

இயேசு தன்னுடைய கைகளையும் கால்களையும் சீடர்களிடம் காண்பித்தார்.

பின் புன்னகையுடன்’ உங்களுக்கு அமைதி உரித்தாகுக’ என்று மீண்டும் வாழ்த்தினார். அப்போது தோமையார் அவர்களுடன் இல்லை. மற்ற சீடர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.

உண்பதற்கு ஏதேனும் உங்களிடம் இருக்கிறதா ?, இயேசு கேட்டார்.

சீடர்களோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து அகலாமல் இருந்தார்கள். ஒருவர் ஓடிச் சென்று வேக வைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் கையில் எடுத்து, சீடர்களுக்கு முன்பாக அமர்ந்து சாப்பிட்டார்.

மோசேயின் சட்ட நூல்களிலும், இறைவாக்கினர் நூல்களிலும், திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேறுவதற்காகத் தான் இவையெல்லாம் நிகழ்ந்தன. இயேசு அவர்களிடம் சொல்ல சீடர்கள் இன்னும் பயம் விலகாதவர்களாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்க்கவேண்டும் என்றும் பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என்றும் எருசலேம் முதல் அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறை சாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இதற்கு நீங்கள் சாட்சிகள், இயேசு சொன்னார்.

பின் அவர்கள் மேல் ஊதி,’ தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவனுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவனுக்கு அவை மன்னிக்கப்படும். எவனுடைய பாவங்களை மன்னிக்காமல் விடுவீர்களோ, அப்பாவங்கள் மன்னிக்கப்படாது’ என்றார்.

சீடர்கள் பரவசமானார்கள். இயேசு இல்லாமல் என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்த சீடர்களுக்கு, தங்களுடைய பணி முடிவடையவில்லை, இனிமேல் தான் அதிகரிக்கப் போகிறது என்பது புரிந்தது. அவர்கள் உற்சாகமானார்கள்.

அதன்பின் இயேசு மறைந்தார்.

கொஞ்ச நேரத்தில் தோமா வந்தார்.

சீடர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவரிடம் நடந்தவற்றைக் கூறினார்கள்.

தோமா ஏற்கனவே சந்தேக புத்திக்காரர். ஆனால் எதையும் உண்மையென்று அறிந்துவிட்டால் பின் அதை ஆழமாய் பின்பற்றுபவர். அவர் சீடர்கள் சொன்னதையும் முதலில் நம்பவில்லை
‘நீங்கள் இயேசுவைப்பற்றிய நினைவிலேயே இருப்பதால் உங்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது. நான் இதை நம்பமாட்டேன்’ தோமா சொன்னார்.

‘உண்மையாகவே நடந்தது தான். எல்லோரும் ஒரே நேரத்தில் இயேசுவைக் கண்டோம்’ சீடர்கள் சொன்னார்கள்.

‘நீங்கள் என்ன சொன்னாலும், நான் அவருடைய கைகளில் ஆணிக்காயங்கள் இருக்குமே அதில் என்னுடைய விரலையும், விலாவின் காயத்தின் என்னுடைய கைகளையும் விட்டுப் பார்க்காமல் நம்பமாட்டேன்’ என்றார். சீடர்கள் வருந்தினார்கள்.

எட்டு நாட்கள் கடந்தன.

இயேசு மீண்டும் அவர்களுக்குத் தோன்றினார். இப்போது தோமையாரும் உடனிருந்தார்.

‘தோமாவே… இதோ என் கைகள் இங்கே உன் விரலை இடு. இதோ என் விலா. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தீர்த்து நம்பிக்கை கொள்’ இயேசு சொல்ல தோமா ‘ என் இயேசுவே… உம்மை நம்புகிறேன்..’ என்று கத்தினார்.

‘நீ என்னைக் கண்டதால் நம்புகிறாய். காணாமலேயே நம்புபவன் பேறு பெற்றவன்’ இயேசு சொல்ல தோமா அமைதியானார்.

Image result for Jesus appearing with his disciples and thomas

அதன்பின் ஏராளமான சீடர்களுக்கு இயேசு காட்சியளித்தார். உயிர்த்த பின் சுமார் ஐநூறு பேருக்கு இயேசு காட்சியளித்ததாக இறையியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பின்பு தன் சீடர்களுடன் பெத்தானியாவில் வந்த இயேசு அவர்களை ஆசீர்வதித்தார்.

‘விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் உலகமெங்கும் நற்செய்தியை அறிவியுங்கள். செயல்களினால் என்னை மக்களுக்குப் போதியுங்கள். மக்களுக்கு தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள்.’ என்றார்,

சீடர்கள் இயேசுவின் போதனைகளை சற்றும் சிதறவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இயேசு தொடர்ந்தார்.

‘நம்பிக்கையுடன் திருமுழுக்கு பெறுவோர் மீட்புப் பெறுவர். நம்பிக்கையற்றவர்களோ தண்டனைத் தீர்ப்பு பெறுவர். நம்பிக்கை கொண்டோர் அருள் அடையாளங்கள் புரிவர். அவர்கள் என் பெயரால் பேய்கள் ஓட்டுவார்கள், புதிய மொழிகளைப் பேசுவார்கள், பாம்புகளைத் தம் கையால் பிடிக்கும் தைரியம் கொண்டிருப்பார்கள். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அவர்களை அது ஒன்றும் செய்யாது. அவர்கள் கை வைத்தால் நோயாளிகள் சுகம் பெறுவார்கள்’ என்றார்.

Image result for Jesus went to heaven

சீடர்கள் அனைவருடனும் இயேசு பெத்தானியாவுக்கு வந்தார்.

சீடர்களுக்கு அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கிய இயேசு அவர்களைப் பார்த்து புன்னகைத்தார். பின் தன்னுடைய கைகளை விரித்து அவர்களை ஆசீர்வதித்த்து,

‘இதோ.. உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருக்கிறேன்’

என்று சொன்னார். சீடர்கள் மனதுக்குள் அது மிகப்பெரிய தன்னம்பிக்கையை வளர்த்தது. பின் இயேசு அவர்கள் முன்னிலையிலே விண்ணேற்றம் அடைந்து தன் தந்தையிடம் சென்றார்.

சீடர்கள் பெருமகிழ்ச்சியடைந்தார்கள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...