Posted in Articles, Parables of JESUS

இயேசு சொன்ன உவமைகள் 27 : விதைப்பவன் உவமை

இயேசு சொன்ன உவமைகள் 27 : விதைப்பவன் உவமை

Image result for parable of sower

மார்க் 4 : 1 முதல் 20 வரை

அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது;

“இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.

பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.

முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.

* * *

இயேசு மக்களிடம் இறையரசைப் பற்றியும், இறைவனின் அன்பைப் பற்றியும், விண்ணக வாழ்வுக்கான வாழ்க்கை பற்றியும் தொடர்ந்து மக்களிடம் போதித்து வந்தார். மக்கள் அவருடைய போதனைகளின் பால் ஈர்க்கப்பட்டனர். மக்களுக்கு அவர் தொடர்ந்து வாழ்வியல் சிந்தனைகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.

இயேசு மனித நேயத்தின் மொத்த உருவமாய் இருந்தார். நோயாளிகளை சுகப்படுத்துவதும், ஒடுக்கப்பட்டவர்களை அரவணைப்பதும், நிராகரிக்கப்பட்டவர்களை நேசிப்பதும், பாவிகளை அரவணைப்பதும் அவரது பணிகளாய் இருந்தன‌. நாட்கள் செல்லச் செல்ல இயேசுவின் போதனைகளை விட அதிகமாய் நோய் தீர்க்கும் வல்லமைகளுக்காக அவரை மக்கள் அவரை நாட ஆரம்பித்தனர். அதன்பின் இயேசு உவமைகளால் மக்களிடம் பேசத் தொடங்கினார்.

உவமைகள் உண்மையை மறைத்து கதைகளைப் பேசுபவை. தேடல் உள்ளவர்கள் மட்டுமே உவமையின் பொருளை கண்டு கொள்ள முடியும். தூய ஆவியானவரே மறை பொருளை உணர்த்துவார்.

இந்த உவமை “நான்கு நிலங்களைப்” பேசுகிறது. வழியோரம், முட்புதர், பாறை நிலம், நல்ல நிலம் என்பவையே அந்த நிலங்கள். இன்னொரு விதமாகப் பார்த்தால் இது ஆறு வகை நிலங்களைப் பேசுகிறது. நல்ல நிலத்தை நல்ல நிலம் 1, 2, 3 என மூன்றாகப் பார்க்கலாம்.

இந்த உவமை இயேசு சொன்ன உவமைகளில் முக்கியமானது. மூன்று நற்செய்தி நூல்களிலும் ( மத்தேயு, மார்க், லூக்கா ) இடம்பெற்ற சில உவமைகளில் இதுவும் ஒன்று. இயேசுவே நேரடியாகப் பொருள் கூறிய வெகு சில உவமைகளில் இதுவும் ஒன்று.

இந்த உவமை சில சிந்தனைகளை நமக்குள் உருவாக்குகிறது.

Image result for parable of sower1. இறைவனின் வார்த்தைகளே விதைகள் என்பதை இயேசுவே தெளிவு படுத்துகிறார். அந்த விதைகளை விதைக்கும் மனிதர்கள் நற்செய்தியை அறிவிப்பவர்கள் என்பதையும் விவிலியம் சொல்கிறது. விதைக்கின்ற பணியை செய்பவனே விதைப்பவன். அவனுடைய நிறம், உயரம், படிப்பு, வேலை, ஆடை, வசதி எதுவுமே இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே இறை வார்த்தையை அறிவிக்க நமக்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் என்பதே கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இறைவார்த்தையை விதைக்க வெளிப்படையான அலங்காரங்களோ, சம்பிரதாயங்களோ எதுவும் தேவையில்லை.

Image result for parable of sower2. விதைகள் இறை வார்த்தைகள். எந்தப் பையில் சுமக்கிறோம் என்பதை வைத்து விதைகளின் தன்மை மாறுவதில்லை. பைகள் அழகாய் இருக்கிறதா, பெரிதாய் இருக்கிறதா என்பதெல்லாம் முக்கியமற்ற சங்கதிகள். அவை விதைகளை பத்திரமாய் சுமந்து செல்ல வேண்டும் என்பது மட்டுமே தேவையானது. இறைவார்த்தைகளைச் சொல்ல பேச்சு, எழுத்து, வாழ்க்கை, கலைகள், வாட்ஸப் டுவிட்டர் ஃபேஸ்புக் என‌ எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்தப் பை இருப்பவர்கள் மட்டுமே விதைக்கும் பணியைச் செய்ய முடியும் என்பது தவறான சிந்தனை.

Image result for parable of sower3. விதைக்கின்ற விதைகள் எல்லாமே பயன் தருவதில்லை. பயன் தருகின்ற விதைகளும் ஒரே மாதிரி பயனளிப்பதில்லை . விவசாயம் வரவில்லையே என உடைந்து போகத் தேவையில்லை. விதைத்தவை பாழாயினவே என பதறத் தேவையில்லை. இறைவனின் வார்த்தைகள் அதற்குரிய பணியை அதுவாகவே செய்து விடும். எவ்வளவு கனி கிடைக்கும் என எண்ணிப் பார்த்து விதையை நாம் ஊன்றத் தேவையில்லை. இறைவனின் சித்தப்படி கனி கொடுக்கட்டும் என சிந்திப்பதே போதுமானது.

Image result for parable of sower4. நிலங்களின் இயல்புகள் நிலையானவை அல்ல. நன்றாக உழுது நீர்ப்பாய்ச்சினால் வழியோரமும் வயலாக முடியும். முட்களையும் கற்களையும் அகற்றி ஆழ உழுதால் முட்புதர்கள் வயல்வெளிகளாக முடியும். ஆழ உழுது செப்பனிட்டால் பாறைநிலமும் விளைநிலமாக முடியும். அதே போல, கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டால் நல்ல வயல் கூட பயனற்ற நிலமாய் மாறக் கூடும். எனவே நிலங்களை நிராகரிக்காமல், அவற்றை செப்பனிடும் வழிகளை மேற்கொள்வதே சிறப்பானது. மனித மனங்களை இதயங்கள் என கொண்டால், அந்த இதயங்களைத் தயாராக்குவதை உழுதல் எனக் கொள்ளலாம்.

Image result for parable of sower5. எல்லா நிலங்களும் அருகருகே தான் இருக்கின்றன. “விதைக்கும் போது” தான் விதைகள் இத்தகைய வேறுபட்ட நிலங்களில் விழுகின்றன. அருகருகே இருந்தாலும் முழுக்க முழுக்க வித்தியாசமான மனநிலையில் தான் மக்கள் இருப்பார்கள் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. கூடவே இருந்தாலும் நல்ல நிலம் அருகே உள்ள வழியோரத்தை வயலாக்க முடியாது. அது தன்னகத்தே மாற்றத்தை கொண்டால் மட்டுமே தன்மையை மாற்றிக் கொள்ள முடியும். எனவே நல்ல நிலத்தின் அருகிலேயே இருக்கிறேன் விளைச்சல் நிச்சயம் எனும் சிந்தனைகள் தவறானவை.

Image result for parable of sower6. விதைகள் இறைவார்த்தைகள். விதைகளை உடைத்தாலோ, விதைகளைச் சிதைத்தாலோ அவை பயன் தரப் போவதில்லை. நெல்லை விதைக்கப் போகும் விதைப்பவன் விதை கடினமாய் இருக்கிறது என உமியை விலக்கி விட்டு விதைத்தால் அந்த விதையினால் எந்த பயனும் இல்லை. விதைப்பவன் விதைகளை அப்படியே விதைக்க வேண்டும். அப்போது தான் விதைகளுக்குள் இருக்கின்ற உயிர் வெளிவரும். விதைப்பது மட்டுமே விதைப்பவனுடைய பணி. அதை முளைக்க வைப்பது இறைவனின் பணி.

Image result for parable of sower7. விதைத்தவன் பின்னர் தூங்கிப் போவதில்லை. அந்த நிலத்தை தொடர்ந்து கண்காணிப்பான். சரியான கால இடைவெளியில் நீர் ஊற்றுவான். தேவையான உரங்களை இடுவான். இவையெல்லாம் விதைப்பவன் செய்கின்ற பணிகள். இறைவார்த்தை முளைத்து வரும்போது அதை அன்புடன் பராமரிப்பதும், கனிகொடுக்கும் வரையில் கூட இருப்பதும். அந்த கனிகளே விதைகளாய் மாறுவதை உறுதிசெய்வதுமெல்லாம் உண்மையான ஒரு விவசாயியின் பணிகள். அதை இறைவன் வெளிப்படையாகச் சொல்லவில்லையெனினும் நிச்சயம் எதிர்பார்க்கிறார்.

Image result for parable of sower8. வழியோர நிலம் காலம் காலமாய் பல்வேறு மனிதர்கள் நடந்து இறுகிப் போன நிலம். யார் நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் நிலம் என வைத்துக் கொள்ளலாம். கடின இதயத்தோடு இருக்கின்ற மனிதர்கள் இவர்கள். இங்கே இறைவார்த்தைகள் விழும்போது அவை எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. அடுத்த மனிதர்கள் நடக்கும்போது உடைபடலாம். அல்லது சாத்தான் எனும் பறவையின் அலகுக்கு இரையாகலாம். இவை இறைவார்த்தையை சற்றும் ஏற்றுக் கொள்ளாத மனிதர்களைப் போன்றது.

Image result for parable of sower9. பாறை நில விதை சட்டென முளைக்கிறது. வேர்கள் கீழிறங்க கீழிறங்க அது பாறையில் மோதுகிறது. அதற்கு மேல் கீழே செல்ல முடியாமல் அது அங்கேயே தங்கிவிடுகிறது. ஆனால் தொடக்கத்தில் அது சட்டென வளர்கிறது. மகிழ்ச்சியோடு வார்த்தையை ஏற்றுக் கொள்பவர்களெல்லாம் நீண்டகாலம் நிலை நிற்பார்கள் என்று சொல்வதற்கில்லை. முதலில் செழித்து வளர்வதால் அவர்கள் ஆன்மீக ஆழம் கொண்டவர்கள் என நினைப்பதும் தவறு. மெதுவாக முளைப்பவர்கள் ஆன்மீக சிந்தனையற்றவர்கள் என அளவிடுவதும் தவறு. மனம் பக்குவமாய் இருக்கிறதா என்பதைப் பொறுத்தே இவை அமையும். விதை மட்டுமே விளைச்சல் தருவதில்லை, நிலத்தின் ஏற்றுக் கொள்ளும் தன்மை இங்கே மிக முக்கியம்.

Image result for parable of sower10. நகர்ந்து கொண்டே இருக்கும் விதையால் வேர்விட முடிவதில்லை. சிலருக்கு உலகக் கவலைகள், சிலருக்கு தனிப்பட்ட கவலைகள், சிலருக்கு உலக இலட்சியம், சிலருக்கும் தேவையற்ற பயங்கள். இப்படி ஏதோ ஒரு விஷயம் அவர்களை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. முட்கள், கற்கள் இவைகளோடு சேர்ந்து இறைவார்த்தையும் வளர்கிறது. ஒரு சிக்கல் வரும்போது இறைவார்த்தையைப் பற்றிக் கொள்ளாமல் சுய சிந்தனைகளை இவர்கள் பற்றிக் கொள்வார்கள். இறைவார்த்தையை சுய முட்களும், கற்களும் சிதைத்து விடுகின்றன. விதைகள் வளரவேண்டுமெனில் மற்ற சிந்தனைகளை அகற்ற வேண்டியதும், முழுமையான நம்பிக்கையை விதையின் மேல் வைக்க வேண்டியதும் அவசியம்.

Image result for parable of sower11. நல்ல நிலமும் ஒரே மாதிரி பயனைத் தருவதில்லை. 30, 60 மற்றும் 100 மடங்கு என்பது விவசாயத்தில் பிரமிப்பு விளைச்சல். சராசரியாக 8 மடங்கு விளைச்சல் என்பதே அதிகபட்ச விளைச்சல் என்பார்கள். 30 மடங்கு, 100 மடங்கு என்பதெல்லாம் அசாதாரண வளர்ச்சி. இறைவார்த்தைக்கு நிலம் எவ்வளவு ஒத்துழைக்கிறது என்பதே விளைச்சலை நிர்ணயிக்கிறது. நிலம் மிகவும் பக்குவப்பட்ட நிலமாய், அதிக பயன்கொடுக்க ஆர்வமாய் இருந்தால் விளைச்சல் மிக அதிகமாய் இருக்கும். விளைச்சல் எவ்வளவு என்பதையல்ல, விளைச்சல் கொடுக்கிறது என்பதையே இறைவன் பார்க்கிறார். எனவே தான் மூன்று நிலங்களையுமே “நல்ல நிலம்” என்கிறார் இயேசு.

Image result for parable of sower12. “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என இறைமகன் முத்தாய்ப்பாய் உவமையை முடிக்கிறார். காதுகளில் இறைவார்த்தை விழுவதால் மட்டுமே ஒருவர் “வார்த்தையைக் கேட்டவர்” ஆகி விட முடியாது. அந்தக் காதுகளுக்குள்ளே நுழைந்து, மனதில் விழுந்து, இரண்டறக் கலந்தால் மட்டுமே பயன் தரமுடியும். கேட்பதற்கான ஆர்வம் உடையவர்களால் மட்டுமே வார்த்தை எனும் உணவை உண்டு, செரிக்க வைத்து, உடலுக்கு ஆற்றலாய் மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.

One thought on “இயேசு சொன்ன உவமைகள் 27 : விதைப்பவன் உவமை

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...