Posted in Articles, Miracles of JESUS

இயேசு செய்த புதுமைகள் : நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தல்

இயேசு செய்த புதுமைகள் : நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தல்
மாற் 8:1 – 10

மத்தேயு 15 : 29 முதல் 39 வரை.

Image result for feeding 4000 jesus

இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்.

பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார்.

அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” என்றார்கள்.

தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக நாலாயிரம் ஆண்கள் உண்டனர். பின்பு அவர் மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டுப் படகேறி மகத நாட்டு எல்லைக்குள் சென்றார்.

*

விளக்கம்

இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் ஆண்கள், மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு உணவளித்த நிகழ்ச்சி சமீபத்தில் தான் நடந்திருந்தது. இப்போது நாலாயிரம் பேருக்கு இயேசு அதே போல அதிசயமாய் உணவளிக்கிறார். அனைவரும் வயிறார உண்கிறார்கள். மீதியை ஏழு கூடைகள் நிறைய எடுக்கின்றனர். அதற்கு முன் அவரை நாடி வருகின்ற ‘எல்லா’ நோயாளிகளுக்கும் அவர் நலமளிக்கிறார்.

இந்த விவிலியப் பகுதி நமக்கு சில ஆன்மீக சிந்தனைகளை தருகிறது.

1. இயேசுவை நாடி மக்கள் பல்வேறு சிந்தனைகளோடும், எதிர்பார்ப்புகளோடும் வருகின்றனர். இயேசுவிடமிருந்து ‘நலம்’ பெறவேண்டும் எனும் முதன்மைச் சிந்தனையோடு வருகின்றவர்கள் இயேசுவை நெருங்குகின்றனர். இயேசு அவர்களுடைய விண்ணப்பத்தை ஏற்று அனைவரையும் நலமளிக்கிறார்.

இயேசுவிடம் நமது உலக வாழ்க்கை சார்ந்த பிரச்சனைகளுக்காகச் செல்லும்போது அவர் நிராகரிப்பதில்லை. என்ன நோய், எவ்வளவு தீவிரம், யாருக்கு நோய் என்பதையெல்லாம் பார்க்காமல் அனைவருக்கும் நலமளிக்கிறார். ‘நல்லோர் மேலும் தீயோர் மேலும் பெய்கின்ற மழை’ போல இறைவனின் நோய்தீர்க்கும் கருணை எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து மக்கள் மீதும் இருக்கிறது.

2. “பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.”

இந்த மனநிலை மிகவும் முக்கியமானது ! ஆசீர்வாதங்களை இறைவன் மூலமாக நமக்குப் பெற்றுத் தரும் கருவிகளாக பலர் இருக்கின்றனர். ஆனால் “போற்றுதலும், புகழ்ச்சியும், மகிமையும், மாட்சியும்” நாம் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டும். பெற்றுத் தருபவர்களிடம் நாம் காட்ட வேண்டியது அன்பு மட்டுமே. ‘அழகிய படத்தை வரைந்ததற்காக யாரும் பென்சிலைப் பாராட்டுவதில்லை. வரைந்தவரையே பாராட்டுவார்கள்’ என்கிறார் அன்னை தெரேசா. ஊழியர்கள் மூலமாகப் பெறுகின்ற நன்மைகளுக்கு, ஊழியர்களை அல்ல, இறைவனைப் போற்றிப் புகழ்பவர்களாக‌ இருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

3. ‘மூன்று நாட்களாக’ இயேசுவின் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் மீது இயேசு பரிவு கொள்கிறார். அந்த மக்கள் இயேசுவிடம் விண்ணப்பம் எதையும் வைக்கவில்லை. இயேசுவிடம் வந்து தங்கிவிடுகின்றனர். அவர்களுடைய தேவையை இயேசுவே அறிந்து கொள்கிறார். “ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” என்பதே இயேசுவின் வாக்கு. இயேசுவின் காலடியில் எதையும் எதிர்பார்க்காமல் இருக்கும் மனிதர்கள் எந்த விண்ணப்பமும் வைக்கத் தேவையில்லை, இயேசுவே அவர்களுக்குத் தேவையானதைத் தருவார்.

நாம் இயேசுவின் அருகே எவ்வளவு நேரம் அமர விரும்புகிறோம். ஆலயத்தில் சில மணி நேரங்கள் அமர்வது அசௌகரியமாக இருக்கிறதா ? விவிலியத்தை சில நிமிடங்களுக்கு மேல் வாசிப்பது அசதியாய் இருக்கிறதா ? மனதில் சில கேள்விகளை எழுப்புவோம். நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் அவரது பாதத்தில் சமர்ப்பித்தால் நாம் எதையும் கேட்காமலேயே நமக்குத் தேவையானவற்றை இயேசு தருகிறார்.

4. “இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன்” என கூறுகின்றார். 5000 பேருக்கு உணவளித்த நிகழ்ச்சியை சிறிது காலம் முன்பு தான் சீடர்கள் கண்டிருந்தார்கள். அப்போது மாலை வேளையில் இயேசு மக்களுக்கு உணவளித்திருந்தார். இந்த முறை, சீடர்கள் இயேசுவிடம் முதல் நாள் மாலையில் வந்து மக்களுக்கு உணவளிக்குமாறு கேட்கவில்லை. இரண்டாம் நாளும் கேட்கவில்லை. மூன்றாம் நாளும் கேட்கவில்லை. கடைசியில் இயேசுவே சீடர்களை அழைத்து தனது கரிசனையைச் சொல்கிறார்.

பிறருடைய தேவைகளுக்காக நாம் இயேசுவிடம் செல்பவர்களாக இருக்க வேண்டும். “இயேசு என்ன செய்ய முடியும்” என்பதை அறிந்த பின்பும், பிறருக்காக பரிவு கொள்ளாமல் இருப்பது பாவம். நல்ல சமாரியன் கதையில் அதைத் தான் இயேசு சொன்னார், ‘பிறருக்காகப் பரிவு கொள்’ ! அந்த சிந்தனை நமக்கு இருக்க வேண்டும். நமது தேவைகளை இயேசு சந்திப்பார், எனினும் பிறருக்காக நாம் கரிசனை கொள்ளவேண்டும் என்பதை அவர் எதிர்பார்க்கிறார்.

5. “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்கிறார் இயேசு ! மக்கள் கொண்டு வந்திருந்த உணவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருந்திருக்கலாம். ஓரிரு நாட்களில் முழுமையாய் நிறைவடைந்து ஒன்றுமில்லை எனும் நிலைக்கு வந்திருக்கலாம் ! இப்போது இயேசு மக்களின் தேவையைச் சந்திக்க களமிறங்குகிறார்.

நம்மால் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது ! நம் கையில் எதுவும் இல்லை !! எனும் நிலையில் இருக்கும் போது இறைவன் வரம் தருகிறார். நம்மால் முடியும் எனும் நிலை முடிந்த பின் தான், இறைவனின் செயலாற்றும் கரம் துவங்கும். என்னிடம் ஒன்றும் இல்லை, என்னை நிரப்பும் என அவரிடம் சரணடையும் போது இயேசு நிறைவாக்குகிறார்.

6. மூன்று நாட்கள் இயேசுவோடு இருக்கின்றனர் மக்கள். முந்தைய ‘5000 பேருக்கு உணவளிக்கும் நிகழ்வில்’ ஒரே ஒரு நாள் மக்கள் இயேசுவோடு இருந்தார்கள். ‘இயேசு உண்மையிலேயே அப்பத்தைக் கொடுத்தாரா ?’ எனும் சந்தேகம் யாருக்காகவது எழுந்திருந்தால், இந்த நிகழ்ச்சியில் அது முடிந்திருக்கும். பாலை நிலத்தில் மூன்று நாட்கள் ! இயேசுவின் பாதத்தில் மூன்று நாட்கள். யாரிடமும் எதுவும் இல்லை. பாலை நிலத்தில் எதுவும் வாங்கவும் முடியாது ! இப்போது ஒரு புதுமை மட்டுமே பசியாற்ற முடியும் எனும் நிலை !

நமது வாழ்வில் சில வேளைகளில் நடக்கின்ற இறைவனின் ஆசீர்வாதத்தை, ‘எதேச்சை’ என்றோ, ‘லக்’ என்றோ பெயரிட்டு அழைக்கிறோம். சில நிகழ்வுகள் நமக்கு பளிச் என உணர்த்துகின்றன, இவை இறைவனின் கருணை என்பதை ! அதை அறிந்து கொள்ள, ‘நாம் ஒன்றுமில்லை, நம்மால் ஒன்றும் முடியாது’ எனும் தாழ்மையின் மனநிலை நம்மிடம் இருக்க வேண்டும்.

7. ““இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” ” எனும் சீடர்களின் கேள்வி வியப்பூட்டுகிறது. இதே போன்ற அற்புதத்தைக் கண்டிருந்தபின்பும், அதே போன்ற ஒரு சூழலில் அவர்களுடைய மனநிலை இன்னும் பழைய இடத்திலேயே நிற்கிறது. ஏதோ ஒரு முறை நடந்தது, இனிமே நடக்காது என நினைப்பது போல இருந்தது அவர்களுடைய பதில் ! ஐயாயிரம் ஆண்களுக்கு உணவளித்த இயேசு, நாலாயிரம் பேருக்கும் அதே போல உணவளிப்பார் என்பதை நம்ப மறுக்கிறது அவர்களுடைய மனம்.

நமது வாழ்விலும் பிறருக்கு இறைவன் செய்த எத்தனையோ அதிசயங்களை சாட்சிகளாய் கேட்கிறோம். அது ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமே இயேசு கொடுப்பது, ஏதோ ஒரு சூழலில்மட்டும் இயேசு கொடுத்தது, இனிமேல் அது சாத்தியமில்லை என நினைத்து விடுகிறோம். கேட்பவர் இறைவன் என்பதை மறந்து விடுகிறோம். விசுவாசத்தை ஆழமாய் இதயத்தில் நட தயங்குகிறோம். உணவு கிடைப்பது பாலை நிலத்திலிரிந்தும் அல்ல, விளை நிலத்திலிருந்தும் அல்ல, இறைவனின் கரத்திலிருந்து எனும் உண்மையே நாம் உணரவேண்டிய அடிப்படை !

8. இந்த முறை சீடர்களிடம், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” ! மக்களுக்கு உணவு தீர்ந்து விடுகிறது, ஆனாலும் சீடர்களிடம் ஏழு அப்பங்கள் இருக்கின்றன ! அவர்கள் மக்களோடு பகிரவில்லையா ? அல்லது பகிராமல் வைத்திருக்க வேண்டியது தான் இறைவனின் திட்டமா ? எது எப்படியெனினும், இருப்பதையெல்லாம் “முழுமையாய்” இறைவனிடம் அவர்கள் கொண்டு வருகின்றனர். கடந்த முறை ஐந்து அப்பத்தால் ஐயாயிரம் பேர், எனவே இந்த முறை நாலாயிரம் பேருக்கு நான்கு அப்பம் போதும் என சீடர்கள் கணக்கிடவில்லை ! இருப்பதை அனைத்தையும் இயேசுவிடம் கொண்டு வருகின்றனர்.

நம்மிடம் இருப்பது எதுவோ அதை முழுமையாய் இறைவனிடம் கொடுப்பது தான் புதுமையின் துவக்கம். கொஞ்சத்தைக் கொடுப்பதில் அற்புதம் நிகழ்வதில்லை. நெஞ்சத்தைக் கொடுப்பதில் மாற்றம் நிகழும். இருப்பதையெல்லாம் அவரிடம் கொடுத்தால், கொடுத்ததையெல்லாம் அவர் பலமடங்காக்குகிறார். முழுமையாய் கொடுக்க வேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு.

9. மக்களை தரையில் அமரச் செய்கிறார் இயேசு. கடந்த முறை புல்தரையில், இப்போது கட்டாந்தரையில். இது வேறு ஒரு பருவத்தில் நிகழ்கிறது என்பதன் குறிப்பு ! மக்களிடம் இயேசு எதிர்பார்ப்பதெல்லாம் சிறிய விஷயங்களே ! அப்பத்தை எடுத்து “கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்”

எதையும் தந்தையிடம் சொல்லி, அவருக்கு நன்றி செலுத்தி துவங்கும் பழக்கம் இறைவன் நமக்குச் சொல்லித் தரும் பாடம். எல்லாமே இறைவன் தந்தவை, அவற்றைப் பயன்படுத்தும் போது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அப்போது தான் அது ஆசீர்வதிக்கப் பட்டதாய் மாறும் !! அப்பத்தை உடைக்கிறார் இயேசு ! ‘உடைபட்டால் தான் பணியாற்ற முடியும், பிறரின் பசியாற்ற முடியும்’ என்பதே அந்த‌ அப்பத்தை உடைக்கும் நிகழ்வு. சீடர்கள் கையில் வந்தபின் அந்த அப்பங்கள் பலுகிப் பெருகுகின்றன. காரணம் இப்போது அவை வெறும் அப்பங்களல்ல, இறைவனின் அற்புதங்கள்.

10. அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர் என்கிறது பைபிள். இறைவன் தரும்போது நிறைவு என்பது சர்வ நிச்சயம். தேவைக்கு அதிகமாய் மீதியும் நிறைவானதாகவே வரும். ஏழு அப்பங்களை அப்படியே வைத்திருந்தால் ஏழு பேருக்குக் கூட பசியாற்றாது, ஆனால் இறைவனின் கரம் தொட்டுத் திரும்பி வருகையில் நினைத்துப் பாக்க முடியாத அளவுக்கு அது பயனளிக்கிறது.

இறைவன் தருகின்ற ஆசீர் முழுமையானது. நிறைவானது. மிகுதியானது. ஒவ்வொருவரையும் அறிந்து நல்குவது. “இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்” என இயேசு சொல்வதாய் மாற்கு நூல் குறிப்பிடுகிறது. பல்லாயிரம் பேர் கூடியிருக்கும் அந்த கூட்டத்தில் கூட ஒவ்வொரு நபரையும் இயேசு அறிந்து வைத்திருந்தார் என்பதையே இது விளக்குகிறது. இது மிகப்பெரிய ஆறுதலை நமக்கு அளிக்கிறது.

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

*

 

2 thoughts on “இயேசு செய்த புதுமைகள் : நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தல்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s