கனி, மரத்தின்
கண்காணிப்பைக்
காட்டுகின்றது;
சொல், மனிதரின்
உள்ளப் பண்பாட்டைக்
காட்டுகின்றதுசீராக் 27 :6
சீராக்கின் நூல் பேச்சில் இருக்க வேண்டிய தூய்மையைக் குறித்து விரிவாகப் பேசுகிறது. சலிக்கின்ற சல்லடையில் உமி தங்கி விடுவதைப் போல, மனிதரின் பேச்சில் மாசு படிந்திருக்கிறது என இந்த நூல் கூறுகிறது. குயவனின் கரங்களை, சூளை பரிசோதிப்பது போல மனிதரை அவருடைய உரையாடல் பரிசோதிக்கிறது என்கிறது அது.
“நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்” (லூக் 6 :45), “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும் ( மத்தேயு 7 :17) என இறைமகன் இயேசு இதே சிந்தனையை நமக்குத் தருகிறார்.
விவிலியம் நமக்கு நாவடக்கத்தைப் பற்றியும், பேச்சைப் பற்றியும் நிறைய பேசுகிறது. குறிப்பாக திருப்பாடல்கள், நீதிமொழிகள் போன்ற நூல்கள் நமது வார்த்தையைக் கவனிக்க வேண்டியதன் தேவையை விளக்குகின்றன. “ஒருவருடைய பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்” என்கிறது சீராக் நூல். இறைப்பற்று உடையவர்களின் பேச்சு எப்போதுமே ஞானமாய் இருக்கும் என்பதையும், அறிவிலிகளின் பேச்சோ நிலவைப் போல வேறு வேறு முகம் காட்டும் எனவும் நூல் கவித்துவமாய்ப் பேசுகிறது.
வெறும் பேச்சு தானே, இதுல என்ன இருக்கு ? என்பதே பலருடைய சிந்தனை. இறைவனோ அதை எதிர்க்கிறார். “செருக்குற்றோரின் வாய்ச் சண்டை கொலைக்கு இட்டுச் செல்லும்” என்கிறார் சீராக் வாயிலாக.
சகதி நிறைந்த குளத்திலிருந்து சந்தன வாசனை புறப்படுவதில்லை. உள்ளத்தில் என்ன நிரம்பியிருக்கிறதோ அதையே வாய் பேசும். பாத்திரம் முழுவதும் இனிப்பான நீர் நிரம்பியிருந்தால் தளும்புவதெல்லாம் இனிமையாகவே இருக்கும் என்பதைப் போல உள்ளில் இனிமையை நிரப்பத் துவங்குவோம்.
கனிகளைக் கவனிக்க வேண்டுமெனில் வேர்களை விசாரிக்க வேண்டும். வார்த்தைகளைச் சீர் செய்ய வேண்டுமெனில் இதயத்தை சீர்செய்ய வேண்டும்.
*