Posted in Life of JESUS

இயேசு வரலாறு 38 : அமைதிப்புறா ஆயுதமேந்துகிறது

அமைதிப்புறா ஆயுதமேந்துகிறது

Image result for Jesus in temple fighting

ஆலயத்தின் ஒரு பக்கம் மிகவும் சத்தமாக இருப்பதைக் கவனித்த இயேசு அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொழுகைக்குரிய அந்த தேவாலயம் அன்று சந்தைக்கூடம் போலக் காட்சியளித்தது. பாஸ்கா விழாவில் பலி செலுத்துவது மக்களின் வழக்கம் அதற்கான பலிப்பொருட்கள் எல்லாம் ஆலயத்துக்குள்ளேயே விற்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஒரு இடத்தில் புறாக்கூடுகள் வரிசையாய் வைக்கப்பட்டிருக்க, புறாவின் எச்சத்தால் அந்த இடம் துர்நாற்றம் வீசியது. அங்கு மக்கள் குழுமி நின்று புறாக்களை வாங்க பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சில்லறை இல்லாதவர்களையும், வேற்று நாணயங்களை வைத்திருப்பவர்களையும் நாணயமாற்றும் கடை அழைத்துக் கொண்டிருந்தது. அங்கும் ஒரு மிகப்பெரிய கூட்டம்.

இன்னோர் இடத்தில் ஆலயத் தூண்களில் கட்டப்பட்டிருந்தன ஆடுகளும், மாடுகளும். அவைகளையும் பலியிடுவதற்காக மக்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கு கூச்சலும், குழப்பமும் நிறைந்திருந்தது.

இவற்றைத் தவிர வெளியூர்ப்பயணிகளையும், பெண்களையும் கவர ஏராளமான விற்பனைப்பொருட்கள். அவையும் ஆலயத்துக்குள் நிரம்பி வழிந்தன.

ஆலயம் தன்னுடைய அமைதித் தன்மையை இழந்து சந்தை வீதிபோல கூச்சல், குழப்பமாக இருப்பதைக் கண்ட இயேசு அதிர்ச்சியடைந்தார். அமைதியாக தியானிக்க வேண்டிய இடம், கடவுளுடன் உரையாடவேண்டிய புனித இடம் இப்படிப் பாழ்பட்டுக் கிடக்கிறதே என்று கடும் கோபம் கொண்டார். சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். குருக்களும், மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் எல்லோரும் அங்கே இருக்கிறார்கள் ஆனால் யாருக்கும் இது தவறென்று தெரியவில்லை.

இயேசு நேராக புறாவிற்பவனிடம் சென்றார்.
‘இதை எடுத்துக் கொண்டு வெளியே போ’ அவருடைய குரலில் அதிகாரம் மிளிர்ந்தது.

‘யார் நீ ? உன்னுடைய பேச்சை நான் ஏன் கேட்கவேண்டும் ? நீ என்ன தலைமைக் குருவா ? இங்கே கடை நடத்த எனக்கு அதிகாரம் உண்டு’ அவன் கத்தினான்.

‘என்னுடைய வீட்டில் கடை நடத்த நீ யார் ?’ இயேசுவும் கோபமடைந்தார்.

‘உனக்கென்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா ? இது உன்னுடைய வீடா ? இது எங்களுடைய எருசலேம் தேவாலயம். எரிச்சலைக் கிளப்பாமல் வெளியே போ’ அவன் பதிலுக்குக் கத்தினான். அதற்குள் மற்ற கடையிலுள்ளவர்கள் என்ன நடக்கிறதென்று பார்க்க விரைந்து வந்தார்கள்.

இயேசு கயிறுகளினால் ஒரு சாட்டையைப் பின்னினார். அதைக் கொண்டு கடை நடத்திக் கொண்டிருந்த அனைவரையும் தாறுமாறாக அடித்தார். சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுவரை சாந்தமாகப் பார்த்திருந்த இயேசுவை அவர்கள் அப்போது தான் முதல் முறையாக கொழுந்து விட்டெரியும் கோபத் தீயாகப் பார்க்கிறார்கள். இயேசு நிறுத்தவில்லை. புறாக்கூடுகளைத் திறந்து விட்டார். ஆடுமாடுகளை அவிழ்ந்து விட்டார். அவை ஆலய வாசல் வழியாக வெளியே விரைந்தன. நாணயம் மாற்றிக் கொண்டிருந்தவனுடைய மேஜையைக் கவிழ்த்து எறிந்தார். நாணயம் நாலா பக்கமும் சிதற மக்களும் சிதறி ஓடினார். விற்பனையாளர்கள் அனைவரையும் இயேசு சரமாரியாகத் தாக்கினார்.

‘ஏய்…. நிறுத்து நீ யார் ?’ குருக்கள் கோபத்துடன் ஓடி வந்தனர்.

‘இது என் தந்தையின் இல்லம். இது செபவீடு. கள்வர்களின் கூடு அல்ல.’ இயேசு குருக்களின் முன்னால் நிமிர்ந்து நின்று பதிலளித்தார். அவருடைய குரலில் அதிகாரத் தோரணை பளிச்சிட்டது.

‘உன் தந்தையின் இல்லமா ? இது எங்கள் தேவாலயம். நாங்கள் காலம் காலமாக குருக்களாகவும், குழுக்களாகவும் இருக்கும் ஆலயம். எங்கிருந்தோ வந்த நீ இது உன் வீடு என்கிறாய், உன் தந்தையின் இல்லம் என்கிறாய். உனக்கென்ன பைத்தியமா’

‘உங்கள் சமரசப் பேச்சுகள் எனக்குத் தேவையில்லை. உங்கள் மிரட்டலுக்குப் பயப்படவும் மாட்டேன், உங்கள் அதிகாரத்துக்குக் கட்டுப் படவும் மாட்டேன். இது என் தந்தையின் வீடு. இதை நீங்கள் வணிக வளாகமாக்குவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’ இயேசு அழுத்தமாய்ச் சொன்னார்.

‘உன் அனுமதி எங்களுக்கு எதற்கு ? எங்களுக்கு அனுமதியளிக்க பல அதிகாரிகள் இருக்கிறார்கள்’

‘எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. என் இல்லத்தைப் பராமரிப்பது என் பணி’ இயேசு அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

‘பராமரிப்புப் பணியா ? அந்த பணிக்கான அனுமதி இருக்கிறதா ? என்ன அனுமதி ? நீ எந்த அதிகாரத்தில் இப்படியெல்லாம் உளறுகிறாய். உனக்கு அதிகாரம் இருக்கிறது என்றால் ஏதேனும் அடையாளம் காட்டு பார்க்கலாம் ?’ கூடியிருந்த யூதர்கள் கேட்டார்கள்.

‘இந்த ஆலயத்தை இடித்துவிடுங்கள். மூன்றே நாளில் நான் கட்டி எழுப்புவேன்’ இயேசு சொன்னார்.

கூட்டத்தினர் சத்தமிட்டுச் சிரித்தனர். ‘ நீ உண்மையிலேயே பைத்தியக்காரன் தான். இந்த ஆலயத்தைக் கட்ட எங்களுக்கு நாற்பத்து ஆறு ஆண்டுகள் ஆயின. நீ என்னவென்றால் மூன்று நாளில் கட்டுவேன் என்கிறாய். இந்த ஆலயத்தின் ஒரு கல்லைப் புரட்டவே உனக்கு மூன்று நாட்கள் ஆகும்’ அவர்கள் மீண்டும் சத்தமாய்ச் சிரித்தார்கள்.

‘நான் சொல்வது உங்களுக்கு இப்போது விளங்காது. பின்னர் விளங்கிக் கொள்வீர்கள்’ இயேசு சொன்னார். தன்னுடைய மரணத்தையும், மூன்றாவது நாளில் உயிர்க்கப் போகிறேன் என்பதையுமே இயேசு சொன்னார் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவருடைய சீடர்கள் உட்பட.

அதன் பின் வணிகர்கள் எல்லோரும் வெளியேற ஆலயம் தன்னுடைய அமைதியைத் திரும்பப் பெற்றது. இயேசு ஆலயத்தில் அமர்ந்து கடவுளுடன் ஒன்றித்திருந்தார்.

அமைதிப்புறாவான இயேசு புரட்சிப் புயலாக வெடித்த அந்த சம்பவத்தைச் சீடர்கள் மனதுக்குள் குழப்பத்துடன் எழுதிக் கொண்டனர்.

அன்று இரவு இயேசு நகருக்கு வெளியே உள்ள பெத்தானியா என்னுமிடத்தில் சென்று அங்கே தங்கினார். காலையில் மீண்டும் ஆலயத்துக்குச் செல்வதற்காக சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார்.

இயேசுவுக்குப் பசியெடுத்தது. ஏதேனும் உண்ணக் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே வந்தவருடைய பார்வையில் விழுந்தது ஒரு அத்தி மரம். ஒரு பெரிய செழிப்பான அடர்ந்த அத்திமரம். அந்த மரத்திலிருந்து பழங்களைப் பறித்து உண்பதென்று சீடர்களும் இயேசுவும் முடிவு செய்து அத்திமரத்தை நெருங்கினார்கள்.

ஏமாற்றம் !

அத்திமரத்தில் கனிகள் எதுவும் இல்லை. மரம் செழிப்பாக நிற்கிறது. ஆனால் பலன் இல்லை !.
‘இனிமேல் நீ கனிதரவே மாட்டாய் !’ இயேசு அத்திமரத்தைப் பார்த்துக் கூறினார். ! உடனே அந்த அத்திமரம் பட்டுப் போயிற்று.

சீடர்களுக்குப் பெரும் வியப்பு.

‘ஆண்டவரே… நீர் சொன்னதும் இந்த அத்திமரம் பட்டுப் போய்விட்டதே. இதன் ரகசியத்தை நீங்கள் எங்களுக்கும் சொல்லித் தரலாமே..’ சீடர்கள் ஆர்வமாய்க் கேட்டார்கள்.

‘நம்பிக்கை ! அது தான் ஒரே பதில். அசைக்க முடியாத நம்பிக்கை. இதைச் சொன்னால் கண்டிப்பாக நடக்கும் என்று இம்மியளவும் சந்தேகமின்றி நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நடந்தே தீரும்’

‘உண்மையாகவா ?’ சீடர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.

‘உண்மை தான். அதோ அந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து போய் கடலில் விழு என்றால் கூட அது நடக்கும். அது நடக்குமா என்றோ, நடக்காது என்றோ நீங்கள் நினைத்தால் அது நடக்காது.’ இயேசு சொன்னார்.

‘அத்தகைய நம்பிக்கையைப் பெறுவது மிகவும் கடினம் தான்’ சீடர்கள் புன்னகையுடன் சொன்னார்கள்.

‘உண்மை ! நீங்கள் வானகத் தந்தையிடம் செபம் செய்யும்போது கூட, கேட்கும் விஷயத்தைப் பெற்றுக் கொண்டோம் என்று உங்களுக்குள் உறுதியாக நம்பினால் அது நிறைவேறும். அப்படி நம்புவதற்கு நீங்கள் கடவுளின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி நம்பிக்கை வைத்தவர்கள் தான் நம் இறைவாக்கினர்கள்’ இயேசு சொல்ல சீடர்கள் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...