Posted in Life of JESUS

இயேசுவின் வரலாறு 37 : பத்து கன்னியர் உவமை

Image result for 10 virgins parableமாபெரும் திருமண விருந்து.

மணமகன் அழைத்தல் என்பது அந்நாட்களில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்த ஒரு நிகழ்ச்சி. அதன்படி மணமகன் வரும்போது மணமகளின் தோழிகள் சிலர் கைகளில் எரியும் விளக்கை எடுத்துக் கொண்டு செல்லவேண்டும். இந்தத் திருமண விருந்திற்கும் விளக்கை எடுத்துக் கொண்டு மணமகனை வரவேற்க பத்து தோழியர் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

பத்துபேரும் மணமகளின் வீட்டுக்குக் குறித்த நேரத்தில் விளக்குகளோடு வந்து சேர்ந்தார்கள். ஆனால் அவர்களில் ஐந்துபேரிடம் விளக்கிற்குத் தேவையான எண்ணெய் இருக்கவில்லை. போகும் வழியில் எங்காவது வாங்கிக் கொள்ளலாம் என்றும், திருமண வீட்டில் கேட்டு வாங்கலாம் என்றும் அவர்கள் பேசிக் கொண்டார்கள். மற்ற ஐந்துபேரும் விளக்குகளுடன் தேவையான எண்ணெயையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். எனவே அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

மணமகன் வெளியூரிலிருந்து வரவேண்டும். தாமதமாகிக் கொண்டே இருந்தது. இரவு நீண்ட நேரமாகிவிட்டதால் எல்லோரும் கிடைத்த இடத்தில் படுத்து உறங்கிவிட்டார்கள்.

நள்ளிரவு. அவர்களுடைய அமைதியான நித்திரையைக் கலைத்தது அந்த அழைப்பு.
‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’

தோழிகள் எல்லோரும் எழுந்து தங்கள் விளக்கின் திரிகளைத் தூண்டிவிட்டு விளக்குகளைக் கொளுத்தினார்கள். ஐந்து அறிவிலிகளின் விளக்குகளும் எண்ணையில்லாததால் அணைந்து அணைந்து போயின.

‘ஐயோ.. எங்களுடைய விளக்குகள் அணைகின்றன. எங்களுக்குக் கொஞ்சம் எண்ணை கொடுங்கள்’ அவர்கள் கேட்டார்கள்.

‘அடடா.. நீங்கள் எண்ணெய் எடுத்து வரவில்லையா ? எங்களிடம் இருப்பது எங்களுக்கு மட்டும் தான் சரியாக இருக்கும். மன்னியுங்கள்’ முன்மதியுடைய அந்தப் பெண்கள் சொன்னார்கள்.

‘அப்படிச் சொல்லாதீர்கள். இருப்பதில் பாதியைக் கொடுங்கள். பகிர்ந்து கொள்வோம்…’ அவர்கள் கெஞ்சினார்கள்

‘இல்லை… நாங்கள் இருப்பதில் பாதியைக் கொடுத்தால் எங்கள் விளக்குகளும் அணையும், உங்களுக்கும் எண்ணெய் பற்றாமல் போகும். எதற்கும் திருமண வீட்டில் கேட்டுப் பாருங்களேன்’

‘ஐயோ அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. மணமகன் வந்து கொண்டிருக்கிறார்…’ அறிவிலிகள் பதட்டமானார்கள்.

‘இதெல்லாம் நீங்கள் முன்னமே யோசித்திருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கடைக்குச் சென்று எண்ணெய் வாங்கி வந்திருக்கலாம் அல்லவா ? எங்களை மன்னியுங்கள். உங்களுக்கு எண்ணெய் தரும் பேச்சுக்கே இடமில்லை’ அவர்கள் உறுதியாய் சொல்ல அறிவிலிகள் எங்காவது எண்ணெய் கிடைக்குமா என்று தேடி ஓடினார்கள்.

இந்த ஐந்து கன்னியர்களும் சென்று மணமகனை வரவேற்றார்கள். மனமகன் மணமகளின் தோழியரோடு சென்று திருமண மண்டபத்தில் நுழைய, மண்டபத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.

எண்ணை தேடிப்போன தோழியர் தெருவெங்கும் ஓடினார்கள். நள்ளிரவு நேரத்தில் அவர்களுக்கு எங்கும் எண்ணெய் கிடைக்கவில்லை. நீண்ட நேர அலைச்சலுக்குப் பின் எப்படியோ கொஞ்சம் எண்ணெய் பெற்றுக் கொண்ட கன்னியர்கள் மணவீட்டை நோக்கி ஓடினார்கள்.

திருமண மண்டபம் அடைக்கப்பட்டிருந்தது. தோழியர் திகைத்தனர்.

‘ஐயா… யாராவது கதவைத் திறந்து விடுங்கள். நாங்கள் மணமகளின் தோழியர்.’ அவர்கள் கத்தினார்கள். அவர்களுக்குக் கதவு திறந்து விடுவார் யாருமில்லை.

அவர்களோ தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார்கள். மணமகன் அவர்களிடம்
‘நீங்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. சும்மா நின்று கத்திக்கொண்டிருக்காமல் போய் விடுங்கள்’ என்றார்.

‘ஐயா.. நாங்கள் உம்மை எதிர்கொள்ள வேண்டிய கன்னியர்கள். விளக்கில் எண்ணை இல்லாததால் தாமதம் ஆகிவிட்டது. மன்னியுங்கள். கதவைத் திறந்து விடுங்கள்’ என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்கள் அந்த அறிவில்லாத கன்னியர்கள்.

‘இல்லை. உங்களை எனக்குத் தெரியாது. விழிப்பாய் இருக்காதவர்கள் வெளியே நிற்கவேண்டியது தான்’ மணமகன் உறுதியாய் சொன்னார். மண மண்டபம் கோலாகலமாய் இருக்க, விழிப்பாய் இல்லாதவர்கள் வெளியே தனித்திருந்து தங்கள் தவறுக்காய் புலம்பி அழுதனர்.

இயேசு இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு தன்னைச் சுற்றியிருந்த கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார்.
‘இதன் பொருள் உணர்கிறீர்களா ?’

‘ஆம் ஆண்டவரே… இறையரசில் நுழைய வேண்டுமென்றால் நம்மை நாமே ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும்’ அவர்கள் பதில் சொன்னார்கள்.

‘சரியாகச் சொன்னீர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பதெல்லாம் தோல்வியில் முடியும். இப்போதே உங்கள் தவறான வழிகளை விட்டு விலகி, விவேகமாய் நடவுங்கள்.’

‘விழிப்பாய் இருங்கள். தலைவன் எப்போது வேண்டுமானாலும், எந்த ஜாமத்தில் வேண்டுமானாலும் வீட்டை வந்தடையலாம். எனவே விழிப்பாய் இருங்கள். தலைவன் வரும்போது விழிப்பாய் இருக்கும் ஊழியன் பேறுபெற்றவன். அவனுக்கே தலைவனின் சலுகைகள் கிடைக்கும்.’

‘திருடன் எந்த ஜாமத்தில் வருவான் என்பதை யாரும் அறிய முடியாது. அவன் வரும்போது விழிப்பாய் இருந்தால் வீட்டைக் காத்துக் கொள்ள முடியும். விழிப்பாய் இல்லையேல் இழப்பாய்.’ இயேசு சொன்னார் கூட்டத்தினர் தெளிவடைந்தார்கள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...