Posted in Life of JESUS

இயேசு வரலாறு 33 : முதலானோர் கடைசியாவர்.

aas

இயேசு ஒரு வீட்டில் பந்தியமர்ந்திருக்கையில் ஒரு கதை சொன்னார்.

ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் ஊரிலுள்ள பெரிய மனிதர்களையும், சாதாரண மனிதர்களையும் அனைவரையும் திருமண விருந்து ஒன்றுக்கு அழைத்திருந்தார். இயேசுவும் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். விருந்தில் கலந்து கொண்ட இயேசு தன்னுடைய சீடர்களுடன் பந்தியமர்ந்திருந்தார்.

எல்லோரும் முதலிடத்தைப் பிடிப்பதற்காக ஓடினார்கள், முண்டியடித்தார்கள். முதல் வரிசை நிரம்பிவிட்டது. அந்தக் கூட்டத்தில் இன்னொரு மனிதர் இருந்தார். அவர் முண்டியடித்த அத்தனை மனிதர்களை விடவும் முக்கியமானவர். ஆனால் அவர் அவசரப் படவில்லை. நேராக கடைசி இடத்துக்குச் சென்று அமர்ந்து கொண்டார்.

விருந்துக்கு அழைத்திருந்தவர் வந்தார். அவர் முதலில் முதல் வரிசையில் இருந்தவர்களைச் சென்று பார்வையிட்டார்.

‘வாருங்கள். என்னுடைய அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்கு நன்றி’ அழைத்தவர் சொல்ல
பந்தியில் இருந்தவர்கள் புன்னகைத்தார்கள்.

ஒவ்வொரு நிலையாகச் சென்று அனைவரையும் நலம் விசாரித்த அந்த செல்வந்தர் கடைசி இடத்துக்கு வந்தபோது அங்கே அமர்ந்திருந்த அந்த முக்கியமான மனிதரைக் கண்டார்.

‘நண்பா… நீ என்ன கடைசி இடத்தில் அமர்ந்திருக்கிறாய் ? நீ எனக்கு மிகவும் முக்கியமானவன் இல்லையா ? வா.. வா.. நீ முதலிடத்துக்கு உரியவன்’ என்று கூறி அவனை முதலிடத்திற்கு அழைத்துச் சென்றார். அதைக் கண்ட அனைவரும் அந்த மனிதனைப் பெருமையுடன் பார்த்தார்கள்.

முதலிடத்துக்கு வந்த அவர் அங்கிருந்த ஒருவரிடம்,’ நீ… போய் அந்த கடைசி இடத்தில் அமர்ந்து கொள். ஏனென்றால் இவனுக்கு நான் முதலிடம் தந்தாக வேண்டும்’ என்றார்.

முதலிடத்திலிருந்து கடைசியிடத்துக்கு அனுப்பப்பட்டவர் அனைத்து விருந்தினர் முன்னிலையிலும் அவமானமாய் உணர்ந்தார். தலை குனிந்தபடியே கடைசி இடத்துக்குச் சென்றார். ஆனால் கடைசி இடத்திலிருந்து முதலிடத்துக்கு வந்தவர் அனைவர் முன்னிலையிலும் முக்கியமானவராகக் கருதப்பட்டு பெருமையடைந்தார்.

இயேசு புன்னகையுடன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின் தன்னுடன் பந்தியமர்ந்திந்தவர்களை நோக்கி
‘இதன் மூலம் என்ன தெரிந்து கொண்டீர்கள் ? ‘ என்று கேட்டார்.

அவர்கள் ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொன்னார்கள். இயேசு அவர்களிடம்,
‘தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான். தன்னை உயர்த்துகிறவனோ தாழ்த்தப் படுவான். இதுவே செய்தி. இதை வாழ்வில் கடைபிடியுங்கள்’ என்றார்.

பின் அந்த விருந்து ஏற்பாடு செய்திருந்த மனிதரை அழைத்து,
‘நீர் விருந்துக்கு அழைக்கும்போது உறவினர்களையோ, சகோதரர்களையோ, தெரிந்தவர்களையோ அழைக்கவேண்டாம். அப்படி அழைத்தால் அவர்களும் உம்மை விருந்துக்கு அழைத்து பதில் மரியாதை செய்வார்கள். உமது அழைப்பும் அவர்களுடைய அழைப்பும் சரிக்குச் சரியாகிவிடும். மாறாக நீர் விருந்துக்கு அழைக்கும்போது ஏழைகள், நோயுற்றோர், உடல் குறைபாடு உடையோர் இவர்களை விருந்துக்கு அழையும். அப்போது அவர்களால் உமக்குப் கைம்மாறு செய்ய முடியாது. எனவே உமக்குரிய கைம்மாறைக் கடவுள் செய்வார். விண்ணுலகில் உமக்கு ஓரிடம் தயாராக்கப் படும்’ என்றார்.

அப்போது இயேசுவோடு பந்தியமர்ந்திருந்த ஒருவர்,

‘இறையாட்சியில் பங்குகொள்வது எத்தனைப் பெரிய பாக்கியம்.’ என்றார். இயேசு அவரிடம்

ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். விருந்துக்கு ஏராளமானோர் அழைக்கப்பட்டிருந்தார்கள். விருந்து நாளும் வந்தது. ஆனால் அழைக்கப்பட்ட யாரும் விருந்துக்கு வந்து சேரவில்லை. அவர் தம்முடைய பணியாளரை அழைத்து,
‘விருந்து ஏற்பாடாகி விட்டது என்று அழைக்கப்பட்டவரிடம் சொல்லுங்கள்’ என்று அனுப்பி வைத்தார்.

பணியாளன் ஒவ்வொருவராகச் சென்று பார்த்து அவர்களை அழைத்தான். அவர்களோ விருந்தில் கலந்து கொள்ளாமலிருக்க சாக்குப் போக்குகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

‘நான் வயல் ஒன்றை வாங்கியிருக்கிறேன். இன்று உழவு நாள். நான் இல்லாவிட்டால் சரிவராது…’

‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்… நான் அதை ஓட்டிப் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்’

‘மன்னியுங்கள். இப்போது தான் எனக்குத் திருமணம் ஆகியிருக்கிறது. என்னால் வர இயலாது’

பணியாளர்கள் சோர்ந்து போய் தலைவரிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள். தலைவன் சினந்தான்.

‘வராதவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் போய் நகரின் வீதிகளிலும், சந்துகளிலும் காணும் ஏழைகள், ஊனமுற்றோர், பார்வையிழந்தோர்.. எல்லோரையும் கூட்டி வாருங்கள்’ என்றார்.

அவர்கள் சென்று நகரில் இருந்த ஏழைகளையும், உடல் ஊனமுற்ற மனிதர்களையும் விருந்துக்கு அழைத்தார்கள். அவர்கள் மிகவும் ஆச்சரியத்துடனும், ஆனந்தத்துடனும் விருந்துக்கு வந்து கலந்து கொண்டார்கள்.

‘இதுதான் விண்ணக விழாவிலும் நடக்கப் போகிறது. அழைக்கப்பட்ட இஸ்ரயேல் குல மக்கள் அழைப்பைப் புறக்கணிப்பார்கள். பிற இன மக்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டு விண்ணக விருந்தைச் சுவைப்பார்கள்’ இயேசு சொன்னார்.

இயேசு இதைச் சொன்னதும் இயேசுவை விருந்துக்கு அழைத்தவரும், விருந்தில் கலந்து கொண்டிருந்த அனைத்து மக்களும் இயேசுவின் போதனையின் பொருளை உணர்ந்து கலக்கமடைந்தார்கள்.

நல்ல பங்கு

Christ with Martha and Maria *oil on canvas *191 x 302.5 cm *signed b.l: H SIEMIRADZKI.PINX.AD.MDCCCLXXXVI / ROMA *1886
பெத்தானியா எருசலேம் நகரிலிருந்து சில மைல்கள் தூரத்தில் இருந்த ஒரு ஊர். அங்கே இயேசுவுக்கு இலாசரஸ் என்று ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு இரண்டு சகோதரிகள், மார்த்தா மரியாள்.

மரியா எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவள். மார்த்தாவோ ஒரு குடும்பத் தலைவிக்குரிய முறையில் வீட்டு வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள்.

இயேசு அவர்கள் வீட்டுக்குச் சென்றார். வீட்டின் திண்ணையோரம் உட்கார்ந்து இயேசு அவர்களுடன் பேசத் துவங்கினார். மரியா இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து இயேசு பேசுவதை விழிகள் விரிய கேட்டுக் கொண்டிருந்தாள். அவளிடம் ஏராளமான கேள்விகள் இருந்தன. இயேசுவிடம் பதில்களுக்குப் பஞ்சம் இருந்ததில்லையே அவர்களின் உரையாடலில் நேரம் சென்று கொண்டே இருந்தது.

மார்த்தாவோ, வீட்டுச் சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள். இயேசுவுக்கு குடிக்க ஏதேனும் கொடுக்க வேண்டும், உண்பதற்கு நன்றாக சமையல் செய்ய வேண்டும் என்றெல்லாம் அவளுடைய மனம் பரபரப்படைந்து கொண்டிருந்தது. தனியே வேலை செய்து செய்து வேலை முடியவில்லை. நேரமாகிக் கொண்டே இருந்தது. மரியா இயேசுவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, தான் மட்டும் இங்கே சமையலறையில் வெந்து கொண்டிருக்கிறோமே என்னும் சலிப்பும் அவளிடம் எழுந்தது. நேராக இயேசுவிடம் போனாள்,

‘இயேசுவே மரியாவை இங்கே அனுப்பும். தனியே வேலை செய்யக் கஷ்டமாக இருக்கிறது.’ மார்த்தா சொன்னாள்.

இயேசு அவளை திரும்பிப் பார்த்து,’ மார்த்தா.. நீ தேவையில்லாத விஷயங்களைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய். தேவையானது ஒன்றே. மரியா நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்பட மாட்டாது’ என்றார்.

மார்த்தா குழம்பினாள். அப்படியானால் இயேசு நல்ல உணவு உண்ணவேண்டுமென்பதற்காக கஷ்டப்படுவது தவறா ? நான் செய்தது நல்ல செயல் இல்லையா ? அவளுடைய மனதுக்குள் கேள்விகள் ஓடின. இயேசுவின் போதனைகளைக் கேட்பதும், விண்ணக வாழ்வுக்கான ஆயத்தங்களைச் செய்வதும் முக்கியமான செயல் என்று இயேசு சொல்ல வந்ததை மார்த்தா புரிந்து கொண்டாள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...