Posted in Life of JESUS

இயேசு வரலாறு 32 : விபச்சாரப் பெண்ணும், பார்வையற்ற மனிதனும்

Image result for Jesus walking with disciples

இயேசுவும் சீடர்களும் எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்கள். அச்சம் கலந்த ஒரு பயணம். துணிச்சல் மிக்க ஒரு பயணம் என்றும் சொல்லலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எருசலேம் தேவாலய உளவாளிகள் இயேசுவைக் குறித்துச் சொன்ன சேதிகளினால் குருக்களும், மறை நூல் அறிஞர்களும் கோபத்திலும், வன்மத்திலும் இருந்த வேளை அது. இயேசு சீடர்களுடன் எருசலேம் நோக்கிப் பயணிக்கிறார்.

இயேசுவும் சீடர்களும் சமாரியா வழியாக சென்றார்கள். ஒருமுறை மிகவும் நன்றாக இயேசுவை உபசரித்த சமாரியர்கள் இம்முறை அந்த வரவேற்பை நல்கவில்லை. காரணம் இப்போது இயேசுவும் சீடர்களும் எருசலேம் நோக்கிச் செல்கிறார்கள். எருசலேமில் விழாவுக்காகச் செல்கிறார்கள். எருசலேமிற்குச் செல்லும் யூதர்களை வெறுப்பவர்கள் தான் சமாரியர்கள். ‘நான் அழிப்பதற்கல்ல, மீட்பதற்காகவே வந்திருக்கிறேன் என்பதை மக்கள் எப்போது தான் உணர்வார்களோ’ இயேசு சொன்னார்.

பாதி வழியில் இரண்டு பரிசேயர்கள் இயேசுவைச் சந்தித்து மீண்டும் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். இயேசு அவர்களிடம் ‘ ஏன் என்னைக் கொல்லும் வழி தேடுகிறீர்கள்’ என்று சட்டென்று கேட்டார். பரிசேயர்கள் ஒரு வினாடி நிலை தடுமாறினார்கள். பின் சுதாரித்துக் கொண்டு

‘கொல்லும் வழி தேடுகிறோமா ? உனக்கென்ன பேய் பிடித்திருக்கிறதா ? ஏதேதோ கற்பனை செய்கிறாய். அதனால் தான் ஓய்வு நாளில் கூட ஏதேதோ வேலைகள் செய்கிறாய்’ என்றார்கள் படபடப்பாக.

மறுபடியும்.. மறுபடியும் ஓய்வு நாள் பிரச்சினையை இவர்கள் கிளப்புவதால் எரிச்சலடைந்த இயேசு அவர்களிடம். ‘விருத்தசேதனம் செய்வது ஓய்வு நாளில் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு பணி தான். நோய் தீர்க்கும் பணி மட்டும் செய்யக் கூடாதென்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்’ என்றார். அவர்கள் இயேசுவின் பதிலைக் கேட்டு வாயடைத்தார்கள்.

எப்படியும் இயேசுவுக்கு எதிராக ‘தன்னைக் கடவுளாக்கிக் கொண்டான்’ என்னும் குற்றச் சாட்டைப் பதிவு செய்யவேண்டும் என்று அவர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். ஆனால் அதை நிரூபிக்க வேண்டும் ! பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இயேசுவைக் கடவுளாகப் பார்க்கவேயில்லை. கடவுள் ஒரு பரம ஏழையாகப் பிறக்க மாட்டார் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். எனவே தான் இயேசுவை அவர்கள் அழிப்பதிலேயே ஆர்வம் காட்டினார்கள்.

அப்போதைய தலைமைக் குருவாக இருந்த கயபாவுக்குத் தகவல்கள் சென்று கொண்டே இருந்தன. அவனும் இயேசு மீட்பர் என்பதில் எள்ளளவும் நம்பிக்கை கொள்ளவில்லை. அவரிடம் உளவாளிகள் தகவல்களைத் தவறாமல் தந்து கொண்டே இருந்தார்கள்.

இயேசு எருசலேம் ஆலய வாசலுக்கு வந்தார்.

‘நீங்கள் என்னைத் தேடுவீர்கள் ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரவும் முடியாது’

‘யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். அவனுக்குள் உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடச் செய்வேன்’ இயேசு துணிச்சலாய் தேவாலய முற்றத்தில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இயேசுவின் போதனைகளைக் கேட்ட மக்கள் பலர் அவரில் நம்பிக்கை கொண்டார்கள். இவர் நம்மை மீட்பதற்காக வந்தவராய் தான் இருப்பார். அதில் சந்தேகமில்லை என்று பலர் பேசத் துவங்கினார்கள்.

தலைமைக் குரு கயபாவின் ஆட்கள் சிலர் கயபாவிடம் சென்று,’ இது போல் ஒரு மனிதர் பேசி நாங்கள் கேட்டதே இல்லை. ஏதோ ஒரு வல்லமை அவரிடம் இருக்கிறது’ என்றார்கள்.

கயபா கர்ஜித்தான்.’ நீங்களும் அவன் பேச்சில் மயங்கி விட்டீர்களா ? அறிவில்லாதவர்கள் தான் அவன் பின்னால் அலைகிறார்கள் என்றால் நீங்களுமா ? ஏதாவது குருக்கள் அவனை நம்புகிறார்களா ? ஏதாவது பரிசேயன் அவரை நம்புகிறானா ? இந்த கூட்டம் மட்டும் தான் அவனோடு அலைகிறது..’

இயேசுவின் சீடர்கள் ஆலயத்தில் அன்றிரவு தங்கினார்கள். இயேசுவோ ஒலிவ மலைக்குச் சென்றார். அங்கு சென்று செபித்துவிட்டு அங்கேயே தூங்கினார். மறுநாள் காலை அங்கிருந்து தனியாக எருசலேம் தேவாலயத்துக்குச் சென்றார். மக்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு அவரைச் சூழ்ந்தார்கள். அவர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

. பாவமில்லையேல் கல்லெறி

woman_9

அமைதியாக இருந்த கூட்டம் திடீரென பெரும் சத்தத்தால் கலைக்கப்பட்டது. பலர் சேர்ந்து ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து இயேசுவின் முன்னால் தள்ளினார்கள். ஆடைகள் அலங்கோலமாய், தலைமுடி ஒழுங்கில்லாமல் அலைய அவள் உதடுகளில் வழியும் இரத்தத்தோடு இயேசுவின் முன்னால் வந்து விழுந்தாள்.

‘போதகரே… இந்தப் பெண் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்… ‘ ஒருவர் ஆரம்பித்து வைத்தார்.

‘இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும்…’ இன்னொருவர் அதைத் தொடர்ந்தார்.

‘இதை நாங்களாகச் சொல்லவில்லை. நீங்கள் மதிக்கும் மறைநூல் தான் சொல்கிறது. அதுவும் மோசே தான் சொல்லியிருக்கிறார். என்ன சொல்கிறீர் ?’ சிலர் அதை முடித்து வைத்தார்கள்.

இயேசுவை நோக்கி ஒரு முக்கியமான கண்ணியை விரித்து வைத்த திருப்தி அவர்களுக்கு. இயேசு ஓய்வு நாளில் கூட குணமாக்குபவர், எனவே இயேசுவால் இந்தப் பெண்ணைக் காப்பாற்றாமல் இருக்க முடியாது. ஆனால் அவர் அப்படிக் காப்பாற்றினால் சட்டத்தை மீறுகிறார் என்பது இந்த ஆலய முற்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு விடும். ஒன்று இயேசு என்னும் கருணை பிம்பம் உடையும், அல்லது இயேசுவின் பாதுகாப்பு உடையும். வந்தவர்கள் ஆவலுடன் இயேசுவின் பதிலுக்காய் காத்திருந்தார்கள்.

இயேசு பதில் சொல்லாமல் குனிந்து ஆலய முற்றத்து மணலில் விரலால் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். இயேசு என்ன எழுதினார் என்பதை விவிலிய ஆராய்ச்சியாளர்கள் பலவிதமாகக் ஆராய்ந்து தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். இயேசு சுற்றிலும் நின்றிருந்த மக்களில் யாரெல்லாம் விபச்சாரத் தவறுக்கு உடந்தையாய் இருந்தார்கள் என்பதை அறிந்திருந்ததாகவும் எனவே அந்த பெண்களின் பெயர்களை இயேசு தரையில் எழுதியதாகவும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

‘நாங்கள் உம் முன்னிலையிலேயே இவளைக் கல்லால் எறிந்து கொல்லப் போகிறோம். இவள் பாவம் செய்தவள்…’ இயேசு எழுதுவதைத் தொடர்ந்து கொண்டிருக்க, அவர்கள் கத்தினார்கள்.

இயேசு நிமிர்ந்து பார்த்தார். எல்லாருடைய கண்களிலும் கொலைவெறி. கைகளில் கற்கள். விபச்சாரத் தவறுக்காக ஒரு பெண்ணை கொண்டுவந்திருந்தார்களே தவிர, அந்த பாவத்தைப் பகிர்ந்து கொண்ட அல்லது அதற்கு ஏதுவான ஆணைக் காணோம்.

‘உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவள் மீது கல் எறியட்டும்’ சொல்லிய இயேசு மீண்டும் தரையில் எழுதத் துவங்கினார்.

ஒருவர் கல்லை எடுத்துக் கொண்டு முன்னே வந்தார். ‘ ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம்…’ இயேசுவின் வார்த்தைகள் அவருடைய காதில் ஒலிக்க கல்லைப் போட்டு விட்டுப் பின் வாங்கினார்.

இன்னொருவர் கல்லுடன் முன்னேறினார். இயேசு எழுதிக் கொண்டிருந்த எழுத்துக்களில் அவர் செய்த பாவங்களின் பட்டியல் தெரிந்திருக்கவேண்டும் அதிர்ந்து போய் பின் வாங்கி கல்லைப் போட்டு விட்டுப் போனார்.

எல்லோரும் சில வினாடிகள் யோசித்தனர். பாவம் இல்லாதவனாய் அங்கே யாரும் இல்லை. அவர்கள் முதியவர் துவங்கி இளையவர் வரை ஒருவர் பின் ஒருவராகக் கற்களைப் போட்டு விட்டு சென்று விட்டார்கள். கடைசியில் இயேசுவும், அவரும் அந்தப் பெண்ணும் மட்டுமே நின்றார்கள். இழுத்துக் கொண்டு வந்தவர்கள் யாரும் இல்லை.

‘பெண்ணே அவர்கள் எங்கே ? உன் மீது யாரும் கல்லெறியவில்லையா ?’ இயேசு கேட்டார்.

‘இல்லை ஐயா…’ அவள் கண்ணீருடன் சொல்லிவிட்டு இயேசுவின் பாதங்களில் விழுந்தாள்.

‘நானும் உன்னைத் தீர்ப்பிடமாட்டேன். நீ போகலாம். இனிமேல் பாவம் செய்யாதே !’ இயேசு சொல்ல, அந்தப் பெண் கண்களில் நன்றியும், தெளிவும் வழிய அவ்விடம் விட்டு அகன்றாள்.

மிகச் சிக்கலான ஒரு வழக்கை மிகவும் எளிதாகத் தீர்த்த இயேசுவின் ஞானத்தைக் கண்டு போதனை கேட்க வந்திருந்த மக்கள் சிலிர்த்தார்கள்.

 பார்வை பரிசு

1eef834

இயேசுவின் எதிராளிகளுக்கு இயேசு ஆலயத்திலேயே வந்து போதனைகளும், தீர்வுகளும் சொல்வதில் ஏகப்பட்ட எரிச்சல். அவர்கள் இயேசுவை எப்படியும் இந்தமுறை ஆலயத்தில் வைத்தே மடக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள். அடுத்து ஏதேனும் அற்புதம் செய்யட்டும் அதில் பார்த்துக் கொள்ளலாம் என்று கருவிக் கொண்டார்கள். அதற்காக அவர்கள் அதிக நாள் காத்திருக்கத் தேவையிருக்கவில்லை.

இயேசு தன்னுடைய சீடர்களுடன் எருசலேம் நகரின் தெரு ஒன்றின் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தார். ஒரு பார்வையிழந்த மனிதர் தனக்கு யாராவது உதவுவார்களா என்னும் எதிர்பார்ப்புடன் அந்த வழியில் அமர்ந்திருந்தார்.

இயேசுவின் சீடர்கள் அவனருகே வந்து நின்றார்கள். அவர்கள் இயேசுவிடம்,
‘ராபி, இவன் பிறவியிலேயே பார்வையிழந்தவன். நோய்களுக்கும், உடல் குறைபாடுகளுக்கும் பாவமே காரணம் என்று சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் இவன் பார்வையின்றிப் பிறந்ததற்குக் காரணம் என்ன ? இவன் செய்த பாவமா ? இவனுடைய முன்னோர் செய்த பாவமா ? இவன் செய்த பாவம் என்றால் இவன் பிறக்கும் முன்பே பாவம் செய்தானா ?’ என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களிடம்,’ இதற்குக் காரணம் இவன் செய்த பாவமும் அல்ல, இவனுடைய முன்னோர் செய்த பாவமும் அல்ல. கடவுளின் செயல் இவன் மூலமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே இவன் இங்கே பார்வையின்றி இருக்கிறான்’ என்றார்.

‘புரியவில்லையே ஆண்டவரே…’

‘ஒளி இருக்கும் வரை தான் நான் செயலாற்ற முடியும். இருளில் யாரும் செயலாற்ற முடியாது. நான் உலகில் இருக்கும் வரை ஒளியாய் இருக்கிறேன். செயலாற்றும் ஒளியாய்’ இயேசு சொன்னார்.

சொல்லிக் கொண்டே இயேசு தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் கொஞ்சம் சேறு உண்டாக்கினார். அதை தன்னுடைய விரல்களில் எடுத்து பார்வையற்ற அந்த மனிதரின் கண்களில் பூசினார்.

அங்கே ஒரு குளம் இருந்தது. அதன் பெயர் சீலோவாம். சீலோவாம் என்றால் அனுப்பப் பட்டவர் என்பது பொருள். இயேசு அவரிடம்
‘நேராக சீலோவாம் குளத்துக்குச் சென்று உமது கண்களைக் கழுவும்’ என்றார்.

அவன் இயேசுவைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தான். தன்னுடன் பேசிக் கொண்டிருப்பது இயேசுவும் அவருடைய சீடர்களும் என்பது அவருக்குப் புரிந்தது. அவர் பதில் ஏதும் பேசாமல் சீலோவாம் குளத்துக்குச் சென்றார்.

தன்னுடைய சேற்றுக் கண்களை அந்தக் குளத்து நீரினால் கழுவினார் ! கண்களிலிருந்த சேறு அகன்றது, கூடவே அவருடைய இருட்டுக் கண்களும் வெளிச்சத்தில் நனைந்தன.

அவன் கண்களை மூடி மூடித் திறந்தான். அவனால் அத்தனை வெளிச்சத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிறந்ததுமுதல் இருட்டை மட்டுமே பரிச்சயப்படுத்திக் கொண்டவனுக்கு வெளிச்சத்துக்கு வருவது அத்தனை எளிதல்ல என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால் அவனுக்குள் ஊறிய ஆனந்தத்துக்கு அளவேயில்லை. கண்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் திறந்தான். சீலோவாம் குளம் அவனுக்குமுன்னால் மிகவும் பெரிதாக விரிந்து கிடந்தது.

அட… இது தான் குளமா ? தண்ணீர் இப்படித் தான் இருக்குமா ? இதில் விழுந்தால் இறந்துவிடுவோமே ! பயந்தான். இருட்டில் இருந்தபோது பயத்தைத் தராத குளம் அவன் வெளிச்சத்துக்கு வந்ததும் பயமுறுத்தியது.

நடந்தான். தடுமாறினான். பார்வை இல்லாதபோது பதட்டமில்லாமல் நடந்ததாகத் தோன்றியது அவனுக்கு. பார்க்கும் ஒவ்வொரு பொருளையும் வியப்புடன் மனசுக்குள் குறித்துக் கொண்டான். மனிதர்களையே அவன் அப்போது தானே பார்க்கிறான் !

‘ஏய்.. நீ பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவன் தானே ?’

‘ஆம்.. அவனே தான் நான்..’

‘உனக்குத் தான் பார்வை கிடையாதே ? இப்போது எப்படி ?’ அவர்கள் ஆச்சரியக் கேள்வி கேட்டார்கள். அதற்குள் செய்தி கேள்விப்பட்டு பரிசேயர்கள் அங்கே வந்து சேர்ந்தார்கள். ஓய்வு நாளில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது என்றால் அதற்கு இயேசு தான் காரணமாய் இருக்க முடியும் என்று அவர்கள் ஊகித்தார்கள்.

‘உண்மையைச் சொல். யார் உன்னைக் குணமாக்கியது ?’ அவர்கள் அதட்டினார்கள்.

‘இயேசு என்னும் மனிதர் சேற்றை என் கண்களில் பூசி சீலோவாம் குளத்திலே கழுவச் சொன்னார். கழுவினேன். இப்போது எல்லாவற்றையும் பார்க்கிறேன்’ அவன் பரிசேயர்களின் பதட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆனந்தப் பதட்டத்தில் பதில் சொன்னான்.

”என்னைக் குணமாக்கியவர் ஒரு பெரிய இறைவாக்கினராய்த் தான் இருக்க முடியும்’ பார்வையடைந்தவர் தனக்குப் பார்வை கிடைத்த பரவசத்தில் பேசினார்..

‘அதெப்படி ? அவர் இறைவாக்கினராய் இருக்க முடியவே முடியாது’ பரிசேயர்கள் மீண்டும் எரிச்சலில் கத்தினார்கள்.

‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?’

‘ம்.. இன்று ஓய்வு நாள். ஓய்வு நாள் சட்டத்தையே அனுசரிக்கத் தெரியாதவன் இறைவனிடமிருந்து வந்தவனாக இருக்க முடியாது’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. இருட்டில் கிடந்த என் வாழ்க்கையைத் தூக்கி அவர் வெளிச்ச பூமியில் விட்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் தான் எனக்குக் கடவுள்’ அவன் சொன்னான்.

பரிசேயர்கள் மனதில் திடீரென ஒரு திட்டம். இயேசுவின் அற்புதங்கள் எல்லாம் பொய் என்றும், இயேசு பொய்சொல்லி மக்களை நம்பவைத்துக் கொண்டிருப்பதாகவும் மக்களிடம் ஒரு சலசலப்பை உருவாக்கினால் என்ன ? மனதில் திட்டம் உதித்ததும் அவர்கள் பார்வை பெற்றவனை இழுத்தார்கள்.

‘உன்னுடைய பெற்றோர் எங்கே… எங்களுக்கென்னவோ நீ நாடகம் ஆடுவதாய்த் தோன்றுகிறது..’

பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு வயதான தம்பதியினர் அவர்களை நோக்கி ஓடி வந்தார்கள்.

‘ஐயா என் மகனுக்குப் பார்வை வந்ததாகச் சொல்கிறார்களே உண்மையா ? ‘

‘இரண்டு பேர் ஓடி வருகிறார்களே ! யாராய் இருக்கும் ?’ பார்வையடைந்த அந்த மனிதன் தன் பெற்றோரைப் பார்த்து உள்ளுக்குள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் நெருங்கி வந்தார்கள்.

‘மகனே.. உனக்குக் கண் தெரிகிறதா ?’

அவர்களுடைய குரலைக் கேட்டதும் அவனுக்குள் அடைக்கப்பட்டிருந்த உணர்ச்சி ஊற்றுகள் எல்லாம் உடைபட்டு ஓடின…
‘அப்பா… அம்மா… உங்களைக் காணும் பாக்கியம் கிடைத்திருக்கிறதே !’ அவன் அழுதான். அவர்களும் கூடவே அழுதார்கள். அந்தக் கண்ணீரில் ஆனந்தம் மிதந்தது.

மக்கள் அவர்களை விடவில்லை. அவர்களைப் பின் தொடர்ந்து வந்து
‘இவன் எப்படிப் பார்வையடைந்தான். உண்மையைச் சொல்லுங்கள்’ என்று மிரட்டினார்கள்.

‘ஐயா என் மகன் பிறவியிலேயே பார்வையில்லாதவன். இங்கே உட்கார்ந்து பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான். இப்போது யாரோ ஒரு நல்ல மனிதரால் அவனுக்குப் பார்வை கிடைத்திருக்கிறது. இதற்கு மேல் எங்களுக்கு ஒன்றும் தெரியாது. இவன் வயதுக்கு வந்தவன் தானே. இவன் சொல்வதைக் கேளுங்கள்’ பெற்றோர் சொன்னார்கள்.

யூதர்கள் அவனிடம்,’ ஏய்.. உண்மையைச் சொல். உனக்குப் பார்வையளித்தவன் ஒரு பாவி என்பதை ஏற்றுக் கொள்கிறாயா ?’ என்று உறுமினார்கள்.

ஏனென்றால் இயேசுவைப் பற்றி அறிந்து, அவருடைய போதனைகளினால் ஈர்க்கப்பட்ட ஏராளமான மக்கள் அவரை மெசியாவாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அப்படி ஏற்றுக் கொண்ட மனிதர்களை எல்லாம் தொழுகைக் கூடத்துக்குள் நுழையக் கூடாதென்று அவர்கள் இரகசிய உடன்படிக்கை ஒன்றைத் தயாராக்கி வைத்திருந்தார்கள்.

‘இல்லை. அவர் இறைவாக்கினர் தான். நான் அவர் வழியில் தான் செல்வேன். ஏன் துருவித் துருவி விசாரிக்கிறீர்கள் ? நீங்களும் அவருடைய சீடராக ஆசைப்படுகிறீர்களா ?’ பார்வையடைந்த மனிதன் புன்னகையுடன் கேட்டான்.

‘இயேசுவுக்கு நாங்கள் சீடர்களா ? ம்ம்ம்… நாங்கள் மோசேயின் சீடர்கள்’ அவர்கள் சொன்னார்கள்.

‘நீங்கள் ஏன் மோசேயின் சீடர்கள்?’

‘ஏனென்றால் மோசேயுடன் கடவுள் பேசினார். அவர் தான் உண்மையான இறைவாக்கினர்’

‘ஆச்சரியம் தான். இவர் எனக்குப் பார்வையளித்திருக்கிறார். வேறு மனிதர்கள் பிச்சை தரவே தயங்கும் போது இவர் பார்வையையே தந்திருக்கிறார். இவரை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறீர்களே’ அவன் விவாதத்துக்குத் தயாரானான்.

‘இயேசு பாவி தான். பாவிகளுக்குக் கடவுள் செவி சாய்க்க மாட்டார். பிறவிக் குருடன் பார்வையடைந்த வரலாறு இல்லை. இதை நாங்கள் நம்பத் தயாராக இல்லை’ அவர்களும் விட்டுக் கொடுக்கவில்லை.

‘வரலாறுகளை மாற்றத் தானே அவர் வந்திருக்கிறார்’

அதைக் கேட்ட யூதர்கள் எரிச்சலைடைந்தார்கள். அவனை எட்டி உதைத்து,’ பிறவியிலிருந்தே பாவத்தில் கிடக்கும் பிச்சைக்காரன் நீ. உபதேசம் செய்யும் அளவுக்கு உயர்ந்து விட்டாயா ? ஓடி விடு இங்கிருந்து’ என்று அவனைத் துரத்தினார்கள்.

சற்று நேரத்துக்குப் பின் இயேசு அவரைச் சந்தித்தார்.

‘ஐயா.. நலமுடன் இருக்கிறீரா ?’ இயேசு கேட்டார்.

‘ஆனந்தமாய் இருக்கிறேன் ஐயா… நீர் யார் ?’ பார்வையடைந்த மனிதருக்கு இயேசுவை அடையாளம் தெரியவில்லை. அவன் இயேசுவை இப்போது தான் முதன் முதலாய்ப் பார்க்கிறான்.

‘அவர்கள் உம்மைப் பழித்துரைப்பது இருக்கட்டும். மானிட மகன் மீது நீர் நம்பிக்கை வைக்கிறீரா ?’ இயேசு கேட்டார்.

‘கண்டிப்பாக ஐயா.. நான் ஒரு முறை அவரைச் சந்திக்க வேண்டும். அதற்காகத் தான் அலைந்து கொண்டிருக்கிறேன். அவர் எங்கே என்று உங்களுக்குத் தெரியுமா ?’ அவன் கேட்டான்.

‘நீர் அவரைக் கண்டீர் !’

‘நானா ? எப்போது ? எங்கே வைத்து ?’ அவன் அவசர அவசரமாய் கேள்விகள் கேட்டான்.

‘உன்னோடு பேசிக் கொண்டிருக்கும் நானே அவர்’

இயேசு சொன்னதும் அவன் சட்டென்று அவருடைய குரலை அடையாளம் கண்டு கொண்டு அவருடைய பாதங்களில் விழுந்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யூதர்களின் மனசுக்குள் தீக்காடு பற்றி எரிந்தது.

‘நான் உலகுக்கு புதிய தீர்ப்பு ஒன்றை அளிக்கவே வந்தேன். அதன்படி பார்வையற்றோர் பார்வை பெறுவர் பார்வை உடையோர் பார்வை இழப்பர்’ இயேசு சுற்றி நின்ற மக்களைப் பார்த்துச் சொன்னார்.

‘எங்களைப் பார்வையில்லாதவர்கள் என்று சொல்கிறாயா ?’ பரிசேயர்கள் உறுமினார்கள்.

‘நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால் உங்களிடம் பாவம் இருந்திருக்காது. இப்போது நீங்கள் பார்வை இருக்கிறது என்கிறீர்கள். எனவே பாவிகளாய் இருக்கிறீர்கள்’ இயேசு தயங்காமல் சொன்னார்.

‘புரியவில்லையே. உன்னுடைய கூற்றுப் படி குருடர்களைத் தவிர எல்லோரும் பாவிகளா ? நாங்கள் ஆபிரகாமின் மக்கள்’

‘பார்வையற்றோர் எல்லோரும் குருடர்களும் அல்ல, பார்வையுடையோர் எல்லோரும் பார்ப்பதும் இல்லை. ஆபிரகாமுக்கு முன்பே நான் இருக்கிறேன்’ இயேசு புன்னகையுடன் சொன்னார்.

ஆபிரகாமுக்கு முன்பே நான் இருக்கிறேன் என்னும் பேச்சைக் கேட்டு பரிசேயர்கள் சிரித்தார்கள். ஆபிரகாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். உனக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா ? என்று கேலியாகக் கேட்டார்கள்.

ஆபிரகாமுக்கு முன்பே என்றல்ல, உலகம் தோன்றும் முன்னமே நான் இருக்கிறேன். சுமை சுமந்து சோர்ந்திருப்போரெல்லாம் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகம் இனிது, என் சுமை எளிது. உங்கள் சுமையை என்மீது வையுங்கள் நிம்மதியுடன் வாழுங்கள். இயேசு உரத்த குரலில் சொல்ல பரிசேயர்கள் எரிச்சலுடன் பிரிந்து சென்றார்கள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...