Posted in Life of JESUS

இயேசு வரலாறு 28 : இறுதி நாளில் என்ன நடக்கும் ?

இறுதி நாளில் என்ன நடக்கும் ?

Image result for second coming

‘உலக இறுதி நாளில் என்ன நடக்கும் ?’ மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கேள்விக்கு மானிட மகன் இயேசு விளக்கமளித்தார்.

இறுதிநாளில் வானதூதர்கள் படைசூழ மானிட மகன் மாட்சியுடன் வருவார். அவர் தம்முடைய அரியணையில் கடவுளாக வீற்றிருப்பார். மக்கள் அனைவரும் அவருடைய முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவார்கள்.

ஒரு ஆயன் தன்னுடைய மந்தையில் உள்ள செம்மரி ஆடுகளையும், வெள்ளாடுகளையும் இரண்டாகப் பிரிப்பதைப் போல மானிடமகனும் தன்முன்னால் நிற்கும் மக்களினத்தையும் இரண்டாகப் பிரிப்பார். வலது புறத்தில் விண்ணக வாழ்வுக்குத் தகுதியானவர்களும், இடதுபுறத்தில் கடவுளின் அரசுக்குத் தகுதியில்லாத மக்களும் பிரித்து நிறுத்தப்படுவார்கள்.

வலப்பக்கம் இருப்பவர்களைப் பார்த்து அரியணையில் இருக்கும் மானிடமகன் சொல்லுவார்
‘வாருங்கள் என் தந்தையின் ஆசி பெற்றவர்களே வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த தந்தையின் விண்ணக வாழ்வுக்குள் வாருங்கள். ஏனென்றால் நான் பசியாய் இருந்தேன். நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள். நான் தாகமாய் இருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தணித்தீர்கள், அன்னியனாய் இருந்த என்னை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். ஆடையின்றி இருந்த எனக்கு நீங்கள் உடை தந்தீர்கள். நோயுற்றிருந்தேன். என்னை நீங்கள் சந்தித்து ஆறுதல் சொன்னீர்கள். நான் சிறையில் இருந்தபோது நீங்கள் என்னைத் தேடி வந்தீர்கள்.’ என்பார்.

அப்போது நீதிமான்கள்.
‘ஆண்டவரே… நாங்கள் எப்போது உம்மைக் கண்டோம் ? எப்போது நீர் பசியாய் இருக்கக் கண்டு உணவு தந்தோம் ? எப்போது நீர் தாகமாய் இருக்கக் கண்டு தண்ணீர் தந்தோம் ? எப்போது நீர் அன்னியனாய் இருக்கக் கண்டு உம்மை ஏற்றுக் கொண்டோம் ? எப்போது நீர் நோயுற்று இருந்தீர் ? எப்போது நீர் சிறையில் இருந்தீர் ? ‘ என்று கேட்பார்கள்.

அதற்கு மானிடமகன்.,’ மிகச் சிறியவராகிய உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே இவற்றைச் செய்தீர்கள். நீங்கள் என்னை மனிதனில் கண்டீர்கள். மனிதனுக்கு உதவுவதின் வாயிலாக எனக்கு உதவினீர்கள். அதுவே மிகச் சிறந்த பணி. வாருங்கள் விண்ணக வாழ்வு உங்களுக்குரியதே’ என்பார்.

பின்பு இடப்பக்கம் நிற்பவர்களிடம்
‘சபிக்கப்பட்டவர்களே… நீங்கள் என்னை விட்டு அகன்று போங்கள். நீங்கள் அலகைக்கும் அதன் தூதர்களுக்கும் சொந்தமான எரியும் நெருப்புக்குச் சொந்தமானவர்கள். நீங்கள் என் பசியைத் தீர்க்கவில்லை, தாகத்தைத் தணிக்கவில்லை, என்னை ஏற்றுக் கொள்ளவுமில்லை ஆறுதல் சொல்லவும் இல்லை’ என்பார்

அதற்கு அவர்கள்.’ஆண்டவரே… எப்போது நீர் பசியாய் இருக்கக் கண்டு உமக்கு உணவளிக்காமல் இருந்தோம் ? எப்போது நீர் தாகமாய் இருக்கக்கண்டு உமக்கு தண்ணீர் தராமலிருந்தோம் ? எப்போது நீர் அன்னியராய் இருந்து உம்மைப் புறக்கணித்தோம் ? நீர் நோயுற்றோ சிறையிலோ இருந்தபோது உம்மைச் சந்திக்காமல் இருந்தது எப்போது ? இது வீண் பழி’ என்பார்கள்.

அதற்கு அவர்,’ உங்களோடு வாழ்ந்த ஏழை எளிய மக்களுக்கு நீங்கள் இவற்றைச் செய்யாமல் ஒதுக்கியபோதெல்லாம் என்னையே புறக்கணித்தீர்கள்’ என்பார்.

எனவே வலப்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இறையாட்சிக்குள் ஆனந்தமாய் நுழைய , மனிதநேயமில்லாத வாழ்க்கையை மண்ணுலகில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் நரக வாழ்க்கைக்குள் தள்ளப்படுவார்கள்.

உலக முடிவில் என்ன நடக்கும் என்பதை வெளிப்படுத்தியதன் வாயிலாக வாழ்வின் மையம் மனிதநேயம் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...