Posted in Life of JESUS

இயேசு வரலாறு 29 : அதிசயங்களின் நாயகன்

விரும்பினால் சுகமாவேன்

healing

இன்னொருமுறை இயேசு செபக்கூடங்களில் உரையாற்றியும் பொதுவிடங்களில் போதித்தும் நடந்தபோது துணியால் உடம்பை முழுவதும் போர்த்திய ஒரு மனிதன் அவருடைய காலடியில் மண்டியிட்டான். பின் தன்னுடைய போர்வையை விலக்கினான்.

அவன் ஒரு தொழுநோயாளி.

தொழுநோயாளியைக் கண்டதும் கூட்டம் சட்டென்றி விலகியது. இயேசு கூட்டத்தினரைப் பார்த்தார். அருகில் மண்டியிட்டிருந்த தொழுநோயாளியையும் பார்த்தார்.

‘ஆண்டவரே… நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்’ ஒரே ஒரு வரியில் விண்ணப்பத்தை முடித்துக் கொண்டு தலை கவிழ்ந்தான்.

இயேசு கரம் நீட்டி அவனைத் தொட்டார் !

கூட்டம் வெலவெலத்தது. தூய்மையான மனிதர், தீட்டான ஒருவனைத் தொடுகிறாரே என்று கூட்டம் முணுமுணுத்தது.

இயேசு கூட்டத்தினரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு புன்னகைத்தார். பின் அந்த நோயாளியை நோக்கி

‘நான் விரும்புகிறேன். குணமாகு ‘ என்றார்.

அந்த வார்த்தைகள் மருந்தாக மாறின. அவனுடைய உடல் முழுவதும் இருந்த தொழுநோய் சட்டென்று மாறியது. அவனுடைய உடல் முழுவதும் மிகவும் அழகான குழந்தையின் சருமம் போல மென்மையாகவும், அழகாகவும் மாறியது.

விலகி நின்ற கூட்டம் வியப்புடன் நெருங்கி வந்தது.

‘நீ போய் குருக்களிடம் உன்னைக் காட்டு. பின் செலுத்த வேண்டிய காணிக்கைகளைச் செலுத்து’ என்றார். அவன் புறப்பட்டபோது இயேசு அவனை அழைத்தார். அவன் திரும்பினான்.

‘இங்கே நடந்ததை யாருக்கும் சொல்லாதே !’ இயேசு சொன்னார்.

அவன் விடைபெற்றான். காண்போரிடமெல்லாம் தான் குணமானதையும், இயேசு குணம் தந்தார் என்பதையும் பறைசாற்றத் துவங்கினான்.

இயேசு சொன்னால் தொழுநோயும் தீர்ந்துவிடும் என்பதைக் கூட்டத்தினர் மனதுக்குள் குறித்துக் கொண்டார்கள்.


பேய்களும், பன்றிக் கூட்டமும்,

possessed_pigs_don__t_fly_by_prisoneronearth-d37io3z

இயேசு தம்முடைய சீடர்களையும் அழைத்துக் கொண்டு கெரசேனர் பகுதிக்குப் படகில் சென்றார். அந்தப் பயணத்தின் வழியில் தான் இரையும் கடலை அமைதியாக்கியிருந்தார் இயேசு. சீடர்கள் அந்தத் திகைப்பிலிருந்து இன்னும் விடுபட்டிருக்கவில்லை.

படகிலிருந்து இயேசுவும் சீடர்களும் இறங்கிய உடனேயே பேய்பிடித்த ஒருவன் கல்லறைகளுக்கு இடையேயிருந்து அவரை நோக்கி ஓடி வந்தான். கல்லறைகளே அவனுடைய இருப்பிடம். அவனை ஊர்மக்கள் அடிக்கடி சங்கிலிகளால் பிணைத்து மரங்களில் கட்டி வைப்பார்கள். ஆனால் அவன் அவற்றையெல்லாம் மிகவும் எளிதாக உடைத்தெறிந்துவிடுவான். சங்கிலிகள் எத்தனை கனமானதாக இருந்தாலும் அவனை அடக்க முடிவதில்லை. கூரான கற்களைக் கொண்டு தன்னுடைய உடலையே அவன் கீறிக் காயப்படுத்துவான். அதனால் அவனுடைய உடம்பு முழுவதும் காயங்களின் வடுக்களும், மாறாத புண்களும், வழியும் இரத்தமும் நிரந்தரமாகிவிட்டன.

எத்தனையோ குருக்கள், மந்திரவாதிகள், மருத்துவர்கள் முயன்றும் அவனுடைய வியாதியைத் தீர்க்க முடியவில்லை. யாராலும் அவனுக்குள் இருக்கும் ஆவியைத் துரத்த முடியவில்லை.

தன்னை நோக்கி ஓடிவரும் மனிதனை இயேசு கண்டார். அவனை உற்று நோக்கினார். மூச்சிரைக்க, உதடுகளின் ஓரம் உமிழ்நீர் வழிய இயேசுவுக்கு முன்னால் வந்து நின்றவன் கத்தினான்.

‘இயேசுவே… உமக்கு இங்கே என்ன வேலை. திரும்பிப் போய்விடும். என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’

இயேசு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘இயேசுவே உமக்கும் எமக்கும் இடையே ஏன் தகராறு ? என்னுடைய வழியில் நான் போய்க்கொண்டிருக்கிறேன். என்னைத் தடுக்க வேண்டாம்’ என்று மீண்டும் கத்தினான்

‘உன் பெயர் என்ன ?’ இயேசு கேட்டார்.

‘இலேகியோன்’ பேய் பிடித்திருந்தவன் பதில் சொன்னான்.

இலேகியோன் என்பது ரோம அரசனின் கீழ் சுமார் அறுபதினாயிரம் வீரர்களை உள்ளடக்கிய மாபெரும் படை.

‘இலேகியோனா ?’ இயேசு அவனை உற்றுப் பார்த்துக் கேட்டார்.

‘ஆம்… நாங்கள் பலர்.’ அவன் பல்லைக் கடித்துக் கொண்டே பதில் சொன்னான்.

‘நான் ஏற்கனவே உன்னை எச்சரித்திருக்கிறேனே. இன்னும் ஏன் மக்களைத் தொந்தரவு செய்கிறாய் ?’ இயேசு குரலைக் கடுமையாக்கினார்.

‘இயேசுவே… நீர் கடவுளின் மகன் என்பதை நான் அறிவேன். என்னைத் துரத்த வேண்டாம்.’ அவன் உறுமினான்.

‘உன்னை விரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை’ இயேசு சொன்னார்.

‘அப்படியானால் அதோ அந்த பன்றிகளின் கூட்டத்தில் எம்மை அனுப்பிவிடும். எம்மை அழிக்க வேண்டாம்.’ தீய ஆவி இரைச்சலாய்ப் பேசியது.

இயேசு திரும்பிப் பார்த்தார். அங்கே ஏரிக்கரை ஓரமாக சிலர் ஏராளமான பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு பேய் பிடித்தவனைப் பார்த்தார்.

‘போ….’ ஆணையிட்டார்.

பேய்கள் அவனை விட்டு அகலத் துவங்கின. அவன் அலறத் துவங்கினான். அவனை விட்டு வெளியேறிய பேய்கள் எல்லாம் பன்றிக் கூட்டத்தில் பாய்ந்தன. பன்றிகள் எல்லாம் ஆவிகளின் திடீர்த் தாக்குதலால் சரிவில் உருண்டு ஏரியில் விழுந்து மாண்டு போயின. பன்றி மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இந்த எதிர்பாராத நிலையைக் கண்டு அதிர்ந்துபோய் பின் வாங்கினார்கள்.

இயேசுவின் சீடர்கள் வியந்தார்கள். மக்கள் பயந்தார்கள். பேய்பிடித்திருந்தவன் துவண்டுபோய்க் கிடந்தான். இயேசு அவனைத் தூக்கி நிறுத்தினார். இதற்குள் மக்கள் நாலா திசைகளிலும் ஓடிப் போய் தாங்கள் கண்ட செய்தியைப் பரப்பினார்கள்.

தாங்கள் கேள்விப்படுவது உண்மையா என்று அறிய மக்கள் ஓடி வந்தார்கள். அங்கே பேய் பிடித்திருந்தவன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு திகைத்தார்கள். நடந்த அனைத்தையும் கண்டு ஆச்சரியப் படுவதற்கு மாறாக, அச்சமடைந்தனர்.

‘இயேசுவே… நீர் உண்மையிலேயே பெரியவர். ஆனாலும் எங்களுக்குப் பயமாக இருக்கிறது. தயவு செய்து எங்களை விட்டுப் போய்விடும்.’ அவர்கள் இயேசுவிடம் வேண்டினார்கள்.

இயேசு பார்த்தார். போதனை செய்வதற்குரிய சூழல் அங்கே இல்லை என்பதைக் கண்டு கொண்டு, சீடர்களையும் அழைத்துக் கொண்டு படகில் ஏறினார்.

நலம்பெற்ற அந்த மனிதன் இயேசுவிடம்,’ ஐயா.. என்னையும் இனிமேல் உம்முடன் சேர்த்துக் கொள்ளும்’ என்று வேண்டினான்.

இயேசு அவரிடம்,’ இல்லை. நீர் போய் கடவுள் உனக்குச் சொன்னதையெல்லாம் மக்களுக்கு அறிவி. அது போதும்.’ என்றார்.

தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதன், இயேசுவின் அற்புதத்தை ஊரெங்கும் அறிவிக்கத் துவங்கினான்.

எப்பத்தா

jesus.heal_

இயேசு தம்முடைய சீடர்களுடன் தெக்கப்போலி நாட்டிற்கு வந்து கலிலேயக் கடலை அடைந்தார். காது கேட்காத, திக்கித் திக்கிப் பேசும் ஒரு நபரை சிலர் அழைத்து வந்து அவருக்கு முன்பாக நிறுத்தினார்கள்.

‘இயேசுவே இந்த மனிதருடைய நோயைக் குணமாக்கி இவனுக்கு உதவுங்கள்’ அவர்கள் வேண்டினார்கள்.

இயேசு அவனை கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றார். ஒரு கையின் விரலால் அவனுடைய காதுகளைத் தொட்டு இன்னொரு கை விரலில் தன்னுடைய உமிழ்நீரைத் தொட்டு அதை அந்த மனிதனுடைய நாவில் வைத்தார். பின் வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டு

‘எப்பத்தா’ என்றார்.

எப்பத்தா என்றால் திறக்கப் படு என்பது பொருள்.

எப்பத்தா ! என்றதும் அவனுடைய காதுகள் திறந்தன. பேரிரைச்சலைக் கேட்ட அவன் சட்டென்று தன்னுடைய காதுகளைப் பொத்திக் கொண்டான். அவனுடைய காதுகள் சத்தம் கேட்டுப் பழகியிருக்கவில்லையே. பின் கைகளை எடுத்தான். மக்கள் பேசுவது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. அவன் ஆனந்தமடைந்தான்.

‘இயேசுவே என்னால் தெளிவாகக் கேட்க முடிகிறது’ அவன் ஆனந்தத்தில் கத்தினான்.

‘உன்னால் பேசவும் முடிகிறது’ இயேசு புன்னகைத்தார்.

‘ஆம் ஆண்டவரே.. திக்கித் திணறாமல் என்னால் பேசவும் முடிகிறதே !’ அவன் ஆனந்தக் கூத்தாடினான்.

‘இதை யாரிடமும் சொல்லாதே… ‘ இயேசு அவனுக்குக் கட்டளையிட்டார். அவனோ சென்று காண்பவர் அனைவரிடமும் இயேசு தன்னைக் குணமாக்கிய செய்தியைப் பறைசாற்றினான்.

அதன் பின் இயேசு அங்கிருந்து பெத்சாய்தா என்னும் ஊருக்கு வந்தார். அங்கே ஒரு பார்வையில்லாத மனிதரை சிலர் அழைத்துக் கொண்டு வந்து சுகம் கொடுக்குமாறு விண்ணப்பித்தார்கள்.

இயேசு அவனையும் தனியே அழைத்துச் சென்றார்.

அவனுடைய கண்களின் மேல் தம்முடைய கைகளை வைத்துச் செபித்தார். பின் கைகளை எடுத்து ‘ ஏதாவது தெரிகிறதா ?’ என்று கேட்டார்.

‘மங்கலாய் ஏதேதோ அசைகின்றன ஆண்டவரே…’ அவன் பதில் சொன்னான்.

இயேசு தன்னுடைய கையை மீண்டும் அவன் கண்களில் வைத்தார்.

‘இப்போது பார்…’ கைகளை எடுத்த இயேசு கூறினார்.

‘என்னால்…. என்னால் பார்க்க முடிகிறது !’ அவன் ஆனந்தமடைந்தான்.

‘ஆண்டவரே… மிக்க நன்றி…. மிக்க நன்றி… ‘ அவனுடைய உதடுகள் ஓயாமல் கத்தின.

புயல் காற்று அடங்கியது.

Rembrandt_Christ_in_the_Storm_on_the_Lake_of_Galilee

ஒருநாள் ஏரி ஓரமாக இயேசு போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய போதனையைக் கேட்க வந்த கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டே இருந்த்து இயேசு போதனையை நிறுத்திவிட்டு மறுகரைக்குச் செல்ல விரும்பி அருகிலிருந்த சீடரின் படகொன்றில் ஏறி அமர்ந்தார்.

அப்போது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து,
‘ஐயா… நானும் உம்முடன் வர எனக்கு அனுமதி தரவேண்டும்.’ என்றார்.

இயேசு அவரிடம்,’ அறிஞரே… நீர் நல்ல சுகமான வாழ்க்கை வாழ்ந்து பழக்கப் பட்டவர். நரிகளுக்கு வளைகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. ஆனால் மனுமகனுக்கோ தலை சாய்க்கவும் இடம் இல்லை. அதெல்லாம் உமக்கு ஒத்து வராது’ என்று கூறி அனுப்பி வைத்தார். வந்தவர் யோசனையுடன் திரும்பிச் சென்றார்.

இயேசுவின் சீடர்களில் ஒருவர் இயேசுவிடம்,
‘இயேசுவே, என்னுடைய தந்தை இறந்து விட்டதாகத் தகவல் வந்திருக்கிறது. நான் போய் அவரை அடக்கம் செய்து விட்டு வருகிறேன்’ என்றார்.

இயேசு அவரிடம். ‘இறந்தவர்கள் அடக்கம் செய்யப் படுவார்கள். நீர் அதைப்பற்றிக் கவலைப் படவேண்டாம். கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்கும் எவனும் விண்ணக வீட்டுக்கு உரியவன் அல்ல’ என்றார். அந்த சீடர் இயேசுவின் பேச்சைக் கேட்டு அவருடனே தங்கி விட்டார்.

இயேசுவும் சீடர்களும் படகில் ஏறி மறுகரைக்குச் செல்லத் துவங்கினார்கள். அந்த ஏரியின் மறுகரை நீண்ட தொலைவில் இருந்தது. எனவே இயேசு படகில் படுத்துத் தூங்கத் துவங்கினார். சீடர்கள் இயேசு கடற்கரையில் பேசியவற்றைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

‘பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் பிறருக்குச் செய்யுங்கள் என்றாரே… அது இதுவரை நாம் கேட்டதேயில்லை இல்லையா ?’ சீடர் ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஆமோதித்தனர்.

‘விண்ணக வாழ்வைப்பற்றி இன்னொன்று சொன்னாரே, இடுக்கமான வாயில் வழியே நுழைய வேண்டும். அதுதான் வாழ்வுக்கான வழி. விரிவான பாதையோ அழிவுக்கானது என்று, அது உனக்குப் புரிந்ததா ?’

‘புரிந்ததே. விண்ணக வாழ்வு வேண்டுமென்றால் கடவுளின் வார்த்தைகளின் படி வாழ வேண்டும். அப்படி வாழ்வது மிகவும் கடினமான பாதையில் செல்வதைப் போல, அதைத் தான் அவர் அப்படிக் குறிப்பிட்டார்’

சீடர்களின் உரையாடல்கள் எதையும் கேட்காமல் இயேசு படகின் ஒரு ஓரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.
தண்ணீர் அமைதியாக அவர்களுடைய உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திலேயே யாரும் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.

கடல் கொந்தளித்தது.

புயல்க்காற்று வீசியது !

அமைதியாய் இருந்த அந்த கடல்பகுதி ஆக்ரோஷமாய் மாறியது. அலைகள் உயரமாயின. கடலின் கொந்தளிப்பில் படகு நிலை தடுமாறத் துவங்கியது. இதே கடல்வழியில் பலமுறை பயணம் செய்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை இப்படி ஒரு புயல்க்காற்று வீசியதில்லை. எப்போதும் அமைதியாகவே இருக்கும் இந்தக் கடல் பகுதிக்கு இன்று மட்டும் என்னவாயிற்று என்று சீடர்கள் பயந்தார்கள்.

இயேசுவைப் பார்த்தார்கள். இயேசு அமைதியாகப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. சீடர்களின் பயமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இயேசு ஆழமான உறக்கத்தில் இருந்தார். அலைகடல் சத்தம் அவருடைய உறக்கத்தைக் கலைக்கவில்லை.

சீடர்கள் நீண்ட நேரம் பொறுமையாய்க் காத்திருந்தார்கள். புயலின் சீற்றம் குறைந்தபாடில்லை. படகு எந்நேரமும் கவிழ்ந்து விடலாம் என்ற சூழ்நிலை !

‘இயேசுவை எழுப்புவோம். வேறு வழியில்லை. இல்லாவிட்டால் நாம் மடிய வேண்டியது தான்’ சீடர்கள் பதட்டமடைந்தார்கள்.

‘இயேசுவே… இயேசுவே…’ சீடர்கள் கத்தினார்கள்.

இயேசு கண்விழித்தார்…

‘இயேசுவே… காப்பாற்றும். சாகப் போகிறோம்… காப்பாற்றும்’ என்று கத்தினார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்தார்.
‘இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையா ? ஏன் இப்படி பயந்து சாகிறீர்கள் ? எப்போது தான் நம்பிக்கை கொள்வீர்களோ ?’ என்று சொல்லிவிட்டு கடலைப் பார்த்தார்.

‘இரையாதே… சும்மாயிரு’ காற்றுக்கும், கடலுக்கும் கட்டளையிட்டார் இயேசு.

அவ்வளவு தான். அத்தனை நேரமும் பேய்பிடித்தவனைப் போல அலறிக் கொண்டிருந்த கடல் சட்டென்று அமைதியானது. இந்தக் கடலா அப்படிச் சத்தம் போட்டது என்று நினைக்குமளவுக்குக் கடல் அமைதியாகிவிட்டது.

எத்தனையோ முறை இயேசு அதிசயச் செயல்கள் செய்வதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். நோய்கள் ஓடுவதையும், குருடர்கள் பார்ப்பதையும், ஒரு வார்த்தை சொல்லி மக்களைக் குணப்படுத்துவதையும், அனைத்தையும் சீடர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லையே என்னும் கவலையின் ரேகைகள் இயேசுவின் முகத்தில் ஓடின.

சீடர்கள் வியப்புக் கடலின் நடுவே நின்றார்கள்.

‘நோய்கள் ஓடியதையும், பேய்கள் ஓடியதையும் கண்டிருந்தோம். இப்போது என்னவென்றால் காற்றும் கடலும் கூட இவருடைய கட்டளைக்குக் கட்டுப்படுகிறதே ! ‘என்று வியந்தார்கள். மனசுக்குள் இந்த ஆச்சரிய நிகழ்வையும் எழுதிக் கொண்டார்கள்.

உதிரப்போக்கு நின்றது. மரணம் அகன்றது

yesus-menyembuhkan-anak-yairus-1000

இயேசு படகிலிருந்து இறங்கினார். அவருக்காகக் கடற்கரையில் ஏராளமான மக்கள் காத்திருந்தார்கள். அவர்கள் இயேசுவை மிகவும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் தொழுகைக் கூடத் தலைவர்களில் ஒருவரான யாயீர் என்பவனும் இருந்தான்.
அவன் இயேசுவிடம் வந்து

‘ரபீ… தாங்கள் என்னுடைய இல்லத்துக்கு வரவேண்டும்’ என்று விண்ணப்பித்தான். அவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

‘என்ன ஆயிற்று ?’ இயேசு அவனைத் தேற்றினார்.

‘என்னுடைய ஒரே மகள் சாகும் தருவாயில் இருக்கிறாள். பன்னிரண்டு வயது சிறுமி அவள். ஓடி ஆடி ஆனந்தமாய் வளைய வரவேண்டிய வயதில் அவளை கொடிய நோய் பிடித்துவிட்டது. அவள் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறாள். நீர் மட்டுமே அவளைச் சுகப்படுத்த முடியும்’ அவர் மீண்டும் அழுதார்.

‘அழவேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை வைத்தால் அதிசயங்களைக் காண்பது எளிது’ சொல்லிய இயேசு சீடர்களை அழைத்து,’ வாருங்கள் அவருடைய வீட்டிற்குப் போவோம்’ என்றார்.

இயேசுவும் அவருடைய சீடர்களும் யாயீரின் இல்லத்தை நோக்கி விரைந்தார்கள். கூட்டத்தினர் என்ன நடக்கப் போகிறது என்பதைக் காணும் ஆவலில் அவரை நெருக்கியடித்துக் கொண்டு அவருக்குப் பின்னாலும் முன்னாலும் செல்லத் துவங்கினார்கள்.

அந்தக் கூட்டத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் தன்னுடைய சொத்தை எல்லாம் மருத்துவர்களிடம் செலவழித்தும் ஒரு பயனும் இல்லாத கவலையில் இயேசுவைக் காண வந்திருந்தவள். ஆனால் இந்தப் பரபரப்புகளுக்கு இடையே அவளால் இயேசுவைத் தனியே சந்திக்க இயலவில்லை. இரத்தப் போக்குடைய பெண்கள் பொதுவிடங்களில் வருவதும் நடைமுறையில் இல்லாத வழக்கமாய் இருந்தது.

இயேசுவைத் தனியே சந்திக்க முடியாவிட்டாலும் அவளுக்குள் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை உடையவில்லை. இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டால் கூட போதும் நலமடைவேன் என்று அவளுடைய மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. ஆனால் கூட்டத்தினர் இயேசுவை நெருக்கியடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.

அவளும் கூட்டத்தினரிடையே புகுந்து புகுந்து இயேசுவின் அருகே சென்றாள். இயேசுவின் பின்னாலிருந்து அவருடைய ஆடையின் விளிம்பைத் தொட்டாள்.

ஆச்சரியம் ! அவளுடைய இரத்தப் போக்கு சட்டென்று நின்றது.

இயேசு நின்றார்.

‘என்னைத் தொட்டது யார்?’ இயேசு கேட்டார்.

இயேசுவின் கேள்வி மக்களையும், சீடர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

‘இயேசுவே இதோ எல்லா மக்களும் உம்மைத் தொட்டுக் கொண்டு தான் வருகிறார்கள். பலர் நெருக்கியடிக்கிறார்கள். என்னைத் தொட்டவர் யார் என்று கேட்கிறீரே ?’ சீடர்கள் கேட்டார்கள்.

‘இல்லை. என்னை யாரோ தொட்டார்கள். என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை நான் உணர்ந்தேன்’ இயேசு சொன்னார்.

சீடர்களும், மக்களும் குழம்பினார்கள்.

அந்தப் பெண் இனிமேலும் ஒளிந்திருக்க முடியாதென்பதை உணர்ந்து இயேசுவுக்கு முன்னால் வந்து விழுந்தாள்.

‘ஆண்டவரே… என்னை மன்னியும். உம் அனுமதியின்றி உம் ஆடையின் விளிம்பைத் தொட்டது நான் தான்’ அவள் சொல்ல கூட்டத்தினரின் முகத்தில் கேள்விகள் ஓடின.

‘ஏன் என்னைத் தொட்டாய் ?’

‘ஆண்டவரே… பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தப் போக்கு நோயினால் வருந்திக் கொண்டிருந்தேன். இந்த நோயுடன் உம்முன்னிலையில் வரவும் தயக்கம். ஆனால் உம்முடைய ஆடையைத் தொட்டால் கூட போதும் சுகம் பெறுவேன் என்று நம்பினேன். அதனால் தான் உம்முடைய ஆடையைத் தொட்டு சுகமடைந்தேன்’ அவள் சொல்லச் சொல்ல கூட்டத்தினர் வியந்தார்கள்.

‘உன் நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ’ இயேசு சொன்னார்.

‘இயேசுவே இது எப்படி ? எல்லோரும் தான் உம்மைத் தொடுகிறார்கள். ஒருவர் மட்டும் நலமடைகிறாரே ?’ சீடர்கள் கேட்டனர்.

‘முழுமையான நம்பிக்கை வைத்தால் எதுவும் சாத்தியமாகும். நம்பிக்கை இல்லாதவருக்கு அதிசயங்கள் நிகழாது’ இயேசு சொன்னார்.

இயேசு பேசிக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது தொழுகைக் கூடத் தலைவர் யாயீரின் வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்தார்.

‘ஐயா… ‘ அவன் யாயீரை அழைத்தான்.

யாயீர் பதட்டத்துடன் அவனைப் பார்த்தார்.

‘துக்கமான செய்தி. உமது மகள் இறந்து விட்டாள். இனிமேல் போதகரை தொந்தரவு செய்யவேண்டாம். வாரும். இறுதிச் சடங்குகள் துவங்கிவிட்டன’ என்றார்.

யாயீர் உடைந்துபோனார். ‘மகளே… ‘ என்று அலறினார்.

இயேசு அவரிடம்,’ அஞ்சாதீர். நம்பிக்கையோடு இரும். உம் மகள் பிழைப்பாள்’ என்றார்.

வீட்டுக்கு வந்ததும் எங்கும் அழுகுரல்கள். சிறுமியின் மரணத்துக்காக உறவினர்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கதறி அழுது துடித்துக் கொண்டிருந்தார்கள். சிறுமியின் தாயின் ஒப்பாரிச் சத்தம் அந்த சுற்றுப் புறத்தையே கரைத்துக் கொண்டிருந்தது.

இயேசு அவர்களிடம்,’ அழாதீர்கள். சிறுமி சாகவில்லை. தூங்குகிறாள்’ என்றார்.

‘சிறுமி சாகவில்லையா ? தூங்குகிறாளா ? எங்களுக்கென்ன பைத்தியமா ? தூங்கும் சிறுமியை செத்துவிட்டாள் என்று சொல்லி ஒப்பாரி வைக்க ?. இவருக்கு புத்தி பேதலித்து விட்டதோ ‘ மக்கள் இயேசுவை வித்தியாசமாய்ப் பார்த்தார்கள்.

இயேசு எதையும் காதில் வாங்கவில்லை. நேராக சிறுமியின் உடல் கிடத்தப் பட்டிருந்த இடத்துக்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து
‘சிறுமியே எழுந்திரு’ என்றார்.

சிறுமி உயிருடன் எழுந்தாள்.

கேட்டுக் கொண்டிருந்த ஒப்பாரிக் கூட்டம் சட்டென்று நின்றுபோக, ஆனந்த அலறல்கள் வீறிட்டன. பலர் பயந்து பின் வாங்கினார்கள். என்ன நடக்கிறது என்று நடுநடுங்கிய பலர் இயேசுவை விட்டு தூரமாய்ப் போய் நின்றார்கள்.

‘இவளுக்கு உணவு கொடுங்கள்’ இயேசு சொன்னார்.

சிறுமியின் பெற்றோர் மலைத்துப் போய் நின்றிருந்தார்கள்.

இயேசு புன்னகைத்தார்.

‘இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்.’ என்று அவர்களிடம் சொல்லிய இயேசு, சிறுமியின் தலையை அன்புடன் வருடினார்.

மரணத்துக்குள் போய்விட்டுத் திரும்பி வந்த அச்சிறுமி ஆனந்தமாய்ப் புன்னகைத்தாள். அந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவியது. இயேசுவின் மீது அரைகுறை நம்பிக்கை வைத்தவர்கள் அவர் மீது முழு நம்பிக்கை வைப்பதற்கு அந்த செய்தி துணை செய்தது.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...