Posted in Life of JESUS

இயேசு வரலாறு 27-2 : ஊதாரி மைந்தன்

Image result for Prodigal son

இயேசு விளக்கங்கள் எத்தனை கொடுத்தாலும், அவர் பாவிகளோடு பழகுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் மட்டும் நிற்கவேயில்லை. ஏனென்றால் பாவிகள் என்று அழைக்கப்படுபவர்களோடு பழகுவது என்பது கடவுளுக்கு விரோதமான செயல் என்பது அவர்களுடைய பரம்பரை இரத்தத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. அதையும் ஒரு இறைவாக்கினர், தன்னை மானிட மகன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் பேசுகிறார் என்றால் அது பாவம் என்பதை பரிசேயர், மற்றும் மறைநூல் அறிஞர்களால் தங்கள் மனதிலிருந்து விலக்க முடியவில்லை. இயேசு அவர்களுடைய கேள்விகளை ஒரு அழகிய கதை மூலம் சந்தித்தார்.

ஒருவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஏராளமான செல்வங்கள் இருந்தன. கால்நடைகள், வயல்கள், பணியாள்கள் என அவர்கள் நல்ல ஏகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.

மூத்தமகன் அமைதியானவன். அவன் தன் தந்தையுடன் வயலுக்குச் சென்று உழைப்பதிலும், வீட்டைப் பராமரிப்பதிலும் அனைத்திலும் பொறுப்புடன் செயல்பட்டு வந்தான்.

இளையவனோ கொஞ்சம் விளையாட்டுப் புத்திக்காரன். அவனுக்கு நண்பர்களுடன் சுற்றித் திரிவதிலும், பணத்தைச் செலவு செய்து நண்பர்களுடன் உல்லாசமாய் இருப்பதிலும் தான் அதிக நாட்டம். வயலில் வேலை செய்வதோ, வீட்டுக்கு உபயோகமாய் இருப்பதோ அவனுக்குக் கசந்தது.
அடிக்கடி தந்தையிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஊதாரித்தனமாகச் செலவு செய்து இன்பமாய் இருந்தான்.

‘அப்பா… நீங்கள் தந்த பணம் எல்லாம் தீர்ந்து விட்டது. எனக்குப் பணம் வேண்டும்’ இளைய மகன் கேட்டான்.

‘இப்படி ஊதாரித்தனமாக பணத்தையெல்லாம் செலவு செய்கிறாயே. இதைச் சம்பாதிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா ?’ தந்தை அறிவுரை சொன்னார்.

‘அதெல்லாம் எனக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. இப்போது பணத்தைக் கொடுங்கள்’ மகன் எரிச்சலுடன் சொன்னான்.

‘உன்னுடைய அண்ணனைப் பார். அவன் வீட்டிலேயே இருந்து எவ்வளவு வேலைகள் செய்கிறான். அவன் எப்போதும் எனக்கு உதவியாகவும் இருக்கிறான். தேவையில்லாமல் பணத்தைச் செலவு செய்வதும் இல்லை. அவனைப் பார்த்துக் கற்றுக் கொள்’

‘அவன் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன். அவனைப் பார்த்து நான் என்ன கற்றுக் கொள்ள் வேண்டியிருக்கிறது ?’

‘அப்படியெல்லாம் சொல்லாதே. அந்த வாழ்வு தான் நீடிக்கும். உன்னுடைய வாழ்வு நிலைக்காது. மனம் திருந்தி நீயும் ஒரு நல்ல மகனாக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்’ தந்தை சொன்னார்.

‘அப்பப்பா… என்னால் இந்தப் பேச்சுகளை தினம் தினம் கேட்க முடியவில்லை. நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்’ மகன் சொன்னான்.

‘என்ன முடிவு ?’

‘நம்முடைய சொத்தில் எனக்குச் சேரவேண்டிய பாகத்தை எனக்குக் கொடுத்துவிடுங்கள். அதை விற்று நான் என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறேன்’ இளைய மகன் சொன்னான்.

‘சொத்தை விற்பதா ? அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை’ தந்தை அதிர்ச்சியுடன் மறுத்தார்.

‘இல்லை. இதுதான் என்னுடைய முடிவு. நீங்களாக சொத்தை விற்றுத் தராவிடில் நான் ஊர் மக்களிடம் சென்று நியாயம் கேட்பேன். என்னை நீங்கள் கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று சொல்வேன். எனக்கு சொத்தில் எனக்குரிய பாகம் இப்போதே வேண்டும்’ இளைய மகன் உறுதியானான்.

தந்தை எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தார். அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் அவன் இல்லை. கடைசியில் தந்தை ஒப்புக் கொண்டார். தன்னுடைய சொத்துக்களின் ஒருபாகத்தை உடைந்த மனதுடன் தன்னுடைய இளைய மகனுக்குக் கொடுத்தார்.

அவன் மிகவும் ஆனந்தமடைந்தான். அதையெல்லாவற்றையும் விற்று பெரும் பணம் திரட்டினான். ஏராளமான செல்வத்தோடு தன் நண்பர்களைக் காணச் சென்றான்.

பணத்தோடு வந்த நண்பனைக் கண்டவர்கள் மகிழ்ந்தார்கள்.

‘வா… வா… இதைத் தான் நாங்கள் நீண்ட நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இப்போது தான் உனக்குப் புத்தி வந்திருக்கிறது. இப்போதாவது சொத்தையெல்லாம் பெற்றுக் கொண்டாயே. இல்லாவிட்டால் உன்னுடைய வாழ்க்கையே சீரழிந்திருக்கும்’

‘ஆம் உண்மை தான். வாழ வேண்டிய வயதில் வாழாமல், அனுபவிக்கும் வயதையெல்லாம் கடந்தபின் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ? வாருங்கள் நாம் வெளியூர் சென்று உல்லாசமாய் இருக்கலாம்’

‘இரு… நம்முடைய நண்பர்கள் இன்னும் சிலர் உண்டு. அவர்களையும் அழைக்கலாம். அனைவருமாய் சென்று உல்லாச வாழ்க்கை வாழலாம்’

‘அழையுங்கள். அழையுங்கள். என்னிடம் இருக்கும் பணம் தீராது. இன்பமாய் வாழ்வோம்’ அவன் உற்சாகமானான்.

தேனை மொய்க்கும் எறும்புகள் போல இளையமகனை தீய நண்பர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். வெளியூர் சென்று விடுதிகளிலும், சூதாட்ட இடங்களிலும் சென்று ஆனந்த வாழ்க்கை ஆரம்பித்தார்கள். பணம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரையத் துவங்கியது. அவன் அதை அறியவில்லை.

மதுவின் நெடியும், மாதுவின் பிடியும் என அவனுடைய வாழ்க்கையைப் பணம் புரட்டிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் தன்னுடைய பணப்பையைத் திறந்து பார்த்த இளையமகன் திடுக்கிட்டான்.
‘என்ன ? அதற்குள் பணத்தின் பெரும்பகுதி தீர்ந்து விட்டதா ? என்ன செய்வது ? ‘ அவனுடைய மனதுக்குள் ஒரு சின்ன புயல் அடித்தது. அவன் நண்பர்களை அழைத்தான்.

‘நண்பர்களே, பணம் மிகவும் விரைவாய் தீர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியே போனால் என்ன செய்வது ?’

‘எனக்கென்ன தெரியும் ? நீ விருப்பப்பட்டு அழைக்கிறாயே என்று தான் வந்தேன். உன்னுடன் உல்லாசமாய் இருந்தேன்…. ‘ ஒருவன் சொன்னான்.

‘நீ தானே செலவு செய்தாய் ? நான் உன் பணத்தை எடுக்கவேயில்லையே’ இன்னொருவன் சொன்னான்.

‘சரி.. நான் போய் எங்கிருந்தாவது கொஞ்சம் பணம் சேகரித்து வருகிறேன்’
நண்பர்கள் அவனிடம் இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் அவனுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக தலைமறைவானார்கள்.

மறுநாள் விடிந்தபோது, நண்பர்கள் யாரும் அவனுடன் இல்லை.

அவன் காத்திருந்தான். யாரும் வரவில்லை. பணப்பெட்டியைத் திறந்தான். இருந்த பணத்தின் பெரும்பகுதியை நண்பர்கள் சுருட்டிக் கொண்டு சென்றிருப்பதை அறிந்து இன்னும் அதிகமாய் கவலைப்பட்டான்.

சில நாட்கள் கடந்தன. அவனிடமிருந்த பணம் முழுவதும் தீர்ந்து போக, விடுதியிலிருந்தும் துரத்தப் பட்டான் !

செல்வத்தின் மீது நிமிர்ந்து படுத்திருந்த அவன் இப்போது கோணிக்குள் உடல் சுருக்கி தெருவோரத்தில் கிடந்தான். பசி அவனுடைய வயிற்றைக் கிள்ளியது. உண்பதற்கு ஏதாவது வேண்டுமே ! என்ன செய்வதென்று தெரியவில்லை அவனுக்கு. வாழ்வின் மீதான பயம் முதன் முதலாய் அவனை வந்து சந்தித்தது.

‘ஐயா.. எனக்கு ஏதாவது ஒரு வேலை தாருங்களேன்…’ அவன் வீடு வீடாகச் சென்று வேலை தேடினான்.

‘உனக்கு என்ன வேலை தெரியும் ?’

‘வயல் வேலை தெரியுமா ?’

‘வியாபார நுணுக்கம் தெரியுமா ?’

‘ஏதேனும் கலைப் பொருட்கள் செய்யத் தெரியுமா ?’

எல்லா கேள்விகளுக்கும் இல்லை என்ற பதிலைத் தான் அவனால் சொல்ல முடிந்தது.
‘எதுவும் தெரியாதவனுக்கு வேலை எதுவும் இங்கே இல்லை’. கதவுகள் அடைக்கப்பட்டன.

கடைசியில் ஒருவர் இரக்கப் பட்டு ஒரு பணி கொடுத்தார். அது பன்றிகளை மேய்க்கும் பணி. பன்றி என்பது விலக்கப்பட்ட ஒரு மிருகம். அதோடு பழகுவதோ, அதைப் பராமரிப்பதோ, அதன் இறைச்சியை உண்பதோ அவமானத்தின் உச்சம் அங்கே. அந்த வேலை தான் அவனுக்கு வழங்கப்படுகிறது.

வேறு வழியில்லை. பன்றிகளை மேய்க்க ஒப்புக்கொண்டு வேலையைத் துவங்கினான். அதுவும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. பன்றிகளோடு பன்றியாக அலைந்து உடலெல்லாம் அழுக்கடைந்து புழுதிகளில் படுத்துறங்கி அவன் மிகவும் வருந்தினான்.

அவனுடைய போதாத காலம், அந்த நாட்டில் பஞ்சம் பரவத் துவங்கியது. மக்கள் உண்பதற்கு ஏதும் கிடைக்காமல் வருந்தினார்கள். பன்றிகளின் உரிமையாளனுக்கே உண்ண உணவில்லையேல் பன்றி மேய்ப்பவனுக்கு எங்கே கிடைக்கப் போகிறது உணவு ? அவன் பட்டினிக்குள் தள்ளப்பட்டான்.

கடைசியில் பன்றிகளுக்கு வைக்கும் தவிட்டை உண்ணத் துவங்கினான். அதுவும் அங்கே அனுமதிக்கப்படாத ஒன்றாய் இருந்தது. சக பணியாளர்கள் அதையும் தலைவனிடம் சொல்ல, தலைவன் அவனை வேலையை விட்டே துரத்தினான்.

அப்போது தான் அவனுக்குப் புத்தி தெளிந்தது. எத்தனை சுகமாய் வாழ்ந்தேன். தேவைக்கேற்ற பணம் எப்போதும் கைகளில் புரளும். கைதட்டிக் கூப்பிட்டால், கைகட்டி நிற்க ஏராளம் பணியாட்கள். அந்தப் பணியாட்களுக்கே தனியே வீடுகள், தேவைக்கேற்ற உணவு, நல்ல வாழ்க்கை. தான் இப்போது வாழும் வாழ்க்கையை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது தன் வீட்டுப் பணியாட்களின் வாழ்க்கை என்பது அவனுக்கு உறைத்தது.

எத்தனை பெரிய தவறு செய்தேன். தந்தையின் அறிவுரைகளை அலட்சியம் செய்தது எத்தனை பெரிய பிழை. இனி தந்தையிடம் சென்றால் தந்தை மன்னிப்பாரா ? இல்லை தந்தை மன்னிக்கவே மாட்டார். ஆனால் ஒன்று செய்யலாம், அங்கே ஒரு வேலை கேட்கலாம். பணியாட்களில் ஒருவனாகவேனும் தன்னுடைய இல்லத்தில் இருப்பது மிகவும் உயர்ந்த வாழ்க்கையே. மகன் முடிவெடுத்தான்.

தயக்கங்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு தந்தையின் இல்லம் நோக்கி நடந்தான். நடந்தான் நடந்தான் நடந்து கொண்டே இருந்தான். தந்தையோ மகன் என்றேனும் மனம் திருந்தி வருவான் என்று இன்னும் நம்பிக்கையுடன் வாசலை நோக்கியே கண்களை வைத்துக் காத்திருந்தார். நீண்ட நாட்கள் நடந்து சோர்ந்து போன மகன் கடைசியில் வீடு வந்து சேர்ந்தான்.

அழுக்கடைந்த ஆடைகளுடன் ஒரு உருவம் தள்ளாடித் தள்ளாடி வருவதைக் கண்ட தந்தை அவனை அடையாளம் கண்டுகொண்டார் ! தன் மகன் ! நிழலை வைத்துக் கூட அடையாளம் கண்டுகொள்ளுமளவுக்கு அவர் மகனை நேசித்திருந்தார். மகன் அருகில் வரும்வரை காத்திருக்கும் பொறுமை அவரிடம் இல்லை. ஓடினார். மகனை நோக்கி முடிந்தமட்டும் விரைவாய் ஓடினார்.

‘மகனே…..’ தன்னை நோக்கி நெருங்கி வந்த தந்தையைக் கண்டு மகன் திடுக்கிட்டான். அவனுடைய கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

‘அப்பா…. மன்னியுங்கள்…’

தந்தை அவனை நெருங்கி அரவணைத்தார்.

மகன் பின்னோக்கி நகர்ந்தான்.
‘அப்பா… விண்ணகத் தந்தைக்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் நான் பாவம் செய்து விட்டேன். இனிமேல் எனக்கு உமது மகனாய் இருக்கும் தகுதி இல்லை. என்னை உம்முடைய வேலைக்காரரில் ஒருவராக எண்ணி உணவளிப்பீரா ?’

மகனின் பேச்சைக் கேட்ட தந்தையின் உள்ளம் உடைந்தது.
‘மகனே… என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் ? நீ என்றும் என் மகன் தான்…’ தந்தை அவனை அப்படியே அணைத்துக் கொண்டார்.

தந்தை பணியாளரை அழைத்தார்.
‘முதல் தரமான ஆடைகளைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். விரல்களுக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் உடனே அணிவியுங்கள். போங்கள்… போய் ஒரு கொழுத்த கன்றை அடித்து விருந்து வையுங்கள்… இதோ.. என்னுடைய இறந்து போயிருந்த மகன் திரும்ப வந்திருக்கிறான் ! ‘ தந்தை உற்சாகமானார்.

வீடு உற்சாகமானது.

மகன் குளித்து புத்தாடையும், மோதிரங்களும் அணிந்து புத்துணர்ச்சியடைந்தான். அவனுடைய மனம் தெளிவடைந்திருந்தது. உண்மையான அன்பை அவனுடைய கண்கள் கண்டுகொண்டன. வீட்டில் விருந்து தடபுடலாய் ஆரம்பமானது. இசைநிகழ்ச்சிகளும், நடனங்களும் துவங்கின.

அப்போது தான் மூத்த மகன் வயலிலிருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். வீட்டிலிருந்து இசை கேட்கிறது ! நடனம் நடப்பதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டை நெருங்கினான். வெளியே பணியாளர்கள் எல்லோரும் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் ஒரு பணியாளனை அழைத்தான்.

‘என்ன நடக்கிறது இங்கே ? இசை கேட்கிறது ! நடனச் சத்தம் கேட்கிறது. எல்லோரும் பரபரப்பாய் இருக்கிறீர்கள் ! என்ன விஷயம் ?’ அவன் கேட்டான்.

‘ஐயா… உமது தம்பி திரும்பி வந்திருக்கிறான் !’

‘தம்பி…. தம்பி திரும்பி வந்திருக்கிறானா ? ‘

‘ஆம் ஐயா… எல்லா செல்வங்களும் இழந்தவனாக, மிகவும் கஷ்டப்பட்டுவிட்டு இப்போது தான் வந்திருக்கிறான்.’

‘ஓ… செல்வங்களையெல்லாம் இழந்து விட்டு வந்திருக்கிறானா ?’

‘ஆம்.. ஐயா.. ஆனாலும் அவன் வந்ததில் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். நல்ல ஆடை அளித்து, ஆபரணங்களும் அணிவித்து, கொழுத்த கன்றை அடித்து விருந்தும் வைக்கிறார்’ பணியாளன் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

மூத்த மகனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. ஒரு உதவாக்கரைக்கு இத்தனை பெரிய விழாவா ? நான் இத்தனை காலம் அவரோடு இருந்திருக்கிறேன் எனக்கு எதுவும் செய்யாமல், ஒரு ஊதாரி மகனுக்காக விருந்து வைக்கிறாரா ? வைக்கட்டும் வைக்கட்டும்… அவனுடைய மனதில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

‘ஐயா… உமது மூத்த மகன் வீட்டுக்கு வெளியே கோபமாய் நிற்கிறார்’ பணியாளன் ஒருவன் தந்தையின் காதைக் கடித்தான்.

தந்தை வெளியே ஓடினார்.

‘மகனே உள்ளே வா… சந்தோசமான செய்தி. உன் தம்பி திரும்பி வந்திருக்கிறான்’ தந்தை ஆனந்தமாய்ச் சொன்னார்.

‘உம் சொத்தையெல்லாம் அழித்து விட்டு வந்த மகனுக்காக விருந்தா ?’

‘அப்படிச் சொல்லாதே மகனே. அவன் உன் தம்பி. அவன் திருந்தி வந்திருக்கிறான். அவனை நாம் வரவேற்க வேண்டும்’

‘சரி.. ரொம்ப நல்லது. நீங்கள் விருந்து கொண்டாடுங்கள். நான் உள்ளே வரவில்லை.’

‘ஏன் ? ஏன் இத்தனை கோபம் ?’

‘இருக்காதா ? நான் இத்தனை காலம் உம்மோடு இருக்கிறேனே. நான் விருந்துண்டு மகிழ எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது நீர் தந்ததுண்டா ? இதோ ஒரு உதவாக் கரை மகனுக்காக இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம், கொழுத்த கன்றை அடித்து விருந்து !!! நடத்துங்கள்…’ மகன் கோபத்தைக் குறைக்கவில்லை.

தந்தை மகனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

‘மகனே… நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையது எல்லாமே உன்னுடையது தான். நாம் இப்போது மகிழ்வது தான் முறை. ஏனென்றால், உன் தம்பி இறந்து போயிருந்தான் உயிர்த்துவிட்டான். காணாமல் போயிருந்தான் கிடைத்துவிட்டான்’ என்றார்.

இயேசு கதை சொல்லி முடித்தார். கதையின் வழியாக இயேசு கூடியிருந்த மக்களுக்கு விண்ணகத் தந்தை மிகவும் அன்பானவர், அவர் பாவிகள் மனம் திரும்புவதற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் ஒரு பாசமிகு தந்தை என்னும் புதிய பரிமாணத்தைக் கடவுளுக்கு வழங்குகிறார். பாவம் செய்தால் தண்டிக்கும் கடவுளையும், மதகுருமார்களையும் மட்டுமே அறிந்திருந்த மக்களுக்கு பாவம் செய்தாலும், திருந்தி விட்டால் மன்னிக்கும் கடவுள் மிகவும் நேசத்துக்குரியவராகிவிட்டார். மக்கள் இயேசுவின் பால் அதிகமாய் ஈர்க்கப்பட்டார்கள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...