Posted in Life of JESUS

இயேசு வரலாறு 26 : விதைப்பவன் உவமை

Image result for parable of sowerஇயேசு தம்முடைய போதனைகள் மக்களைச் சென்றடைவதற்காகவும், மக்களுக்கு அவை மறந்துவிடாமல் இருப்பதற்காகவும் உவமைகள் வழியாகப் போதிப்பது வழக்கம். அவற்றில் சிறப்பிடம் பெற்ற ஒன்று விதைப்பவன் உவமை.

விதைப்பவன் ஒருவன் விதைப்பதற்குரிய விதைகளைக் கூடையில் எடுத்துக் கொண்டு வயலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

சில விதைகள் அவனுடைய கூடையிலிருந்து நழுவி வழியோரத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைப்பதற்கு முன்பாகவே வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்று விட்டன.

இன்னும் சில விதைகள் பாறைநிலத்தில் விழுந்தன. மண்பிடிப்பு இல்லாத பாறைநிலத்தில் விதைகள் விரைவிலேயே முளைத்துவிட்டன. ஆனால் நிலத்தில் வேர் பிடிக்கவில்லை. சூரியன் வந்தபோது அதன் வெப்பத்தைத் தாங்க முடியாத அந்த முளைகள் எல்லாம் வெயிலில் காய்ந்து போய்விட்டன.

சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. அவை முட்செடிகளிடையே விழுந்ததால் பறவைகளால் அவற்றை நெருங்க முடியவில்லை. அவை நிலத்தில் வேர்விட்டு முளைத்தன. நிலத்தில் வேரூன்றி விட்டதால் அவற்றைக் கதிரவனாலும் கருக வைக்க முடியவில்லை. ஆனால் வளர, வளர தன்னைச் சுற்றி நின்ற முட்செடிகளாலேயே அவை நெரிக்கப்பட்டு பலன் தராமல் போயின.

சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் மண்ணில் புதைபட்டதால் பறவைகளின் அலகுகளுக்குத் தப்பின, வளர்வதற்குத் தேவையான நீர் இருந்ததால் அவற்றைச் சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கவில்லை. நிலம் விவசாயத்துக்குத் தயாராக இருந்ததால் முட்செடிகள் எங்கும் இல்லை. எனவே அந்த விதைகள் நன்றாக முளைத்து வளர்ந்தன. அவற்றில் சில முப்பது மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில நூறு மடங்காகவும் பலனளித்தன.

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும் !

இயேசு உவமையைச் சொல்லி நிறுத்தினார். மக்கள் புரியாத முகங்களோடு பொறுமையாய் இருந்தார்கள். இயேசு அவர்களுக்குத் தன்னுடைய உவமைக்குள் மறைந்திருந்த பொருளை விளக்கத் துவங்கினார்.

வழியோரத்தில் விழுந்த விதைகளைப் போன்றவர்கள் இறையரசைக் குறித்த வார்த்தைகளைக் கேட்பார்கள் ஆனால் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் காதுகளில் விழுந்த வார்த்தைகளை தீயவன் வந்து கவர்ந்து சென்று விடுவான். அது அவனுடைய உள்ளத்துக்குள் செல்லாது.

பாறை நிலத்தில் விழுந்தவர்கள் இறைவார்த்தையை மிகவும் மகிழ்வுடன் கேட்டு உள்ளுக்குள் முளை விடுவார்கள். ஆனால் சிறிது நாட்களிலேயே ஏதேனும் சோதனைகளோ, எதிர்ப்புகளோ வரும்போது எதிர்த்து நிற்கும் வலு இல்லாததனால் வார்த்தைகளை இறக்க விடுவார்கள்.

முட்செடிகளின் நடுவே விழுந்த விதையைப் போன்றவர்கள், இறைவார்த்தையைக் கேட்டு அதன் படி நடக்க வேண்டும் என்று முடிவெடுத்து நல்ல முறையில் நடக்கத் துவங்குவார்கள். ஆனால் உலகக் கவலைகள், பணம் சேர்க்கும் ஆசை, சிற்றின்ப மோகம் இவற்றால் நெரிக்கப்பட்டு பலனளிக்காமல் போவார்கள்.

நல்ல நிலத்தில் விழுந்தவிதையைப் போன்றோர், இறை வார்த்தையைக் கேட்கும் முன்பாகவே தங்கள் மனதை அதற்கேற்பத் தயாரித்துக் கொள்வார்கள். பின் இறைவார்த்தையைக் கேட்டதும் அதை உள்வாங்கிக் கொள்வார்கள். அது உள்ளேயே முளைத்து, வளரும் போது அதற்குரிய நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் வளர்த்துக் கொள்வார்கள். அவர்களை உலகக்கவலைகளோ, சிற்றின்ப மோகங்களோ, எதிர்ப்பாளர்களின் போலிக் கூச்சல்களோ பின் வாங்க வைக்காது. அவர்கள் நிலைத்திருந்து செயல்களில் இறைவார்த்தையை வெளிப்படுத்துவார்கள். சிலர் முப்பது மடங்கு, சிலர் அறுபது மடங்கு, சிலர் நூறு மடங்கு என பயன் தருவார்கள்.

இதுவே அந்த உவமையின் விளக்கம். இயேசு சொல்ல, மக்கள் அனைவரும் தெளிவடைந்தார்கள்.

‘இதை நேரடியாகச் சொல்லலாமே… ஏன் உவமைகள் ?’ சீடர்கள் கேட்டனர்.

‘விண்ணரசின் மறைபொருளை நீங்கள் அறிகிறீர்கள். ஆனால் பொது மக்கள் அறிவதில்லை. அவர்களுக்காகவே இவ்வாறு சொல்கிறேன்…’ இயேசு சொன்னார்.

‘இன்னோர் உவமையும் சொல்கிறேன் கேளுங்கள்… ‘ இயேசு ஆரம்பித்தார்.

ஒருவன் வயலில் நல்ல விதைகளை விதைத்தான். ஆனால் அவன் தூங்கும் போது பகைவன் வந்து அவனுடைய வயலில் களைகளையும் விதைத்து விட்டுப் போனான். முளைத்து வருகையில் களையும் பயிரும் வித்தியாசம் காட்டவில்லை. வளர வளர களைகள் தங்கள் சுய முகத்தைக் காட்டத் துவங்கின. பயிர்களோடு பயிர்களாக களைகள் வளர்ந்து பயிர்களின் சத்தையும் உறிஞ்சிக் கொண்டிருப்பதை வேலையாள் கண்டு தலைவனிடம் வந்தான்

‘ஐயா… நீர் உமது வயலில் நல்ல விதைகளையல்லவா விதைத்தீர். களைகள் வந்திருக்கின்றனவே. நான் போய் களைகளை வெட்டி விடவா ?’

‘வேண்டாம். நீ களைகளைப் பிடுங்குகையில் பயிரையும் கூட அழித்துவிடக் கூடும். அறுவடைக்காலம் வரை இரண்டுமே வளரட்டும். அறுவடை செய்யும்போது பயிர்களைத் தனியாகவும், களைகளைத் தனியாகவும் கட்டு. பயிர்களை என்னுடைய களஞ்சியத்துக்கு அனுப்பி வை. களைகளையோ அழியா நெருப்பில் சுட்டெரி’ தலைவன் ஆணையிட்டான்.

உவமை சொல்லி முடித்த இயேசு மக்களைப் பார்த்தார்.

‘உங்களிடையே நல்ல பயிர்களும், களைகளும் உண்டு. களைகளாக வாழ்வோருக்கு இறுதி நாளில் அழிவு நிச்சயம். பயிர்களாக வாழுங்கள்’ இன்னொரு உவமையும் சொல்கிறேன் கேளுங்கள்,

ஒருவர் தம்முடைய திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதிலே கனிகள் இருக்கிறதா என்று ஆவலுடன் பார்த்தார். ஊஹூம்… பலனில்லை. அவர் பணியாளரை அழைத்தார்.

‘பாரும்… நானும் மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் கனி தேடுகிறேன். ஒரு பலனும் இல்லை. இந்த திராட்சைத் தோட்டத்திற்கு இந்த அத்திமரம் தேவையில்லாததாகிவிட்டது. எனவே இதை வெட்டி விடு’ என்றார்.

பணியாளனோ,’ ஐயா… இருக்கட்டும். இந்த ஆண்டும் இதைக் கொத்தி நல்ல எரு போடுகிறேன். ஒரு கடைசி முயற்சி. கனி கொடுத்தால் தொடர்ந்து பராமரிப்போம். இல்லையேல் வெட்டி விடலாம்’ என்றான்.

கனிகொடாத அத்திமரமாய் இருக்காதீர்கள். அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில் கனிகொடுங்கள்.

மக்களுக்குப் புரியும் விதத்தில் விதைகள், விளை நிலம், என்று உவமைகள் சொல்லி செய்திகளை விளங்க வைத்த இயேசுவின் திறமையை மக்கள் வெகுவாகப் புகழ்ந்தார்கள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...