Posted in Life of JESUS

இயேசு வரலாறு 15. கொடிய காய்ச்சல் விலகியது

Image result for mother in law fever Jesus

இயேசுவின் சீடரான பேதுரு போதனைகளைக் கேட்பதிலும் இயேசுவோடு பயணிப்பதிலுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அவருடைய மாமியார் நோயில் விழுந்தார். பயங்கரமான கொடிய காய்ச்சல் அவளைப் பிடித்தது. அது சாதாரணக் காய்ச்சல் அல்ல, வயதானவர்களை வாட்டி எடுக்கும் கொடிய காய்ச்சல். உடலெல்லாம் அனலாய்க் கொதிக்க பேதுருவின் மாமியார் வலியில் துடித்துக் கொண்டிருந்தார். அந்தகாலத்தில் நடைமுறையில் இருந்த வைத்தியம் மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலும் விலங்குகளின் மண்டை ஓடுகளை எரித்த சாம்பலை நெற்றியில் பூசுவதே மருந்து. சர்வ நிவாரணி போல அவர்கள் கலாச்சார மருந்து ஒன்று உண்டு. நரியின் மண்டைஓடு, எலியின் தலை, நண்டுகளின் கண்கள், ஆந்தையின் மூளை, தவளையின் ஈரல், யானையின் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் பேன் போன்ற உயிரினங்கள் இவற்றையெல்லாம் கலந்து சுட்டு சாம்பலாக்கியது தான் அந்த சர்வ நிவாரணி !. இப்போது வாசித்தால் சிரிப்பை உண்டாக்கும் வைத்தியங்களும் அந்நாட்களில் ஏராளம் உண்டு. ஜலதோஷம் தீரவேண்டுமானால் எலியின் மூக்கில் முத்தமிடுவது, தவளையை வினிகரில் சமைத்து உண்டால் பல்வலி பறக்கும் என்பவையெல்லாம் அவற்றில் சில.

எந்தவிதமான மருந்தும் பேதுருவின் மாமியாருடைய காய்ச்சலைக் குணப்படுத்தவில்லை. மாறாக காய்ச்சலின் வீரியத்தை அதிகரிக்கவே செய்தன. பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்பதை விட வேறு வழியில்லை. இயேசுவின் காதுக்கு செய்தி சென்றதும் இயேசு பேதுருவின் வீட்டுக்கு விரைந்தார். பேதுருவின் மாமியார் இறந்து விடுவார் என்றே சுற்றத்தினர் நம்பியிருந்தனர். பேதுரு கூட அவளுடைய நிலைமையைப் பார்த்து அவ்வாறே நினைத்திருக்கக் கூடும். இயேசு நேராக பேதுருவின் மாமியார் படுத்திருந்த படுக்கை அருகே சென்றார். அவருடைய கைகளைத் தொட்டார். அவ்வளவு தான், காய்ச்சல் சட்டென்று விலக மாமியார் எழுந்தாள். அனலடித்த தேகம் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தது. மூட்டுகளில் இருந்த வலி மறைந்திருந்தது. நடுங்கிக் கொண்டிருந்த உடம்பு இயல்பாக இருந்தது. இயேசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் கண்கள் பனித்தாள். ஒரு தொடுதல் மூலம் தன்னை குணப்படுத்திய இயேசுவின் மீதும் அவருடைய பணிகளின் மீதும் நம்பிக்கை கொண்டாள்.

பேதுருவின் மாமியார் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டார் என்னும் செய்தி சடுதியில் வீதிகள் தோறும் விரைந்தோடியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். இயேசு அப்போது அவர்களுடைய பார்வையில் ஒரு மருத்துவர். காய்ச்சல், தொழுநோய், புற்று நோய், வாதம் என அனைத்து விதமான நோயாளிகளும் வீதிகளில் நிரம்பி வழிந்தார்கள். இயேசு வந்தார். வந்திருந்த அனைவரையும் குணமாக்கினார் ! அதுவும் மக்களோடு பேசிக்கொண்டே, சிரித்துக் கொண்டே, ஒரு நண்பனைப் போல அவர்களிடையே நடந்து அனைவரையும் தொட்டு சுகமாக்கினார். அனைவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

சுகமாக்கும் போதனையாளர்கள் வரலாற்றில் இருந்திருந்தாலும் இயேசுவின் அணுகுமுறை மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய நோய் தீர்க்கும் முறை பிச்சையிடுவது போல இருக்கவில்லை. நண்பனுக்கு நட்புடன் கை குலுக்குவது போல, உறவினர் ஒருவருடன் உரையாடுவது போல ஆத்மார்த்தமான அன்புடன் மிளிர்ந்தது. எனவே தான் மக்கள் இயேசுவை நோக்கி கூச்சலிட்டார்கள்

‘நீர் உண்மையிலேயே கடவுளின் மகன் தான்’

ஆலய குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவசர அவசரமாக ஏடுகளைப் புரட்டினார்கள். பழைய இறைவாக்கினர்கள் ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா என்பதை அறிய. அவர்கள் கண்ணுக்குத் தட்டுப்பட்டது இறைவாக்கினர் எசாயா எழுதிய தீர்க்கத் தரிசனம் ஒன்று. ‘செபுலான் நாடே, நப்தலின் நாடே… இருளில் இருக்கும் மக்கள் பேரொளியைக் காண்பார்கள்…’. கப்பர்நாகும் நகரம் செபுலான், நப்தலி என்னும் நகரங்களின் எல்லையில் தான் இருந்தது. எனவே இந்த தீர்க்கத் தரிசனம் இயேசுவின் வருகையைக் குறித்ததாக இருக்குமோ என்று அவர்கள் விவாதிக்கத் துவங்கினர்.

இன்னொருவர் ஏசாயா தீர்க்கத் தரிசியின் இன்னொரு தீர்க்கத் தரிசனத்தை குறிப்பிட்டார். ‘ அவர் நம் நோய்களைத் தாங்கிக் கொண்டார், நம் வலிகளை ஏற்றுக் கொண்டார்’ இது கூட இயேசுவைக் குறித்ததாக இருக்குமோ ? விவாதங்கள் தொடர்ந்தன. பழைய நூல்களிலிருந்தும், தீர்க்கத் தரிசனங்களிலிருந்தும் இயேசுவைக் குறித்த செய்திகள் இருக்குமோ என்ற ஆராய்ச்சியும் தொடர்ந்தது. இயேசுவின் புகழ் பரவியது.

மீண்டும் மீண்டும் இயேசுவைக் கூட்டம் மொய்க்கத் துவங்கியது. இயேசு சுற்றியிருக்கும் ஊர்களுக்கும் சென்று போதனைகளைச் செய்ய விரும்பினார். கப்பர்நாகூமிலேயே ஒரு மருத்துவரைப் போல தங்கி விட அவர் விரும்பவில்லை. வந்தவர்களைச் சுகமாக்கி விட்டு அவர் சீடர்களுடன் பயணத்தைத் துவங்கினார். சமாரியா, யூதேயா போன்ற இடங்களிலெல்லாம் இயேசுவின் கப்பர்நாகும் சுகமளித்தல் செய்தி பரவத் துவங்கியது. எருசலேம் வரை அவருடைய பெயர் வியப்புக்குரிய ஒன்றாக உச்சரிக்கப்பட்டது.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s