Posted in Life of JESUS

இயேசு வரலாறு 16 : மனிதர்களைப் பிடிப்போராகுங்கள்

Image result for Simon jesus net

ஒரு நாள் அதிகாலையில் கெனேசரேத்துக் ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். அவருடைய போதனைகளைப் பற்றி அறிந்திருந்த மக்கள் கூட்டம் அவருடைய அருளுரையைக் கேட்பதற்காக அவரை நெருங்கி வந்தார்கள். மக்களைக் கண்ட இயேசு மகிழ்ந்தார். அவர்களுக்கு ஏதேனும் நற்செய்தி சொல்லவேண்டுமே என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் நின்று பேசுவதற்கு வசதியான ஒரு இடமும் தென்படவில்லை. கரையில் கூட்டம் முண்டியடித்தது.

இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கே ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நின்றிருந்தன. அதில் ஒன்று சீமோனுடையது. இன்னொன்று செபதேயுவின் மக்களுடையது. அவர்கள் படகை விட்டிறங்கி ஏரிக்கரையில் தங்கள் வலைகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். மீன் எதுவும் கிடைக்காத சோகம் அவர்களுடைய கண்களில் தெரிந்தது.

இயேசு அந்தப் படகுகளில் ஒன்றில் ஏறினார். பின் படகை கரையிலிருந்து ஏரிக்குள் சற்றுத் தள்ளினார். இப்போது இயேசுக்குத் தேவையான மேடை தயாராகிவிட்டது. படகில் இயேசு, ஏரிக்கரையில் மக்கள். இயேசு போதிக்கத் துவங்கினார்.

கவலைகளை விட்டு விடுங்கள். உயிர்வாழ எதை உண்பது, உடலை மூட எதை உடுப்பது என்றெல்லாம் நீங்கள் கவலைப்படுவது வீண். உணவை விட உயிரும், உடையை விட உடலும் சிறந்தவை அல்லவா ! வானத்துப் பறவைகளைக் கவனியுங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை, களஞ்சியங்களில் சேமிப்பதும் இல்லை. ஆனால் கடவுள் அவற்றுக்கும் உணவளிக்கிறார். பறவைகளுக்கே உணவளிக்கும் பரமன், அதைவிட மேலான உங்களுக்கு உணவளிக்க மாட்டாரா ?

வயல்வெளி மலர்களையோ, காட்டுச் செடிகளையோ கவனித்திருக்கிறீர்களா ? அவை கவலையின்றி சிரிக்கின்றன. சாலமோன் மன்னன் கூட அணிந்திராத மென்மையில் அந்த மலர்களை கடவுள் உடுத்தியிருக்கிறார் அல்லவா ?

எனவே கவலைப் படாதீர்கள்.

கவலைப்படுவதால் உங்களில் யாராவது தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியுமா ? அப்படியெனில் கவலைப்படுங்கள். கவலைப்படுவதால் உங்கள் தலைமயிரில் சிலவற்றைக் கறுப்பாக்க முடியுமா ? அப்படியெனில் கவலைப்படுங்கள். எதையும் தராத கவலையை ஏன் நீங்கள் இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

கவலைப்படுவது கடவுளை அறியாதவர்களின் பணி. நீங்கள் கடவுளைப் பற்றிக் கொள்ளுங்கள். மற்ற அனைத்தையும் பெற்றுக் கொள்வீர்கள்.

உடமைகளை சேர்த்து வைக்கவேண்டாம். விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள். விண்ணுலகில் செல்வம் சேரும். ஏனென்றால் உங்கள் செல்வம் எங்கே உள்ளதோ அங்கே தான் உங்கள் உள்ளமும் இருக்கும் !

அலைகள் இல்லாத ஏரியும், சத்தம் இல்லாத காலைவேளையும் அவருக்கு போதனை செய்ய வசதியாய் இருந்தது. நீண்ட நேரம் போதனை வழங்கிய பின் இயேசு படகை விட்டுக் கீழிறங்கினார். கரையில் சீமோன் அமர்ந்து வலைகளை அலசிக் கொண்டிருந்தார்.

‘சீமோனே… மீன்கள் எதையும் காணோமே… வலைகளை அலசிக் கொண்டிருக்கிறீர்கள் ?’ இயேசு கேட்டார்.

‘போதகரே. இன்று எங்களுக்கு மோசமான நாள். மீன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இரவு முழுவதும் இந்த ஏரியின் எல்லா பாகங்களிலும் வலை வீசிப் பார்த்தோம். வீண்…. தூக்கம் போனது தான் மிச்சம். இன்றைய பொழுது என்ன செய்வதென்றே தெரியவில்லை.’ சீமோனின் குரலில் சோகம் கலந்திருந்தது

‘சரி.. ஏரியின் ஆழத்தில் அதோ அந்த இடத்தில் வலைகளை வீசுங்கள்’

‘போதகரே. அந்த இடத்தில் பல தடவை வலை விரித்தோம். அங்கே ஒன்றும் இல்லை’

‘சரி. இப்போது ஒருமுறை வலையை வீசு’ இயேசு புன்னகையுடன் சொன்னார்.

‘இரவு முழுவதும் வலைவிரித்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனாலும் நீர் சொல்வதால் இன்னொருமுறை வலை விரிக்கிறேன்’ சொல்லிய சீமோனிடம் நம்பிக்கை இருக்கவில்லை ஆனாலும் இயேசு கை காட்டிய இடத்தில் வலையை வீசினார்.

வலையை வீசிவிட்டு எப்படியும் வெற்று வலைதான் வரப்போகிறது என்னும் நினைப்பில் வலையை இழுத்த சீமோன் நிலை தடுமாறினார். வலை வரவில்லை. மிகவும் பாரமாக இருந்தது. வலையில் ஏராளமான மீன்கள் சிக்கியிருப்பதை உணர்ந்த அவர் பெரிதும் வியப்படைந்தார். இரவு முழுதும் வலைவீசி எதுவும் அகப்படாத அதே இடத்தில் இப்போது இவ்வளவு மீன்கள் அகப்பட்டது எப்படி என்று அவர் திகைத்தார்.

வலையை அவரால் இழுக்க முடியவில்லை. இரண்டாவது படகும் சீமோனுக்கு உதவி செய்யச் சென்றது. அவர்களும் இழுத்தார்கள். முடியவில்லை. வலை கிழிந்து விடும் போலிருந்தது. அவர்கள் ஆங்காங்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவ நண்பர்களை உதவிக்கு அழைத்தார்கள். எல்லோருமாய்ச் சேர்ந்து வலையை இழுத்து அதிலுள்ள மீன்களைப் பொறுக்கி இரண்டு படகுகள் நிறைய நிரப்பினார்கள். இப்போது படகுகள் மூழ்கும் நிலையில் தடுமாறியது.

மீனவர்கள் அனைவரும் திகிலடைந்தனர். இத்தனை பெரிய மீன் கூட்டத்தை அவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திருந்ததேயில்லை.

அவர்கள் தட்டுத் தடுமாறி கரையில் வந்து சேர்ந்தார்கள். படகு கரையை நெருங்கியதும் சீமோன் படகிலிருந்து குதித்து இயேசுவை நோக்கி ஓடி வந்தார்.

‘ஆண்டவரே.. நான் பாவி. என்னை விட்டுப் போய்விடும்.’ என்று அவருடைய கால்களில் விழுந்து அரற்றினார்.

அவருடன் இருந்த யாக்கோபு, யோவான் ஆகியோரும் இந்த அதிசயச் செயலைக் கண்டு மெய்மறந்து நின்றார்கள்.

இயேசு சீமோனை தூக்கினார்.

‘சீமோனே. மீன்களைப் பிடித்ததற்கா இப்படிச் சொல்கிறாய். என்னுடன் வா. நான் உன்னை மனிதர்களைப் பிடிப்பவன் ஆக்குவேன்’ என்றார்.

அவர்களிடம் மறுத்துப் பேச வார்த்தைகள் இருக்கவில்லை. அனைவரும் படகுகளையும், வலைகளையும், பிடித்த மீன்களையும் அங்கேயே விட்டு விட்டு இயேசுவின் பின்னே சென்றனர். அதன்பின் அந்த சீடர்கள் இயேசுவை விட்டு விலகவில்லை. இயேசுவின் கடைசி நாட்கள் வரை இயேசுவுடனே இருந்தார்கள். அவர்கள் மீன்களைப் பிடிப்பதல்ல, மனிதர்களின் மனங்களில் இயேசுவின் போதனைகளைக் கொண்டு சேர்ப்பதே முக்கியம் என்பதை மனதுக்குள் குறித்துக் கொண்டார்கள்.

இயேசுவோடு கூடவே நடந்து அவருடைய நோய் தீர்க்கும் பணிகளையும், போதனைகளையும் நேரடி அனுபவம் வாயிலாக அறிந்து கொண்டிருந்த சீடர்கள் நாளுக்கு நாள் அவர் மேல் கொண்டிருந்த ஈடுபாட்டை அதிகரித்துக் கொண்டார்கள். ஒவ்வோர் ஊராகச் சென்று பேசுவதும், மக்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்கவேண்டும் என்று அறிவுரை வழங்குவதும் மட்டுமல்லாமல் தன்னைச் சந்திக்க வரும் நோயாளிகளைக் குணமாக்குவதும், பேய்பிடித்தவர்களின் பேய்களை ஓட்டுவதும் கூட அவருடைய பணியாக இருந்தது. சீடர்களுக்கு இயேசுவின் பணி சற்று கர்வத்தைத் தருவதாகவும் இருந்தது. எங்கே சென்றாலும் அவர்களுக்கும் மரியாதை கிடைத்தது. இயேசு நோய்களைத் தீர்க்கும் போதெல்லாம் இவர்களும் சற்று பெருமைப்பட்டார்கள்.

இயேசு அடிக்கடி அவர்களை விட்டு விட்டு மலைப்பகுதிகளுக்குச் சென்று செபிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய பணியிலிருந்து விலகிவிடாதிருக்கவும், மக்களிடம் தனக்குக் கிடைத்திருக்கும் புகழ் என்னும் போதை தன்னுடைய இலட்சிய வாழ்வுக்குக் குறுக்கே இடர்கல்லாக இருந்து விடாதபடிக்கும் தன்னுடைய மனதை செம்மைப்படுத்தவும், வானகத் தந்தையிடம் தன்னுடைய உறவை பலப்படுத்திக் கொள்ளவுமே இயேசு செபத்தில் ஈடுபட்டார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s