Posted in Life of JESUS

இயேசு வரலாறு 3 : பாதகர்கள் கையில் பாலகர்கள்

Image result for Herod kills kidsஇதற்கிடையில் ஏரோது மன்னன் ஞானிகளின் வருகைக்காகக் காத்திருந்தான். நாட்கள் கடந்து கொண்டேயிருந்தன. ஞானிகளைக் காணவில்லை !

ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டனர் என்பது ஏரோதுக்கு விளங்கியது. தன்னுடைய ஆணையை மீறி ஞானிகள் செயல்பட்ட கோபமும், தன்னுடைய அரசாட்சிக்கு ஆபத்தாக ஒரு அரசன் தோன்றியிருக்கும் கோபமும் அவருக்குள் பெரும் எரிமலையாக உடைந்து சிதறியது. குழந்தையைக் கொல்லவேண்டும் என்ற தன்னுடைய திட்டம் தோல்வியில் முடியுமோ என்னும் கவலை அவனை ஆட்கொண்டது. ஆனால் எப்படியும் குழந்தையைக் கொன்றே ஆகவேண்டும் என்னும் வெறி அவனுக்குள் ஊறியது. யார் அந்தக் குழந்தை ? அவன் எப்படி இருப்பான் ? அவனுடைய பெற்றோர் யார் ? எதுவுமே ஏரோதுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனிடம் இருக்கும் ஒரே ஒரு செய்தி, அந்தக் குழந்தை பெத்லேகேமில் இருக்கிறது !. ஆனால் பெத்லகேம் நகரமோ ஆட்களின் கூட்டத்தால் பிதுங்கி வழிகிறது. அங்கே எப்படிக் கண்டு பிடிப்பது குழந்தையை ?

அவனுடைய மனதுக்குள் ஒரு கொடூரமான எண்ணம் பிறந்தது. எந்தக் குழந்தை என்று கண்டுபிடிப்பது தானே கஷ்டம். எந்தக் குழந்தையுமே உயிரோடு இல்லாவிட்டால் அந்தக் குழந்தையும் இறந்து போகும் அல்லவா ? அப்படியானால் எல்லா ஆண்குழந்தைகளையும் கொல்வதற்குச் சட்டம் இயற்றலாமா ? அப்படி ஒரு கொடூரமான சட்டம் இயற்றினால் சீசரின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமா ? ஏரோது பலவாறாகச் சிந்தித்தான். ஆனால் அவனுடைய மனதில், தன்னுடைய சிம்மாசனத்துக்கு எங்கிருந்தும் எந்த விதத்திலும் போட்டி வந்து விடக் கூடாது. தான் இறக்கும் வரை மன்னனாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் பாறைபோல நின்றது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு உத்தரவிட்டான்.

‘உடனே சென்று பெத்லேகேமிலும் அதன் சுற்றுப் புறங்களிலுள்ள ஊர்களிலும் இருக்கும் இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று விடுங்கள்’ மன்னனின் ஆணை கோபத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.

மன்னனின் பணியாளர்கள் மறுபேச்சுப் பேசி பழக்கமில்லாதவர்கள். ஆணையைப் பொறுக்கிக் கொண்டு பெத்லேகேமிற்குச் சென்றார்கள்.

‘இங்கே உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளையெல்லாம் கொல்லவேண்டும் என்பது மன்னனின் ஆணை !’ வீரர்கள் சொல்ல மக்கள் அதிர்ந்தார்கள்.

‘என்ன ? குழந்தைகளைக் கொல்வதா ?’

‘பாலகர்களைப் படுகொலை செய்ய மன்னன் ஆணையிட்டிருக்கிறானா ?’

‘இருக்காது. கூடாது….ஐயோ… வேண்டாம்..’ மக்கள் அலறினார்கள். தாய்மார்கள் கதறினார்கள். ஆனால் மன்னனின் வீரர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் நகருக்குள் நுழைந்தார்கள்.

சிலருடைய கைகளிலே பளபளப்பான வாள். சிலருடைய கைகளிலே கூர்மையான ஈட்டி. அவர்கள் பெத்லேகேமின் வீடுகளுக்குள் நுழைந்தார்கள். அங்கே தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை வாளினால் வெட்டித் துண்டாக்கினார்கள்.

அன்னையரின் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இழுத்து தாய்மாரின் முன்னிலையிலேயே வெட்டித் துண்டாக்கினார்கள். பால் குடித்துக் கொண்டிருந்த பச்சைக் குழந்தைகளும் படுகொலைக்குத் தப்பவில்லை. தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் மார்பை கூர் ஈட்டிகள் குத்திப் பிளந்தன. ஈவு இரக்கமில்லாத படுகொலை நிகழ்ச்சி ஒன்று அங்கே அரங்கேறியது.

தங்கள் குழந்தைகள் தங்கள் கண் முன்னாலேயே படுகொலை செய்யப்படுவதைக் கண்ட பெற்றோர் கதறினர். எதிர்க்கும் வலுவில்லாத அவர்களுடைய அலறல் ஒலிகளால் பெத்லகேம் நிரம்பியது. தெருக்களும் வீடுகளும் மழலைகளின் இரத்தத்தால் நனைந்தது.

பெத்லேகேமின் குழந்தைகள் எல்லாம் மடிந்தபின் அடுத்திருந்த ஊர்களுக்கும் வீரர்கள் சென்றார்கள். அங்கும் வீரர்கள் படுகொலையை நிகழ்த்தினார்கள். எல்லா குழந்தைகளும் கொல்லப்பட்டபின் வீரர்கள் மன்னனிடம் சென்றார்கள்.

‘அரசே… உமது கட்டளை நிறைவேற்றப் பட்டது. பெத்லேகேமிலும் அதன் சுற்றுப் புற ஊர்களிலும் குழந்தைகளோ, சிறுவர்களோ யாருமே இப்போது உயிருடன் இல்லை’

‘யாரும் தப்பவில்லையே ?’

‘இல்லை அரசே. ஒரு உயிர் கூட தப்பவில்லை’ வீரர்கள் உறுதிபடச் சொன்னார்கள்.

ஏரோது மன்னன் மகிழ்ந்தான். தன்னுடைய அரசுக்கு எதிராகத் தோன்றிய பாலகன் இறந்து விட்டான் என்று களிப்படைந்தான். ஞானிகள் சொன்ன பாலகன் மடிந்து போயிருப்பான் என்று மகிழ்ந்தான். தன்னுடைய அரசுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தீர்ந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

அவன் கொல்லத் தேடிய இயேசுவோ எகிப்து நாட்டில் மரியாவின் மடியில் அமைதியாகத் துயின்று கொண்டிருந்தார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...