Posted in Life of JESUS

இயேசு வரலாறு 4 : இயேசுவின் மழலைக் காலம்

Image result for Simeon temple jesusயூதர்களுக்கு ஒரு வழக்கம் இருந்தது. அதன்படி, ஆண்குழந்தை பிறந்தால் பிறந்த எட்டாவது நாள் அவனை ஆலயத்துக்குக் கொண்டு சென்று விருத்த சேதனம் செய்ய வேண்டும். தலைப்பேறான மகன் என்றால் அவனை ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்க வேண்டும். அப்படி அற்பணிப்பதன் அடையாளமாக ஒரு ஜோடி மாடப் புறாக்களையோ, ஒரு ஜோடி புறாக் குஞ்சுகளையோ பலியிடவேண்டும். இயேசுவும் தலைப்பேறான மகன் என்பதால் அவருக்கும் இந்த சடங்குகள் செய்யவேண்டியிருந்தது. எனவே மரியாவும், யோசேப்பும் இயேசு பிறந்த எட்டாவது நாளில் குழந்தையை எடுத்துக் கொண்டு எருசலேம் தேவாலயத்துக்குச் சென்றார்கள்.

எருசலேமில் சிமியோன் என்றொருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு இறைபக்தர். ஆண்டவருடைய மெசியாவைக் காண்பதற்கு முன்னால் ( மெசியா என்றால் அனுப்பப்பட்டவர் என்பது பொருள் ) சாவதில்லை என்று கடவுளின் ஆவியால் வரம் அருளப்பட்டிருந்தவர் அவர். இயேசு ஆலயத்துக்கு வந்த அதே நாளில் சிமியோனின் உள்ளத்துக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
‘சிமியோன் எழுந்து எருசலேம் தேவாலயத்துக்குப் போ… உனக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. தாமதிக்காதே… போ.. ஆலயத்துக்குப் போ…’

சிமியோன் தன் உள்ளத்துக்குள் ஒலிக்கும் குரலுக்கான காரணத்தை அறியாமல் குழம்பினார். ஆனாலும் ஆலயத்துக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டு சிமியோன் எருசலேம் தேவாலயத்துக்கு விரைந்தார்.

மரியா குழந்தையைக் கையில் ஏந்தியபடி எருசலேம் தேவாலயத்துக்குள் நுழைந்தார். ஆலயத்தின் உள்ளே சிமியோன் அமர்ந்திருந்தார். தனது உள்ளத்தில் ஒலித்த குரலுக்கான காரணத்தை அறியவேண்டுமென்று அவருடைய மனம் துடித்துக் கொண்டிருந்தது. தனக்குக் கடவுள் காட்டப் போகும் அதிசயம் என்னவாக இருக்கும் என்று அவருடைய உள்ளம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. மரியா ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் சிமியோனின் கண்கள் பிரகாசமடைந்தன. அவருடைய கையில் இருந்த இயேசுவைக் கண்டதும் அவருக்குள் மீண்டும் அதே குரல் ஒலித்தது.
‘உனக்கு நான் வரமளித்திருந்தேன். இப்போது கடவுளை உன் கண்கள் கண்டு கொண்டன !’

உள்ளத்துக்குள் ஒலித்த கடவுளின் குரலைக் கேட்டதும் சிமியோன் துள்ளி எழுந்து குழந்தையை நோக்கி ஓடினார். குழந்தை இயேசுவைக் கைகளில் அள்ளி எடுத்தார்.

முன்பின் தெரியாத ஒரு நபர் ஓடி வந்து தன் கைகளில் இருந்த குழந்தையை அள்ளி எடுத்ததைக் கண்ட மரியா திகைத்தார். அதற்குள் சிமியோன் குழந்தையை கைகளில் ஏந்தி,
‘கடவுளே உம்முடைய வார்த்தையின் படி உமது அடியானாகிய என்னை இப்போது அமைதியுடன் செல்ல அனுமதித்து விட்டீர். இதோ… இந்தக் குழந்தையே கடவுளின் ஒளி. இஸ்ரயேல் மக்களின் இருள் அகற்றும் ஒளி. மக்கள் அனைவரின் மீட்புக்காகவும் நீர் அனுப்பிய உம் மகனை என் கண்கள் கண்டு கொண்டன. இதோ இந்தக் குழந்தை இஸ்ரயேல் மக்கள் பலருடைய வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக இருப்பான்’ என்றார்.

மரியாவும், யோசேப்பும் சிமியோனின் வார்த்தைகளைக் கேட்டு பரவசமடைந்தார்கள். மரியாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. சிமியோன் மரியாவின் பக்கம் திரும்பி
‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்’ என்றார்.

மரியாவுக்கு அந்த வார்த்தைகளின் பொருள் விளங்கவில்லை. அமைதியாய் நின்றார்.

அங்கு அன்னா என்றொரு பெண் இறைவாக்கினரும் இருந்தார். எண்பத்து நான்கு வயதான அவர் எருசலேம் தேவாலயத்திலேயே அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்தார். அவரும் குழந்தை இயேசுவைக் கண்டதும் பரவசமடைந்தார்.

‘இதோ.. இந்தக் குழந்தை தான் நம்முடைய மீட்பர். இவர் கடவுளின் மகன். இவரால் தான் மனுக்குலம் மீட்படையப் போகிறது’ என்று அனைவரிடமும் இயேசுவைப் பற்றிப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.

மரியாவும், யோசேப்பும் நிகழும் அனைத்தையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின் யூத மரபுப்படி பாலன் இயேசுவுக்குச் செய்ய வேண்டிய விருத்தசேதனத்தை நிறைவேற்றி, ஆலயத்தில் பலிகளை இட்டபின் கலிலேயாவில் இருந்த தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பினார்கள்.

அவர்களுடைய சிந்தனைகள் முழுவதும் சிமியோனையும், அன்னாவையுமே சுற்றிச் சுற்றி வந்தன. அவர்கள் குழந்தை இயேசுவை பாசம் வழிய, பக்தியுடன் பார்த்தார்கள்.

எகிப்தில் இயேசுவும் குடும்பமும் கிலியோபாலிஸ் என்னுமிடத்தில் தங்கியிருந்தது. அந் நகரத்திலிருந்து சுமார் பத்து மைல் தொலைவில் தான் பிரமிக்க வைக்கும் பிரமிடுகள் இருந்தன. இயேசுவின் மழலைக்காலம் எகிப்தியரின் பிரமாண்டமான கற் சிலைகளோடு கழிந்தது. தாயார் இயேசுவுக்கு மழலையிலேயே ஒரு போதனையை ஊட்டி வளர்த்தினாள். ‘நமது கடவுள் ஒருவரே’.

வருடங்கள் இரண்டு உருண்டோடின. ஏரோது மன்னன் நோயில் விழுந்தான். எத்தனையோ தாய்மாரின் அழுகை காரணமாய் இருந்திருக்கலாம், அல்லது அவனால் கொடூரமாக கொல்லப்பட்ட அவனுடைய உறவினர்களே காரணமாக இருக்கலாம், அல்லது அவனுடைய அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எழுந்த மக்களின் சாபம் காரணமாக இருக்கலாம். அவன் வலியினால் துடித்தான். உடலெங்கும் வீக்கம் காணப்பட்டது. நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான். தன்னுடைய சாவுக்காய் யாரும் சங்கடப் படப் போவதில்லை என்று அவனுக்குத் தோன்றியது. முப்பத்து ஏழு ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஏரோது மன்னனின் ஆட்சி அவனுடைய பரிதாபமான சாவுடன் முற்றுப் பெற்றது.

ஏரோதின் மரணத்துக்கு முன் அவன் உயில் ஒன்றை எழுதி வைத்திருந்தான். அதன்படி அவனுடைய ஒரு மகன் ஆர்கிலேயு யூதேயாவின் மன்னனாக முடிசூட்டப் பட வேண்டும். யூதேயா முழுவதுக்குமான பேரரசராக ஆர்க்கிலேயு முடிசூட்டப் பட்டாலும் கலிலேயா அவனுடைய கட்டுப்பாட்டுக்கு வராது, அது ஏரோதின் இன்னொரு மகனான ஏரோது அந்திபாஸ் ஆளுகைக்குள் வந்தது. ஏரோதின் சாவுச் செய்தியை அறிந்த யோசேப்பும் மரியாவும், குழந்தை இயேசுவுடன் நாடு திரும்ப முடிவெடுத்தனர். ஆர்க்கிலேயு ஆளும் பகுதிகளில் வாழ்வதைத் தவிர்க்க விரும்பிய யோசேப்பு எருசலேமில் தங்கலாம் என்னும் தன்னுடைய எண்ணத்தை விட்டு விட்டு மீண்டும் கலிலேயாவுக்கே திரும்பினார். தச்சு வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையைத் தொடரலாம் என்று முடிவெடுத்து நாசரேத்துக்கே திரும்பினார். இரண்டு வருட ஆச்சரியமும், பயமும், நாடோடித்தனமானதுமான வாழ்க்கை முடிவுக்கு வர யோசேப்பு சற்று மன நிம்மதியுடன் தன்னுடைய தச்சு வேலையைத் துவங்கினார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...