Posted in Life of JESUS

இயேசு வரலாறு 1 : இயேசுவின் பிறப்பு

 Image result for Birth of Jesus
ரோமப் பேரரசிற்கு உட்பட்ட கலிலேயா நகரில் இருந்தது நாசரேத்து என்னும் ஓர் கிராமம். மலைகளின் பின்னால் மறைக்கப்பட்டிருந்த நாசரேத் நகரம் வணிகர்கள் கடந்து செல்லும் ஒரு நகரமாக இருந்ததால் ஒட்டகங்களும், வியாபாரிகளின் சத்தமும் அந்த நகரத்தை எப்போதுமே சூழ்ந்திருந்தன.

ரோம உளவாளிகள் வணிகர்களின் வடிவில் நாசரேத் நகர் இருக்கும் கலிலேயா, எருசலேம் நகரை உள்ளடக்கிய யூதேயா போன்ற ரோமப் பேரரசுக்கு உட்பட்ட நகரங்களில் உலவிக் கொண்டிருப்பது வழக்கம். அந்த பயத்தின் காரணமாக ரோமப் பேரரசருக்கு எதிராக எந்தக் குரல்களும் அங்கே எழுவதில்லை. மக்கள் தங்கள் வேலை உண்டு தாங்கள் உண்டு என்னும் மனநிலையில் தங்களுடைய கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்தார்கள். கி.மு 1009ல் தாவீது மன்னன், பின் கி.மு 971 இல் அவருடைய மகனான ஞானத்தின் இருப்பிடம் என்று புகழப்படும் சாலமோன் மன்னன் போன்றவர்கள் கொடிகட்டிப் பறந்த சுதந்திர மண் இப்போது ரோமப் பேரரசின் கீழ் வந்து அகஸ்து சீசர் என்னும் மன்னனுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்தது. கடவுளின் வழியை விட்டு மக்கள் விலகிப் போகும் போதெல்லாம் அடிமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்னும் உறுதியான எண்ணம் யூத மக்களிடம் இருந்தது.

கலிலேயா கிராமம் உழைப்பாளிகள் நிறைந்த கிராமம். அந்த கிராமத்தில் தச்சு வேலை செய்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். மரப்புழுதி சூழ்ந்திருந்த அவன் கடையில் மர சாமான்கள் புதிது புதிதாக பிறந்து கொண்டிருந்தன. உழைப்புக்குச் சற்றும் சலிக்காத அவன் தன்னுடைய வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். தன் வாழ்க்கைக்காக தானே உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருந்தான் அவன். அவனுடைய பெயர் யோசேப்பு. யூத ஏட்டுச் சுருள்களை வாசிப்பதும், தன்னுடைய கடமையைச் செய்வதுமாக சென்று கொண்டிருந்தது அவனுடைய வாழ்க்கை. எதற்கும் அதிர்ந்து பேசாத, எதிர்ப்பைக் கூட மென்மையாகக் காட்டும் மனம் படைத்தவனாக இருந்தான் யோசேப்பு.

அவருக்கு திருமண ஒப்பந்தம் முடிந்திருந்தது. மணப்பெண்ணின் பெயர் மரியா. அழகிலும், அமைதியிலும் மரியா தனித்துவத்துடன் இருந்தாள். தனக்கு மனைவியாக ஒரு அழகான, கலாச்சார மீறல் இல்லாத ஒரு பெண் அமையப்போவதை நினைத்து யோசேப்பு மிகவும் மகிழ்ந்தார். தன்னுடைய உழைப்பை அதிகமாகச் செலுத்தி தன் மணவாழ்க்கைக்காக அதிகம் பொருளீட்டத் துவங்கினாள். மரியாவும், யோசேப்பைக் கணவனாக அடைவதில் பெருமையடைந்தாள். தாவீது மன்னனின் பரம்பரையில் வந்த யோசேப்பின் பூர்வீகமும், அவருடைய கடவுள் நம்பிக்கையும், கடினமாக உழைக்கும் போக்கும், மென்மையான மனப் பாங்கும் மரியாவின் உள்ளத்தில் யோசேப்பைக் குறித்த கனவுகளை கிளறிவிட்டிருந்தன.

அந்த ஆனந்தமான சூழலில் ஒரு சூறாவளியாக வந்தது தேவதூதன் ஒருவரின் காட்சி. மரியா தன்னுடைய வீட்டில் அமர்ந்திருக்கையில் திடீரென அவளுக்கு முன்னால் வந்து நின்றான் அவன். ஒளிவெள்ளம் தன்னைச் சூழ ஒரு தேவதூதன் தன் முன்னால் வந்து நிற்பதைப் பார்த்த மரியா திகைத்தாள். வந்திருப்பது தேவதூதன் என்பதை அறிந்ததும் அவளுடைய உள்ளம் பதை பதைத்தது. ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ என்று அஞ்சி நடுங்கினாள். படித்தும் கேட்டும் மட்டுமே பழக்கமான தேவதூதன் ஒருவனை நேரில் பார்ப்பது எவ்வளவு திகிலூட்டக் கூடியது என்பதை மரியா அன்று உணர்ந்தாள்.

‘அருள் நிறைத்தவளே வாழ்க’ தூதன் சொன்னான். மரியா குழம்பினாள். நான் அருள் நிறைந்தவளா ? சாதாரணமான குடும்பத்தில் உள்ளவள் நான். நான் எப்படி அருள் நிறைந்தவளாக முடியும் ? மரியாவின் மனதில் பயம் கேள்விகளை விதைத்தது.

‘கடவுள் உம்முடன் இருக்கிறார். நீர் பெண்களுக்குள் மகிமையானவர்’ தூதன் மீண்டும் சொல்ல மரியா குழப்பத்தின் உச்சிக்குத் தாவினாள். என்ன சொல்கிறார் தூதர். நான் பெண்களுக்குள் பாக்கியம் செய்தவளா ? அப்படி என்ன பாக்கியம் செய்தேன் ? ஒரு வேளை யோசேப்பைத் திருமணம் செய்யப்போவதைத் தான் குறிப்பிடுகிறாரோ ? மரியாவின் மனதில் கேள்விகள் நிற்காமல் வழிந்தன.

தேவதூதன் அவளை ஆறுதல் படுத்தினான். ‘மரியே அஞ்சவேண்டாம். நீர் கடவுளின் அருளைப் பெற்றவர். நான் ஒரு ஆனந்தச் செய்தியை சொல்லத் தான் வந்திருக்கிறேன். நீர் ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்று பெயரிடுங்கள். அவர் முடிவில்லாத ஒரு ஆட்சியைத் தருவார். மன்னர் தாவீதின் அரியணை இனிமேல் அவருக்குச் சொந்தமாகும்’ தேவதூதன் சொல்ல மரியா வியந்தாள்.

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே. இப்போதுதான் மண ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதற்குள் எப்படி எனக்குக் குழந்தை பிறக்கும் ? மரியாள் கேட்டாள்.

நீர் கருத்தாங்குவது கடவுளின் ஆவியால் தான். தூய ஆவி உம் மேல் இறங்கும், நீர் கருத்தரிப்பீர். தூதன் சொல்ல மரியாள் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தாள். மண ஒப்பந்தமாகி இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு செய்தி வருகிறதே. கடவுளின் ஆவியால் தான் கர்ப்பமானேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா ? என்று மரியாவின் மனதில் ஏராளம் கேள்விகள். ஆனாலும் சிறுவயது முதலே இறைபக்தியில் வளர்ந்த மரியாவால் எதையும் மறுத்துச் சொல்ல முடியவில்லை. தூதனின் செய்தியை ஏற்றுக் கொண்டாள்.

மரியா கர்பமாய் இருக்கும் செய்தி யோசேப்பின் காதுகளை எட்டியது. யோசேப்பு அதிர்ந்தார். அன்பும், மரியாதையும் வைத்திருந்த மரியா தனக்குத் துரோகம் செய்து விட்டாளே என்று மனதுக்குள் எரிச்சலும், ஆத்திரமும், கோபமும் கொண்டார். இவ்வளவு அன்பு வைத்திருக்கும் தன்னை மரியா எப்படி துரோகம் செய்யலாம், தன்னிடம் எதுவும் சொல்லாமல் இப்படி ஒரு தவறைச் செய்திருக்கிறாரே என்று யோசேப்பு உள்ளம் உடைந்தார். மரியாவைத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்தார். ஆனாலும் மரியா கர்ப்பமாய் இருக்கும் செய்தியை ஊருக்குத் தெரியப்படுத்த அவருடைய மென்மையான மனது இடம் தரவில்லை. எனவே காதும் காதும் வைத்தது போல திருமண ஒப்பந்தத்தை உடைத்துப் போடவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

மனதுக்குள் கவலை வந்து அமர்ந்து கொள்ள தூக்கமில்லாமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் யோசேப்பு. எப்போது தூங்கிப் போனார் என்று தெரியாது அவருடைய தூக்கத்தில் வந்து நின்றார் அதே தேவதூதன். தூதன் யோசேப்பின் கனவில் புன்னகைத்தான்.

யோசேப்பு வருத்தப் பட வேண்டாம்.மரியா கர்ப்பமாய் இருப்பது மரியா செய்த தவறல்ல, அது கடவுளின் வரம். கடவுளின் மகனைத் தான் அவர் ஈன்றெடுக்கப் போகிறார். எனவே நீர் வருத்தப்படாமல் மரியாவை மணமுடிக்கலாம்.

திடுக்கிட்டு விழித்த யோசேப்பின் காதுகளின் தேவதூதனின் குரல் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இயல்பிலேயே இளகிய மனமும், இறைபக்தியும் கொண்ட யோசேப்பு தூதனின் சொல்லை ஏற்றுக்கொண்டார்.

ரோம் பேரரசை ஆட்சி செய்து கொண்டிருந்த அகஸ்து சீசர் ஒரு கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவருடைய பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதுவும் அவர்கள் வசிக்கும் இடத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய இயலாது அவர்களுடைய பூர்வீக கோத்திரம் எங்கேயோ அங்கே சென்று தான் அவர்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். மக்கள் தொகையைக் கணக்கிட்டு தனக்குச் சேரவேண்டிய வரியைத் தராமல் ஏமாற்றும் மக்களைக் கண்டறிய வேண்டும் என்னும் நோக்கமே அவரிடம் இருந்ததாக மக்கள் உள்ளுக்குள் கொதிப்படைந்தார்கள். ஆனாலும் பேரரசிடமிருந்து நேரடியாகவே வந்த அந்த அரசாணையை யாரும் மீறத் துணியவில்லை. பொதுவாக சிற்றரசர்களிடமிருந்தே அரசாணைகள் வரும். அப்படிப் பார்த்தால் அப்போது அங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த ஏரோதிடமிருந்தே கட்டளை பிறந்திருக்க வேண்டும். ஏரோதை அகஸ்து சீசர் நம்பவில்லையா ? அல்லது இந்தக் கட்டளை வீரியத்துடன் பரவ வேண்டுமென்று நினைத்தாரா தெரியவில்லை. கட்டளை சீசரிடமிருந்தே வந்தது.

மரியாவுக்கு அப்போது நிறைமாதம். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறந்து விடக் கூடும் என்னும் நிலையில் இருந்தார். மன்னனின் கட்டளையை மீறவும் முடியாமல், எல்லோருமே செல்லவேண்டும் என்னும் கட்டாயத்தினால் மரியாவை வீட்டில் விட்டுச் செல்லவும் முடியாமல் யோசேப்பு தவித்தார். யோசேப்பும் மரியாவும் யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்னும் இடத்துக்குச் செல்ல வேண்டி இருந்தது.

பெத்லகேம் கலிலேயாவிலிருந்து சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. பயணம் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் நீடிக்கலாம். நடந்தோ கழுதையின் மீதமர்ந்தோ தான் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை. ஊர் பரபரப்பாய் இருந்தது. மக்கள் குடும்பம் குடும்பமாக உணவுப் பொட்டலங்களுடனும், கூடாரமடிக்கத் தேவையான பொருட்களுடனும் பெத்லேகேமுக்குச் செல்லத் துவங்கியிருந்தார்கள். யோசேப்பும் ஒரு கழுதையை ஏற்பாடு செய்து அதில் மரியாவை அமரவைத்து பெத்லேகேமை நோக்கிய பயணத்தைத் துவங்கினார்.

மூன்று நாள் பயணத்தின் முடிவில் அவர்கள் பெத்லேகேமை அடைந்தனர். பெத்லகேம் நெரிசல் காடாய் மாறியிருந்தது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். பல்வேறு இடங்களில் தங்கியிருந்த மக்கள் அனைவரையும் மன்னனின் ஆணை பெத்லேகேமுக்கு அழைத்து வந்திருந்தது. மக்கள் வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. யோசேப்பு விடுதி ஒன்றை அணுகினார். விடுதிகளின் படிகளிலும் மக்கள் அமர்ந்திருந்தார்கள். விடுதிக் காப்பாளனை அணுகிய யோசேப்பு தனக்கு ஒரு படுக்கை வசதி வேண்டுமென்று வினவினார். விடுதிக் காப்பாளன் சிரித்தான். பெத்லகேம் நகரில் எந்தப் படுக்கையும் காலியாக இல்லை. எப்போதோ நிறைந்து விட்டது என்றான். யோசேப்பு திகைத்தார். மரியாவோ நிறை மாத கர்ப்பத்தில், விடுதிகளோ நிறைந்து வழியும் நிலையில். யோசேப்பு கெஞ்சினார். எப்படியேனும் மரியாவுக்கு ஒரு இடம் அளிக்கவேண்டும் என்று விண்ணப்பம் வைத்தார். மரியாவின் கண்களில் பேறுகால வலி மிதந்தது. மரியா எப்போது வேண்டுமானாலும் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் நிலையில் இருப்பதைக் கண்ட விடுதிக் காப்பாளனின் மனைவி மனது வைத்தார்.

‘ஒரு இடம் இருக்கிறது அங்கே உங்களால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை’

‘எந்த இடமானாலும் பரவாயில்லை. மரியாவுக்குத் தேவையான தனிமையும், ஓய்வும் கிடைத்தால் போதும்’ யோசேப்பு சொன்னார்.

‘விடுதியின் பின்னால் ஒரு தொழுவம் இருக்கிறது. தங்கிக் கொள்ளுங்கள்.’

‘தொழுவமா ?’ யோசேப்பு வினாடி நேரம் திகைத்தார். அப்போதைய நிலையில் ஏதேனும் ஒரு இடம் அவருக்குத் தேவையாய் இருந்தது. ஒருவேளை அந்த இடம் வேண்டாமென்று சொன்னால் அதை ஆக்கிரமிப்பதற்கும் தயாராய் இருந்தது முண்டியடித்துக் கொண்டிருந்த கூட்டம்.

‘மிக்க நன்றி’ மரியா நன்றி சொன்னாள்.

யோசேப்பும் மரியாவும் தொழுவத்தை நோக்கி நடந்தார்கள்.

தொழுவம் மாடுகளாலும், அவற்றின் கழிவுகளாலும் நிரம்பியிருந்தது.

இரவு.

ஓய்வெடுப்பதற்காக மக்கள் விடுதிகளின் அறைகளிலும், கூடாரங்களின் உள்ளேயும் புகுந்து வெகுநேரமாகி இருந்தது. அந்த இரவில், தொழுவத்தில் கால்நடைகள் கண்ணயர்ந்திருந்த வேளையில் மரியா குழந்தையைப் பெற்றெடுத்தாள். மரியா தாயானாள். குழந்தையைக் கிடத்துவதற்கும் அந்தத் தொழுவத்தில் நல்ல இடம் இருக்கவில்லை. இருந்த துணிகளில் குழந்தையைப் பொதிந்து அவர்கள் தீவனத் தொட்டியில் கிடத்தினார்கள். வீதிகளும், விடுதிகளும் இயேசுவின் பிறப்பை அறியாமல் சலசலத்துக் கொண்டிருக்க,

வரலாற்று நாயகன் இயேசு வைக்கோல் மீதில் துயின்றார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...