Posted in Articles, Christianity, Desopakari

மாற்றுத் திறனாளிகளை மாண்புடன் ஏற்போம்

கேரி டென் பூம், நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாமில் 1892ம் ஆண்டு பிறந்தவர். இரண்டாம் உலகப் போரின் காலத்தில் நாசிகளின் கோரப் பிடியிலிருந்து யூதர்களை ரகசியமாய்த் தப்புவிக்கும் பணியைச் செய்தவர்.  அதற்காக பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர். சிறையில் மரணத்தின் விளிம்புவரை போனவர். அவரது குடும்பம் முழுவதையுமே அதற்காக இழந்தவர். அவரது “ஹைடிங் பிளேஸ்” நாவலில் அதைப் பற்றி மிக அழகாக, விரிவாக, வலியுடன் எழுதியிருப்பார். 

“இயேசு ஒரு யூதர். யூதர்கள் இறைவனின் மக்கள். எனவே நான் யூதர்களை காப்பாற்றுவேன்” என்பதே அவருடைய நிலைப்பாடாய் இருந்தது. அவருடைய வீட்டில் மனவளர்ச்சி குன்றிய ஏராளமானோரைப் பராமரித்தும் வந்தார். 

ஜெர்மானியர்களோ சகட்டு மேனிக்கு யூதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக மன வளர்ச்சி குன்றியவர்களைக் கண்டால் உடனடியாக அழித்துக் கொண்டிருந்தார்கள். 

ஒரு முறை ஜெர்மானிய படைவீரன் ஒருவன் கேரி டென் பூமின் வீட்டுக்குள் நுழைந்து பரிசோதித்தான். அவர்கள் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளைப் பராமரிக்கும் விஷயத்தை அறிந்து கொண்டான். கடும் கோபமடைந்து, “ஏன் இவர்களையெல்லாம் பராமரிக்கிறாய் ? ஆயிரம் மன வளர்ச்சி குன்றியவர்கள் சேர்ந்தால் ஒரு சாதாரண மனிதனுக்கு ஈடாகுமா ?” என்று கத்தினான். 

கேரி டென் பூம் அமைதியாக, “கடவுளின் பார்வையில் அவர்கள் மிகவும் விலையேறப்பட்டவர்கள். ஏன் ஒரு சாதாரண மனிதரை விடவோ, ஒரு படைவீரனை விடவோ அவர் அதிக மதிப்புடையவராய் இருக்கலாம்” என பதிலளித்தார். தனக்கு முன்னால் மரணம் சுண்டு விரலை நீட்டிக் கொண்டிருப்பதை அறிந்தும் மாற்றுத் திறனாளிகளை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. 

சமூகம் மாற்றுத் திறனாளிகளைப் பார்க்கும் பார்வைக்கும், சாதாரண மக்களைப் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மாற்றுத் திறனாளிகள் சாதாரண மனிதர்களை விடக் கீழானவர்களாக, பலவீனர்களாக, குடும்பங்களின் சாபங்களாக, நிராகரிப்பின் மிச்சங்களாகத் தான் பார்க்கப்படுகின்றனர். 

ஏதோ வெறுமனே சொல்லவில்லை, கடந்த 2017ம் ஆண்டின் புள்ளி விவரம் கூறும் செய்திகள் கண்ணீருடன் கவனிக்கத் தக்கவை. இரண்டு கோடியே அறுபத்தெட்டு இலட்சம் மக்கள் மாற்றுத் திறனானிகளாக இருக்கிறார்கள் என்கிறது அந்த புள்ளி விவரம். மாற்றுத் திறனாளிகளாய் இருக்கும் மக்களில் 41% பேர் திருமணம் செய்து கொள்வதில்லை என அதிர்ச்சியளிக்கிறது அந்த புள்ளிவிவரம்.

மாற்றுத் திறனாளிகளை சமூகம் அங்கீகரிக்கவில்லை, குடும்பங்கள் ஆதரிக்கவில்லை, மனித நேயம் அரவணைத்துக் கொள்ளவில்லை என்பதன் அப்பட்டமான வெளிப்பாடே இந்த புள்ளி விவரம். 

மாற்றுத் திறனாளிகளில் வெறும் 36 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாற்றுத் திறனாளிகளை நிறுவனங்கள் ஆதரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. வெறும் லாப நோக்கத்துக்காக இயங்குகின்ற தனியார் கார்ப்பரேட்கள் எப்போதுமே மாற்றுத் திறனாளிகளை அங்கீகரிப்பதில்லை. விளம்பரங்களுக்காக ஒரு சில நிறுவனங்கள் இவர்களுக்குக் கைகொடுத்து, புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன் சரி. 

கல்வியை எடுத்துக் கொண்டாலும் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை யாரும் ஆதரிப்பதில்லை. வெறும் 8.5 சதவீதம் பேர் மட்டுமே கல்லூரிக்குச் செல்கின்றனர் என்பது ஒரு வலிமிகுந்த உண்மையாகும். 

இத்தகைய சூழலில் கிறிஸ்தவர்களாகிய நாம் மாற்றுத் திறனாளிகளை ஏற்றுக் கொள்வதும், மாற்றுத் திறனாளிகளை அங்கீகரிப்பதும், அவர்களுடைய முன்னேற்றத்துக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டியதும் மிக மிக முக்கியமானதாகும். 

ஏன் மாற்றுத் திறனாளிகள் முக்கியமானவர்கள். 

  1. மாற்றுத் திறனாளிகளும் இறைவனின் சாயலானவர்கள். 

கடவுள் மனிதனைப் படைத்தபோது தமது சாயலாகப் படைத்தார். “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும்ஆளட்டும்” என்கிறது தொடக்க நூல். “நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்” என்கிறது 1 யோவான். இறைவனின் சாயலாக இருக்கும் மனிதர்களை நாம் நிராகரிப்பது இறைவனை நிராகரிப்பது போல. 

  1. மாற்றுத் திறனாளிகளை இகழ்தல் பாவம். 

மாற்றுத் திறனாளிகள் பாவத்தின் பிரதிநிதிகள் எனும் சிந்தனை பழைய காலத்தில் இருந்தது. அதனால் தான் மாற்றுத் திறனாளிகள் மக்களால் நிராகரிக்கப்பட்டனர். ஆலயங்களில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர். சமூக நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமல் விலக்கப்பட்டனர்.  பாவத்தையும் – உடல் குறைபாட்டையும் இணைத்துப் பார்த்த சமூகம் அவர்களை அப்படி நடத்தியது. இயேசு அந்த சிந்தனையை மாற்றுகிறார். மாற்றுத் திறனாளிகளை  அவமானப்படுத்துவதும்,அவர்களை கஷ்டப்படுத்துவதும் பாவம் என்கிறது பைபிள். “காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்! “ என்கிறது லேவியர் 19:14. 

  1. இறைவனின் மகிமை வெளிப்படும் இடம்

இயேசுவின் பாதையில் அமர்ந்திருந்த பார்வையிழந்தவரின் கதை நமக்கெல்லாம் தெரியும். ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்“எனும் விவிலிய பாகம், மாற்றுத் திறனாளிகளை இறைவனின் மகிமை வெளிப்படும் தளங்களாகக் காட்டுகிறது.  இறைவன் தனது மாட்சியை வெளிப்படுத்தும் இடமாக ஆலயம் உள்ளது. அதே போல அவரது மாட்சி மாற்றுத் திறனாளிகளில் வெளிப்படும் என இயேசு அவர்களை முக்கியமானவர்களாகக் காட்டுகிறார். 

  1. மாற்றுத் திறனாளிகள் இறைவனின் படைப்பு.

““மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே! “ என்கிறது விடுதலைப்பயணம் நூல். படைப்புக்கெல்லாம் தலையாய் இருக்கும் இறைவனே, மாற்றுத் திறனாளிகளையும் படைக்கிறார். அவர்களை ஏதோ ஒரு காரணத்துக்காக வைத்திருக்கிறார். அவர்கள் மூலமாக இறைவன் எதையோ செயல்படுத்தப் பார்க்கிறார். அதைக் கண்டு கொள்ள வேண்டியது மாற்றுத் திறனாளிகளின் பணி. அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது நமது பணி.

நிக் வாயிச்சஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டு கால்களும், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். இளமைக் காலம் முதலே தற்கொலை செய்ய வேண்டும் எனும் முனைப்பில் இருந்தவர். ஒரு கட்டத்தில் தன் மூலம் இறைவன் எதையோ செய்ய விரும்புகிறார் என்பதை உணர்ந்தார். அதன்பின் அவரது வாழ்க்கை மாறியது. இன்று உலகெங்கும் சென்று இயேசுவை பறைசாற்றியும், தன்னம்பிக்கை உரைகளை நிகழ்த்தியும் சமூக, ஆன்மிகப் பணி செய்கிறார். “உன்னைக் கடவுள் இப்படிப் படைத்ததற்கு ஏதோ ஒரு காரணம் உண்டு. அதைக் கண்டுபிடி.” என அவனுடைய பெற்றோர் அவனுக்குக் கொடுத்த ஊக்கம் ஒரு காரணம். அத்தகைய பணியை நாமும் செய்ய வேண்டும்.

  1. மாற்றுத் திறனாளிகள் சமமாய் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

தாவீது மன்னனுக்கும், மெபிபோசேத்துவுக்கும் இடையேயான நிகழ்வுகள் நமக்கெல்லாம் தெரிந்ததே. ஊனமுற்றிருந்த மெபிபோசேத்துவை யோனத்தான் மீது கொண்ட நட்பின் காரணமாக அரவணைத்துக் கொள்கிறார் தாவீது. அவரை பரிதாபத்துக்குரியவராக அவர் பார்க்கவில்லை. அவரை ஒரு எளியவனாகவோ, அவரை ஒரு இரக்கத்துக்குரியவனாகவோ பார்க்கவில்லை. அவரை தனது உணவு இருக்கையில் தன்னோடு சமமாய் உணவருந்துபவராகப் பார்க்கிறார். மாற்றுத் திறனாளிகளை நாம் சமமாய் மதிக்க வேண்டும் என்பதை நமக்குச் சொல்லும் ஒரு பாடமா அதைக் கொள்ளலாம்.

  1. மாற்றுத் திறனாளிகளை இறைவன் அழைக்கிறார்

மாற்றுத் திறனாளிகளை இறைவன் அரவணைக்கும் நிகழ்வுகள் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோசே திக்குவாயனாய் இருக்கிறார். அதை ஒத்துக் கொள்கிறார். ஆனால் இறைவன் அவரைக் கைவிடவில்லை. காரணம் அவர், “பலவீனத்திலே தனது பலத்தைப் புகுத்துபவராக” இருக்கிறார். யாக்கோபு ஒரு மாற்றுத் திறனாளியின் நிலைக்கு வந்த போது தான் இஸ்ரேலாக மாறுகிறார். இயேசு ஒரு உவமையில், விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் விருந்தை நிராகரிக்கப்பட்டபோது மாற்றுத் திறனாளிகளை அழைத்து வரும்படி சொல்கிறார். பார்த்திமேயுவை இயேசு அழைக்கிறார். வழக்கத்தை விட குள்ளமான சக்கேயு, இறைவனின் அழைப்பைப் பெறுகிறான். இவையெல்லாம் நாமும் மாற்றுத் திறனாளிகளை அரவணைக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்துகிறது.

  1. அவர்களும் இயேசுவின் சின்னஞ் சிறிய சகோதரரே.

“மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் “ என்கிறார் இயேசு. மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் உதவும் போதெல்லாம் இறைவனுக்கே உதவுகிறோம்.  மாற்றுத் திறனாளிகளை நிராகரிக்கும் போது இயேசுவையே நிராகரித்து நகர்கிறோம். இயேசு எனும் கொடியில் மாற்றுத் திறனாளிகளும் கிளைகளே. இயேசு எனும் உடலின் உறுப்புகளே. இயேசு அவர்களைப் பிரித்துப் பார்க்கவில்லை. மன ஊனம் உடையவராய் இருக்கக் கூடாது என்பதையே இறைவன் பார்க்கிறார். அறிவு சார்ந்த குறைபாடோ, உடல் குறைபாடோ இறைவனின் பார்வையில் விலக்கப்படவில்லை. 

  1. மாற்றுத்திறன் நிலை தற்காலிகமானதே

விண்ணகத்தில் குறைகள் என்பதே இல்லை. அங்கே மாற்றுத் திறனாளிகள் இருப்பதில்லை. அங்கே அனைவரும் சமமாய் இருப்பார்கள். இங்கே நாம் நிராகரிப்பவர்களெல்லாம் அங்கே அக்களிப்புடன் ஆடிப் பாடுவார்கள். “அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர் “ என்கிறது ஏசாயா நூல். இந்த தற்காலிக வாழ்க்கையில் நம்மிடையே உலவுகின்ற மாற்றுத் திறனாளிகள், விண்ணக வாழ்வில் நம்மைப் பார்த்து புன்னகைக்கும் போது நம் இருதயம் குத்தப்படாமல் இருக்க அவர்களை நான் இப்போதே நேசிப்போம்.

  1. மாற்றுத் திறனாளுக்கும் நற்செய்தி அறிவிக்கப்படும்

இயேசு உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கச் சொன்னார். எல்லா இனத்தாரையும் சீடராக்கச் சொன்னார். அவர் ஆணென்றும் பெண்ணென்றும் பார்க்கச் சொல்லவில்லை. அடிமை என்றும் உரிமைக் குடிமகனென்றும் பார்க்கச் சொல்லவில்லை. மாற்றுத் திறனாளியென்றும், சாதாரண மனிதன் என்றும் பார்க்கச் சொல்லவில்லை. எல்லோரும் இறைவனின் பிள்ளைகள். எல்லோரையும் இறைவன் எதிர்பார்க்கிறார். நாமும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  1. மாற்றுத் திறனாளிகள் நமது சுயபரிசோதனைக்கானவர்கள்.

நாம் ஆன்மிகப் பயணத்தில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை  மாற்றுத் திறனாளிகளை நாம் நடத்தும் விதத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.. ஏழைகளும், மாற்றுத் திறனாளிகளும் நமது மனித நேயத்தை அளவிடும் கருவிகள். அவர்கள் நமது உண்மையான கரிசனையை உரசிப் பார்க்கும் சோதனைகள். நாம் உண்மையிலேயே இறைவனின் அன்பை இதயத்தில் கொண்டிருக்கிறோமா என்பதை இதன் மூலம் கண்டு கொள்ளலாம். தொழுநோயாளிகளையும், ஊனமுற்றோரையும் அரவணைத்த இயேசுவைப் போல நாம் இருக்கிறோமா ? இல்லை ஒதுங்கிச் செல்லும் மனநிலையில் வாழ்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம். 

மாற்றுத் திறனாளிகள் நம் சகோதரர்கள்

அவர்களை உயர்வாய் நடத்துவோம் !

*

சேவியர்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...