Posted in Life of JESUS

இயேசு வரலாறு 31 : பணி வாழ்வின் இரண்டாம் ஆண்டு

ஏரோதின் கவலை

2006_the_nativity_story_042

திருமுழுக்கு யோவானைக் கொலை செய்துவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று ஏரோதியாள் கனவு கண்டு கொண்டிருந்தாள். ஆனால் திருமுழுக்கு யோவானின் மரணம் ஒரு தீர்வைத் தரவில்லை, மாறாக அவருடைய சீடர்களும் இயேசுவோடு இணைந்து மிகப்பெரிய கூட்டமாக மாறிவிட்டார்கள். இயேசுவின் போதனைகள் திருமுழுக்கு யோவானின் போதனைகளை விட அதிக வீரியமுள்ளதாக எங்கும் விரைந்து மக்களைத் தீண்டியது. ஏரோதுக்கும் இயேசுவின் திடீர் வளர்ச்சி மிகப்பெரிய கவலையை அளித்தது. இயேசுவைப் பற்றி உளவாளிகள் தினம் தினம் கொண்டு வரும் புதுப் புதுச் செய்திகளால் அவன் கவலையடைந்தான். தன்னுடைய ஆட்சிக்கே இயேசுவால் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தான்.

இயேசு தன்னுடைய சீடர்கள் இருவர் இருவராக போதனைகள் செய்ய தனியே அனுப்பினார். தன்னுடைய சீடர்களை அவர் வரவழைத்து அவர்களுக்கு நோய்களைத் தீர்க்கும் வல்லமையையும், பேய்களை ஓட்டும் வல்லமையையும் கொடுத்தார். இலவசமாக இந்த வரத்தை நான் உங்களுக்கு வழங்குகிறேன், நீங்களும் இலவசமாகவே மக்களுக்கு வழங்குங்கள் என்று சீடர்களுக்கு அறிவுறுத்தினார். சீடர்களும் செல்லுமிடங்களில் காணும் மனிதர்களைக் குணப்படுத்தத் துவங்கினர். மக்கள் ஆச்சரியப்படும் விதமாக சீடர்களும் அதிசயங்கள் செய்யத் துவங்கினார்கள். எனவே இயேசுவைப் பற்றிய புகழ் பல மடங்கு பரவியது.

ஏரோது மன்னனும் அவனுடைய அரசவையிலிருந்தவர்களும் திகைத்தார்கள். அதெப்படி பேய்களை ஓட்டுவதற்கும் நோய்களை நீக்குவதற்குமான வரத்தை எல்லோருக்கும் வழங்க முடிகிறது ? இயேசு யாருக்கெல்லாம் பேயோட்டும் வரம் வழங்கினாரோ அவர்களெல்லாம் பேய் ஓட்டுகிறார்களே ! அதெப்படி சாத்தியம் ? என்று எல்லோரும் திகைப்பில் விழுந்தார்கள். சீடர்கள் தனியே பணி செய்யத் துவங்கியதை கண்ட இயேசுவும் ஆனந்தமடைந்தார். வானகத் தந்தையை நோக்கி அவர் செபித்தார். தந்தையே உமக்கு நன்றி. மேன்மையானவர்களுக்கு இவற்றை மறைத்து எளியவர் என்று மக்கள் கருதுவோருக்கு வழங்கினீரே. உமக்கு நன்றி என்று செபித்தார்.

இப்போது இயேசு முன்னை விட அதிக மன உரம் பெற்றார். அவருடைய போதனைகள் எழுச்சியடைந்தன. தன்னைப்பற்றி விளக்கமாக, இன்னும் தெளிவாகப் பேசத் துவங்கினார் அவர். ‘தந்தையையன்றி மகன் யார் என்று எவனும் அறிவதில்லை. தந்தை யாரென்று மகனும், மகன் யாருக்கெல்லாம் அவற்றை வெளிப்படுத்துகிறாரோ அவர்களுமே அறிவார்கள்.’ என்று தான் விண்ணகத் தந்தையின் மகன் என்று வெளிப்படையாக இயேசு பிரகடனப் படுத்தத் துவங்கினார்.

‘சுமை சுமந்து சோர்ந்திருப்போர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று இயேசு மக்கள் கூட்டத்தினரிடையே உரத்த குரலில் அழைப்பு விடுத்தார். இயேசுவின் போதனைகளை கேட்கவும், அவருடைய வரங்களைப் பெறவும் வந்த கூட்டம் இயேசுவின் அழைப்பில் மகிழ்ந்தது. வாழ்வின் வருத்தங்களை இயேசுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏராளமானோர் இயேசுவை அணுகத் துவங்கினர்.

ஏரோதின் காதுகளுக்கு இந்த செய்திகளெல்லாம் விழ அவன் கலக்கமடைந்தான். திருமுழுக்கு யோவானின் ஆவிதான் இயேசுவின் மேல் வந்து இப்படிப் போதனைகள் நிகழ்த்துகிறதோ என்றும் அவனுடைய மனதில் சிந்தனைகள் ஓடின. சுற்றிலும் இருந்த சுமார் இருநூற்று நான்கு கிராமங்கள், நகரங்களில் இயேசுவின் போதனையினால் மக்கள் கவரப்பட்டிருந்தார்கள். குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் நபர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்ததாக வரலாறு சொல்கிறது. எல்லா இடங்களிலும் வாழ்ந்த ஏழை, எளியவர்கள் இயேசுவின் பின்னால் அணிதிரண்டதை ஏரோது உணர்ந்தான். இயேசுவுக்கு ஒரு அதிகார வளையம் உருவாகி இருப்பதை அறிந்த அவன் அதை எப்படியும் உடைத்து விட வேண்டும் என்று மனதுக்குள் முடிவெடுத்தான்.

இயேசுவோ எதற்கும் கவலைப்படாமல் தன்னுடைய பணிகளைத் துரிதமாகச் செய்து கொண்டே இருந்தார்.

ஐந்து அப்பமும், ஐயாயிரம் பேரும்

Miracle_Loaves_Fishes

எப்போதும் இயேசுவைச் சுற்றி ஒரு மிகப்பெரிய கூட்டம் அவருடைய போதனைகளைக் கேட்கவும், தங்களுடைய நோய்களைத் தீர்த்துக் கொள்ளவும் இருந்து கொண்டே இருந்ததால் இயேசுவுக்குத் தேவையான தனிமை கிடைக்காமல் போயிற்று. கிடைக்கும் குறைந்த நேரங்களில் இயேசு தனிமையாகச் சென்று செபம் செய்வது வழக்கம். இப்போதும் அவர் தனிமையாய் இருக்க விரும்பி சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு திபேரியாக் கடல் என்று அழைக்கப்பட்ட மிகப் பெரிய ஏரியைக் கடந்து மறு பக்கம் இருந்த பாலை நிலத்துக்குச் சென்றார். அங்கு சென்று தனிமையில் கடவுளிடம் செபம் செய்யத் துவங்கினார்.

ஆனால் அதற்குள் இயேசு வந்திருக்கிறார் என்னும் செய்தி மக்களுக்குத் தெரிய வர, மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைத் தேடி பாலை நிலத்துக்கு வந்தனர். செபம் செய்து முடித்த இயேசு தான் அமர்ந்திருந்த மலையைச் சுற்றிலும் ஏராளமான மக்கள் அமைதியாய் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் கண்டு நெகிழ்ந்த அவர் மக்களுக்குப் போதிக்கத் துவங்கினார்.

ஆட்டுக் கொட்டிலுக்கு வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்பவன் திருடன், அல்லது கொள்ளைக்காரன். வாயில் வழியாக நுழைபவனே ஆடுகளின் ஆயன். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்து விடுவார். ஆடுகளும் ஆயனின் குரலுக்குச் செவிசாய்க்கும். தம்முடைய சொந்த ஆடுகளை கொட்டிலுக்கு வெளியே கூட்டி வந்தபின் ஆயன் அவற்றுக்கு முன்னால் செல்வார். ஆடுகள் அவரைப் பின் தொடரும். ஏனென்றால் ஆயனின் குரலை அவை அறிந்திருக்கின்றன.

அறியாத ஒருவரை ஆடுகள் பின்பற்றுவதில்லை. அவை சிதறிப்போகும். ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரையும் கொடுப்பான். ஆனால் கூலிக்கு மேய்ப்பவனோ, ஓநாய் வருவதைக் கண்டால் தன்னுடைய உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவான். ஓநாய் வந்து மந்தையைச் சிதறடிப்பதைப் பற்றிய கவலையை விட தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் கவலையே அவனுக்கு அதிகமாய் இருக்கும்.

நானே நல்ல ஆயன்.

என் ஆடுகளுக்காக நான் உயிரையும் கொடுப்பேன். எனக்கு முன்னால் வந்த பலர் திருடர், கொள்ளைக்காரர். ஆதாயத்துக்காக ஆடுகளைக் கூட்டிச் சேர்த்தவர்கள் அவர்கள். நான் ஆடுகளின் நிலைவாழ்வுக்காய் வந்திருக்கிறேன். என்னுடைய கொட்டிலைச் சேராத வேறு பல ஆடுகளும் எனக்கு உண்டு அவற்றையும் நான் கூட்டிச் சேர்க்க வேண்டும். அவையும் என் குரலுக்குச் செவிகொடுக்கும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனென்றால் நான் என் உயிரையே கொடுக்கிறேன். என் உயிரைப் பறித்துக் கொள்ளும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஆனால் அதை நானே உவந்தளிப்பேன்.

நேரம் கடந்து கொண்டே இருந்தது. இயேசுவின் போதனை நீண்டு கொண்டே சென்றது.

சீடர்கள் இயேசுவிடம் வந்து
‘போதகரே, எவ்வளவு நேரம் தான் போதிக்கப் போகிறீர்கள். போதும். இவர்களை அனுப்பிவிடும். இவர்கள் பசியோடு இருப்பார்கள். இவர்களுக்குத் தேவையான உணவு இங்கே கிடைக்காது. நேரமும் இருட்டிக் கொண்டே வருகிறது. இப்போது இவர்களை அனுப்பினால் இவர்கள் சென்று தங்களுக்குத் தேவையான உணவைப் பெற்றுக் கொள்வார்கள் அல்லவா ? ‘ என்று இயேசுவின் காதில் கிசுகிசுத்தனர்.

‘ஏன்.. நீங்களே இவர்களுக்கு உணவளிக்கலாமே ?’ இயேசு புன்னகையுடன் கேட்டார்.

‘அதெப்படி முடியும் ? இத்தனை பேருக்கு உணவளிக்க வேண்டுமென்றால் நமக்கு இருநூறு தெனாரியம் பணம் தேவைப்படுமே ? ‘ சீடர்கள் சொன்னார்கள். இயேசுவிடம் எப்போதுமே பணம் இருப்பதில்லை என்பது சீடர்களுக்குத் தெரியும்.

‘உங்களிடம் உணவு இல்லையா ?’ இயேசு கேட்டார்.

‘இல்லை… இங்கே ஒரு சிறுவனிடம் மட்டும் ஏதோ கொஞ்சம் உணவு இருக்கிறது’ சீடர் சொன்னார்.

‘சரி… அதை இங்கே வாங்கி வாருங்கள்’

சீடர்கள் சென்று அந்தச் சிறுவனையும், அவனிடம் இருந்த உணவையும் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். இயேசு பார்த்தார். சிறுவனுடைய கூடையில் ஐந்து கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் இருந்தன.

‘இது போதுமே ?’ இயேசு சொல்ல சீடர்கள் வியப்படைந்தார்கள்.

‘ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் எத்தனை பேர் சாப்பிட முடியும் ? இங்கே சுமார் ஐயாயிரம் பேர் இருக்கிறார்களே ‘ அவர்கள் சந்தேகமாய்க் கேட்டார்கள்.

‘எல்லோரையும் வரிசை வரிசையாக பந்தி அமர்த்துங்கள்’ இயேசு கூற, சீடர்கள் சென்று வந்திருந்த அனைவரையும் வரிசை வரிசையாய் பந்தியமர்த்தினார்கள்.

இயேசு அந்த அப்பங்களையும், மீன்களையும் எடுத்தார். வானத்தை அண்ணாந்து பார்த்து செபித்து அதைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார்.

‘இதை நீங்கள் பரிமாறுங்கள். எல்லோரும் உண்பார்கள். மீதி வருவதை வீணாக்காமல் கூடைகளில் சேகரியுங்கள் ‘ என்றார்.

சீடர்களின் சந்தேகம் தீரவில்லை. அவர்கள் அப்பத் துண்டுகளை மக்களுக்குக் கொடுக்கத் துவங்கினார்கள். என்ன ஆச்சரியம் ! அப்பம் வந்து கொண்டே இருந்தது. மக்கள் வயிறார உண்டனர்.

‘போதும்… போதும்… ‘

‘இங்கே மீதமும் இருக்கிறது’

குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத் துவங்கின. சீடர்கள் இயேசு சொன்னபடி மிகுதியானவற்றைக் கூடைகளில் சேகரித்தார்கள். அவை பன்னிரண்டு கூடைகள் நிறைய இருந்தன.

ஒரு சின்ன கூடையில் இருந்த ஐந்து அப்பங்களின் மீதித் துண்டுகள் பன்னிரண்டு கூடைகளில் ! மக்கள் வியந்தார்கள்.

‘இவர் நம்மோடு கூடவே இருந்தால் உணவுக்குப் பஞ்சமே இருக்காது’

‘இவரை எங்கும் போக விடக் கூடாது. இவரை நம்முடைய நாட்டின் மன்னனாக்க வேண்டும்’

‘ஆம்.. இவர் அரசரானால் நமக்கு உணவுக்குக் குறைவே வராது.’ மக்கள் இயேசுவை அரசனாக்க வேண்டுமென்று ஆலோசனை செய்யத் துவங்கினார்கள்.

மக்களின் உள்ளுணர்வை அறிந்த இயேசு வருந்தினார். விண்ணக வாழ்வைப் பற்றிப் போதிக்க வந்தால் மக்கள் மண்ணுலக வாழ்வுக்கே முன்னுரிமை தருகிறார்களே என்று கலங்கினார். மக்களை அனுப்பிவிட்டு மலைமீது அமர்ந்து மீண்டும் செபிக்கத் துவங்கினார்.

கூட்டம் ஐந்து அப்பங்கள் எப்படி இந்தப் பெருங்கூட்டத்தின் பசியைத் தீர்த்தது என்று வியந்து கொண்டே சென்றது. ஐந்து அப்பங்கள் கொண்டு வந்திருந்த அந்த சிறுவன் கூடை நிறைய அப்பங்களோடு திரும்பிச் சென்று கொண்டிருந்தான்.

ஏரோதின் காதுகளுக்கு இந்த செய்தி வந்தபோது இன்னும் அதிகமாகக் கலங்கினான். இயேசுவை இப்படியே வளரவிட்டால் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவராகி தன்னுடைய இருக்கையை அசைத்து விடுவானோ ? முழு இஸ்ரவேல் குலத்துக்குமான அரசனாக அவன் ஆகிவிடுவானோ என்று அஞ்சினான். இயேசுவை அடக்கவேண்டும், அடங்காவிடில் அழிக்கவேண்டும் என்று ஏற்கனவே ஏரோதின் அரசவையில் குரல்கள் உயர ஆரம்பித்திருந்தன.

ஏரோது மீண்டும் சில உளவாளிகளை இயேசுவிடம் அனுப்பினான் இயேசுவைப்பற்றியும், அவருடைய திட்டங்களைப் பற்றியும் அறிந்து வர. இயேசு அவர்களிடம் எருசலேம் எப்போதுமே இறைவாக்கினர்களை வாழவைத்ததில்லை. அதனால் கடவுளின் சாபத்துக்கு ஆளாகியிருக்கும். அந்த நரியிடம் சொல்லுங்கள், நான் இன்றும் நாளையும் பணிசெய்யவேண்டும் என்று இயேசு துணிச்சலாய்ப் பேசினார்.

ஏரோது தகவல் கிடைத்ததும் நெற்றியைத் தேய்த்தான். அப்படியானால் இயேசு எருசலேமில் கொல்லப்படுவார் என்று அவராகவே சொல்கிறாரா ? அல்லது வேறு ஏதேனும் சொல்லவருகிறாரா ? அவனுக்கு விளங்கவில்லை.

கடல் மீது கடவுள்

jesus-walking-on-water-benjamin-mcpherson

இயேசு சீடர்களை அழைத்து, ‘நீங்கள் கப்பர்நகூமுக்குச் செல்லுங்கள். நான் சற்று நேரம் கழித்து அங்கே வருகிறேன்’ என்று கூறி அவர்களை அனுப்பினார். சீடர்கள் படகில் ஏறி கப்பர்நாகும் புறப்பட்டார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்டு மலையில் ஏறி செபம் செய்யத் துவங்கினார். தன்னை மறந்த நிலையில் அவர் செபித்துக் கொண்டிருந்தார். நேரம் சென்று கொண்டிருந்தது. சீடர்கள் படகில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென கடலில் சுழல்காற்று வீசத் துவங்கியது. கடல் அலைகள் படகை முன்னேற விடாமல் பின்னுக்குத் தள்ளின. சீடர்கள் மிகவும் சிரமப்பட்டு துடுப்பிழுத்துப் படகைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன்பு தான் இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு வயிறார உணவளித்திருந்தார். அவர்கள் பயணம் முழுவதும் அந்த வியப்புச் செய்தியையே அசை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இரவு முழுவதும் கடலில் மிகவும் சிரமத்துடன் ஐந்தாறு கிலோ மீட்டர் தொலைவு படகை ஓட்டிய சீடர்கள் மிகவும் களைப்படைந்தார்கள்.

இரவின் நான்காம் ஜாமம்.

கடலில் ஒரு உருவம் அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தது.

சீடர்கள் கண்களைக் கசக்கினார்கள். உற்றுப் பார்த்தார்கள். யாரோ கடலின் மீது நடந்து வருகிறார். சீடர்கள் அந்த குளிர் இரவிலும் குப்பென்று வியர்த்தார்கள்.

‘ஐயோ… பேய்…பேய்’ சீடர்கள் தங்களை மறந்து அலறினார்கள். துடுப்புகள் அவர்களுடைய கையினின்று நழுவி ஓடின. அவர்கள் படகுக்குள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

‘அஞ்சாதீர்கள்…’ குரல் ஒலித்தது. கடல் இரைச்சலின் இடையேயும் அந்த குரலை சீடர்கள் தெளிவாகக் கேட்டனர்.

‘இது… நம்முடைய இயேசுவின் குரல் போல இருக்கிறதே ! ‘

‘இல்லை… இது இயேசுவின் குரல் அல்ல. நாம் இயேசுவின் குரலைக் கேட்டுக் கேட்டு எந்தக் குரல் கேட்டாலும் அவர் குரல் போல் ஒலிக்கிறது.’

‘இயேசு எப்போதுமே படகில் தானே வருவார். அவர் தண்ணீரில் நடப்பதை நாம் பார்த்ததேயில்லையே !’ சீடர்கள் பதட்டமடைந்தார்கள்.

‘அஞ்சாதீர்கள் நான் தான்…’ இயேசு மீண்டும் சொன்னார்.

இந்த முறை சீடர்களின் பயம் போய்விட்டது. இயேசு தான் குரல் கொடுக்கிறார். பேய் அல்ல என்பதை அறிந்தனர். ஆசுவாசமடைந்தனர். ஆனாலும் அவர்களுடைய பயம் முழுமையாய்ப் போகவில்லை.

அவருடைய சீடர் சீமோன் அவரிடம்,’ ஆண்டவரே… வந்து கொண்டிருப்பது நீர் தான் என்றால் நானும் தண்ணீரில் நடந்து உம்மிடம் வரச் செய்யும் ‘ என்றார். பதட்டத்தில் என்ன சொல்கிறோம் என்பதே அவருக்குத் தெரியவில்லை.

‘வா…’ இயேசு அழைத்தார்.

சீமோன் தண்ணீரின் மீது கால்வைத்தார். ஆச்சரியமடைந்தார். அவர் மூழ்கவில்லை. அடுத்த காலையும் தண்ணீரில் வைத்தார் ! தரையில் நிற்பது போல தண்ணீரிலும் அவரால் நிற்க முடிந்தது. படகில் இருந்த சீடர்கள் எல்லாம் ஆரவாரக் குரல் எழுப்பினார்கள்.

சீமோன் இயேசுவை நோக்கி நடந்தார். இரண்டு மூன்று அடி தூரம் நடந்ததும் சுற்றிலும் பார்த்தார். இயேசு சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருக்கிறார். ஒருவேளை தான் அமிழ்ந்து போனால் என்ன செய்வது என்று ஒரு வினாடி பயந்தார். அவ்வளவு தான் அவருடைய கால்கள் தண்ணீருக்குள் சென்றன. கடலுக்குள் மூழ்கத் துவங்கினார் சீமோன்.

‘ஆண்டவரே … காப்பாற்றும்… கா….காப்பாற்றும்….’ சீமோன் அலற, படகிலிருந்த சீடர்களும் பெரும் குரலெடுத்து அலறினார்கள்.

இயேசு விரைந்து வந்து கை நீட்டி அவரைத் தூக்கினார்.

‘ஏன் நீ நம்பிக்கை இழந்தாய் ? நம்பிக்கையுடன் இருந்தபோது உன்னால் நடக்க முடிந்தது. நம்பிக்கை இழந்ததும் மூழ்கி விட்டாய் பார்த்தாயா ? நான் உன்னுடன் இருந்தும் உனக்கு நம்பிக்கையில்லையா ?’ இயேசு அவரைப் பார்த்துக் கேட்டார்.

‘மன்னியும் கடவுளே’ சீமோன் தலை கவிழ்ந்தார். இயேசு அவர்களோடு படகில் ஏறி அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார். சீடர்கள் இன்னும் திகைப்பிலிருந்து விடுபடாதவர்களாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வி¢டிந்து விட்டது. படகு மறுகரையை அடைந்தும் விட்டது.

அங்கும் மக்கள் கூட்டமாக நின்றார்கள். இயேசு தனியாக மலையில் செபிக்கச் சென்றிருந்ததையும் சீடர்கள் மட்டுமே படகில் ஏறி கப்பர்நாகூமுக்குப் புறப்பட்டதையும் பல படகுக்காரர்கள் கண்டிருந்தார்கள். எனவே அவர்கள் இப்போது இயேசுவும் படகில் வருவதைக் கண்டு ஆச்சரியப் பட்டார்கள்.

‘ரபீ… எப்போது வந்தீர் ?’ என்ற கேள்விகளுடன் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது.

மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட இயேசு,’ நீங்கள் வந்திருப்பது என்னுடைய போதனைகளுக்காகவோ, இறையரசைப் பற்றிய தேடலுக்காகவோ அல்ல. அப்பங்களுக்காகவே என்று அறிகிறேன். அழிந்து போகும் உணவுக்காக அலையாதீர்கள். அதைவிடப் பெரிய முடிவில்லா வாழ்வுக்காக வாழுங்கள்’ என்றார்.

‘அது எங்கே கிடைக்கும் ?’ மக்கள் கேட்டார்கள்.

‘நானே அந்த உணவு ! என்னை நம்புவதே உங்களுக்குப் பசியாற்றும் உணவு !’ இயேசு சொன்னார்.

‘உம்மை நம்பவேண்டுமெனில் நீங்கள் ஏதேனும் அருங்குறி காட்ட வேண்டும்’ மக்கள் கேட்டார்கள்.

‘அது தான் தினமும் பார்க்கிறீர்களே… நோயாளிகள் குணமடைகிறார்கள், இறந்தவர் எழுகிறார்கள்’ இயேசு சொன்னார்.

‘அது மட்டுமல்ல. மோசே காலத்தில் வானத்திலிருந்து அவர்களுக்கு மன்னா எனப்படும் உணவு பாலை நிலப் பயணத்தில் வழங்கப்பட்டதே.. அது போன்ற ஒரு அடையாளம் வேண்டும்’ மக்கள் இயேசுவை விடாமல் கேள்விகள் கேட்டனர்.

‘நானே உயிருள்ள உணவு. என்னை உண்பவனுக்குப் பசி எடுக்காது’ இயேசு சொன்னார்.

இயேசு சொன்னதன் பொருளை உணராத மக்கள், ‘ உம்மை எப்படி உண்பது ?’ என்று நகைத்தனர்.

‘என்னுடைய இரத்தத்தைக் குடிக்கவும் வேண்டும்…’ இயேசு சொன்னார்.

‘இது என்ன ? உம்முடைய பேச்சு மிதமிஞ்சிப் போகிறதே..’ அவர்கள் அவரை வித்தியாசமாய்ப் பார்த்தார்கள்.

சீடர்கள் பலரும் ‘ இவர் ஏதேதோ பேசத் துவங்கிவிட்டார். இனிமேல் நாம் இவருடன் சுற்றினால் மக்கள் நம்மையும் பைத்தியக் காரனாய்ப் பார்ப்பார்கள்…’ என்று பேசிக் கொண்டனர்.

சீடர்களில் பலர் இயேசுவை விட்டு விலகத் துவங்கினார்கள். ஆனால் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் தங்கள் நிலையிலிருந்து எள்ளளவும் பின் வாங்கவில்லை. ஏரோது மன்னனின் உளவாளிகள் உலவுவதை அறிந்த பயம் பலரை பின்வாங்க வைத்தது. இயேசுவின் போதனைகள் வலுவடைந்ததும், இயேசு தன்னை வானகத் தந்தையின் மகன் என்று பேசியதும் கூட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி பின்வாங்கத் தூண்டியது. அரசுக்கும் மதவாதிகளுக்கும் எதிராக இயேசு செயல்படுவதால் தங்களுக்கு நிச்சயமாகப் பிரச்சினை வரும் என்ற பயமும் பல சீடர்களை விலகிச் செல்ல வைத்தது. இயேசு கலங்கவில்லை. உறுதியான மனம் இல்லாதவர்கள் இறுதிவரை வருவதில்லை என்பதை அவர் அறிந்தே வைத்திருந்தார்.

உறுதியற்றோர் உதிர்ந்தனர்

jesus-teaching-apostles-friends-1138161-wallpaper

இயேசு தன்னுடைய போதனைகளை குறைத்துக் கொள்ளவில்லை. நாளுக்கு நாள் அவருடைய போதனைகள் வலுவடைந்து கொண்டே வந்தன.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் பிறருக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டங்களும் இதைத் தான் சொல்கின்றன.

நான் உலகிற்கு அமைதியைக் கொண்டு வந்தேன் என்று எண்ணாதீர்கள். நான் வாளையே கொண்டு வந்தேன். வீட்டில் தந்தையை மகனுக்கு எதிராகவும், மகளை தாய்க்கு எதிராகவும் பிரிப்பேன். இயேசு சொன்னதைக் கேட்ட மக்கள் ஒரு வினாடி திகைத்தனர். இயேசு அவர்களுக்கு தான் சொன்னதன் விளக்கத்தை அளித்தார். என்னை விட தன் தந்தையையோ, தாயையோ அதிகம் நேசிப்பவன் எனக்கு ஏற்றவன் அல்ல. குடும்பத்தில் ஒருவர் என்னை ஏற்றுக் கொண்டால் ஒருவன் மறுதலிப்பான். அவர்களிடையே பிரிவினை வரும். உலகத்தின் செல்வங்களை வெறுத்து என்னைப் பின்பற்றி வருபவனே விண்ணரசுக்கு உரியவன்.

ஒருவனை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட வெளிகளெங்கும் சுற்றித் திரியும். பின் தான் வெளியேறிய இடத்துக்கே திரும்பி வரும். அந்த இடம் சுத்தமாக்கப் பட்டு யாருமின்றி இருக்கக் கண்டால் தன்னை விடப் பொல்லாத ஏழு ஆவிகளைக் கூட்டி வந்து மீண்டும் அவனிடம் குடியேறும். அவனுடைய பிந்தைய நிலமை முந்தைய நிலமையை விட மோசமாகும்.

தீய ஆவி வெளியேறிய பின் மனதை நல்ல சிந்தனைகளாலும், இறைவனாலும் நிரப்ப வேண்டும். இல்லையேல் அழிவு மிகவும் மோசமானதாக இருக்கும்.

‘உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் நிலைத்திருப்பவன் இறப்பினும் வாழ்வான். என் வழியாக அன்றி யாரும் தந்தையிடம் வர முடியாது’ இயேசு தன்னை இறைவனின் மகனாக மீண்டும் மக்கள் முன்னால் பிரகடனப் படுத்தினார். ‘மானிடமகன் உங்கள் பாவங்களுக்காக தன்னுடைய உயிரையே கொடுப்பார். தன்னைப் பலியாகக் கொடுத்து உங்கள் பாவங்களை மீட்பார். நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு உலகில் இல்லை.’ இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் வியந்தனர். எருசலேம் ஆலயத்துக்குச் சென்று புறாவையோ, ஆடுகளையோ பலியிட்டு பாவங்களைத் தீர்ப்பது தான் வழக்கம். இதென்ன புது விதமான பலி என்று மக்கள் தங்களுக்குள் விவாதிக்கத் துவங்கினார்கள். இயேசு அதிசயங்களை செய்து கொண்டிருந்தபோது வியந்த மக்களும், பாராட்டிய மக்களும் இயேசுவின் இந்த போதனைகளினால் சற்று கலவரப்பட்டுப் போனார்கள்.

ஒருவர் பின் ஒருவராக ஏராளமானோர் தன்னை விட்டு விலகிப் போவதைக் கண்ட இயேசு தன்னுடைய நம்பிக்கைக்குரிய சீடர்கள் பன்னிரண்டு பேரையும் திரும்பிப் பார்த்தார்.
‘நீங்களும் போய்விட எண்ணுகிறீர்களா ?’ இயேசு கேட்டார்.

இயேசு கடலில் நடந்து வந்த அதிசயத்தின் பாதிப்பே அவர்களின் கண்களை விட்டுப் போகவில்லை. அதற்குள் இயேசுவின் கேள்வி.

‘இல்லை ஆண்டவரே ! வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் இருக்க நாங்கள் யாரிடம் போவோம் ?’ அவர்கள் உறுதியுடன் சொன்னார்கள்.

‘நீங்கள் பன்னிரண்டு பேரும் என்னுடன் கடைசி வரை இருப்பீர்கள் தானே !’

‘கண்டிப்பாக இருப்போம் கடவுளே’ அவர்கள் சொன்னார்கள்.

‘நீங்கள் இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உங்களிலும் ஒரு அலகை இருக்கிறான்.’ சொல்லிய இயேசு யூதாஸைப் பார்த்துப் புன்னகைத்தார்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

பெதஸ்தா குளமும், ஓய்வு நாளும்

bethesda4
எருசலேமில் பாஸ்கா விழா நெருங்கி வந்தது. இயேசு விழாவுக்காக எருசலேமிற்குச் சென்றார். எருசலேம் ஆலயத்திலுள்ள குருக்களும், மறைநூல் அறிஞர்களும் இந்த முறை இயேசு ஏதேனும் தகராறு செய்தால் தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்று காத்திருந்தார்கள்.

எருசலேமில் இருந்த ஒரு நகர வாசலின் பெயர் ஆட்டு வாசல். அதன் அருகே ஒரு குளம் உண்டு அதன் பெயர் பெத்சதா. அந்த குளத்தைச் சுற்றிலும் ஐந்து மண்டபங்கள் இருந்தன. அந்த ஐந்து மண்டபங்களிலும் எப்போதும் நோயாளிகள் நிரம்பி வழிவார்கள். அழகான சூழலுடன் கூடிய அந்தக் குளம் நோயாளிகளின் மண்டபம் ஆனதற்கு ஒரு சிறப்புக் காரணம் உண்டு.

கடவுளின் தூதர்கள் அவ்வப்போது வந்து அந்தக் குளத்தைக் கலக்குவார்கள். அப்படி குளம் கலங்குவதற்காகத் தான் அனைவரும் காத்திருப்பார்கள். குளத்தை அவர்கள் கலக்கியதும் முதலில் அந்தக் குளத்தில் இறங்கும் மனிதன் எந்த நோயினால் பீடிக்கப்பட்டிருந்தாலும் உடனே குணமாவான். இது தான் அந்தக் குளத்தின் அற்புதச் சிறப்பு. அதற்காகத் தான் நோயாளிகள் அனைவரும் குளத்தைச் சுற்றிக் காவல் இருப்பார்கள். தேவதூதர் வந்து குளத்தைக் கலக்கியதும் அதில் இறங்குவதற்காக நோயாளிகள் முண்டியடித்து முன்னேறுவார்கள். அந்த பாக்கியம் ஒருவனுக்குக் கிடைக்கும். மற்றவர்கள் சோர்வுடன் மீண்டும் தங்கள் இடத்துக்கு வந்து படுத்துக் கொள்வார்கள்.

தூதர்கள் அடிக்கடி வருவதில்லை. எனவே நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பல வருடங்களாகக் காத்திருக்கும் நோயாளிகள் ஏராளமானோர் அங்கே இருந்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம் சுகம் பெறுவது மட்டுமே. அவர்கள் தேவதூதனுக்காகக் காத்திருப்பதிலேயே தங்கள் ஆயுளைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அந்தக் குளத்தைப் பார்ப்பதற்காகச் சென்றார்.

குளத்தைச் சுற்றியிருந்த மண்டபங்களில் நடந்து திரிந்த இயேசு அங்கே நோய்வாய்ப்பட்டிருந்த மக்களின் நிலையைக் கண்டு கண்கலங்கினார். அந்த நோயாளிகள் கூட்டத்திலேயே ஆதரவு ஏதும் இல்லாமல், தனிமையாக, படுக்கையில் ஒரு மனிதன் கிடப்பதைக் கண்டார். அவனுடைய தோற்றமும், முதிர் வயதும் அவரைப் பாதித்தன. அந்த மனிதனுக்குச் சுகம் கொடுக்கவேண்டும் என்று இயேசு முடிவு செய்தார்.

‘ஐயா… நீர் சுகமடைய விரும்புகிறீரா ?’ இயேசு நேரடியாகக் கேட்டார்.

‘ஐயா, நான் முப்பத்து எட்டு ஆண்டுகளாக இந்த மண்டபத்தில் காத்திருக்கிறேன். தேவதூதர்கள் ஒவ்வொரு முறை வந்து குளத்தைக் கலக்கும்போதும் ஆவலுடன் குளத்தில் இறங்குவதற்காகப் போவேன். என்னால் நடக்க முடியாது. தவழ்ந்துத் தவழ்ந்து நான் அங்கே செல்வதற்கு முன் வேறொருவர் இறங்கி விடுவார். எனக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும். இது தான் நடக்கிறது. எப்படியாவது சுகம் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் தான் முப்பத்தெட்டு ஆண்டுகளாக இந்த இடத்தில் கிடக்கிறேன்’ அவர் ஏக்கத்துடன் சொன்னார்.

‘எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு செல்லும்’ இயேசு சொன்னார்.

‘என்னால் எழும்பவே முடியாது. எழுந்து படுக்கையை வேறு எடுத்துக் கொண்டு செல்வதா ? அதெல்லாம் நடக்கிற காரியமா ?’ அந்த மனிதன் சொல்ல நினைத்த வார்த்தைகள் தொண்டையுடன் நின்றன. அவனுடைய உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. காலை அசைத்துப் பார்த்தான். அசைகிறது. கைகளை அசைத்துப் பார்த்தான். வலி இல்லை. அவனால் அவனையே நம்ப முடியவில்லை.

எழுந்தான் ! அவனிடமிருந்த நோய் விடைபெற்று ஓடியிருந்தது. கைகளுக்கும் , கால்களுக்கும் புதுத் தெம்பு வந்திருந்தது.

தன்னுடைய படுக்கையைத் தூக்கினான். அவனுடைய ஆனந்தத்துக்கு அளவே இல்லை. முப்பத்து எட்டு ஆண்டுகளாக படுக்கை இவனைச் சுமந்தது. இப்போது தான் முதல் முறையாக இவன் படுக்கையைச் சுமக்கிறான். ஓடினான். ஆனந்தம் மேலிட ஓடினான்.

அவன் சுகமான அந்த நாள். ஒரு ஓய்வு நாள் !

ஓய்வு நாள் என்பது யூதர்கள் மிகவும் கடுமையாகக் கடைபிடிக்கும் ஒரு நாள். அன்றைய தினம் யாரும் எந்த வேலையும் செய்யக் கூடாது. சிறு துரும்பைக் கூட கிள்ளி அந்தப் பக்கம் போடக்கூடாது என்பது தான் அவர்களுடைய சட்டம் காட்டும் வழிமுறை. இந்த நாளில் தான் இவன் படுக்கையைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான்.

‘ஏய்… நில்… நில்… இன்று ஓய்வு நாள் என்று தெரியாதா ? படுக்கையைத் தூக்கிக் கொண்டு போகிறாய் ? அதைக் கீழே போடு’ வழிமறித்த ஒருவன் கத்தினான்.

‘ஐயா… அது முடியாது ! என்னைக் குணமாக்கியவர் படுக்கையையும் சுமந்து கொண்டு போகத் தான் சொல்லியிருக்கிறார்’

‘உன்னைக் குணமாக்கினவரா ?’

‘ஆம்.. நான் முப்பத்து எட்டு ஆண்டுகளாக நோயால் வாடிக் கொண்டிருந்தேன். இன்றைக்குத் தான் சுகம் பெற்றேன். என்னை ஒருவர் சுகமாக்கினார். அவர் தான் எனக்குக் கடவுள். அவர் சொல்வது தான் எனக்குச் சட்டம். படுக்கையைக் கீழே போட முடியாது’ அவன் மறுத்தான். இதற்குள் அங்கே ஒரு கூட்டம் கூடி விட்டது.

‘என்ன ? என்ன விஷயம் ?’ அங்கே ஒரு பரபரப்புச் சூழ்நிலை உருவானது.

‘இதோ… இவனைப் பாருங்கள். படுக்கையைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான். நம்முடைய ஓய்வு நாளை இழிவு படுத்துவதல்லவா இது ? கேட்டால், யாரோ இவனை சுகமாக்கி விட்டார்களாம். சுகமாக்கியவன் இவனிடம் படுக்கையையும் தூக்கிக் கொண்டு போகச் சொன்னானாம். அதனால் இவன் படுக்கையைக் கீழே போட மாட்டானாம் !..’

‘உன்னிடம் படுக்கையைத் தூக்கிக் கொண்டு நடக்கச் சொன்னவன் யார் ?’ கூட்டத்தினர் குரல் உயர்த்தினர்.

மக்கள் யாரும் அவன் சுகம் பெற்றதைப்பற்றி மகிழ்ச்சியோ, அவன் நோய்வாய்ப்பட்டிருந்ததை நினைத்து வருத்தமோ கொள்ளவில்லை. அவர்களுடைய எண்ணமெல்லாம் ஓய்வு நாளில் இவனை வேலை செய்யச் சொன்னது யார் என்பதைப் பற்றியே இருந்தது.

சுகமானவர் இயேசுவைத் தேடினார். அவர் எங்கும் இல்லை !
‘அவரைக் காணோம்…’

‘அவரைக் கண்டால் உடனே எங்களிடம் சொல்லவேண்டும். புரிகிறதா ? ‘ கூட்டத்தினர் மிரட்டினர்.

தான் சுகமான ஆனந்த நிகழ்ச்சிக்கு முன்னால் கூட்டத்தினரின் மிரட்டலும், சத்தமும், கோபமும் அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் நேராக ஆலயத்துக்குச் சென்றான்.

‘கடவுளே… தூதர்கள் குளத்தைக் கலக்கியபோதெல்லாம் சுகம் பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை என்பதால் என்னைக் குணமாக்க தனியே ஒரு தூதரை அனுப்பினீரே. உமது கருணைக்கு முன்னால் தான் பணிகிறேன்’ அவன் உள்ளம் உருக செபித்தான். செபித்துமுடித்து கண்களைத் திறந்தவனுக்கு முன்னால் புன்னகையுடன் இயேசு !

‘ஐயா… நீ…நீர்… இங்கேயா இருக்கிறீர்’

இயேசு புன்னகைத்தார். ‘ நோய் உன்னை விட்டு விலகிவிட்டது. பாவம் உன்னை அணுகாமல் பார்த்துக் கொள்’. சொல்லிவிட்டு இயேசு அகன்றார்.

குணமானவன் நேராக யூதர்களிடம் சென்றான்,
‘என்னைக் குணமாக்கியவரைக் காணவேண்டும் என்றீர்களே. அதோ போகிறாரே ! அவர்தான் என்னைக் குணமாக்கியவர்’ என்றான்.

யூதர்கள் விரைந்து சென்றார்கள்.

‘ஏய்… நில்….’

இயேசு திரும்பினார்.

‘ஓ… நீ தானா அது ? கலகம் செய்வதற்காகவே எருசலேம் தேவாலயத்துக்கு வருவாயோ ? போன முறை வந்து எல்லோரையும் அடித்தாய். இப்போது எங்கள் சட்டங்களை மீறுகிறாயா ?’ அவர்கள் ஆத்திரமடைந்தார்கள்.

‘எருசலேம் தேவாலயம் என் தந்தையின் வீடு. இங்கே வருவதற்கு யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை’

‘வருவது சரி. எல்லோரையும் போல அமைதியாய் வந்து விட்டுப் போகவேண்டியது தானே. ஏன் கலகம் மூட்டுகிறாய் ? ஓய்வு நாளில் பணிகள் எதையும் செய்யக் கூடாது என்று உனக்குத் தெரியாதா ?’ அவர்களின் கோபம் அதிகரித்தது.

‘என் தந்தை இன்றும் பணியாற்றுகிறார். நானும் பணியாற்றுவேன்.’ இயேசு தெளிவாகச் சொல்ல அவர்களின் ஆத்திரமோ கரைகடந்தது.

‘யார் உன் தந்தை !’

‘நீங்கள் யாரைக் கடவுள் என்று சொல்கிறீர்களோ, அவர் தான் என் தந்தை. நான் அவருடைய மகன்.’ இயேசு சொல்ல மக்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றார்கள்.

‘ஓய்வு நாள் சட்டத்தை மீறியதும் இல்லாமல் உன்னைக் கடவுளின் மகனாக வேறு காட்டிக் கொள்கிறாயா ?’

‘நானாக எதையும் செய்வதில்லை. தந்தை என்னிடம் என்ன சொல்கிறாரோ அதைத் தான் நான் செய்கிறேன்.’ இயேசுவின் குரல் உறுதியாக ஒலித்தது.

‘உனக்கு என்ன தைரியம் இருந்தால் இப்படியெல்லாம் பேசுவாய் ?’

‘இதற்கே இப்படித் திகைக்கிறீர்களே. தந்தை தீர்ப்பு அளிக்கும் அதிகாரத்தையும் எனக்கு அளித்துள்ளார். என்னை மதிக்காதவன், என் தந்தையை அவமதிக்கிறான். என்னைப் பற்றி நானே சான்று பகர்தல் முறையல்ல. மனிதனின் சான்று எனக்குத் தேவையுமில்லை. ஆனாலும் உங்களுக்குச் சொல்கிறேன். யோவான் என்னைப்பற்றி சான்று பகர்ந்தாரே தெரியாதா ?’ இயேசு அசராமல் சொன்னார்.

‘நீ அளவுக்கு அதிகமாகப் பேசுகிறாய்….’ கூட்டத்தினரின் குரலில் எரிச்சல் மேலிட்டது.

‘ஒரு காலம் வரும் அப்போது நீங்கள் என்னைப்பற்றி அறிவீர்கள். மறைநூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மீட்பர் நான் என்பதை உணர்வீர்கள்’ இயேசு கூட்டத்தினரின் கோபத்துக்குக் கட்டுப்படவில்லை.

அதற்குள் இயேசுவின் போதனைகளை ஆங்காங்கே கேட்டும், கடந்த ஓராண்டு காலமாக அவரை அறிந்தும், அவரால் அற்புதங்களை பெற்றும் இருந்த கூட்டத்தினர் இயேசுவுக்கு ஆதரவாக அவருக்குப் பின்னால் திரண்டார்கள்.

இயேசுவின் ஆதரவாளர்களின் கூட்டம் அதிகரிப்பதைக் கண்ட எதிர்ப்பாளர்கள் உள்ளுக்குள் கொலைவெறியுடன், எப்படியாவது இவனைக் கொன்று விடவேண்டும் என்ற தீர்மானத்துடனும் அகன்றார்கள்.

அந்த ஓய்வு நாள் அனைவரின் ஓய்வையும் பறித்துக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

சுற்றி வளைத்த குற்றச்சாட்டுகள்

Sermon_on_the_Mount

பரிசேயர்கள் விடவில்லை. எல்லா விதங்களிலும் இயேசுவை எப்படியேனும் சிக்க வைக்கவேண்டும் என்பதிலேயே தங்கள் நேரத்தையெல்லாம் செலவிட்டார்கள். இயேசு உண்ணும்போது கூட அவரை விட்டு வைக்கவில்லை.

இயேசுவும் சீடர்களும் கைகளைக் கழுவாமல் அப்பங்களை உண்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள் பரிசேயர்கள்.
‘தூய்மைச் சட்டங்களை ஒரு இறைவாக்கினரும், கடவுளின் மகனாக தன்னைக் காட்டிக் கொள்பவரும் கடைபிடிக்கவில்லையென்றால் எப்படி ? நீர் கடைபிடிக்காததால் அவற்றை உமது சீடர்களும் கடைபிடிப்பதில்லை. முன்மாதிரிகை காட்டவேண்டிய நீங்களே இப்படி இருந்தால் அது தவறில்லையா ?’

இயேசு அவர்களை திரும்பிப் பார்த்தார்.

‘நீங்கள் எல்லாம் கடவுளை உதடுகளினால் புகழ்பவர்கள். ஆனால் உங்கள் உள்ளம் என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது. நீங்கள் இப்படிப் புகழ்வது வீண். கடவுளின் கட்டளைகளைக் கடைபிடியுங்கள் என்று நான் வலியுறுத்தினால் நீங்களோ மனிதரின் சட்டங்களையே பற்றிக்கொண்டிருக்கிறீர்கள். பாத்திரங்களைக் கழுவுவதும், கைகளைக் கழுவுவதும் தான் உங்களுக்குப் பிரதானமாய்ப் படுகிறது.’ இயேசுவின் துணிச்சலான பதிலடி பரிசேயர்களை சற்று திணறடித்தது.

‘உள்ளே செல்வது மனிதனை மாசுபடுத்தாது. உள்ளிருந்து வெளியே வருவது தான் மனிதனை மாசுபடுத்தும். மனிதன் உண்ணும் உணவு எதுவானாலும் அவனுடைய வயிற்றுக்குள் சென்று பின் கழிவாகி அழிந்து விடும். ஆனால் அவனுடைய வாயினின்று வரும் சொற்கள் உள்ளத்திலிருந்து தான் உருவாகின்றன. தீய எண்ணங்கள், பரத்தமை, களவு, பொய்சான்று இவையெல்லாம் உள்ளத்திலிருந்து வருபவை. இவை தான் மனிதனை மாசு படுத்தி அழிவுக்குள் தள்ளுகின்றன’

கடவுளின் சட்டத்தைக் கடைபிடியுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது ‘தாய் தந்தையரைச் சபிப்போர் கொல்லப்படவேண்டும் என்பது தான் கடவுளின் சட்டம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? என் தாய் தந்தையருக்குத் தரவேண்டியது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று என்று சொன்னால் தாய் தந்தையருக்கு எதுவும் தரவேண்டாம் என்கிறார்கள். இதெல்லாம் உங்கள் மரபின் முறையாம். முதலில் சரியானவைகளைச் செய்யுங்கள். கடவுளை உள்ளத்தால் பின்பற்றுங்கள்’ இயேசு பரிசேயர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இயேசுவின் பதில்கள் எருசலேம் குருக்களை எரிச்சலடையச் செய்தது. சரியான தருணத்துக்காய் அவர்கள் காத்திருந்தார்கள்.

கேட்டால் கிடைக்கும்

christ_canaanite_woman

இயேசு தம்முடைய சீடர்களையும் அழைத்துக் கொண்டு தீர், சீதோன் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தார். சீதோன் ஒரு மிகப் பழமையான நகரம். இயேசுவும் சீடர்களும் தனியாக நடந்து கொண்டிருந்தார்கள். இயேசுவின் வருகை அங்கே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சீடர்களின் பணிகள் என்னவென்பதைக் குறித்தெல்லாம் இயேசு அவர்களிடம் விளக்கிக்கொண்டிருந்தார்.

ஆனால் அந்த தனிமை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. திடீரென்று ஒரு அழுகுரல் பின்னாலிருந்து ஒலித்தது. இயேசுவும் சீடர்களும் திரும்பிப் பார்த்தார்கள்.
அவர்களுக்குப் பின்னால் தூரத்திலிருந்து ஒரு பெண் அழுது கொண்டே அவர்களுக்குப் பின்னால் ஓடி வருவது தெரிந்தது.

‘ஆண்டவரே… எனக்கு இரங்கும்…. என் மகள் பேய் பிடித்து மிகவும் துன்பப்படுகிறாள்’ அவள் கதறினாள். அவள் ஒரு கனானியப் பெண் !

இயேசு எதையும் கண்டு கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தார்.

அவள் தொடர்ந்து அவருக்குப் பின்னால் அழுதுகொண்டே வந்தாள். சீடர்களை அவளுடைய கண்ணீர் கரைத்தது. அவர்கள் இயேசுவிடம்

‘இயேசுவே… அவளை ஏதாவது சொல்லி அனுப்பி விடும்… வருத்தமாக இருக்கிறது’ என்றார்கள்.

இயேசு அவளிடம், ‘ பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல. நான் இஸ்ரயேல் குல மக்களை மீட்கவே அனுப்பப்பட்டேன். கனானியர்களை மீட்க அல்ல’ இயேசு சொன்னார்.

இயேசுவின் பதில் சீடர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனாலும் ஒன்றும் பேசாதிருந்தார்கள். இயேசுவோ அந்தப் பெண்ணின் நம்பிக்கையைச் சோதிப்பதற்காகவே அப்படி ஒரு பதிலைச் சொன்னார். அவளிடமோ கடல் போல் நம்பிக்கை நிறைந்திருந்தது.

அவள் அவரிடம்,’ ஆம் போதகரே. பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல தான். ஆனாலும் தங்கள் உரிமையாளனின் மேஜையிலிருந்து விழும் துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே’ என்றாள்.

இயேசு புருவங்களை உயர்த்தினார். ‘ அம்மா.. உன் விசுவாசம் பெரிது. நீர் விரும்பிய படியே உன் மகளுக்கு நடக்கட்டும்’ என்றார். அந்த கணமே அவளுடைய மகள் பேய் நீங்கி நலமடைந்தாள்.

சிறிது நேரத்துக்குப் பின் சீடர்கள் அவரிடம்,’ நாங்கள் இஸ்ரயேல் மக்களிடம் மட்டும் தான் பணிசெய்ய வேண்டுமா ?’ என்று கேட்டார்கள்.

நான் அவளுடைய விசுவாசத்தைச் சோதித்தறியவே அவ்வாறு கேட்டேன். நான் முன்னமே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நம்பிக்கையே முக்கியம். நம்பிக்கை இருந்தால் இஸ்ரயேலர் மீட்படையாமல் இருப்பதும், விசுவசித்தால் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து மக்கள் வந்து விண்ணகத்தில் நம் மூதாதையரோடு அமர்வதும் நிகழும். ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்

ஒரு ஊரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை மனிதரையும் மதிப்பதில்லை. அந்த ஊரில் ஒரு கைம்பெண்ணும் இருந்தாள். அவளுக்கு நீதி வழங்க வேண்டிய இந்த நடுவர் அவளைக் கண்டுகொள்ளவேயில்லை.

கைம்பெண் விடவில்லை. மனம் தளரவும் இல்லை. தொடர்ந்து சென்று அவரிடம் மன்றாடிக் கொண்டே இருந்தாள். காலையிலும், மாலையிலும், பார்க்கும் போதெல்லாம் அவரிடம் கெஞ்சி மன்றாடிக் கொண்டே இருந்தாள்.

நடுவர் வேறு வழியில்லாமல் கடைசியில் அந்தப் பெண்ணிடம், ‘ அம்மா.. நான் யாருக்கும் பயப்படமாட்டேன். ஆனால் உன்னுடைய தொந்தரவு தாங்க முடியவில்லை. இதற்காகவாவது நான் உனக்கு நீதி வழங்க வேண்டும்’ என்றான்.

அந்தப் பெண் நீதி பெற்றாள்.

ஒரு நீதியற்ற நடுவரே இப்படிச் செய்வாரென்றால், தொடர்ந்து செபித்து வரும் உங்களுடைய விண்ணப்பங்களை நேர்மையின் பிறப்பிடமான கடவுள் நிராகரிப்பாரோ ?

எனவே செபத்தை இறுக்கமாய்ப் பற்றிக் கொள்ளுங்கள். கேட்பது கிடைக்கும் வரை நம்பிக்கையுடன் மன்றாடுங்கள்.

செபிக்கும்போது தாழ்மையான மனதுடன் செபியுங்கள்.

ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்,

இருவர் செபம் செய்ய ஆலயத்துக்குச் சென்றார்கள். ஒருவர் பரிசேயர். அவர் தம்மை நீதிமானாகக் கருதிக் கொண்டிருப்பவர். இன்னொருவர் வரிவசூலிப்பவர்.

பரிசேயர் ஆலயத்துக்குள் சென்றார். கடவுளின் சந்நிதி முன்னால் நிமிர்ந்து நின்று கொண்டு உரத்த குரலில் பேச ஆரம்பித்தார்.

‘கடவுளே… நான் கொள்ளையனாகவோ, வரி வசூலிக்கும் கேவலமான தொழில் செய்பவனாகவோ, விபச்சாரம் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடும் மற்ற மக்களைப் போலவோ இல்லாததற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறேன்’

‘வருவாயில் பத்தில் ஒரு பங்கை நான் காணிக்கை செலுத்தத் தவறியதேயில்லை’

‘வாரத்தில் இரண்டு முறை நோன்பு இருக்கிறேன்’…. பரிசேயன் தன்னைப்பற்றி அடுக்கிக் கொண்டே போனான்.

வரிவசூலிப்பவனோ வானத்தை ஏறிட்டுப் பார்க்கவும் தயங்கியவனாய்
‘கடவுளே நான் பாவி. என்னை மன்னியும்’ என்ற ஒற்றை வார்த்தையை உள்ளத்தின் ஆழத்திலிருந்து உச்சரித்தான்.

கதையைச் சொன்ன இயேசு, ‘ பரிசேயன் அல்ல, அந்த வரிவசூலிப்பவன் தான் கடவுளுக்கு ஏற்புடையவனாய்த் திரும்பிச் சென்றான். ஏனென்று தெரியுமா ?’ என்று கேட்டார்.

கூட்டத்தினர் அமைதிகாத்தனர்.

‘ஏனென்றால், தன்னைத் தாழ்த்துபவன் உயர்த்தப்படுவான். தன்னை உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான் !’ இயேசு சொல்ல சீடர்கள் தலையாட்டினார்கள்.

நான் யார் ?

Jesus with disciples

சில நாட்களுக்கு முன் ஐந்து, அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த இயேசு மீண்டும் ஒரு முறை அதே புதுமையைச் செய்தார். இந்தமுறை ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேர் உணவு உண்டார்கள்.

எருசலேம் தேவாலய ஒற்றர்களும், ஏரோது மன்னனின் உளவாளிகளும் இயேசுவைப் பின்தொடர்ந்து நடப்பதை அனைத்தையும் அறிந்து தகவல் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். இயேசுவின் உணவு வினியோகிக்கும் புதுமை அவர்களை நிலைகுலையச் செய்தது. மக்களின் பசியை ஆற்றும் வல்லமை ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவன் விரைவில் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கை அடையமுடியும். எனவே இயேசுவை மக்கள் அணுகவிடாமல் செய்தாக வேண்டும், அவர்கள் மீண்டும் திட்டமிட்டார்கள். அவர்கள் மனதில் உதித்தது ஒரு திட்டம்.

‘இயேசு பேய்பிடித்தவர்’. இயேசு பேயோட்டுவது கடவுளின் ஆவியினால் அல்ல. சாத்தானின் உதவியினால். நரகத்தின் செயல்களையே இயேசு செய்து கொண்டிருக்கிறார். எனவே அவரிடம் செல்லாதீர்கள். என்று மக்களிடையே வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். ஊரெங்கும் இந்த செய்தி மெல்ல மெல்ல நுழைந்தது.

இயேசுவை சந்தித்த பரிசேயர்கள் கேட்டார்கள், ‘பேய்களைக் கொண்டு தானே பேயோட்டுகிறீர் ? பேய்களின் தலைவனான பெயல்சபூல் உங்கள் வசம் இருக்கிறான் என்பது உண்மை தானே.. சொல்லும்’

‘சாத்தான் சாத்தானுக்கு எதிராய் எழுவானா ? ஒரு வீடு தனக்கு எதிராகவே போரிட்டால் வாழுமா ? ஒரு நாடு தனக்கு எதிராகவே போரிடுமா ? தீமையைக் கொண்டு தீமையை அழிக்க முடியுமா ? சொல்லுங்கள்’ இயேசு கேள்விக்குக் கேள்விகளையே பதிலாய்க் கொடுத்தார்.

தனக்கு எதிராய் ஒரு வதந்தி உலவுவதை அறிந்த இயேசு தனிமையில் தன்னுடைய சீடர்களை அழைத்தார்.

‘மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள் ?’ இயேசு கேட்டார்.

இயேசுவின் திடீர் கேள்வியினால் வியப்புற்ற சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். யோர்தான் நதியிலிருந்து வீசும் காற்று அவர்களை இதமாய் வருடிக்கொண்டிருந்தது. சீடர்கள் பதிலளிக்கத் துவங்கினார்கள்.

‘சிலர் உங்களை திருமுழுக்கு யோவான் திரும்பி வந்தது போல பார்க்கிறார்கள்’

‘சிலர் உங்களைப் போதகர் என்கிறார்கள்’

‘சிலர் உங்களை இறைவாக்கினர் என்கிறார்கள். குறிப்பாக எலியா இறைவாக்கினர் மீண்டும் வந்திருக்கிறார் என்கிறார்கள்’ எலியா இறைவாக்கினர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இஸ்ரயேல் மக்களிடையே வாழ்ந்த ஒரு மிகப் புகழ் பெற்ற தீர்க்கத்தரிசி. அவர் குணமாக்குதல், இறந்தோரை உயிர்த்தெழவைத்தல் போன்ற பல அற்புதங்களைச் செய்தவர். அச்சமில்லாமல் அரசவைகளில் முழக்கமிட்டவர். இயேசுவும் ஒரு விதத்தில் அவருடைய பணிகளையே பிரதிபலித்ததால் மக்கள் இயேசுவை எலியா இறைவாக்கினராக இருப்பாரோ என்று சந்தேகித்தனர்.

இயேசு சீடர்கள் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு சீடர்களிடம் திரும்பினார்.
‘நீங்கள் என்னை யாரென்று நினைக்கிறீர்கள் ?’

இயேசுவின் கேள்வியைக் கேட்டவுடன் சீடர்களிடையே கண நேரம் மெளனம் நிலவியது. பேதுரு சட்டென்று அந்த மெளனத்தைக் கலைத்தார்.

‘நீர் கடவுளின் மகன். இறைமகன்’

‘பேதுருவே நீ பேறுபெற்றவன்’ இயேசு உற்சாகமாய் சொன்னார். ‘ஏனெனில் உனக்கு இதை வெளிப்படுத்தியது மனிதரல்ல, விண்ணகத்தில் இருக்கும் எனது தந்தையே. நான் உனக்குச் சொல்கிறேன். நீ பாறை. உன்மேல் எனது திருச்சபையை நான் கட்டுவேன். விண்ணகத்தின் திறவுகோல்களையும் நான் உன்னிடமே தருவேன். நீ பூமியில் கட்டுபவை எல்லாம் விண்ணகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் அனுமதிப்பவை மட்டுமே விண்ணகத்திலும் அனுமதிக்கப்படும்’ இயேசு சொன்னார்.

சீடர்கள் அவர் சொன்னதன் பொருளை முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை.

‘நான் இப்போது மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லப் போகிறேன்’ இயேசு சொல்ல சீடர்கள் கவனமானார்கள். இயேசு அடுத்து செய்யப் போகும் ஏதோ ஒரு அதிசயச் செயலைக் குறித்தோ, போதனையைக் குறித்தோ, பயணத்தைக் குறித்தோ பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

இயேசு அவர்களிடம்,’ நான் இப்போது சொல்லப் போவது இதுவரை சொல்லாதது.’ என்றார்.

சீடர்கள் இன்னும் கூர்மையானார்கள்.

‘என்னுடைய பயணத்தின் கடைசிப் பகுதிக்கு வந்திருக்கிறேன். இதுவரை நீங்கள் என்னுடன் நடப்பதைப் பெருமையாகவும், பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் கருதினீர்கள். ஆனால் இனிமேல் அப்படியல்ல… நீங்கள் உங்களைக் குறித்துப் பயப்பட ஆரம்பிப்பீர்கள்’ என்றார்.

‘அது ஏன் ஆண்டவரே அப்படிச் சொல்கிறீர் ?’

‘இதுவரை நீங்கள் நான் செய்த அற்புதங்களைக் கண்டீர்கள் ! இனிமேல் தான் நீங்கள் நான் அனுபவிக்கப் போகும் பாடுகளைப் பார்க்கப் போகிறீர்கள்’ இயேசு சொன்னார்.

‘பாடுகளா ? என்ன பாடுகள் ?’

‘எருசலேமுக்குச் சென்று மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள் ஆகியோரிடம் நான் அகப்பட்டு துன்புறுத்தப் படுவேன்’

‘நீங்களா ? இருக்கவே இருக்காது. அவர்களை பலமுறை நீங்கள் மடக்கியிருக்கிறீர்கள். இனிமேல் அவர்கள் உமக்கு எதிராய் வரத் துணிய மாட்டார்கள். அப்படியே வந்தாலும் உம்மால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும்’ சீடர்கள் சொன்னார்கள்.

‘அது என் தந்தையின் விருப்பமல்ல. நான் கொலை செய்யப்படுவேன். அதன்பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்.’ இயேசு சொன்னார்.

‘நீர் உயிரோடு இருந்தால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கலாம், நீரே இறந்து விட்டால் உம்மை எப்படி நீரே உயிர்த்தெழ வைக்க முடியும் ?’ சீடர்கள் கேட்டார்கள்.

‘உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் நம்பிக்கை வைப்பவன் இறப்பினும் வாழ்வான்’ இயேசு சொல்ல சீடர்கள் புரியாமைகளில் புதைந்தார்கள்.

பேதுரு இயேசுவைத் தனியே அழைத்துச் சென்றார்.
‘ஆண்டவரே… இதெல்லாம் என்ன புதுப் பேச்சு. இதெல்லாம் வேண்டாம். சாவைப்பற்றியெல்லாம் இனிமேல் நீர் பேசக் கூடாது. நமக்கு ஆதரவாக மிகப்பெரிய மக்கள் சக்தி ஒன்று இருக்கிறது. அதை வைத்து நாம் இன்னும் பல அதிசயச் செயல்களைச் செய்யவேண்டும், அதை விட்டு விட்டு சாவு , மரணம், உயிர்ப்பு என்றெல்லாம் உளறாதீர்கள்’ பேதுரு சொல்ல இயேசு பேதுருவின் முகத்தை உற்றுப் பார்த்தார்.

‘பேதுரு.. என் கண் முன்னால் நிற்காதே. ஓடிவிடு. உன்னுடைய முகத்தில் சாத்தானின் நிழலை நான் பார்க்கிறேன். நீ கடவுளுக்கு ஏற்றவைகளை எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவைகளையே எண்ணுகிறாய்’ இயேசு சொன்னார்.

‘இல்லை ஆண்டவரே… இருந்தாலும் சாவு என்பது கடைசி நிலையல்லவா ? அது இப்போதே வந்தால்… ?’ பேதுரு இழுத்தார்.

‘அது தான் கடவுளின் விருப்பம். நான் அரசனாகி உன்னை மந்திரியாக்குவேன் என்று கனவு கண்டாயா ? அதன் மூலம் உங்கள் பெயர் நாடெங்கும் பரவும் என்று கனவு கண்டீர்களா ? செல்லுமிடமெல்லாம் மக்கள் பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டீர்களா ?’ இயேசு கேட்க சீமோன் அமைதியானார்.

‘என்னைப் பின் பற்ற விரும்புபவன் தன்னலம் துறந்து தன்னுடைய சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின் செல்லட்டும். ஏனெனில் உயிரைக் காப்பாற்ற விரும்புபவனால் அது முடியாது. ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் உயிரை இழந்து விட்டால் வரும் பயனென்ன ? ‘ என்றார்.

அதற்குள் சீடர்களும் அவரை சூழ்ந்து கொள்ள இயேசு அவர்களிடம்
‘சீடர்களே. உங்களை நான் பக்குவப் படுத்தியிருக்கிறேன். பணிவாழ்வில் நீங்கள் என்னோடு கூட இருந்திருக்கிறீர்கள். பாடுகள் வரும்போது அதை நானே சுமக்கிறேன். நீங்கள் சுயநலம் மறந்து என் பணியைத் தொடரவேண்டும்’ என்றார்.

‘இயேசுவே.. இதையெல்லாம் கேட்கக் கவலையாக இருக்கிறது’

‘இல்லை. விண்ணரசு நெருங்கிவிட்டது. இது நீங்கள் மகிழ்வுற வேண்டிய தருணம். கடவுளின் திருவுளம் நிறைவேறும். அதன் பின் நான் என் தந்தையின் மாட்சியோடு வானதூதர்கள் சூழ வருவேன். ‘ இயேசு சொன்னார்.

இதுவரைக் கேட்டிராத இயேசுவின் திடீர் அறிவிப்பைக் கேட்ட சீடர்கள் உள்ளுக்குள் பயமும், கலக்கமும் அடைந்தார்கள். அவர்களுடைய பல கனவுகள் சரியத் துவங்கின.

உருமாற்றம்

Circa 33 AD, The Transfiguration of Jesus is witnessed by the disciples Peter, James and John. (Photo by Hulton Archive/Getty Images)

ஆறு நாட்களுக்குப் பின் இயேசு தன்னுடைய சீடர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானைக் கூட்டிக் கொண்டு தாபர் மலைக்குச் சென்றார். அது அதிக உயரமில்லாத மிகவும் பிரபலமடையாத ஒரு மலை. இயேசுவின் ஊரான நாசரேத்திலிருந்து பார்த்தால் அந்த மலை தெரியும். அளவில் பெரியதாக இல்லாவிட்டாலும் அது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு புனித மலையாகி விட்டது. அதற்குக் காரணம் அன்று அங்கே நடந்த ஒரு நிகழ்வு.

இயேசு மலையில் பசுமையான இடங்களைக் கடந்து செபிப்பதற்கு வசதியான ஒரு சமதளப் பரப்பு வந்ததும் முழங்காலில் அமர்ந்து செபிக்கத் துவங்கினார். அவருடைய சீடர்கள் மூவரும் அவரோடு மண்டியிட்டு அமர்ந்து செபிக்கத் துவங்கினர்.

திடீரென்று இயேசுவிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிவதை சீடர்கள் உணர்ந்தார்கள். இயேசு இயல்பு நிலையில் இல்லாததுபோல ஒரு தோற்றம். திடீரென்று அவருடைய ஆடைகள் ஒளிவீசத் துவங்கின. ஆடை மிகவும் தூய்மையான வெள்ளை நிறமாக மாறியது. சீடர்கள் வியப்புடன் அந்த நிகழ்ச்சியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீண்ட தூரம் நடந்து வந்ததால் ஆடையில் படிந்திருந்த தூசுகள் எல்லாம் காணாமல் போயிருந்தன, ஒளியை மிஞ்சும் வெண்மை நிறம் வெண் பனியைப் போன்று அவருடைய ஆடைகளில் பதிந்தன.

‘இயேசு உருமாறுகிறார்.’ உடனிருந்த சீடர்கள் கிசுகிசுத்தனர்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென இயேசுவுக்கு முன்னால் இரண்டு பேர் தோன்றினார்கள். சீடர்கள் உற்றுப் பார்த்தார்கள். அதிர்ந்து போனார்கள். இயேசுவுக்கு முன்பாக தோன்றியவர்கள் மோசேவும், எலியாவும். இஸ்ரேல் மக்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கிக் கொண்டு வந்த மாபெரும் தலைவர் மோசே. அவர் தான் தோரா எனும் சட்டங்களை மக்களுக்குக் கொடுத்தவர். எலியா ஒரு மாபெரும் தீர்க்கத்தரிசி. அவரும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். பல அதிசயங்களையும், தீர்க்கத் தரிசனங்களையும் தந்தவர். அந்த இருவரும் தான் இதோ தங்களுடைய கண்களுக்கு முன்னால் நின்று இயேசுவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு அற்புதமான காட்சி ! சீடர்களுக்கு தங்கள் கண்களை நம்பவே முடியவில்லை.

வியப்பு ஒருபுறம் அவர்களைக் கட்டி வைத்தாலும், பயம் அவர்களை மறுமுனையிலிருந்து ஆட்டிப் படைத்தது.

இயேசு திரும்பி சீடர்களைப் பார்த்தார். சீடர்கள் திடுக்கிட்டனர். பேதுரு தன்னையுமறியாமல் உளறினார். ‘ ஆண்டவரே நாம் இங்கே இருப்பது மிகவும் நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக நாங்கள் மூன்று கூடாரங்களை ஏற்பாடு செய்யவா ?’ என்றார்.

இயேசு புன்னகைத்தார். திடீரென வானம் மேகமூட்டமானது. ஒரு பெரிய மேகம் மலையை உரசிச் சென்றது. அவர்களையும் ஒரு மேகம் வந்து மூடிக்கொள்ள வானத்திலிருந்து ஒரு ஒலி பிறந்தது.

‘இவரே என் அன்பார்ந்த மகன். இவருக்குச் செவிகொடுங்கள்’

சீடர்கள் குரலைக் கேட்டதும் பயந்து போய் கீழே விழுந்தார்கள். இயேசு வந்து அவர்களை எழுப்பினார். அவர்கள் எழும்பியபோது அங்கே இயேசுவைத் தவிர யாரையும் காணவில்லை.

‘மானிட மகன் இறந்து உயிர்க்கும் வரை இதை யாருக்கும் சொல்லாதீர்கள்’ இயேசு கட்டளையிட்டார். அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அவர்கள் எலியாவின் மறு பிறவியே இயேசு என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். எனவே இயேசு மீண்டும் உயிர்த்து வருவார் என்று சொன்னபோது அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.

இயேசு அவர்களிடம். ‘ எலியா ஏற்கனவே வந்து விட்டார். மக்கள் அவரை அறிந்து கொள்ளவில்லை. மனுமகன் பாடுகள் பட்டு மரணமடைய வேண்டும் என்பது தந்தையின் விருப்பம். மனுக்குலத்துக்காக மானிட மகன் இறப்பார். மீண்டும் உயிர்ப்பார். அதுவரை இந்த நிகழ்ச்சியை யாருக்கும் சொல்லாதீர்கள்’ என்று தெளிவு படுத்தினார்.

சீடர்களை விட்டு அச்சம் இன்னும் முழுதாய் விலகவில்லை. அவர்கள் இயேசு சொல்வதையெல்லாம் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பேய்கள் பல வகை

Image result for Jesus and demon possessed boy

ஒரு நாள் பேய்பிடித்த ஒரு சிறுவனை தந்தை சீடர்களிடம் கொண்டு வந்தார். சீடர்களுக்கு இயேசு பேயோட்டும் வல்லமையை அளித்திருந்ததனால் தந்தை மகனை சீடர்களிடம் ஒப்படைத்தார். சீடர்கள் அந்த சிறுவனைப் பிடித்திருந்த பேயைத் துரத்த முயன்றார்கள். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக பேய் நீங்கவில்லை. சீடர்கள் வியந்தார்கள். எத்தனையோ பேய்களை ஓட்டியிருக்கிறோம், இந்த பேயை ஓட்ட முடியவில்லையே என்று ஆச்சரியப்பட்டார்கள்.

தந்தை இயேசுவிடம் ஓடினார். ‘ஐயா என் மகனைக் காப்பாற்றும் அவன் அடிக்கடி நீரிலும் நெருப்பிலும் விழுகிறார். நுரை தள்ளுகிறான். அவனைக் குணமாக்க உம்முடைய சீடர்களால் முடியவில்லை. நீர் தான் குணப்படுத்த வேண்டும்’ என்று கதறினார்.

இயேசு அந்த சிறுவனைப் பிடித்திருந்த பேயைத் துரத்தினார்.

சீடர்கள் அன்று இரவு இயேசுவுடன் தனியே நடக்கையில் கேட்டார்கள்.

‘ஆண்டவரே ஏன் எங்களால் அந்தப் பேயை ஓட்ட முடியவில்லை ? நிறைய பேய்களை ஓட்டியிருக்கிறோம் ஆனால் இது கொஞ்சம் பிடிவாதப் பேயாய் இருந்தது. ஏன் எங்களால் ஓட்ட முடியவில்லை ?’

இயேசு அவர்களிடம். ‘இவ்வகைப் பேய் செபத்தினாலும், உறுதியான நம்பிக்கையிலும் தான் விலகும். உங்களுக்கு விசுவாசம் இல்லை. விசுவாசம் இருந்தால் இதோ இந்த மரத்தைப் பார்த்து நீ வேரோடு பெயர்ந்து கடலில் விழு என்றால் கூட விழும். விசுவாசமே சுகமளிக்கும்’ என்று விளக்கமளித்தார்.

Image result for Jesus walking with disciples

இயேசு தன்னுடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களிடமும் தான் இறக்கப் போவதைக் குறித்து அடிக்கடி உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். தான் மீண்டும் உயிர்த்து வருவதாகவும் சீடர்களிடம் அவர் உறுதிப்படுத்தினார்.

இயேசுவை மெசியாவாக சீடர்கள் நம்பினார்கள். எனவே இயேசு உயிர்பெற்று வந்தால் இஸ்ரேல் குலத்தை அவரே அரசராக இருந்து ஆள்வார் என்றும் அப்படி ஒரு நாள் வருகையில் தங்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும் என்றும் சீடர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

மறுநாள் இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த பேச்சே முக்கிய இடம் வகித்தது. விண்ணக வாழ்விலும், இவ்வுலக வாழ்விலும் இயேசு தங்களில் யாருக்கெல்லாம் என்னென்ன முன்னுரிமைகள் அளிப்பார் என்பதைக் குறித்து அவர்கள் தர்க்கமிடவும் துவங்கினார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் எந்தவிதத்தில் இயேசுவோடு நெருக்கமானவர்கள் என்றும் எனவே தங்களுக்கே முன்னுரிமை என்றும் வாதிட்டுக் கொண்டே வந்தார்கள். இயேசு எதையும் கவனிக்காதவர் போல அவர்களுக்கு முன்பாக நடந்து கொண்டிருந்தார்.

அவர்கள் கப்பர்நாகுமை வந்தடைந்ததும் இயேசு சீடர்களைப் பார்த்து
‘வழி நெடுகிலும் பெரும் வாக்குவாதங்களில் ஈடு பட்டிருந்தீர்களே எதைப்பற்றி ?’ என்று கேட்டார்.

சீடர்கள் பேசவில்லை. மெளனமாய் இருந்தார்கள். தாங்கள் எதைப்பற்றி பேசினோம் என்பதை இயேசுவிடம் சொல்ல அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து. ‘உங்களில் தலைவனாக விரும்புகிறவன் எல்லோருக்கும் பணியாளனாய் இருக்க வேண்டும். உங்களில் முதல்வனாக இருக்க விரும்புகிறவன் எல்லோரிலும் கடைசியாக இருக்கவேண்டும். பணிவே முதன்மையானது’ என்றார்.

சீடர்களோ பேசாமல் மெளனமாய் இருந்தார்கள். இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார் தூரத்தில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். இயேசு அந்தச் சிறுவனை தன்னருகே அழைத்தார். அவனை சீடர்கள் முன்னிலையில் நிறுத்தி சீடர்களைப் பார்த்து
‘இந்தச் சிறுவனைப் போல நீங்கள் மாறாதவரை விண்ணகத்தில் நுழைய முடியாது. சிறுவன் ஒருவனைப் போல மனத் தூய்மையுடன் கர்வமில்லாமல் இருப்பவர்களுக்கே விண்ணக வாழ்வு சொந்தமாகும். இந்தச் சிறுவருள் ஒருவனை என் பெயரால் ஏற்றுக் கொள்பவன் எவனும் என்னையே ஏற்றுக் கொள்கிறான். என்னை ஏற்றுக் கொள்பவன் என்னை அனுப்பிய வானகத் தந்தையையே ஏற்றுக் கொள்கிறான்’ என்றார். சீடர்கள் தாங்கள் தர்க்கித்த விஷயத்தைக் குறித்து வெட்கமடைந்தார்கள்.

இயேசுவுக்கு வரி செலுத்திய மீன்

peter-catches-fish-with-coin

இயேசுவும் சீடர்களும் எங்கெல்லாம் சென்றாலும் அவர்களை உளவாளிகளும், ஒற்றர்களும் பரிசேயர்களும் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். கடந்த இரண்டு வருடகாலமாக இயேசுவை எந்த ஒரு பெரிய கண்ணியிலும் சிக்க வைக்க முடியாதவர்கள் தங்கள் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்கிறார், ஓய்வு நாளை மதிப்பதில்லை போன்ற சில காரணங்களை வைத்துக் கொண்டு அவரை தீர்த்துக் கட்டவும் அவர்களால் முடியவில்லை.

இதுவரை இயேசுவின் போதனைகளையும், அவருடைய பிரகடனங்களையும் மட்டுமே குறிவைத்து குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது பண விஷயமாக இயேசுவிடம் கேள்வி எழுப்பினார்கள். ஒரு சட்ட மீறலை இயேசு நியாயப்படுத்துகிறார் என்று நிரூபித்து அவரை சட்டச் சிக்கலுக்குள் தள்ளி அரசியல் குற்றவாளியாக்கி சிறைபிடிக்கவேண்டும் என்பது அவர்களுடைய திட்டம்.

அந்நாட்களில் ரோம எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களிலும் ஏராளமான வரிகளை மக்கள் செலுத்தவேண்டியிருந்தது. அதில் முக்கியமான இரண்டு வரிகள், ஒன்று நிலவரி, இன்னொன்று சொத்து வரி. சொத்து வரி என்பது விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை அரசுக்கு வரியாகச் செலுத்துவது. விளைவது பழவகைகள் என்றால் அவற்றில் ஐந்தில் ஒரு பங்கை வரியாகச் செலுத்தவேண்டும். இவை தவிர ஒவ்வொரு முறை நகருக்குள் நுழைவதற்கும், வியாபாரத்திற்கும், அதற்கும் இதற்கும் என ஏகப்பட்ட வரிகள்.

ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்த இஸ்ரேல் மக்கள் வரி செலுத்துவதை விருப்பமில்லாமல் தான் செய்து வந்தார்கள். இயேசு வரி செலுத்துவதில்லை. அவர் வரிசெலுத்தாததற்குக் காரணம் ரோம அரசின் மீதான வெறுப்பும், இஸ்ரேல் மக்கள் மீதான கரிசனையும் என்று சீடர்கள் நினைத்தார்கள்.

வரி வசூலிக்கும் ஒருவன் பேதுருவைத் தனியே அழைத்து
‘இங்கே ஆலய வரியாக இரண்டு திராக்மா செலுத்துவது சட்டம். தெரியும் தானே ?’ என்று கேட்டார்.

‘தெரியும் ?.’ பேதுரு சொன்னார்..

‘உங்கள் போதகர் அந்த வரியை இன்னும் செலுத்தவில்லை. முன்பு ஒரு முறை வரி செலுத்துதல் முறையா என்று கேட்டபோது. வரி செலுத்துவது முறைதான் என்றும். சீசருக்குரியதை சீசருக்கும், கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்று சொன்ன உங்கள் போதகரே வரி செலுத்தாமல் இருப்பது நியாயமா ? எனவே நீங்கள் தான் அவரிடம் பேசி வரி செலுத்தச் சொல்ல வேண்டும்’ அவர் பேதுருவிடம் வற்புறுத்தினார்.

பேதுரு தலையாட்டி விட்டு அகன்றார்.

பேதுருவின் மனதுக்குள் இந்த வரி விஷயமே ஓடிக் கொண்டிருந்தது. எப்படிப் போதகரிடம் சொல்வது ? அவருக்குப் பதிலாக நாமே வரியைக் கட்டியிருக்கலாமோ ? என்றெல்லாம் அவருடைய மனதுக்குள் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க இயேசு அவரை அழைத்தார்.

‘பேதுரு…’

‘சொல்லுங்கள் ஆண்டவரே…’

‘இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ, தலை வரியையோ யாரிடமிருந்து பெறுகிறார்கள் ? தம் மக்களிடமிருந்தா ? இல்லை மற்றவரிடமிருந்தா ?’ என்று கேட்டார்.

இயேசு வரியைப் பற்றிக் கேட்டதும் பேதுரு வியந்தார். ஆனாலும் இயேசுவைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொண்டிருந்ததால் அமைதியாய் பதில் சொன்னார்.

‘மற்றவரிடமிருந்து தான் ஆண்டவரே.’

‘அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப் பட்டவர்கள் அல்ல…’ இயேசு கேட்க பேதுரு பதில் பேசாமல் புன்னகைத்தார்.

‘சரி.. ஆனாலும் நாம் அவர்களுக்கு இந்த விஷயத்தில் தடையாய் இருக்க வேண்டாம். நீ நாளை காலையில் கடலில் தூண்டில் போடு’ இயேசு சொன்னார்.

‘தூண்டில் போட்டு மீன்களைப் பிடித்து அதை விற்று நான் வரியைக் கட்டி விடுகிறேன் ஆண்டவரே.’ பேதுரு சொன்னார்.

‘வேண்டாம். நீ தூண்டில் போடு. முதலில் சிக்கும் மீனின் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயம் ஒன்று இருக்கும். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் வரி செலுத்து’ இயேசு சொல்ல அனைவரும் ஆச்சரியமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் காலையில் பேதுரு கடலுக்குச் சென்று தூண்டில் வீசினார். முதல் வீச்சிலேயே ஒரு பெரிய மீன் அகப்பட்டது. பேதுரு அதன் வாயைத் திறந்தார். உள்ளே நாணயம் ஒன்று ஒளிவீசிக் கொண்டிருந்தது !

பேதுரு தூண்டிலைச் சுருட்டினார். நாணயத்தை எடுத்துக் கொண்டு வரி வசூலிப்பவரிடம் சென்றார்.
‘இதோ.. போதகருக்கும் எனக்குமான வரி. எங்கள் பெயரில் எழுதிக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார்.

வரி செலுத்தவில்லை என்றாவது இயேசுவை மாட்ட வைக்கலாம் என்னும் எதிரிகளின் எண்ணமும் தகர்ந்தது. ஆனால் எப்படியேனும் இயேசுவை மாட்டியே தீருவது என்பது அவர்களுக்கு இப்போது கௌரவப் பிரச்சினையாகிவிட்டிருந்தது.

இரவு வெளிச்சத்துக்கு வருகிறது

nicodemus-2

இயேசு எதற்கும் அஞ்சாமல் தன்னுடைய போதனைகளைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். அவருடைய போதனைகள் பழையகாலத்தின் கடுமையான பழிவாங்கும் கட்டளைகளாக இல்லாமல் தோழமையுடன் பேசும் அறிவுரைகளாக இருந்ததால் மக்கள் இன்னும் அதிகமாக இயேசுவை நேசித்தார்கள். மற்ற இறைவாக்கினர்களிடமெல்லாம் அச்சத்துடன் பழகிவந்த மக்கள் இயேசுவிடம் நெருக்கமாகவும், நேசத்துடனும் பழகி வந்தார்கள். இயேசு போதனைகளோடு மட்டும் நின்றுவிடாமல் பல்வேறு நோயாளிகளையும் குணமாக்கி வந்ததால் அவரிடம் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

தங்களை நீதிமான்கள் என்று பறைசாற்றிக் கொண்டிருந்த பரிசேயர்களும், சில குருக்களும் கூட இயேசுவின் போதனைகளால் கவரப்பட்டு அவர் பால் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ஆனால் அதை வெளிக்காட்டினால் தங்கள் சுய கவுரவம் பாதிக்கப்படும் என்று கருதி அமைதியாய் இருந்தார்கள். ‘எல்லாம் தனக்குத் தெரியும்’ என்னும் மாயையை அவர்கள் மக்களிடம் உருவாக்கி வைத்திருந்தார்கள் அது அழிந்து விட்டால் தங்கள் மரியாதையும், பிழைப்பும் பறி போய்விடுமே என்னும் கவலை அவர்களுக்கு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நிக்கதேம்.

இயேசுவின் போதனைகள் நிக்கதேமின் நிம்மதியைக் கெடுத்தன. தான் நினைத்து வைத்திருப்பதற்கும் இயேசு போதிப்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருப்பதை அவர் உணர்ந்தார். அவர் யூதத் தலைவர்களில் ஒருவர். எப்படியாவது ஒருமுறை இயேசுவைச் சந்தித்து தன்னுடைய மனதில் இருக்கும் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தவித்தார். ஒருநாள் இரவில் யாருக்கும் தெரியாமல் முகத்தை மறைக்குமளவுக்கு ஒரு பெரிய துண்டை தலையில் போட்டுக் கொண்டு அவர் இயேசுவிடம் சென்றார்.

‘ராபி வணக்கம்’

‘வாருங்கள் நிக்கதேம்… அமருங்கள்.’ இயேசு அவருடைய பெயரைச் சொல்லி அவரை வரவேற்றார்.

தன் பெயரைச் சொல்லி இயேசு அழைப்பதை வியப்புடன் பார்த்த நிக்கதேம்,
‘ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிகிறோம். கடவுள் உம்மிடம் இல்லாவிட்டால் நீங்கள் இப்படி அதிசயங்களைச் செய்யமுடியாது என்று நம்புகிறோம்.’ நிக்கதேம் சொல்லி நிறுத்தினார்.

‘உங்கள் மனதில் ஒரு கேள்வி இருக்கிறதே. அதைக் கேளுங்கள்’ இயேசு சொன்னார்.

நிக்கதேம் மீண்டும் வியந்தார்.
‘ராபி, கடவுளின் அரசை, இறையாட்சியைக் காண நான் என்ன செய்யவேண்டும் ?’ நிக்கதேம் கேட்டார்.

‘ஒருவன் மறுபடியும் பிறந்தாலன்றி இறைவனின் அரசைக் காண முடியாது !’ இயேசு சொன்னார். நிக்கதேம் குழம்பினார்.

‘போதகரே… எனக்குப் புரியவில்லை. மறுபடியும் பிறப்பதா ? வயதானபின் ஒருவன் எப்படி மறுபடியும் தாயின் கருவறைக்குள் புக முடியும்? ஒருவேளை வேறு பிறவி பற்றிப் பேசுகிறீரா ?’ கேள்விகளை அடுக்கினார் நிக்கதேம்.

‘நிக்கதேம், ஒருவன் தண்ணீரினாலும், தூய ஆவியினாலும் பிறந்தாலன்றி கடவுளின் அரசைக் காணமாட்டான்’ இயேசு பதிலை சற்று விரிவாக்கினார்.

‘இன்னும் எனக்குச் சரியாக விளங்கவில்லை’ நிக்கதேம் தடுமாறினார்.

‘எல்லாம் அறிந்த நீங்களே புரியவில்லை என்கிறீர்களே. மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவராய் இருக்கிறார். தூய ஆவியினால் பிறப்பவரே தூய ஆவியின் இயல்பை உடையவராய் இருக்கிறார். நீர் மனிதரால் பிறந்திருக்கிறீர். இனிமேல் தூய ஆவியினால் பிறக்க வேண்டும். அப்போது தான் மீட்படைய முடியும்’ இயேசு சொன்னார்.

‘ஆவியினால் பிறப்பதா ? அது எப்படி ? ஒருவன் ஆவியினால் பிறந்தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது ? அவனை எப்படிக் கண்டு கொள்வது’ நிக்கதேம் கேட்டார்.

‘காற்று வீசுகிறது. அதை நீர் எப்படி அறிந்து கொள்கிறீர் ? அதன் மூலம் ஏற்படும் விளைவுகளை வைத்து தானே ! அப்படித் தான் ஆவியினால் பிறந்தவனும் இருக்கிறான். அவனுடைய செயல்கள் சொல்லும் அவன் மனித இயல்பினனா, இல்லை தூய ஆவியில் பிறந்தவனா என்பதை’ இயேசு விளக்கினார்.

‘இது எப்படி நடக்கும் ?’ நிக்கதேம் இன்னும் குழப்பத்தின் கைக் குழந்தையாய் இருந்தார்.

‘மக்களை வழிநடத்தும் ஒரு போதகரே இப்படிச் சந்தேகப் படலாமா. நான் கண்டதையும், அறிந்ததையும் மட்டுமே பேசுகிறேன். நீங்கள் என் சான்றுகளை ஏற்றுக் கொள்வதில்லை. நான் மண்ணுலகு சார்ந்த விஷயங்களைத் தான் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதுவே உங்களுக்கு விளங்கவில்லையென்றால், விண்ணுலகு சார்ந்த விஷயங்களை எப்படி விளங்கிக் கொள்ளப் போகிறீர்கள் ?’ இயேசு கேட்டார்.

‘விண்ணக விஷயமா அது என்ன ?’ நிக்கதேம் வியப்புடன் கேட்டார்.

‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர யாரும் இதுவரை விண்ணகத்துக்கு ஏறிச் சென்றதில்லை என்று உறுதியாக உனக்குச் சொல்லுகிறேன்’ இயேசு சொல்ல நிக்கதேம் அமைதியானார்.

‘எகிப்து மக்கள் பாம்பு கடி பட்டு மரணத் தருவாயில் இருக்கையில் மோசே வெண்கலத்தினால் ஒரு பாம்பைச் செய்தார். அந்தப் பாம்பை ஒரு கோலில் கட்டி உயர்த்திப் பிடித்தார். அதைப் பார்த்த பாம்புக் கடி பட்டவர்கள் எல்லோரும் உயிர் பிழைத்தார்கள். இந்த நிகழ்ச்சி தெரியும் தானே ?’ இயேசு கேட்டார்.

நிக்கதேம் நூல்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தவர். மோசேயின் வாழ்க்கை வரலாறும் மோசே மக்களுக்கு அளித்த சட்டங்களும் அவருக்கு அத்துப்படி. எனவே நிக்கதேமிடம் இந்தக் கேள்விக்குத் தடுமாற்றம் இருக்கவில்லை. ‘ தெரியும் போதகரே. நன்றாகத் தெரியும்’ என்றார்.

‘அதே போல மானிட மகனும் உயர்த்தப் படுவார். அவரை ஏறிட்டுப் பார்க்கும் பாவிகள் அனைவரும் விண்ணக வாழ்வுக்குத் தகுதி பெறுவார்கள்’ இயேசு சொன்னார்.

‘உலகுக்குத் தீர்ப்பளிக்கவும், மக்கள் தவறாய் நடக்கும் போது அவர்களை அழிக்கவும் தானே அவதாரங்கள் வழக்கமாக நிகழும். உம்முடைய வருகைக்கும் அது தான் ஆதாரமா ?’

‘இல்லை. நான் தண்டனைத் தீர்ப்பு தர வரவில்லை. உலகை மீட்கவே வந்தேன். என்னை நம்பியவர்கள் தீர்ப்புக்கு ஆளாக மாட்டார்கள். நம்பாதவர்கள் தீர்ப்புக்குத் தப்புவதும் இல்லை’ இயேசு உறுதியாய்ச் சொன்னார்.

இயேசுவின் வார்த்தைகள் நிக்கதேமுவைக் கட்டிப் போட்டன.
‘போதகரே பேசும். நான் கேட்கிறேன்’ நிக்கதேம் பணிந்தார். இயேசு தன்னுடைய போதனைகளைத் தொடர்ந்தார்.

‘ஒளி உலகில் வந்திருக்கிறது. ஆனால் தீமை செய்பவர்கள் ஒளியிடம் வருவதில்லை. ஒளியிடம் வந்தால் அவர்களுடைய தீமை ஒளியாது வெளிப்பட்டு விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் இருளிலேயே இளைப்பாறுகிறார்கள். அவர்கள் கடவுளின் தண்டனைக்குத் தப்பவே முடியாது. உண்மைக்கேற்ப வாழ்பவனுக்கு இருள் ஒத்து வருவதில்லை, அவன் ஒளியின் முன்னால் ஒளியாய் பிரகாசிக்கிறான். அவனுடைய செயல்கள் எல்லாம் கடவுளுடன் இணைந்தே செயல்படும். நீ ஒளியில் வாழ்பவனாய் இரு. ஒளிந்து வாழ்பவனாய் இராதே’ இயேசு விளக்கினார். மந்திரத்துக்குத் தலையாட்டும் மதிமறந்த நிலையில் நிக்கதேமு அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொண்டார்.

அதன் பின்பு நிக்கதேமிடம் இருந்த தயக்கங்கள் எல்லாம் விடைபெற்று விட்டன. இயேசுவிடம் வருவதற்குக் கூட இரவைத் தேர்ந்தெடுத்த அவருடைய எண்ணங்களுக்காக அவர் வெட்கமடைந்தார். இரவில் கற்றதையெல்லாம் பகலில் விளம்பத் துவங்கினார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...