Posted in Life of JESUS

இயேசு வரலாறு 30 : முற்றத்து முல்லைக்கு மணமில்லை

Image result for jesus reading scroll

தொடர்ந்து கப்பர்நாகுமிலேயே பணியாற்றி வந்த இயேசு தன்னுடைய சொந்த ஊராகிய நாசரேத்திலும் போதனை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, சீடர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத் நகர் வந்தார். வந்து நாசரேத்தில் இருந்த ஆலயத்தில் அமர்ந்து செபிக்கத் துவங்கினார்.

சுற்றிலுமுள்ள ஊர்களிலெல்லாம் அவருடைய போதனைகளும், அவருடைய அறிவுரைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தாலும் சொந்த ஊரில் அவருடைய போதனைகளுக்குச் செல்வாக்கு அதிகமில்லை.சிறுவயது முதலே தம்முடன் உறவாடி, விளையாடி சாதாரணத் தச்சுவேலை செய்து கொண்டிருந்த ஒருவன் திடீரென கடவுள் என்று தன்னைப் பறைசாற்றுவதையும், அதிகாரத்துடன் போதனைகள் செய்வதையும் அவர்கள் நம்பவில்லை. ஆனாலும், இயேசு அடுத்துள்ள ஊர்களிலெல்லாம் பல அற்புதங்களைச் செய்திருந்ததைக் கேள்விப்பட்டதால் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

கூடியிருந்த மக்களின் எண்ணமெல்லாம் இயேசுவின் போதனைகளைக் கேட்பதல்ல, அவர் ஏதேனும் அற்புதங்கள் செய்தால் வேடிக்கை பார்க்கலாமே என்பதுதான். மக்கள் ஆலயத்தில் வந்து கூடியபோது இயேசு எழுந்துநின்றார்.

‘மறைநூல் உங்களிடம் இருக்கிறதா ?’ இயேசு வினவினார்.

‘ஆலயத்தில் இல்லாத ஏட்டுச் சுருளா ?’ என்றவர்கள் ஏசாயா தீர்க்கத்தரிசி எழுதிய புத்தகச் சுருளை அவரிடம் கொடுத்தார்கள். அவர் அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து வாசித்தார்.

‘ஆண்டவரின் ஆவி என்மேல் இருக்கிறது. அவர் என்னை அபிஷேகம் செய்திருக்கிறர். எளியோருக்கு நற்செய்தியைச் சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலை வாழ்வு பெறுவர் என்று அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பினார்’

வாசித்து முடித்த இயேசு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்தார். மக்கள் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தனர்.

‘நீங்கள் கேட்ட இந்த மறை நூல் வார்த்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எசாயா இறைவாக்கினர் தீர்க்கத் தரிசனமாய் எழுதியது என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே’ இயேசு கேட்டார்.

‘ஆம். வரப்போகும் மீட்பரைக் குறித்து ஏசாயா தீர்க்கத் தரிசி சொன்ன வார்த்தைகள் இவை’ மக்கள் சொன்னார்கள்.

‘இந்த வார்த்தை இன்று நிறைவேறியது’ இயேசு சொல்ல மக்கள் நெற்றி சுருக்கினார்கள்.

‘நிறைவேறியது என்றால் ?…’

‘என்னைக் குறித்தே ஏசாயா இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்’ சொன்ன இயேசு அவர்களுக்குப் போதிக்கத் துவங்கினார். இப்படி ஒரு போதனையை இதுவரை கேட்டதேயில்லை என்று மக்கள் வியக்கும் வண்ணம் இருந்தது இயேசுவின் போதனைகள். செய்யவேண்டியவை என்ன என்பதைத் தெளிவாக தயக்கம் இல்லாமல் அதிகாரத்தோடு போதித்தார். குறிப்பாக மறைநூலில் எழுதப்பட்டுள்ள பல சட்டங்களை அவர் எதிர்த்துப் புதிய செய்திகளைச் சொன்னார்.

மக்கள் இயேசுவின் போதனைகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு அருமையாக, தெளிவாக, எதார்த்தமாகப் பேசுகிறார் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும்போதே அந்தக் குரல் ஒலித்தது.

‘இவன் யாரு இப்படியெல்லாம் போதிக்க ?’

குரல் வந்த திசையில் மக்கள் திரும்பினார்கள்.

‘உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா ? ஒரு தச்சன் மகன் வந்து ஏதோ உளறுகிறான் நீங்கள் எல்லாம் வந்து கூடி இருந்து நேரத்தை வீணடிக்கிறீர்களே !’ குரல் மீண்டும் உயர்ந்தது.

‘நீ சொல்வதும் சரிதான். இவன் சட்ட நூல் எதையும் கற்றதும் இல்லை, எங்கும் குருவாகவோ, மறைநூல் அறிஞராகவோ இருந்ததும் இல்லை.’

‘பின் இன்னும் ஏன் இங்கே அமர்ந்து பொழுதைப் போக்குகிறீர்கள்’

‘ஒருவேளை இவருக்குக் கடவுளின் அருள் இருக்கலாம். அதன் மூலம் பேசலாம் இல்லையா ?’

‘உனக்கென்ன பைத்தியமா ? இவன் முப்பது வருஷமாக இங்கே தான் இருக்கிறான். இவனுடைய தாயும், தந்தையும் இங்கே தான் இருந்தார்கள். இவனுடைய சொந்தக்காரர்கள் எல்லாரும் கூட இங்கே தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இவன் கடவுளின் மகன் என்று சொன்னால் எப்படி நம்புவது ?’

‘இவர் அடுத்துள்ள ஊர்களிலெல்லாம் பல அற்புதங்களைச் செய்திருக்கிறாரே !’

‘அப்படியானால் அவற்றையெல்லாம் இங்கே செய்யட்டுமே ?’

வாக்குவாதம் வலுத்தது. இயேசு அவர்களுடைய மனநிலையை ஆச்சரியமாய்ப் பார்த்தார். எல்லா ஊர்களிலும் தன்னுடைய போதனைகள் அங்கீகரிக்கப்பட்டதையும், தன் சொந்த ஊரில் நிராகரிக்கப் படுவதையும் அவரால் நம்ப முடியவில்லை. சொந்த ஊர் மக்கள் நன்கு பழக்கமானவர்கள் அவர்களிடம் போதிப்பது எளிது என்றே அவர் கருதியிருந்தார். ஆனால் நிலமையோ வேறாக இருக்கிறது.

‘இயேசுவே, நீர் உண்மையிலேயே மீட்பர் என்றால் எங்களுக்கு சில அதிசயங்களைச் செய்து காட்டும்’ மக்கள் கூறினார்கள்.

இயேசு புன்னகைத்தார். ‘ இறைவாக்கினருக்கு சொந்த ஊரில் மரியாதை இருக்காது என்பது உண்மை தான்.’

‘அதெல்லாம் சரி.. அற்புதங்களைக் காட்டு. அல்லது போதனையை நிறுத்து’ மக்கள் நம்பிக்கை இழந்து கத்தினார்கள்.

‘மூடர்களே ! நம்பிக்கை இல்லாத மனிதர்களிடையே அற்புதங்கள் நடைபெறுவதில்லை. எலிசா காலத்திலே இஸ்ரயேலரில் எத்தனையோ தொழுநோயாளிகள் இருந்தார்கள் ஆனால் நாகமான் மட்டும் தானே சுகம் பெற்றான் ! எலியா காலத்தில் எத்தனையோ விதவைகள் இருந்தாலும், ஒரு விதவை தானே மாவு தீராத பானையையும், எண்ணை தீராத பாத்திரத்தையும் பெற்றாள் ! உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். நம்பிக்கை இல்லாவிட்டால் செயல்கள் அங்கே இல்லை’ இயேசு கூட்டத்தினரைப் பார்த்து உரத்த குரலில் சொன்னார்.

மக்கள் கடும் கோபம் கொண்டனர். இயேசுவை அடிக்க வேண்டும் என்று ஊர் மக்கள் பலர் கூடினர். இயேசு அவர்களிடமிருந்து விலகிச் சென்றார்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...