Posted in Life of JESUS

இயேசுவின் வரலாறு 25 : வலுவான போதனைகள்

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே தாயும் சகோதரியும்

Image result for who is my brother and mother Jesus
இந்த நிகழ்ச்சிக்குப் பின் இயேசுவைக் குறித்த பேச்சுகள் இன்னும் தீவிரமடைந்தன. இயேசுவை ஆதரித்தும் அவருடைய செயலை எதிர்த்தும் மக்களிடையே இருவேறுபட்ட பேச்சுகள் உலவின.

இயேசுவின் பாதத்தைத் கண்ணீரால் துடைத்தவன் விபச்சாரத் தொழில் செய்து வந்த பெண். பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த, பாவி என்று மக்களால் அழைக்கப்பட்ட பெண் இயேசுவைத் தொட்டாள் என்பதே அவருடைய இறைவாக்கினர் என்னும் அடைமொழிக்கு எதிரானது என்பது ஒரு தரப்பு மக்களின் வாதம். பாவிகளைக் கூட மன்னிக்கிறார் என்பது இன்னொரு தரப்பு மக்களின் வாதம்.

கப்பர்நாகூமில் நடந்த நிகழ்ச்சி இயேசுவின் சொந்த ஊரான நாசரேத் வரைக்கும் பரவியது. இயேசுவின் உறவினர்கள், தங்கள் உறவினர் மிகப்பெரிய பெயரும் புகழும் பெற்றுவிட்டாரே என்று மகிழ்ந்தனர். ஆனால் இயேசுவோ, தன்னுடைய குடும்பத்தைக் குறித்தோ, உறவினர்களைக் குறித்தோ எங்கும் உரையாடவே இல்லை. அதை அவர் வெளிக்காட்டவும் இல்லை. அவருடைய எண்ணமெல்லாம் இறையரசு குறித்த போதனைகளைச் சார்ந்தே இருந்தன. மக்களிடம் இருக்கும் அறியாமையை அகற்றவேண்டும் என்றும், புதிய ஒரு புரிதல் தளத்துக்குள் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதைச் சுற்றியுமே இருந்தன.

இயேசுவின் தாய் தன் மகனைக் குறித்த பேச்சுகளினால் மகிழ்ச்சியடைந்தாள். இயேசுவின் வாழ்க்கை சாதாரண வாழ்க்கையாய் இருக்காது என்பதில் அவளுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. எனவே இயேசு குறித்த பேச்சுகள் அவளைக் கலவரப்படுத்தவில்லை. இயேசுவின் உறவினர்களும், சுற்றத்தினரும், சித்தப்பா பெரியப்பா மக்கள் என பெரும் கூட்டம் இயேசுவின் புகழின் நிழலில் தங்களையும் வெளிச்சப்படுத்திக் கொள்ள விரும்பினார்கள். இயேசு புகழ் பரவ பரவ அவருக்கு உறவினர்களும் அதிகரித்தார்கள். அவர்கள் இயேசுவின் தாய் மரியாவையும் அழைத்துக் கொண்டு கப்பர்நாகும் சென்றார்கள்.

கப்பர்நாகும் இயேசுவினால் மிகவும் பிரபலமடைந்தது. இயேசுவுக்காகவே வரும் கூட்டம் அங்கே அதிகரித்தது. இயேசு அங்கே ஒரு வீட்டில் நின்று போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய தாயும், உறவினர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். கூட்டம் மிகுதியாய் இருந்தது. வீடு நிரம்பி வழிந்தது. முற்றத்திலும் கூட்டம் நெருக்கியடித்தது. அவர்களால் இயேசுவின் அருகில் செல்ல முடியவில்லை.

திடீரென்று சிலர் இயேசுவின் தாயை அடையாளம் கண்டு கொண்டார்கள். உடனே தகவல் கூட்டத்தில் பரவியது.

‘இயேசுவே இதோ, உம்மைக் காண உமது தாயும், சகோதரர்களும் வந்திருக்கிறார்கள்..’ கூட்டத்தினர் இயேசுவிடம் சொன்னார்கள்.

இயேசு உடனே கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்து தாயையும், உறவினர்களையும் சந்தித்து நலம் விசாரிப்பார் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அவர்கள் வியப்படையும் விதமாக இயேசு ‘ யார் என் தாய் ? யார் என் சகோதரர் ? என்னுடைய வானகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் உறவினரும். நீங்கள் அதை நிறைவேற்றினால் நீங்கள் அனைவருமே என்னுடைய தாயும் சகோதரரும் தான்’ என்றார்.

இயேசுவின் உறவினர்களை அது எரிச்சலடையச் செய்தது. அவர்களுக்கு அது ஒரு அவமானத் தொனியாகத் தெரிந்தது. ஆனால் இயேசுவின் தாய் புரிந்து கொண்டாள். அவளுக்கு தன் மகனைப் பற்றித் தெரிந்திருந்தது. சிறுவனாக இருக்கும்போதே தந்தையின் இல்லத்தில் இருக்கவேண்டும் என்று தாயையும், தந்தையையும் விட்டு விட்டு விவாதங்களில் ஈடுபட்டிருந்தவர், இளைஞரானபின் குடும்ப உறவுகளைப் பற்றிக் கொள்ளாதிருந்ததில் அவளுக்கு வியப்பு ஏற்படவில்லை.

இயேசு போதனையைத் தொடர்ந்தார். இயேசுவின் தாயும், உறவினர்களும் நாசரேத் நோக்கி திரும்பி நடந்தார்கள்.

 நீதிமானல்ல பாவியே தேவை.

இயேசுவின் போதனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தன்னுடைய போதனைகளுக்கு இயேசு தேர்ந்தெடுத்த ஆயுதம் கதைகள். கதைகள் மூலமாக வாழ்க்கையைக் குறித்த கேள்விகளையும், ஆன்மீகம், நிலைவாழ்வு குறித்த விளக்கங்களைக் கொடுப்பதையுமே அவர் தன்னுடைய போதனைகளின் பாணியாகக் கொண்டிருந்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் அன்றைய வாழ்க்கை சார்ந்த கதைகளாகவே இருந்தன. அவருடைய கதைகளில் உலவும் கதாநாயகனும், வில்லனும் எல்லோரும் கதையைக் கேட்கும் மக்களுக்குப் பரிச்சயமானவர்களாகவே இருந்தார்கள். எனவே அவருடைய கதைகள் மக்களிடம் நேரடியாகச் சென்று சேர்ந்தன.

பெரும்பாலும் மலைப்பகுதிகளிலோ, ஏரிகளின் ஓரத்திலோ, ஏரியில் படகில் அமர்ந்து கரையில் இருக்கும் மக்களை நோக்கியோ தன்னுடைய போதனையைச் செய்வதையே இயேசு வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருடைய எளிய கதைகள் இதுவரை மக்கள் அறிந்திராத சட்டநூல்களின் கடின பாகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவற்றை மிக எளிமையாக விளக்கின.

அவருடைய போதனையின் முக்கியமான நோக்கம் தெளிவு படுத்துதல். மக்களுக்குப் புரியாத சட்டங்களையும், உண்மைகளையும், தன்னை நோக்கி வீசப்படும் கேள்விகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்துதல். எது உண்மை எதை கடைபிடிக்கவேண்டும் என்பதை சட்டென்று புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாய் எடுத்துரைத்தல். இது தான் இயேசுவின் போதனைகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் தூண்டின. இதற்கு முன் வந்த இறைவாக்கினர்கள் பலர் செய்யாத செயல் இது ! எனவே இயேசு அதிகமாகக் கவனிக்கப்பட்டார்.

அவற்றிலும் சில போதனைகள் கதைகளின் வழியாகப் பயணித்து புரியாத ஒரு செய்தியை நோக்கிய கேள்விகளை எழுப்பின. எனவே தான் பல வேளைகளில் இயேசுவின் சீடர்களே இயேசு சொன்ன கதைகளுக்கான விளக்கங்களை தனியே இயேசுவிடம் கேட்க நேர்ந்தது.

அவருடைய கதைகளில் விவசாயிகள், ஏழைகள், தோட்டம் வைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள், பயணிகள் இவைகளைச் சார்ந்தே இருந்தன. இவையெல்லாம் மக்களுக்குப் பரிச்சயமான களங்கள்.

இயேசுவை நோக்கிக் கேள்விகள் வீசப்படும் போதெல்லாம் பெரும்பாலும் கதைகளாலேயே விளக்கம் கொடுத்தார் இயேசு.

மறைநூல் வல்லுனர்களும், குருக்களும் இயேசுவைப் பார்த்து, ‘இறைவாக்கினர்கள் என்பவர்கள் மிகவும் தூய்மையானவர்கள். அவர்கள் தூய்மை முறைகள் அனைத்தையும் கடைபிடிக்கவேண்டும். அதை விடுத்து பாவிகளோடும், ஒதுக்கப்பட்டவர்களோடும் உணவருந்துவதும், உரையாடுவதும் முறையற்ற செயல்’ என்று குற்றம் சுமத்தினார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,

Image result for The Lost Sheep
‘ஒருவருக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன. அதை அவர் மேய்ச்சலுக்காகக் கூட்டிப் போகிறார். மேய்ச்
சலை முடித்து விட்டு மாலையில் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி வரும்போது ஒரு ஆடு குறைவு படுகிறது என்றால் அவன் என்ன செய்வான் ? அந்த தொன்னூற்று ஒன்பது ஆடுகளையும் அங்கேயே விட்டு விட்டு, காணாமல் போன ஒரு ஆட்டைத் தேடிப் போக மாட்டானா ? அதைக் கண்டு பிடித்தபின். ஆஹா… வழி தவறிப்போயிருந்த ஆட்டை கூட்டி வந்து விட்டேன் என்று ஆனந்தப் படமாட்டானா ? அந்த ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டு விட்டு மற்ற ஆடுகள் இருக்கும் இடத்துக்கு ஆனந்தமாய் ஓடி வர மாட்டானா ?’ என்று கேட்டார்.

‘வருவான்… ‘ அவர்கள் பதில் சொன்னார்கள்.

‘அதன் பின் அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து. வாருங்கள் என்னோடு மகிழுங்கள் காணாமல் போயிருந்த ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். என்று சொல்வான் இல்லையா ?’

‘ஆமாம். அதற்கென்ன ?’

‘அதே போலத் தான், மனம் திரும்பத் தேவையில்லாத தொன்னூற்று ஒன்பது நீதிமான்களை விட, மனம் திரும்பிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகம் மகிழும்’
இயேசு கதையை முடித்தார்.

பாவிகளோடு தான் பழகுவதற்குக் காரணம் அவர்களுடைய பாவ வாழ்க்கையை சரிசெய்வதற்கே என்பதை இயேசு விளக்குகையில் கூட்டத்தினர் புரிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் ஆடு மேய்ப்பது அங்கே வழக்கமான செயல். ஒரு ஆடு காணாமல் போனாலும் மற்ற ஆடுகளை மேய்ப்பன் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு தொலைந்த ஆட்டைத் தேடிப் போவான் என்பது அனைவருக்கும் தெரிந்த செயல், எனவே இயேசு தன்னுடைய பணியை ஒரு மேய்ப்பனுடன் ஒப்பிடுகையில் மக்கள் கூட்டம் புரிந்து கொள்கிறது.

புரிந்து கொள்ளாத மக்களுக்காக மீண்டும் ஒரு கதையைச் சொல்கிறார் இயேசு,

‘ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக்காசுகள் இருந்தன. அதில் ஒன்று காணாமல் போய்விட்டால், போனால் போகட்டும் என்று விட்டு விட்டு இருப்பதை வைத்து திருப்தியா படுவாள் ? விளக்கைக் கொளுத்தி வீடு முழுவதிலும் நன்றாகத் தேடமாட்டாளா ? வீட்டின் அழுக்கான மூலை முடுக்குகளையும், சுத்தமில்லாத இடங்களையும் கூட விட்டு விட மாட்டாள் இல்லையா ? தேடிக் கண்டுபிடித்தபின்பு தானே அவள் நிம்மதிப் பெருமூச்சு விடுவாள் ! அவ்வாறு தான் மனம் திரும்பும் ஒரு பாவியைக் குறித்து தூதர்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைவார்கள்’

இயேசு இந்தக் கதையைச் சொல்கையில் ஆடுமேய்க்கும் தொழில் தெரியாத, நகர் வழியாகப் பயணிக்கும் பயணிகளும், வியாபாரிகளும், மீனவர்களும் எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.

இயேசு சொல்லவந்த கருத்தை மக்களிடம் சொல்லி முடித்தபின், ‘விசுவாசத்தைக் காத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கடுகளவு விசுவாசம் இருந்தால் இந்த மலையைப் பார்த்து நீ போய் கடலில் விழு என்று சொன்னால் விழும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு விதைக்குள் ஒரு பெரிய மரமே அடங்கி விடுகிறது. விசுவாசமும் வேர்விட்டு வளரவேண்டும், கிளைகளில் பறவைகள் வந்து தங்குமளவுக்கு பெரிதாக வளரவேண்டும்’ என்றார்.

கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை முழுங்குகிறீர்கள் !

மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் மக்களை தவறான வழிகளில் வழிநடத்தும் தலைவர்களையும் கதைகளின் மூலம் எச்சரித்து வந்த இயேசு ஒரு கட்டத்தில் தன்னுடைய கோபத்தை நேரடியாகவே காட்டி விட்டார்.

மக்களே. மறைநூல் அறிஞர்கள் சட்ட நூல்களிலிருந்து எடுத்துச் சொல்வதை நீங்கள் கடைபிடியுங்கள் தவறில்லை. ஆனால் அவர்களுடைய செயல்களிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். எதையும் செய்வதில்லை. அவர்கள் மக்களின் தோளில் சுமையைக் கட்டி வைப்பார்கள், ஆனால் தங்கள் சுண்டு விரலால் கூட அதை அசைக்க உதவ மாட்டார்கள். எனவே அவர்கள் சொல்வதைச் செய்யுங்கள், அவர்கள் செய்வதைச் செய்யாதீர்கள்.

மக்கள் பார்க்கவேண்டுமென்பதற்காகவே அவர்கள் எல்லாவற்றையும் செய்கிறார்கள். தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள். அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடத்தையும், தொழுகைக் கூடங்களில் முதல் இடத்தையும் விரும்புவார்கள். அதையெல்லாம் நீங்கள் கடைபிடிக்க வேண்டாம். அதெல்லாம் போலித்தனத்தின் வெளிப்பாடுகள். உங்களில் பெரியவனாக இருக்க விரும்புகிறவன் அனைவருக்கும் தொண்டனாக இருங்கள்.

தம்மைத் தாமே உயர்த்துகிறவன் தாழ்த்தப் படுவான். தன்னைத் தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுவான்.

Image result for pharisees and jesus

வெளிவேட மறைநூல் அறிஞர்களே ஐயோ.. உங்களுக்குக் கேடு. உங்கள் மதத்திலே ஒருவனைச் சேர்ப்பதற்கு நாடு, கடல் பாராது சுற்றி அலைகிறீர்கள். அவ்வாறு சேர்த்தபின் உங்களைவிட இரு மடங்கு நரகத் தண்டனைக்கு அவர்களை ஆளாக்குகிறீர்கள். நீங்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடன் குருடனுக்கு எப்படி வழிகாட்ட முடியும். முதலில் உங்கள் பார்வையை பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.

யாரவாது ஆலயத்தின் மீது ஆணையிட்டால் பரவாயில்லை. ஆனால் ஆலயப் பொன்னின் மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்ற வேண்டுமென்பது உங்கள் சட்டமாம். வேடிக்கையாக இருக்கிறது. மடையர்களே எது பெரியது ? பொன்னா ? இல்லை பொன்னையே தூயதாக்கும் திருக்கோவிலா ? சொல்லுங்கள்.

பலிபீடத்தின் மீது ஆணையிட்டால் பரவாயில்லை. ஆனால் அதிலிருக்கும் காணிக்கைகளின் மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று ஒரு முட்டாள்தனமான சட்டத்தைப் பிடித்துத் தொங்குகிறீர்கள். எது பெரிது ? பலிபீடமா ? பொருட்களா ?

வெளிவேட மறைநூல் அறிஞர்களே, பரிசேயர்களே உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் தானியங்களில் பத்தில் ஒருபங்கைப் படைக்கிறீர்கள், ஆனால் திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளான நீதி, இரக்கம், நம்பிக்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிடுகிறீர்கள்.

குருட்டு வழிகாட்டிகளே. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியுமா ? நீங்கள் பருகும் பானத்தில் கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கி விடுகிறீர்கள் !

எதைச் சுத்தமாக்க வேண்டும் என்னும் தெளிவு கூட இல்லை. கையைக் கழுவி சுத்தமாக்குகிறீர்கள். பாத்திரத்தின் உள்ளும், புறமும் பளிச் என்று இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் உங்கள் உள்ளமோ தன்னல விருப்பு வெறுப்புகளால் இருண்டு கிடக்கிறதே ! முதலில் உள்ளத்தைத் தூய்மையாக்குங்கள். ஏன் இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் போல வெளிப்பக்கம் அழகையும், உள்ளே அழுக்கையும் வைத்திருக்கிறீர்கள் ?

இறைவாக்கினர்களுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள், இறைவாக்கினர்களுக்கு நினைவுத் தூண்கள் நாட்டுகிறீர்கள். அந்தக் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களைக் கொன்றிருக்கமாட்டோம் என்கிறீர்கள். ஆனால் அதையே தான் இப்போதும் செய்கிறீர்கள் என்பதை அறியாமல் இருக்கிறீர்கள் !

இயேசு தங்களை நோக்கி விரல் நீட்டி நேரடி எச்சரிக்கை விட்டதைக் கண்ட தலைவர்கள் அனைவரும் கொலைவெறியை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தினார்களே தவிர திருந்த வேண்டுமென்று நினைத்துக் கூடப்பார்க்கவில்லை

மூலைக்கல்

இயேசு தன்னுடைய கதைகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதனால் தொடர்ந்து கதைகள் வழியாகவே பேச ஆரம்பித்தார்.

ஒருவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர் தன்னுடைய மூத்த மகனை அழைத்து,
‘மகனே நம்முடைய திராட்சைத் தோட்டத்தில் கொஞ்சம் வேலை இருக்கிறது. நீ போய் அதைச் செய்வாயா ? ‘ என்று வினவினார். அவனோ,’ இல்லையப்பா, என்னால் இப்போது வேலைக்குச் செல்ல முடியாது’ என்று சொன்னான். ஆனாலும் கொஞ்ச நேரம் சென்றபின் தந்தை தன்னிடம் கேட்டதும் தான் அவருடைய சொல்லைத் தட்டிவிட்டோமே என்ற உறுத்தலும் அவனை தோட்டத்துக்குச் செல்ல வைத்தது.

முதல் மகன் மறுத்துவிட்டதால் தந்தை இரண்டாவது மகனிடம் சென்று அதே விண்ணப்பத்தை வைத்தார். அவனோ,’ அதற்கென்ன தந்தையே. நீங்கள் சொல்லி நான் மறுப்பதா ? இதோ உடனே போகிறேன்’ என்றான். பின் சோம்பலில் படுத்துவிட்டான். தோட்டத்துக்குச் செல்லவில்லை.

‘இந்த இரண்டு மகன்களில் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவன் யார் ?’ இயேசு கேட்டார்.

‘மூத்த மகன் தான்’ மக்கள் ஒரே குரலில் பதில் சொன்னார்கள்.

‘விண்ணக வாழ்விலும் இப்படியே நடக்கும். தங்களுடைய விருப்பத்தை மாற்றிக்கொண்டு தந்தையின் விருப்பத்துக்குச் செவி கொடுக்காத யாருமே விண்ணக வாழ்வைச் சுவைக்க முடியாது. மனம் மாறி வரும் ஏழைகளும், பாவிகளும், விலைமாதரும் விண்ணகத்தை நிறைப்பார்கள். மனம் மாற மறுக்கும் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் விண்ணகத்துக்குள் வரமாட்டார்கள்’ இயேசு உறுதியான குரலில் சொன்னார்.

இன்னும் ஒரு கதை கேளுங்கள்….

இயேசு சொன்னார்.

Image result for parable of vineyard

நிலக்கிழார் ஒருவருக்கு ஒரு பெரிய திராட்சைத் தோட்டம் இருந்தது. அதை அவர் மிகவும் கவனத்துடன் பராமரித்து வந்தார். உரிய காலத்தில் உரங்களைப் போட்டும், காவல் அமைத்தும், வேலிகள் கட்டியும் தன்னுடைய தோட்டத்துக்கு எந்த அழிவும் வராமல் பாதுகாத்து வந்தார். அவர் நெடும்பயணம் செல்லவேண்டியிருந்ததால் அந்த நிலத்தைக் குத்தகைக்காரரிடம் குத்தகைக்கு விட்டார்.

குத்தகைக் காலம் வந்தது. தமக்குச் சேரவேண்டிய குத்தகையைப் பெற்றுவரும்படி அவர் ஒரு பணியாளனை அனுப்பினார். குத்தகைக்கு நிலத்தை எடுத்திருந்தவர்களோ அந்தப் பணியாளனை அடித்து, உதைத்து, ‘குத்தகையெல்லாம் தரமுடியாது போ’ என்று துரத்தி விட்டார்கள்.

தலைவர் மீண்டும் ஒரு சிலரை அனுப்பினார். பயனில்லை.

மூன்றாவதாக நிறைய பணியாளர்களை அனுப்பிப் பார்த்தார். குத்தகைக்காரர்கள் மசியவில்லை. அனைவரையும் கல்லால் எறிந்து துரத்தினார்கள். கல்லடி பட்ட பலர் இறந்தே போனார்கள்.

கடைசியாக உரிமையாளன் தன் மகனை அனுப்புவேன். அவர்கள் எனக்குத் தரும் மரியாதையை என் மகனுக்கும் தருவார்கள் என்று தன்னுடைய மகனை அனுப்பினார். அவர்களோ,’ வாருங்கள். இவன் தான் சொத்துக்கு உரியவன். இவனைக் கொன்றுவிட்டால் போதும். அதன்பின் நிலம் நமக்கே நமக்குத் தான். யாரும் சொந்தம் கொண்டாட வரமாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டே மகனைப் பிடித்து தோட்டத்துக்கு வெளியே தள்ளிக் கொன்றனர்’

‘திராட்சைத் தோட்ட உரிமையாளன் வரும்போது என்ன செய்வான் ?’ இயேசு கேட்டார்.

‘அத் தீயோரை ஈவு இரக்கமின்றி ஒழித்து விடுவார். பின் ஒழுங்காகக் குத்தகைக் கூலியைத் தரும் ஒருவருக்கு நிலத்தைத் தருவார்’ மக்கள் சொன்னார்கள்.

‘சரியாகச் சொன்னீர்கள்…. மறைநூலில் வாசித்திருப்பீர்களே, கட்டுவோர் விலக்கிய கல்லே கட்டிடத்துக்கு மூலைக் கல்லாய் அமைந்தது ! கடவுளால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு வியப்பே ! என்று. உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். குத்தகைக் காரர்களாகிய நீங்கள் இறைவாக்கினர்களை நிராகரித்தீர்கள், தீர்க்கத் தரிசிகளைத் தீர்த்துக் கட்டினீர்கள் இப்போது கடவுளின் மகனையும் மறுதலிக்கிறீர்கள். இந்தக் கல்லின் மீது விழுபவர்கள் நொறுங்கிப் போவீர்கள். கடவுளின் மகனை ஏற்றுக் கொள்ளாதவர்களிடமிருந்து இறையாட்சி பிடுங்கப்பட்டு நம்பும் இன்னொரு இன மக்களுக்குக் கொடுக்கப்படும்…’ இயேசு உரத்த குரலில் மறைநூல் அறிஞர்களையும், குருக்களையும் பார்த்துச் சொன்னார்.

இயேசு தங்களைக் குறிவைத்துத் தான் அந்தக் கதைகளைச் சொன்னார் என்பதை அறிந்த அவர்கள் இயேசுவை அதிகநாள் உயிருடன் வைத்திருக்கக் கூடாது என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். மக்கள் கூட்டம் அவருக்கு ஆதரவாக இருந்ததால் இயேசுவை வீழ்த்தும் ஒரு வலுவான காரணத்தைத் தேடத் துவங்கினார்கள்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...