Posted in Life of JESUS

இயேசுவின் வரலாறு 24 : பாதத்தில் கழுவப்பட்ட பாவம்

Image result for feet of jesus womenசீமோன் என்னும் பரிசேயர் ஒருவர் இயேசுவை விருந்துக்கு அழைத்தார். அவர் இயேசுவின் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தவர் அல்ல, சட்டதிட்டங்களின் மேல் சுற்றிக் கிடந்தவர் தான். இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு அவரை நேரடியாக சந்தித்து அவரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. இயேசு எல்லா இடங்களிலும் பரிசேயர்களை எதிர்த்து வந்ததால் இந்த அழைப்பை ஏற்பாரா என்னும் சந்தேகமும் அவரிடம் இருந்தது. இயேசு அழைப்பை ஏற்றுக் கொண்டால் அவரை எப்படியேனும் சிக்க வைக்க வேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

இயேசு அவருடைய அழைப்பை ஏற்றார். விருந்துக்கு வருகிறேன் என்று வாக்களித்தார்.

பரிசேயன் மகிழ்ந்தான். அவன் தன்னுடைய நண்பர்களையெல்லாம் அழைத்து இயேசுவை எப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு மடக்கலாம் என்று ஆலோசனை செய்துவிட்டு விருந்துக்குத் தயாரானான். அந்த சீமோன் மாபெரும் செல்வந்தன்.

இயேசு ஒப்புக்கொண்டபடி அவருடைய இல்லத்துக்கு உணவருந்தச் சென்றார். விருந்தினர்களை உபசரிக்கும் யூத கலாச்சாரத்தை அந்த பரிசேயர் பின்பற்றவில்லை. அவர் இயேசுவை ஒரு தச்சனின் மகனாகப் பார்த்தாரேயன்றி ஒரு விருந்தினராகப் பார்க்கவில்லை.

இயேசு உணவு உண்பதற்காகப் பந்தியில் அமர்ந்தார்.

அதே ஊரில் பாவி என்று மக்களால் ஒதுக்கப் பட்ட ஒரு பெண் இருந்தாள். அவள் இயேசு இருக்கும் இடத்தை அறிந்ததும் ஒரு அழகிய படிகச் சிமிழில் நறுமணத் தைலத்தைக் கொண்டு வந்து இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட்டாள். அவள் வாழ்ந்து கொண்டிருந்த பாவ வாழ்க்கை அவளுடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவள் குனிந்து இயேசுவின் பாதத்தைத் தொட்டாள். அவளுடைய கண்களில் வழிந்த கண்ணீத் துளிகள் இயேசுவின் பாதங்களில் வழிந்தோடின. அவள் அதைத் தம்முடைய செந்நிற கூந்தலினால் அவருடைய பாதங்களைத் துடைத்து அவருடைய பாதங்களில் பணிந்து முத்தமிட்டாள்.

பின் தான் கொண்டு வந்திருந்த படிகச் சிமிழைத் திறந்து நறுமணத் தைலத்தை எடுத்து அவருடைய பாதங்களில் பூசினாள்.

இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்த பரிசேயனை இந்தக் காட்சி எரிச்சலடையச் செய்து விட்டது. இயேசுவின் மீது குற்றம் சுமத்த வேண்டும், குறை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்த அவருக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

‘பாருங்கள்… இவரெல்லாம் ஒரு பெரிய இறைவாக்கினராம். தம்மைத் தொடும் இவள் எத்தனை பெரிய பாவி என்பது கூட இவருக்குத் தெரியவில்லை..’ என்று சுற்றியிருந்த அவருடைய பரிசேய நண்பர்களிடமெல்லாம் கேலியாய் பேசினார்.

இயேசு அவரை அழைத்தார்.
‘ஐயா… நான் ஒன்று கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்லும்..’ இயேசு சொல்ல அந்தப் பரிசேயன் இயேசுவின் முகத்தைப் பார்த்தான்.

‘கடன் கொடுப்பவர் ஒருவரிடம் இரண்டு பேர் கடன் வாங்கியிருந்தார்கள். ஒருவர் ஐநூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமும் கடன் வாங்கியிருந்தார்கள். ஆனால் அவர்களால் அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. அவர்கள் மேல் மனமிரங்கிய கடன் கொடுத்தவன் அவர்களுடைய கடனைத் தள்ளுபடி செய்தான். அந்த இருவருள் யார் அதிகம் மகிழ்ந்திருப்பார் ?’ இயேசு கேட்டார்.

‘அதிகக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர் தான் அதிகம் மகிழ்ந்திருப்பார்’ அவர் பதில் சொன்னார்.

இயேசு புன்னகைத்தார். ‘சரியாகச் சொன்னீர். பாரும். நான் உமது வீட்டுக்கு வரும்போது நீர் என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. ஆனால் இந்தப் பெண்ணோ கண்ணீரினாலேயே என் பாதங்களைக் கழுவி விட்டாள். நீர் என்னை முத்தமிடவில்லை. இந்தப் பெண்ணோ என் பாதங்களில் முத்தமிட்டாள். நீர் எனது தலைக்குக் கூட எண்ணை பூசவில்லை, இவள் என் பாதத்துக்கே பரிமளத் தைலம் பூசினாள். மொத்தத்தில் என்னை விருந்துக்கு அழைத்த நீர் எனக்கு எந்த வரவேற்பையும் செய்யவில்லை. இந்தப் பெண் யாரும் அழைக்காமலேயே வந்து மரியாதை செய்கிறாள் ‘ இயேசு சொல்ல அந்த மனிதர் இயேசுவை எரிச்சல் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை. கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை. கனிகளை வைத்தே மரங்களின் தன்மை அறியப்படும். நல்லவன் தன் உள்ளமென்னும் கருவூலத்திலிருந்து நல்லவற்றைச் செயல்படுத்துவான், தீயவனோ தீயவற்றைச் செயல்படுத்துவான். ஒவ்வொரு மரமும் அதன் கனியினால் அறியப்படும். முட்செடிகளில் அத்திப் பழங்களையோ, முட்புதர்களில் திராட்சைக் கொடிகளையோ யாரும் அறுத்துச் சேகரிக்க முடியாது’ இயேசு தொடர்ந்தார்.

‘உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன். இந்தப் பெண் செய்த பல பாவங்கள் இன்று மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவருடைய அன்பு மிகுதியானது ! அதிகமாய் அன்பு செலுத்துவோர், அதிக மன்னிப்பையும், குறைவாக அன்பு செலுத்துவோர், குறைவான மன்னிப்பையும் பெறுவர்.’ என்றார்.

அந்த விருந்தில் பந்தியமர்ந்திருந்த பலருக்கும் இயேசுவின் பதில் திருப்தியளிக்கவில்லை. ‘பாவிகளை மன்னிக்க இவர் யார் ? அது கடவுளின் பணியல்லவா ?’ என்றார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,’ எனக்கு அந்த அதிகாரம் உண்டு என்பதை விரைவில் உணர்வீர்கள்’ என்றார். பின் அந்தப் பெண்ணிடம்
‘உனது நம்பிக்கை உன்னை மீட்டது. அமைதியுடன் செல்க’ என்றார்.

அவள் இதயம் நிறைந்த மகிழ்வுடன் அவ்விடம் விட்டு வெளியேறினாள். அவளுடைய குற்ற உணர்வும், தாழ்வு மனப்பான்மையும், தவறு செய்யும் குணமும் அக்கணமே அவளை விட்டு வெளியேறியது.

இயேசுவும் அதற்குமேல் அந்த வீட்டில் தங்கியிருக்கவில்லை.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...